1962 டைரிக் குறிப்பிலிருந்து…

 1962 டைரிக் குறிப்பிலிருந்து…

வைதீஸ்வரன்

 

ப்போதோ எழுந்த விசாரங்கள்!

நான் ஒரு குழந்தையிடம் கேட்டேன்: “நீ ஏன் அப்பாவை நேசிக்கிறாய்?”

“எங்க அப்பாதான் எனக்கு சட்டை பொம்மையெல்லாம் வாங்கித் தராங்க! அதனாலதான்” என்றது.

“நீ ஏன் அம்மாவை நேசிக்கிறாய்?”

“எங்க அம்மாதான் எனக்கு சாதம், பாலு எல்லாம் தராங்க!”

இதைவிட நேரான, எளிமையான, யதார்த்தமான பதிலை பெரியவர்களால்கூட சொல்ல முடியாது. இதே கேள்வியை பெரியவர்களிடம் கேட்டிருந்தால் பொய் சொல்லியிருப்பார்கள். அன்பு, பாசம், நேசம் என்றெல்லாம் வார்த்தைகளால் விளையாடி இருப்பார்கள். ஆனால், உண்மை குழந்தை சொன்ன பதிலில்தான் நிறைய இருக்கிறது.

ஒரு குழந்தைக்கு அப்பா இல்லை என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கும் சட்டை, பொம்மை எல்லாம் கிடைத்துவிடுகிறது. என்றாலும், “எனக்கு அப்பா இல்லையாம்மா? எனக்கு அப்பா வேண்டும்!” என்று கேட்கும்.

ஆக குழந்தைக்கு அப்பாவும் வேண்டியிருக்கிறது, பொம்மையும் வேண்டியிருக்கிறது!!!

பொம்மையும் வேண்டும் அதை வாங்கித் தர அப்பாவும் வேண்டும்! பொம்மை வாங்கித் தந்த நற்பணிக்காக அப்பாவை நேசிக்கவும் வேண்டும். ஆக குழந்தையின் அன்பு அப்பாவிடம் மட்டுமில்லை, பொம்மையிடம் மட்டுமில்லை. அப்பா – பொம்மை என்ற இரண்டு வளையங்களுக்கு நடுவே ஏதோ ஒரு இடத்தில் பதிந்து போயிருக்கிறது.

அந்த அன்பு எங்கே இருக்கிறது? ஏன் ஏற்பட்டது? அந்த இடத்தில்தான் மனிதப் பிராணிகளின் இயல்பான, தொன்மையான தற்காப்பு நிலை தெரிய வருகிறது.

டார்வின் ஆராய்ந்தறிந்த முடிவின் உண்மையை மேற்கூறிய குழந்தையின் இயல்பிலிருந்து ஊகிக்க முடியும்.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தன்னை துன்பங்களிலிருந்தும் அபாயங்களிலிருந்தும் மீட்கவும் தனக்கு சௌகரியங்களை உண்டாக்கித் தரவும் ஒரு சாதனத்தை தேடுகிறது குழந்தை.

அந்த சாதனமே முடிவில் அப்பாவாக முடிகிறது. அதுவே உயிரினங்களின் இடையறாத தொடர்ச்சிக்கு அணு சக்தியாக அமைகிறது.

 

ப்படித் துதிப்பேன்?

கோவில் சன்னிதியில் நின்றுகொண்டு, பக்தர்கள் தெய்வத்தை சேவிக்கும்போது நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த பக்த கோடிகளின் முகங்களைப் பார்வையிட்டேன். அத்தனை முகங்களிலும் ஏதோ இனமறியாத சோகம் கவ்விக் கொண்டிருந்தது. ஏன் என்று விளங்கவில்லை.

தெய்வத்தைத் தொழும்போது மனிதன் ஏன் வருத்தமாக தோன்ற வேண்டும்? துன்பத்தில் உழலுவதுபோல் கடவுளிடமே பாசாங்கு செய்துவிட்டு நிறைய புண்ணியங்களை அள்ளிக்கொள்ளலாம் என்று அசட்டு சாதுரியமா? அல்லது எதற்காக கோவிலுக்கு வந்தோம்? எதற்காக தொழுகின்றோம்? என்ற அடிப்படைக் கேள்விகளை – பக்தியினாலோ அறியாமையினாலோ – சரியாகப் புரிந்துகொள்ளாத குற்றத்தால் வழி தெரியாத குருடன் நிலையில் அலை மோதும் குழப்பத்தினாலா?

நான் எதை வேண்டுவது? எனக்கு என்ன வேண்டும்? நான் வேண்டினால் கிடைத்துவிடுமா? அது கிடைத்துவிட்டால் எனக்கு வேறெதுவும் வேண்டாமா? என்ற தீராத சந்தேகங்கள் க்ஷண நேரத்தில் புற்றீசல் மாதிரி கிளம்பி மடிந்த அயர்வுதான் முகத்தில் பிரதிபலிக்கிறதா?

நான் செய்வது பாபமா? புண்ணியமா? பாபம் எது? புண்ணியம் எது? நான் இதைச் செய்த காரணத்திற்காகத்தான் இதாக ஆனேனா? அப்படியானால் எதாக ஆவதற்கு எதைச் செய்ய வேண்டும் என்கிற தொன்மையான மனக் கிலேசங்களுக்குத் தீர்மானமான விடை தெரிந்துகொள்ள முடியாத ஜன்மத்தை எடுத்த மனத் தாபமா?

இவ்வளவு கேள்விகளும் எழாத மனநிலை நமக்குக் கிட்டிவிட்டால் நாம் கோவில் சன்னிதியில் மலர மலர சிரிக்க முடியும். கோலாட்டம் ஆட முடியும்! கவிதைகளைப் பொழிய முடியும். கடவுளை பயமில்லாமல் ஒரு சக நண்பனைப் போல் பார்த்து சம்பாஷிக்க முடியும்.

இப்போது என்னுடைய பிரார்த்தனை – அத்தகைய மனநிலை கிட்ட வேண்டும் என்பதுதான்.

 

“வைதீஸ்வரன்” <vydheesw@yahoo.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *