அக்கினிப் பிரவேசம்: ரேப்பிஸ்ட் இந்திரன்களை காதல் உன்மத்தர்களாய் உயர்த்தும் நவீன புராணம்

 அக்கினிப் பிரவேசம்: ரேப்பிஸ்ட் இந்திரன்களை காதல் உன்மத்தர்களாய் உயர்த்தும் நவீன புராணம்

மாலதி மைத்ரி

 

‘‘அக்கினிப் பிரவேசம்’’ வாசிக்கும் போது எனக்கு பதினேழு வயது. ஏற்கெனவே, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வழி ஜெயகாந்தன் மிகப்பிடித்த எழுத்தாளர் ஆகியிருந்தார். இக்கதை எழுதப்பட்டு இருபதாண்டுகள் கழித்து படிக்கும் இரண்டாம் தலைமுறை வாசகி நான்.

புத்தகம் வாசிக்கும் பழக்கமுடைய இடைநிலை குடும்பங்களில் மனப்புழுதியை கிளப்பிய கதையென்று பின்னர் அறிந்தேன். தையல் வகுப்பில் அறிமுகமான சகோதரிகள் சாந்தி, திருமகள் இக்கதையடங்கிய ‘சுயதரிசனம்’ தொகுப்பை கொடுத்து வாசித்துவிட்டு சொல் என்றனர்.

வில்லியனூரில் நவீன இலக்கியம் வாசிக்கும் பைத்தியக்காரி நான் மட்டுமே என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். பூர்வீக ஊரில் புதுவீடு கட்டி விழுப்புரத்திலிருந்து குடிபெயர்ந்த வாசிப்புப் பைத்தியங்கள் அவை. என்னைவிட எட்டு வயது மூத்தவர் சாந்தி. நிறைய வாசிப்பவர். வீட்டில் கொஞ்சம் கதைப் புத்தகம் வைத்திருப்பதாக வேறு சொல்லிவிட்டார். சினேகிதத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். கதையை படித்துவிட்டு மறுநாள் மதியம் தையல் வகுப்பு முடிந்து அவர்களுடனேயே அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். தொடர்ந்த நாட்களில் வீட்டு வேலைகளை முடித்த ஓய்வு நேரங்கள் அவர்கள் வீட்டில் இலக்கிய, அரசியல் விவாதங்களில் கழிந்தன.

பொழுதைக் கழிக்கச்சென்ற தையல் வகுப்பு சலிப்புத்தர மூன்று மாதம் கற்றது போதுமென முடித்துக்கொண்டேன். தையல் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார்கள் தோழிகள். நான் அந்த நேரத்தில் தட்டச்சுக் கற்றுத் தேர்ச்சி பெற்றேன். ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி தனியாய் பிரிந்துக் கிடந்த காந்த துருவங்களை அந்த காலத்தில் இணைக்கும் புள்ளியாக தட்டச்சு பள்ளிகள் சந்திக்க இடமளித்தன. என் பின்னால் சுற்றிய பையன்களை துரத்தியடித்துவிட்டு, இலக்கிய காதலில் புத்தகங்களின் பின்னால் சுற்றிக்கொண்டு அலைந்தேன். மனதில் தோன்றியதை கொஞ்சம் எழுதிப் பார்க்கவும் தெரிந்ததால் தனித்துவமானவள் என்ற கொம்பும் துளிர்த்து வளர ஆரம்பித்திருந்தது.

ஒரு பெண்ணின் உயிர் அவள் ‘கற்பு ஒழுக்கத்தில்’ அடங்கியிருக்கிறது என்று கற்றுக் கொடுத்திருந்தது சமூகம் எங்களுக்கு. அக்கினிப் பிரவேசத்தை படித்ததும் சில கேள்விகளைக் கேட்டு பதில்களையும் உருவாக்கிக் கொண்டோம். பெண்ணை நிர்ப்பந்தித்து / அபகரித்து நடக்கும் வல்லுறவுக்கு பெண் எப்படி பொறுப்பாக முடியும்? திருமணத்திற்கு முன் பெண்ணுக்கு நிகழும் வல்லுறவோ / நல்லுறவோ குற்றம் என்றால், ஆணை விடுதலையாக்கி, பெண்ணை மட்டும் ஏன் ஆயுள் முழுவதும் பாவச்சிலுவையை சுமக்க வைக்கிறது சமூகம்?

புராண அகலிகை கதையை துணை பிரதியாக்கி சிறுமிக்கு ‘பாப விமோசனம்’ தரும் இக்கதைக்கு சமகால உதாரணம் ஏன் கிடைக்கவில்லை? வந்தது இந்திரன் என்று அறிந்து, அவன் அழகில் மயங்கி விரும்பி உடன்பட்டிருந்தால், ‘பாப விமோசனமின்றி’ அகலிகை கல்லாக்கப்பட்டிருப்பாள் இல்லையா? ‘வல்லுறவு,’ காலில் பட்ட ‘நாய் அசிங்கம்’ கழுவிய ஈரம் உலர்வதென உயிர்வதைக்கும் நினைவை உலர்த்திக்கொண்டு, பெண்களின் தடையற்ற பயணத்தை சாத்தியமாக்கும் வழியை வாசிப்பு மூலம் திறந்திருக்கிறது, இக்கதை. ஒருகதை மூலம் தமிழ் பெண்கள் வாழ்வில் மிக எளிமையாய் ஜெயகாந்தன் புரட்சி செய்திருக்கிறார் என்று பேசிக்கொண்டோம்.

 

ற்போது கதைவெளியாகி ஐம்பதாண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும் போது, ‘புரட்சிகரக் கதை,’ தன் சொல் முறையில் ஆண்பால் அதிகாரத்தை கொண்டாடி, பெண்பாலை அடிமையாக்கும் உளவியலை வளர்க்கும் பெண் ஆளுமையை சிதைக்கும் மொழிதலை பெண்பால் மீதான கரிசனமென காட்டி, ஏமாற்றும் நாடகம்தான் ‘அக்கினிப் பிரவேசம்’ என்பது அதிர்ச்சியாய்தான் இருக்கிறது.

தான் அறிந்து செய்யாத குற்றத்துக்காக தண்டனை பெறும் பாதிக்கப்பட்ட அகலிகைக்கு விடுதலை, ராமன் (அகலிகைக்கு விமோசனம் தர ராமனுக்கு தகுதியிருக்கா என்பதையும் இங்கு கேட்டுக்கொள்ளலாம்) பாதம் பட்டு கிடைக்க வேண்டும். ஆனால், அறிந்து திட்டமிட்டு செய்து சாபம் பெற்ற குற்றவாளி ரேப்பிஸ்ட் இந்திரனின் ஆயிரம் யோனிகளும், குளத்தில் தினமும் குளித்தெழுவதன் மூலம், தினமும் ஒன்றாய் தன்னியல்பில் உதிர்ந்து, இந்திரன் தன் பழைய உருவத்தையடையும் பாப விமோசனம். இக்கதையை ஒரு பெண் சொல்லியிருந்தால் இப்படியும் சொல்லியிருக்கலாம்: ‘பொதுவெளியில் நிற்க வைத்து தினமும் ஒருபெண் காரித் துப்பி இந்திரனுக்கு சாபமாய் முளைத்த ஆயிரம் யோனிகளையும் உதிர வைத்திருக்கலாம்.’

 

வீனக்கால, தாராளமய மின்னணு முதலாளித்துவ கட்டமைப்புகளால் பெருகி வழியும் தமிழ் நிலம், ‘கற்பு, புனிதம்,’ சார்ந்து பெண் பற்றிய சனாதன மதிப்பீடுகளிலிருந்து விடுபட்டு, ஒரு மில்லி மீட்டர் அளவும் முன்னோக்கி நகரவில்லை என்பதற்கு, பொள்ளாட்சி சம்பவம் சாட்சியாகிறது. மரபார்ந்த ஆணாதிக்க / ஆண்மைய சமூகம், வன்முறைக் கலாச்சாரத்திற்கான சனாதன வதை முகாம்களை – வீடு, உறவு, குடும்ப வழக்கம், சாதிய – பெருமையென உருவகித்து அளித்திருக்கிறது, பெண்களுக்கு. புறத்தோற்றத்தில் நவீனமடைந்திருக்கும் தமிழ்ச் சமூகம், புராணகால மதிப்பீடுகளால் இயக்கப்படும் சைக்கோக்களை, மனித உற்பத்தி சாலையில் சனாதன அச்சு நகல்களாய் பிதுக்கித் தள்ளுவதை, எந்த அரசியல், சமூகக் கலாச்சார நடவடிக்கையாலும் தடுக்க முடியவில்லை. இவ்விடத்தில் மாற்று அரசியல் கலாச்சாரத்தின் போதாமை என்பது நாம் தோற்றுவிட்டதன் அடையாளம்.

புறத்தோற்றத்தை நவீனப்படுத்தி, மாற்ற சந்தையில் விரல் தடவி பெறும் தொழில்நுட்பக் கருவிகள் தாம், அகத்துக்கும் தீனி போடுகின்றன. காலாவதியான, பழமையான சனாதன பண்பாட்டை, அதன் மதிப்பீடுகளை.

சமூகத்தை நுகர்வோராக, பயனாளராக தற்போது கையில் வைத்திருப்பதும் இந்த நவீனக் கருவிகள்தாம். இவைதான் தமிழரின் உளவியலை கட்டமைக்கும், வளர்த்தெடுக்கும். சமகாலத்துக்கு பொருந்தாத அக-புற ஆளுமை முரண்பாடு, தமிழ் சமூகத்தை மனநோயாளியாக்கி வைத்திருக்கிறது.

படிக்கும் சமூகம் பார்க்கும் சமூகமாக வளர்ந்த பின், மக்களின் மனதில் கருத்துருவாக்கத்தை விதைக்கும் கருவிகளான நவீன ஊடகங்கள், எவ்வகைக் கருத்தியலை உற்பத்தி செய்து தருகின்றன என்பதை குறித்து, தமிழ் சமூகத்தில் விவாதித்து மாற்றத் துணியாமல், பலமான ஆணாதிக்க அதிகார நிறுவன மையத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக நின்று கொண்டிருக்கிறோம். மக்கள் மீது தொடுக்கப்படும் பிற்போக்குத்தனமான கருத்தியல் சனாதன போரை நாம் கேளிக்கையென ரசிக்கும், கொண்டாடி மகிழும், அடிமை உளவியல் நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.

இங்கு பெண் உடலை சரக்காக்கி முதலீடாக்கும் நோக்கமே பிரதானமாகியதால், அதே இதிகாச சீதை, அகலிகை, கண்ணகி கதைகளின் துயரப் பெண் பிம்பங்களும், கண்ணன் லீலைகளின் பெண் உடல் நுகர்வு பண்ட பிம்பங்களும் என்று இரண்டு முரண்பட்ட பெண் பிம்பங்களை, பெண்ணின் அடையாளமாய் ஆதிகாலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை, தமிழின் பெருங்கதையாடலாய் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சமூகம், ஏட்டிலிருந்து திரையில் சமூக அரசியலை கற்கத் தொடங்கித் திரைப் பிம்பங்களை நம்மை ஆளும் தலைவராக முடிசூட்டினோம் என்றால், அது ஒரு சமூகத்தின் வீழ்ச்சியல்லவா? பெரும் ஊடகங்கள் சொல்லும், காட்சிப்படுத்தும், கற்பிக்கும் பெண் குறித்தான பேரரசியல் மதிப்பீடுகளின் வழி இச்சமூகம் பிற்போக்குச் சிந்தனையை பற்றிக்கொண்டிருப்பது அதன் இயங்கியலாகி போனது.

 

பெண் மீது வன்முறை செலுத்தும் உளவியல் நோயை உற்பத்தி செய்யும் கிருமிகள் உருவாக்கப்படுமிடம், எதன் மூலம் பரப்பப்படுகின்றன – யாரை தாக்கி அழிக்கின்றன என்று கண்டறிந்து, கிருமிகள் உற்பத்தியாகும் இடத்தை – நோய் பரப்பும் ஊடகத்தை ஒழித்து, பிறகு, நோய் பாதித்தவருக்கு மருந்துக் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால், பொதுச்சமூகம் முதலில் இது நோய் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. இரண்டாவது நோய் என்று அடையாளம் கண்டு குணப்படுத்தும் இடத்திலிருக்கும் சமூக மருத்துவர்களான அறிவுஜீவிகள், நோயாளிக்கு மருந்து பரிந்துரைப்பதன் மூலம் நோயை ஒழித்துவிடாலாம் என்ற மூட நம்பிக்கையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண் வெறுப்பு நோய்க் கிருமிகளை பரப்பும் சனாதனத்தை காப்பாற்றிக்கொண்டு வருபவர்களால், நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் நோய் தாக்குதல் நடக்காது என்ற அபத்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது, காலம் காலமாய். பெண்கள் பாதுகாப்பாய் மட்டுமல்ல ஆண் உணர்வுகளை தூண்டாமல் நடந்துகொண்டால் பெண்ணுடல் மீது நடக்கும் தாக்குதலிருந்து தப்பிக்கலாம் என்பதும், அப்படியே தாக்கப்பட்டால் உங்கள் வினைப்பயனெனக் கருதி கடக்க வேண்டுமென அறிவுரை குப்பைகளைக் கொட்டுவது, சமூகச் சீர்திருத்தமென முன்வைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் மீண்டு வர வேண்டுமென்பது எங்களுக்கும் தெரியும். இதையே பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு சமூகம் முன்வைத்துவிட்டு ஏன் தப்பித்துக் கொள்கிறது? வெறி நோய்க் கிருமியை ஒழிக்க, வெறி நோய் பரப்பும் மனித விலங்கைக் குணப்படுத்த, நாம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம்? ஏன் எடுக்கப்படவில்லை?

புராண, இதிகாசங்கள் வழி சனாதன மதிப்பீடுகளால், பெண் மீது நிகழ்த்தும் கருத்துருவாக்கப் போர், தொடர்ச்சியாய் சொல்மொழி மரபு, கதைமொழி மரபு, வாய்மொழி மரபு, நிகழ்த்துமொழி மரபு கடந்து தற்போது, காட்சிமொழி மரபுகளால் 24X7 என நம் காலம் நிரப்பப்பட்டிருக்கிறது. பொதுவுடமை புரட்சி நடந்தால் பெண்களுக்கான பொற்காலம் பிறந்துவிடும் என்ற வெற்றுக்கனவைக் காட்டி, எவ்வளவு காலம் இன்னும் பெண் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பது? இதுவரை, குறைந்தபட்சம் பெரியார் பேசிய பெண்ணியச் சொல்லாடல்களைகூட நம் சமூகச் சொல்மொழிக்குள், உரைமொழிக்குள், காட்சிமொழிக்குள் ஊடுருவ செய்ய முடியவில்லை.

எவ்வகை சிந்தனை, சிந்தாந்தம் பெரும்பான்மையாய் ஊடகம் வழி மொழியப்படுகிறதோ, காட்சியாக்கப்படுகிறதோ, பேரரசியலாக்கப்படுகிறதோ, அது நம் அன்றாட வாழ்வில் மறு உற்பத்தி செய்யப்பட்டு, வாய்மொழி மரபு, வாழ்வியல் மரபாய் நிரந்தமாய் மூளைக்குள் படிந்து, ஆணாதிக்கத்தால் ஆற்றல் பெற்ற ஒவ்வொரு உடல் கருவிகளும் வன்முறை செலுத்தும், கடத்தும், தாங்கும் கருவியாகியிருக்கிறது. வடிவேல் நகைச்சுவை காட்சிகள் போல பெண் மீதான வன்முறை ரசிக்கத்தக்கதாய், களிக்கத்தக்கதாய், கொண்டாடத்தக்கதாய், கழிவிரக்கத்திற்கு உட்பட்டதாய் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது.

 

‘அக்கினிப் பிரவேசம்’ முதல் வாசிப்பில் புரியாதப் புதிர்கள் அவிழத் தொடங்கின. பாலியல் வன்முறையை ரொமாண்டைஸ் செய்யும் கதைசொல்லி, ‘சேடிஸ்ட்’ ஆண் உளவியலை, கதைக்குள் ஆணின் ‘இயல்பான விளையாட்டு குணமாக’ நிறுவுகிறார். இக்கதையை ஆணாய் வாசிக்கும்போது, இக்கதையில் வரும் ஆண் பாத்திரத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போன ஏக்கமும், அறியா பெண்ணாய் நின்று வாசிக்கும் போது ஸ்டாக்ஹோம் சின்டரம் மனநிலையும், தாயாய் நின்று வாசிக்கும் போது பாவம் – குற்றம் – தண்டனை – விமோசனம் என்ற இடத்தை ஒருவர் அடையும் வழியையும் திறந்துப் போட்டிருக்கிறார் கதைசொல்லி.

கதையில் வருபவள் கல்லூரியில் படிக்கும் சிறுமி என்று தெளிவாகவே உறுதிப்படுத்தப்படுகிறது. அவள் உடல் மீது நிகழும் வன்முறையை, காதல் விளையாட்டின் பிறழ்வின் வெளிப்பாடாய் உணர வைக்க முயல்கிறார். மேலும், பெண்கள் அழகாய் இருப்பது அவர்களுக்கு ஆபத்து என்ற புராண கதைக்கு நியாயம் சேர்க்கும் தந்திரம் கதைக்குள் சொருகப்பட்டிருக்கிறது. தெருவில் அலையும் நாதியற்ற பிச்சைக்காரிகளையும் பைத்தியக்காரிகளையும் விட்டு வைக்காத ஜென்டில்மேன்கள் வாழும் நாட்டில், பெண் மீதான வன்முறைக்கு பெண்ணின் அழகு காரணமாக்கப்பட்டு, ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டு கடத்தி வேட்டையாடுவது இயற்கையென கதைச் சொல்ல ஜெயகாந்தன் எதற்கு? அடுத்த வீட்டு மதிலுக்குள் காய்க்கும் பழத்தை எட்டிப் பறிப்பதுபோல் பதட்டப்படாமல் வாசகர்களை தயார்ப்படுத்துவதுதான் ‘பிளஷர் ஆப் த டெக்ஸ்டா?

அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக்கொண்டு போய்விடலாம் போலக்கூடத் தோன்றும்…

ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில் அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடக் தோன்றும்// ஒரு சிறுமியை எழில் புஷ்பமென்கிறவர், அடுத்த வரியில், அவளின் ‘தந்தக் கடைசல்’ உடல் ஒரு கடத்தப்பட வேண்டிய பொருள் என்றாக்கி, கதையில் நிகழும் குற்றச் சம்பவத்தை நியாயப்படுத்த வாசகர்களை தயார்ப்படுத்துகிறார். பின்பகுதியில் அச்சிறுமியின் தாயார் கதைக்குள் வந்தவுடன், சம்பவத்துக்கு சிறுமியை காரணமாக்கிவிட்டு காணாமல் போய்விடுகிறார், குரூர கதைசொல்லி. ஒருவேளை அவ்வீட்டு பின்கட்டில் குடியிருக்கும் வேறொரு மாமி வீட்டுப் பெண்ணை வேவுபார்க்கச் சென்றிருக்கலாம்.

காரில் வரும் வாலிபனுக்கு அச்சிறுமியின் தெரு, வீடு, குடும்பப் பின்னணி எல்லாம் தெரிந்திருக்கிறது.

உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு – டூ யூ நோ தட்?” என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய்மறந்து போகிறாள்.

ஒரு சிறுமியின் பின்னால் ஒரு வாலிபன் அலைவது ‘ஸ்டால்கிங்’ குற்றமென, அவளுக்கு எந்த பேரிலக்கியமும் எந்த திரைப்படமும் வேறேதும் சொல்லித் தந்திருக்கவில்லை. அவன் இரண்டு வருடமாய் சிறுமியைக் காதலிக்க அலையவில்லை, சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்து திட்டமிட்டுக் கடத்தி, ரேப் செய்யக் காருடன் அலையும் ஹைக்கிளாஸ் குற்றவாளி என்று உணர முடியாதவள்.

‘உன் பின்னால் இரண்டு வருடமாய் சுற்றுகிறேன்’ என்ற தூண்டில் காதலுக்காக அல்ல என்று அறியும் பக்குவம் சிறுமிக்கு இல்லை. கடத்தியவனை ரசிக்கும் ஸ்டாக்ஹோம் சிண்டரத்தில் அவன் பகட்டில் மெய் மறக்கிறாள். விலையுயர்ந்த கார், மேற்கத்திய இசை, ஆங்கிலம், நேர்த்தியான உடை, வாசனை திரவம், சாக்லெட், ஸ்வீங்கம் மயக்கத்தையளிக்க போதுமானவை. தேவதைக் கதைகள் முதல் திரைக்கதைகள் வரை பெண்களைக் கவர வரும் ராஜகுமாரன் ‘ஜென்டில் மேன்’ என்று சொல்லித் தந்திருக்கின்றன.

அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்.’அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும், காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும்கூட, அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து, செறிந்து, வளைந்து, இறங்கி பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில், கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில், ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவரது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.

கண்ணாடிகள் ஏற்றப்பட்ட காருக்குள் எப்படி காற்றடிக்கிறது. கதைசொல்லி அதிக உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். ‘ரேப்பை’ இரு காதலர்கள் உடலுறவுக்குத் தயாராவது போல ரசித்து ருசித்து விளக்கும் ஜெயகாந்தன், வன்முறையை நியாயப்படுத்திப் புனிதப்படுத்தும் சடங்கை அறிந்தே செய்வதாக தோன்றுகிறது.

நேரடியான ரேப்பைவிட மிகக்கொடூரமானது, ரேப்பை ‘ஒருமித்த செக்ஸாக,’ பெண்ணையே ரேப்புக்கு உடன்பட வைத்து, அவள் ஆளுமையை சிதைப்பது. மனைவியை குறைகூறி, அப்பாவியாகிய தான் திருமண உறவில் ஏமாற்றப்பட்டதாய் பாதிக்கப்பட்டதாய் கதைகட்டி, தான் வேட்டையாட விரும்பும் பெண்ணின் இரக்கத்தை பயன்படுத்தி, அப்பெண்ணை உபயோகித்துக் கொள்வது ஒரு வகை; மனைவியை சதா புகழ்ந்து பேசி நல்லவனாக நடித்து, அடைந்தால் இப்படி ஒருவன் கிடைக்கனுமென்ற போதையை கிளர்ச்சியை தூண்டி, பெண்ணையே அவனின் தூண்டிலில் சிக்க வைத்து இரையாக்குவது இரண்டாவது வகை. அறிமுகமற்ற ஒருவளை இலக்காக்கி, துரத்தியலைந்து, காதலுக்காக உன் பின்னால் ஆண்டுக்கணக்கில் அலைந்ததாய் காதல் வசனம் பேசி, வசப்படுத்தி, பெண்ணை உள அளவில் உடலளவில் செயலற்ற நிலைக்குத் தள்ளி, அவளைத் தாக்குவது. தான் ஏமாற்றப்பட்டது தன் தவறென்று அவளை காலம் முழுவதும் உளவியல் தன்வதைச் சித்திரவதைக்குள் தள்ளி, பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாக்கி, பெண்களின் ஆளுமைகளைச் சிதைக்கும் கதைகள்தான் இங்கு உற்பத்தியாகின்றன.

கதை இதைச் சொல்ல வரவில்லை. பெண்ணின் மீது காலங்காலமாய் சுமத்தப்பட்ட கற்பு என்ற சிலுவையை / விலங்கை உடைக்க முயன்றிருக்கிறது என்பதும் சரிதான். ஆனால், கதை நிகழ்த்தும் விதம், அச்சிறுமியை அந்த வாலிபன் மட்டும் ரேப் செய்யவில்லை, கதைசொல்லியும் ரேப் செய்கிறார். நீரை அக்கினியாய் கருதி குளித்து வெளியேறும் சீதைகளாக்கும் கதைசொல்லி, ரேப் செய்தவனை சாரி சொல்லி, குற்றத்திலிருந்தும் குற்றவுணர்விலிருந்தும் தப்பவிடுகிறார். ரேப்பை அல்லது குற்றத்தை ‘பாவம்’ என்ற அதே புராணகால சிந்தனையிலேயே அணுகுகிறார் ஜெயகாந்தன். ரேப் செய்துவிட்டு, ஏதோ தெரியாமல் மோதிவிட்டது போல், அவன் சாரி சொல்லிவிட்டு அலுத்துக்கொண்டு இயல்பாகிவிடுகிறான். சாரி சொல்லி பாப விமோசனம் கொடுத்துவிடுவது அகலிகை காலத்திலிருந்து காலங்காலமாய் நடக்கும் வழக்கம், பெண்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்கிறார் கதைசொல்லி. கதைக்குள் நடக்கும் பீடியோபைல் பாலியல் குற்றம் என வாசகர்கள் உணர முடியாத நிலையை மட்டும் உருவாக்கவில்லை, ரேப்பிஸ்ட்க்கு கதாநாயகன் பிம்பத்தைப் பொருத்திப் புனிதப்படுத்திவிடுகிறார்.

 

‘அக்கினிப் பிரவேசம்’ போன்ற கதைகள் மொழிக்குள் கொண்டுவராமல் தவிர்த்த கதைகளைச் சொல்லத் தொடங்குவோம்…

மேலிருந்து சரசரவென சீறி இறங்கும் கருத்த பாம்புகளாய் வெளியே மழை மூர்க்கமாய் கொட்டுகிறது. எப்போதும் தாமதமாக வரும் மகன், இந்த அனர்த்தக் காலத்திலும் இப்படி செய்கிறானே என அலுத்துக்கொள்கிறாள் தாய். வானே பிளந்துவிடும் சத்தமாய் இடியும் மின்னலுமாய் கொட்டும் மழையில் பாதைத் தெரியாமல் கார் விபத்துக்குள்ளானால் என்னாவது, இன்றாவது நேரத்தோடு வரத் தெரியவில்லையே. கவலைப் பற்றிக்கொள்கிறது தாய்க்கு. கார் சத்தம் கேட்டு ஆவலாய் வாசல் கதவைத் திறக்கிறாள்.

போர்டிக்கோவில் நிறுத்திய காரிலிருந்து இறங்கும் மகன் நனைந்திருப்பதும் அவன் உருவமும் வித்தியாசமாய் இருப்பதும் உணர்ந்தவள், ‘என்னப்பாச்சு முகம் மாறியிருக்கு; காரில் வரும்போது எப்படி மழையில் நனைஞ்ச.’ பதில் சொல்லாமல் அலட்சியமாய் உள்நுழையும் மகனின் தோற்றத்தைக் கண்ட தாய்க்கு உள்நெஞ்சில் சட்டென்று ஒரு முள் தைக்க, வலி உச்சியேறுகிறது. மார்பில் அடித்துக்கொண்டு அழுகிறாள். எவள் குடியைக் கெடுத்தானோ, எந்த பெண்ணை நாசம் பண்ணினானோ? அவன் சட்டையைப் பிடித்து உலுக்குகிறாள், பதில் வேண்டி. தாயின் பிடியை விலக்க முயல, அவள் ஆவேசமாகி குலுக்கிப் பின்பக்கமாய் சாய்க்க, நிலைதடுமாறி வரவேற்பறையின் நீள சோபாவுக்கு அருகில் விழுகிறான். “உண்மையை சொல்லுடா சொல்லுடா” சரிந்துகிடக்கும் அவன் மார்பில் ஆத்திரம் கொண்டு குத்துகிறாள்.

செய்தியை கேட்டவளுக்கு நிலம் காலடியில் பிளந்து தன்னை உள்வாங்கிக் கொள்ளாதா, நாளை எவர் முகத்தில் முழிப்பேனென கதறுகிறாள். சிறுமியைக் கடத்திக்கொண்டு போய் நாசம் பண்ணிய குலம் கெடுக்கும் கோடரி தன் வயிற்றில் பிறந்துவிட்ட அவமானம் தாளவில்லை அவளுக்கு. இவனுக்கு பாடம் கற்பிக்காமல் விட்டால் நாளை எந்த பெண் குழந்தையும் தெருவில் அச்சமற்று நடமாட முடியாதே என அஞ்சுகிறாள். தன் வளர்ப்பில் பிழை இருக்கிறதோ என்று சந்தேகிக்கிறாள். ருசிகண்ட பூனை இனி சும்மா இருக்குமா? அவனை ஒரு அறையில் தள்ளிப் பூட்டியவள் காவல்நிலையத்துக்கு போன் செய்கிறாள்…

 

“மாலதி மைத்ரி” <anangufeministpublication@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *