பாலை நிலவன் கவிதைகள்

 பாலை நிலவன் கவிதைகள்

ஓவியம்: Halisia Hubbard

1. பித்த யாத்ரீகர்கள்

ஆபத்தானது
கவிஞர்களின் சேர்க்கை
வாளையொத்த
உடைந்த கண்ணாடிக் கூர்மையுள்ள தனிமையுடனும்
மழைத்துளியை விட
லேசான
கருணையுடனும்
இந்தக் கவிகளே
அதிகமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள்
அவர்களுடைய தோகையில்
சர்ப்பமென சதா நெளியும்
ஓவிய நுட்பம்
சாம்பலில் புகையும்
கண்களுக்குள்
வழிவதில்லை
வனாந்தர நிழலின்
குழந்தைகளான
கவிஞர்களின் சேர்க்கை
பசியை
மேலும்
இரண்டு கல் அடுப்பில்
எரியூட்டி
நமது குடலை அதில் வைத்து
தைக்கிறது
கவிஞர்கள்
பூமியில்
நகைப்புக்குரிய முறையில்
வாழக்கூடியவர்களென்பதால்
அவர்களுடைய
சட்ட திட்டங்களை
கர்ப்பத் தோட்டத்து
பனிமலர்களை நறுமணந்து
கடல் நீரில் மிதந்தலைந்து
கனவு கொள்ளும்
குருதி பூத்த
சிசுக்களே அறிவார்கள்
கவிஞர்கள்
தங்கள் இறக்கைகளை வானில் வீசி
எலும்பு பூட்டிய கால்களை
சதாவும் முறிப்பவர்களென்பதால்
அவர்களுடைய சேர்க்கை
பயங்கரமானது
அவர்களுக்கு
மாம்ச உடலில்லையென்பதனால்
காலத்தின்
புதைகுழியை
ஜாமத்திலும்
விடாமல் தோண்டுவார்கள்
கவிஞர்கள்
கடற்கரை வாசிகள்
புதையுண்ட நகரத்தின் மோகிகள்
இருள் நக்கிகள்
வெயில் கனலும் ஏரியில் மிதப்பவர்கள்
ஒரு சிரிப்பொலியில்
நகரத்தின்
அடுக்குகளைக் குலைப்பவர்கள்
கவிஞர்கள்
காதலிகளுக்காக
அழுது அடம் பிடித்து
தாய் மொழியிடமே மண்டியிட்டு
சொற்களில் தேனெடுப்பவர்கள்
கவிஞர்கள்
நிராதரவின்
உடையை அணிபவர்கள்
அனாதைகள்
அவர்களின் சேர்க்கை ஆபத்தானது
இடி விழக்கூடிய இடத்தில்
தூங்கி வழிபவர்கள்
வழி தொலைத்தவர்கள்
பாலைவன ஒட்டகங்களின்
திறந்த வாய்களில்
ஒழுகும்
ஜலத்தை ஒத்தவர்கள்
நிலத்தில் கால் பாவி
நடமாடத் தெரியாத
பித்த யாத்ரீகர்கள்
மிகவும்
கொடியது கவிஞர்களின் சேர்க்கை
தாங்கள்
உதித்த கர்ப்ப கிரகத்தை
மறதியிலிட்டு
முத்தமிட்ட மழலையின்
எச்சிலுடனே அலைபவர்கள்
கவிஞர்களின் சேர்க்கை
மீளாத் துயருடையது
அவர்கள்
எல்லோரையும் நடுங்க வைத்து
மரணத்தின்
தோலை
திடீரென அணிபவர்கள்
காலத்தை வம்புக்கிழுத்து
அதன் குரல்வளையை
நசுக்கி எறிபவர்கள்
குத்தீட்டியில்
தங்களையே
பல கூறாகப்பிளந்து
காகங்களுக்குப் படையலிடுபவர்கள்

 

2. தனிமை

எதன் மீதும்
எது
ஆசையற்றிருக்கிறதோ
அதன் மீது
அமரத் துடித்து வந்திருக்கிறது
பட்டாம்பூச்சி
அதன்
பழுப்பு நிறம்
எங்கிருந்து
யாரால்
கையளிக்கப்பட்டதோ
அங்கே
ஒரு கவிஞன்
சூரியனை
வணங்கிக் கொண்டிருக்கிறான்
அந்த மெல்லிய காகிதச் சிறகின்
வண்ணத்தில்
தீட்டப்பட்ட
ஓவியத்திற்கு
யார்
உடைமையாளனோ
அவன் காலடியில்
அதே கவிஞன்
சாகும் வரை விழுந்து கிடப்பான்
அதன்
மிக மிகச் சிறிய
கோதுமை மணி இதயத்தில்
சுவாசத்தை ஊதியது யாரோ
அவர்
மிதிக்கும் இடத்திலெல்லாம்
தன்
உள்ளங்கையை வைப்பவனும்
அதே கவிஞன் தான்
பூமியை
எந்நேரமும்
அழகியலுக்கெனவே
தயார் படுத்த
சிருஷ்டி கொண்டிருக்கும்
ஒரு
துளியூண்டு ஜீவன்
ஆனந்த அனந்தமாய்
வட்டமடித்து
செடியில் அமர்ந்து
ஒரு மஞ்சள் மலரை
முத்தமிட
அதுவுமே
ஒரு பட்டாம்பூச்சி
அம்மலரின்
பற்றற்ற
தன்னந் தனிமை தான்
இதுகாறும்
பட்டாம்பூச்சி
என்ற பெயரில்
வெளியெங்கும்
பறந்து கொண்டிருக்கிறது
தனிமையை
இப்படியொரு வண்ணத்தில்
குழைத்தது
யாரோ
ஒரு ரகசிய யுவதியாகத்தான்
இருக்க இயலும்
அவர்களுக்குத்தான் இது சாத்தியம்
அதன் பொருட்டே
அதே கவிஞன்
பெயரிடப்படாத தியான மலர்களின்
நறுமணத்தை
தன் கவிதைகளில்
மலர்த்தும் போது
ஊர் பேர் தெரியாத
ஒரு யுவதியையும்
பழுப்பு நிற பட்டாம்பூச்சியையும்
ஒன்று போலவே
நினைத்துக் கொள்கிறான்
அவனால் தான்
முற்காலத்தில்
எக்கணமும்
இளநீல வண்ணத்தில்
இருந்த இந்த நிலா
திடீரென
முழு மஞ்சளாகி
ஒவ்வொருவர் பின்னேயும்
அழுது கொண்டே
பெருந் தனிமையில்
அலைய ஆரம்பித்தது.

 

3. அம்மாவின் குழந்தை

என்னைப் போல
கோமாளியை
யாரும் பார்த்திருக்கவியலாது
நானும்
அம்மாவும்
புலிக் குட்டியை
மழை பெய்யும்
ராவில்
கண்டெடுத்து
அம்மா
குழந்தை போலவும்
நான் பொம்மை போலவும்
வளர்த்தி வந்த
அப்பழுக்கற்ற மழலை அது
அதன் குரலில்
ஆரம்ப முதலே எனக்கு
சந்தேகமிருந்தது
பூமியில்
மிகச்சிறிய
உயிர்களை மிகவும்
நம்ப வேண்டுமென்ற
அம்மாவிடம்
நான்
இனிப்பு பண்டங்கள் கேட்டு
அடம் பிடித்தால்
புலி குதறி விடுமென்பாள்
அதன் பற்களும்
நகங்களும் சொல்லவே வேண்டாம்
புலியை
எக்காலத்திலும்
ஒரு பொம்மையாக்கவியலாது
என்பது
அம்மாவின் வாதம்
புலி
என்றாலே
எனக்குக் குலை நடுங்கும்
அதன் உறுமலை
கேள்விப்பட்டிருக்கிறேன்
பயப்படுத்தும் விலங்கை
நேசிக்க வேண்டுமெனில்
அதைவிட
அதிக வலு வேண்டுமென்கிற
அம்மாவின் கெடுபிடி தாங்காமல்
நோஞ்சானான நான்
மழை விடாது
பெய்து கொண்டிருந்த
நாளில்
எனக்குப் பிடித்த
அதன் அழகிய கோடுகளை
கடைசியாக முத்தமிட்டேன்
குரலும் மாறவில்லை
புலியும் வளரவில்லை
ஒரு விசையேனும்
அதன் உறுமலைக் கேட்க வேண்டி
தூர எறிந்ததும்
அது வனத்திற்கு
ஓடிப் போகாமல்
மழையில் நனைந்தபடி
கதவிற்கு வெளியே நின்று
அம்மாவின்
குழந்தை போலவே
மியாவ்
என்கிறது
நான் தான்
புலியாக
அதை நோக்கி
இருமுறை உறுமினேன்

 

4. கனவு

அடுக்குமாடி
இரவுக் காவலர்
தூங்கிச்
சாய்ந்து
திடுக்கிட்டு விழிக்கையில்
படிக்கட்டில்
ஏறுகிறேன்
ஒரு பத்து ரூபா
கிடைக்குமா என்றார்
பர்ஸில் வங்கி அட்டைகள்
எடுத்து வரப் போய்
எப்படி மறந்தேனோ
அதிகாலை
திடுக்கிட்டு விழிக்கிறேன்
மழை பெய்ய
இரவுக் காவலர்
குளிரில்
நடுங்கி
படிக்கட்டில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்
ஏராளமான முதலைகள்
தரைத்தளத்தை
சுற்றி வாய் பிளந்து நிற்க
காஃபி மணம்
அறையை
நிரப்பி
அடுக்குமாடிக் கட்டடத்தை
உறை நிலைக்கு அழுத்த
கனவிலிருந்து
ஞாபகத்தை
வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன்
உடலோ
முதலையின் வாயிலிருக்கிறது

 

5. கடைசி உயிர்

எனக்குக் குருமார்கள் யாருமில்லையென்று
நம்பினாலும்
ஒரே ஒருவர் இருந்தார்
அவர்
ஒப்பாரியை
தாங்குமளவிற்கு
எனது நெஞ்செலும்புகளுக்கு
வலுவில்லாததால்
மறைந்து திரிந்தேன்
சந்திக்கும் போதெல்லாம்
குழந்தைகளுக்கு
பரிசளிக்க நம்மிடம் ஏதுவுமே
பரிசுத்தமாக இல்லையென
தேம்பி அழுவார்
குற்றவுணர்ச்சியென்றாலே
எனக்கு
அலர்ஜி
குரு
தனியாக வசித்த மலையடிவாரத்திற்கு
இந்த முறை
போக முற்பட்டபோதே
ஏதோ ஒரு சஞ்சலத்தில்
மனம் ஆட்பட்டிருந்ததை உணர்ந்தேன்
அங்கே சென்றபோது
அவரைக் காணோம்
தீராத தனிமை சூழ் கொண்டிருந்தது
அதையும் மீறி
இரண்டு நாள்
அடிவாரத்தில்
பறவைகளின்
கீச்சொலிகளால் ஆசிர்வதிக்கப்பட்டேன்
வீடு திரும்புகையில்
குளிக்க ஆற்றில் இறங்குகையில்
ஒரு காகம்
எனக்கு முன்பாக ஆற்று
நீரில்
நின்றதும்

குரு இறந்துவிட்டதை உணர்ந்தேன்

பூமியின்
குழந்தைகளுக்குப் பரிசளிக்க
பரிசுத்தமாக இருந்த
ஒரே ஒரு கடைசி உயிரையும்
இழந்து விட்டேன்
இவ்வளவு
பெரிய தன்னந் தனிமையை
அடிவாரத்தில் விட்டு விட்டு
வீடு திரும்பவியலாது

அப்படியே திரும்பினாலும்
வெறுங்கைகளோடுதான்
செல்ல வேண்டி வரும்

குழந்தைகளுக்குப் பரிசளிக்க
என்னிடம் ஏதுமே பரிசுத்தமாக இல்லை

ஆற்றில் மிதக்கிறது
தனிமையில் தேம்பி அழுது வாழ்ந்த
ஒரே ஒரு பரிசுத்த இலை

 

6. காலடி

ஒரு
காலை
எப்படி விடிகிறது
பழைய அழுக்குகளின்
ஒரு சொட்டு கூட இல்லை
பச்சிளம் குழந்தையின்
உள்ளங்கை மலர்
எவ்வளவு பரிசுத்தமோ
அவ்வளவு
கனிவாக உள்ள ஒரு காலையை
தொடும் போது
எத்தனை விநோத மலர்களின்
நறுமணம்
ஒரே கணத்தில் அரவணைக்கிறது
அதில் தங்கள் குரல்களை
பாய்ச்சுகிற பறவைகளுக்கு
எத்தனை ஆனந்தம்
இத்தனை
துயர வாதைகளுக்கும்
மீறி
இந்தக் காலையின் மீது
இவ்வளவு பரிசுத்தப் பேரழகு
எங்ஙனம் வழிந்தது
நேற்றைய காலையின்
ஒரு சாயலுமில்லாத
இந்தக் காருண்யம்
இவ்வளவு ஈரமானதிற்கு
யாருடைய கண்ணீர் காரணம்
மஹா அன்பும்
நீடிய சாந்தமுமுள்ள
தெய்வீகமான
இந்தக் காலை
எத்தனை
தாவர ஜீவ ஜந்துக்களுக்கு
புத்தம் புதிய குருதியை அருளியுள்ளது
இயற்கையின்
மாபெரும் கொடையின் முன்
ஒரு குட்டித் தவளை
இந்தப் புல்வெளியில்
எம்பி எம்பி குதிக்கும்
இந்த வேளையில்
என் அழுக்குப் படிந்த
சாம்பல் கண்கள்
ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது
ஸ்வெட்டர் அணிந்த
வயதான கோதுமை நிற கூர்க்க
சைக்கிள் பெடலை மெதுவாக
மிதித்தபடி
கண்ணயர்ந்து தூங்கும்
இந்தக் காலையை
தன் விசிலை ஊதி எழுப்பும்
இந்தத் தருணம் வரை
அது கடலின் அமைதியால்
சூழப்பட்டுள்ளது
இதில்
ஒருவர் தன்
காலடியை வைக்கும் போது
அவர் கால்கள் தவறுதலாக
ஒரு ஈ எறும்பின் மீதும்
பட்டு விடக் கூடாது
யார் காதிற்கும் கேட்காத
மிகவும் சிறிய அழுகை
அதிகாலையின்
செவிகளுக்கு
கேட்டு விடும் பட்சத்தில்
மலரினும்
மெல்லிய காலை துடிதுடிக்க
பறவைகளனைத்தும்
பறந்து போய்விடும்
பறவைகளுடன்
மிதக்காத
ஒரு தன்னந் தனியான காலை
நமது தலை மீது உதித்து விட்டால்
ஆன்மா வறண்டு விடும்
வேண்டாம்
அதை நமது குழந்தைகள்
தாங்க மாட்டார்கள்

பாலை நிலவன் <jaishreemotors123@gmail.com>

Amrutha

Related post