மொழிக் கொல்லியாக இந்தி மாறிய வரலாறு

 மொழிக் கொல்லியாக இந்தி மாறிய வரலாறு

ரோஷன் கிஷோர்

தமிழில்: பூ.கொ.சரவணன்

 

டெல்லி பல்கலையின் பீகாரிக்கள் இடையே தங்களைத் தரம் தாழ்த்திக்கொள்ளும் ஒரு நகைச்சுவை புழக்கத்தில் இருந்தது. டெல்லிவாலா ஒருவர் தன்னுடன் பயிலும் பீகாரியிடம், “ஏண்டா உன்னோட காலெல்லாம் மண்ணாகி கிடக்கு?” என்று கேட்டால், “நான் நடந்து போய்கிட்டே இருந்தேன். அப்ப அப்படியே காடோவுல (சேற்றுக்குட்டை) விழுந்துட்டேன்” என்பார். காடோ என்பது போஜ்புரி, மகதி மொழிகளில் சேற்றைக் குறிக்கப் பயன்படும் பதம். சேற்றைக் குறிக்க இந்தியில் பயன்படுத்தப்படும் கீச்சட் என்கிற வார்த்தையைப் பீகாரி பயன்படுத்துவது இல்லை. இதிலென்ன சிரிக்க இருக்கிறது என்று தோன்றுகிறதா? ஒரு பீகாரி என்னதான் தன்னுடைய பீகாரின் பட்டிக்காட்டுத்தனத்தை, நவீன ஆடைகளை அணிந்து மறைக்க முயன்றாலும், அவருடைய மொழி அவரை அடையாளம் காட்டிவிடுகிறது.

இந்தக் கேலி, கிண்டல்களைத் தாண்டி மேற்குறிப்பிட்ட உரையாடல் இந்தி பரவலாகப் புழங்கி வரும் பகுதிகளில் படிப்படியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் வீரியமிக்கக் கலாசார மாற்றத்தை கண்முன் நிறுத்துகிறது. இந்தி அல்லது சர்க்காரி இந்தி (இதைக் குறித்துப் பின்னர் காண்போம்) விந்திய மலைக்கு வடக்கே வாழும் பலகோடி மக்கள் பேசும் பல்வேறு மொழிகளை நிதானமாக அரித்து, அழித்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் வாழும் ஒருவரின் கண்முன் பஞ்சாபி, ஹரியான்வி, உருது மொழிகள் இறந்து கொண்டிருக்கலாம். என்னுடைய பகுதியில் மகதி (நாங்கள் மகஹி என்று அழைப்போம்) இந்தியால் அழிந்து கொண்டிருக்கிறது. மகதியின் பெயர் சுட்டுகிறபடி அம்மொழி மகதப் பகுதியோடு தொடர்புடையது. அசோகர் முதலிய வலிமை பொருந்திய மன்னர்கள் கோலோச்சிய பகுதியே மகதம்.

என்னுடைய குடும்பத்தின் அடுத்தத் தலைமுறை வாண்டுகள் டெல்லியிலும் பெருநகரங்களிலும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களால் மகத மொழியில் தங்குதடையின்றிப் பேச முடியாது. இரு தலைமுறைகளுக்கு முன்புவரை என் குடும்பத்தின் உரையாடல் மொழியாக மகதியே இருந்தது.

இந்தி அறிவுலகத்தில் போஜ்புரி, மகதி முதலிய மொழிகளை வளர்த்தெடுப்பது இந்தியின் நிலையைப் பலவீனப்படுத்திவிடுமா என்கிற வகையிலான காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ரோஷன் கிஷோர்

இப்படிப்பட்ட வேர்களை இழந்து அலைபாயும் நிலையால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மேற்சொன்ன மொழிகள் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒரு எடுத்துகாட்டுப் போதுமானதாக இருக்கும். சாத் பீகார், கிழக்கு உத்திர பிரதேசத்தின் மிக முக்கியமான மதப்பண்டிகையாகும். இப்பகுதிகளில் இருந்து டெல்லி, மும்பை முதலிய பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பெருகியவண்ணம் உள்ளது. இந்நிலையில் சாத் விழாவிற்குப் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது பெரும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. சடங்குகள் மட்டுமல்லாமல், சாத் விழாவில் நாட்டுப்புற பாடல்களும் இடம்பிடிக்கின்றன.

நான் இதுவரையில் இந்தி மொழியில் எழுதப்பட்ட ஒரே ஒரு சாத் பாடலைக்கூடக் கேள்விப்பட்டதில்லை. அவை மகதி, மைதிலி, போஜ்புரி மொழிகளிலேயே பாடப்படுகின்றன. டெல்லியில் வாழ்கிற பெரும்பாலான இந்தி பேசும் மக்களால் இந்தப் பாடல்களின் பெரும்பகுதிகளைப் புரிந்து, பொருள்கொள்ள முடியாது. இப்பாடல்களை YouTube-ல் ஆர்வமுள்ளவர்கள் கேட்டுப் பார்க்கலாம்.

கேரளாவிற்கு வெளியே வளர்கிற பதின்பருவத்தில் இருக்கும் மலையாள பிள்ளை ஒருவனுக்கு மலையாளம் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். எப்போது கேரளாவிற்கு வந்தாலும் அங்கு நிகழும் எந்தச் சமூக, கலாசார விழாவையும் அவனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இப்படித் தன்னுடைய சொந்த மண்ணை விட்டு வெளியேறி வாழும் பீகாரி ஊர் திரும்புகையில் சாத் பாடல்கள் புரியாமல் விழிக்கவே செய்வான்.

அந்தக் காலம் அழகாகத்தான் இருந்தது வகையிலான இத்தகைய மலரும் நினைவுகள் மட்டுமே அழியவில்லை. இந்த மொழிகளைப் பல லட்சம் மக்கள் இன்னமும் தங்களின் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காடோ (சேறு) என்பதைக் கீச்சட்டை குறிக்கிறது என்பதை அறியாத ஒருவரோடு இயல்பாக அவர்களால் பேச முடியாது. சுருக்கமாக, தன்னுடைய மண்ணைவிட்டு வெளியூரில் வாழ்ந்து வரும் பீகாரி இளைஞன் ஊர் திரும்புகையில் தாய்மண்ணில் தாய்மொழியின்றித் தவிப்பான்.

வட இந்தியாவின் முதன்மையான தொடர்பு மொழியாக இந்தி இருப்பதையும், மேற்சொன்ன தவிப்பையும் எப்படிப் புரிந்துகொள்வது? இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் எந்தெந்த மொழிகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளப் பெருமளவில் உதவுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களின் தாய்மொழியைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்துகிறது. தாய்மொழி என்பது ஒரு நபரின் குழந்தைப் பருவத்தில் தாயுடன் உரையாடிய மொழியைக் குறிக்கிறது. ஒருவேளை அவரின் தாய் இறந்திருந்தால் என்ன செய்வது? அப்போதும் தாய்மொழி என்பது வீட்டிற்குள் பேசிக்கொள்ளும் மொழி தானே அன்றி, பயிற்றுமொழியோ, சமூக உரையாடலுக்குப் பயன்படும் மொழியோ அல்ல.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருபத்தி இரண்டு மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தாய்மொழியைக் கணக்கெடுக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு (பொதுவெளியில் இருக்கும் சமீபத்திய மொழிவாரி கணக்கெடுப்பு இதுவே) ஒவ்வொரு மொழியின் உட்பிரிவுகளைப் பட்டியல் போடுகிறது. இந்தி என்கிற பெரும் பகுப்பிற்குள் இந்தி உள்ளிட்ட 49 தாய்மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பகுப்பின் கீழ் 42.2 கோடி மக்களில் 61% மக்களின் தாய்மொழியே இந்தியாகும். முதல் ஐந்து இடங்களில் இடம்பெறும் போஜ்புரி, மகதி மொழிகளை முறையே 7.8%, 3.3% மக்கள் பேசுகிறார்கள்.

பீகாரில் மேற்சொன்ன நிலைமை அப்படியே தலைகீழாக மாறுகிறது. கால்வாசிபேர் கூட இந்தியை தங்களின் தாய்மொழியாகப் பதிவு செய்யவில்லை. போஜ்புரி, மகதி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் முறையே 33.6% , 20% ஆவர். எண்ணிக்கையாகச் சொல்ல வேண்டுமென்றால், முறையே இரண்டு கோடிக்கும், 1.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இம்மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். கூட்டாக இவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் இரண்டரை கோடி மக்கள் தொகையை விட அதிகமாகும்.

தன்னுடைய சொந்த நிலத்திலேயே இந்தி எத்தகைய கலாசார வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதற்கு மேற்குறிப்பிட்ட எண்கள் கட்டியம் கூறுகின்றன. இந்தி மொழியை, இந்தி பேசாத மாநிலங்களின் மீது திணிப்பதால் உண்டாகும் கேடுகள் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதி குவித்துள்ளார்கள். ஆனால் மகதி, போஜ்புரி முதலிய மொழிகளை அரித்து அழிக்கும் இந்தியின் அச்சம் தரும் மேலாதிக்கச் செயல்திட்டம் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. இந்தி-இந்து-இந்துஸ்தான் என்கிற வலதுசாரி இந்து அரசியலின் இன்னொரு பண்பு தானோ இது? இந்தி தேசியத்தின் வரலாற்றைச் சற்றே திரும்பி பார்ப்பது பயன்தரக்கூடியதாக இருக்கும்.

Orient BlackSwan பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அலோக் ராய் எழுதிய ‘இந்தி தேசியம்’ என்கிற நூல் இந்தி தேசியத்தின் ஆழ, அகலங்களைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான நல்ல அறிமுகம் ஆகும். அலோக் ராய் அலாகாபாத், டெல்லி பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

உருது, இந்தி மொழிகளில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரான முன்ஷி பிரேம்சந்தின் பேரன் அலோக் ராய். இந்நூல், இன்றைக்கு நாம் அறியும் இந்தி எப்படி இத்தனை ஆதிக்கம் மிக்கதாக உருவெடுத்தது என்பதை விரித்துச் சொல்கிறது. பிரிட்டிஷ் வருகைக்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் பாரசீகமே இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரிவடிவமாக இருந்தது. இது மேட்டுக்குடி அல்லாதவர்களைப் பெருமளவில் பாதித்தது. குறிப்பாகப் பாரசீக வரிவடிவத்தை அறியாத இந்துக்கள் இயல்பாகவே அவதிக்கு ஆளானார்கள். வட மேற்கு மாகாணங்கள், அவாத் பகுதிகளின் லெப்டினன்ட் கவர்னராகத் திகழ்ந்த சர் அந்தோணி மெக்டொன்னெல் 1900இல் தேவநாகரி வரிவடிவத்தை நீதிமன்றங்களில் பயன்படுத்த அனுமதி நல்கினார். இந்தி தேவநாகரி வரிவடிவத்திலேயே எழுதப்பட்டு வந்தது. இந்த முடிவுக்குப் பின்னால் இரு காரணிகள் இருந்ததாக அலோக் ராய் கருதுகிறார். ஆட்சியதிகார மொழி பொது மக்களுக்குப் புரியும் வண்ணம் இருக்க வேண்டும். மேலும், 1857 கிளர்ச்சியில் இஸ்லாமிய மேட்டுக்குடியினர் முக்கியப் பங்காற்றினார்கள். பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்தில் பாரசீகத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், இஸ்லாமியர்களின் சமூக – பொருளாதார நிலையை வலுவிழக்க செய்ய இயலும். பாரசீகம் தெரியாததால் வாய்ப்புகளை இழந்த இந்துக்கள் இதனால் அகமகிழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. வரி வடிவம் எது என்பதை எளிதாகத் தேர்வு செய்துவிட்டாலும் எதனை அலுவல் மொழியாக மாற்றுவது என்பதில் சிக்கல் எழுந்தது. இந்தியாவில் தரமன இந்தி ஒன்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷார் விரும்பினார்கள். இந்தி, உருது மொழிகளின் கலப்பில் வழங்கி வந்த இந்துஸ்தானி மொழி இத்திட்டத்திற்கு ஏற்றதாக இருக்கவில்லை.

அலோக் ராயின் நூலில் வரும் தகவல் ஒன்று தரம் நிறைந்த மொழிக்கான தேடலை பிரிட்டிஷார் 1857இக்கு முன்பே துவங்கி விட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அன்றைய அரசாங்க கல்வித்துறையின் 1846 – 47க்கான ஆண்டறிக்கை ஒரு செய்தியை பதிவு செய்கிறது. பனராஸ் கல்லூரியின் முதல்வரான ஜே.ஆர். பாலன்டைனேவிடம் ஒரு மாணவன் கேள்வி ஒன்றை எழுப்பினான். “பல நூறு பேசுமொழிகள் வழங்கி வரும் நிலையில், ஐரோப்பியர்கள் எதனை இந்தி என்று குறிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்களுடைய பார்வையில் எல்லாப் பேசுமொழிகளும் இந்தி என்கிற பெயருக்கு உரியது” என்றான். அதற்குப் பதில் அளித்த பாலன்டைனே, “தேசிய மொழியை உருவாக்கும் பொறுப்பைப் பட்டிக்காட்டான்களிடம் விட்டுவிட்டதற்காக” மாணவர்களைக் கடிந்து கொண்டார் என்கிறது அவ்வறிக்கை. மேலும், “பயனற்ற மாகாண பேசுமொழிகளைத் துரத்தி அடித்துவிட்டு” தரமான இலக்கியத்தைப் படைக்குமாறு அவர் அறிவுறுத்தியதாகத் தெரிய வருகிறது.

எது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்கிற தேடல் விரைவில் அரசியலுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்து, இஸ்லாமிய அறிவறிஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய தரமான மொழிகளில் வழங்கி வந்த பாரசீக, சம்ஸ்கிருத வார்த்தைகளை நீக்கினார்கள். இந்த இருமை வேகமெடுத்த நிலையில், இந்தி என்கிற நாமத்திற்கு உரிய பலநூறு பேசு மொழிகள் மொழிப்போரின் களப்பலியாகச் சிதைந்து போயின. இதனை எதிர்த்தவர்கள் அனைவரும் துரோகிகள் என்று கட்டம் கட்டப்பட்டார்கள். அலோக் ராய், நாதுராம் கோட்சேவின் இறுதி வாக்குமூலத்தை மேற்கோள் காட்டுகிறார். காந்தியை சுட்டுக்கொன்றதற்கு அவர் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை எதிர்த்ததும் ஒரு காரணம் என்கிறான் கோட்சே.

அலோக் ராய்

கவலைதரும் தற்காலத்தில் இந்த வரலாற்றை மறந்துவிடக் கூடாது. இவ்வரலாற்றை நினைவில் நிறுத்த வேண்டியது தவிர்த்துவிடமுடியாத தேவையாகும். இந்தியை திணிக்கும் முயற்சிகள், அறிவிப்புகள் ஐம்பதுகள், அறுபதுகளின் இந்தி எதிர்ப்புக் கனல்களை மீண்டும் மூட்டிவிடுமோ எனும் அச்சம் பீடிக்கிறது.

இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளை இந்தி அறிவுலகமும் கலாசார வெளியும் போதுமான அளவு எதிர்க்கவில்லை. இதனால், ஒட்டுமொத்த இந்தி மொழி பேசும் மக்களும் மொழி வெறியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இதுவரை நாம் தெரிந்துகொண்டவற்றை அசைபோட்டு பார்த்தால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒற்றைப்படையான இந்தியை வளர்த்தெடுக்கும் செயல்திட்டத்தின் முதல் பலி இந்தியே. தேசம், கலாசாரம் என்கிற பெரும் கதையாடல்களை வளர்த்தெடுக்கும் போர்வையில், நம்முடைய உள்ளார்ந்த பன்மைத்துவம் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. இந்தி கவிஞர் சுதாமே பாண்டே தூமில் அறுபதுகளில் எழுதிய கவிதையை அலோக் ராய் மேற்கோள் காட்டுகிறார். இக்கவிதை இந்தத் துயரத்தை வலிமையாக வெளிப்படுத்துகிறது:

துமரா ஏ தமிழ்-துக்
மேரி இஸ் போஜ்புரி பீடா கா
பாய் ஹை
பாஷா உஸ் திக்தமி தரிந்தே கா கௌர் ஹை

(உன்னுடைய தமிழ்த் துயரம்
என்னுடைய போஜ்புரித் துயரத்துக்குச் சகோதரன் —
வஞ்சகமிகுந்த மிருகத்துக்கு மொழி வெறும் பருக்கை தானே ….)

இந்தச் சிக்கலை தீர்க்க முனைவதை விட அது குறித்து உரையாடுவது எளிமையானது என்பதில் ஐயமில்லை. இந்தி அறிவுலகத்திலேயே, போஜ்புரி, மகதி முதலிய மொழிகளை வளர்த்தெடுப்பது இந்திக்கு இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்குமா என்று காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இந்தியின் மேலாதிக்கம் மேன்மேலும் அரசின் ஆதரவை பெறுவதற்கு உதவிகரமாக உள்ளது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் மகதி முதலிய மொழிகளிடம் இருந்து எப்படி மக்கள் எப்படி அன்னியப்பட்டுப் போகிறார்கள் எனக்கண்டோம். இந்தச் சிக்கலை மகதியை அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணை மொழியாக மாற்றுவதாலோ (மைதிலி 2004இல் அட்டவணையில் இணைக்கப்பட்டது), ஓரிரு பல்கலைகளில் தனித்துறைகளைத் துவக்குவதாலோ தீர்ந்து விடுமா என்று எனக்குத் தெரியவில்லை.

அடுத்து ஐந்தாண்டுகளில் யாரேனும் ஒருவர் தெற்கு டெல்லியின் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றில் திரையிடக்கூடிய போஜ்புரி / மகதி மொழி திரைப்படத்தை எடுப்பார்களா? இந்தி பகுதி அறிவறிஞர்கள் தங்களுடைய சாதி அரசியலில் இருந்து மீண்டெழுந்து மதச்சார்பற்ற, வட்டார, வெகுமக்கள் பண்பாட்டைப் பேணி வளர்ப்பார்களா? இத்தகைய பன்மைத்தன்மை தொடர்ந்து அழிவதால் இந்தி பேசும் இந்தியப் பகுதிக்கு ஏற்படப்போகும் இழப்புகள் என்னென்ன? இது குறித்து நம்முடைய அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் அக்கறை இருக்கிறதா?

இன்றைக்கு இந்தியாவிலேயே பிரபலமான வெகுமக்கள் தலைவராகத் திகழும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தப் பன்மைத்தன்மையின் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான தன்னுடைய பரப்புரையை 27 அக்டோபர் 2013 அன்று பீகாரின் ஹங்கர் பேரணியில் துவங்கினார். பீகாரின் முப்பெரும் பேசுமொழிகளான போஜ்புரி, மகதி, மைதிலியில் இரண்டு வாக்கியங்களை உதிர்த்தார். எப்போதும் போல, திரண்டிருந்த மக்கள் கூட்டம் மோடிக்கு ஆரவாரம் செய்தது.

மோடியின் சக பயணிகளால் முன்னெடுக்கப்படும் சமஸ்கிருதமயமான, மேலாதிக்கம் மிக்க இந்தியால் நிகழ்ந்திருக்கும் சேதாரங்கள் ஏராளம். இவற்றை மோடியின் அரசியல் ஆளுமை சீர்செய்துவிடமுடியும் என்று நம்புவதற்கான எதுவும் இதுவரை நிகழவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

*****

இக்கட்டுரை ‘Livemint’ நாளிதழில் ‘How a Bihari lost his mother tongue to Hindi’ எனும் தலைப்பில் வெளியானது. ரோஷன் கிஷோர்இந்துஸ்தான் டைம்ஸ்நாளிதழின் ‘Data & Political economy’ ஆசிரியர்.

பூ.கொ.சரவணன் <saravananagatha@gmail.com>

Amrutha

Related post