சங்கீத வித்துவானாக விரும்பினேன்

 சங்கீத வித்துவானாக விரும்பினேன்

கி. ராஜநாராயணன்

 

‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. பாண்டிச்சேரியில் இருக்கும் கி.ராஜநாராயணன் வீட்டில் சென்று சந்தித்தோம். இடைச்சேவலை விட்டு பாண்டிச்சேரி வந்து அப்போது பதினைந்து வருடங்களுக்கும் மேலாகி இருந்தது. ஆனாலும் பேச்சும் உற்சாகமுமாக இடைச்சேவல்காரராகதான் கி. ரா. அப்போதும் இருந்தார். கி.ராஜநாராயணன் மறைவை முன்னிட்டு அவர் நினைவாக இந்த நேர்காணலை இங்கே மீள்பிரசுரம் செய்கிறோம்.

இனி கி. ராஜநாராயணன்….

முதலில் உங்கள் குடும்பம் சிறுவயது நண்பர்கள் மற்றும் சிறுவயது ஈடுபாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் அப்பா, அம்மா சாதாரண விவசாயிகள்தான். எங்கள் கிராமத்தில் நாங்கள் கொஞ்சம் வசதியான விவசாயி. எங்கள் ஊர் இடைச்சேவல் ரோட்டு மேலேயிருந்தது. அப்பா சிறிய வயதிலேயே இறந்து போகிறார். ஊரில் சிறிய வயதில் அப்பா இறந்து போய்விட்டால் பையன் மைனர் விளையாட்டு விளையாட ஆரம்பித்து விடுவான். அந்த மாதிரி நான் என் இஷ்டத்துக்கு அலைந்தேன். ஆனால், தறிகெட்டு அலையும் மற்ற மைனர்கள் போல் இல்லாமல் என்னுடைய ஈடுபாடுகள் அரசியல், சங்கீதம் இலக்கியம் என்பதாக இருந்தது. எனக்கு இங்கிலீஷ் தெரியாது. அதனை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

என்னுடைய அசல் முகம் அரசியல்தான். அப்புறம் சங்கீதம் பிறகுதான் இலக்கியம். ஆனால், மற்றவர்களுக்கு என்னை ஒரு இலக்கியவாதியாக மட்டும்தான் தெரியும். டி.என். ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாச்சலம் ஆகியோர் பற்றி சில கட்டுரைகள் நான் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துவிட்டு சிலர் கேட்டார்கள்: “உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?” இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்ட மாதிரி சங்கீதத்திலும் ஒரு ஈடுபாடு. அரசியல் சார்ந்த என்னுடைய வாழ்க்கை இதுவரைக்கும் வெளியே வரவில்லை. எனவே, முதலில் அது சார்ந்து பேசி விடுவோம்.

மிகவும் சின்ன வயதிலிருந்தே எனக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. குழந்தைகளுக்கு எப்போதுமே எதில் ஈடுபாடு இருக்கிறதோ அதை விளையாட்டாக விளையாடுவார்கள். 1930களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மட்டும்தான் இருந்தது. அந்த கட்சிக்குள் பல கட்சிகள் இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள், சோஷலிஸ்ட்டுகள், ராயிஸ்டுகள் போன்ற பல்வேறு அபிப்ராய பேதங்கள் உள்ளவர்கள் எல்லோரும் அதிலிருந்தார்கள். பெரிய தலைவர்கள் எங்கள் ஊரில் வந்து கூட்டங்கள் போடுவார்கள். கூட்டங்கள் முடிந்த மறுநாள் அது போல் ஒரு மாதிரிக் கூட்டம் நடத்தி நாங்கள் விளையாடுவோம். “வந்தேமாதரம் அல்லாஹ் அக்பர், பாரத் மாதா கி ஜெ” என்று கோஷம் போடுவோம் ஆனால், இதற்கு அர்த்தங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. சோளத்தட்டைத்தான் மைக்.

“வெள்ளைக்காரன் போனால்தான் நமக்கு நல்லது நடக்கும்” என்று சொன்னால் எங்கள் ஊர் பெரிய ஆட்கள் சொல்வார்கள்: “இந்தப் பசங்க தெரியாமல் சொல்கிறான்கள். வெள்ளைக்காரன் ரயில் கொண்டு வந்திருக்கிறான். இவனுவளாள முடியுமா? ஒரு காகிதம் போட்டா எங்கேயெல்லாமோ போகுதே அந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்திருக்கிறார்கள். தீ வட்டி கொள்ளை, பாளையப்பட்டுக்காரங்க பெண்களைத் தூக்கிக் கொண்டு போவது என்பது ஒரே அராஜகமாக இருந்த நேரத்தில் அவன் வந்துதான் எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கி இருக்கிறான். நீதி, நியாயம் எவ்வளவு நல்லாயிருக்கு” என்று சொல்லி அவர்களை பாராட்டுவார்கள்.

இந்த பெரியவர்களுடைய அபிட்சயங்களை எல்லாம் மாற்றுவதற்காகத் தலைவர்கள் சொன்னார்கள்: ”வெள்ளைக்காரன் போய் சுயராஜ்ஜியம் வந்தால் மேல் மலையில் இருக்கும் கீரி ஆற்றை உடைத்து விடுவோம். சங்கரன்கோவில் தாலுகா முழுவதும் தண்ணீர் பாய்ந்து நம்முடைய நிலங்கள் எல்லாம் விளைநிலங்களாகும். தோட்டக்காடுகள் ஆகும். இதை இந்த வெள்ளைக்காரனால் செய்யமுடியுமா?” இது பெரியவர்களுக்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தது.

1940இல் நான் எட்டாம் வகுப்பு பெயிலாகியதிலிருந்து எங்கள் ஊரில் நடைபெற்ற எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டேன். 1942இல் காங்கிரஸ்காரர்கள் அனேக பேரைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். அப்புறம் அரசியல் நடவடிக்கை என்பது கம்யூனிஸ்ட்டுகளை மாத்திரம் சார்ந்திருந்தது. ராகவன், வி. பி. சிந்தன் அப்போது எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு 21 வயது. மலையாளம் கலந்த தமிழில் என்னுடன் நிறையப் பேசியிருக்கிறார்.

இந்தியா இரண்டாவது உலக மகா யுத்தத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட செலவு 400 கோடி. கடனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வெள்ளைக்காரன் அதிகார மாற்றம் செய்யும் போது சொன்னான். இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். ‘இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் அல்லது சுயராஜ்ஜியம் கொடுக்கிறோம்’ என்று அவன் எப்போதுமே சொல்லவில்லை; அதிகார மாற்றம் என்றுதான் சொன்னான். இந்த காங்கிரஸ் மூதேவிகள் சரி என்று சொல்லிவிட்டதுகள். கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக இதனை எதிர்த்தார்கள். இந்தியா இதனால் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருக்க போகிறது என்று சொன்னார்கள். இந்த கடன் பெருகிக்கொண்டே போகும் யாருமே கேட்கவில்லை. காங்கிரஸ்காரர்கள், “அதையெல்லாம் சாதாரணமாக கட்டிவிடலாம் சும்மா இந்த கம்யூனிஸ்ட்காரர்கள் சொல்லிக்கொண்டு இருக்காங்க” என்று சொன்னார்கள். காங்கிரஸ்காரனாக இருந்தவன் இதனால் சுதந்திரத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட்டுகள் பக்கம் போய்விட்டேன்.

நானும் கு. அழகிரிசாமியும் சேர்ந்துதான் கம்யூனிஸ்ட் கட்சியை இடைச்செவலில் தொடங்கினோம். அழகிரிசாமி, எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருந்தான். வெளியூர் போய் வந்ததால் அவனுக்குக் கொஞ்சம் படித்தவர்கள் பழக்கவழக்கம் ஏற்பட்டது. அவன் கூட சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியை நம்ம கிராமத்துல ஸ்தாபகம் பண்ண வேண்டுமென்று ஆரம்பித்தோம். பின்னர் இடைச்செவலில் இருந்துதான் செங்கொடி கோவில்பட்டிக்குப் போனது. நாங்கள் போய்தான் லெஷ்மி மில் தொழிற்சங்கத்தைத் தொடங்கினோம். இப்படி, ஆரம்ப காலத்தில் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டு வந்த நாற்றங்கால் மாதிரி இருந்தது இடைச்செவல்.

விவசாயிகள் பிரச்சனைகளின் போது சிறைக்கும் போயிருக்கிறேன். தலைமறைவு வாழ்க்கை நடத்தியிருக்கிறேன். விவசாயிகள் சங்கத்தை உருவாக்கிப் போராடினோம். சிறையில் பிடித்து போட்டார்கள். அப்புறம் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால், மக்களுக்கு மத்தியில்தான் ஒழிந்திருந்தோம். தலைமறைவு வாழ்க்கை இப்போது நினைத்துப் பார்க்கும் போது வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. எங்கள் மேல் பொய் வழக்குகள் நிறையப் போடப்பட்டது. கழுகு மலை பிரஸிடெண்ட் வீட்டில கொள்ளையடிக்க முயன்றதாக, சதி செய்ததாக, வெடிமருந்து வைத்திருந்ததாகப் பொய் வழக்குகள் போடப்பட்டன. அவனே ஒரு பொய்யான அப்ருவரை தயார் செய்து, ‘கோவில்பட்டி தாலுகா சதி வழக்கு’ என்று போட்டான். இந்த பொய் வழக்குகள் சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ்காரர்கள் மீது போடப்பட்டது போலவே இருந்தது.

மூன்று முறை சிறைக்குப் போயிருக்கிறேன். கருணாநிதி காலத்தில் 10 பைசா ஒரு யூனிட் மின்சாரத்திற்கு விவசாயிகள் கொடுக்க வேண்டும் என்றிருந்தது. ஆனால், ஒரு மின் முதலாளி 4 பைசா கொடுத்தால் போதும். இதனால் விவசாயிகளும் குறைக்கச் சொல்லி போராடினார்கள். உடனே கருணாநிதி அதை 12 பைசாவாகக் கூட்டிவிட்டார். பேச்சு வார்த்தை நடந்தது. நையா பைசா கூட குறைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அப்புறம் பெரிய போராட்டம் நடந்தது. துப்பாக்கி பிரயோகம் நடத்தினார்கள். அப்போது கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போய் தண்டவாளத்தைப் பெயர்க்க முயன்றதாக என் மீது வழக்கு போட்டார்கள். அப்போது நான் கட்சியிலிருந்தே விலகியிருந்த நேரம். நையா பைசா குறைக்க மாட்டேன் என்று சொன்ன அதே கருணாநிதி இப்போது எல்லாவற்றிற்கும் இலவசம் என்கிறார். ஆட்சியை விட்டுப் போவதற்கு ஒரு மாதம் இருக்கும் போது இதைச் செய்கிறார். இதனால் தனக்குத்தான் லாபம். அல்லது எதிர்கட்சிக்காரர் வந்தால் சங்கடப்படட்டும் என்று இப்படி செய்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

கம்யூனிஸ்ட் கட்சி உடையும்போது, என்னைக் கூப்பிட்டு ஆலோசனைக் கேட்டார்கள். நான் சொன்னேன், ‘‘ஒரு கெட்ட காலம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திருக்கிறது. கட்சி உடைஞ்சா ரொம்ப சிறுமைப்பட்டு போவோம். கிராமத்தில் குடும்பத்தில் சண்டைப் போட்டுவிட்டு விவகாரத்துக்கு வருவார்கள். கவனமாக கேட்டால் இரண்டு பக்கமும் நியாயம் இருக்கிற மாதிரிதான் தெரியும். விவகாரம்கிறது அப்படித்தான் இருக்க முடியும். ஒருத்தன் தனக்குன்னு ஒரு நியாயம் இருக்கும் போதுதான் ஒரு முடிவுக்கு வருகிறான். அதனால் எது சரிங்கிறதை தீர்மானிக்கவே முடியாது. அதைக் காலம்தான் செய்யவேண்டும். எனவே, ஒன்று பிரியனும்னா எல்லாரும் அந்தப் பக்கம் போயிருவோம்; இல்லையென்றால் இந்தப் பக்கமே இருப்போம். இரண்டு முதலாளிகள் சங்கத்தை எங்கேயாவது பாத்திருக்கீங்களா? ஆனால், இந்த தொழிலாளிகள் எத்தனை சங்கங்கள் வைத்திருக்கிறான். இப்படி பிரிந்து இருந்தால் முதலாளிக்குதான லாபம்” என்றேன். கேட்டுக்கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து கட்சி இரண்டாகிவிட்டது. ஆனால், இடைச்செவலில் நான் சொன்னது ஒரு சத்தியவாக்கு மாதிரி. அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கட்சிதான் இருக்கிறது. உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது; இடைச்செவலில் உடையவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஏன் விலகினீர்கள்?

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தத்துவார்த்த வேறுபாடு காரணமாக நான் விலகி வரவில்லை. கட்சி நிர்வாக விஷயங்களுடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் ஏற்பட்டது. தாமரைக்கு நான் பைசா வாங்காமல் எழுதுகிறேன். ஆனால், புத்தகம் வெளியிட்ட ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறைய லாபம் சம்பாதிக்கிற ஒரு நிறுவனம். அவர்கள் ஒரு எழுத்தாளனுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கவேண்டும் அல்லவா. ஆனால், அவர்கள் போட்ட என்னுடைய புத்தகங்கள் எதற்கும் உரிமத்தொகை கேட்ட பிறகும் தரவில்லை. நீண்ட நாட்களாகத் தரவில்லை. நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பிறகு தான் அந்த பணத்தை தந்தார்கள். என்னை இழந்ததை ஒரு இழப்பாகவே கட்சி கருதவில்லை. கழுதை போனால் போகிறது; இவனை வைத்தா நமக்கு பலம் என்று நினைத்தார்கள்.

சங்கீதம் மீதான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

சிறிய வயதில் எனக்கு காருகுறிச்சி அருணாசலத்தோடு தொடர்பு ஏற்பட்டது. காருகுறிச்சியிலிருந்து ரயிலில் அவர் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் ஊர் மாப்பிள்ளை அவர். எங்கள் வீட்டில் ஒரு நந்தவனம் வைத்திருந்தோம். அந்த நந்தவனத்திலிருந்து வரும் வருமானத்தை வைத்துத்தான் காருகுறிச்சி அருணாசலத்தின் மாமனார் குடும்பம் இருந்தது. நந்தவனத்தில் ஒரு செட் இருந்தது. வந்தால் அங்கே தான் உட்கார்ந்திருப்பார். சட்டையைக் கழற்றி போட்டுவிட்டு வெற்றுடம்போடு எங்கள் வீட்டுக்கு வருவார். நாதசுவரத்தைவிட பிரமாதமாகப் பாடுவார். காருகுறிச்சி அருணாசலத்தைப் பார்க்கிறதுக்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருவார். இப்படி இசை சார்ந்தவர்களோடு ஏற்பட்ட பழக்கம் அவர்கள் பாடி கேட்பது, கிராம போன் ரிக்கார்டுகள் என்று இசை மீதான ஆர்வம் இயல்பாகவே வளர்ந்தது. காருகுறிச்சி அருணாசலத்தின் சட்டகராக புதுமலை பொன்னுச்சாமிபிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவரை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு வந்து எங்கள் ஊரில் ஒரு பாடகர் வீட்டில் வைத்து, நானும் கு. அழகிரிசாமியும் அவரிடம் சங்கீதம் படித்தோம். அரசியலிலிருந்த போது ஒரு அரசியல்வாதியாக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. ஆனால், ஒரு சங்கீத வித்துவானாக ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஏன் சங்கீதத்தைத் தொடரமுடியாமல் ஆனது?

சில விஷயங்கள் அப்படித்தான் பூமி சுற்றிக்கொண்டே வரும் போது இடம்விட்டு இடம் மாறவும் செய்துவிடுகிறது. அது போல் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் சில இடங்களில் இருக்கிறோம். எங்கள் ஊரில் ஒருவர் கேட்டார்: “ஆறுமாதம் மேக்காற்று அடிக்கிறது இல்லையா. மற்ற நேரங்களில் இந்த காற்று எங்கேயப்பா போகிறது.” மேக்காற்று அடிக்கிற இடத்துக்குப் பூமி வருகிறது என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது. அதுபோல்தான் தன்னை அறியாமலேயே நாமும் சில விஷயங்களை விட்டுவிட்டு வந்துவிடுகிறோம். சில விஷயங்கள் நம்முடன் புதியதாக வந்து சேர்கிறது. சில விஷயங்கள் நம்மை விட்டுப் போய்விடுகிறது. சிலவிஷயங்களை நாம் வம்படியாக வைத்து கொண்டிருக்கலாம்.

குறிப்பாக எந்த வாத்தியத்தில் உங்களுக்கு ஈடுபாடு இருந்தது?

வயலின் படித்தேன்; வாய்பாட்டு படித்தேன். அப்புறம் எனக்குக் குரல் வலையில் டி.பி. வந்துவிட்டது. 1946இல் அதற்கு மருந்து கிடையாது. டாக்டர்கள் சொன்னார்கள் பாடக்கூடாது என்று. நாகர்கோவில் பக்கத்தில் புத்தேரியில் எட்டு மாதம் படுக்கையிலேயே இருந்தேன். அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். 1950இல் ஸ்டெப்டோமைசினை கண்டுபிடிக்கிறார்கள். அதுவரைக்கும் நான் உயிரோடு இருந்ததே ஆச்சரியம். ஸ்டெப்டோமைசினை முதலில் டி.பிக்கான் மருந்தாக கண்டுபிடிக்கவில்லை. லெப்பருக்காக முயற்சிச் செய்து பார்த்தார்கள். ஆனால், லெப்பரை அது சரிசெய்யவில்லை. ஐயோ இவ்வளவு வேலைகளும் வீணாகிவிட்டதே என்று விஞ்ஞானிகள் வருந்திக் கொண்டிருந்த போது ஆச்சரியப்படும் படியாக டி.பி.யை அது சரிசெய்தது.

ஆனால், ஸ்டெப்டோமைசினில் சில ஆபத்துகள் இருக்கிறது. டி.பி. சரியாகி விடும் ஆனால், பக்கவிளைவுகளால் ஆள் பைத்தியமாகக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எனக்கு ஒரு காது அவுட்டானதோடு நின்று விட்டது.

நீங்கள் குறிப்பிட்டது போலவே அரசியலும் சங்கீதத்திலும் உங்களுக்கு ஈடுபாடு இருந்தும் ஒரு இலக்கியவாதியாகத்தான் இன்றும் நீங்கள் அடையாளம் காணப்படுகிறீர்கள், ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ, எதைக் கேட்கிறீர்களோ அதுவாகத்தான் நீங்கள் ஆவீர்கள். எங்கள் ஊர் பக்கத்தில் குமாரபுரம் என்ற ஊரில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் முத்துசுவாமி என்று இருந்தார். இந்த முத்துசுவாமியிடம் அற்புதமான புத்தகங்கள் இருந்தது. எனக்கும் அழகிரிசாமிக்கும் இலக்கியத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவர் எங்களைத் தேடி வருவார். நாங்கள் அவரை தேடிப் போவோம். நிறையப் புத்தகங்களை அவர் கொடுத்தார். அப்புறம் கள்ளுக் கடையைத் தேடி போவது போல் புத்தகங்களைத் தேடிப் போனோம்.

ஆனால், முப்பது வயதுக்கு மேல்தான் நான் எழுத ஆரம்பித்தேன். அழகிரிசாமி சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டான். அவனுக்கு ஒரு கை ஊனம். எனவே, இவன் வேலைக்குச் சரியாக வரமாட்டான் என்று அவுங்க வீட்டில் அவனை படிக்கப் போட்டார்கள். அந்த காலத்தில் படிப்பு என்பது ஒரு வேகமும் இலக்கிய ஞானமும் சேர்ந்ததாகவே இருந்தது. அதனால், இயல்பாகவே அவனுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. எழுத்தாளர் ஆகவேண்டும் என்று நினைத்து நாங்கள் எழுத வரவில்லை. எங்கள் படிப்பு இங்கே கொண்டு வந்து சேர்த்தது.

தமிழ் இலக்கிய உலகத்திற்கு என்னுடைய கரிசல் களம் புதியது. என்னுடைய மக்கள் புதியது, அவர்களுடைய பழக்கவழக்கங்கள் புதியது. அவர்களுடைய பேச்சு வழக்கு புதியது. இப்படி பல்வேறு புதியவற்றுடன் நான் வரும் போது முழு தமிழ்நாடுமே என் பக்கம் பார்த்துத் திரும்புகிறது. “எழுது நன்றாயிருக்கு, எழுது, எழுது” என்று உற்சாகப்படுத்தினார்கள். ரகுநாதன், சுந்தர ராமசாமி, தி.க.சி போன்ற வெளியூர் இலக்கிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது நான் சொல்லும் விஷயங்களை எல்லாம் ஆச்சரியமாகக் கேட்டார்கள். “எழுதுங்கய்யா, இதெல்லாம்தான் எழுதப்படவேண்டும்” என்று சொல்வார்கள். ஆனாலும் முப்பது வயது வரைக்கும் ஒரு கதை சொல்லியாகத்தான் நான் இருந்தேன். இப்படித்தான் நான் தொடர்ந்து எழுத வந்தேன்.

உங்கள் கதைகளில் பெரும்பான்மை உங்கள் ஊர், சுற்றுவட்டார மனிதர்களின் வாழ்க்கை சார்ந்துதான். நீங்கள் எழுதியது அவர்களுக்கு தெரியுமா? என்ன சொன்னார்கள்?

ஆமாம், நான் எழுதினது எல்லாம் அந்த மக்களை பத்திதான். ஆனால், நான் ஊரில் இருக்கும் போதே, கதை எழுதுவேன் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. ஊருக்கு ஓட்டு கேட்க வருகிறவர்கள், ‘‘இந்த ஊர்… நிறையப் பெருமைகள் கொண்ட ஊர். கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி பிறந்த ஊர்; கரிசல் காட்டு இலக்கியம் பிறந்த ஊர். காருகுறிச்சி அருணாசலம் பெண் எடுத்த ஊர்’’ அப்படிம்பான். ‘ஏய், இவன் நம்ம ஊருக்காரன் பெயரைல்லா சொல்லுதான்’ என்று இவன் யோசிப்பான். என்னைத் தேடி வெளியூர்களில் இருந்து ஆட்கள் வந்துகொண்டே இருப்பார்கள். எதற்கு இவனைத் தேடி இவ்வளவு பேர் வருகிறார்கள் என்று விசாரித்து, “அவன் ஏதோ கதை எழுதுறானாம்பா” என்று தெரிந்து, “என்னமோ கதை எல்லாம் எழுதுறியாமேப்பா”ன்னு என்னிடம் வருவார்கள். கதையைப் படித்தால், நம்மூரில் யாரை வைத்து இதையை எழுதியிருப்பானென்று தான் பார்ப்பார்கள். அதனால் சண்டைகள், மனஸ்தாபங்கள் வந்ததுண்டு. சிலருக்கு மோசமாக எழுதிவிட்டேனென்று வருத்தம். சிலருக்கு அவனைப் பத்தி சொல்லவில்லையென்று கோபம்!

கோபல்ல கிராமம் நாவலை எழுதிய அனுபவம்?

ஒரு நாள் யோசனை செய்துகொண்டே இருந்தேன். தமிழ் நாட்டுக்குள் ஏகப்பட்ட தெலுங்கு கிராமங்கள் இருக்கிறது. இடைச்செவல் மாதிரி ஒரு மாவட்டம் அளவுக்குக் கிராமங்கள் இருக்கிறது. எப்படி இவர்கள் இங்கே வந்தார்கள், எதற்காக இங்கே வந்தார்கள், எப்படிப் புறப்பட்டு வந்திருக்கலாம். எத்தனை நாளாகியிருக்கும். இந்த இடத்தை ஏன் தேர்வுசெய்தார்கள். அப்போது இந்த இடம் ஒரு காடாக இருந்திருக்கும்; அதனை மாற்றி எப்படி ஒரு கிராமத்தை உருவாக்கினார்கள். அப்போது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். இதைப் பற்றி நாம் எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இப்படி நாவல்களை எழுதும் போது மற்றவர்கள் வழக்கமாக என்ன செய்வார்கள் என்றால் ஆதாரங்களைத் தரவுகளைத் தேடுவார்கள். ஆண்டுகளைத் தேடுவார்கள். கடைசியில் அது ஒரு சரித்திர நாவலாக ஆகிவிடும். நான் இது எதையும் செய்யவில்லை. என்னுடைய மக்களிடம் அவர்கள் வந்ததைப் பற்றி கதைகள் இருக்கிறது என்று தேடினேன். நிறைய கதைகள் இருந்தது. நாங்கள் அங்கே இருந்து புறப்பட்டு இங்கே வந்து எண்ணூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தாத்தாவிடமிருந்து பேரனுக்கு, பிறகு அவன் தாத்தா ஆன பிறகு அவனுடைய பேரனுக்கு என்று எண்ணூறு ஆண்டுகளாகப் புறப்பட்டு வந்த கதைகள் இடம் மாறி வந்திருக்கிறது. இப்படி வரும் போது சிலது கூடும் சிலது உதிரும். கல் உருண்டு உருண்டு அழகான ஒரு கூழாங்கல் ஆவது போல், அந்த கதைகள் நாக்குகளில் உருண்டு உருண்டு செதுக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்படி பல்வேறு பகுதிகளில் இருக்கும் கதைகளைக் கேட்டு ஒரு ஒழுங்குபடுத்தி ‘கோபல்ல கிராமம்’ எழுதினேன்.

உங்களுக்கு இசை மீது அபரிமிதமான ஈடுபாடும் விஷய ஞானமும் இருந்த போதும் உங்கள் படைப்புகளில் அது பிரதிபலிக்காததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இது பற்றி நிறையப் பேர் கேட்டுவிட்டார்கள். எனக்கு இசையில் ஈடுபாடு உண்டு என்று தெரிந்தவுடன் ஆச்சர்யமடைந்து, “உன்னுடைய எழுத்துகள் எதிலும் அதற்கான சுவடுகளே இல்லையேப்பா “ என்று கேட்டார்கள். நான் என்னுடைய மக்களைப் பற்றி, என் கிராமத்தவர்களைப் பற்றி எழுதுகிறேன். அவர்களில் யாருக்கும் இசைத் தெரியாது. அவர்களுக்கு இசை தெரியும் என்று நான் எழுதினால் அது செயற்கையாக, திணிக்கப்பட்டதாக இருக்கும். தி. ஜானகிராமன் எழுத்துக்களில் இசை இருக்கிறது என்றால் அவரது பாத்திரங்களுக்கும் இசை தெரியும் என்பதால் சரியாக வந்தது. ஆனால், காருகுறிச்சி அருணாச்சலம் டி.என். ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றை படித்து விட்டு சிலர் ஆச்சர்யமடைந்து கேட்டார்கள்: “உங்களுக்கு இசை தெரியுமா?“.

பிற்காலங்களில் நீங்கள் எழுதிய பாலியல் கதைகள் குறித்து விமர்சனங்கள் வந்ததே?

பாலியல் கதைகளை விரும்பிக் கேட்காதவனே கிடையாது. என் முன்னால் உட்கார்ந்து நான் கதைகளைச் சொல்லும் போது மிகவும் ரசித்து கேட்டவர்களெல்லாம் அந்த பக்கம் நகர்ந்து போன பிறகு ஆபாசம் என்று சொன்னார்கள். முழுக்கதையையும் கேட்டு விட்டு,வேறு கதைகள் இல்லையா என்று மேலும் சொல்லச் சொல்லி கேட்டுவிட்டு அந்த பக்கம் போய் ஏன் ஆபாசம் என்று மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டும்.

பெரிய பக்திமான்கள், நம்முடைய முன்னோர்கள் புனிதமான கோயிலுக்குள் வைத்திருக்கிற சிலைகளில் இல்லாதவற்றையா நான் சொல்லிவிட்டேன். தேரிலும் விதானங்களிலும் ஏன் இவற்றை அவன் செய்திருக்கிறான். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பக்தியும் காமமும் கலந்து இருக்கிறது. வாழ்க்கையில் பூஜையறையும் சமையலறையும் மட்டும்தான் இருக்கிறதா என்ன? பள்ளியறை கிடையாதா?

இந்த கதைகளெல்லாம் ஏன் வந்தது என்பதற்கு ஒரு காலத்தேவையும் காரணமும் இருந்தது. அந்தக் காரணத்தைப் புரிந்துகொண்டவன் பேசமாட்டான். புரியாதவனை ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க்கையில் நமக்குப் புரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது அது போல்தான இதுவும்.

கயத்தாறு ஆசாரியிடம் சேர்ந்து மாட்டு வண்டியை நவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டீர்கள். எந்த அளவுக்கு அது பயனுள்ளதாக இருந்தது ?

அந்த காலத்தில் மாட்டு வண்டியை மாடுகள் இழுப்பதற்கு மிகவும் கஷ்டப்படும். பார் பேரிங் போட்டு வண்டிகளை செய்தால் மாட்டுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. கயத்தாறு ஆசாரியிடம் போய் இதனை சொன்னேன். ஆனால், பார் பேரிங்கிலும் ஆபத்திருந்தது. பாரம் அதிகமாக இருக்கும் போது நோக்காம் கம்புகள் மாட்டின் கழுத்தின் இடித்துவிட வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில் கொம்புகள் கூட போய்விடும். ஓட்ட தெரிந்தவன் ஓட்டினால் இந்த ஆபத்துகளை தவிர்த்துவிடலாம். ஓட்டத் தெரியாதவன் மாட்டை கொன்றுவிடுவான். அப்போது விவசாயிக்கு மாட்டை வைத்துத்தான் வாழ்க்கை. ஒரு மாட்டை இழந்துவிட்டால் அவ்வளவுதான், அப்படியே படுத்துவிடுவான். மேலும் மரத்தினால் செய்வதற்குச் செலவும் அதிகமாகும். அந்த காலம் அடைமழை காலம்; எனவே பராமரிப்பதும் சிரமம். இரும்பில் பண்ணினால் துருப்பிடிக்கும். என்ன செய்யலாம் என்று தொடர்ந்து யோசித்தோம். பலமாதிரி செய்து பார்த்தோம். கடைசியில் பைதாவுக்கு ஒரு பிரேக் கொடுத்து ஒரு மாதிரியாக செய்துவிட்டோம். அது ஏற்கனவே இருந்த மாட்டு வண்டியைவிட மிகவும் சுலபமானதாக இருந்தது.

உங்கள் நண்பர் எழுத்தாளர் கு. அழகிரிசாமியைப் பற்றி. . .

அழகிரிசாமி, என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கு அடுத்த வீடு. சின்ன வயதிலிருந்தே நாங்கள் விளையாட்டுத் தோழர்கள். ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அவன் என்னுடன் படித்தான். அப்புறம் படிப்பதற்காகக் கோவில்பட்டி போய்விட்டான். லீவுகளில் வருவான். அப்போது நாங்கள் காடு கரைகளாகச் சுற்றுவோம். அரசியலில் அவனுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருந்தது. அப்புறம் விட்டுவிட்டான். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு பாழாம்பட்டி என்ற ஊரில் போய் வேலை பார்த்தான். படித்தவன் கிடைக்காத ஒரு காலம் அது. எனக்கு இலக்கியம் மீதான ஈடுபாடு ஏற்பட அழகிரிசாமி முக்கிய காரணம்.

மேற்கொண்டு என்ன செய்யும் திட்டத்தில இருக்கிறீர்கள்?

கதைகள் எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்டது. புதியதாக எழுதுவதை விட மக்கள் மத்தியில் ஏற்கனவே உள்ளக் கதைகளை ஏன் சேகரிக்கக் கூடாது என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. ஏற்கனவே கொஞ்சம் செய்திருக்கிறேன். சாமிநாதையரை சொல்லுவார்கள்: ”ஊர் ஊராகப் போய் சேகரித்தார்“ என்று. ஆனால், என்னை அப்படி சொல்ல மாட்டார்கள் என்ற தெரியும். செத்துப் போனதற்கு அப்புறமும் சொல்லப் போவதில்லை. எனக்கு அது முக்கியமும் இல்லை. செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருக்கிறது.

இடைச்செவல் வாழ்க்கைக்கும் பாண்டிச்சேரியில் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளதா?

ஊரில் இருப்பதற்கும் இங்கே பாண்டிச்சேரியில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. 66 வயது வரைக்கும் இடைச்செவலில்தான் இருந்தேன். கிராமத்திலுள்ள வயோதிகர்கள் என்ன செய்கிறார்கள், சாப்பிடுகிற நேரம் மட்டும் வீட்டில் சாப்பிடுவார்கள். அப்புறம் அப்படியே கம்பை ஊன்றிக்கொண்டே குளத்தங்கரை பக்கமாகப் போய்விடுவார்கள் அல்லது ஊர் கோயிலில் மணல் போட்டிருப்பார்கள்; மர நிழல் இருக்கும். உட்கார்ந்து பல்வேறு விஷயங்களைப் பேசுவது, கேட்பது என்று நேரம் போய்க் கொண்டிருக்கும். நான் ஊரிலிருந்திருந்தால் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நடத்தி கொண்டிருந்திருப்பேன். இங்கேயும் அதுதான் நடக்கிறது. காலையில் ஒரு மணி நேரம் நடை போகிறது. அப்புறம் பேப்பர் படித்து விட்டு மதியம் சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறேன். சாயந்தரம் யாராவது விருந்தினர்கள் வருவார்கள். அப்புறம் ராத்திரி கொஞ்ச நேரம் டி. வி. பார்த்துக் கொண்டிருப்பேன். வீடுதான் பிளாட்டில் இருக்கிறதே தவிர கிராமத்திலிருந்தாலும் ஒரு வயதுக்கு மேல் இதே வாழ்க்கைதான் இருக்கும்.

புதுவை இளவேனில் உங்களைப் பற்றி தயாரித்த ஆவணப்படம் படப்பிடிப்புக்காக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இடைச்செவல் போயிருந்தீர்களே, எப்படி உணர்ந்தீர்கள்?

காசி – கன்னியாகுமரி ரோட்டில், கோவில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் எங்கள் ஊர் இருக்கிறது. 300 வீடுகள் இருக்கும். கிட்டத்தட்ட 18 வருஷம் கழித்து போகிறேன். நம்பவே முடியவில்லை; அவ்வளவு மாற்றங்கள்… கார் பார்ப்பதென்பது என் சின்ன வயசில் மிகப்பெரிய விஷயம். காலையிலேயே போய் ரோட்டில் காத்துக் கிடப்போம். காரே வராது. ரொம்ப நேரமாகி, தூரத்தில் பொடிசாக தெரியும். சரட்டென்று போய்விடும். இப்போது அந்த ரோட்டைக் குறுக்க கடக்க முடியாது. சென்னை மவுண்ட் ரோடு மாதிரி, சர், சர்ரென்று வாகனங்கள் போய்கிட்டே இருக்கு. தூரத்தில்தான் வருகிறது கடந்திடலாமென்று ஓடி இரண்டு, மூன்று பேர் மண்டையைப் போட்டிருக்கிறார்கள்.

அந்த காலத்தில் ஊருக்குள்ள தெருவெல்லாம் சகதியா இருக்கும்; நடக்கவே முடியாது. இப்ப ஜோரா சிமெண்டு தளம் போட்டுருக்கிறார்கள். கூரை வீடுகள் எல்லாம் காரை வீடுகள் ஆகியிருக்கிறது. கம்பம் புல், ராகி, சோளமென்று அந்த மண்ணுல விளைகிற உணவுகள் காணாமல் போய்விட்டது. இந்த மூன்றையும் அவர்கள் இப்போது சாப்பிடுவதும் கிடையாது. எல்லாரும் அரிசிக்கு மாறிவிட்டார்கள். ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரா ஆகியிருக்கார். நினைத்துப் பார்க்க முடியாத ஆச்சரியம். மக்களுடைய வாழ்க்கைத் தரம் ஒசந்திருக்கிறது!

ஷாம்பூ பொட்டலங்கள் நீள, நீளமாகக் கடைகளில் தொங்குகிறது. எனக்குத் தெரிய, ஷாம்பு வந்த புதுசுல அதைப் பார்த்து மக்கள் பயந்தார்கள்; முடி எல்லாம் கொட்டிரும் என்று சொல்லுவார்கள். தீப்பெட்டியை மக்கள் உபயோகிக்கவே இல்லை. அதை மக்களிடம் பரப்புகிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா? ஒரு பைசா கொடுத்து ஊசி வாங்கினால்… ஒரு ஊசி, ஒரு நூற்கண்டு, ஒரு தீப்பெட்டி, ஐந்து பல்லி பப்பரமிண்டு இவ்வளவையும் கொடுப்பான். இதில் தீப்பெட்டி பரணுக்குத்தான் போகும்.

அந்த காலத்தில் 30 நாள் அடைப்பு, 60 நாள் அடைப்பென்று அடைமழை பெய்யும். 90 நாள் அடைப்பு எல்லாம் கூட உண்டு. அப்ப வெளியே வரவே முடியாது. நெருப்புக்கு என்ன பண்ண முடியும்? தீப்பெட்டி இல்லாத காலம்! அதனால் பெரிய வீடுகளில் எப்பவும் நெருப்பு இருந்துகொண்டே இருக்கும். அடுப்பில் வெண்ணி காய்ந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் வந்து, ‘‘அம்மா கொஞ்சம் தீ தாங்க’’ன்னு வாங்கிட்டு போவார்கள். தானங்களிலேயே பெரிய தானம் தீ தானமென்று சொல்லுவார்கள். அப்புறம், கோவில் திருவிழாவில் பீடியை மக்களிடம் பரப்ப வேண்டுமென்று கொத்து கொத்தா தூக்கி வீசுவார்கள். அதைத் தூக்கிட்டு வந்து பீடிக்குப் பழக ஆரம்பிக்கும் போதுதான், பரண் மேலே கிடந்த தீப்பெட்டிகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது.

பஸ் கதையையே சொன்னாலும் இப்போது நம்ப மாட்டீர்கள். பாதையில் நடந்து போகிறவர்கள் முன்னால் வந்து பேருந்தை நிறுத்துவான். ஏறிக்கிடுங்கம்பான். இவர்கள், “வேண்டாம்பா போட்டும்”பாங்க. துட்டு கொடுக்க வேண்டாம் என்பான். பிறகு, சரி ஏறித்தான் பார்ப்பம் என்று ஏறுவார்கள். இரண்டு பேருக்காக பேருந்து வீடு தேடி வரும்.

பாலைக் காசுக்கு விற்பது தப்பு என்று சொன்ன காலம் அது! ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்த வாத்தியார்களும் வாத்திச்சிகளும்தான் ஊருக்குள்ள நாகரிகத்தைப் பரப்பினார்கள். உச்சி வகிடு எடுத்து சீவிக்கொண்டு இருந்த பெண்கள் எல்லாம், ஒருநாள் பக்க வகிடு எடுத்துச் சீவ ஆரம்பித்தார்கள். உள்பாவாடை இல்லாமல் சேலை மட்டுமே கட்டிக் கொண்டிருந்தவர்கள், உள்பாவாடை நுனி லேசாகத் தெரிய கட்ட ஆரம்பித்தார்கள். கையில் சட்டை நுனி தெரிய கோட் போடுகிறார்கள் இல்லையா, அதுமாதிரி இது ஒரு ஸ்டைலு. எல்லாம் டீச்சர்களைப் பார்த்துத்தான்.

இப்போது, ஊரிலே பாதிக்கு மேல் வீடுகளில் டிவி வந்துவிட்டது. இதனால் என்ன நடந்திருக்குன்னா, தெருச் சண்டையே இல்லாமல் போய்விட்டது. பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் எல்லாம் இருக்கிறது. புதுசா கிரிக்கெட் வந்திருக்கிறது.

நிறைய பேர் நடந்து போகிற, முக்கியான பாதையில ஊரு இருந்ததால் பாதசாரிகள் இளைப்பாற ஊர் எல்லையில் சாவடி ஒன்று கட்டிருந்தோம். நடந்து போகிறவர்கள் இருட்டினதும் அங்கே படுத்துகிடுவார்கள். சாவடியில யாராவது படுத்துக் கொண்டிருப்பதை ஊர்க்காரர்கள் பார்த்தால், ‘‘யப்பா யாரு, என்ன‘‘ என்று விசாரிப்பார்கள். ‘‘சாப்பிட்டியான்னு‘‘ கேட்பார்கள். சாப்படலைன்னா பக்கத்துல இருக்கிற நாலைந்து வீடுகளில் சோறு, கறி, குழம்பு வாங்கி கொடுப்பார்கள். கிராமங்களில் எப்போது போனாலும் சாப்பிடலாம். நிறைய சமைப்பார்கள். இல்லையானாலும் அவங்களுக்குன்னு வைத்திருப்பதைத் தந்துவிட்டு. புதுசா சமைத்துக்கொள்வார்கள். நம்ம ஊருக்குள்ள ஒருத்தன் ராப்பட்டினி கிடக்க கூடாதுங்கிற எண்ணம். இப்போது பாதசாரிகள் இல்லை. சாவடி மட்டும் அந்த காலத்து மக்களின் ஈர மனசின் நினைவுச்சின்னமா இருக்கிறது.

நான் சின்னப் பையனா இருக்கும் போது, இடைச்செவல்ல கள்ளுக்கடை மறியல் பண்ணோம். அந்த மறியல் பெரிய கலவரமாகிவிட்டது; கள்ளு குடித்தான் என்று ஊர்க் காவல்காரன் கையை வெட்டிட்டாங்க. பிறகு, அதையே ஒரு சாக்காக வைத்து, இனி நம்ம ஊருக்குக் கள்ளுக்கடை வேண்டாமென்று தீர்மானம் பண்ணினோம். கடையை தீ வைத்து கொளுத்திட்டோம். இதனால், அதிகம் நஷ்டமடைந்தது எங்கள் குடும்பம்தான். எங்களுக்கு ஆயிரம் பனைமரங்கள் இருந்தன. ஆனாலும், பரவாயில்லன்னுடாங்க எங்கள் வீட்டில். அன்னையில இருந்து இன்றைக்கு வரைக்கும் இடைச்செவல்ல கள்ளுக்கடை கிடையாது. மத்தியில் ஒரு தடவை, நாடு சுதந்திரம் அடைந்த பின்னால், கள்ளுக்கடை ஏலம் எடுத்துவிட்டு தாசில்தாரையும் கூட்டிக்கொண்டு ஒருத்தர் வந்தார். நாங்கள் அனுமதிக்க முடியாதென்று தடுத்தோம்; எக்காரணம் கொண்டும் கூடாதென்று ஓங்கி அடித்தோம். எனக்குப் பின்னால பத்து பேர். எப்பவும் இந்தப் பாட்டைப் பாடிக்கொண்டே இருந்தார்கள். அதனால் ஒன்றுமே செய்ய முடியாமல் கள்ளுக்கடைக்காரங்க திரும்பித்தான் போனார்கள். இது எனக்கே ஒரு ஆச்சரியம்… இப்ப, எல்லா ஊருக்கும் டாஸ்மாக் வந்திருக்கிறது, இடைச்செவலில் இல்லை.

உங்கள் ஊர் இளவட்டக் கல் பற்றி நீங்கள் ஒரு கதை எழுதியிருந்தீர்கள். இப்போதும் அந்தக் கல் ஊரில் இருக்கிறதா?

எங்கள் ஊரிலே சுந்தரமென்று ஒருத்தி இருந்தாள். கிழிந்த துணிகளைத் தைத்து கொடுக்கிற சொம்மான்கிற சாதி. அவளைக் கட்டுகிறதுக்கு வெளியூரில் இருந்து மாப்பிள்ளை ஒருத்தன் வந்தான். மூன்று மாசம் இருந்து விருந்து சாப்பிட்டான். விருந்தை முடித்துக்கொண்டு கௌம்பும் போது, ஊர்க்காரர்கள் அவனைச் சுத்தி பிடித்துக்கொண்டார்கள். ‘‘தம்பி எங்கள் ஊர் பெண்ணைக் கட்டியிருக்க. இளவட்டக் கல்லை தூக்கிப் போடு; முடியாதென்றால் இங்க இருக்கிறவர்கள் எல்லாருக்கும் வெற்றிலை பாக்கு வாங்கி கொடுத்துட்டு, கல்லை தொட்டு கும்புட்டுட்டு பொண்டாட்டியை கூட்டிட்டு போ’’ என்றார்கள். இதுதான் ஊர் வழக்கம். அவனால் முடியாது. பய முழிக்கிறான். சுந்தரம் வந்தாள். ‘‘என்ன பிரச்சினை’’ன்னு கேட்டாள். அங்க நின்ற பெரியவர் ஒருத்தர், ‘‘ஒன்று அவன் தூக்கிப் போடட்டும். இல்லன்னா நீ தூக்கிப் போடு’’ என்று வேடிக்கையா சொன்னார். உடனே, அவள் அந்தக் கல்லை அப்படியே தூக்கி பின்னால் போட்டுவிட்டாள். பெரிய நாயக்கர் ஒருத்தர்… அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘என்ன இளவட்டக் கல்லுடா செஞ்சிருக்கீங்க. பொம்பளை தூக்கி வீசுறா. முதல்ல இதக் குழியைத் தோண்டி புதைச்சிட்டு, யாராலயும் தூக்க முடியாத ஒரு இளவட்டக் கல் அடி’’ அப்படின்னாரு. புது கல் அடித்து போட்டார்கள்; யாராலயும் தூக்க முடியாத பெரிய கல்! அதுக்குப் பெயர் என்ன தெரியுமா? சுந்தரம் கல்லு. அந்தக் கல் பற்றித்தான் நான் கதை எழுதியிருந்தேன். அந்த கல் மேல் கால் வைத்தாலோ, மேலே உட்கார்ந்தாலோ ஊருக்கு அபராதம் கட்டவேண்டும். அவ்வளவு மதிப்பும் மரியாதையும் கல்லுக்கு இருந்தது. இப்போது யார் இளவட்டக் கல்லைத் தூக்கிப் போடுவது? வெற்றிலை பாக்கு வாங்கிக் கொடுத்துட்டு கௌம்பிடுறாங்க.

பாண்டிச்சேரி வந்த பின்னர் திரும்ப இடைச்செவல் போகவேண்டும் என்றே தோன்றவில்லையா?

எனக்கு 84 வயசு ஆகிறது. என் வயசுக்காரங்க ஒருத்தர்கூட ஊரிலே இல்ல. எல்லாரும் செத்துப் போய்விட்டார்கள். நானும் அங்கே இருந்தால் செத்துதான் போயிருப்பேன். காரணம், வைத்திய வசதிகள் கிடையாது. பாண்டிச்சேரியில் எனக்கு எதாவது பிரச்னைன்னா, அடுத்த அரை மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடலாம். இடைச்செவலில் பாளையங்கோட்டைக்குத்தான் போகவேண்டும். அவசரத்துக்கு பேருந்து கிடைக்காது. இதனால் பாதிப் பேர் ஆஸ்பத்திரி போய் சேர்கிறதுக்குள்ளேயே செத்துப் போயிருவான். இரண்டாவது, சத்தான உணவுகள் கிராமத்தில் கிடையாது. அரிசி கிடைக்கும்; அதைப் பொங்கி திம்பார்கள். பருப்புகள் கொஞ்சம் வைத்துக்கொள்வார்கள். இதுதான் அவனுடைய உணவு. கோழி, ஆடு எல்லாம் விஷேச நாளைக்குத்தான். மூன்றாவது, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம், இவன் ஏன் இருக்கான் என்று குடும்பத்தில் மற்றவர்களுக்கு தோன்றும். ‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்பக் காலியாகும்; தாத்தா எப்ப சாவாரு, கம்பளி எப்ப கிடைக்கும்‘னு பழமொழிகளே இருக்கிறதே. ‘‘என்ன பெரிசு இன்னும் போகலையா?‘‘ அப்படிம்பாங்க. அந்தக் குடும்பத்தை உண்டாக்கினவன், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினவன் எங்க போவான் அவன்? இவருக்கு இங்க இனிமே என்ன சோலி அப்படிங்கிற பார்வை ஒரு ஆள் மேலே விழுந்துவிட்டது என்றால், மனுஷன் தொங்கிப்போவான். இதுவே அவனைப் பாதி கொன்றுவிடும். இதெல்லாம் எனக்கு கிடையாது. பாண்டிச்சேரியில் நிறையபேர் என்னைத் தேடி வந்து, பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது இடைச்செவல்ல முடியாது. பஸ் கிடைக்கிறதே மகா பெரிய கஷ்டம். ஊரிலே இருந்து ஒரு இடத்துக்குப் போகமுடியாது. போனா, போன வேலையை நிதானமா முடித்தமா வந்தமா என்று இருக்க முடியாது. ஷேக்ஸ்பியர் சொல்வான்… ‘‘தண்ணீர், தண்ணீர்… எங்குப் பார்த்தாலும் தண்ணீர். சொட்டு குடிக்க முடியாது. அவ்வளவும் உப்பு தண்ணீர்” என்பான். அந்த மாதிரிதான். மெயின் ரோட்டுல இருக்கிறது எங்கள் ஊர். அந்த வழியாகதான் எல்லா பஸ்ஸும் போகிறது. ஆனால், எந்த பஸ்ஸும் நிற்காது.

ஆனால், இப்போது நகரங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் கிராமங்களும் வளர்ச்சி அடைந்துள்ளதே?

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கிராமங்கள் வளர்ந்த மாதிரிதான் தெரிகிறது; நிறைய சௌகரியமாக மக்கள் வாழுகிற மாதிரி இருக்கிறது. ஆனால், அந்த மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று உள்ளே போய் பார்த்தால்தான் தெரிகிறது. தண்ணீர் இல்லாமல் தோட்ட நிலங்கள் அழிந்துகொண்டே வருகின்றன. விவசாயம் காணாமல் போயிட்டுது. நிலங்கள் விற்கப்படுகிறது. அந்த நிலங்களை வாங்குகிறது, யாரோ ஊர் பெயர் தெரியாத ஒருவன். என்ன விலை சொன்னாலும் வாங்குகிறான். விவசாயம் இல்லாததால் மாடுகள், ஆடுகள், கோழிகள் குறைந்துவிட்டது. ‘‘ஏண்டா மாட்டை வித்துட்ட’’ என்று என் தம்பியிடம் கேட்டால், ‘‘மாட்டை வைத்து முன்னைமாதிரி பராமரிக்க முடியலை‘‘ என்று சொல்கிறான். தெரு முழுக்க நாய்கள் கிடக்கும். இப்போது ஒன்று, இரண்டு தான் கண்ணில் படுகிறது. தீப்பட்டி ஆபிஸ்கள் எல்லாம் இயந்திரமயமாகொண்டு வருகிறது. ஒருநாள், ‘இனி நீங்க வேண்டாம் போகலாம்‘னு அவன் சொல்லிறப் போறான். அப்போது, தீப்பெட்டி தொழிலை நம்பி இருக்கிற இந்த சனங்கள் எங்கப் போவார்கள்? பிச்சைதான் எடுக்கவேண்டும்.

இப்போது அந்த சனங்கள் ஒரு அந்தரத்தில் இருக்கிறார்கள். விஸ்வாமித்திரரின் திரிசங்கு சொர்க்கம் மாதிரி, அங்கிட்டும் இல்லாத இங்கிட்டும் இல்லாத ஒரு சொர்க்கம். அது என்ன ஆகும்கிறதை இனிமேல்தான் பார்க்கவேண்டும். ‘குண்டிக்கு கீழ வெள்ளம் வந்தபிறகுதான் எந்திரிப்பான்‘னு ஒரு பழமொழி சொல்லுவோம். காட்டாறுகளில் எப்போது வெள்ளம் வரும் என்று சொல்லவே முடியாது. நம்ம ஆளு ஆற்று மணலில் துண்டைப் போட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பான்; இல்லையென்றால் சொகமாக படுத்துத் தூங்குவான். எங்கேயோ மழை பெய்து, திடீரென்று வெள்ளம் புரண்டு வரும். சத்தம் கேட்டு அடித்துப் புரண்டு ஓடினால் இவன் தப்பித்தான். இல்லையென்றால் வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடும். அந்த வெள்ள அபாயத்தைத் தடுக்க அவன் கையில் ஒரு பெரிய ஆயுதம் இருக்கிறது. ஓட்டு! அதன் அருமையை அவன் தெரிஞ்சிகிட்டான்னா, அப்புறம் அவனை வெல்லவே முடியாது.’’

நேர்காணலும் தொகுப்பும்: தளவாய் சுந்தரம்
படங்கள்: புதுவை இளவேனில்

(‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் 2003ஆம் ஆண்டு இதன் சுருக்கப்பட்ட வடிவம் வெளியானது.)

*****

கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் பிதாமகராக அறியப்படுபவர். ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன் என்பது இவரது இயற்பெயர். கோவில்பட்டி அருகிலுள்ள இடைச்செவல் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தவர். இயல்பில் ஒரு விவசாயி. கயத்தாறு சந்தன ஆசாரி என்பவருடன் இணைந்து மாடுகள் இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கு யோசனை தந்து உதவியிருக்கிறார்.

இசையை முறைப்படி கற்றுள்ளார். அரசியலிலும் ஈடுபாடுடையவர். கரிசல் வட்டார மக்களின் நம்பிக்கைகளையும் ஏமாற்றங்களையும் வாழ்க்கையையும் விவரிப்பவை இவரது எழுத்துக்கள்.

1958ஆம் ஆண்டு ‘சரஸ்வதி’ இதழில் இவரது முதல் சிறுகதை பிரசுரமானது. கதவு, கிடை, வேஷ்டி, தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் (1966), கோபல்ல கிராமம் (1976), பிஞ்சுகள் (1979), கோபல்லபுரத்து மக்கள், கரிசல் காட்டுக் கடிதாசிகள், அந்தமான் நாயகர், வட்டார வழக்குச் சொல்லகராதி ஆகியவை இவரது முக்கியமான படைப்புகள். இவரது முதல் சிறுகதைத் தொகுதியான ‘கதவு’ 1965ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் விருதைப் பெற்றது. ‘பிஞ்சுகள்’ குறுநாவல் 1978ஆம் ஆண்டு கையெழுத்துப் பிரதியிலேயே சிறந்த படைப்புக்குரிய இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக வேலை பார்த்தார். இதனை முன்னிட்டு பாண்டிச்சேரி வந்தவர் தன் இறுதி காலம் அங்கேயே வாழ்ந்தார். 18-05-2021 அன்று காலமானார்.

Amrutha

Related post