பிங்க் / நேர்கொண்ட பார்வை: ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய படம்

 பிங்க் / நேர்கொண்ட பார்வை: ஒவ்வொரு ஆணும்  பார்க்க வேண்டிய படம்

உமா ஷக்தி

 

மூன்று பெண்கள் – மினால் (தாப்ஸி பன்னு), ஃபாலக் (கீர்த்தி குல்ஹரி), ஆண்டிரியா (ஆண்டிரியா தரியங்); இந்த மூவரும் தில்லியில் வாழும் இளம் பெண்கள். பணபலம் மிக்க, அரசியல்ரீதியாகவும் சக்தி வாய்ந்த ஆண்களால் கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்படுகின்றனர். ஆனால் உண்மையில், ராஜ்வீர் என்ற பெரும் பணக்காரனின் ஆசைக்கு இணங்க மறுத்து, அவனை கையில் அகப்பட்ட பாட்டிலால் தீவிரமாகத் தாக்கிவிட்டு தப்பியிருக்கிறாள் மினால். இதுதான் அவள் செய்த குற்றம். இப்படத்தின் பதைபதைக்க வைக்கும் தொடக்கக் காட்சியில், அவர்கள் தப்பிய பின் வீட்டுக்கு வந்து சேர்ந்து, இனி இதைப் பற்றி மறந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் தாக்கப்பட்டவன், ஆணாக இருப்பவன், அவனுக்குள் ஏற்கனவே இருந்த மிருகம் மேலும் பன்மடங்கு தூண்டப்பட பழிவாங்கத் துடிக்கிறான். மினால் இதை எப்படி எதிர்கொண்டாள், அவளுக்கு அதற்கு பின் என்ன நேர்ந்தது என்பதை விரிவாகச் சொல்வதுதான் ‘பிங்க்’ படத்தின் மையக் கதை.

பெண்களின் மீது காலகாலமாக நடந்தேறும் பாலியல் துன்புறுத்தல்களும் வன்முறைகளும் முடிவற்று தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், பெண்கள் தங்களின் ஆதாரமான உரிமைகளையும் சுயமரியாதையையும் வலியுறுத்தும் படமாக ‘பிங்க்’ இருந்தது. 2016ஆம் ஆண்டு அனிருத்தா ராய் செளத்ரியின் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், இறுக்கமான ஒரு சமூகத்தில் ஆண் – பெண் இருவரும் பாரபட்சமான கண்ணோட்டத்தில் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதை உரக்கச் சொன்னது. அதுவும் அந்த ஆண் ஆதிக்கம் மிக்கவனாக இருந்துவிட்டால், அவனது நியாய தர்மங்கள் முற்றிலும் வேறுபடும் என்பதையும் கூறியது.

ஒரு பெண் பாலியல் உறவுக்கு விருப்பம் தெரிவிக்காவிட்டால் அவளை வற்புறுத்துவது குற்றம்தான் என்ற நுணுக்கமான விஷயத்தை முதன்முறையாக வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்தப் படம்.

 

மினல், ஃபாலக், ஆண்ட்ரியா மூவரும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த வேலைக்குச் செல்லும் பெண்கள். அவர்கள் ஒரு நாள் பொழுதுபோக்காக இரவு வெளியே செல்ல முடிவெடுக்கின்றனர். ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பின், தனது நண்பனின் நண்பனான ராஜ்வீர் என்பவனின் அழைப்பை ஏற்று, அவர்கள் மூவரும் சூரஜ்கந்த் எனும் இடத்திலுள்ள ரிசார்டுக்குச் செல்ல முடிவெடுக்கின்றனர். ஆனால், இரண்டு கோப்பை மதுவை அருந்திய பின் அவர்கள் எதிர்பாராத வகையில் பிரச்சினைகளுக்குள் அவர்க்ள் சிக்க நேர்கிறது.

ஒருபுறம் ஆண்டிரியாவை ராஜ்வீரின் நண்பன் தவறாக அணுக, இன்னொரு அறையில் மினாலை ராஜ்வீர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முற்படுகிறான். மினால் தீர்மானமாக மறுத்தும், அவளை பலவந்தம் செய்யவே, வேறுவழியின்றி மினால் கையில் அகப்பட்ட ஒரு பாட்டிலால் அவனைத் தாக்க, அது அவன் தலை, கண்களில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ராஜ்வீர் ரத்தம் வடிய அதிர்ச்சியில் உறைந்து நிற்கையில்தான், மினால் தன் தோழிகளுடன் அங்கிருந்து தப்பிச் செல்கிறாள். அந்த இரவோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று நம்புகின்றனர்.

ஆனால், அவர்கள் வாழ்க்கை அதன்பின் ஒட்டுமொத்தமாக மாறவிருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. தோற்றுவிட்டோம், அதுவும் பெண்ணின் கையால் அடிபட்டுவிட்டோம் என்ற ஆக்ரோஷ மனநிலைக்குத் தள்ளப்படுகிறான் ராஜ்வீர். தன்னுடைய பணபலத்தைப் பயன்படுத்தி அப்பெண்களுக்கு எதிராக ஒரு பொய் வழக்கினை தொடுத்து, மினாலை பிரதான குற்றவாளியாக சித்தரிக்கிறான். பணத் தேவைக்காக இந்த மூவரும் அடிக்கடி பாலியல் தொழில் செய்வதாகவும், சம்பவம் நடந்த அன்று தன்னிடம் பணம் கேட்டு வற்புறுத்தி, தான் தர மறுத்ததால் தன்னை கடுமையாகத் தாக்கிவிட்டதாகவும், கொலை முயற்சி புகார் அளித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்கிறான்.

இது ஒரு புறம் இருக்க, மினாலை எதிர் வீட்டிலிருந்தபடி கவனிக்கிறார் முன்னாள் வழக்கறிஞரான தீபக் சேகல் (அமிதாப் பச்சன்). அவருக்கு பை போலார் பிரச்சினை உள்ளிட்ட சில மனநலப் பிரச்சினைகள் உண்டு. தன் மனைவி (வித்யா பாலன்) மறைவுக்குப் பின் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டுவிட்டவர், மினாலின் பரிதாப நிலையைப் பார்த்து தானே முன்வந்து அவர்களுக்கு உதவுகிறார். படம் இங்கிருந்து ஒரு திருப்பத்தை சந்திக்கிறது.

நீதிமன்ற காட்சிகளில் மினாலிடம் தீபக் கேட்கும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் கன்னித்தன்மையுடன் இருப்பவரா என்பதில் தொடங்கி, அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது என்பது வரை, பல உண்மைகளை அவர் வாயிலிருந்தே வரவழைக்கிறார் தீபக்.

‘பிங்க்’ இந்த இடத்தில் இந்த சமூகத்தின் முன் சில கேள்விகளை முன் வைக்கிறது. ஆண்களுடன் சேர்ந்து மது அருந்தும் பெண்களை கீழ்த்தரமாக நினைப்பவர்கள்தான் பெரும்பாலானவர்கள். மேலும், குட்டைப் பாவடை அணிந்த பெண்களை, ஆண் – பெண் பாகுபாடின்றி அனைவரிடமும் சிரித்துப் பேசும் பெண்களை, எதார்த்தமாக ஆணைத் தொட்டுப் பேசும் பெண்களை, ஒரு ஆண் தப்பாக கருதும் விதத்தில்தான் இந்தச் சமூகம் இப்போதும் உள்ளது. ‘பிங்க்’ திரைப்படம் அத்தகையவர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆண்களின் மனசாட்சியையும் உலுக்கிப் பார்க்கிறது.

ஒரு பெண் உறவில் தனக்கு விருப்பமில்லை, அதாவது ‘நோ’ என்று சொல்லிவிட்டால், அது அவளைப் பொறுத்தவரை இறுதிவரை ‘நோ’ என்பது மட்டும்தான். அவளை அதற்கு மேல் வற்புறுத்தும் உரிமை ஆணுக்குக் கிடையாது. காதலன், கணவன் அல்லது பணத்துக்காக வருபவன் என யாராக இருந்தாலும், அந்தப் பெண் தன் விருப்பமின்மையைத் தெரிவித்துவிட்டபின், அவன் விலகிச் செல்வதுதான் சரி. அதுதான் நியாயம் என்பதை ‘பிங்க்’ திரைப்படம் மூலம் வலியுறுத்திச் சொல்லியிருந்தார்கள்.

பிங்க்

கொல்கத்தாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே ‘பிங்க்’ கதை பின்னப்பட்டுள்ளது. சூஸட் ஜோர்டன் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கு பிப்ரவரி 2012ஆம் ஆண்டு நேர்ந்த கொடூரச் சம்பவத்தையும், இதுபோன்ற சம்பவங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சேகரித்த தகவல்களின் அடிப்படையிலும் எடுக்கப்பட்ட படம்தான் ‘பிங்க்’ என்பதை இயக்குநர் அனிருத்தா தெரிவித்துள்ளார்.

சூஸட் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய அவர், சற்று உல்லாசப் பிரியர். தன் மனதுக்கு பிடித்தபடி தன்னுடைய சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். மது அருந்தும் பழக்கமுடையவர். ஒரு நாள் பியர் அருந்த பப்புக்குச் சென்றுள்ளார். அங்கு சந்தித்த சிலருடன் நட்பாகிவிடவே அவர்களிடம் சிறிது நேரம் பேசுகிறார். அவர்களில் ஒருவர் இவருக்கு விலை உயர்ந்த மதுவகையை அறிமுகப்படுத்த, அதை ஏற்கிறார். மறுபடியும் இன்னொரு கோப்பை மதுவை சூஸட்டுக்கு தருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் போதை அதிகமாகிவிடவே கிளம்ப வேண்டும் என்று சூஸட் சொல்ல, அவர்கள் ஐவரும் சேர்ந்து இன்னும் சிறிது நேரம் அங்கிருக்கும்படி கூறுகின்றனர். ஆனால், தன் நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த சூஸட், உடனடியாக அங்கிருந்து கிளம்ப எத்தனிக்கிறார். நள்ளிரவாகிவிட்ட நிலையில், துரதிருஷ்டவசமாக வீடு திரும்ப வாகனங்கள் எதுவுமில்லை. சூஸட்டைப் பின்தொடர்ந்து வந்த அவர்கள், தாங்கள் அவரது இடத்தில் கொண்டுபோய் விடுவதாக சொல்லி, தங்கள் ஏறச் சொன்னதும், வேறு வழியின்றி அந்தக் காரில் சூஸட் ஏறுகிறார்.

அதன்பின்னர், அந்த ஐவரும் சூஸட்டை பாலியில் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். உயிர் மட்டுமே எஞ்சியிருக்க, உடலும் மனமும் நொந்து வீடு வந்து சேர்கிறார் சூஸட். அவரது பெண் குழந்தைகளுக்கு தாயின் நிலை புரியவில்லை; என்றாலும் பார்க்கக் கூடாத கோலத்தில் பெற்ற தாயை பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீளவில்லை.

அதன்பின் சிகிச்சை எடுத்து ஓரளவு உடல்நலம் தேறியபின் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் சூஸட். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் பெண்கள் பாதுகாப்பிற்காகவும் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராக மாறுகிறார். தனக்கு நேர்ந்த கொடூரம் இன்னொரு பெண்ணுக்கு நேரக் கூடாது என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

ஆனால், காவல் நிலையத்திலும் சரி, சமூகத்திலும் சரி, அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. யாரிடம் இந்தப் பிரச்சினையை கூறினாலும், நீ ஒழுங்காக இருந்திருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று திருப்பி கேட்டார்களே தவிர, சூஸட்டை அந்நிலைக்கு உள்ளாக்கியவர்களை குறை சொல்லவில்லை.

காவல் நிலையத்தில் சூஸட் புகாரை எடுத்துக்கொள்ளாததன் காரணம், சூஸட்டை இந்நிலைக்கு ஆளாக்கிய காதர் கான் என்பவர் நடிகையும் அரசியல் பிரமுகருமான நுஸ்ரத் ஜகானின் ஆண் நண்பர். காதர், தன் நண்பர்களையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள நுஸ்ரத்தின் உதவியை நாடியிருக்கிறார்கள். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், சூஸட்டை நல்லொழுக்கம் அற்ற பெண், தன் கட்சிக்கு எதிராக அவதூறு எழுப்புகிறார், பணத்துக்காக பாலியல் தொழில் செய்பவர் என்றெல்லாம் சாடினார்.

நீதிமன்ற அலைச்சல்கள், நியாயம் கிடைக்காத சோர்வு என சூஸட் ஒரு கட்டத்தில் பித்துப் பிடித்து கடுமையான மூளை நோய் (Meningoencephalitis) தாக்க 2015ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன்பின் மீண்டும் அந்த வழக்கு பரபரப்பானது. ‘பார்க் ஸ்ட்ரீட் ரேப் விக்டிம்’ என்று மீடியா இந்த வழக்கை முன்னெடுக்க, நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்தன. ஐவரில் மூவருக்கு சிறை தண்டனை கிடைக்க, காதர் கான் உட்பட இரண்டு நபர்கள் இன்னும் சட்டத்தின் முன் தண்டனை அளிக்கப்படாமல் உள்ளனர். தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தாலும் விரைவில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த உண்மைச் சம்பவங்களுடன் புனைவுகளை கலந்து, சில மாற்றங்களைச் செய்து ‘பிங்க்’ கதையை சூஜித் சர்கார், ரிதேஷ் ஷா, அனிருத்தா ராய் செளத்ரி உருவாக்கினர். இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்த அமிதாப் பச்சனும், மினாலாகத் தோன்றிய தாப்ஸியும், மிகச் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி இருந்தனர். இயக்குநர் அனிருத்தா ராய் செளத்திரி இதுவொரு படம் என்பதையும் தாண்டி சமூகத்துக்கு ஒரு உண்மைச் செய்தியை கூற முடிந்ததில் மகிழ்ச்சி என்றார். இதுதான் ‘பிங்க்’ படத்தின் முன்னணி, பின்னணி கதை.

 

னி ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கமான ‘நேர்கொண்ட பார்வை’ இதை எப்படி அணுகியிருக்கிறது என்று பார்ப்போம்.

தமிழில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகர் அஜித். அவர் அமிதாப் பச்சன் ஏற்று நடித்த, 20 நிமிடமே படத்தில் தோன்றக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் வியாபார விஷயங்களை சிக்கலாக்கிவிடக் கூடும். எனவே, சில வணிகரீதியான காட்சிகளை இணைத்து, அதேநேரம் ‘பிங்க்’ திரைப்படத்தின் மூலக் கதையை சிதைக்காமல் தமிழில் தந்திருக்கிறார், இயக்குநர் ஹெச்.வினோத். இவரது முந்தைய படங்களான ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகியவை தமிழில் பெரிதும் கவனம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்கு முற்றிலும் புதிதான, வித்தியாசமான ஒரு கதையை இந்தத் திரைப்படம் முன் வைக்கிறது. அந்தவகையில், அஜித் இத்திரைப்படத்தில் நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு வெகுஜன நடிகர் நடித்த காரணத்தால்தான் ‘நேர்கொண்ட பார்வை’ மக்களின் கவனத்தை பெற்றது. வணீகரீதியாகவும் வெற்றியடைந்தது.

அமிதாப் ‘பிங்க்’ திரைப்படத்தில் வயதானவராக நடித்திருப்பார். ஆனால், தமிழில் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகக்கூடாது என்று, அஜித்தை நடுத்தர வயதில், அவரது இயல்பான தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். மேலும், பிங்கில் இல்லாத சில காட்சிகளை, அஜித்துக்காக, அதே சமயம் மிகையற்று, கதையின் போக்குடன் வருமாறு அமைத்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் மக்கள் நலன் கருதி பல வழக்குகளை இலகவசமாகவே நடத்திக் கொடுக்கும் பரத் சுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் அஜித். நீதிமன்றத்தில் மிகவும் நிதானமாக வாதாடும்போது எதார்த்தமான நடிப்பை அளித்திருக்கிறார்.

பொதுநலனின் தன்னை கரைத்துக்கொண்ட பரத் சுப்ரமணியம், ஒரு சமயம் கர்ப்பிணி மனைவியை (வித்யா பாலன்) நிறைமாதத்தில் தனியாக இருக்க விடுவதால், அச்சமயம் நேர்ந்த விபரீதத்தால் அவரது மனைவி உயிரிழக்க நேர்கிறது. அதன்பின் தன்னிரக்கத்தாலும், தன்னால்தான் மனைவியும் அவர் கருவுற்றிருந்த இரட்டை குழந்தைகளும் இறந்தனர் என்ற குற்றவுணர்வாலும் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். அவரை கட்டுப்படுத்தவும் சராசரி வாழ்க்கையை வாழவும் மருந்துகளின் துணையும் அவரது தூரத்து உறவினரின் உதவியும் தேவையாக இருக்கிறது.

இந்நிலையில்தான் அவர் தன் எதிர்வீட்டுப் பெண்களான மீரா கிருஷ்ணன் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), அவரது இரண்டு தோழிகள் ஃபலாக் (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்டிரியா) ஏதோ பிரச்சினையில் சிக்கி வெளியே கூற இயலாமல் தவிக்கிறார்கள் என்று அவதானிக்கிறார். மூலக் கதையிலிருந்து பெரிய மாற்றங்கள் இல்லாமல் தமிழில் இக்காட்சிகளை மறு ஆக்கம் செய்திருப்பது சிறப்பு. தமிழில் அரசு தரப்பு வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். அஜித்தும் பாண்டேயும் தோன்றும் காட்சிகள் பரபரப்பாக இருக்கின்றன.

‘பிங்க்’ படத்தின் அசலான திரைக்கதை, அதன் நம்பகத்தன்மை, படம் இருண்மையாகவே இறுதிவரை காட்சிப்படுத்தப்பட்ட விதம் உள்ளிட்ட சிலவற்றுடன் ஒப்பிடுகையில் ‘நேர்கொண்ட பார்வை’ சில இடங்களில் மாறுபட்டிருந்தாலும், தமிழ் இயக்குநர் ஹெச்.வினோத்தும் வெற்றி அடைந்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை

பெண்கள் அப்பாவிகள், அவர்கள் அனுதாபத்துக்குரியவர்கள், காதலித்த ஆணால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாக நிற்பவர்கள் என்றபடியாகத்தான் இதுவரை தமிழ் திரைப்படங்களில் நீதிமன்றத்தில் காண்பிக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 1984ஆம் ஆண்டு வெளியான ‘விதி’. அதன் பின் 1994ஆம் ஆண்டு வெளியான ‘பிரியங்கா’ (இது இந்தியில் வெளிவந்த ‘தாமினி’ என்ற படத்தின் மறு ஆக்கம்) வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணை பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஒரு நபரைப் பற்றி பேசியது. அதிலும் சூழலின் கைதியான அந்த இளம் பெண்ணின் மீது பார்வையாளர்கள் இரக்கப்படும்படிதான் சித்தரிக்கப்பட்டிருப்பார்.

ஆனால், ‘பிங்க்’, ‘நேர்கொண்ட பார்வை’யில் வரும் பெண்கள் இத்தகையவர்கள் அல்ல. மாறாக அவர்கள் துணிச்சலானவர்கள். தன் குடும்பத்தை விட்டு தனியாக ஒரு வீடெடுத்து தங்கி தங்கள் வாழ்க்கையை, தங்கள் எதிர்காலத்தை தாமே தீர்மானித்துக்கொள்ளும் துணிச்சல் மிக்கவர்கள். தெரிந்தேதான் அவர்கள் அந்த பப்புக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட மதுவை பருகிவிட்டு, சில மணி நேரம் உரையாடிவிட்டுக் கிளம்பலாம் என்றுதான் அந்த ஆண் நண்பர்களுடன் அவர்கள் கிளம்பிச் சென்றனர். ஆனால், சூழல் அவர்களுக்கு எதிராக திரும்பிய போது, மீரா தன்னை தற்காத்துக்கொள்ள எதிராளியை தாக்கிவிட்டுத் தப்புகிறாள். நீதிமன்றத்தில் அவள் எதையும் மறைக்கவில்லை. ஆனால், அவளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அவளை பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ஜோடிக்கப்பட்ட போது மனம் நொறுங்கிப் போகிறாள். எந்தப் பெண்ணும் தன் சுயம் பாதிக்கப்பட்டு, அவமதிப்பு ஏற்பட்டால் கலங்கிப் போவது இயல்புதான். மீரா அத்தகைய பாதிப்புக்குள் சென்றாலும் அதிலிருந்து மீண்டு, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.

இப்படத்தின் பெண் கதாபாத்திரங்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாகவும், ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகுபவர்களாகவும் இருக்கிறார்கள். அதிலும் ஒருவர், மீராவின் தோழி (அபிராமி), திருமணமான ஒரு ஆணுடன் உறவில் இருப்பதாகவும் காண்பிக்கப்படுகிறார். இவர்கள் தப்பானவர்கள் என்று அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு உடை அணிந்து, சுதந்திரமாக மனம்போன போக்கில் வாழ்ந்தால், இதுபோன்ற பிரச்சினைகளில் ஏன் சிக்கமாட்டார்கள் என்று தோன்றும். இதைத்தான் இந்தப் படம் கேள்வி எழுப்புகின்றது.

ஆண்களைப் போல ஒரு பெண் தனியாக வாழ்ந்தாலோ, ஆண் நண்பர்களுடன் விருந்துகளுக்குச் சென்றாலோ அதை தவறாகப் பார்க்கும் வழக்கம்தான் பொதுபுத்தியில் அன்றும் இன்றும் உள்ளது. மது அருந்துவது உடல் நலத்துக்கு தீங்கு என்பது ஆண் – பெண் இருபாலருக்கும் பொருந்தும் ஒரு விதிதான். ஆனால், ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும்; அப்படி இருக்காத பெண்கள் ஏதாவது பிரச்சினையில் சிக்கினால் நன்றாக வேண்டும் என்று நினைக்கும் மனநிலை பலருக்கு இருப்பது மனிதத் தன்மைக்கு எதிரானது.

ஒரு ஆணுக்கு இருப்பதைப் போலவே பெண்ணுக்கும் இந்தச் சமூகத்தில் சுயமாக வாழ உரிமை இருக்கிறது. ஆனால், சம உரிமை என்பது இன்றளவும் பேச்சளவில்தான் உள்ளதே தவிர நடைமுறையில் இருப்பதில்லை.

அதேநேரம், சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் சிகரெட் புகைப்பதும், மது அருந்துவதும், பாலியல் விருப்பங்களில் அதீதமாக ஈடுபடுவதும் சரி என்று சொல்ல வரவில்லை இந்தத் திரைப்படம். ஒரு ஆண், ஆண் என்ற காரணத்தாலேயே எல்லாவற்றையும் அலட்சியமாக செய்து கொள்ள, ஆண் மனோபாவம் கொண்ட பெண்கள் அதற்குத் துணை நிற்க, உண்மையில் சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்களுக்கு பல விஷயம் மறுக்கப்படுவதும், அவர்கள் மலினமாக மற்றவர்களால் பார்க்கப்படுவதும் தவறு என்பதை வலியுறுத்திச் சொல்வதுதான் இத்திரைப்படம். ஆண்களின் சுதந்திரம் என்பது இச்சமூகத்தில் இயல்பாக இருப்பதும், அதுவே பெண்களுக்கு இன்றளவும் மறுக்கப்பட்டு வருவதும் குறித்தான விழிப்புணர்வை இது தருகிறது. சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் முன் வைக்கிறது.

ஒரு பெண், ஒரு ஆணுடன் திருமணம் வேண்டாத உறவில் (ரிலேஷன்ஷிப்) இருக்க விருப்பப்பட்டால் அதை இச்சமூகம் தடித்தனம், திமிர் பிடித்தவள் என்று சாடும். ஆனால், அவளுடன் இணைந்து வாழும் ஆணை ஒருபோதும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காது. ஒரு ஆணை தன் வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுக்கு அனுமதிக்கும் உரிமையையும் பெண்தான் தர வேண்டும். பாலியல் உறவு பிரியத்துடனும் ஒருவருக்கொருவரின் விருப்பத்தோடுதான் நடக்க வேண்டும். திருமணம் முடித்தவிட்ட காரணத்தாலோ, ஆணாதிக்க மனநிலையிலோ நிகழக் கூடாது. உடல் வேட்கையால், தானாக ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தும் உரிமை எந்தவொரு ஆணுக்கும் இல்லை. அவன் வல்லுறவுக்கு உட்படுத்துவது, சொந்த மனைவியாக இருந்தாலும் சரி, பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் சரி, காதலியாக இருந்தாலும் சரி, அந்தப் பெண் தனக்கு இச்சமயத்தில் இவ்விஷயத்தில் ‘விருப்பமில்லை’ என்று சொன்னால், அவன் அவள் மனநிலையை புரிந்துகொண்டு விலகிவிடுவதுதான் சரியானது. இதைத்தான் இந்தப் படம் வலியுறுத்திக் கூறுகிறது.

பெண்களில் சமூகத்துடன் இணைந்து சந்தோஷமாக வாழ நினைப்பவர்கள் இன்று பெருகி வருகிறரகள். ஆனால், அவர்கள் இயல்பாக பேசி சிரிப்பதை, ஆண்களிடம் கலந்து பழகுவதை,  அவர்கள் சிக்னலாக ஆண்கள் புரிந்துகொள்கிறார்கள். இதை காதலாக நினைப்பவன் ஓரளவுக்கு ஆபத்தற்றவன், ஆனால், அதை அழைப்பாக நினைத்து அப்பெண்ணை ஸ்டாக் செய்பவன் (Stalk), அதாவது பின்தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்குபவன் தண்டனைக்குரியவன். இத்தகைய ஆண்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற செய்தி இந்தத் திரைப்படத்தில் உள்ளது.

பூனை கண்களை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுவிட்டது என்று கூறுவதுபோல, இன்றும் பழமைவாதிகள், எல்லாம் முந்தைய காலத்தில் இருப்பதைப் போலத்தான் இப்போதும் இருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. படிப்பதற்கும் வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கும் பிடிக்கும் கால அவகாசத்தின் இடையே, வாழ்வின் முக்கிய பருவமான இளமைப் பருவத்தை இழந்துவிடக் கூடாது என்று நினைத்து, ஆண் – பெண் ஒத்திசைந்து லிவ் இன் உறவில் இருக்கும் காலகட்டம் இது. விருப்பம் இருந்தால் அது திருமண பந்தத்தில் தொடர்ந்தும், விருப்பம் இல்லாத நிலையில் பிரிந்தும் விடுகிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இது இப்போது பலரின் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. இதில் சரி தவறு என்பதை எல்லாம் தாண்டி, மாறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தின் குழப்பமான ஒரு நிலைதான் இது என்ற மிகச் சரியான செய்தி, இந்தத் திரைப்படத்தில் வேறொரு தளத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பெண்கள் தங்கள் பாலியல் விருப்பங்களை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்; அவர்கள் வேண்டாம் என்று சொல்வது வேண்டும் என்பதற்கான அழைப்புத்தான் எனும் அபத்தமான கருத்துக்கள் முந்தைய காலகட்டத்துக்குவ் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இது நவீன காலம். எந்த ஒரு பெண்ணும் ‘நோ’ என்று சொல்லிவிட்டால் அதற்கு ‘நோ’ என்பது மட்டும்தான் ஒரே அர்த்தமாக இருக்க முடியும்.  இந்த மையச் செய்தியை மிகவும் அழுத்தமாக ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும் உள்ளது. இது பெண்களுக்கான படமல்ல; ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

 

உமா ஷக்தி <um.parvathy@gmail.com>

Amrutha

Related post