ஓரு யாழ்ப்பாணத்து வீடு

 ஓரு யாழ்ப்பாணத்து வீடு

மு. புஷ்பராஜன்

 

பொன்வயலில் கிராமத்தின் வீட்டில் ‘அரிக்கன் லாம்பின்’ மங்கல் ஒளியில் கதை சொல்லியின் குரல் கேட்கிறது. அலுத்துச் சலித்தாலும் ஆர்வம் குறையாத சிவப்பிரகாசம், கதை எழுதுவது மட்டுமின்றித் தனது கதை திரைப்படமாக வெளிவரவேண்டும் என்பதும் அவரின் கனவு. தன்னையும் தனது கனவையும் யாரும் கவனத்தில் எடுப்பதில்லை என்பதை ஒரு ‘பிறத்தியான்’ நோக்கில் அறிந்தும் வைத்துள்ளார். அவரது எழுத்துலகக் கனவுகளைக் தூர எறிந்துவிட்டு, தங்களைப் போன்ற கனவுகளையே அவரும் காணவேண்டுமென்று அயலவர் நினைப்பதுதான் அவருடைய பெரும் கவலை. அவரோடும் அவரின் கதை எழுதலோடும் சதா முரண்படுபவள் அவரது மனைவி சற்குணவதிதான். கலைஞர்களுக்கும் மனைவிகளுக்கும் இடையில் சீரான உறவு அமைந்துவிட்டால்தான் அது அதிசயம்!

சற்குணவதி யதார்த்தவாதி. அவளது கவலையெல்லாம் பிறரைப்போல் வீடு கட்டவேண்டும், மதில் கட்டவேண்டும், இரும்புக் கேற் போடவேண்டும். அயலவர் பலரைப்போல் வெளிநாடு சென்று கைநிறையச் சம்பாரிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு சிவப்பிரகாசம் ‘கோப்பரட்டியில்’  அரிசி மூட்டைகளை எண்ணிக் கொண்டிருந்தால் அவள் என்ன செய்வாள்?  அயலெல்லாம் உன்னை ‘லூசு’என்று நினைப்பவதாகவும் சொல்லிப் பார்த்தாள். எதுவும் எடுபடவில்லை. அவளது கோபமெல்லாம் சைக்கில்கடை தங்கராசு மீதுதான். அவர்தான் அவளது கணவனது படமெடுக்கும் ஆசைக்கு விசிறிக் கொண்டிருப்பவர். சிவப்பிரகாசம் தனது கதையில் வரும் வில்லியே சற்குணவதிதானெனச் சொல்லிக்கொண்டார்.

தங்கராசு தனக்கு ஆதரவாக இருந்தாலும், அவருக்கு தான் எழுதும் கதை எம்ஜியார், சிவாஜி படங்களின் கதைகள்போல் இல்லை என்ற கவலை உண்டு என்பதை சிவப்பிரகாசம் அறிந்துதான் இருந்தார். இதனால் அவர் தங்கராசுவுக்கு கதை என்றால் என்ன என்று விளக்கம் அளிக்க முயன்றார். திரும்பிப் பார்க்கும் இடங்களெல்லாம் கதைகள்தான் இருக்குது. இந்தப் பொன்வயல் வெளிகள், தோட்டங்கள், கோவில்கள் எல்லாம் கதைகளைத்தான் கொண்டிருக்கின்றன என்று ஒரு தத்துவ வகுப்பையே எடுத்துவிட்டார். தொடர்ந்தும் அவர் தங்கராசாவிடம், ‘உனது வீட்டிற்கு முன்னால் யார் இருக்கிறார்கள்’ என்ற கேள்வியைக் எழுப்பினார். ‘பாக்கியமக்கா வீடு’ என்று பதில் வந்தது. இப்போது பாக்கியமக்கா வீட்டுக் கதை பார்வையாளர்கள் முன் விரிகிறது.

 

ரண்டு வளர்ந்த பின்ளைகளை வைத்துக்கொண்டு கணவனை இழந்த பாக்கியமக்கா இடியப்பம், ஒடியல், பினாட்டு, பலகாரம் செய்து வித்து சீவியத்தைக் கொண்டு நடத்தவே கஷ்டப்படுகிறாள். மூத்தவள் கமலினி உயர்தரம் படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சிக்குப் போய் கொண்டிருக்கிறாள். தம்பி செந்தில் தாயின் செல்லம். வளர்ந்தும் வீட்டின் வறுமை நிலை அறியாமல் வெட்டியாகத் திரிகிறான். கமலினிக்கும் தபால் கந்தோரில் பியூன் வேலை பார்க்கும் கனகுவிற்கும் காதல். கனகுவின் தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால், கமலினியின் கல்யாணம் தள்ளிப் போய்கொண்டிருக்கிறது. பாக்கியமக்கா இந்தக் காதலை அறிவாள். மகள் கரைசேர்ந்தால் போதுமென்று அக்காதலை ஊக்கிவித்தும் வந்தாள். ‘எப்பவாம் கலியாணம்’ என கமலினியை இடைக்கிடை கேட்கவும் தவறுவதில்லை. கமலினியின் வெறும் காதுக்கு கனகு ஒரு சோடி தோடும் பரிசளித்திருந்தான்.

இந்த நிலையில் அவ்வூர் விதானையாரின் மகன் தனசேகரன், தனேஸ் என்ற நவீன பெயருடன் நோர்வேயில் இருந்து பொன்வயல் கிராமத்துள் காலடி எடுத்து வைத்தான். தனேசுடன் செந்திலுக்கு ஏற்பட்ட பழக்கத்தின் வழியாய் தனேஸ் ஓருநாள் கமலினியைக் காண்கிறான். தனேஸ் கண்ணில் மின்னல் தெறிந்தது. பின்னர் பாக்கியமக்கா வீட்டிக்கும் வருகிறான். அதன் பின் கனகுவுடனான பாக்கியமக்காவின் உறவு அடியோடு மாறிப்போகின்றது. பாக்கியமக்கா, செந்தில், தனேஸ் முக்கூட்டில் ஒரு ஒப்பந்தம் – தனேசுக்கு கமலினியைக் கட்டிக்கொடுப்பதும் அவன் செந்திலை நோர்வேக்கு எடுப்பதாகவும் முடிவாகியது. கமலினி எவ்வளவே அழுது மறுத்தபோதிலும் பாக்கியமக்காவின் ராஜதந்திர உரையாடல்கள் முன்னால் கமலினி விற்பனைப் பொருளாகிறாள். ஏமாற்றம், அவமானம், இழிவு அகியவைகளினால் கனகு நொருங்குண்டு போனான்.

இருபத்தியாறு வருடங்களின் பின் இக்கதை நோர்வேயில் தொடர்கிறது. புகையிரத நிலையத்தில் இளம் பெண் காத்திருக்கிறாள். அவள் வேறு யாருமல்ல. கமலினியின் இரண்டாவது மகள்தான். காரில் வந்த தனேஸ் அவளை அழைத்துச் செல்கிறான். ‘ஏனப்பா அவசரமாக வரச்சொன்னீர்கள்’ என்ற கேள்விக்கு ‘வீட்டில் கதைக்கலாம’ என்கிறான்.. வீட்டில் பாக்கியமக்காவை புலம்பெயர்ந்தோர் பாட்டியர் கோலத்துடன் எதிர்கொள்கிறோம். கமலினியின் மூத்த மகள் லக்சோனா யூனிவசிற்றியில் உதவி விரிவுரையாளராகவும். தங்கை பேர்கன் யூனிவசிற்றியில் முதலாம் ஆண்டு கல்வி கற்பவராகவும் உள்ளனர். பொன்வயலில் கதை சொல்லி சிவப்பிரகாசம் குடும்பம் இப்போது கனடாவில்.

சிவப்பிரகாசத்தின் மனைவி சற்குணவதி நோர்வே வந்தபோது, பாக்கியமக்கா குடும்பத்தைச் சந்திக்கிறார். தான் ஊருக்குப் போய் வந்த விடயத்தைத் தெரிவித்தவுடன் பாக்கியமக்கா ஆர்வமாக ஊரவர் பற்றி விசாரிக்கிறாள். கமலினி உரையாடலில் பங்குபற்றாமல் கேட்டுக்கொண்டிருக்கிறாள். உரையாடலின் இடையில் டிங்கிரி பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பாக்கியமக்கா வெளியே சென்றுவிடுகிறாள். தனித்திருந்த கமலினி ஊரில் நடந்தவைகளைச் சற்குணவதி மூலம் அறிகிறாள். கனகு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதை விடவும் குடித்துக்கொண்டு திரிந்ததால் மனைவி பிரிந்து சென்று, பின்னர் வன்னியில் இறந்ததையும் கனகு அனாதைப் பிணமாய் செத்ததையும் சைக்கில்கடை தங்கராசு இந்தியாவில் அகதி முகாமில் இறந்ததையும் அறிகிறாள். கனகுவின் இறுதிக்கால சம்பவங்கள் கமலினியை கலங்கடித்துவிட்டது.

எப்போதும் தனது தாய் தனித்த நினைவுகளுடன் ஒதுங்கியிருந்ததை அவதானித்த அவளது மூத்த மகள் தாயின் பூட்டியிருந்த மனக்கதவை தட்டிக்கொண்டிருந்தாள். அந்தக் கதவு ஒருநாள் திறந்துகொண்டது. திருமணமானதிலிருந்து தாய் பொன்வயலின் தன் மனேரதிய நினைவுளைப் புதைத்து தன் மனக்கதவினை இறுகச் சாத்திக்கொண்டதையும் குடும்பத்திற்காக உழைத்து உழைத்து நடைப்பிணமாக வாழ்ந்ததையும் அறிகிறாள். தாய் தனது மகிழ்ச்சிக்கான வாழ்க்கையை வாழவேண்டுமென விரும்புகிறாள். எஞ்சியிருக்கும் காலத்தையாவது தனக்காக அவள் வாழவேண்டும் எனக் கருதினாள். கமலினியைச் சூழ்ந்திருந்த அப்பா, அம்மா, தம்பி ஆகியோரின் மரபார்ந்த வாழ்ககை முறைகளிலிருந்து விடுவித்து தாயைத் தனியாக கொண்டுசென்றுவிடுகிறாள். கமலினி தனது திறந்த மனக் கதவுவழி பொன்வயலில் தொலைந்துபோன தனது வாழ்கை நினைவுகளுடனும் நினைவின் சின்னங்களுடனும் வாழ்கிறாள். சிவப்பிரகாசமும் மடிக் கணணி உதவியுடன் தனது கதையை முடிந்துக்கொள்கிறார்.

 

க்கதை மேலே குறிப்பிட்ட ஒழுங்கு வடிவில் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. பொன் வயல், நோர்வே என மீள் நினைவுகளின் தொகுப்பாக நகர்கின்றன. பொன்வயல் கறுப்பு வெள்ளையாகவும் நோர்வே வர்ணங்களாகவும் அமைந்துள்ளன. மிகக் குறைந்த வளங்களடன், மிகையற்ற நடிகர்கள், கூர்மையான உரையாடல்கள் மெல்லிய இசை, அவை பெரும்பாலும் வானொலிப் பாடல்கள்தான்; ஆனால், பொருத்தமாக ஒலிக்கிறது.

இத்திரைப்படத்தில் பாக்கியமக்காவின் உருவாக்கம் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவர் தனது குடும்ப நலனுக்காக எவருடனும் இணங்கிப் போவதற்கும் எவரையும் பகைப்பதற்கும் சூழ்நிலைக்கு அமைவாக எவரையும் இழிவுபடுத்துவதற்கும் அவரது தாய் உள்ளம், அதுவும் ஏழ்மையால் சூழப்பட்ட தாயுள்ளம் தயாராகவே இருக்கிறது. மகளின் காதலுக்கான ஆதரவு, நோர்வேயால் தலைகீழாக மாறியதையிட்டு எந்தவித குற்றவுணர்வும் அவளிடம் இல்லை. மகள் கனகுவுடன் கதைப்பது இப்போது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனுடனான எல்லா உரையாடல்களிலும் எரிச்சலை வெளிப்படுத்துகிறாள். கனகுவை ‘ஒரு ஓட்டைச் சைக்கிளில வீதி வீதியாய் போய் விசில் ஊதுகிறவன்’ என்று இகழ்கிறாள். படம் பார்ப்பவர்கள் இந்தப் பாத்திரத்தை மறக்கவே முடியாது நினைக்கிறேன்.

பாக்கியமக்காவின் குணவியல்புகளை யாழ்ப்பாணத்து மனோபாவம் என்று குறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். வறுமை சூழ்ந்த வாழ்வில் கைம்பெண், கல்யாண வயதில் பெண்ணை வைத்திருக்கும் எல்லாத் தாய்மாரிலும் பாக்கியமக்காவைக் காணலாம். அமெரிக்க நாடகாசிரியர் Tennessee Williams இன் The Glass Menagerie நாடகத்தில் (இந்த நாடகம் அவைக்காற்று கலை கழகத்தினரால் ‘கண்ணாடி வார்ப்புகள’ என்ற பெயரில் பல நாடுகளில் மேடையேற்றப்பட்டது). இதில் வரும் அமென்டா பாத்திரம் மேலைத் தேசப் பாக்கியமக்காதான். கமலினியின் பாத்திரமும் அவ்வகையானதே ‘எல்லோரும் காணிய வித்து, நகையை வித்து, வெளிநாட்டிற்கு ஆனுப்பிறினம்; நீங்க உங்கட பிள்ளய வித்து வெளிநாட்டிற்கு அனுப்புறியோ’ என பொன்வயலில் கூறியதும், ‘இருபத்தியாறு வருஷங்களுக்கு முன் எப்பவோ முடிஞ்ச கதை’ என தாய் நோர்வேயில் கூறும்போது, ‘அம்மா அது உங்களுக்கத்தான் முடிஞ்ச கதை, எனக்கு சாகும் வரை தீராத கதை’ என்ற அழுகைக் குரல், இன்று புலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ தாய்மாரில் எதிரொலித்த, எதிரொலிக்கும் குரல்தான்.

தனேஸ் தனது இளைய மகளிடம், ‘தாலியைக் கழட்டிவிட்டுப் போயிற்றாளே’ எனத் தாலியை கையில் வைத்திருப்பதும், தனேஸின் மினுமினுக்கும் தோட்டை கமலினி அணிந்திருப்பதைக் கனகு பார்க்கும் காட்சியில், பார்வையாளர்களும் உணர்ந்திருப்பார்கள். அதன்பின் தோட்டை குளோசப் காட்சியில் பார்வையாளருக்காகக் காட்டுவதும் தேவைதானா? கமலினியின் மனதை தாய் தன் வார்த்தைகளால் கரைக்கும்போது, உலைக்களத்தின் இரும்புத்துண்டை சம்மட்டியால் அடித்து வளைப்பதும், கமலினியின் மூத்த மகள் தங்கைக்குத் தாயின் திருமணம் பற்றிக் கூறுகையில், கடலில் மிதக்கும் படகைக் காட்டுவதும் அவர்கள் திருமண வாழ்வு தோல்வி என்பதற்கு படகு அமிழ்ந்தும் மலிவான குறியீடுகள்.

ஒரு சாதாரண கதைதான்; ஆனால், திரைப்படமாக பிளாஷ்பேக் முறையில் ஒரு கலை வடிவமாக மாற்றம் பெறுகிறது. இத்திரைப்படம் ஆர்வக்கோளாறினால் எடுக்கப்பட்ட படமல்ல என்பதுடன் இத்துறைசார்ந்து அறிவும் திறமையும் உள்ளவர்களால் உருவாகியவை என்பதை நெறியாளர் சிவமாமி பிரேம்ராஜ் உணர்த்தியுள்ளார்.

மு. புஷ்பராஜன் <michaelpushparajan@gmail.com>

 

Amrutha

Related post