தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் | க்ருஷாங்கினி | 2

 தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் | க்ருஷாங்கினி | 2

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் குறித்த ஓர் அலசல்

2

சங்க காலம் 

ங்க கால இலக்கியப் பாடல்களை வெறும் மொழிக்கான பாடல்களாகக் காணாமல் ஒரு சர்வதேச குரல் என்ற பார்வையில் பார்த்தோமானால் அதற்கும் இடமுண்டு. அந்தளவு பரந்து விரிந்த நோக்குக் கொண்டது. அதேநேரம், தமிழ் என்பது தனித்து ஒலிப்பதையும் சங்கப் பாடல்களில் கேட்க முடியும்; தமிழ்நாடு என்பதும் அப்போதே இருந்ததையும் காண முடிகிறது.

வாய்விட்டுச் சொல்லி மக்களிடம் சென்றடையச் செய்ததன் வாயிலாக சங்க காலத்தில் கவிஞர்கள் மக்களிடையே ஒரு ஊடக சாதனம் போல் பரவினார்கள். அவர்களின் பாடுபொருளானது தமிழன், நிலப்பரப்பு, உலகக் கண்ணோட்டம் என்ற மூன்று நிலையில் இருக்கிறது. அவர்கள் பாடல்களில் தனிமனித உணர்வுகள் குறிப்பிடப்படக் கூடாது என்பதற்காக மானுட உணர்வுகள் தனி மனிதப் பெயர்களைத் தாங்கி வருவதில்லை. தலைவன், தலைவியென உணர்ச்சிகள் பொதுவாக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள், தனி மனித வாழ்வாகக் கருதாமல் பொது மானிட வாழ்வின் போக்கினை குறிக்கும்படியாகவே அமைந்துள்ளன. அரசன் முதல் ஆண்டி வரை அனைவரையும் ஒரே நோக்கில் காண்பது, இலக்கியத்தில் மக்களைப் புறக்கணிக்காத போக்காக உள்ளது. புராணக் கதைகளை இணைக்கும் மரபாகக் கொள்ளாமல், நாட்டுப் பாடல்களோடு தொடர்பு கொண்டுள்ளது.

தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சங்க இலக்கியத்தின் இரண்டு போக்குகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரின் ஆராய்ச்சிப்படி, ஒரு சாரார், புரவலர்களைப் போற்றிப் பாடி அவர்களைத் தன் கருப்பொருளாகக் கொண்டு துதி பாடி வந்தனர். அது வெறும் இலக்கணக் குறிப்புகள் கொண்டு கட்டமைக்கப்பட்டவைகள். மற்றொரு சாராரோ, அப்பொழுது வாழும் மக்களின் மனோநிலை, மொழி ஆகியவற்றைக் கொண்டு கவிதைகள் புனைந்து மொழிக்கு வேற்றுருவம் தந்தனர்.

 

ங்க காலத்தில் கல்வி கற்பதில் ஆடவர் – பெண்டிர் இருபாலாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், கல்வி கற்கும் முறையில் வேற்றுமை இருந்தது. போர்க்கலை, ஆட்சியியல், பொருளீட்டுதல் முதலியன ஆண்களுக்கும், இல்லறத்தை செம்மையாக்கும் கல்வியோடு நுண்கலைகளும் பெண்களுக்கானதாகவும் இருந்தது.

ஆயினும், சங்க காலத்தில் பெண்ணுரிமை பேணப்பட்டது. பெண்ணடிமைத் தனம், பெண் மேல் வெறுப்பு ஆகியவை அக்காலத்தில் தோன்றவில்லை. பெண்ணுக்கு, கல்வி, இலக்கிய உரிமை, தனக்கேற்றவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, தொழில் உரிமை அனைத்தும் இருந்தது.

அதேநேரம், சங்க காலத்தில் ஆண் – பெண் இடையே சம உரிமை இருந்ததில்லையென வாதாடும் வழக்கமும் உண்டு. பலதார மணம் என்பதைச் சுட்டிக்காட்டி இதைச் சொல்கிறார்கள் சிலர்.

தற்காலத்தில் பெண்கள் பெயர் கொண்டு எழுதும் ஆண்கள் அதிகம் உள்ளனர். தங்கள் அரசாங்க வேலைக்கு மாசு வந்து விடக்கூடாதே என்பதற்காக, பெயர் சற்று கவர்ச்சிகரமானதாக இருக்க, பெண்களின் நிலை குறித்து பெண்களே எழுதியது என்கிற மாயத் தோற்றத்தோடு படிக்கத் தருவதற்கு, சிவப்பு விளக்குக் கதைகள் போன்றவற்றை எழுத என்று பெண் பெயர்கள் கொண்டவர்கள். வெகு ஜன இலக்கியம், சிற்றிதழ் இலக்கியம் இரு பகுதிகளிலும் இது போன்றவர்கள் உள்ளனர்.

சங்க காலத்திற்கு வருவோம்… காமக்கணிப் பசலையார், போந்தைப் பசலையார் போன்றவர்களைப் பெண்கள் என்று சொல்வோரும் உண்டு. முடத்தாமரைக் கண்ணியாரையும் பெண் என்போர் உண்டு. ஆராயும் அறிஞர்களுக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபட்டுக் கொண்டே உள்ளது. எழுதிய கவிஞர் பெயர் தெரியாமல் பல பாடல்களும் உள்ளது.

 

ங்ககால பெண்பாற் புலவர்கள் 41 என அவ்வை து. நடராஜன் வரையறுத்துள்ளார். ந. சஞ்சீவி ஆராய்ச்சிப்படி சங்ககாலப் பெண் புலவர்கள் 36. ஐங்குறு நூறிலும் கலித் தொகையிலும் பெண் கவிஞர்கள் ஒருவர் கூட இல்லாதது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்கிறார் சஞ்சீவி.

நாற்பத்தியோரு பெண்பாற் புலவர்கள் என்றாலும் அவர்களின் பாடல்கள் ஒன்று, இரண்டு என்ற எண்ணிக்கையில் உள்ளன. அவ்வையார் மட்டுமே 59 பாடல்கள் எழுதியுள்ளார். அவ்வையாருக்கு அடுத்தபடியாக வெள்ளிவீதியார் 13 பாடல்கள் எழுதியவர்.

அகம், புறம் என இருவகையிலும் பாடல்களையும் பெண்பாற் புலவர்கள் பாடியிருந்தாலும் அகம் பற்றி மட்டுமே பாடியவர்கள் அதிகம். ஔவை மட்டுமே புறம் பற்றி அதிகம் கவிதைகள் இயற்றியுள்ளார்.

தலைவன் தலைவியின் ஊடல் பற்றியும் உடலுறவு பற்றியும் பெண் கவிஞர்களின் பாடல்களில் அதிகம் காணப்படுவதில்லை. தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவியைக் காணாத தலைவன் போன்ற பாடல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. ஆண் – பெண் கலவி பற்றிப் பெண்கள் எழுதாததற்குக் காரணம் நாணம் என்பதாகக் கொள்ளலாம் என்கிறார் அவ்வை து. நடராசன்.

பெண்கள் தாய்மைப் பேற்றை அடையாமல் வீணாவது குறித்துப் பாடல்கள் புனைந்துள்ளனர். ஆயின் ஆண்கள் இது பற்றி அதிகம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

அவ்வையார் பற்றி பின்னர் தனியாக விரிவாக பார்ப்போம்; இந்த அத்தியாயத்தில் மற்றவர்களைப் பார்க்கலாம்.

 

வெள்ளிவீதியார் 13 பாடல்கள் எழுதியவர். இவரின் பாடல்களில் இவரின் வாழ்வனுபவங்கள் எதிரொலிக்கின்றன. நோயின் காரணமாகத் தனது வாழ்வில் ஏற்பட்ட தாபங்களை விவரிக்கும் பாடல்கள் அநேகம். அதேபோல தாய்மை எய்த இயலாத நோயால் தன் இளமையும் வாழ்வும் ஒருசேர அவலமானதாகவும் குறிப்பிடுகிறார். பாங்கனும் தலைவனும் பாடுபொருளாக நிகழ்த்தும் பாடல் ஒன்று இவரால் இயற்றப்பட்டுள்ளது.

‘வெண்ணை ஞாயிற்றின் வெப்பத்தால் உருகிப் பரந்துபட்டது போலக் காமம் நோயாய் பரந்துள்ளது. அவ்வெண்ணெய் உருகாமல் காக்கும் பொருட்டு ஊமை தன்னுடைய கைக்குறையால் அதனைப் பிரிதோர் இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும், ஊமைத் தன்மையால் பிறரைக் கூவிப் பாதுகாக்கச் செய்யவும் இயலாததுபோல, இந்நோய் அடக்கிப் பாதுகாத்தற்குரிய ஆற்றலையும் பிறரிடம் வெளியிடற்குரிய நிலையும் பெற்றிலேனாதலின் இதனைக் காக்க இயலேனாயினேன்’ என்று உ.வே. சாமிநாதர் விளக்கம் அளித்துள்ளார்.

தலைவன் தன்னைத் துறந்து பரத்தையோடு காலம் கழித்துவிட்டு வீடு திரும்பும் நிலைகண்டு, தனது சினத்தை வெளிப்படுத்துகிறார், வெள்ளிவீதியார். பல்லைக் கடித்து ‘நற நற’வென்றெழுப்பும் ஒலியைக் கவிதையில் இடம்பெறச் செய்கிறார். தனது வாழ்க்கையின் அவலச் சுவையை பல நிலைகளில் 13 பாடல்களில் வெவ்வேறு உருவத்தில் வெளிப்படுத்துகிறார்.

காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், மொத்தம் 12 பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது பாடல்களில் வீரம், காதல், கலை ஆகியன கலந்து ஒலிக்கும். சேரமன்னன் காதலில் உயர்ந்தவனா, ஈதலில் உயர்ந்தவனா என கேள்வி பதிலாகப் பாடல் இயற்றியுள்ளார். அதில் அரசன் – அரசிக்கிடையேயான ஊடலை நகைச்சுவையுடன் வர்ணிக்கிறார். போர்க்களத்தில் மதில்கள் பல கைப்பற்றிய அரசன் காதலில் ஒரு சிறு மலரைக்கூட கைப்பற்ற இயலாத நிலை குறித்து எழுதியுள்ளார்.

ஆண்களின பெருமை மகளிராலும் ஏற்றம் அடைவதுண்டு என்பதைக் குறிப்பது போல, ‘ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் அரசனை, ‘ஆன்றோள் கணவா’ என மனைவியின் பெயரை முன்நிறுத்தி விளித்துப் பாடியுள்ளார். வீரர், பாணர், கூந்தர், விறலியர் ஆகியோரைப் பற்றிப் பாடும்போதோ மற்ற சமயத்திலோ இவர் கள்ளுணவைப் பற்றிப் பேசவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அள்ளூர் நன் முல்லையார், பதினோரு பாடல்களை இயற்றியுள்ளார். இவர் பாடல்களிலும் ‘துயரம்’ என்பதே பிரதானமான பாடுபொருளாக உள்ளது. ஆயினும் ‘வெள்ளிவீதியாரின்’ பாடல்களில் காணப்படுவதைக் காட்டிலும் இவற்றில் பாடு பொருளில் துணிவு குறைவாகவே உள்ளது. இவரின் ஒரு பாடல் குறிப்பை இங்கே காண்போம். மலராக இருந்து அதுவே முள்ளாக மாறுவது நெருஞ்சிப் பூவின் இயல்பு. காதலே பகையாய் மாறியதற்கு இப்பூவை உவமையாக்குகிறார் கவிஞர். அகநானூறில் உள்ள ஒரு பாடலில் அரசனைப் புகழ்ந்தும் தனது இருப்பிடப் பற்றையும் விவரிக்கிறார்.

அவ்வையார், வெள்ளி வீதியார், காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், போன்று சிறந்த பெண்பாற் புலவர்களில் நன்முல்லையாரையும் இணைக்கிறார் உ.வே. சாமிநாதர்.

கழார் கீழெயிற்றியாரின் எட்டுப் பாடல்கள் காணக்கிடைக்கின்றன. பாலைத் தளத்தில் பாடியவர் இவர். பாலைத் திணையில் தலைவி தலைவனின் மணல் மிகுந்த நெடுவழியின் துயரங்கள் பற்றிப் பாடுவது வழக்கம். ஆனால், இவரோ தலைவி இருக்குமிடத்தில் ‘வாடையை’ப் பற்றிப் பாடி தலைவனின் ‘பாலை’யைக் குறிக்கிறார். எனவே, ‘வாடை பாடிய புலவர்’ என்ற அடைமொழியுடன் இவரைக் குறிப்பிடலாம். ‘கோடையிலேயே தலைவன் பிரிவைத் தாங்க இயலாதவர் வாடையில் எங்கனம் தாங்குவார்?’ என்று விரகத்தைக் கூறுவார்.

கச்சிப்பேட்டு நன்னாகையார் இயற்றிய பாடல்கள் 6. இவரின் பாடல்களில் தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவி பூ அணிதல், கூந்தலைச் சீர் செய்தல் ஆகியவற்றை செய்யமாட்டார்கள் என்று கூறுகிறார்.

ஒக்கூர் மாசாத்தியார், 8 பாடல்களுக்கு உரியவர். இவர் எழுதிய ஒரேயொரு புறத்திணைப் பாடல் மிகவும் பிரசித்திப் பெற்றது.

மாற்றோகத்து நப்பசலையார் இயற்றிய பாடல்கள் ஏழு. மூன்று பாடல்கள் கிள்ளி வளவன், மலையமான், திருமுடிக்காரி, சோழிய ஏனாதி, திருக்கண்ணன், அவியன் ஆகிய அரசர்கள் மீது பாடப்பட்டவையாகும். கிள்ளிவளவன் தர்ம சிந்தனை, வீரம் ஆகியவற்றைப் பற்றி நப்பசலையார் நலங்கிளார் உத்தியைக் கையாள்கிறார். கிள்ளி வளவன் மீது பாடப்பட்டுள்ள கையறு நிலைப் பாடல் நப்பசலையாரின் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

எல்லோருக்கும் அள்ளி வழங்கும் கிள்ளி வளவன் மறைவு, அதன் துக்கம் பாணர்களுக்கு அதிகமா அல்லது அவனுடைய அன்பு மனைவிக்கு அதிகமா? என்ற கேள்வி எழுப்பி, கணவன், மறைவினால் ஏற்படும் விதவைக் கோலம் என்பது புரவலர்களை விடக் கொடுமையானது என மனைவியின் நிலைக் குறித்தும் பெண் நிலைக் குறித்தும் ஏக்கம் அடைகிறார்.

அசுணப் பறவை யாழில் மயங்கிய நொடி அதிர் பறை அடித்து அதனை அதிர்ச்சியில் கொல்வதற்கு ஒப்பானது என அரசனின் மரணத்தை ஒப்பிடுகிறார் புலவர்.

சங்க கால சடங்குகளில் ஒன்றான வெறிப் பாடல் பற்றி ‘வெறி பாடிய’ காமக் கண்ணியார் எழுதிய ஐந்தில் மூன்று பாடல்களில் உள்ளன. எனவே, வெறிப் பாடலைப் பாடி சிறப்பித்ததைக் கொண்டாடும் வகையில் இவருடைய பெயருடன் வெறிபாடிய என சிறப்புப் பெயரும் இணையப் பெற்றவர். இவரின் பாடலில் ஒன்று தலைவி தலைவனுடன் கூடல் ஏற்பட்டதால் பசலை நீக்கி உற்சாகம் கொள்கிறாள். ஆனால், மற்றவர்கள் முருகனுக்கு எடுத்த வெறியாடல் சடங்கால்தான் தலைவி பசலை நோய் நீங்கினாள் என கேலிக்குரிய வகையில் பேசுகின்றனர்.

வெண்பூதியார், மூன்று பாடல்களுக்கு உரியவர். மூன்றும் தலைவி கூற்றாகவே அமைந்துள்ளது. காதலால் ஏற்படும் பிரிவையும் அதனால் ஏற்படும் விளைவையும் சோகக்குரல் ததும்ப எடுத்துரைத்துள்ளார்.

பெரும்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், மூன்று பாடல் எழுதியுள்ளார். தோழியின் நாவண்மை தலைவியின் கனவின் பயம், தாய் தூக்கமற்றுப் போனது என கவி பாடியுள்ளார். இவருடைய பாக்களில் கவி நயம் அதிகம்.

பொன்முடியார், மூன்று பாடல்கள் இயற்றியுள்ளார். கதிரை மறம், நூழிலாட்டு, மூதில் முல்லை துறைகளைச் சார்ந்தவை இவரின் கவிதைகள். இவர் பூப்பெய்தியதை போர்களத்துடன் ஒப்பிட்டு உவமை நயமுடன் பாடியுள்ளார்.

பூக்கண் உத்திரையார், இரண்டு பாடலுக்கு உரியவர். பெண்ணின் கற்பொழுக்கத்திற்கு இடையூறு ஆகும் நொதுமலர் வரைவு பற்றி கூறியுள்ளார். களவியல் ஒழுகும் மகளிற் சிறப்பும் கூறியுள்ளார்.

நெடும் பல்லியத்தையுடையது இரண்டு பாடல்கள். களவியல் காலத்தில் காதலனாயிருந்த போதும், திருமணம் முடிந்த பின் தலைவனின் புணர்ச்சியில் உண்டான மாறுதல்கள் பற்றியும் கூறி ஆதங்கப்படுகிறார். இவரின் கவிதைகளில் கரு இதுவே.

மாற்பித்தியாரின் இரு பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தில் துறவு பற்றிப் பாடிய பெண் பாற் புலவர் இவர் ஒருவரே. இதனால் இவர் தனித்து நிற்கிறார்.

நன்நாகையாருக்கு உரியது இரண்டு பாடல்கள். இரவில் கதவைச் சாத்துவதற்கு முன்பாக விருந்தினர் உளரோ என்று கூவிப் பார்க்கும் சாக்கில் தன் தலைவனுடன் உரையாட அச்சமயத்தைப் பயன்படுத்த என்னும் உணர்வை நைச்சியமாகக் கூறி உள்ளார் இவர். மற்றொரு பாடல் வேடிக்கைப் பேச்சு, எப்படி கணவன் – மனைவி இடையே வேற்றுமையை விளைவித்தது என்பது குறித்தான பாடல்.

மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையாருக்கு உரிய பாடல் இரண்டு. பரத்தையுடன் இருந்து மீண்ட தலைவன் தன் இல்லத்தில் நுழையும் போது ஏற்படும் காட்சி பற்றியது ஒன்று. அறத்தோடு இருக்கும் தலைவன் தன்னைப் பொருள் காரணமாகப் பிரியும் போது அவனிடம் தன் காமம் பற்றிக் எடுத்துரைப்பது போல் அமைந்துள்ள பாடல் மற்றொன்று.

தாயங்கண்ணியார் பாடல் ஒன்றே ஒன்றுதான். கணவனுடன் இணைந்து வாழும் குடும்பத்தில் மங்கல நிலையையும் கணவனை இழந்த கைம்பெண்ணின் அவலத்தையும் ஒப்பிட்டுக் கூறிய பாடல் அது.

நல்வெள்ளியார் பாடல்கள் மூன்று. கார் காலத்தில் பெரு மழையில் தலைவன் தன்னை வந்து ஆட் கொள்வான் என்ற அர்த்தத்தில் எழுதிய பாடல்கள் இவை.

வெண்ணிக்குறத்தியார், தோல்வி அடைந்த அரசனின் மேன்மைகளைத் தன் அரசன் முன்னால் தைரியமாகப் பாடியவர். தன் சார்ந்த அரசன் அடைந்த வெற்றி, கொண்டாடப்பட்டு, தோற்ற அரசனின் நிலைப் பற்றி நினைக்காதிருப்பதுதான் இயல்பாக வீர ரசம் பாடும் புலவர்களின் வழக்கம். வெண்ணிப்பறத்தலைப் போரில் சோழன் கரிகாலன் வென்றான். சேரமான் தோற்றான். அப்பகுதியிலேயே சேரன் பெருஞ்சேரலாதன் தன் தோல்வியால் நொந்து மனம் வெட்கி தன்னை வடக்கிருந்து மாய்த்துக் கொண்டான். அது கவிஞரின் மனத்தில் ஆழப் பதிந்தது. எனவே, தான் சார்ந்த அரசனைப் பற்றி பாடாமல், தோல்வி அடைந்த அரசனின் மேன்மைகளைத் தன் அரசன் முன்னால் தைரியமாகப் பாடியவர். புகழ்ச்சி பொய்யாயிருக்கக் கூடாது என்று எண்ணி பாடல் இயற்றினார் இவர்.

வினாவிடை அமைப்பில் காவற்பெண்டு கவிதைகள் உள்ளன.

வெள்ளை மாளர் கவிதைகள் போரினின்று வீடு திரும்பிய வீரர்களின் வரவைப் பற்றியும் வராமல் விட்டுப் போய் தாமதமாய் வந்து ஊரடைந்த ஒரு வீரனைப் பற்றியதும் ஆகும். புண்களைப் பேய்கள் அண்டாதிருக்க வேப்பிலையை வீட்டின் முன் சொருகியும் பாடல்களைப் பாடியும் இருக்கும் தெருவில் ஒருவனுடைய தேர் தாமதமாக வர அவன் வீட்டு நிலை பற்றி கவலை கொண்டு பாடுகிறார் இவர்.

குறமகள் இளவெயினி, கவிதை படைக்க சாதி தடை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அக் காலத்திலேயே கவிதை படைத்தவர்.

பாரி மகள் அங்கவை, சங்கவை இருவரின் கவிதை ஒன்றுதான். ஆனாலும் கூட அந்த ஒற்றைப் பாடல் இன்றளவும் பேசப்படும் பாடலான ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ எனப்படுவது. அந்த நாளில் அப்பாவும் இருந்தார், சொத்தும் இருந்தது, இன்று ஏதுமற்று தந்தையுமற்று நிற்கும் தங்களின் அவலச் சுவையை மிக ஆழமாக பிழிந்து கொடுத்தவர்கள் இவர்கள். தந்தை மக்கள் பிரிவும் இன்பமும் துன்பமும் என்ற அடிப்படையில் இதைச் சார்ந்தும் இது போன்றும் இன்றளவும் பல பாடல்கள் வந்து கொண்டு இருக்கும் ஒரு முன் மாதிரியான பாடல் இது.

பூதப் பாண்டியன் தேவி பெருங்கோபெண்டு பாடலும் ஒன்று மட்டும்தான். கணவனை இழந்த பின் ஊரில் தான் மட்டும் கைம்மை நோன்பு ஏற்று வாழ்வதைக் காட்டிலும் தலைவனுடன் உடன் கட்டை ஏறி உயிர் மாய்த்துக்கொள்ள விரும்பிய பெண் இவர்.

பேய் மகள் இளவெளினி, அஞ்சி அத்தை மகள் நாகையார், குமிழ் ஞாழலார் நப்பசலையார், ஆதிமந்தியார் போன்று இன்னமும் 15 பெண்பாற் புலவர்கள் ஒரே ஒரு பாடல் இயற்றியிருந்தாலும் அந்தப் பாடல்கள் தனித்துவம் கொண்டும் காலத்தால் அழிக்க இயலாததாகவும் அமைந்துள்ளன. ஆதிமந்தியார் ஒரே பாடலில் தன் கணவனை வெள்ளத்தில் பறிகொடுத்து ஆட்டனத்தியைத் தேடி நீர் போகும் பாதை எங்கும் அலைந்தது, வருந்தியது, இன்றும் நடை பெறும் நிகழ்வுகள்தானே?

காமக்கனி பசலையார் எழுதிய ஒரே ஒரு பாடலில் ஆடவர், பொருள் தேட என்று நீண்ட நாட்கள் மனைவியை பிரிவதும், அதற்காக பசலை கொண்டு மனைவி பல நாட்கள் மருகுவதும், இளமைக் காலத்தில் சந்தோஷம் கொள்ளாமல் பொருள் சேகரித்தலில் முக்கியத்துவம் கொண்ட ஆண் மகனை உளம் நொந்து சாடும் இவரது பாடல் இன்றும் பொருந்தும்தானே? அயல் நாட்டில் பொருளீட்ட என்று போகும் பல ஆண்கள், பெயரளவிற்கு திருமணம் முடித்து, பின் பெண்ணைத் தனித்து விட்டுச் செல்லும் நிலையை இன்று நகர, கிராமப் பெண்கள் பலரும் அனுபவிக்கின்றனர். பணம் மட்டும் வாழ்வாகாது என்று இருவரும் உணராத வரையில் இல்வாழ்க்கை சிறப்பாக எப்படி அமைய முடியும்? இளமை கழிந்து பின் கூடி வாழ்ந்து என்ன பயன்? இன்றைய நாட்களில் கப்பலில் வேலை செய்யும் கணவனைக் கொண்ட, வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனைக் கொண்ட பல பெண்கள் குடும்ப பாரம் முழுவதும் ஏற்று நடத்திக் களைத்துப் போவதை நாமும் பார்க்கிறோம்தானே…

தொடரும்

krishangini

 

Amrutha

Related post