வேறு வழி | கார்த்திக் கிருபாகரன்

 வேறு வழி | கார்த்திக் கிருபாகரன்

குறுகிப்போன பெரு நகர சாலைகளில் கொஞ்சம் கூட இடம் விடாமல் போட்டி போட்டு நகர்ந்தன வாகனங்கள். அதுவும் காலை ஏழரை மணிக்கே. ஒருபக்கம் சார சாரயாய் வட நாட்டு மக்கள் கூட்டம் அகதிகளை போல மூட்டை மூடுச்சுகளை சுமந்தவண்ணமாக ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தனர். வெளியே உள்ள பேருந்து நிழற்குடையில் வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என பலரும் நின்றபடி இருக்க, வேலைக்கு செல்வதற்காக காந்தியும் காத்திருந்தான். பனியன் கம்பெனியில் இயந்திர பணியாளர் வேலை. தினகூலி.

பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து வந்தது. ஆனால், ஏற்கெனவே கூட்டத்தில் வழிந்தபடி வரும் பேருந்துக்குள் முந்தியடித்து ஏறுவதற்குள் பாதி உயிர் போய்விடும். அப்படி ஏற முடியாமல் முதல் பேருந்தை காந்தி தவறவிட்டான். அடுத்த பேருந்தை கட்டாயம் பிடித்தால் தான் 8.30 மணிக்குள் கம்பெனிக்கு போய்விட முடியும். 8.30 மணிக்குள் சென்றால் தான், காத்திருந்து வருகை பதிவு இயந்திரத்தில் ரேகை வைத்துவிட்டு, உள்ளே இயந்திரத்தை துடைத்து, சரிபார்த்து, தேவையான எல்லா பொருள்களை எடுத்து வைத்து, 9 மணிக்கு வேலையை தொடங்க முடியும். இரவு 9 மணிக்கு வேலையை முடித்த பிறகு இயந்திரத்தை அணைத்து, பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, 9.15 மணிக்கு வெளியே வந்து, மீண்டும் வரிசையில் காத்திருந்து, வருகை பதிவு இயந்திரத்தில் ரேகை வைத்து, நிறுவனத்தை விட்டு வெளியே வரும்போது 9.30 மணிக்கு மேல் ஆகியிருக்கும். பேருந்தை பிடித்து வீடு வந்து சேரும்போது 10.30.

தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்து கிளம்பினால் தான் 7.45 மணிக்கு பேருந்தை பிடித்து கம்பெனிக்குள் 8.30க்குள் நுழைய முடியும். மனைவி குழந்தைகளோட இரண்டு வார்த்தை பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பார்க்கவோ, அக்கம்பக்கம் வீட்டு மனிதர்களை எட்டிப் பாக்கவோ, சொந்த பந்தங்களை சந்திக்கவோ, மிச்சம் இருக்கின்ற அந்த ஏழு மணி நேரத்துலதான் கழிக்கனும். இல்லையென்றால் விடுமுறை நாளில் தான் இவையெல்லாம்.

மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரம். இயந்திரத்தை ஓட்டி உற்பத்தி டன் அளவு வைத்துதான் தின சம்பளம் நிர்ணயிக்கபடும்.
கம்பெனி வேலை நேரத்தில் செல்போன் உபயோகிக்க தடை உண்டு.

பலரும் மனதில் வெறுப்புடன், குடும்ப சூழல் மற்றும் வருமானத்திற்காக மட்டுமே இப்படி இறுக்கமான சட்டதிட்டம் உள்ள கம்பெனியில் வேலை செய்கின்றனர்கள்.

 

காந்தியின் அலைபேசி அழைப்பு மணி ஒலித்தது. எடுத்து பார்த்த போது பீமன் அழைப்பு விடுத்து கொண்டிருந்தான். சற்றே எரிச்சல் உண்டானது.
திருப்பூரில் உள்ள பல நிறுவன தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலத்தவர்களுக்கு வேலை தருவதை கண்டித்தும் சம்பள உயர்வுக்காகவும் வேலை நேரத்தை குறைக்கவும் வலியுறுத்தி அவினாசி சாலை திடலில் போராட்டம். அதில் பீமனும் கலந்துள்ளான். காந்திக்கும் அழைப்பு விடுத்துள்ளான்.

“நாமல எப்படா வேலைய விட்டு தூக்கலான்னு காத்திருக்காங்க. அதனால போராட்டத்துக்கு நான் வரல, நீயும் போகாதீங்க” என்று பீமனை எச்சரித்து, போராட்டத்திற்கும் போகாமலே இருந்துவிட்டான்.

அரசாங்கம், 12 மணி நேர வேலைக்கு சட்டம் கொண்டு வர துடிக்கிறது. ஆனால், திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல நிறுவனங்களில் இப்போதே 12 மணி நேர வேலை நேரம் தான் இருக்கிறது. கண்டித்து பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. மக்கள் ஜப்பான் நாட்டை போல 12 மணி நேர வேலை செய்து பழகி கொண்டதுதான் மிச்சம்.

தூரத்தில் மெல்ல அசைந்தபடி ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதிலும் கூட்டம் தான். ஆனாலும், சட்டென்று ஏறுவதற்கு தயராக மக்கள் தயாராகினர். பேருந்து நின்றவுடன் அடித்து பிடித்து உள்ளே சென்று நின்றான். பேருந்தில் இருக்கும் கூட்டத்திற்கு வண்டி குடை சாய்வது போலவே இருந்தது.

“கியா பாய்! இப்புடி மூட்டையோட ஏறினா! நாங்க எப்புடி நிக்குறது?” என்று காய்கறி மூட்டையுடன் ஏறிய ஒருவரை தட்டு தடுமாறி தமிழில் சொல்லி திட்டினான் வடக்கன் ஒருவன்.

“புழைக்க வந்த நாயி? மூட்டைக்கும் சேர்த்து தான் டிக்கெட் எடுப்பேன். உனக்கு இடுச்சா நடந்து வாடா” என்று அவர் பதிலுக்கு சொல்ல, வாய் சண்டை உருவானது. நடத்துநர் சமாதானபடுத்த, வண்டி ஊர்ந்தபடியே நகர்ந்தது. பேருந்தில் கால்வாசி பேர் வடக்கன்களாக தான் இருந்தார்கள். காற்று கூட செல்ல முடியாத நெருக்கம். ஜன்னல் வழி வீசிய காற்றில் பீடா வாடையும் சேர்ந்தே வந்தது.

அரை மணி நேரம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு வழியாக கம்பெனி வந்து சேர்ந்தான் காந்தி. கம்பெனி நுழைவுவாயில் பல வட நாட்டு ஆட்கள் வேலை கேட்டு நின்றுகொண்டிருந்தார்ர்கள். அவர்களை கவனித்தபடியே வந்தான்.

கடந்த சில ஆண்டுகளில் பல கம்பெனிகளில் வடநாட்டு ஆட்களை வேலைக்கு அமர்த்துவது வழக்கமாகிவிட்டது. பத்திற்கும் அதிகமான ஆட்களைக் கூட ஒரு சிறு அறையில் தங்க வைத்து, எப்பவாவது அரிசி சோறு, தினமும் மூன்று வேளை சப்பாத்தியும் வேக வைத்த பருப்பும் உணவாக கொடுத்தால் போதும், வேலை நேரம் 12 மணி நேரம் என்றாலும், அதற்கு மேல் என்றாலும் துளியும் அசராமல் பணி செய்கிறார்கள்.

வருகை பதிவு இயந்திரத்தில் ரேகை வைக்க வரிசைக்கு சென்ற காந்தி, அங்கே பீமனும் வரிசையில் நின்று கொண்டிருப்பதை கவனித்தான்.

“பீமா! போன் பண்ணியிருந்த, நான் பஸ்ல கூட்டத்துல இருக்கவும் எடுக்க முடியல” என்று காந்தி சமாளித்தான்.

“ஹீம்…..” என்றபடி தலையாட்டினான் பீமன்.

ரேகை வைத்து விட்டு, நிறுவன உடை மாற்றும் அறைக்கு வந்தார்கள்.
பீமனின் மௌனம் காந்திக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

“பீமா….! ஏன்டா, அமைதியா இருக்க? போராட்டத்துக்கு போகல?” என்றான் காந்தி.

“நீ ஏன் வரல?” என்று திரும்ப கேட்டான் பீமன்.

“அது போராட்டத்துக்கு வந்தா சம்பளம் இல்ல. இரண்டு நாள் சம்பளம் இல்லன்னா நம்ம பாடு திண்டாட்டம் தானே! அதான் வரல” என்றான் காந்தி.

“அதே தான் எனக்கும். யாரோட ஒத்துழைப்பும் இல்ல. யாரும் வரல. வெறும் ஐம்பது பேர், நூறு பேரை வச்சுகிட்டு என்ன சாதிக்க முடியும்? இரண்டு நாள் கூட சமாளிக்க முடியலை. அதான் போராட்டத்தை விட்டு வேலைக்கு வந்துட்டேன். நான் மட்டும் இல்ல, போராட்டத்துல கலந்துகிட்ட நம்ம கம்பெனி சங்கர், தயா எல்லாரும் வேலைக்கு திரும்ப வந்துட்டோம்” என்றான் பீமன்.

சட்டென்று நேரத்தை கவனித்த காந்தி, “சரி மதியம் பேசலாம். நான் கிளம்புறேன்” என்றபடி உள்ளே புரொடக்‌ஷன் வேலைக்கு சென்றான்.

“ஹீம்…. 24 மணி நேரமும் வேலை செய்யனும்னு கம்பெனி சொன்ன கூட, ‘சரின்னு’ செய்வான் போல. இவங்களுக்கும் சேர்த்துதான் போராட்டுறோம். கலந்துக்க வரலன்னாலும், உதவி செய்யவோ அனுதாப படவோ தோனுதா? என்ன ஜென்மமோ!” என நினைத்தபடி பீமனும் புரொடக்‌ஷன் பகுதிக்கு வந்த போது, அவன் வேலை செய்யும் பகுதியில் வேறு ஒருவன் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

அவனை பார்த்து அதிர்ச்சியான பீமன்.

உள்ளே வந்து பீமனை கவனித்த பிளான்ட் சூப்பர்வைசர் நிசார், “பீமா…. என்ன இந்த பக்கம்? நீ இங்க வந்தா! உனக்கு பாக்கி பணத்தை குடுத்து செட்டில் பண்ணி, இனி வேலைக்கு வர வேணாம்னு மேனேஜர் சொல்ல சொன்னாரு” என்றார்.

“சார்… சார்… ஏன் சார்?” என பீமன் கெஞ்ச, போராட்டத்திற்கு போன மற்ற ஆட்களும் வந்து நின்று கெஞ்சினார்கள்.

“நீங்கதான் கோஷ்டி சேர்த்து போராட்டமெல்லாம் பண்ணுறீங்க. அதான் போராட்டத்துக்கு போன 30 பேரையும் வேலைய விட்டு தூக்கிட்டாங்க” என்று சொல்லியபடி சென்றார் நிசார்.

30 பேரும் ஆங்காங்கு செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். பீமன் வேலை போய்விட்டதை நினைத்து கலங்கியபடி, காந்தியையும் மற்றவர்களையும் பார்த்தான். காந்தி யாரையும் கவனிக்காமல், என்ன நடக்கிறது என்று கூட பொருட்படுத்தாமல் வேலை பார்த்தான். புதிதாக வேலைக்கு வந்த வடநாட்டுகாரர்கள் பம்பரம் போல வேகமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“இப்படி எது நடந்தாலும் கண்டுகாம இருக்கீங்களே!, நாளை உங்களுக்கும் இப்படி நடக்கும் போதுதான் வேதனை புரியும்” என்று பீமன் நினைத்து கொண்டு இருந்தான்.

“வெளிய போங்க, இங்க நிக்காதீங்க..” என்று நிசார் விரட்ட,
எல்லோரும் மேனேஜரை பார்க்க ஓடினார்கள்.

கூட்டம் வெளியே சென்றவுடன், “இன்னும் யாரும் போராட்டம், அது இதுன்னு போக விருப்பம் இருந்தா! அப்புடியே போலாம். நீங்க இல்லன்னா, வேலை ஒன்னும் நின்னு போகாது. 24 மணி நேரம் கூட வேலை செய்ய ஆள் இருக்கு” என்று எச்சரித்தபடியே நிசார் சென்றார்.

இயந்திரத்தை ஓட்டியபடி, ஓரக்கண்ணால் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “போராட்டம் பண்ணி, அரசாங்கத்தையோ கம்பெனிகாரனையோ ஜெயிச்ச வரலாறு எங்க இருக்கு? அப்படியே போனாலும் நீதி கிடைக்காது. சோத்துக்கு வேறு வழி? பேசாம நம்ம வேலைய பார்ப்போம்” என்று சலித்தபடி, எதுவும் நடக்காதது போல வேலையை பார்த்தான் காந்தி.

கார்த்திக் கிருபாகரன் <srinikarthi10693@gmail.com>

Karthik Kirubakaran

Amrutha

Related post