தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் | க்ருஷாங்கினி | 1

 தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் | க்ருஷாங்கினி | 1

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் குறித்த ஓர் அலசல்

1

எழுத்தில் ஆண் பெண் பேதம் உண்டா?

ஓவியம்: கிஷோர் ஷிகரே

 

ழுத்தில், ஆண்- பெண் பேதம் உண்டா? உண்டென்றால் எவ்விதம்? உணர்வுகள் அனைவருக்கும் பொதுதானே, நவரசம்தானே; அதில் மாறுபாடு எப்படி? பெண்ணியம், பெண் பார்வை போன்றவை பெண்ணால் மட்டுமே எழுத முடிந்த ஒன்றா? படைப்பாளியின் பெயர் நீக்கிவிட்டால், அதைப் பால் சார்ந்து பார்க்க இயலுமா?

எல்லாக் கேள்விகளுக்கும் ஆம் என்றும், இல்லை என்றும் ஒரு சேர பதில் தரவேண்டிய நிலையில் தான் நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.

உணர்வுகள் அனைவருக்கும் பொது. என்றாலும் கூட எந்த உணர்ச்சியால் எந்த உந்துதல் ஏற்படுகிறது? உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தும் திடமும் புரிதலும் கொண்டவளாகப் பெண் இருக்கிறாளா? இருக்க முடிகிறதா?

எல்லாத் துறைகளும் போலவே எழுத்திலும் பெண் தனது மன உணர்வுகளை வெளியிட ஆரம்பித்து பல காலம் ஆயிற்று. ஆனால், எண்ணிக்கையின் அடிப்படையிலும் அதை எடுத்து வெளிச்சத்திற்குக் கொண்டு சேர்ப்பதிலும் எப்போதுமே குறைவாகத்தான் உள்ளனர். வேதகாலம், சங்க காலம் தொட்டு நூற்றுக்கணக்கான ஆண் கவிஞர்களின் மத்தியில் ஒரு சில பெண்களைத்தான் காண முடிகிறது. அதிலும், உணர்ச்சிகளின் வெளிப்பாடு யார் சார்ந்து, யாரின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்று பார்த்தால், ஆணின் நிழலாகத்தான் பெண் என்பதே புரிய வருகிறது.

ஒரு ஆணின் வாழ்க்கையில் அரசியல், கலை, கல்வி, சொந்தம், உறவு, புற வாழ்க்கை என்று எதுவுமே திருமணத்தினால் அழிந்துபட்டது என்றோ, மாறுபட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஒரு பெண் குழந்தையாய்ப் பிறந்ததும் அவள் மண வாழ்க்கையை நோக்கியே அவள் சார்ந்தவர்களின் பார்வை வகுக்கப்படுகிறது. திருமணம், எதிர்காலம் என்பது கருத்தில் கொள்ளப்பட்டே கல்வி, உடை ஆரம்பித்து எல்லாவற்றையும் அவளுக்கு அளிக்கின்றனர், பெற்றோர். திருமணத்தை நடத்தியதும் அப்பெண்ணாகிய சட்டி கணவனைச் சுடட்டும் என்பதான நீண்ட பெருமூச்சுடன் நிகழ்த்தப்படுகிற பந்தங்கள் தான் பெண்ணின் நிரந்தர சொந்தம் என்று உருவேற்றப்படுகிறது. எனவே, அவளின் வாழ்க்கை எப்பொதுமே நிழலில் வளரும் செடியாக, சோகையாக வெளிறியுள்ளது.

எந்த ஆணுக்காவது திருமண வாழ்க்கையால் கலை ஸ்தம்பித்துப் போனதா என்று உதாரணங்கள் தேடினால் கிடைக்காது. “எனது இயலபு வாழ்க்கை கெடாமல் எனது குடும்பப் பொறுப்பை என் மனைவி மிக நேர்த்தியாக கவனிக்கிறாள். எனது குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பது கூட நான் அறியேன்” என்று ஆண் உரக்க சொல்லிக்கொள்வதை பார்க்க முடியும். ஆனால், எல்லாப் பெண்களுக்கும் பிடுங்கி நடும் மறு வாழ்வாகத்தான் திருமண வாழ்க்கை ஆகிறது. அவள் எழுத்து தொடர்வதும் தடைபடுவதும் ஆணின் கைகளில்தான் உள்ளது. எனவே, பெண்ணிடமிருந்து வரு, எந்தக் கலையையும் இரண்டாக பிரிக்க வேண்டியுள்ளது. திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின்…

நமது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் மிகக் குறைவே. அதிலும் பெண்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருப்பது இன்னமும் குறைவு. அவர்களின் பாடம் தொடர்புபடாமல் கதை, கவிதை என்று தேடிப் படிப்பதும் அவற்றில் தானும் பங்கு பெறுவதும், ஒரு படைப்பாளியாவதும் மிக மிகக் குறைவான சதவீதம்தான். அந்த ஒருசில பெண்களுக்கும் முன்னோடியாக எதிர்வரிசையில் வழிகாட்டுபவர்கள் ஆண்களே. அவர்களது சிந்தனை, அவர்களின் நடை, அவர்களது தளமென்பதாகத்தான் பல பெண்கள் பின் தொடர்கின்றனர்.

ஒரு ஆணின் எழுத்து புற உலகைச் சார்ந்ததாகவே உள்ளது. அதை அவர்களின் அறிவின் விலாசமாக தெரிவிக்கவும் அங்கீகரிக்கவும் முற்படும் மக்கள், ஒரு பெண்ணின் எழுத்தை அவள் அகம் சார்ந்ததாகவே பார்க்கிறார்கள். எனவே, தான் ஒளிவு மறைவின்றி எழுத பெண்ணின் பேனா மிகவும் யோசிக்கிறது. உடலுறவு, அரசியல், பொருளாதாரம், உலகமயமாக்கல், இசங்கள் என அனைத்தும் ஆண் சார்ந்ததாகவும், பிரசவ வலி, தீட்டு, வரதட்சணைக் கொடுமை, தனிமை போன்றவை பெண் சார்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, ஒரு பெண் சுய அனுபவம் சார்ந்ததாகவே எழுதத் தூண்டப்படுகிறாள்.

ஒரு ஆணின் எழுத்தில் பலதார மணத்தைக் காண நேர்ந்த சமுதாயம், அது அவனது பரந்துபட்ட அனுபவத்தைச் சொல்வதாகவும் அவனின் கூடுவிட்டுக் கூடு பாயும் சான்றுக்கு உதாரணமாகவும் கொள்கிறது. ஆனால், ஒரு பெண் நேரடியான பாலுறவு பற்றி எழுதும் போது அது அவளின் வெட்கங்கெட்ட பல ஆண்களின் சவகாசம் என்பதாக உரத்துச் சொல்லப்படுகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் எழுத்தாளர் தனது வாழ்க்கையில் எழுத்துக்காக துறந்தவை அதிகம், இழப்புகள் அதிகம். சமுதாயம் அவளின் ’கற்பிழப்பாக’ அதை வெளியிட்டு அவளின் நடத்தையைப் பரிகசித்தது. அது எழுத வரும் பெண்களுக்கு இன்னமும் ஒரு முத்திரையாக குத்தப்படுகிறது.

‘அஸ்மிதா’ என்ற அமைப்பில் தமிழ் சார்பாக நான் கலந்துகொண்டேன். அதில் இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலிருந்தும் எழுத்தாளர்களின் சந்திப்பில் முதன்மையாக எடுத்துக்கொள்ளப்பட்டது ‘தணிக்கை மற்றும் பெண் எழுத்து’ என்பதாகும். அங்கு பல பெண்களின் எழுத்துகளை எடுத்துக்கொண்டு அது சார்ந்து வாதம் முன்வைக்கப்பட்டபோது, பெண் மனத்தளவில் தணிக்கை செய்தே படைக்கிறாள் என்று கூறப்பட்டது. அது ஓரளவிற்கு.

பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதை. ஒரு சிறுபான்மை சமுதாயம் சார்ந்த பெண் எழுதியது. அது அப்போது அங்கீகரிக்கப்பட்டது. பாராட்டவும் பட்டது. ஆனால், பின்னாட்களில் நாட்டு நடப்பைக் கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்டது. ஒரு எழுத்து எப்படி ஒலிக்க வேண்டுமென்பதை ஆண் தீர்மானிக்கிறான். மறுபிரசுரம் செய்யும் போது, மதத்திற்கு கட்டுப்பட்டு அதில் சில வரிகள் நீக்கப்படல் வேண்டும் என அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இதுபோல், வெகுஜன இதழ்களில் கவிதை வரும் போது அதை அவர்கள் தணிக்கை செய்தே வெளியிடுகின்றனர். மதம் என்பது பெண்ணின் எழுத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாக ஆகிறது.

பெண்களின் எழுத்து பெண் விடுதலை சார்ந்ததாகவே இருக்கப் படல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தீர்மானமும் 20 ஆண்டுகளுக்கு முன் பெண் எழுத்தின் முன்னால் வைக்கப்பட்டது. தற்காலத்தில் பெண் தனது அந்தரங்கம் பற்றி வெளிப்படுத்துவதில்லை, ஆண் – பெண் உறவு சார்ந்து தன் அனுபவத்தை முன்வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு. இது போன்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு உரிமையாக வழங்கியவர் யார்? இதுபோன்ற குற்றச்சாட்டுகளாலும் எதிர்பார்ப்புகளாலும் கடுமையான விமர்சனங்களாலும் பெண் எழுத்து தொடர்வதில் பாதிப்பு உண்டாகிறது. இவை அனைத்துமே பிராந்திய மொழிகளில் எழுதும் போது அதிகம் நிகழ்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் பெண்களுக்கு அங்கீகாரம் பரவலாக கிடைக்கிறது, கூடுதல் சுதந்திரமும் கிடைக்கிறது.

தலித் பெண்களின் படைப்புகளும் பரிசோதனை முயற்சிகளும் மராட்டியிலும் மலையாளத்திலும் சீக்கிரம் அங்கீகாரம் பெறுகிறது. பெரும்பான்மையான பத்திரிகைகளில் இடமும் பெறுகின்றன. எனவே, அவர்கள் கடந்து சென்ற தொலைவு மற்றவர்களை விடவும் அதிகம்தான்.

தமிழில் மற்றொரு சிக்கலும் கவிதைக்கு உண்டு. கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் இடையிலான பிரிவு இன்னமும் பலரால் அறியப்படாததாகவே உள்ளது. இதனால், சினிமா பாடல்கள் கவிதை என அடையாளம் காணப்படுகின்றன. சமீபத்தில் கர்நாடகாவைச் சார்ந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அங்கு பாடலாசிரியர்களை கவிஞர்களுக்கு இணையாக்குவதில்லை. தமிழில் தான் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர்.

மலையாளக் கவிஞர் ஓ.வி. உஷா உடனான உரையாடலின் போது அறிந்துகொண்டது இது. ஓ.வி. உஷாவின் கவிதை ஒரு சினிமா இயக்குநருக்குப் பிடித்ததாக இருந்ததனால் தான் எடுக்கும் படத்தில் உபயோகிக்கலாம் என்ற எண்ணம் கொண்டு ஓ.வி. உஷாவை அணுகி கவிதைக்கு அனுமதி பெற்றிருக்கின்றனர். அதை மெட்டமைத்துப் பாடலாக்கி படத்தில் உபயோகித்தும் உள்ளனர். அது பெரும் வெற்றியைப் பெற்றது. தேசீய விருதையும் பெற்றது. ஓ.வி. உஷா கவிதைகள் அங்கு பாடவும் படுகின்றன. ஆனால், தமிழில் தான் 10 பல்லவிகளையும், இருபது சரணங்களையும், ஒரு மூட்டை எக்ஸ்ட்ரா சொற்களையும் கட்டிக்கொண்டு, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கட்டளைக்கு இணங்கி பாடல் அமைத்து பாடாலாசிரியர்கள் ஆகின்றனர். அவர்களுக்கு புகழ், பெயர், பணம், விருது என கவிஞரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுகிறது.

இதையெல்லாம் இந்தத் தொடரில் பேச இருக்கிறேன்.

வேதகாலத்தில் இருந்து தொடங்கலாம்…

 

லக்கியமானவை கதை, கவிதை என பிற்காலத்தில் விரித்து எழுதப்பட்டாலும் உரை நடைஇல்லாத ஆதி காலத்தில் அனைவரின் படைப்பும் கவிதை நடையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மனதில் நிற்கும் வண்ணம் பாடல்களாக (கவிதைகளாக) அமையப்பெற்று, அவற்றை ஒரு இசைக்குள்ளும் தாளத்திற்குள்ளும் அடக்கிப் பாடிப் பரப்புவதாக இருந்த காலம்.

அக்காலத்தில் பெண்கள் சம உரிமை பெற்று ஆண்களுக்கு நிகராக விளங்கினர் என்று வரலாறு கூறுகிறது. பெண்ணானவள் கல்வி, நுண்கலை, வேதப் பயிற்சி, போர்க்கலை, விஞ்ஞானம் என்று பல துறைகளிலும் பங்கெடுத்துள்ளாள். பெண்ணின் திருமணத்திற்கான முக்கியத் தகுதிகளில் ஒன்றாகக் கல்வியும் கூறப்பட்டுள்ளது. திருமணம் மறுத்துத் தனித்து வாழும் சுதந்திரமும் வேதகாலத்தில் பெண்களுக்கு இருந்ததாக கண்டறியப்படுகிறது. ‘சுபலா’, ‘ஸ்துருதவதி’ என்ற வேதகாலப் பெண்கள் திருமணம் மறுத்து, ஆன்மீகத்தில் ஈடுபட்டு வாழ்வைக் கழித்ததாக அதர்வண வேதத்தில் குறிப்பு கிடைக்கிறது.

கணவன் வேள்வி செய்யும்போது பிழைசெய்தால், உடனிருக்கும் மனைவி சுட்டிக்காட்டித் திருத்தும் அளவுக்கு கல்வியில் பயிற்சி பெற்றிருந்தனர் வேதகாலப் பெண்கள் என திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார்.

வேதகாலத்தில், ஆணுக்கு நிகராக, தம் வாழ்நாள் முழுவதும் சமயம், தத்துவம், கல்வியைத் தெர்ந்தெடுத்துப் பயின்ற பெண்கள் ‘பிரம்ம வாதினிகள்’ என அழைக்கப்பட்டனர். திருமணம் வரை மட்டுமே கல்வி கற்கும் பெண்களை மற்றொரு வகையாகக் காணமுடிகிறது. கணவனுக்குப் போரில் தேரோட்டியது, அரசனுடன் போர்க்களம் சென்று போரிட்டது போன்ற செய்திகளும் காணக் கிடைக்கின்றன.

வேதகாலப் பெண்பாற் புலவர்களின் பாடுபொருளாக அவர்களின் சொந்தப் பிரச்சினைகள் பல கவிதைகளில் கையாளப்படுகின்றன. தனக்கு உண்டான நோயின் காரணத்தால், கணவன் தன்னைப் பிரிந்த துயரத்தில், தனது குறை தீர்க்க பாடும் பாடலாக ஒரு கவிதை அமைந்துள்ளது. ஆனால், அதில் விளையாத, பொய்த்துப்போன நிலத்தின் உற்பத்தியைப் பற்றியும் செய்தி வருகிறது.

மனித மனம் நிகழ்வு சார்ந்ததாகும். நிகழ்வுகள் சமுதாயக் காலசுழலுக்கு ஏற்றதாகத்தான் அமையும். ஒரு படைப்பென்பது, தான் கண்ட அல்லது அனுபவித்த அல்லது பிறரால் உணரப்பட்ட என, ஏதாவது ஒரு பாதிப்பின் அடிப்படையில்தான் எழும்.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு; பெண் அதில் ஒரு அங்கம். எனவே, பெண் அல்லது ஆண் யாராகிலும் சமுதாயம் பற்றிய அக்கறையற்று எந்நேரமும் இருக்க இயலாது. எப்போதும் ஒரே மாதிரியான அக்கறையுடன் தான் செயல்படுகிறேன் எனவும், தனது எண்ணம் எப்போதும் சமுதாயம் சார்ந்தது என்றும், படைப்பாளி உரத்துக் கூறிக் கொள்வதும் இயலாது.

மற்றொரு வேத காலத்து பெண்பால் புலவரும் தன் நோய் காரணமாக முதிர் கன்னியாக நிற்கும் தனது வேதனையை வெளிப்படுத்துவதற்கான கவிதையைப் படைத்துள்ளார். பக்தியின் மூலம் தேவர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் இவர், ஒவ்வொரு கவிதையிலும் தேவர்களால் குறைகள் நீக்கப்பட்டு நல் வாழ்வு அடைந்த மானுடர்களை உதாரணமாக்கி, அவற்றின் மூலம் தான் அடைந்திருக்கும் வேதனையையும் தனது நோயையும் தேவையையும் நீக்கிப் பூர்த்தி செய்யுமாறு பணிக்கிறார். நோய், நோய் சார்ந்த அவமானங்கள், சமுதாயப் பார்வை, மனச்சோர்வுகள் ஆகியவற்றுடன் தனது உடல் தேவைகளையும் இணைத்துக் குறிப்பிடுகிறார்.

சசுவதி என்ற மற்றொரு பெண் கவி தன் கணவன் நோய் தீர்க்க இறைவனை வேண்டி நின்று கவிதைகள் படைத்துள்ளார்.

மற்றொரு பெண் கவி, முனிவர் மனைவி. அவர், தனது கணவர் இல்லற நெறியைத் துறந்து எப்போதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதால் தனது இளமை முழுவதும் பாழ்பட்டுப் போனதைக் கவிதைக்கான கருப்பொருளாக ஆக்குகிறாள். பாடலின் பொருள் உணர்ந்த முனிவர், தன் காமம் திறக்கிறார் என அவரின் பதிலான பாடலும் பதிவாகி உள்ளது.

தாம்பத்திய உறவுக்கு அழைக்கும் பெண் கவியின் கணவன், அவளது உடல் இன்னமும் பூரண வளர்ச்சி அடையாததால், தனக்கு ஈடு தர இயலவில்லை; எனவே, ‘நான் உன்னிடமிருந்து ஒதுங்குகிறேன்’ என்று கூறிய பாடலுக்கு பதிலாக தன் உடல் வளர்ச்சியின் பூரணத்துவத்தைப் பற்றிக் கூறுகிறாள் மற்றொரு கவி.

பல மனைவிகள் உள்ள கணவன் தன்னிடம் முழு அன்பு செலுத்துவதில்லை என்பதால், அது பற்றி ஆண்டவனிடம் முறையிட்டு தனக்கு சக்களத்திகளே இல்லாமல்போகும் படி வேண்டுகின்றனர் சிலர். இதில் இந்திராணி ஒருத்தி தன் கணவனை வசப்படுத்தும் மூலிகைகளைத் தேடியும் அலைகிறாள். இவைகளும் கவிதைகளில் பதிவாகி உள்ளன.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் தேவி ஸூக்தம், வாக்தேவி என்ற பெண் கவிஞரால் இயற்றப்பட்டது. ஸூக்தம் என்பது ஒரு பொருளைப் பற்றிய பல கவிதைகள்.

இப்படி, முதிர்கன்னியின் உணர்வு, புதுமணப் பெண், அன்பு நிறைந்த மனைவி, பொறாமை பிடித்த மனைவி, கணவனால் நோய் காரணமாகக் கைவிடப்பட்டவள், புலன் இன்பம் அதிகம் நாடிய பெண், சகோதரனை விரும்பிய பெண், நிறைவு பெற்ற வாழ்க்கை வாழ்ந்தவள், ஆன்மீகம் நாடிய பெண்கள் என பலதரப்பட்ட பெண் கவிஞர்கள் வேதகாலத்தில் காணக் கிடைக்கின்றனர்.

தொடரும்

krishangini

Related post