மூன்று குறுங்கதைகள் | சுரேஷ்குமார இந்திரஜித்
ஓவியம்: ரம்யா சதாசிவம்
1
கண்ணாடியைத் துடைக்கும் பையன்
அழைப்பின் பேரில் பீச் ரிசார்ட்டில் நடக்கும் விருந்துக்கு சந்திரமோகன் சென்றிருந்தான். உறவினர் வீட்டு விசேஷம். பீச்சில் இளவயதினரும் குழந்தைகளும் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவன் பீச் மணலில் சேரில் உட்கார்ந்திருந்தான். சற்றுத் தள்ளி இருந்த, நாலாபுறமும் திறந்திருந்த குடில்களில் இளம் தம்பதிகள் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்.
சந்திரமோகன் கடல் அலைகளில் கால்களை நனைக்கச் செல்லவில்லை. அவனுக்குக் கடல் மகிழ்ச்சியைத் தருவதில்லை. கடலின் பிரமாண்டமும் அடங்காத தன்மையும் அவனுக்கு அச்சத்தைத் தான் தருகிறது. சிறுவர், சிறுமிகள் கடல் அலைகளை ஒட்டி கூக்குரலிட்டு ஓடி விளையாடுவது, கால்களை நனைப்பது ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கென்றே சில ஊழியர்களை ரிசார்ட்டில் அமர்த்தியிருந்தார்கள். அவர்கள் ரோந்துப் பணியில் இருந்தார்கள். இப்போது அந்தி நேரம்.
வானமும் கடலும் சந்திக்கும் கோட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில் நிலா இருப்பது போல சேரில் உட்கார்ந்திருக்கும் அவனுக்குத் தோன்றியது. மிக அழகான காட்சி. நிலா செந்நிறத்தில் இருந்தது. நிலா வானத்திலிருந்து இறங்கி கடலுக்குள் மறைய இன்னும் நேரமிருந்தது. அந்தி இருள் கவிய ஆரம்பித்தது. அவனுக்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் போல இருந்தது. எழுந்து சென்றான்.
தூய்மையும் அழகும் நிறைந்த கட்டிட அமைப்பு. ரெஸ்ட் ரூமுக்குள் சென்றான். அங்கு ஒரு இளவயதுப் பையன் கையில் இருந்த துண்டுத் துணியால் கை கழுவும் இடத்தில் இருந்த நீண்ட கண்ணாடியைத் துடைத்துக்கொண்டிருந்தான். கண்ணாடியில் அழுக்கு இல்லை. ஆனால், ஆவி படியும் இடத்தைக் கண்டறிந்து துடைத்துக்கொண்டிருந்தான். அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி கொண்ட கட்டிட அமைப்பு. கதவைத் திறந்தவுடன் எதிரே சுவரில் அகலமான உயரமான கண்ணாடி இருக்கிறது. கை கழுவும் இடத்தில் உள்ள கண்ணாடியையும் சுவரில் உள்ள பெரிய கண்ணாடியையும் துடைக்கும் பொறுப்பு அவனுடையது.
அந்தப் பையன் சிவப்பாக இருந்தான். மீசை அரும்பியிருந்தது. சந்திரமோகனைப் பார்த்துச் சிரித்தான். சந்திரமோகன் அவனை வடநாட்டுக்காரன் என்று நினைத்தான். அவனிடம், “எந்த மாநிலம்” என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவன் பதிலுக்கு, “தமிழா” என்று கேட்டான். பிறகு அவனே தன்னை “மலையாளி” என்று சொன்னான்.
“இங்கே எவ்வளவு நேரம் வேலை பாக்கணும்” என்று சந்திரமோகன் கேட்டான்.
“காலையிலே ஒன்பதரை. நைட்டு பத்தரை மணி வரைக்கும்” என்றான்.
“எட்டு மணிநேரம் வேலை இல்லையா?”
“இல்லை, பதிமூணு மணிநேரம்.”
“உக்கார முடியாதா?”
அவன் சிரித்தான். “சாப்பிடும்போது உக்காரலாம். இங்கே உக்கார முடியாது.”
அவன் புன்னகைத்துவிட்டு ரெஸ்ட் ரூமை விட்டு வெளியேறினான். பையன் கண்ணாடியைத் துடைத்தான். கண்ணாடியில் ஆவி படிவதை அவன் ஒரு நிபுணனைப் போலக் கண்டறிந்து துடைத்துக்கொண்டிருந்தான். முடிவடையாத வேலை. அவனுடைய குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை அவனை இங்கே தள்ளியிருக்கலாம். வீட்டுடன் ஏற்பட்ட மோதலில் இங்கு வந்து சேர்ந்திருக்கலாம்.
சந்திரமோகன் பீச் மணலில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அந்தப் பையனின் வயதில் தான் பாதுகாப்பான சூழ்நிலையில் படித்துக்கொண்டிருந்ததை நினைத்தான். செந்நிற நிலா இறங்கிக்கொண்டிருந்தது.
பொழுது இருளாகிக்கொண்டிருந்தது. கண்காணிப்பு ஊழியர்கள் நீண்ட தொலைவு ஒளி அடிக்கும் டார்ச் லைட்டுடன் கரையிலிருந்தவர்களை வெளியேறச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சந்திரமோகன் கூட வந்திருந்து பீச் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்கள் சாப்பிடச் செல்வதற்காக எழுந்தார்கள். அவனும் எழுந்தான். ரெஸ்டாரண்ட் செல்லும் வழியில் ரெஸ்ட் ரூம் சென்றான்.
உள்ளே சுவரில் இருந்த அந்த அகலமான உயரமான கண்ணாடியைத் துண்டுத் துணியால் அந்தப் பையன் துடைத்துக்கொண்டிருந்தான். சந்திரமோகனைப் பார்த்து அவன் நட்பாகச் சிரித்தான். இவனும் சிரித்தான். சந்திரமோகன் அந்த ரெஸ்ட் ரூமை விட்டு வெளியேறினான். அந்தப் பையன் இரவு பத்தரை மணிக்குத்தான் அந்த ரெஸ்ட் ரூமை விட்டு வெளியேற முடியும். அவன் சாப்பிடும் இடத்திற்குச் சென்றான். அந்தப் பையன் எப்போதுமே முடிவடையாத தன்னுடைய துடைக்கும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தான்.
2
கண்டெய்னர் லாரி
பெரியவர் சுந்தரமும் இளைஞன் சேகரனும் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் விழுப்புரம் செல்ல வேண்டியிருந்தது. முகவரி இருந்தது. தேடி அந்த முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டும். தன்னுடைய தம்பி தணிகாசலத்தின் மகன் இருக்கும் இடத்தைத் தேடியே சேகரனை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார் சுந்தரம்.
சுந்தரத்திற்குத் திருமணமாகவில்லை. அவருக்கு ஒரே தம்பி. அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய துரதிருஷ்டம், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார். சுந்தரம் திருமணத்தை விரும்பவில்லை. உண்மையில் பெண்ணுடன் வாழ்வதை நினைக்கும்போது அவருக்குப் பயம்தான் ஏற்பட்டது. தன்னிடம் உடற்குறைபாடு இருக்கிறதோ என்ற எண்ணம் அவருக்கு அடிக்கடி ஏற்படும்.
குடியிருந்த வீட்டை விலைக்கு வாங்கிவிட்டார். அரசு மேல்நிலைப் பள்ளியில் பூகோளவியல் ஆசிரியராக இருந்தார். பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். சேகரன் அவருக்குத் தூரத்து உறவினன். சேகரனின் குடும்பம் சுமாரான பொருளாதார நிலையில் இருக்கிறது. சேகரனுக்குச் சரியான வேலை அமையவில்லை. சேகரனின் வீட்டிற்குச் சென்று காலையிலும் மதியமும் சாப்பிடுவார். இரவில் வெளியே சாப்பிட்டுக்கொள்வார். உடல்நலமில்லை என்றால் சேகரனும் அவன் குடும்பத்தினரும் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் வீட்டில் சாப்பிடுவதற்கு சுந்தரம் ஒரு தொகையைக் கொடுத்துவிடுவார். மருத்துவமனைக்குச் செல்லும்போது சேகரன் கூடச் செல்வான். உறுதுணையாக இருப்பான்.
சுந்தரத்திற்கு வயது எண்பதைத் தாண்டிவிட்டது. மூச்சுவிடச் சிரமப்படுகிறார். ‘எப்போதாவது மரணம் ஏற்படத்தான் செய்யும். இந்த வீட்டை என்ன செய்வது. வங்கியிலும் கணிசமான பணம் இருக்கிறது. அதை என்ன செய்வது’ என்றெல்லாம் அவர் யோசித்தபோது அவருடைய தம்பி மகனே சட்டப்படியான வாரிசு என்று நினைத்தார். அந்தச் சட்டப்படியான வாரிசை எப்போதோ அவர் பார்த்ததுதான். பல ஆண்டுகளாகத் தனக்கு உதவியாக இருக்கும் சேகரனுக்கு எழுதி வைக்கலாம். ஆனால், அவருக்கு மனம் ஒப்பவில்லை. இப்போது முகவரியைக் கண்டறிந்து அந்தத் தம்பி மகனைக் காண சேகரனை அழைத்துக்கொண்டு பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கிறார்.
ஊர் நெருங்கிக்கொண்டிருக்கும்போது அவருக்கு மனத்தில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. சட்டப்படியான வாரிசு என்பதைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லாத ஒருவனுக்குச் சொத்தைக் கொடுப்பதா என்று நினைத்தார்.
பஸ் சென்றுகொண்டிருந்தது. எதிரே ஒரு பெரிய கண்டெய்னர் லாரி திருப்பத்தில் திடீரெனத் தோன்றியது. இதை எதிர்பார்க்காத டிரைவர் பிரேக் போட்டார். பஸ் சத்தத்துடன் நின்றது. பஸ்ஸில் இருந்தவர்கள் இருக்கையிலிருந்து முன்னோக்கி விழுந்தார்கள். சுந்தரத்திற்கு என்ன நடந்தது என்று சில நொடிகளுக்குப் பின்தான் தெரிந்தது. அவர் முன்னே விழுந்துவிடாமல் சேகரன் பிடித்துக்கொண்டிருந்தான்.
பயணிகள் கீழே இறங்கி கண்டெய்னர் லாரி ஓட்டிவந்தவனிடம் சண்டைக்குச் சென்றார்கள். “ஹாரன் அடிக்க வேண்டாமா” என்று கேட்டார்கள். குழப்பங்கள் தீர்ந்து பஸ் மீண்டும் கிளம்பியது. சுந்தரத்திற்கு தனது சொத்தையும் பணத்தையும் தன் காலத்திற்குப் பின் சேகரனுக்குச் சேரும் என்று எழுதிப் பதிவு செய்திட வேண்டும் என்று தோன்றியது. நடந்த சம்பவத்தினால் நிலைகுலைந்திருந்த அவர், இருக்கையில் சாய்ந்து சௌகரியமாக உட்கார்ந்துகொண்டார்.
விழுப்புரம் பஸ் நிலையம் வந்தது. பயணிகள் இறங்கினார்கள். சுந்தரமும் சேகரனும் இறங்கினார்கள். முகவரி எழுதியிருந்த சீட்டை சேகரன் எடுத்து சுந்தரத்திடம் கொடுத்தான். அவர் அந்தச் சீட்டை வாங்கவில்லை. அவனையே வைத்திருக்கச் சொன்னார்.
“ஏதாவது சாப்பிட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் ஊருக்குத் திரும்பிவிடுவோம்” என்றார் சுந்தரம். “எதுக்குத் தாத்தா” என்றான் சேகரன். “நான் முடிவு செய்துவிட்டேன்” என்று சொல்லி சாப்பிடுவதற்காக ஹோட்டலை நோக்கி சேகரனையும் அழைத்துக்கொண்டு சென்றார்.
3
தாய், மகன், மகள்
ஜான்ஸி அத்தையிடமிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. பேசினேன். மகனும் மருமகளும் அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பதாகவும் உடனே வந்து அவளை பக்கத்து ஊரில் இருக்கும் மகள் வீட்டில் விட்டுவிட்டும்படியும் அத்தை கேட்டுக்கொண்டாள். நான் வருவதாகச் சொன்னேன்.
நான் இங்கிருந்து அவள் இருக்கும் இடத்திற்குக் காரில் செல்ல ஒருமணிநேரம் ஆகலாம். பிறகு பக்கத்து ஊரில் இருக்கும் அவளுடைய மகள் வீட்டிற்குக்கொண்டுசென்று விடவேண்டும். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. குடும்பப் பிரச்சினைகளில் என்னால் தலையிட முடியாது. நெருங்கிய உறவில் இல்லாமல் சற்று சுற்று உறவில் அவள் எனக்கு அத்தை. அவள் கிறிஸ்தவர். மாமா தெய்வசிகாமணி இந்து. இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்கள். திருமணம் செய்துகொண்டார்கள். இதெல்லாம் அந்தக் காலத்தில் நடந்தது.
என் அம்மா, நான் சிறுவனாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது என்னை ஜான்ஸி அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அழகான வீடு. இவ்வளவு அழகான வீட்டை உறவினர் எவரிடமும் நான் பார்த்ததில்லை. வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகளும் இருந்தன. கோழிகளும் சேவல்களும் மேய்ந்துகொண்டிருந்தன. வீடு புதிதாக வெள்ளையடித்தது போலிருந்தது. உள் அறைகள் வண்ணத்தில் இருந்தன. உட்கார்ந்திருக்கும் சோபாக்கள், நாற்காலிகள் எல்லாம் எனக்குப் புதியதாகத் தெரிந்தன. சிறு பொம்மைகள் அழகுக்காக வைக்கப்பட்டிருந்தன. ஜான்ஸி அத்தை வெங்காய பஜ்ஜி தயார்செய்து கொடுத்தாள். ருசியாக இருந்தது.
ஜான்ஸி அத்தையும் கைத்தறி புடவை அணிந்து அழகாகத் தோற்றம் தந்தாள். சுவரில் ஜீஸஸ் படம் மாட்டப்பட்டிருந்தது. மாமா சிரித்த முகத்துடன் இருந்தார். இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவம். இப்போது மாமா இறந்து, மகனுடன் வாழ்ந்த அத்தை அவனால் விரட்டப்பட்டுத் தெருவில் உட்கார்ந்திருக்கிறாள்.
நான் ஒரு டாக்ஸி அமர்த்தி அவள் சொன்ன இடத்திற்கு விரைந்தேன். மரத்தடியில் ஒரு பெட்டியுடன் அத்தை அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் மகனையும் மருமகளையும் திட்டினாள். மகள் இருக்கும் இடத்தைக் கேட்டேன். அந்த இடத்தை அடைய ஒன்றரை மணிநேரம் ஆகலாம். பின் இருக்கையில் அத்தையை அமரச் சொல்லி முன் இருக்கையில் நான் அமர்ந்துகொண்டேன். கார் சென்றுகொண்டிருந்தது. பழைய கதைகளையெல்லாம் இழுத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். நான் சரியாகக் கவனிக்கவில்லை.
பெட்டியைத் திறந்து, பிரேம் போட்ட கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை என்னிடம் கொடுத்தாள். மாமவுடன் அத்தையும் இருக்கும் மார்பளவு புகைப்படம். இருவரும் இளமையில் இருக்கும்போது எடுத்த அழகான புகைப்படம். நான் பார்த்துவிட்டு திரும்பக் கொடுத்தேன்.
“இவர் இருக்கற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இல்லை. பெத்து வளத்த பிள்ளை அன்பில்லாம இருக்கான்” என்றாள்.
“நாம வர்றதை மகள்கிட்டே சொல்ல வேண்டாமா” என்றேன்.
“போன்லே சொன்னா சரியா வராது. நேர்லே போயி நின்னா, உள்ளே வராதேன்னு சொல்லியிருவாளா” என்றாள்.
எனக்கு அத்தையை மகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. கார் மகள் வீட்டில் முன் நின்றது. வீட்டை ஒட்டி அமைந்திருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த மகள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்பதை ஆச்சரியமாகப் பார்த்தாள். நான் முதலில் காரைவிட்டு இறங்கி அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். விசேஷ வீடுகளில் என்னைப் பார்த்த நினைவு ஏற்பட்டிருக்க வேண்டும். அவளும் புன்னகைத்தாள். ஜான்ஸி அத்தை பெட்டியுடன் காரிலிருந்து இறங்கினாள். மகள் இதை எதிர்பார்க்கவில்லை.
“இப்படி திடீர்னு வந்து நின்னா நான் என்ன செய்றது. எங்க வீட்டுக்காரரை எப்படி சமாளிக்கிறது” என்றாள்.
“கோவிச்சுகாதேடி. ரெண்டு நாள்லே உன் அண்ணன் கோபம் தணிஞ்சுரும். நான் போயிருவேன்” என்றாள் ஜான்ஸி அத்தை. இப்படிச் சொல்லிக்கொண்டே வீட்டினுள் நுழைந்துவிட்டாள். திரும்பிப் பார்க்கவில்லை. மேற்கொண்டு பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்து, மகளிடம் சொல்லிக்கொண்டு நான் காரில் ஏறினேன். வீட்டுக்குள் சென்ற அத்தை வெளியே வரவில்லை.
நான் காரில் என் இடத்திற்குத் திரும்பினேன். அடுத்த நாள் அலைபேசியில் ஜான்ஸி அத்தை கூப்பிட்டாள். நான் எடுக்கவில்லை. இரண்டு தடவை அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. சற்று நேரங்கழித்து மூன்றாவதாக அழைப்பு மணி அடித்தது. சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று தோன்றியது. நான் அலைபேசியை எடுக்கவில்லை. வருத்தமாக இருந்தது.
சுரேஷ்குமார இந்திரஜித் <sureshkumaraindrajith@gmail.com>