பொன் கிள்ளை | பிரேம்

 பொன் கிள்ளை | பிரேம்

ஓவியம்: அ. விஸ்வம்

 

1

வள் பெயர் பொக்கிலை அல்லது பொக்கிளி. ஆயா அந்திமணி அவளுடைய பெயருக்கு இரண்டு அர்த்தம் சொல்லுவார். பொற்கிளி அதாவது பொன்கிளி, மற்றொரு அர்த்தம் பொற்கிளை அதாவது பொன்கிளை. பாட்டிக்கு அந்த அர்த்தங்கள் காலகாலமாக வந்த நினைவு சார்ந்தது. பாட்டிக்குப் படிக்கத் தெரியாவிட்டாலும் அந்த நினைவுகளை வைத்தே பலவற்றுக்கு அர்த்தமும் காரணமும் சொல்லிவிடுவார்.

அந்திமணி என்கிற தன் பெயருக்கு மாலை நேரத்தில் ஒலிக்கும் கோயில் மணி என்றுதானே சிலர் அர்த்தம் சொல்லுவார்கள். ஆனால், அதற்கு வேறு இரண்டு அர்த்தங்கள் உண்டாம். அந்தியில் கன்றுகாலிகள் வீடு திரும்பும் போது ஒலிக்கும் மணி, அந்தி காலத்தில் தோன்றும் மங்கிய ஒளி.

பாட்டிதான் அவளுக்கு பொக்கிளை என்ற அந்தப் பெயரை வைத்தார். அது பதிவுப் பெயராகவும் இருந்தது. ஆனால், அவளுடைய தோழி சென்னம்மாவுக்கு அவள் பொன்னு அல்லது கிளி. அவளுடைய பெயரின் இரண்டு அர்த்தங்களும் தெரிந்திருந்தும் கேலி செய்யவோ கொஞ்சவோ இரண்டு பெயர்களை அவள் உருவாக்கியிருந்தாள். கிளி என்றால் கேலி, பொன்னு என்றால் கொஞ்சல்.

சென்னம்மாவிற்கு தன் கருப்பின் மீது ஒரு பெருமையை உண்டாக்கித் தந்தது பொக்கிளைதான். பொக்கிளையின் சிவப்பு உடம்பைப் போல தனக்கில்லை என்று கவலைப்படத் தொடங்கிய சென்னம்மாவிடம் உன்னோட கருப்புதான்பா அழகு. என்னோட செவப்பு ஒரு நெறம் மட்டும்தான். உன்னோட கண்ணப் பாரு அதுல அழகு மட்டுமா இருக்கு வெற நெறய இருக்கு என்று சொல்லி உண்மையாகவே அவளைப் புன்னகை செய்ய வைத்தவள் பொக்கிளை. அதனை அடிக்கடி கேட்பதற்காகவே என்ன இருந்தாலும் நான் கருப்புதானே என்று சொல்லிவிட்டு பொக்கிளையின் முகத்தைப் பார்க்காதது போல மறுபக்கம் திரும்பிக்கொண்டால் சென்னம்மாவுக்கு நெறய கொஞ்சல்கள் கிடைக்கும்.

சென்னம்மாவுக்கு பொக்கிளை மீது பொறாமையோ போட்டியோ இல்லை. ஆனால், பயம்தான் இருந்தது. செவப்பாக இருப்பதில் உள்ள ஆபத்து அவளுக்குத் தெரியும். எப்படி தெரியும்? இதுவும் காலகாலமாக இருந்து வந்த நினைவிலிருந்தும் பேச்சிருந்தும் உருகொண்ட ஒன்றுதான்.

பணக்கார வீடுகளில் செவப்பாக இருந்தாலும் பாதுகாப்பு; ஆனால், ஏழை வீடுகளில் செவப்பாகப் பொறந்து விட்டால் அதைவிட ஆபத்து கிடையாது. சென்னம்மாவுக்கு இது பற்றிய கதைகள் பல தெரியும். சிவப்பாக இல்லை என்பதைப் பற்றிய குறை மனதில் இருந்தாலும், “கருப்புக்கு நகைபோட்டு கண்ணால பாரு, செவப்புக்கு நகை போட்டு செருப்பால அடி” என்று பேசிக்கொள்ளும் பெண்கள், “அவளுக்கு என்ன பாப்பாத்தி போல வெள்ளையா இல்ல இருக்கா” என்று நெட்டி முறிப்பார்கள்.

“செவப்பு, வெள்ளை இரண்டு நெறத்திலும் யாரும் இல்லை. ஆனா, ஏண்டி பொன்னு இவங்க செவப்பு வெள்ள அப்படின்னு பேசிக்கிறாங்க. மஞ்சளும் களிமண் நெறமும் கலந்த நிறம்தான் உன்னோடது. ஆனா, செவப்பா உயரமா ஒருத்தி இருக்காளே அப்படின்னு பேசிக்கிறாங்க.” சென்னம்மா கேட்கும் பொழுது, “வெள்ளையா யாராவது இருந்தா பயமா இருக்குமில்லை? கருப்பு கருப்புன்னு கொல்லுறயே, உன்னோட நெறம் வெல்லம் போட்டு செஞ்ச கொழுக்கட்டை நெறம்தானே” என்பாள் பொக்கிளை.

நெறம் பத்தி இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வதற்கு காரணம் இருந்தது. வகுப்பில் பொக்கிளையை வாத்தியார்களும் டீச்சர்களும், “என்ன வெள்ளச்சி நேத்து சொன்னத எழுதி வரலயா” என்று கேட்பவர்கள், “சென்னம்மாவை என்ன பனைவெல்லம் இதக்கூட சரியா எழுத மாட்டியா” என்பார்கள். இரண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்திருந்தால் திமுக கொடி என்ற கேலி. அவர்களின் நெறம் ஒரு நாளைக்கு சராசரியா இருவது தடவையாவது காதில் படாமல் போகாது.

வீட்டிலும் தன்னுடைய பெயரில் ஒட்டிக்கொண்ட அந்த நிறத்தை நொந்துகொள்ள வேண்டியிருந்தது சென்னமாவுக்கு. அவளுடைய அம்மா தவிர அத்தை, மாமா எல்லாம் சென்னகருப்பி எனக் கூப்பிட ஆரம்பித்து, இப்போது சின்ன கருப்பியாக அது மாறியது. சின்ன கருப்பி என்பதற்கு அர்த்தம் அவளுடைய அம்மாவை பெரிய கருப்பி என்று சொல்லிக்காட்டத்தான் என்பதை சென்னம்மா பிறகு தெரிந்துகொண்டாள்.

அவளுடைய அம்மாகூட சில சமயம், “சென்னு கண்ணு இப்படி குறைஞ்ச நெறத்தில பொறந்திட்டயேடி, கல்யாண வயசுல உன்னோட நெறத்த சொல்லியே உயிர எடுத்துவாளுங்களே மாப்பிளை வீட்டு பொம்பளைங்க” என்று கவலைப்பட்டுக்கொள்வார்.

பல நேரங்களில் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டாலும், “உனக்கு கல்யாணமாகி ரெண்டு புள்ள பெக்கலயா, அது போல ஏதாவது நடந்திட்டு போகுமில்ல” என்று எதுவும் தெரியாதது போல சொல்லி வைப்பாள்.

“ஆமாம் கல்யாணமும் ஆயி ரெண்டை பெத்தும் வச்சிருக்கேன், இன்னும் உங்க தாத்தா வீட்டுக்காரங்களுக்கு நான் கருப்பு பொன்னிதானே.” அம்மா சொல்லி பெருமூச்சு விடும்போது பாவமாக இருக்கும்.

ஆம்பிளைகள் கருப்பாக இருப்பதைப் பத்தி பேசாத சனங்கள் பெண்களை மட்டும் நிறத்தை வைத்து பேசிக்கொள்வது ஏன்? சென்னம்மாவுக்கும் பொக்கிளைக்கும் இந்தச் சந்தேகம் தொடர்ந்து இருந்தது. நிறத்தில் உள்ள சிக்கலை கொஞ்ச நாள் வரைக்கும் விளையாட்டாப் பேசியும் கேலியாக் கடந்தும் வந்த சென்னம்மாவிற்கும் பொக்கிளைக்கும் ஆறாவது ஏழாவது படிக்கும் காலத்தில்தான் அதில் வேறு பல சிக்கல்கள் இருப்பது புரியத் தொடங்கிச்சி.

அருந்ததிபுரத்தில் இருந்து வரும் பொக்கிளையைப் பற்றி பசங்கள் பேசுவதன் அர்த்தமும், தன்னுடைய சாதியைச் சேர்ந்த பசங்க மட்டுமில்லாம மற்ற சாதிப் பசங்களும் பெக்கிளையைப் பத்திப் பேசும் பேச்சில் இருந்த அசிங்கமும், சென்னம்மாவிற்குப் புரிய வந்துச்சு. தன்னுடைய அண்ணனே பொக்கிளையைப் பத்திப் பேசும்போது, “அந்த செங்கராமீனு என்ன சொல்லுது” என்பான். சில சமயம் சென்னம்மா ரேங்கில் குறைந்துவிட்டால், “என்ன அந்தக் ‘கறிவத்தல்’ இந்த முற முன்ன போயிடிச்சோ” என்றும் கேப்பான்.

அவனுடைய நண்பர்களும் அவளிடம் பேசுவது போல பொக்கிளையைப் பத்திதான் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் அதிக ரெட்டை அர்த்தமிருக்கும். தன் தோழியை தன்னிடமே இப்படிப் பேசும் இந்த நாயிங்க தன்னைப் பத்தி தான் இல்லாத போது என்னவெல்லாம் பேசுங்க என்பதை நினைத்து எரிச்சலும் வேதனையுமடைவாள் சென்னம்மா.

“தனியா வெளிய போகாத சென்னம்மா” என்று சொல்லும் அவளுடைய அண்ணன்தான் தன்னுடைய நண்பர்களுடன் சினிமா கொட்டகை வாசலில் நின்று பெண்களைப் பார்த்து ஏதோ சாடை மாடை பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். தன்னுடைய தோழிகள் சொல்லியும் கேட்டிருக்கிறாள். அவன் கூட்டத்தில் இருந்தால் அவர்கள் வரும் போது மட்டும் பின்னால் நகர்ந்து கொள்வானாம். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல முகத்தை வைத்துக் கொள்வானாம். சில முறைகள் சென்னம்மாவே அதனைப் பார்த்தும் இருக்கிறாள்.

இதைப் பத்தி அவனிடம் கேட்ட முடியாது. அம்மாவிடம் ஒருமுறை, “அண்ணன் அந்த பொறுக்கிப் பசங்களோடயே சுத்திக்கிட்டு இருக்கேம்மா, நீ சொல்லக்கூடாதா?” என்றதும், “ஆம்பள பசங்க அம்மா, அப்பா சொல்லற பேச்ச இந்த வயசில கேக்க மாட்டானுவடி” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், “உன்னோட அண்ணனுக்கு வறுத்த மீன்தாண்டி பிடிக்கும்” என்று சொல்லி மூன்று மீன்களையாவது வறுத்து வைக்காமல் இருக்க மாட்டார். கால நேரம் இல்லாமல் அவன் வீட்டுக்கு வந்தாலும், “என்ன எரும சப்பாடு கூட இல்லாம ஊரு மேஞ்சிக்கிட்டு வர, கொழம்பு மீனெல்லாம் ஆறி அவிஞ்சிப் போய் கிடக்குதே, சென்னு அந்த தட்ட எடுத்து வந்து வையி, தண்ணிய கொண்டுவா” என்பார்.

அள்ளி வாரி வாயில் போட்டுக்கொண்டு தட்டிலேயே கையைக் கழுவிவிட்டு எழுந்து விடுவான். “தட்ட கழுவி கவுத்து வையி சென்னம்மா.” தவறாமல் அம்மாவின் அன்புக் கட்டளை அவளைத்தான் வந்தடையும்.

அப்பாவிடம் காட்டும் சிறிய கண்டிப்பைக்கூட அம்மா தன் அண்ணனிடம் காட்டுவதில்லை என்பதை எட்டாவது முடித்து ஒன்பதாவது படிக்க அரசு உயர்நிலைப் பள்ளிக்குப் போகத் தொடங்கிய காலத்தில்தான் அவள் கண்டு பிடித்தாள்.

அண்ணனையும் அவனுடைய சிநேகிதர்களையும் பார்த்தாலே பத்திக்கொண்டு வந்தது சென்னம்மாவிற்கு. அதுவும் பொக்கிளை பத்தித் தன்னிடம் பேசும்போது கொள்ளிக் கட்டையை எடுத்து வாயில் செருக வேண்டும் போல இருக்கும். ஆனால், அவளால் எதுவும் செய்ய முடியாது.

அம்மா அவர்களில் சிலரை சாதி பார்த்து வீட்டுக்குள் அழைத்து, “எப்படி கண்ணு இருக்காங்க அம்மா” என்றபடி, “சென்னு அந்த பொருளங்கா உருண்டய எடுத்து வா” என உபசரிக்கும் பொழுது சென்னம்மாவுக்கு வருமொரு ஆங்காரம், மயான கொள்ளையின் போது அங்காள பரமேஸ்வரிக்கு வருமே அது.

தட்டில் தனக்குப் பிடித்த அந்த உருண்டைகளை முள்ளம் பன்னிகளுக்கு எடுத்து வந்து கொடுத்துவிட்டு உள்ளே போய் படுத்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அத்தோடு அது முடிந்தும் போகாது. “சென்னம்மா செம்புல தண்ணி எடுத்துவா.” அம்மாவின் குரலுக்கு கேட்காதது போல நடித்துக் கொண்டிருந்தாலும் அம்மா அறைக்குள் வந்து, “இப்பதான் முழிச்சிக்கிட்டிருந்த அதுக்குள்ள தூக்கமா? தோட்டத்து கை பம்புல இருந்து சின்ன குண்டான்ல தண்ணி எடுத்து வா” என்னும் பொழுது ஆங்காரத்தையும் மீறிய ஏதோ ஒன்று உள்ளே பொங்கும். எதையுமே வெளியே காட்டிக்கொள்ள முடியாது.

அதைவிட அவளை ரொம்ப ரொம்ப பாதிப்பது அம்மா சில சமயம் கொட்டும் அந்த வார்த்தைகள். “இதுங்கள்ள ஏதோ ஒன்னதாண்டி நீ கட்டிக்க வேண்டியிருக்கும்.” அதற்கு இதுவரை சென்னம்மா எந்த பதிலும் சொன்னதில்லை. ஆனால், அம்மாவை உற்றுப் பார்ப்பாள். பிறகு புத்தகத்தை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குப் போய்விடுவாள். வீட்டின் பின் பக்கமாக அப்படியே ஓடிப் போய்விட்டால் எப்படி இருக்கும்? ஆனால், எங்கே போவது?

அவள் இரண்டுமுறை தொலைந்து போயிருக்கிறாள், வேண்டுமென்றே வழி தெரியாமல் தொலைந்து போய் இருக்கிறாள். ஆனால், இரண்டு முறையுமே பஸ் ஓடும் தவளக்குப்பத்திலும் பஸ் போகாத கொம்பாக்கத்து ரோட்டிலும் வைத்து அவளைப் பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். அவள் இரண்டு முறையுமே யாரோ தன்னை சைக்கிளில் ஏத்திக்கொண்டு போய் வெளியே விட்டுவிட்டு போய்விட்டதாகப் பொய் சொல்லித் தப்பிக்க நினைத்தாலும் அப்பா, “படிக்கிற புள்ளைக்கு தெரியாதா யாராவது சைக்கிளில் ஏறச் சொன்னால் ஏறக்கூடாதுன்னு? சூடு போடு பொன்னம்மா அப்பத்தான் உறைக்கும்” என்றார்.

தொலையவும் முடியாது, ஓடவும் முடியாது, இதிலிருந்து தப்பவும் முடியாது. ஆனால், பொக்கிளையுடன் இதெல்லாத்தியும் பேசத்தான் முடியும். வேறு சிநேகிதிகளிடம் சொன்னால் அவளுக்குத்தான் அவமானம், அத்துடன் அவங்களுக்கும் ஜாலியாகத்தான் இருக்கும். “அப்பிடியா சென்னம்மா ரொம்ப கஷ்டமில்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நல்லா வேணுன்டி உனக்கு மூணாவது ரேங்கு, ரெண்டாவது ரேங்கு எடுக்கிற திமிரு, இதுல அந்த பொக்கிலையோட ஒட்டிக்கிட்டு திரியறது வேற, நல்லா வேணும்” என்று சினிமாவுல வர்ற மனசாட்சி போல உள்ளே வேறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்.

எல்லாத்தியும் தாண்டி அவளுக்கு பொக்கிளையும் தமிழ் டீச்சரும் மியூசிக் வாத்தியாரும் இருக்கும் இந்த உலகம் இனியதாவே இருந்தது. ஆனால், அதுவும் நீடிக்கவில்லை. எட்டாம் வகுப்பை முடித்த பின் நிலமை பெரிய சிக்கலானது.

அருந்ததிபுரத்திலிருந்து பொக்கிளை நடந்து வரும் வழியில்தான் சென்னம்மாவின் வீடு. பொக்கிளை வீட்டு வாசலில் வந்து நின்று ‘சென்னு’ என்று கூப்பிட்டு விட்டு காத்திருப்பாள். அவளை வீட்டிற்குள் ஒரு நாளும் விடாத சென்னுவின் அம்மா, “தோடி பொக்கிள வந்துட்டா, சிங்காரிச்சது போதும் வெளிய வா” என்பார்.

புத்தகப் பையை சரிபார்த்தபடி ஓடிவந்து பொக்கிளையின் தோளில் இடித்து போகலாமா என்று சென்னு சொன்ன பின்தான் அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு நடப்பார்கள். போகப் போக ஒவ்வொருவராகச் சேரச்சேர அவர்களுடைய கூட்டம் அதிகமாகும். அது ஒரு ஆறுதலான நேரம். ஆனால், வீடுகள் இருக்கும் தெருக்களைக் கடந்து தென்னந்தோப்பு வழியாக நடக்கும் போதுதான் அந்த துயரம் தொடங்கும்.

பெண் பிள்ளைகள் போல ஒயர் கூடையில் புத்தகத்தை எடுத்து வராமல் புத்தக் கட்டுகளை கையில் வைத்துக்கொண்டு கால் சட்டையுடன் நடக்கும் பசங்களும், சைக்கிள் வைத்திருந்தும் தங்களோட சிநேகிதர்களுக்காக சைக்கிளில் போகாமல் தள்ளிக்கொண்டு வரும் பையன்களும் ஏதாவது ஒரு கூட்டத்தின் பின்னாலேயே நடந்து வருவார்கள்.

“எவ்வளவு பொறுமயா நடந்தாலும் அந்த நாய்களும் அதைவிட பொறுமையா நடக்குதுங்களே பொக்கிளை என்ன செய்யறது” என்று கேட்பாள் சென்னம்மா. அவர்களுடைய சிநேகிதிகளில் கொஞ்சம் பெரிய பிள்ளைகள், “பின்னாள வரதுக்கு ஒனக்கு அர்த்தம் தெரியாதா சென்னு. ஒன்னோட அண்ணனும் என்னோட அண்ணனும் அங்க வேற ஒரு கூட்டத்தோட பின்னாடிதான் நடந்து வராங்க. என்ன செய்யறது” என்பார்கள்.

சென்னம்மாவிற்கு அண்ணனை மட்டுமில்லை அப்பா, மாமா, பெரியப்பா, சித்தப்பா என்று யாரையும் பிடிக்காமல் போய்விட்டது. அவர்கள் இரண்டு பேரோ மூன்று பேரோ சேர்ந்துவிட்டால், தங்களோட வீட்டுப் பெண்களைத் தவிர மத்த வீட்டுப் பெண்களையோ மத்த சாதிப் பெண்களையோ, “குட்டி எப்படி ஆயிட்டா, ஊம் முன்னயும் பாக்கமுடியல, பின்னயும் பாக்கமுடியல” என்பதும்; மற்ற சாதிப் பெண்களை, “அவ அவங்கூட போனாளாம் இவ இவங்கூட போனாளாம், என்னவோ காலம் கெட்டுப் போச்சி, நமக்கு என்ன வந்தது” என்று சொல்வதும்; சிலர், “அந்தச் சாதியே அந்தக் காலத்திலிருந்தே அப்படித்தானே என்ன புதுசா” என்று சொல்லியும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். “சென்னம்மா அந்த வடையையும் சுண்டலையும் எடுத்துக்கிட்டு சின்ன குடத்துல தண்ணியும் எடுத்து வா.” அப்பாவோ மாமாவோ சொல்லும் போது உள்ளே இருந்து அவங்க பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் சென்னம்மாவிற்கு கொதிக்கும் எண்ணையை தன் உள்ளங்கையில் ஊத்தியது போல பதறல் வரும். என்ன செய்வது. செய்யத்தானே வேண்டும். இதில் கோயில் உபயம், தேர் திருவிழான்னு பக்தர் வேசம்.

அவளுக்கு அதிக கோபத்தையும் ஆங்காரத்தையும் உருவாக்குவது உறவுக்கார ஆம்பிளைகள், “உங்கூட படிக்கிறாளாமே ஒருத்தி, தெனம் வீட்டுக்கு வந்து உன்ன கூட்டிக்கிட்டு பொறாளாமே அந்தச் சக்கிலிப் புள்ள. அவபேரு என்ன சென்னம்மா?” என்று கேட்பதுதான். அவள் அதைக் காதில் வாங்காமல் என்னமா கூப்பிட்டியா என்றுபடி உள்ளே போய் விடுவாள்.

பொக்கிளையின் வீடு இவர்கள் சொல்வது போல வசதியில்லாத வீடு இல்லை. அவளுடைய அப்பா சவானா ஆலையில் வேலை செய்கிறார். அம்மாவும் ஆலையில்தான் வேலை செய்கிறார். முன்னும் பின்னும் மரங்களுடைய பெரிய வீடு அவளுடையது. ஒரே தெருவானாலும் முன்னும் பின்னும் மரங்களைக் கொண்ட அந்த அருந்ததிபுரம் வெய்யில் படதா அழகான ஊர்தான் என்பது சென்னம்மாவிற்கு சின்ன வயதிலிருந்தே தெரியும்.

மூணு நாலு படிக்கும் போதிருந்தே பள்ளிக்கூடம் பாதிநாளில் மூடிவிட்டால் பொக்கிளையுடன் அவளும் வேறு இரண்டு மூன்று பேருமாக அருந்ததிபுரம் போய் விடுவார்கள். பொக்கிளையின் அம்மாவோ அக்காவோ வீட்டில் இருப்பார்கள். அம்மா செல சமயம் தலைநிறைய பஞ்சுடன் வீட்டுக்கு வருவார். குளித்து முடித்து புள்ளி போட்ட சேலையும் ரவிக்கையுமாக உள்ளே வந்தால் சினிமா நடிகை போல இருக்காங்கடி என்று சென்னம்மாவும் மத்த பிள்ளைகளும் குசுகுசுப்பார்கள்.

பொக்கிளையின் வீட்டில் ஏதாவது பலகாரம் இருந்து கொண்டே இருக்கும். சில சமயம் மீன் குழம்பு நாக்கைக் கீறி மனதைப் பிழிந்து விடும். யாரையும் சாப்பிடாமல் அனுப்புவதே இல்லை பொக்கிளையின் அக்கா. பேசிக்கொண்டே நடத்தும் அவருடைய சமையல் மாய மந்திரம் போல சில நிமிஷங்களில் தயாராகிவிடும். பொக்கிளையின் வீட்டில் சாப்பிட்டதை யாரும் தங்கள் வீடுகளில் மட்டுமில்லை வேற சிநேகிதங்களிடம் கூட சொல்ல முடியாத நிலை. சிலர் நாளாக நாளாக வீட்டில், “எங்க போனடின்னு கேட்டு அடிப்பாங்க” என்று சொல்லி வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.

பொக்கிளையின் அப்பா ராத்திரி ஷிப்டு போய் வருவதால் பல நாட்களில் பின் தோட்டத்தில் கயித்துக் கட்டிலில் தூங்கிக்கொண்டே இருப்பார். சைக்கிளில் வேலைக்கு போகும் போதுதான் அவரை அதிகம் பார்க்க முடியும். வெள்ளை வேட்டியும் அரைக்கை சட்டையுடன் வேலைக்குச் செல்லும் அவர் தலை உடம்பு முழுக்க பஞ்சுடனும் காக்கிக் கால்சட்டையுமாய் திரும்பி வருவார்.

ஆலை வேலை செய்யும் எல்லாருமே பஞ்சு படிந்த தலையுடன் வருவது ஏன் என்று சின்னப் பிள்ளைகளுக்குத் தெரியாது. அப்பாவுக்கோ அண்ணனுக்கோ டிபன் பாக்ஸில் சாப்பாடு கொண்டு போகும் வயசில்தான் அது தெரியவரும். பாண்டிச்சேரியின் மூன்று ஆலைகளில் எதாவது ஒன்றில் அப்பாவோ அண்ணனோ, சில வீடுகளில் அம்மாவோ வேலை செய்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

பத்தாம் தேதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்கள் ஆலை வாசல்களில் கூடும் சந்தைக்குப் போய் அண்டா குண்டா முதல் செங்கல் அளவுள்ள மைசூரு பாக்கு வரை வாங்கி வருவார்கள். பொதுவாக அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் பத்தாம் தேதி ஆலை வாசலில் நிற்பது, கணவன்மார்களை கைத்தாங்கலாக இழுத்து வந்து சம்பளப் பணத்தை கால் சட்டையிலிருந்து எடுத்துக்கொண்டு ஐந்து ரூபாயைக் கொடுத்து விட்டு வருவதற்காகத்தான். இல்லையென்றால் அது சூது வெளையாடும் இடத்திலோ சாராயக்கடையிலோ காணாமல் போய் விடும் வாய்ப்புகள் அதிகம்.

என்ன காரணத்தினாலோ பல அப்பாக்களுக்கு கடன் இருந்து கொண்டே இருக்கும். சாராயக்கடைக்குப் போகாமல் வீட்டுக்குத் திரும்பும் அப்பாக்கள் இருந்து விட்டால் அது போல சொர்க்கம் வேறொன்று கிடையாது.

இன்னொரு வகை… சாராயத்தை வீட்டுக்கு வாங்கி வந்து, குளித்து முடித்து, கறி மீனுடன் சாப்பிட்டுக் குடித்து விட்டு, ஆறு ஏழு மணி நேரம் தூங்கும் அப்பாக்கள். இவர்களும் பாதி தெய்வம்தான்.

அடுத்து ஒரு வகை உண்டு. வீட்டுக்கு வந்து ஆம்பிளை பிள்ளையிடமோ பொம்பிளை பிள்ளையிடமோ காசு கொடுத்து ரெண்டு லீத்தர் கள் வாங்கி வரச்சொல்லி அம்மாக்களுடன் குடிப்பவர்கள். அதில் பிள்ளைகளுக்கும் ஒரு சந்தோஷம். கறிக்கடையில் சுண்டலோ மீன் பஜ்ஜியோ அவர்களுக்குக் கிடைக்கும். சில நாட்களில் கறி வறுவலும் கிடைக்கும். இந்த வீடுகளில் சிரிப்பும் கும்மாளமும் இருப்பது ஏன் என்று வேறு சிலருக்குத் தெரியாது. பெண்களும் ஆண்களும் கேலி கிண்டல் என எப்போதும் இருப்பதால் சிலர் அவர்கள் கண்ணில் படவே தயங்குவார்கள்.

எப்படியாவது ஆலையில் வேலை வாங்கி விட்டால் வாழ்க்கை நல்லபடியா அமைந்து விடும் என்ற நம்பிக்கை அந்தப் பகுதி சனங்களுக்கு. பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் அது தொடங்கியதாக பொக்கிளையின் அப்பா சொல்லியிருக்கிறார். அவர் குடிப்பது இல்லை. ஆனால், எப்போதாவது சூது விளையாட தோப்புப் பக்கம் போவார் என பொக்கிளையின் அம்மா சொல்வார்.

பொன்னு என்று அவளுடைய ஆயாவும் அவளுடைய அப்பாவும் கூப்பிடுவது போல சென்னம்மாவும் கூப்பிடுவதில் பொக்கிளைக்கு பெரிய ஒரு சந்தோஷம். இவர்கள் இருவருக்கும் சந்தோஷமான நாள் ஒன்று உண்டு. புது சினிமா வந்து விட்டால் முன்னமே சதிசெய்து இரண்டு குடும்பங்களையும் ஒரே நாளில் சேர்த்து விடுவது. ஏதேச்சையாக சந்தித்துக்கொள்வது போல, “என்ன சென்னா சினிமா வரதா சொல்லவே இல்லை” என பொக்கிளையோ, “என்ன பொன்னு இப்பதான் இந்த சினிமாவ பாக்கிறயா” என்று சென்னம்மாவோ கேட்டு, இருவரும் சேர்ந்துகொள்வார்கள்.

பொக்கிளையின் அக்கா புவனம்மா சென்னம்மாவின் காதில், “சினிமா வரது உங்க ரெண்டு பேருக்கும் தெரியாதில்ல பாவம்பா நீங்க” என்பாள். பொக்கிளையை வீட்டுக்குள் கூப்பிட விடாத சென்னம்மாவின் அம்மா சினிமா கொட்டாயில் ரெண்டு பேரும் ஒன்னா உக்காருவதை தடுக்க முடியாமல், “என்ன பொக்கிள அக்காவோட வந்திருக்கியா” என்று கேட்பார். “அங்க உங்க அம்மா இருக்கிறாங்க போல இருக்கு” என்பார்.

பொக்கிளையின் அம்மாவைப் பார்த்து சென்னம்மாவின் அம்மா முதல் முறை அசந்து போய்விட்டார். கழுத்தில் தங்கச் செயின் நெற்றில், அழகான சிறிய குங்குமப் பொட்டு, நீல நிறத்தில் டெரிலின் புடவை, காலில் செருப்பு, அதைவிட மஞ்சள் பூசிய முகம் போல உடம்பு எல்லாம் மஞ்சள்.

பொக்கிளையின் அக்கா புவனம்மாவோ பதினொன்னாவது படித்து விட்டு ஜிப்மரில் வேலைக்காக காத்திருந்தாள். “என்ன உயரண்டி அவ, காஞ்சனா மாதிரி இல்ல இருக்கா” என சென்னம்மாவின் அம்மா பெருமூச்சு விடுவார். “என்ன விட கருப்பா பொறந்திட்டயடி. உங்க அப்பா கருப்பும் எங்கருப்பும் ஒன்னா கலந்து பொறந்திருக்க. உன் அண்ணனாவது பரவாயில்ல மாநெரம். ஆம்பள புள்ள. நீதான் எனக்கு பெரிய கவலையா இருக்க” என்று நூறாவது முறையாக சொல்லத் தொடங்கிவிடுவார். ஒன்பது பத்து வயசிலிருந்தே தொடங்கி விட்ட வாடிக்கையிது.

சென்னம்மாவிற்கு எதைப் பற்றியும் பயமில்லை. தன்னுடைய அண்ணன் சின்னராசு பற்றித்தான் பயம், கவலை, அதைவிட ஒரு அருவருப்பு. பொக்கிளையைப் பார்ப்பதற்காவே சின்ன வயசிலிருந்தே ஏதாவது சாக்குச் சொல்லி சென்னம்மாவைப் பார்க்க கிளாஸ் ரூமுக்கோ விளையாடும் இடத்திற்கோ வந்துவிடுவான்.

சென்னம்மாவிடம் பிஸ்கட், மிட்டாய் எதையாவது கொடுத்து உன்னோட பிரண்டுக்கும் கொடு என்று பொக்கிளையை பார்த்துக்கொண்டு நிற்பான். ஏழாவது வரை இந்தக் கொக்கி முள்ளு இரண்டு பேரையுமே தைத்துக்கொண்டு கிடந்தது. ஒரு முறை சின்னராசுவின் சிநேகிதன் அவனுடன் வந்த போது சென்னம்மா வேண்டுமென்றே, “மாமாவும் அத்தையும் எங்க வீட்டுக்கு வந்தாங்க தெரியுமா?” என்று அவனுடைய வீட்டை ஞாபகப்படுத்தியதுடன், “நீ எனக்கு தேன் முட்டாய், தேங்கா முட்டாய் வாங்கி வரலியா?” என்று கேட்டு இரண்டு பேரையும் உணிக்கா முள்ளால் ஒரு இழுப்பு இழுத்து விட்டாள். ஆனால், என்ன மூன்று நாள் கழித்து மீண்டும் கோழி குப்பையைக் கிளறத் தொடங்கிவிட்டது.

அவளுடைய அண்ணன் தரும் எதையும் சென்னம்மா சாப்பிடுவதில்லை. அவன் போன பிறகு சன்னல் வழியாகவோ சாக்கடையிலோ போட்டுவிட்டு நிம்மதியாக மூச்சு விடுவாள். பொக்கிளை எத்தனையோ முறை, “என்னப்பா எனக்குத்தான் தர உனக்கு அவமானமா இருக்கு, சரி நீ சாப்பிட வேண்டியதுதானேன்னு” எனச் சொல்லிப் பார்த்து விட்டாள்.

சென்னம்மாவோ, “பொன்னு நீயே சொல்லு உனக்கு இது மாதிரி ஒரு அண்ணன் இருந்து எனக்காக இப்படிக் கொடுத்து விட்டா என்ன செய்வ?” என்று கேட்டாள். “நான் செருப்பால அடிப்பேன், இல்லன்னா அம்மாக்கிட்ட சொன்னாப்போதும் கையில் கம்பியக் காச்சி வச்சிடுவாங்க.”

“அது போல என்னால செய்ய முடியாது பொன்னு. என்ன செய்யிறது?”

இது எல்லாம் அவன் ஒன்பதாவது போய்த்தொலைந்த பிறகு ஒழிந்ததென்று இரண்டு பேருமே ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். ஆனால், அதுவும் நிறைய நாள் நீடிக்கவில்லை.

 

2

ட்டாவது முடித்து ஒன்பதாவது போன போது அந்தக் கொடுமை இன்னும் அதிகமாகி விட்டது. அவளுடைய அண்ணனுடன் பத்தாவது படிக்கும் சில பசங்களும் சேர்ந்து கொண்டார்கள். அவளிடம் பேச வருவது போல, “சென்னம்மா எப்படி இருக்கு கிளாசு? நெறைய மார்க்கு எடுக்கிறிங்க போல ரெண்டு பேரும். இப்ப வேற பதினொன்னாவது இல்ல. உங்களுக்கு ஜாலிதான்.” இப்படி எதையாவது பேசி அறுப்பார்கள்.

“உன்னோட பிரண்ட் எதுவும் பேச மாட்டுது, ரொம்ப ஸ்டைலுதான் இல்ல.” அவர்களின் பேச்சு சென்னம்மாவிற்கு தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைத் தடுக்க அவள் ஒரு வழி செய்தாள். “அம்மா அண்ணங்களோட பிரண்டுங்க செலபேரு அது கூட வராங்க. எங்கிட்ட ஜாடை மாடையா எதோ பேசறாங்க. அதுல ஒருத்தன், உன் பையில என்ன இருக்கு? இவ்வளோ பெருசா இருக்கேன்னு ரெட்ட அர்த்தத்தில பேசறான். எனக்கு புத்தப் பைய எடுத்துப் போகவே வெக்கக் கேடா இருக்கு.” என்று சொல்லி கண் கலங்கினாள். சென்னம்மாவின் உத்தி நல்லாவே பலிச்சது.

“ஏய் ராசு இனிமே சிநேகிதக்காரன் சித்தப்பன் மகனுன்னு எவனையாவது கூட்டிக்கிட்டு சென்னம்மாகூட பேசப் போன செருப்பு பிஞ்சிடும் தெரியுதா, வெக்கங்கெட்டவனே. கூட பொறந்த தங்கச்சி வயசுக்கு வந்து பள்ளிக்கூடம் போறா, உனக்கு அறிவு இல்ல, பசங்கள கூட்டிக்கிட்டு அவ பக்கம் போற?” முதமுறையாக அண்ணங்காரன் சின்ன ராசுவுக்கு அடிபடாமலேயே முகம் வீங்கிப் போனது.

தங்கச்சிய ஒன்னும் சொல்ல முடியாது. அம்மாவுக்கு வேறு காரணம் ஒன்னும் சொல்லவும் முடியாது. அவனும் அவன் சிநேகிதக்காரனுவளும் பொக்கிளைக்காகத்தான் அந்தக் கூட்டத்துடன் அவ்வப்போது நடந்து போகும் வழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அதிலிருந்து அவன் மட்டும் விலகிக்கொள்ள நினைத்தாலும் அவனுக்குத்தான் அது அதிகம் தேவைப்பட்டது.

சென்னம்மா அந்தக் கூட்டத்தில் இருப்பது பெரிய தொல்லையாக இருந்தது, ஆனால், சென்னம்மா இல்லையென்றால் அந்தக் கூட்டத்துப் பக்கம் போக முடியாது. அந்தக் கூட்டத்தில் இரண்டு பேர் தவிர மற்றவர்கள் வேறுவேறு சாதிகள். பொக்கிளையும் முனியம்மாவும்தான் அருந்ததிபுரத்தில் இருந்து வருபவர்கள்.

அவர்களைத் தனியே பிரித்து விட்டால் தாங்கள் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்று அவர்கள் தப்புக் கணக்கும் போட்டார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தை சாதி சொல்லி பிரிக்க முடியாத நிலைதான் இருந்தது.

படிக்கும் பெண்பிள்ளைகள் கல்யாணம் ஆகும் வரை சாதி பார்க்கும் பழக்கம் அந்தப் பகுதியில் இல்லை. சின்னராசு ஒரு முறை அவனுடைய அப்பா முத்துக்கண்ணு கவுண்டரிடம், “சென்னம்மா எப்பவும் அந்த பொக்கிலியோடத்தான் ஒட்டிக்கிட்டு இருக்கா, பசங்க ஒரு மாதிரி பேசறாங்கப்பா” என்று பத்த வைத்துப் பார்த்தான். முத்துக்கண்ணுவோ, “அந்த புள்ள வீட்டுக்குள்ள வராத வரைக்கும் பேச ஒன்னுமில்ல. சாதியப் பத்திப் பேசி போலீஸில மாட்டிக்க வேணாம்னு பசங்க கிட்ட சொல்லி வை” அப்படின்னு சொல்லிவிட்டார்.

அவர்கள் சாதியைப் பத்தி நேராக எதுவும் இப்போது பேச முடியாது என்ற நிலை உருவாகி இருந்தது. அதை விட முக்கியம் அருந்ததிபுரத்தில் யாரும் அடங்கியிருப்பவர்கள் இல்லை. அறுபது எழுவது வீடுகளில் இருபது முப்பது வீடுகள் ஆலைக்காரர்கள் வீடுகள். பாண்டிச்சேரியிலும் பக்கத்து ஊர்களிலும் ஏதாவது வேலை செய்கிறவர்கள் பலர். எலக்ட்ரிக் வேலை, சைக்கிள் கடை வேலை என ஏதாவது வேலை.

எப்பொழுதாவது ஊர்க்காரர்கள் வேண்டிக் கேட்டுக்கொண்டால் கோயில் திருவிழாவில் மேளம் அடிக்கச் சிலர் செல்வார்கள். மாரியம்மன் கோயில் மரத்திற்கு அடியில் தாம்பூலம் வைத்து முறையாக அழைக்க வேண்டும். அதை விட அருந்ததிபுரத்தில் இரண்டு சொல்தா குடும்பங்களும் இருந்தன. கோட் சூட் போட்டு பிரஞ்சு எலக்ஷனுக்கு ஓட்டுப் போட காரில் செல்வார்கள். மாதாகோயிலுக்கும் சில சமயம் போய் வருவார்கள். இரண்டு பேர் வாத்தியார் வேலையில் இருந்தார்கள். மூன்று பேர் பெரிய ஆஸ்பத்திரியில் வேலை செய்தார்கள். சிலர் ஆரோவில்லில் வேலையில் இருந்தார்கள். பள்ளிக்கூடத்திலோ அருந்ததிபுரம் பிள்ளைகள் நிறைய பேர் படித்தார்கள்.

செருப்புக் கடை வைத்திருந்த பெரிய பகண்டைகூட யாருக்கும் பயந்து பேசுவதில்லை “அதுதான் சொல்றன் இல்ல அய்யா, அடித்தோலு வர நாலு அஞ்சு நாளாகும். வந்தபெறகுதான் செருப்பு முடியும், அப்புறம் காய ஒரு நாளாவும், இது என்ன கொழுக்கட்டையா கையால புடிச்சி இட்டிலிக் குண்டான்ல வச்சி அவிச்சித் தர்றதுக்கு.” முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுவார்.

யாராவது செருப்பைக் கொடுத்துவிட்டு, “என்ன பெரிசு இப்படி பொறுமையா இழுத்து இழுத்து நேரத்தக் கடத்துற” என்று கேட்டுவிட்டால் போதும், “இந்த மிதியடிய நாலு அஞ்சு வருஷமா சரிபாத்துச் செஞ்சி தரேன். வேகமா தச்சா வேற எடத்துல பிஞ்சிக்கிட்டு வந்துடும்” என்று மானத்தை வாங்கிவிடுவார்.

சில சமயம், “இந்தாங்க உடையாரே ஊசியும் நூலும் உங்க கையில தரேன் ரெண்டு தையலப் போட்டுக் காட்டுங்க பாப்போம்” என்று சொல்லி நிறுத்திவிட்டு, “தப்பா நெனச்சிக்காதிங்க சின்னவரே வித்தை தெரிஞ்சாதான் வேலை, கொஞ்சம் அசந்தா கையில தச்சிடும் ஊசி, மெல்லமா இழுத்தாதான் அழுத்தமா முடிச்சி விழும்” என்பார். அதில் ஒரு விடைப்பும் அச்சுறுத்தலும் இருக்கும்.

அந்த ஊர்ப்பக்கம் அழுத்தமான முணுமுணுப்புகள். இலவச மனைப்பட்டா வேறு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக்கூடங்களில் ஸ்காலார்ஷிப், புத்தகம், கால் சட்டை மேல் சட்டை இப்படி எத்தனயோ வசதிகள்.

“என்னடா இது, இந்த ரெண்டு சாதிப் பசங்களும் இப்படி ராஜா மாறி வாழத் தொடங்கிட்டாங்க” என பொருமல் பெருகி ஓடத் தொடங்கி இருந்தது. அந்த சமயத்தில் தான் அந்தப் பகுதியில் ஒரு சங்கம் வேறு உருவாகி நெருப்பை மூட்டிவிட்டு உள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தது.

“இந்தப் போலீஸ்காரங்க ஒரு சட்டத்த வேற வச்சிக்கிட்டு பயமுறுத்திக்கிட்டு கெடக்கிறானுவ. அரசாங்கத்தை மாத்திட வேண்டியதுதான். சாதிய பத்தி பயமத்துப் போச்சி” என்று தென்னந்தோப்புகளில் கூட்டம் போட்டு பேசத் தொடங்கியிருந்தார்கள்.

சென்னம்மாவின் அப்பாவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். சென்னம்மாவின் வீட்டின் பின் பக்கமும் அந்தக் கூட்டம் சில சமயம் நடக்கத் தொடங்கியிருந்தது. சென்னம்மாவிற்கு இதன் அர்த்தம் எதுவும் புரியவில்லை. ஆனால், தானும் தன் அண்ணனும் படித்து முடித்தாலும் வேலை கிடைக்காதாம் அதனால் ஏதாவது செய்யவில்லையென்றால் அவர்கள் சாதிக்காரப் பிள்ளைகள் தெருவில் நிற்க வேண்டியிருக்குமாம். அந்தப் பேச்சு அவளுடைய சிநேகதங்கள் சிலரிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொக்கிளைக்கு வேலை கிடைக்கும்; ஆனால், தன் அண்ணன் சின்னராசுவுக்கு வேலை கிடைக்காது. தன் மாமன் மகன், அத்தை மகன், தன் அண்ணனுடைய சிநேகிதர்களுக்கும் வேலை கிடைக்காது. நிலம் இருக்கும் திமிரில் சரியா படிக்காமல் திரியும் இந்த பண்ணாடைகளுக்கு வேலைதான் ஒரு கேடு. சென்னம்மவுக்கு மட்டும் ஒரு பெரிய ஆறுதல். தனக்கு பத்தாவதுக்கு மேல் படிப்பு இல்லை என்று ஏற்கனவே உறுதியாகிவிட்டது. சென்னம்மா பொக்கிளையிடம் சொன்னாள். “நீ நல்லா படிக்கிற, அதே சமயம் நெறய பெரிய படிப்பா படி. அக்கா மாதிரி கொஞ்சம் படிச்சிட்டு வேலைக்கு அப்பிளிகேஷன் போட்டுட்டு காத்திருக்கக் கூடாது.’

 

3

சென்னம்மாவும் பொக்கிளையும் ஒம்பதாவது முடித்து முழுப்பரிட்சையில் இருந்த போதுதான் அது நடந்தது. சின்னராசுவும் அவனுடைய சிநேகங்களும் பத்தாவதில் இரண்டு ஒன்று சப்ஜெக்டுகளில் பெயிலாக அரியர் எழுதி பாஸாகி விடுவதாகச் சொல்லிவிட்டு கவலையில்லாமல் இருந்தார்கள்.

தினத்தந்தியில் நெம்பர் வரும் என அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது வீட்டுப் பக்கம் போகாமல் சின்ன வீராம்பட்டனத்தில் போய் பதுங்கிக் கொண்டனர். பிள்ளைகள் பெயிலானால் பாலிடாயில் குடித்துச் செத்துப் போவார்கள் என்று பயப்படும் பெற்றோர்கள் எப்படியாவது பிள்ளைகள் உயிரோடு வந்தால் போதும் என்று புலம்பிக்கொண்டு சொந்தக்காரர்கள் வீடுகளில் தேடுவது தெரிந்த பிறகு, யாராவது ஒரு சொந்தக்காரர் வீட்டிற்குப் போயிருந்து, “எஞ்சாமி பெயிலானா என்னடா கண்ணு, நெலம் இருக்கு, தோப்பு இருக்கு, உட்கார்ந்து சாப்பிடலாமே” என்ற தெய்வ வாக்கைக் கேட்டபடி வீடு வந்து சேர்வார்கள்.

ஒரு வாரத்திற்கு கறியும் மீனுமாக சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்கும் போய் கொண்டாடித் தீர்ப்பார்கள். பெண்கள் பாசானால்தான் வீட்டில் உள்ளவர்களுக்கு கவலை. பத்தாவது பாசான பெண்ணைக் கட்டிக்கொள்ள ஆண்பிள்ளைகள் பயப்படும் காலம் அது.

சின்னராசுவும் அவனுடைய நாலு சிநேகிதர்களும் சின்ன வீராம்பட்டினத்தில் பதுங்கியிருந்த போது மெட்ராசிலிருந்து வந்திருந்த இரண்டு பேரைச் சந்தித்தார்கள். தென்னந்தோப்பில் கள்ளு குடித்து மீன் வறுவல் சாப்பிட்டு ஒரு குடிசையில் தங்கியிருந்த அந்த இருவரும் அவர்களுக்கு பிராந்தியும் கறியும் சிகரெட்டும் கொடுத்து ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியதுடன் மெட்ராஸின் மாய உலகம் பத்தியும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

அதில் சின்னராசுவின் நண்பர்களை மிகவும் ஆட்டிவைத்த ஒரு செய்தி இருந்தது. மெட்ராஸில் பல மாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் சினிமா நடிகைகளை விட அழகும் இளமையும் கொண்டவர்கள். அவர்களுடன் உல்லாசமாக நாட்களைக் கழித்துவிட்டு ஓய்வெடுக்கத்தான் இங்கே வந்திருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

அதில் ஒரு ஆள், “இன்னும் ஒருவாரத்தில் இரண்டு பெண்கள் பாண்டிச்சேரியில் வந்து தங்க போறாங்க. அவங்க ரெண்டுநாளு சின்னவீராம்பட்டினம், பெரிய வீராம்பட்டினம் பார்க்க வருவாங்க” என்றான்.

இன்னொருவன் அவனை தலையைச் சாய்த்துப் பார்த்தான், “என்ன செயபாலு உனக்குத் தெரியாதா, இன்னிக்குதான் செய்தி வந்தது” என்றான் செய்தி சொன்னவன்.

“ஆமாம் வரதா சொல்லியிருந்தாளுவ; ஆனா, எப்போன்னு சொல்லாம இல்ல இருந்தாளுவ.” அவனுடைய பேச்சில் ஒரு இளக்காரம் இருந்தது. “பிராந்தி, பிரியாணின்னு வாங்கிக் கொடுத்தே மாளேதே நமக்கு. ஒரு ஆயிரம் ரெண்டாயிரத்த முழுங்காம போக மாட்டாளுவளே. பாண்டிச்சேரிக்கு வந்தாலே குடியும் தூக்கமும்தான். தொட்டாலும் தெரியாது, இழுத்தாலும் தெரியாது, அப்படியில்ல கெடப்பாளுவ. ஐதராபாத் சரக்குங்க வேற. சினிமாவுல குரூப் டான்சுல பின்னால ஆடர திமிருவேற. என்ன தலைவரே செய்யறது?”

“என்னடா தம்பி சின்ன புள்ளங்க, இந்த தம்பிங்க வயசுகூட இருக்காது. ஆசை இருக்காதா? ஆண்டு அனுபவிச்சி இருந்தா பரவாயில்லை. இதுல யாராவது ஒருத்தி பெரிய நடிகையா ஆயி நம்பளயே தோட்டத்து வேலைக்காரனா இருக்கச் சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.”

அவர்களின் பேச்சு சின்னராசுவையும் அவனுடைய சிநேகிதங்களையும் சிவ்வென்று உயரே தூக்கி பொட்டென்று கீழே போட்டது. நரம்புகள் அதிர்ந்து நாடி கடகடத்தது. என்ன சொல்வதென்றே தெரியாமல் ஒடுங்கிப் போய் இருந்தார்கள்.

“அட நீ வேற சின்ன புள்ளங்க இருக்கிறப்போ எதையெதையோ பேசி மனச கெடுக்கிற. ஏற்கனவே பரிச்சல பெயிலாயி இங்கப் பதுங்கிக் கிடக்குதுங்க. நம்மள மாதிரி இதுவளும் பொண்ணு குடின்னு வீணா போகணுமா என்ன? பொண்ணு சொகம், குடி கும்மாளம் எல்லாம் எத்தன நாளைக்கு சொல்லு? வூடு நெலம்ணு நிம்மதியா உக்கார வேணாமா என்ன?’

“இப்ப என்னகொற தலைவா, எல்லாத்தையும் அனுபவிச்சாலும் சேத்துத்தானே வச்சிருக்கோம், இன்னும் நாலு வருஷமோ அஞ்சு வருஷமோ, பண்ரூட்டி, நெய்வேலி, செங்கல்பட்டுன்னு ஏதாவது ஒரு எடத்தில் வீடும் நெலமுமா வாழாமலா போகப் போறோம், சொல்லு?”

“நீங்க இதையெல்லாம் கண்டுக்காதிங்க தங்கம், படிங்க வேலைக்குப் போங்க. வீட்டுல பாக்கர பொண்ண கட்டிக்கிட்டு பிள்ளக் குட்டியோட பிரச்சினையில்லாம வாழுங்க.” அவர்களின் கடைசி அறிவுரை சின்னராசுவின் நண்பர்களைச் சீண்டிவிட்டது.

“அண்ணா என்ன செஞ்சா உங்கள மாதிரி மெட்ராசுல வந்து வேற மாதிரி வாழலாம் சொல்லுங்க?’

“அதெல்லாம் உங்களுக்கு ஆகாது கண்ணுங்களா, உயிரைக் கொடுத்து உயிரை எடுக்கிற வேலை, நடந்தா லட்சாதிபதி, மாட்டுனா எலும்பு ஒடைஞ்சிடும்.”

“நீங்க இதுவர மாட்டி இருக்கிங்களா?”

“நாங்களா, மாட்டியிருந்தா இங்க வந்து எறா வறுவல் சாப்பிட்டுக்கிட்டு ஒக்காந்திருக்க முடியுமா? சொல்லு.’

“அப்ப நாங்க மட்டும் எப்படி மாட்டிக்குவோம்னு சொல்றிங்க? இன்னா செய்யனும்? சொல்லிக்கொடுங்க நாங்க செய்யிறோம்.” மெட்ராஸ்காரர்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர்.

“நம்பிச் சொல்லலாமா, அண்ணே?”

“என்ன தம்பி மூணு நாலு நாளா பழகியிருக்கோம். முகத்தை பார்த்தாலே சொல்லிடுவேன். நம்பிக்கையான புள்ளங்கதான். அது மட்டுமில்லை வெளிய சொன்னா அதுங்களுக்கும் ஆபத்துத்தானே?’

அந்த மாய வலை அப்படித்தான் அங்கு பின்னப்பட்டது. “அந்தப் புள்ளங்க வறதுக்குள்ள செல வேலைகள செஞ்சிட்டா, கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.’

“இதோ பாருங்க கண்ணுங்களா, வேலைய முடிச்சி அதுக்கான பங்க வாங்கிட்டு சந்தோஷமா இருக்கணும். அடுத்து ஒரு வேலை பிறகு கொஞ்ச நாள் சும்மா இருக்கணும். இந்த புள்ளங்க கிட்ட நெருங்கிப் பழகினா, சின்னப் புள்ளங்க அதுவளும் உங்கள உடாதுங்க நீங்களும் பணத்துள பாதியும் முக்காலுமா கொடுத்துட்டு சும்மா நிக்கணும் பாத்து நடந்துக்குங்க. இந்தத் தொழில்ல இதுதான் ஒரு பிரச்சினை. பொம்பள பழக்கம் கூடவே கூடாது. அப்பிடியே இருந்தாலும் ரெண்டு தடவைக்கு மேல ஒரு புள்ளய பாக்கக் கூடாது. ஒட்டினா ஒட்டினதுதான். ஒன்று ரெண்டுன்னு போயிகிட்டே இருக்கும். எங்கள பாரு, இதுங்க கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு இங்க வந்து ஒளிஞ்சிக்கிட்டு கிடக்கறோம்.’

அவர்களின் பேச்சு புள்ளைகளை ஒரு உலுக்க உலுக்கி ஒரு குலுக்கு குலுக்கி சுழற்றிப் போட்டது. என்ன சொன்னாலும் செய்து விட வேண்டியதுதான். மெட்ராஸ்காரர்கள் சொன்னார்கள். “முதல்ல வூட்டுக்குப் போய் சேருங்க. நல்லா ஒரு வாரம் சாப்பிட்டு தூங்கி பெறகு இங்க வாங்க, என்ன. ஆனா, நீங்க நாலு பேரு போதாது, இன்னும் ஒன்னு ரெண்டு பேரு வேணும். நம்பிக்கையான ஆளுங்களா, உங்க சிநேகிதங்களா பாத்து சேத்துக்குங்க. இதுல ஒன்னு இருக்கு, அவங்ககிட்ட முழு விவரமும் சொல்லக்கூடாது. தெரியுதா. நீங்க போறப்போ கூட வரணும். கொடுக்கிறத வாங்கிகிட்டு போயிடனும். ரெண்டு மூணு வேல முடிஞ்சதும் ஆள மாத்திடனும். நல்லா ஞாபகம் வச்சிக்குங்க. நீங்க மாட்டினா, நாங்க காப்பத்த முடியாது. எங்கள யாராளும் கண்டு பிடிக்க முடியாது. தெரியுதா?” அவர்களின் பேச்சு தண்ணீரில் இட்ட உப்புபோல அவர்களுக்குள் புகுந்துவிட்டது.

வீடு வந்து ஆறு நாள் கழித்து மெட்ராஸ்காரர்களை பாண்டிச்சேரியில் ஒரு லாட்ஜில் சந்தித்தார்கள். தொழிலின் தொடக்கம் எளிமையாக இருந்தது. ஆளுக்கு ஒரு கட்டு மஞ்சள் துணி, கோயிலுக்கு வேண்டுதல் செய்து கொண்டவர்கள் எடுத்துச் செல்பவது போல ஆளுக்கு ஒரு திசை.

வெவ்வேறு ஊர்களின் கோயில்களில் காத்திருக்க வேண்டியது. அங்கே வரும் ஆட்கள் சிலர் வெத்திலைப்பாக்கு கொடுத்து என்ன தம்பி பிரசாதம் கொண்டு வந்திருக்கியா என்பார்கள். வெத்திலையை எண்ணிப் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை இருக்கும். பிறகு பைகள் கைமாறும். போனது தெரியாதது போல திரும்பி வர வேண்டியதுதான்.

மெட்ராஸ்காரர்கள் எங்காவது ஒரு இடத்தில் வந்து பையை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் பணத்தை அவர்களுக்கு கொடுப்பார்கள். சின்னராசுவுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மெட்ராஸ் புள்ளங்க வந்தா கொஞ்சம் செலவு செய்யலாம். பெறகு மெட்ராசுக்கே போனாலும் போகலாம்.

வேலையோ வாரம் ஒருமுறை என விடாமல் தொடர்ந்தது. பணமோ பெருகிக்கொண்டிருந்தது. மெட்ராஸிலிருந்து புள்ளைகள் வருவது தள்ளிப் போனது. “கேரளா பக்கம் ஒரு குரூப் டான்சாம் வெள்ளை டிரஸ்ஸில் இவங்க ஆடனுமாம், போயிருக்குதுங்க. வர கொஞ்சம் நாளாவும். அதுவும் நல்லதுதான் ரெண்டு பேரு வரதா சொல்லியிருந்தாங்க. இப்போ மூணு பேரு வரதா சேதி வந்திருக்கு.”

வெள்ளை டிரஸ் என்ற வார்த்தை சின்னராசு குழுவினரை கட்டுமரத்தில் ஏத்தி கடலில் தள்ளிவிட்டது. ஆடி அலைந்து ஒரு நிலைக்கு வர ஒரு வாரமானது.

இரண்டு மாதங்கள் பெரிய வருமானம். கொஞ்சம்தான் செலவு. அந்த முறை சின்னராசு மாதையனை துணைக்குச் சேர்த்துக்கொண்டான். மாதையன் பொக்கிளையின் உறவுக்கார பெரியம்மா பையன். பத்தாவதில் கொஞ்சமாக மார்க் வாங்கியிருந்தாலும் பாஸாகியிருந்தான். ஆனால், ஹையர் செக்கண்டிரியில் இடம் கிடைக்காமல் அரவிந்தர் ஆசிரமத்தில் தோட்ட வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

அவனை எதேச்சையாப் பார்த்த சின்னராசு அதுவரை இல்லாத பாசத்துடன், “என்ன மாதயா பாசாகியும் மேல படிக்க முடியாம போச்சே உங்களுக்குதான் ‘ரெஷவேஷம்’ இருக்கே. ஏன் இப்படி?” என்று கவலையுடன் கேட்டான். “அதுவா, எடம் கிடைச்சாலும் பாகூர் போகணும். சைக்கிள் இல்ல. எங்க வீட்டிலயும் நிலமை சரியில்லை. ரிக்ஷா விழுந்து அப்பாவுக்கு காலுல அடி. ஒரு வருஷம் கூட ஆகுமாம். அப்படியும் கூட மறுபடி வண்டியெல்லாம் ஓட்ட முடியாதாம். என்னமோ, அம்மா செஞ்ச வேலை எனக்குக் கெடச்சிது.”

அவனுடைய துயரத்தைப் போக்க பிராந்தி வாங்கிக்கொடுத்து, எறா வறுவல் விருந்தும் கொடுத்து அன்று அனுப்பி வைத்தான் சின்னராசு. அதற்குப் பிறகு அடிக்கடி அரவிந்தர் ஆசிரமம் பக்கம் சின்னராசுவின் புது சைக்கிள் போய்வரத் தொடங்கியது.

துப்புராயப் பேட்டையில் ஒரு வீட்டில் விருந்து ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்தது. சினிமா, பிராந்தி, வறுத்த கறி என மயக்கும் ஒரு உலகம். மாதையன் அந்த வலையில் சிக்கிக்கொள்வது தெரியாலேயே சிக்கிக்கொண்டான்.

ஒரு நாள் நூறு ரூபாயைக் கொடுத்ததுடன் புது பேண்டும் சட்டையும் வாங்கிக் கொடுத்தான் சின்னராசு. அன்பின் பிடியில் மாதையன் அவன் சொல்வதைச் செய்யும் உற்ற நண்பனாக மாறினான். வேலையை விட வேண்டாம். ஞாயிற்று கிழமை மட்டும் வேலை செய்தால் போதும். அதுவும் பஸ்ஸில் தன்னுடன் வருவதுதான் வேலை. மாதைய்யனுக்கு அது ஒரு புதிய அனுபவம்.

4

முழுப் பரிட்சை முடியுமா என்று காத்திருந்த பொக்கிளையும் சென்னம்மாவும் மீண்டும் பள்ளிக் கூடம் போகத் தொடங்கிய பின் ஒரு வாரத்துக்குப் பேசி மாளவில்லை. ரெண்டு பேருமே உயரமாக வளர்ந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். புதிதாக ஒரு உடை சேர்ந்துகொண்டதாக பொக்கிளை சொன்னாள். அதனை வாங்கித் தந்தது அக்காதான் என்றாள். சென்னம்மாவிற்கு அது கிடைக்க இன்னும் நாளாகும் என்றபொழுது, வீட்டுக்கு வரச் சொல்லி அக்காவிடம் அதனைத் தெரிவித்து ஒரு ரகசிய ஏற்பாடும் செய்தாள். அத பதுக்கி வைத்து அணிந்துகொள்ள சென்னம்மா மெல்லக் கற்றுக்கொண்டாள்.

இது எல்லாவற்றையும் விட, “பத்தாவது பரிச்சையில் பள்ளிக்கூடத்தில் பர்ஸ்ட் வரவேண்டும் நீ” என்பதுதான் சென்னம்மாவின் அன்புக் கட்டளையாக இருந்தது.

“வரலாம் சென்னா, அது ஒன்னும் கஷ்டம் இல்ல, ஆனா, பாண்டியிலேயே பர்ஸட் மார்க் வாங்கினா இன்னும் நல்லா இருக்குமில்ல?”

சென்னம்மா, “அப்படி சொல்லுடி என் அந்திமல்லி, அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்று கன்னத்தைத் தடவி திருஷ்டி கழித்தாள்.

“என்னடி இது மரணதேவி மண்ணென்ன தேவின்னுட்டு, நாம ரெண்டு பேருமே நல்ல மார்க் எடுக்குறோம். பர்ஸ்ட் குரூப் போரோம், சரியா?”

சென்னம்மா முகம் சற்று மங்கியது. “பத்தாவதோட படிப்பு நின்னுப் போகுண்டி எனக்கு.”

இப்போது பொக்கிளையின் முகம் இருண்டு போனது. அது அவளுக்கு முன்பே தெரிந்த ஒன்றுதான்.

பண்ருட்டியில் ஒரு மாமன் மகனுக்கு அவள் பெரியவளானதுமே பேசி வைத்துவிட்டார்கள். இதில் திண்டிவனம் மாமா வீட்டுக்காரர்களுக்கு வருத்தம். போக்குவரத்து நின்று போனது. பொக்கிளை சொன்னாள்: “நீதானே சொன்ன நெறைய நெலம் இருக்கு, டிராக்டர் இருக்குன்னு. நிம்மதியா இரு என்ன?”

“பாப்போம். எப்படியோ இந்த அண்ணங்கிட்ட இருந்து தப்பிச்சா போதும். அந்தக் கூட்டம் மொத்தமும் புட்டுக்கிச்சி, இனிமே பின்னாடி பாக்கிறது முன்னாடி பாக்கிறதெல்லாம் இல்ல.”

“தோ பாரு சென்னு, இனிமே எவனாவது பின்னால வந்தா இதால ஒரு கிழி கிழின்னு எங்க ஆயா கொடுத்திச்சி, இத பாரு.” பையில் இருந்து சாண் நீளமுள்ள ஒரு தோல் உறையை எடுத்துக் காட்டினாள் பொக்கிளை.

“என்னப்பா இது?” உருவிப் பாரேன் பொக்கிளை சொல்ல, மெல்ல உருவிய சென்னம்மாவின் கண்கள் விரிந்தன. தோல் அறுக்கும் பட்டைக் கத்தி.

“இது என்னோட ஆயாவுக்கு அவங்க ஆயா கொடுத்ததாம். மாசம் ஒருமுறை தோலுப் பட்டையில தீத்தி வச்சா போதும். தொட்டுப் பாத்தாலே வெரலு கிழிஞ்சிடும்.”

சென்னம்மாவிற்கு ஆச்சரியமாக இல்லை. அவளே பார்த்திருக்கிறாள் பொக்கிளையின் பாட்டி மாட்டு வார் அறுக்க இந்தக் கத்தியைப் பயன்படுத்துவார், பிறகு உறையில் போட்டு முந்தானையில் முடிந்துகொள்வார். அவர் சுருக்குப் பையிலும் ஒரு கொத்து ஆயுதங்கள் இருக்கும். கொக்கி போல, சின்ன கத்திபோல, கோணி ஊசி போல. அதில் உள்ள முள்ளு வாங்கியைத் தவிர மற்றவை எதற்கு என்று பொக்கிளைக்குத் தெரியாது.

ஒரு முறை சென்னம்மா கேட்டாள்: “ஆயா என்ன இது, ஆப்ரேஷன் தேட்டருல இருக்கிற மாதிரி இத்தனை ஆயுதம்?”

ஆயா சொன்னார்: “ஆமாம் கண்ணு ஆப்பரேஷன்தான், அளவுக்கு மீறினா ஆம்படையானா இருந்தாலும் ஆப்பரேஷன் பன்னிவிட்டுடனும். எங்க பொண்ணுங்கள இவனுவ சும்மாவா விடுவாணுங்க? என்னயே கல்யானம் ஆயி வந்தப் புதிசில ஊரு ஆளுங்க, ‘என்ன மணி இடுப்பு இப்படி பளபளன்னு இருக்கே என்னத்தை வச்சி தீட்டி வச்சிருக்கன்னு’ கேப்பானுவ. முந்தானையில முடிஞ்சிருக்கிற சூரிக்கத்திய எடுத்து மூஞ்சிக்கு நேரா காட்டி, ‘இதாலதான் அண்ணே தீட்டி வச்சிருக்கே’ன்னு சொல்லுவேன்.”

“நீ நல்லா இருப்ப தாயி, ஆனாலும் சொல்லறன், உங்களுக்கு உங்க சாதியே கேடயம் மாதிரிதான். ஆனா, எங்களுக்கு?” ஆயா சொன்னது சென்னம்மாவை உள்ளுக்குள் குத்திக் கிழித்தாலும், அது உண்மைதான், இந்த கேடுகெட்ட அண்ணனும் அவங்கூட இருக்கிற நாய்ங்களும் வெற எதுக்காக இப்படி நடந்துக்குதுங்க?

பொக்கிளை காட்டிய சூரிக் கத்தியை வைத்து பேப்பரை வெட்டிப் பார்த்த சென்னம்மா பயந்துதான் போனாள். அது பிளேடைவிட ஷார்ப்பாக பால் பொங்கும் போது வரும் ஒரு சத்தத்துடன் பேப்பரைக் கிழித்தது.

“பொக்கிளை உண்மையாவே இதால பசங்கள கிழிப்பியா?”

“கிழிக்கணும்னா கிழிக்கலாம், ஆனா, இத சும்மா புடிக்கிற முறையில கைல புடிச்சிச் காட்டினாலே ஓடிப் போயிடும் இந்த நாயிங்க. எங்க அம்மா ரெண்டாவதுமுறை முடிஞ்சி இது வரைக்கும் தனியாத்தானே வரும். எவனாவது முறைச்சி பார்த்து நின்னிருக்கானா சொல்லு? அம்மா பயப்படறதே இல்ல. ஆலைல கூட சாடைமாடையா பேசினா, ‘நூலு அறுக்கனுமா?’ன்னு கேக்ககுமாம் எங்க அம்மா. எல்லாம் மனசிலதாம்பா இருக்கு.”

சென்னம்மாவுக்கு பொக்கிளைக்குள் இப்படி ஒரு உருவம் இருப்பது அப்பத்தான் தெரிஞ்சது. தங்கள் பின்னால் வரும் பசங்கள் பேசுவதைக் கேட்டும், ‘கெடக்குது நாயிங்க, நாம பாட்டும் கேக்காத மாறி போவோம்’ என்பதற்குள்ளே இருந்த அந்த சூரிக் கத்திய சென்னம்பாவே அப்பொழுதான் புரிந்துகொண்டாள்.

“சரி சரி பையில வையி. இதுக்கெல்லாம் தேவை வராது பொக்கிளை” என்றாள் சென்னம்மா. அவளுக்கு சின்னராசுவை நினைத்துதான் கொஞ்சம் பயம் வந்தது. அதே சமயம் பொக்கிளை பற்றி அவளுக்குள் இருந்த பயம் மறைந்து போனது.

 

5

சின்னராசுவும் அவனுடைய கூட்டாளிகளும் மெட்ராஸ் கும்பலுடன் நெருக்கமாகிப் போனார்கள். அங்கிருந்த இரண்டு பேருடன் வேறு சிலரும் வந்து குடித்து விருந்து உண்டு ஓய்வவெடுத்துச் சென்றார்கள். சிலர் குடும்பமாக பெண்டாட்டி பிள்ளைகளுடன் வந்தார்கள். அவர்கள் கொண்டு வரும் அலுமினியக் குண்டான்களில் சரக்கு இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் இருந்த பின் அவர்கள் போய்விடுவார்கள். சின்னராசுவுக்கு தான் கொண்டு செல்வதும் கொண்டு வருவதும் என்னவென்று தெரியாமலேயே இருந்ததில் ஒரு வருத்தம் இருந்தது. ஒரு முறை மஞ்சள் பையை மாற்றி வரும் வழியில் அதனைப் பிரித்துப் பார்த்தான். இரண்டு கட்டு இருவது ரூபாய் நோட்டுகள். அவனுக்கு நம்பவே முடியவில்லை. அப்படியென்றால் இதுவரை தான் புத்தகப் பையிலோ பிரசாதப் பையிலோ வைத்துத் தூக்கிச் சென்றது பணக்கட்டுகளா? பணத்தை எடுத்து வருவதில் என்ன பிரச்சினை?

அவன் திரும்பி வந்து பையைக் கொடுத்தான். மெட்ராஸ்காரன் உள்ளே போய்விட்டு வந்து அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு, “சின்னராசு இனிமே பையை அவுத்துப் பார்க்கிற வேலை வேணாம். இது மொத தடவ, சின்ன பிள்ள அதனால விட்டுடறேன். இனிமே இப்படி விட மாட்டேன் தெரியுமா” என்றான். தான் பிரித்தது எப்படி அண்ணனுக்குத் தெரிந்தது. “அண்ணா நான் பிரிக்கில” என்றான். “இல்ல தங்கம் நீ பிரிச்சி பார்த்து கட்டியிருக்க. பொய் சொல்ல வேணாம். நீ இதுல இருந்து ஒரு நோட்ட கூட எடுக்கல. அதனாலதான் இப்படி அன்பா பேசிக்கிட்டு இருக்கிறேன். இனிமே இப்படி செய்யாத. அத்தோட பொய்யும் சொல்லாத. நம்ம தொழிலு நம்பிக்கை அடிப்படையிலதான் நடக்குது. சத்தியத்துக்கு கட்டுப்படனும் தெரியுதா.”

மெட்ராஸ் அண்ணன் பேசிய முறை சின்னராசுவை குலைநடுங்க வைத்தது. “உனக்கு இதுக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சி போச்சி இல்ல, ஆனா, மத்தவங்களுக்கு தெரிஞ்சிதுன்னா, ஆந்திராவில இருந்து ஒரு கூட்டம் வரும். அத்தனை பேரையும் ரெண்டா வகுந்து கடல்ல போட்டுட்டு போயிகிட்டே இருக்கும். ஞாபகம் வச்சிக்க. பயப்படாத அதெல்லாம் நடக்காது. இப்போ இந்த பிராந்திய குடி.”

அன்று குடித்து விட்டு மெட்ராஸ் அண்ணன் காலில் எட்டு முறை விழுந்து அழுது மன்னிப்பு கேட்டுத் தூங்கிப் போனான் சின்னராசு. ஒரு இரண்டு வாரம் அவனுக்கு ஒரு சின்ன ஓய்வு. ஆனால், அதற்குப் பிறகு கனமான பைகள் அவன் வழியாவே மாறின. கோயில்கள், சவுக்குத் தோப்புகள், ஆத்தங்கரைகள் என இடங்கள் விரிந்தன. பிறகு விழுப்புரம், திண்டிவனம், கடலூர் என நேராகக் கடைகளுக்கே போய் வரும் வேலைகள் சின்னராசுவுக்குத் தரப்பட்டன.

அவனுடைய சகாக்களுக்கு சின்ன வேலைகள்தான். சின்னராசுவுடன் மாதையன் இப்போது முழு நேரம் இருக்க வேண்டியிருந்தது. வீட்டில் அவன் லாரி கிளினராக சேர்ந்திருப்பதாக சொல்லியிருந்தான். அதில் அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

6

பொக்கிளையும் சென்னம்மாவும் சினிமாவுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு படித்துக் கொண்டிருந்தார்கள். மற்ற சப்ஜெக்டுகள் ஈஸிதான்; ஆனால், இங்கிலீஷ் மனப்பாடம் செய்ய வேண்டும்; பிறகு எழுதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்க்க வேண்டும். வாத்தியார்களும் அதைச் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை. வெறும் கைடைக் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்லி எழுது எழுது என்று சொல்லி உயிரை வாங்கிவிடுவார்கள். ஒன்பதாவது வரை எதையும் சொல்லிக் கொடுக்காமல் பப்ளிக் எக்ஸாம் வரும் பொழுது கிராமர் குராமர் என்று கழுத்தறுப்பார்கள். ரென் அண்ட் மார்டின் படிக்கும் கான்வெண்டு பசங்களுடன் போட்டிப் போட்டு பாசாக வேண்டும். பிறகு பதினொன்னாவதில் அப்படியே இங்கிலீஷ் மீடியம்.

பொக்கிளைக்கு அதிக பதற்றமா இருந்தது. இந்த இங்கிலீஷை கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டால் போதும், மற்றதெல்லாம் மல்லிகை பூ கட்டுவது மாதிரிதான். சென்னம்மாவுக்கு பாஸானால், போதும். ஆனால், பொக்கிளைதான், “பாஸானால் நல்ல மார்க் எடுத்து பாஸாகனும், எனக்காக, தெரியுமா” என்று சொல்லிவிட்டாள்.

மாடல் எக்ஸாமில் இருவருமே நல்ல மார்க் எடுத்த போது அப்பாடா என்று இருந்தது. ஒரு சினிமா பாக்க வேண்டும். ‘முள்ளும் மலரும்’ என்று ஒரு படம் ஊரில் வந்து பலரை அழவைத்துக் கொண்டிருந்தது. அந்தப் படம் அவர்களையும் அழவைத்தது. அதில் வரும் அண்ணன் போல தனக்கு இல்லையே என்று சென்னம்மா ஏங்கினாள். பொக்கிளைக்கு, ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடல் மனப்பாடமாகிவிட்டது. பரிட்சைக்குப் பிறகு பாடிப் பழக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள். ஷோபாவை இருவருக்குமே பிடித்துப் போனது. ‘அடிப்பெண்ணே’ என்ற பாடலில் வரும் ஷோபாவின் முகம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. பொக்கிளையின் பக்கத்தில் போய் ஒட்டுக் கேட்டால், ‘செந்தாழம் பூவில்’ஹம்மிங் கேட்டபடி இருந்தது. அது பாடலாக மாற இன்னும் கொஞ்ச நாளாகலாம்.

7

சின்னராசு அன்று இரண்டு பெரிய சுமைகளைச் சுமந்துச் செல்ல வேண்டியிருந்தது. உரம் சாக்கில் இரண்டு மூட்டைகள். மாதையனும் சின்ன ராசுவும் வடலூருக்குப் போனார்கள். திரும்பி வரும்போது பாதி சுமையுடைய இரண்டு மூட்டைகளைச் சுமந்து வந்தார்கள். ஒரு தோப்பைக் கடந்து வெளியே வந்த பொழுது. வெள்ளைச் சட்டையும் காக்கிப் பேண்டும் போட்ட மூன்று பேர் அவர்களை மறித்ததும் அவர்களுக்கு உயிரே போனது போல ஆகிவிட்டது.

இதுவரை இல்லாத கனமான மூட்டைகள். வந்தவர்களில் ஒரு ஆள் தெரிந்த முகம் போல இருந்தது. ஆனால், எல்லாம் சில நிமிடங்களில் முடிந்து போனது. “உயிரோட போயிடுங்கடா பசங்களா. வாழ வேண்டிய வயசு, அதனால அனுப்பி வைக்கிறோம். இல்லன்னா கேப்பர் மலை ஜெயில்தான்.” இருவரும் தொண்டை வரண்டு அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள்.

மாதையன் கேட்டான். “சின்னராசு அதுல என்னப்பா இருக்கு?”

இனியும் சொல்லாமல் இருக்கமுடியாது. “அவ்வளவும் ரூபா நோட்டுடா” என்றான்.

“அப்ப இத்தன நாளும் நாம எடுத்துப் போனதும் எடுத்து வந்ததும் ரூபா நோட்டுதானா, புரியலையே.”

“எடுத்துப் போனது செஞ்சியில வச்சி அடிச்சது, எடுத்து வர்றது கவர்மெண்டு அடிச்சது.”

மாதையனுக்கு உண்மையாகவே பேண்ட் நனைந்துவிட்டது. அங்கே இருவரும் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தார்கள் என்பது தெரியாது. ஒரு கிணற்றில் குளித்து பேண்டை அலசிக் காயவைத்துப் போட்டுக்கொண்டு கிடைத்த பஸ்சை பிடித்து சின்னராசு பண்ருட்டியில் இருந்த மாமன் வீட்டுக்குப் போனான்.

அங்கே எதுவும் சொல்லாமல், வீட்டில் இருந்தால் பெயிலானது மனதை போட்டு படுத்துகிறது என்று சொல்லி இரண்டு நாள் விருந்து சாப்பிட்டான். மாதையனை மோட்டார் கொட்டாயில் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். சாப்பிட மட்டுமே அவன் வீட்டுக்கு வந்து சென்றான்.

என்ன செய்வது? எல்லாவற்றையும் மாமனிடம் சொல்லிவிட்டு தப்பிக்க வழி தேடமுடியுமா? முடியவே முடியாது. பாண்டிச்சேரிக்குப் போய் உண்மையைச் சொல்லி காலில் விழுந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா? அதுவும் முடியாது. எடுத்துச் செல்லும் சுமை தொலைந்தாலும் கொண்டு வரும் சுமை தொலையக் கூடாது என்ற கட்டளை அவன் நெஞ்சை அறுத்தது. மாதையனுக்கோ தான் எதைச் சுமந்து வந்தோம் என்பதையே சொல்லாமல் இதில் மாட்டிவிட்ட சின்னராசுவின் மீது கொலை வெறி வந்தது. ஆனால், ஒன்றும் செய்ய முடியாது.

அவனுக்குக் காய்ச்சல் வேறு வந்துவிட்டது. மூன்றாவது நாள் காலை கிணற்றில் குளித்துவிட்டு இட்டிலி சாப்பிட மாமன் வீட்டுக்கு வந்த போது திண்ணையில் மெட்ராஸ் அண்ணன்களும் அவர்களுடன் வேறு ஒரு ஆளும் உட்கார்ந்திருந்தனர். தூரத்தில் சின்னராசுவின் சிநேகிதன் சங்கரன் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. சின்னராசுவின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கெல்லாம் அழைத்துச் செல்லச் சொன்ன மெட்ராஸ் அண்ணன்கள் அன்று மாமன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

மாமா சின்னராசுவிடம், “என்ன ராசு இவங்களுக்கு ஏதோ நெலம் வாங்கித் தரதா சொல்லிட்டு இங்க வந்துட்டயாம். அவங்களும் அட்வான்ஸ் பணம் கொடுத்துட்டாங்களாம்.” என்றார்.

அவன் எதுவும் சொல்லாமல் மெட்ராஸ் அண்ணன்களைப் பார்த்தான். “பரவாயில்லை சின்னராசு இன்னிக்கு போயி முழுசா பேசி முடிச்சிடலாம் கௌம்பி வா” என்றார்கள். மாமா வீட்டில் வந்தவர்களுக்கும் இட்டிலி தோசை விருந்து நடந்தது. கிளம்பும் பொழுது மெட்ராஸ் அண்ணன் சின்னராசுவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டார்.

புதியவர் மாதைய்யன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். பாண்டிச்சேரி வந்து சேரும் வரை யாரும் எதுவும் பேசவே இல்லை, தோளில் இருந்த கையும் இறங்கவில்லை. பாண்டிச்சேரியில் பிரியாணி பிராந்தி பிறகு காலப்பட்டுக்கு காரில் பயணம். தோப்பில் இருந்த பங்காளாவில் இன்னும் சிலபேர் இருந்தார்கள்.

மெட்ராஸ் அண்ணன்தான் பேசினார். “என்ன சின்னராசு இதுக்கெல்லாம் பயப்படலாமா? இதெல்லாம் இந்தத் தொழிலுல சகஜம். நேரா வந்து சொல்லிட்டு வீட்டுல போயி ஓய்வெடுக்கணும். பெறகு அடுத்த வேலையைத் தொடங்கணும். ரெண்டு தடவை போய் வந்தா, நஷடம் சரியாயிடப் போவுது. இப்போ ஒரே ஒரு குறைதான். மாதையனுக்கும் தெரிஞ்சி போச்சி. இப்ப நாம ஒரு குடும்பமா ஆயிட்டோம் என்ன மாதைய்யா?”

“நஷ்டமோ லாபமோ நீங்க செஞ்ச வேலைக்கான சம்பளம் இது. போங்க வீட்டுல போயி ரெஸ்ட் எடுங்க. நாலு நாள் கழிச்சி வேற ஒன்னு பெரிசா செய்யறோம், என்ன? போ சின்னராசு, மாதைய்யா பத்திரம். நம்ம தொழில்ல அம்மாக்கிட்ட, பொண்டாட்டிகிட்ட, அக்கா தங்கச்சிங்க கிட்ட கூட உண்மைய சொல்லிடக்கூடாது. பணம் போனா வந்துடும், உயிரு வருமா சொல்லு?”

“இதுல செல பேருக்கு உயிருகூட போயிருக்கு. ஒங்கள உயிரோட விட்டானுவளே அதுவே பெரிசுதான். நீங்க காணாம போனதும் நாங்க உங்களுக்கு என்ன ஆயிடுச்சோன்னுதான் பயந்துட்டோம். பணம் போனா மசுரே போச்சி, நாம பாக்காத பணமா?”

சின்னராசுவும் மாதைய்யனும் தாங்கள் மெட்ராஸ் அண்ணன்களைத் தப்பாக நெனைச்சது பத்தி வருத்தப்பட்டபடி வீடு வந்த சேர்ந்தார்கள்.

சின்னராசு மாமன் வீட்டுக்குப் போனதைச் சொன்னான். “உங்க தங்கச்சி புருஷன பாக்க அவசரமா? சொல்லிட்டுப் போறதுதானே. அரசிக்கடைக்கு வந்த பண்ருட்டியாரு சொல்லிதான் நீ அங்க இருக்கிறதே தெரியும்.” அம்மாதான் அலுத்துக்கொண்டார். அப்பா வழக்கம் போல எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. விழுப்புரம் மண்டிக்குப் போய்வரச் சொல்லி டிராக்டரில் அனுப்பினார்.

சின்னராசுவின் சிநிநேகிதர்கள் கொஞ்ச நாளைக்கு பையெடுக்கிற வேலையில்லை என்று சொல்லி சேர்த்து வைத்திருந்த பணத்தில் சின்னதாக பெட்டிக் கடைகளை ஆரம்பித்து நடத்த ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள். சின்னராசுவுக்கும் இரண்டு வாரம் எதுவும் வேலையில்லை.

அன்று வெளியே போய் வந்தவனுக்கு சின்ன அதிர்ச்சி. மெட்ராஸ் அண்ணன்கள் கிராப்வெட்டி மழமழன்னு ஷேவ் செய்துகொண்டு வாத்தியார்கள் போல வீட்டுத் திண்ணையில் உக்கார்ந்திருந்தார்கள்.

அவன் தயங்கியபடி, “என்ன அண்ணா வீட்டுல தெரிஞ்சா” என்றான்.

“அதெல்லாம் பயப்படாத சின்னராசு. அம்மாவும் தங்கச்சியும் ஏற்கனவே எங்களுக்கு காப்பி, வடை எல்லாம் கொடுத்து கவனிச்சிட்டாங்க. டுடோரியல் வாத்தியாருங்க தானே நாங்க நீ ஏன் பயப்படனும்? போ உள்ள” என்று சிரித்தார்கள்.

உள்ளே போனவனிடம் அம்மா கேட்டார்: “என்னடா உங்க டுடோரியல் வாத்தியாருங்க வருவாங்கன்னு ஒரு வார்த்த சொல்றதில்லையா? பாரு சென்னம்மாவ அனுப்பி காப்பித்தூளு வங்கியாறச் சொன்னேன். பின் பக்கமா போயி நானு சூடா வடைய வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்தவங்கள கவனிக்கணுமில்ல?” சின்னராசுக்கு அப்பாடா என்று இருந்தது.

மெட்ராஸ் அண்ணன்கள், “சரிம்மா நாங்க கௌம்பறோம்” என்றார்கள். “இருங்க சாப்பிட்டுட்டு போகலாம்.” அம்மாவின் குரலில் அன்பு தெரிந்தது. அண்ணன்மார்கள் அன்புடன், “அடுத்த முற வரும்போது சாப்பிடறோம். இன்னிக்கு இன்னும் ஒரு தம்பிய பார்க்கனும். கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க” என்றார்கள். சென்னம்மாவிடம் தண்ணி எடுத்து வரச் சொன்னார் அம்மா. சென்னம்மாவிடம், “என்ன படிக்கிற பாப்பா” என்றார்கள் டுடோரியல் சார்கள்.

“டண்த் எக்ஸாம் எழுதப் போரேன் சார்” என்றாள் சென்னம்மா. “நல்லா எழுதனும் அண்ணன் மாறி கோட்ட விட்டுட்டு எங்ககிட்ட வந்து நிக்கக்கூடாது.” தண்ணிய குடித்து விட்டு, “சின்னராசு, மாதைய்யன் வீடு ஒனக்குத் தெரியுமா?” என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்தான். “அந்தப் புள்ள பிரைவேட்டா பிளஸ்டூ எழுதனும்னு சொல்லிச்சி, அதான்.” அவன் அவர்களுடன் கிளம்பினான்.

கார் அருந்ததிபுரம் நோக்கிச் சென்றது. மாதையன் அவர்களை எதிர்ப்பார்க்கவில்லை. அவனுடைய வீட்டில் உட்கார இடமில்லை. வந்தவர்கள், “உங்க சின்னம்மா வீடு பெரிசாமே. அங்க தோட்டத்துல உக்காந்து பேசலாமே” என்றார்கள். மாதையன் போய் கேட்டுவிட்டு வந்து அவர்களை அழைத்துப் போனான்.

அங்கும் டுடோரியல் வாத்தியார்கள்தான் பேசினார்கள். மாதையன் மரத்தில் ஏறி இளநி இறக்கி உள்ளே எடுத்துச் சென்றான். பொக்கிளை இளநி தண்ணீரை டம்ளர்களில் ஊற்றி தட்டில் எடுத்து வந்து தந்தாள். சின்னராசுவுக்கும் ஒரு டம்ளர்.

வந்தவர்கள் அவளிடமும், “பாப்பா என்ன படிக்கிற?” என்று கேட்டு தெரிந்துகொண்டார்கள். திரும்பி வரும்போது, “என்ன சின்னராசு, மாதைய்யன் தங்கச்சி இப்படி இருக்கிறா, மெட்ராஸ் வந்து சினிமாவுல சேந்தா பெரிய ஆளா ஆயிடுவா தெரியுமா?” என்றார்கள்.

அவனை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் பொழுது, “ஒரு வழியா அந்த புள்ளங்க வராங்களாம், இன்னும் ரெண்டு நாளுள மூணு பேரு வந்து ஊரச் சுத்திப் பாக்கணுமாம். நீயும் மாதைய்யனும் அவங்க கூட காருல போகணும். ஆனா, பொம்பள புள்ளங்க யாராவது கூட இருந்தா அவங்களுக்குத் தொணையா இருக்கும். ஆம்பள புள்ளங்க கூட போனா பாக்க ஒரு மாதிரி இருக்கும், பாக்கலாம்” என்று தயங்கியபடி சொல்லிவிட்டு, “நாளைக்கு ரெண்டு பேரும் வாங்க, அஜந்தா தேட்டரு பக்கம் இருக்கிற பாருக்கு.” கட்டளையும் தந்து விட்டு காரில் ஏறிப் போனார்கள்.

சின்னராசு, மாதையனைப் பார்க்கப் போனான். “நாளைக்கு ஒரு பெரிய வேலை இருக்குப்பா” என்று சொல்லிவிட்டு, புள்ளகள் வருவதைப் பற்றியும் சொன்னான். மாதையன் குழப்பத்துடன் அவனைப் பார்த்தான். “நாமதான் அவங்களுக்கு கூடமாட இருக்கணுமாம்” என்று கண்ணைச் சிமிட்டினான். தன் சிநேகிதர்களிடம் இதைப் பற்றி மூச்சுவிடக்கூடாது என்பது அவனுக்குத் தெரியும்.

8

சென்னம்மா, பொக்கிளையைப் பார்க்க அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தாள். இன்னும் மூன்று நாளில் பரிட்சை. அதற்குள் கொஞ்சம் அரட்டை அடிக்க வேண்டும். கொஞ்சம் தமிழ் இலக்கணமும் கேட்க வேணும்.

மதியம் சாப்பிட்டு விட்டுத் தோட்டத்தில் உக்கார்ந்து படித்துக் கொண்டிருந்தபோது மாதையன் வந்தான். “சின்னராசு வந்திருக்குது” என்றான். சென்னம்மாவுக்கு ஒன்னும் புரியவில்லை. பொக்கிளை, “வரச்சொல்லு” என்றாள்.

வந்தவன் கட்டிலில் உட்கார்ந்து மாதையனைப் பார்த்தான். மாதையன், “அன்னிக்கு வந்தாங்களே டுடோரியல் சாருங்க. அவங்களோட வீட்டுக்கார அம்மாங்க அரிக்கமேடு பாக்கணும்னு ஆசைப்படறாங்களாம். ஆம்பிளைப் பிள்ளைங்ககூட காருல நெருக்கியடிச்சுப் போக ஒரு மாதிரி இருக்காம். அதுதான் நீங்க ரெண்டு பேரும் வந்து எடத்தைச் சுத்திக் காட்டி அழைச்சிட்டு வர முடியுமான்னு சாருங்க கேட்டாங்க.”

“அங்க போகணும்னா அஞ்சு மணிக்குள்ள போயி ஆறு ஆறரைக்குத் திரும்பி வந்துடனும்” என்றாள் சென்னம்மா. “அவங்க வீராம்பட்டிணம் கோயிலுக்கும் போகணுமாம்.” சின்னராசு சொன்னான்.

நாலு மணிக்கு கார் வந்து தூரத்தில் நின்றது. காரில் டிரைவரும் மாதையனும் மட்டும் இருந்தார்கள். பொக்கிளையும் சென்னம்மாவும் பின் சீட்டில் உட்கார கார் கொஞ்சம் வேகமாகவே சென்றது.

சென்னம்மா பொக்கிளையின் தாவணியை இழுத்துவிட்டுச் சரிசெய்தாள். பொக்கிளை சென்னம்மாவின் சடையை நுனியில் பிரித்து மீண்டும் பின்னிவிட்டாள்.

கார் ஒரு முடக்கில் நின்றபோது சின்னராசு வந்து ஏறிக்கொண்டான். அவன் சென்னம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். கார் எந்தப் பக்கம் போகிறதென்பது கொஞ்ச நேரம் தெரியவில்லை. இன்னொரு கார் வந்து சேர்ந்துகொள்ள இரண்டும் முன்னும் பின்னுமாகச் சென்றன. மற்றொரு காரில் பெண்கள் இருக்கிறார்கள் என்றான் சின்னராசு. அரிக்க மேடு பக்கம் வந்தும் நிற்காமல் இரண்டு கார்களும் மேலே சென்றன.

மாதையன், “என்ன டிரைவர் இங்கதானே அரிக்கமேடு இருக்கு” என்றான். “முதல்ல சின்ன வீராம்பட்டினம் போறாங்களாம், கையை காட்டினாங்க.” டிரைவர் சொல்லிவிட்டு வேகத்தை அதிகமாக்கினான். கொஞ்சம்போல இருட்டு இறங்கிக் கொண்டிருந்தது.

9

ஹால் டிக்கெட் வாங்க பொக்கிளையும் சென்னம்மாவும் மணவெளி பள்ளிக்கூடம் போன அன்று ஊரே களேபரமாகியிருந்தது.

‘சின்ன வீராம்பட்டினம் உப்புத் தண்ணி கலங்கல்ல ஆறு ஆம்பிளங்க பொணம் உப்பிப்போயி கெடந்துதாம். நரிங்க வந்து சின்னாபின்னமாக்கிட்டு போயிடுச்சாம். மெட்ராசுல இருந்து வந்த இரண்டு காருங்க ஒரு சவுக்குத் தோப்பில நிக்குதாம். கொஞ்சநாளாவே மெட்ராசுல இருந்து வந்த ஒரு கள்ளநோட்டுக் கும்பல் பாண்டிச்சேரில இருந்துகிட்டு அக்கிரமம் பன்னிகிட்டு இருந்திருக்கு. ரெண்டு கும்பலுக்கும் நடுவுல நோட்டு மாத்தறதுல சண்ட வந்து குத்திக்கிட்டு செத்திருக்கலாம்னு சொல்றாங்க போலீசுங்க.’

ஒன்னு ரெண்டு பிணங்கள பாத்த அந்த ஊரு இப்ப ஆறு பொணங்கள ஒன்னா பாத்து அலண்டு போயிருந்தது.

சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல். அதில ஒரு நெட்டயன், “என்ன சென்னம்மா உன்னோட பிரண்டு எதுக்கு எக்ஸாம்லாம் எழுதிக்கிட்டு கிடக்கணும்? மெட்ராஸ் போனா சிரிதேவி மாதிரி பெரிய ஸ்டாரா ஆகிடலாம், பெறகு அக்கா நான் பாஸாயிட்டேன்னு சொல்லிட்டு பாட்டு பாடலாமில்ல” என்றான். சென்னம்மா, “அத நீயே அவக்கிட்ட சொன்னின்னா சுண்ணாப்பாதில மிதந்திடலாமில்ல?” என்றாள். பொக்கிளை சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள். பொக்கிளை புன்னகைத்துக் கூடப் பார்க்காத பசங்களுக்கு அவள் விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்த்ததும் கிலி கண்டது.

சென்னம்மா பொக்கிளையின் காதில் வந்து, “அது என்ன வேற எங்கயும் இல்லாம கழுத்துல மட்டும் ஒரு கீறு? அந்த மாதைய்யன மட்டுமாவது விட்டிருக்கலாண்டி” என்றாள்.

“விட்டிருந்தா நாம இப்படிச் சிரிச்சிக்கிட்டு, நடந்து போயிக்கிட்டு இருக்க முடியாது தெரியுமில்ல சென்னு.”

சென்னு, பொக்கிளையின் இடுப்பைக் கையால் செல்லமாக வளைத்துப் பிடித்த போது பின் பக்கத் துணி மடிப்பில் அது பத்திரமாக இருந்தது. “என் மேல உனக்குக் கோபமா இல்லயா சென்னு?” என்ற பொக்கிளையிடம், “நீ இனிமே இப்படி சிரிச்சிக்கிட்டே இருக்கணும்பா அது போதும்” என்றாள் சென்னம்மா, சிரிக்காமல்.

பிரேம் <kpremananthan@gmail.com>

Prem

Amrutha

Related post