இராசேந்திர சோழன் கதைகளில் காமப் பெண்ணுடல்கள் | புதியமாதவி

 இராசேந்திர சோழன் கதைகளில் காமப் பெண்ணுடல்கள் | புதியமாதவி

ராஜேந்திரசோழன்

ராசேந்திரன் சோழன் சிறுகதைகள் பெண்ணின் காமத்தைப் பேசுவதில் போட்டிப் போடுகின்றன. அதில் இடம்பெறும் பெண்கள் அனைவருக்கும் காமம் தீர்க்க முடியாத பசியாக அவர்கள் உடலை அலைக்கழிக்கிறது. அவர்கள் எப்படியும் பசி தீர்க்கும் வேட்கை கொண்ட இரவு மிருகங்களாகிவிடுகிறார்கள். அவர்களின் உடல் எப்போதும் பசித்திருக்கிறது. அவர்களுக்கு சதா தன் பசி தீர்க்கும் வெறி மட்டுமே வாழ்க்கையில் பிராதானமாக இருப்பதாக தெரிகிறது. பசித்தால் என்ன கிடைத்தாலும் சாப்பிட்டுவிடும் உடல்களாக அவர்களின் உடல்கள் சித்தரிக்கப்படுகின்றன.

புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ போலத்தான் இராசேந்திர சோழனும் எழுத ஆரம்பிக்கிறார். அந்த ஆரம்பம் ‘காணிக்கை’ கதையில் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்தும் விடுகிறது. புதுமைப்பித்தனின் அம்மாளுவும் சந்துக்கு பக்கத்தில் ஆணோடு இருளில் மறைந்து முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள்; ‘ஆம் புருஷனுக்கு பால்கஞ்சி வார்க்கத்தான்’ என்பார் புதுமைப்பித்தன். ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்று கதையில் புதுமைப்பித்தனே வந்து நிற்பார்.

புதுமைப்பித்தனுக்குள் இருந்த அறச்சீற்றம் கதையில் வெளிப்படையாக தெரியவரும். இராசேந்திர சோழனின் ‘காணிக்கை’ கதையிலும் இதே பிரச்சனையின் இன்னொரு வடிவம். அங்கே கணவன், இங்கே மகன். ஜூர வேகத்தில் குளிரில் நடுங்கும் மகன் உடல். ராசாத்தி தன் மகனை மெத்தையில் கிடத்தி கதகதப்பான துணியால் போர்த்திவிட்டு, அந்த டெய்லருடன், ‘வெறும்தரையில் மல்லாக்க கிடந்தாள் மரக்கட்ட மாதிரி’ என்று கதையை முடித்து இருப்பார் இராசேந்திர சோழன்.

இக்கதையில் அப்பெண்ணின் செயலுக்கான ஓரு காரணம் சொல்லப்பட்டிருக்கும். சமூகவியல் நோக்கில் இக்கதை நகர்ந்திருக்கிறது. பெண்ணின் பொருளாதர இயலாமை ‘பொன்னகரம்’ கதைக்குள்ள அதே பின்னணியைக் கொண்டிருக்கும். ராசாத்தி ‘மரக்கட்ட மாதிரி கிடந்தாள்’ என்று முடிக்கும்போது அவள் உடலும் உடலோடு பொருந்தாத அவள் மனமும் இரண்டும் வேறு வேறாக துண்டாகிக் கிடக்கும். இக்கதை அப்பட்டமான பொன்னகரத்தின் இன்னொரு பிரதியாகவே இருக்கிறது. ஒருவகையில் இக்கதை வழக்கமான இராசேந்திரசோழனின் பெண் கதையாக இல்லை. அவருடைய பிற பெண்கதைகளிலிருந்து இக்கதை மாறுபட்டுள்ளது.

இராசேந்திர சோழனின் கதைகளில் இடம்பெறும் பெண்கள் உழைக்கும் சம்சாரி குடும்பத்தின் பெண்களாக இருக்கிறார்கள். அக்குடும்பத்தின் ஆண்கள் உழைப்பே கதி என்று இருப்பதால் அப்பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாதவர்களாக இருப்பதாக சூசகமாக கதையின் ஆண் கதைப் பாத்திரங்களின் சித்தரிப்பு வழியாக முன்வைக்கிறார்.

‘வன்மம்’ கதையில் இடம்பெறும் வீராசாமியின் மனைவி செல்லக்கண்ணு, ‘நாய்வேஷம்’ கதையில் இடம்பெறும் இருசப்பன் மனைவி, ‘புற்றிலுரையும் பாம்புகள்’ கதையில் வரும் அவள் கணவன், ‘இசைவு’ கதையில் இடம்பெறும் நடேசனின் மாமியார்… இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே தலையாய பிரச்சனை அவர்களின் உடலிச்சையைத் தீர்க்கமுடியாத அவர்களின் கணவன்மார்கள். எனவே, இப்பெண்கள் அனைவரும் தங்கள் காமப்பசிக்காக அலைகிறார்கள். எது கிடைக்கிறதோ அதை நக்கிப் பிழைக்கும் தெரு நாய்களாக அலைகிறது அவர்களின் காமம்.

காமப்பேய்ப் பிடித்த பெண்ணுடல் என்பது, அவர் கதைகளின் பெண்கள் அனுபவிக்கும் அவஷ்தையாக மட்டுமல்லாமல், அதை எதிர்கொள்ள முடியாமல் வன்முறையில் தள்ளப்படும் ஆண் சமூகத்தின் அவலத்தையும், அவர் கதைகள் சித்தரிக்கின்றன.

 

ன்மம்’ சிறுகதையில் அவர் படைத்திருக்கும் வீராசாமியின் வன்மத்திற்கு காரணமே அவர் மனைவி செல்லக்கண்ணுதான். செல்லக்கண்ணுவை அறிமுகப்படுத்தும்போது அவள்தான் அந்த ஊரில், ‘ப்ராய்சரி போட்டுக்கொண்டு வந்த முதல்பெண்’ என்பார். அவளுடைய அந்த உள்ளாடையை (பிரா BRA), அவள் தன்னுடலை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அவள் அடையாளமாக பார்ப்பது அந்த ஊர் ஆண்கள் மட்டுமல்ல, கதையை எழுதுகிற ஆண் மனமும்தான்.

இக்கதையில் செல்லக்கண்ணுவின் கணவன் வீராசாமி எப்போதும், தன் வேலையில் முழுமனதாக ஈடுபட்டிருப்பவன். மனைவியோடு உரையாடல் நடத்துவதோ அவள் பேச்சுக்கு ‘உம்’ சொல்வதற்கோ அப்பால் மேற்கொண்டு நீட்டித்து செல்லவே அறியாதவனாக காட்டுகிறார் ஆசிரியர். இதனால்தான் செல்லக்கண்ணு சிரித்து சிரித்து பேசும் ஆண்களுடன் பழகுகிறாள். கணவன் சந்தேகப்படும்போது, “நீ என்னய்யா, நீ… ஊருல இருக்கிற கழுதங்க ஒண்ணொன்னு பேசிக்கிதுன்னா… அதுக்காக பயந்துக்னு கெடக்கச் சொல்றீயா. நம்ம மனசு சுத்தமாயிருந்தா சரிதான்” என்று கணவனுக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள் செல்லக்கண்ணு.

மீண்டும் ஊர்ப் பஞ்சாயத்து கூடி வழக்குப் பேசும்போதும், “எனக்கு ஏன் இந்த தண்டனை எல்லாம், அவரைப் பிரிஞ்சி என்னாலே தனிச்சு வாழ முடியுமா? குடும்ப பெண்ணுக்கு இதெல்லாம் அடுக்குமா?” என்று பேசத் தெரிந்தவள்.

செல்லக்கண்ணு என்ற பெண், குடும்பம், அதில் கணவன் – மனைவி இருவரின் பங்களிப்பு, இடம் எல்லாமும் அறிந்தவளாகவே பேசுகிறாள். இவ்வளவும் பேசிய செல்லக்கண்ணுதான் கதை முடிவில் தன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்துக்கொள்கிறாள். அவள் ஊர்ப்பஞ்சாயத்தில் கண்ணீருடன் கதறியதையும் அவள் சொன்னதையும் நம்புகிற வீராசாமி, தன் கண்ணால், மனைவி செல்லக்கண்ணு சோப்பு கம்பேனி ஏஜண்டுடன் உடலுறவு கொண்ட நிலையில் இருப்பதை பார்க்கும்போது, வீராசாமியின் நிலையை கதையாசிரியர் விவரித்து இருப்பார்.

அவன் இதுவரை எதை நம்பாமல் அசட்டை செய்து வந்தானோ அதையே நேரில் பார்த்துவிட்ட பிறகு… இரத்தம் கொதித்தது; அவமானம் பிடுங்கி தின்றது, ஆண்மை மேலெழுந்து நின்றது…

அவன் மூர்க்கத்தனத்திற்கான காரணம் இக்கதையில் அப்பெண் தன் கணவனை ஏமாற்றியதுதான் என்று கதையை நகர்த்துகிறார் இ.சோ.

அவள் உடல்தான் பிராதான எதிரியாக அவன் முன் நிற்கிறது. 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து அவளுடலை வன்மத்துடன் அவன் அணுகும்போது, அந்த உடல் செல்லக்கண்ணுவின் அந்த உடலாக இல்லை. அவன் பழி தீர்க்க நினைத்த உடல், ‘கட்டான உடல், குதிரைக் குட்டி நடை, அந்த மதமதப்பு, பிரெய்சர் கவர்ச்சி.’  இப்போது அவன் பார்க்கும் உடல் அந்த உடலாக இல்லை என்பார் இ.சோ.

முகமெல்லாம் அம்மைத் தழும்புகள், ஒட்டி வற்றிப்போன சுருக்கம் விழுந்த கன்னங்கள்… நரைத்துப் பறந்து கலைந்து கிடந்த தலைமுடிகள். நெற்றியில் ஒரு திரு நீற்றுப்பட்டை அதில் ஒரு குங்குமப் பொட்டு, காச நோய் பிடித்தமாதிரி நொடிசலான இரத்த ஓட்டமேயில்லாத நீற்றுப்போன கை கால்கள்…

இந்த உடலை அவன் பழிதீர்க்க விரும்பவில்லை. வெளியேறிவிடுகிறான். அவன் கொண்ட வன்மம் என்பது செல்லக்கண்ணு என்ற பெண் மீதா? செல்லக்கண்ணு என்ற பெண்ணுடல் மீதா? யாருடன் வீராசாமிகளுக்கு வன்மம்?!

கதைப்போக்கில் அப்பிரதி விட்டுச்செல்வது ஆணுடல் தன்னால் அடக்கமுடியாத பெண்ணுடல் மீது வன்மம் தீர்த்துக்கொள்ள அலைவதுதான். அதற்கு ‘ஆண்மை’ என்று இன்னொரு பெயரும் கொடுக்கிறார். கதையில் கதாசிரியர் அப்படித்தான் அதைக் குறிப்பிடுகிறார்.

 

நாய்வேஷம்’ கதையிலும் எழுத தெரியாத இருசப்பன், தன் பல்பத்தை எழுதத் தெரிந்த சக்தியிடம் கொடுப்பதில் ஆரம்பித்து, அது அவன் மனைவியைக் கொடுப்பது வரை நகர்கிறது.

‘பகை’ சிறுகதை ப்ஃராய்டின் ‘ஓடிபஸ் காம்ளக்ஸ்’  (Oedipus complex) கதையாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஆண் குழந்தைக்கு தன் தந்தை மீதிருக்கும் வெறுப்பு, தன் அம்மாவின் உடலும் அவள் தீண்டலும் தரும் சுகம், அது கிடைக்காதபோது மகன் – தாய் உறவு என்பது தம்பி – அக்கா என்றும், குடும்பத்தில் தன் தாயைப் போல அவன் முன் வரும் அத்தை சித்தியாகவும் இருக்கும், இருக்கிறது என்பதை அப்படியே கதையாக்கி இருக்கிறார். கதை முடிவில் கணவன் இறந்தப்பின் தன் 10 வயது மகனை மடியில் வைத்துக்கொண்டு இன்பம் காணும் தாயாக… தாயின் தீண்டலில் சுகம் காணும் மகனாக கதை முடிகிறது.

‘இசைவு’ சிறுகதையில் மாமியார் – மருமகன் பாலியல் உறவுதான் கதையாக. இந்த உறவுக்கும் பெரிதாக காரணம் எதையும் கற்பிக்க முயற்சிக்கவில்லை இ.சோ.

‘இசைவு’ கதையில் மாமனார் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் போய்விடுகிறார். மாமியாரோ இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தப் பிறகும் இளமையான தோற்றத்துடன் இருக்கிறாள்.

மாமியாரைக் காணும் மருமகன் அவளை இப்படித்தான் பார்க்கிறான். அதுவும் ‘தன் மனைவி கொஞ்சம் பருமன், மாமி சற்றெ ஒல்லி, அனுபவ முதிர்ச்சியை ஒதுக்கிப் பார்த்தால் மாமியை தங்கை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவு கச்சிதமான தோற்றம்’ – மருமகன் பார்வையில் மாமியாரின் உடல் வர்ணனை.

மாமியாருடன் மருமகன் உடலுறவு கொண்டபின் மருமகன் நினைக்கிறான், ‘இந்த வயதிலும் எப்படித் துடிப்புடனும் குறுகுறுப்புடனும் இருக்கிறாள்? பாவம், மாமனார், கொடுத்து வைக்காதவர். அவருக்கு ஆளத் தெரியவில்லை.’

 

ராசேந்திர சோழனைப் பொறுத்தவரை பெண்ணுடல் என்பது ஆணுடலால் அடக்கி ஆளப்பட வேண்டும். அதாவது நுகர்ப்பொருள் கலாச்சாரப்படி அந்த நுகர்ப்பொருள் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படி பயன்படுத்தப்படவில்லை என்றால் அந்த உடல் தன்னை அடக்கி ஆளும் இன்னொரு உடலைத் தேடிக்கொள்ளும். இவ்வளவுதான்… ஓர் ஆண் மனம் பெண்ணுடலை ஆள்வதுதான் முக்கியம்; பெண்ணுடல் சரியாக ஆளப்படாவிட்டால் அது தன்னுடலை அடக்கி ஆட்கொள்ளும் இன்னொரு ஆணுடலைத் தேடும் என்பதாகவே பெண்ணுடலின் காமத்தை கட்டமைத்திருத்கிறார்.

இந்து புராண இதிகாசக் கதைகள் ‘பெண்கள் இயற்கையிலேயே மிகையான பாலியல் நாட்டம் கொண்டவர்களாதலால், பல ஆண்களுடன் பாலுறவு கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர்’ என்கிறது.

‘மேற்கத்திய கிரேக்க ரோம மரபில் ஆணின் பாலியல் செயலூக்கமானது (active), பெண்ணுடையது அடக்கமானது (passive). சுயக்கட்டுப்பாடு (moderation) ஆணுடலுக்கானதாக இருப்பதால் பெண்ணுடல் கட்டுப்பாடற்றதாகவும் இச்சைகளின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள இயலாததாகவும் இருக்கிறது.  பெண்ணின் நிலை பலவீனமானது, உள்ளடங்கிப் போவது. அவளால் தன்னை ஆள முடியாது. தன்னை ஆளுகின்ற இயல்புடைய ஆண்தான் பெண்ணையும் ஆளுகிறான் என்று காட்டப்பட்டிருக்கிறது’ என்பார் மிஷெல் ஃபுக்கோ (Michel Foucault).

யூத மரபிலும் பெண்களுக்கு மையமான ஆர்வம் பாலியல் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உலகெங்கிலும், தந்தை வழி பண்பாட்டு மரபில் பெண் பாலியல் பாங்கில் கட்டுப்பாடற்ற இயல்வு கொண்டவளாகவே ஆண் பார்வையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய பாலியல் உந்துதல்களால் சமூக ஒழுங்கு கெடும், உலகம் அழியும் என்றே அனைத்து தந்தை வழி பண்பாட்டு மரபுகளிலும் பெண்ணுடல் காமம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாம் கவனிக்க வேண்டியது, காமம் தீர்க்கும் இரண்டு உடலகளில் பெண்ணுடலுக்கு மட்டுமே இத்தனையும் சேர்ந்து பயணிக்கின்றன. ஆணுடலுக்கு இல்லை.

தந்தை வழி பண்பாட்டு மரபின் எழுத்தாகவே இ.சோ சிறுகதைகளும் அவர் கதைகளில் இடம்பெறும் பெண்களும் அப்பெண்ணுடல்களின் பாலியல் மீறல்களும் கதையாகி இருக்கின்றன.

இரேந்திர சோழனின் இந்த ஆண்மைய சிந்தனையின் உச்சத்தை அவருடைய குறு நாவல் ‘மகாலட்சுமி’-இல் வெளிப்படையாக காணலாம். உடலின்பத்தை அடக்கி பேரின்பம் தேடும் பயணத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணுடல் தன் உடலின் காமத்தை வெற்றிகொள்ள இயலாமல் போய்விடுவதாக கதை. திருமண உறவிலும் ஆணுடலை விலக்கி பாலியல் இச்சையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பயணிக்கும் மகாலட்சுமி தன் டிரைவரும் தன் வீட்டில் வேலை செய்யும் முனியம்மாவும் கொண்ட பாலியல் உறவால் தொந்தரவு செய்யப்படுகிறாள். காம நோய் அவள் உடலைத் தாக்கி படுக்கையில் தள்ளியதும்,0 அதைத் தீர்க்க மருத்துவம் பார்க்க வந்த டாக்டர் அவளை தன் உடலால் கவனித்து அவள் காமத்தை தீர்த்தப் பிறகுதான் அப்பெண்ணுடல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதாக எழுதி இருக்கிறார். அதாவது பெண்ணுடலுக்கு துறவறம் என்பதே சாத்தியமில்லை என்பதுதான் இ.சோ. பெண்ணுடலைக் காணும் மன நிலை.

பெண்ணுடலின் காமத்தை ஆணுடல் தீர்க்காதவரை பெண்ணுடல் என்பது பலகீனமானது. அது எதையும் செய்ய லாயக்கற்றதாகவே இருக்கும். இப்படியாக சிந்திக்கிறது இ.சோ. ஆண் மையம்.

காமம் தீர்க்க அத்தருணத்தில் நடக்கும் மீறல்களாக இராசேந்திர சோழனின் பெண்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள். கணவனை, உறவினர்களை, ஊர் மக்களை, ஏன் பெற்ற மகளைக் கூட ஏமாற்ற துணிகிறார்கள். அதையும் தாண்டி பத்தினி வேஷமும் போடுகிறார்கள். மொத்தத்தில் பெண்கள் வேஷதாரிகளாகவே வாழ்கிறார்கள்.

பெண் என்பவள் வெறும் உடல் மட்டும்தானா? ஃப்ராய்டு சொல்லும் உளவியல் கருத்துகளும் ஆண் – பெண் உறவு சார்ந்த சிந்தனைகளும் ஃப்ராய்டு என்ற ஆணின் சிந்தனையிலிருந்து வெளிப்படுகின்றன. ஃப்ராய்டின் எண்ணங்களை, இயல்புகளை அவர் வாழ்ந்தக் காலமும் அக்கால சமூகத்தின் ஆண் – பெண் உறவுகளும் பாதித்திருக்கின்றன.

பெண்ணுடலின் காமம் ‘கத்துவேன் கொல், முட்டுவேன் கொல்?’ என்று அலைபாயும். அந்த உடலின் ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிப்பது அவள் மனம். ஆனால், இக்கதைகளை எழுதும் ஆண்மையம், தங்கள் கதைகளின் பெண்ணுடலுக்கு ஒரு மனம் இருக்கிறதாகவோ, அந்த மனதில் அவள் ஓர் ஆடவனை விரும்புவதற்கும் அவனோடு தன் உடலைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவளுக்கு பிரத்தியோகமான சில காரணங்கள் – உணர்வுகள் இருக்கும் என்பதையோ, அது இருக்கும்போதுதான் அவளுடல் பாலியல் மீறலை நடத்துமே தவிர என்னவோ அவள் உடல் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கும் பண்டம் என்பதால் அல்ல என்பதையோ உணர்வதில்லை.

இராசேந்திரசோழன் கதைகளில் வரும் பெண்கள் அனைவருக்கும் உடல் மட்டும்தான் இருக்கிறது. அவள் தன்னுடலை, தன் காமத்தை தீர்க்க தேடுவதும் ஆண் உடலாக மட்டுமே இருக்கிறது. இக்கதைகளில் உடல்கள் மட்டுமே உலாவுகின்றன. ஆணுடல்களுக்காவது வன்மம், ஏமாற்றம் என்று எதாவது உணர்வுகள் இருப்பதாக காட்டுபவர் பெண்ணுடலுக்கு அப்படி எதையும் காட்டவில்லை. இதுதான் ஆண்மைய சமூகம், பெண்ணின் உடலை காமத்தின் இடமாகவும் காமமே பெண்ணாகவும் பார்க்கும் பார்வை. காமமே பெண்ணாக பெண்ணுடலாக இருப்பதால், ஆண் என்ற ஆண்மை பெண்ணுடலை அடக்கி ஆளாதவரை, பெண்ணுடல் பசியுடன் அலைவதாகவே காட்டுகிறார்கள். எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும் உறவு கொண்டு தன் காமத்தை தீர்த்துக்கொள்வதாக காட்டுவதில், பெண்ணும் அவள் உடலும் பலகீனமானது என்பதாகவும், அப்பெண்ணுடலை ஆணுடல் ஆண்டு அனுபவித்து அடக்கி ஆள்வதையே பெண்ணுடலும் எதிர்ப்பார்க்கிறதாகவும், தங்கள் கதைகளின் பெண்களைக் கொண்டு ஒரு கருத்தியலைக் கட்டமைக்கிறார்கள்.

ஆண் – பெண் உறவில் காமம் என்பது உடலில் ஆரம்பித்து உடலோடு முடிந்துப்போவதாக நினைக்கிறார்கள். அது மனித உறவில் மனசிலும் இருவரின் எண்ணங்களிலும் மன உணர்வுகளிலும் அரும்பி அங்கிருந்துதான் உடலின் இச்சையாக வெளிப்படுகிறது என்பதை வேண்டுமென்றே புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஆண் மையப் புள்ளியில் எழுதிய இராசேந்திரசோழனும் அவர் கதைகளும் பெண்ணையும் பெண்ணுடலையும் மனம், சிந்தனை எதுவுமற்ற ஹார்மோன்கள் மட்டும் சுரக்கின்ற சுரப்பிகளாக மட்டுமே பார்த்திருக்கின்றன.

அதிர்ச்சி தரும் பாலியல் மீறல்களை கதைக்கருவாக கொண்டிருக்கும் இ.சோழனின் பெண் கதைகளில் இப்பாத்திரப் படைப்புகளை வைத்துக்கொண்டு அவர் பெண்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, காமத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதே வெளிப்படுகிறது!

அவர் சிறுகதைகள், உழைக்கும் பெண்கள், நடுத்தர வர்க்கத்தின் பெண்கள், அவர்களின் வாழ்க்கை, அப்பெண்களின் உணர்வுகள் குறித்த போதாமைகளையும் வெளிப்படுத்துகின்றன.

புதிய மாதவி <mallikasankaran@gmail.com>

Puthiya ,Madhavi

 

Amrutha

Related post