டிராகன் | திரைப்படத்தில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரம் | விதுரன்

தமிழ்த் திரையுலகில் சில திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே, இது நிச்சயமாக வெற்றிபெறும் என கணித்திட முடியும். அத்தகைய வெற்றிக் கணிப்பில் வெளியாகிய ‘ட்ராகன்’ இன்று நூறு கோடிகளை கடந்து வசூல் வேட்டையில் இன்னும் நிற்காத குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறது. வணிகரீதியாக நம்பிக்கைக்குரிய கதாநாயகராக பிரதீப் ரங்கநாதனும் இயக்குனராக அஷ்வத் மாரிமுத்துவும் அடையாளபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையெல்லாம் வணிக திரையுலகிலிருந்து நிச்சயமாக நல்ல விஷயங்களாகவே பார்க்கிறேன். ஏனெனில், வணிகரீதியான வெற்றியே, ஒரு தொழிற்துறையை தொடர்ந்து இயங்க வைக்கும். ஆனால், இதனூடே இன்னொரு விஷயம் மெல்ல மெல்ல மறைந்துகொண்டே இருக்கிறது. பத்திரிகை துறையினைப் பற்றி பேசும்பொழுது அது எப்படி ஒரு வியாபாரமோ, அதேபோல அது ஒரு சேவையும்தான். இதனை மையமாகக் கொண்டே பத்திரிகைத் துறை இயங்க வேண்டும் என்பது எப்போதும் எழுதப்படாத அடிப்படை விதியாக இருந்துள்ளது. என்னைப் பொறுத்தளவில் இதுவே திரைப்படங்களின் அடிப்படை விதியும். ‘ட்ராகன்’ வியாபர ரீதியாக வெற்றி பெற்றதைத் தாண்டி, இது ஒரு நல்ல திரைப்படம் என்பதும் பலரின் ஆழமான நம்பிக்கை. இது உண்மையா என்பதே எனது மிகப்பெரும் கேள்வி.
நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவருக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. படம் முழுக்க கோர்த்து வைக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகளே நிறைந்திருக்கும். சட்டென்று அதன் இறுதிக் காட்சியில் நாயகனின் தந்தை தன்னுடைய உயிரினைக் கொடுத்து, மகனின் வாழ்க்கையில் ஒரு வேலையினை உருவாக்கிக் கொடுப்பார். தந்தை தனக்காத்தான் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உணரும் மகன் அந்த குற்ற உணர்வில் திருந்துகிறான் என்பதாக படம் முடியும். படம் மிகப்பெரும் வெற்றி. இன்றளவும் ரசிகர்களில் பலருக்கும் பிடித்தமான திரைப்படம். ஆனால், முழுக்க மேலோட்டமான, நகைச்சுவை காட்சிகளை வைத்து எடுத்துவிட்டு இறுதிக் காட்சியில் அந்த மரணத்தை வைத்து பார்வையாளர்களை ஏமாற்றியிருப்பார்கள். படம் முழுக்கவே நகைச்சுவையாகவே வைத்திருந்தால், ஒருவேளை பார்வையாளர்களுக்கு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாதோ என்ற பயம் கூட அப்படி ஒரு காட்சியினை உருவாக்க காரணமாக இருந்திருக்கலாம். ‘ட்ராகன்’ கிட்டத்தட்ட இதோடு ஒப்பிடக் கூடிய ஒரு திரைப்படமே.
ட்ராகனில் கதாநாயகன் தவறு மேல் தவறு செய்துகொண்டே இருக்கிறான். அதற்கான பின் விளைவுகள் அவனைத் துறத்துகிறது. அதிலிருந்தும் தப்பிக்க முயல்கிறான். இறுதியில் தன் தவறுகளை முன் வைக்கிறான். மனிதனாக மாறுகிறான். பார்வையாளர்கள் அவனை மன்னிக்கிறார்கள்; கொண்டாடுகிறார்கள். ஆனால், எனக்கு மட்டும் கடும் அதிர்ச்சியாக இருந்தது. அடிப்படை அறமே இல்லாத ஒரு திரைப்படம், அறத்தின் வெற்றியாக கொண்டாடப்படுவதை காணும்பொழுது ஏற்படும் அதிர்ச்சி.
இப்படத்தில் எனக்கு மூன்றுவிதமான பிரச்சனைகள் பூதாகரமாகத் தெரிந்தன. முதலாவது, இதன் இறுதிக்காட்சி. கதாநாயகன், தான் செய்த ஒட்டுமொத்த தவறுகளையும் அனைவர் முன்பாக ஒப்புக்கொள்கிறான். தன்னால் இன்னொருவன் பாதிக்கப்படுகிறான், அவனது கனவுகள் உடைந்து போகின்றன என எண்ணும் போது தன்னுடைய அனைத்து கனவுகளையும் உடைத்திட முன் வருகிறான். இதனை பார்க்கும்போது உண்மையாகவே உணர்ச்சி மேலிடும். ஆனால், எனக்கு தோன்றியதெல்லாம் அதே காட்சியில் மூலையில் நின்று கொண்டிருந்த ட்ராகனின் தந்தைக் கதாபாத்திரம். படம் முழுக்க ட்ராகனை எந்த சூழலிலும் கைவிடாத கதாபாத்திரம் இது. ஆனால், படம் முழுக்க அவரை ஏமாற்றிக் கொண்டிருப்பதை தவிர்த்து ‘ட்ராகன்’ வேறு எதையும் செய்வதே இல்லை. ஆனால், இறுதிக் காட்சியில் யாரென்றே தெரியாத ஒருவருக்காக தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் இழக்கத் தயாராகிறான். இதுபோல ஒரு முரணை நான் வேறு எந்த திரைப்படத்திலும் கண்டதே இல்லை. இதில் இன்னும் சுவாரசியமான முரண் என்னவெனில், அதே அப்பா கதாபாத்திரம் ட்ராகனை மன்னிக்கும் காட்சி. அதற்கு அவர்கள் கூறும் காரணமும் மிக மிக நகைச்சுவையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. வாழ்நாள் முழுவதும் தன்னை ஏமாற்றிக்கொண்டே இருந்த ஒருவன், இன்னொருவனை ஏமாற்றாமல் இருந்ததற்காக உன்னை மன்னிக்கிறேன் என்பதெல்லாம் என்ன மாதிரியான புரிதல்? இறுதிக்காட்சியில் எப்படியேனும் ‘ட்ராகன்’ மீது கருணை தோன்றிவிட வேண்டுமென்பதற்காகவே வெறுமனே வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாகவே தோன்றியது.
இரண்டாவது, பலரும் இதனை மிக மிக விறுவிறுப்பான, அழுத்தமான திரைக்கதை என்று எழுதுகின்றனர். இதற்கு இவர்கள் முன் வைக்கும் காரணம், முதல் பகுதியில் நாயகன் செய்த தவறுகள் எல்லாம், இரண்டாம் பகுதியில் திரும்பி அவனை எப்படி அடிக்கிறது என்பதை காட்சிபடுத்திய விதம் என்கின்றனர். ஆனால், திரைப்படத்தில் தங்களுடைய வசதிக்கேற்ப பல இடங்களில் திரைக்கதை வளைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நாயகனின் கதாபாத்திரமே மிக மிக குழப்பமாக இருக்கிறது. தன்னுடைய எதிர்காலத்தை குறித்து, திருமணம் வரை, இளம் வயதிலேயே தெளிவாக முடிவெடுக்கும் ஒருவன், பள்ளியில் ஒரு சிறுமி ரவுடி பசங்களைத்தான் பிடிக்கும் என கூறியதால் உடனே மனம் மாறுகிறான். அவனது அத்தனை முக்கியமான இலக்குகளும் இல்லாமல் வெறுமனே ஒரு காலேஜ் ரவுடியாக மாறுகிறான். ட்ராகனை பெயிலியர் என்று கீர்த்தி கூறியதும், அங்கிருந்து உடனே பெரிய வேலைக்கு போக வேண்டும், அதற்காக தந்தையின் தலையில் மிளகாய் அரைத்து, பணம் தயார் செய்து, அந்த வேலையையும் பெற்று, அதிலும் நான்கே வருடங்களில் மிக உயரிய இடத்திற்கு வருகிறான். சில காட்சிகளுக்கு முன்புதான் ட்ராகனின் நண்பன் ஒரே பாட்டுல மேலே வருவதைக் குறித்து கேலி செய்திருப்பான். ஆனால், படத்திலேயே அதே காட்சிகள் வருவதெல்லாம் மிகப்பெரும் நகைச்சுவையாக மாறிவிடுகிறது.
மிஷ்கினிடம் ‘ட்ராகன்’ மாட்டிக்கொண்டதும் அவன் செய்த தவறை அனைவரிடம் சுட்டிக் காட்டாமல், அவனை காலேஜில் வந்து தேர்வுகளை எழுதி பாஸ் ஆக சொல்கிறார். அடுத்தடுத்து இப்படி படத்தில் எழுதப்பட்டுள்ள காட்சிகள் எல்லாம் தங்களுடைய இஷ்டத்திற்கு வளைத்துக்கொண்டே செல்கிறார்கள். இதற்கெல்லாம் அழுத்தமான பின்ணனிக் காரணங்கள் இருந்திருந்தாலாவது ஏற்றுக்கொள்ளும்படி அமைந்திருக்கலாம். அனைத்தும் ‘ரீல்ஸ்’ தொகுப்புகள் போல போயிக்கொண்டே இருக்கின்றது.
சமீபத்திய திரைப்படங்களில் இத்தகைய ‘ரீல்ஸ்’ கலாச்சாரத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஏதோ ஒரு வகையில் அழுத்தமில்லாமல், சுவாரசியமாக இருந்தாலே போதும் என்னும் தொனியிலையே உருவாக்கப்படுகின்றன. ‘ரீல்ஸ்’ பார்க்கும்பொழுது எப்படி தங்களையே அறியாமல் மணிக்கணக்கில் போனில் ஒரு தலைமுறை மூழ்குகிறதோ, அப்படி இந்தக் காட்சிகளையும் கடந்துகொண்டே இருக்கிறார்கள் பார்வையாளர்கள். இதில் ஆழ்ந்த அழுத்தமெல்லாம் இல்லை. வெறுமனே ஒரு அதீத ரீல்ஸ் சுவாரசியம் மட்டுமே. இதை திரைக்கதையாக ஒப்புக்கொள்வதே மிக கடினம்.
மூன்றாவது, இந்த திரைப்படம் கல்வியினை ஒரு கட்டிடத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றது. ஆம், ஒரு பணிக்கு செல்வதற்கு முன்பு ஆழ்ந்து கற்றுணர்ந்து அதைச் செய்வது என்பது மிக அவசியமான ஒன்று. இதற்கே நாம் அடிப்படை கல்வியை பயின்று அதிலிருந்து தொழில் நோக்கி நகர்கிறோம். இதையே இந்த திரைப்படத்தின் மிக முக்கியமான விஷயமாக உரையாட முன்வருகின்றனர். ஆனால், ‘ட்ராகன்’ தன்னுடைய கல்லூரி பருவத்தில் 48 அரியர்கள் வைத்துள்ளான். அதை மறைத்து போலிச்சான்றிதழ் வாங்கி வேலைக்கு சேருகிறான். மிஷ்கினிடம் மாட்டிக்கொண்டதும் காலில் விழுகிறான். மிஷ்கின் 48 அரியர்களை ஒரே தேர்வில் எழுதச் சொல்கிறார். இதற்கு காரணமாக கூறுவது உன் வேலைக்கான அடிப்படையே கல்விதான், அதை நீ முறையாக முடிக்கவில்லையென்றால் வேலைக்கு எப்படி தகுதி பெற்றவனாய் என கேட்கிறார். இது பலருக்கும் ஏற்புடையதாக இருந்தது. ஆனால், நன்கு யோசித்துப் பார்த்தால், ஒரே தேர்வில் 48 பாடங்களை எழுதி தேர்ச்சியடைவதுதான் கல்வியின் அடிப்படையா? கல்வியமைப்பு முறையிலேயே நமக்கு இன்னும் நீண்ட கால அனுபவம் தேவைப்படும் சூழலில், தேர்வில் வென்றாலே போதும் என சொல்வது மிகப்பெரும் கேலிக்கூத்து. கல்வியினைக் குறித்தோ தேர்வுகள் குறித்தோ பணிகள் குறித்தோ எவ்விதமான தெளிவும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. நாயகனின் சாகசமாகவே 48 அரியர்களை கிளியர் செய்வது முன் வைக்கப்பட்டுள்ளது.
கல்வி எத்தனை முக்கியமான அடித்தளம் என்பது உரையாடப்பட வேண்டுமென்றால் இன்னும் கவனமான திரைக்கதை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையே இல்லை. ரீல்ஸ்க்கு திரைக்கதை எழுத இதுவே போதுமே. கீர்த்தி கதாபாத்திரம், ஓரிடத்தில் ட்ராகனிடம் இப்படிச் சொல்லும், “நீ என்ன எல்லாத்தையும் படிக்கனுமா? முக்கியமான கேள்வி மட்டும் படி போதும். ஜஸ்ட் பாஸ் பண்ணு” என்பார். இவ்வுளவுதான் இவர்களின் கல்வி குறித்த உரையாடல். இதனால்தான் இந்த திரைக்கதையை வளைந்து கொடுத்துக்கொண்டே இருக்கும் திரைக்கதை என்கிறேன்.
‘ட்ராகன்’ மிகப்பெரும் வணிக வெற்றியை பெற்றுள்ளது. தமிழ்ச் சூழலில் வெற்றி பெற்றவையே மிக உயரியவை என்பது எப்போதும் முன்வைக்கப்படும் வாதம். பெரும்பான்மை கருத்தே ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், அத்தகைய பெரும்பான்மை கருத்துகள் என்னவாக இருக்கின்றன என்பதே மிகவும் ஆழ்ந்து விவாதிக்கப்பட வேண்டியவை. அதோடு, ‘‘ட்ராகன்’ போன்ற திரைப்படங்கள் வணிகரீதியானவை, அவற்றின் தாக்கம் பெரிதாக இருக்காது’ என்பது ஏற்புடையதல்லை. வணிகரீதியான திரைப்படங்களே இங்கு பெருவாரியான தாக்கங்களை உருவாக்கியுள்ளது. அதனாலேயே அவற்றில் ஆழ்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நம்மிடம், ஆழ்ந்து உணர்ந்து உருவாக்கப்படும் வணிக திரைப்படங்கள் என்பது மிகவும் குறைவே. அதன் விளைவே ‘ட்ராகன்’ மாதிரியான திரைப்படங்கள். கலையாகவும் அரசியலாகவும் கவனமாக கூர்ந்து உணரப்பட்டு உருவாக்கப்படும் படங்கள் வர வேண்டுமென்பதே எல்லாருடைய ஆவலும்.
நிறைய நல்ல வணிகத் திரைப்படங்கள் உருவாகும் என்று ஆவலோடு காத்திருப்போம்.