விதவை – ஆர். வத்ஸலா

 விதவை – ஆர். வத்ஸலா

ஓவியம்: மானினி சர்க்கார்

 

பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளை
பட்டம் வாங்கிய உடன் திருமணம்
பார்க்க சுமார்
(இவளும்)
குணத்தில்
சுமாருக்கும் ‘நல்ல’வுக்கும்
நடுவில்
சில கட்சிகளைப் போல

இருவரும் உழைத்து
குழந்தைகளை வளர்த்து
பறக்க விட்டு

தேவையான அளவு
பணத்துடன்
விதவையாகி
போதுமான அளவு
அழுது

பெரிய எல்சிடி திரைப்படம்
அறிதிறன் பேசியில்
பேரக் குழந்தைகளுடன்
புலனத்தில் சந்திப்பு
சர்க்கரை அளவை
கட்டுப்படுத்த
அக்கம்பக்கத்து
குடியிருப்புவாசிகளுடன்
வளாகத்தில் நடைபயிற்சி
நன்றாக இருந்தது
வாழ்க்கை

இவள் இந்த வீட்டிற்கு வந்தது முதல்
பக்கத்து வீட்டில்
தனியே வசித்த
பெரியவரும்
இவளும்
தினமும்
தத்தம்
துணைகளை பற்றி
குழந்தைகளை பற்றி
பகிர்ந்து கொள்வர்

இன்று
அவர்
இறந்து போனார்

போனாள்
கூட்டத்தோடு கூட்டமாய்
கைகுட்டையால் வாய் பொத்தி
அழுவது போல் பாசாங்கு செய்ய

பிணம் போனபின்
வீடு திரும்பி
குளித்து
சாப்பிடும் போது
தேம்பினாள்
புது விதவை போல

ஆர். வத்ஸலா <vatsala06@gmail.com>

R. Vatsala

 

Related post