பா.அ. ஜயகரன் கதைகள்

 பா.அ. ஜயகரன் கதைகள்

மு. புஷ்பராஜன்

 

க்கிரமிப்பின் அதிகாரத்தினாலும் அதற்கு எதிரான போராட்டத்தினாலும் உயிரச்சம் சுமந்து புலம்பெயர்ந்தோர் வலிகளும் அவலங்களும் என ஜயகரன் கதைகளைப் பொதுவாக வரையறுத்கொள்ளலாம். இந்த வலி, அவலம் சார்ந்து ஆசிரியரின் கவன எல்லைகள் ஈழத் தமிழரையும் தாண்டி வேறுபல நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த வேற்றினத்தோர் வரை விரிகின்றது.

ஈழப் போராட்டத்தில், இயக்கங்கள் தலைமறைவாக இயங்கிய காலங்களில்,இளைஞர்கள் பலர் கடமை காரணமாகவோ அன்றி ஆர்வம் காரணமாகவோஇயக்கங்களுக்கு இரகசியமாக உதவிசெய்து வந்தனர். பின்னர், இயக்கங்கள் விரோதிகளாக உருமாறிக்கொண்ட காலங்களில் உதவியோர் கைவிடப்பட்டோர் ஆயினர். பலர் கடமையும் ஆர்வமும் வடிந்து உயிரச்சம் நிறைந்தவர்களாக இருளில் அலைந்து திரிந்தனர். இயக்கங்களிடம் பாதுகாப்பிற்கான ஆயுதங்கள் இருந்தன. உதவியோரிடம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் பொதுவானவர்கள் என்ற நிலை.இரகசியங்கள் அறிந்தவர்கள் ஆபத்தானவர்கள்; எனவே, கொல் அல்லது கொல்லப்படுவாய் என்ற இயக்கப் பார்வையும் ஏற்பதாக இல்லை. இத்தகைய விசச் சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு உதவியாளனே ‘இருளில் மீள்பவர்கள்’ கதையின் சாந்தன்.

மிலான் குண்டராவின் ‘Ignorance’ நாவல் மூலம் அறிமுகமான இரினாவிடம், கொடும் கனவுகள் துரத்தும் தன் கதையைச் சாந்தன் கூறுகிறான். உயிருக்குப் பயந்து காட்டினுள் பதுங்கியிருந்தவன் சன்னங்கள் துரத்த ஓடுகிறான். ஓடிய காலை சன்னம் தாக்கியதும் ஓடிவர மறுத்த காலுடன் அருகிருந்த குளத்தினுள் மூழ்கினான். ‘வாழ்வின் இறுதிப் புள்ளியில், ஒரு சிறு மூச்சை அவன் உடல் கோரியது. இறுதி மூச்சைத் தக்க வைத்தபடி கால்களை உந்தினான். வெளியேவந்தபோது ரொரன்டோ டொன் ஆற்றின் கரையில் எழுந்திருந்தான்.’ அந்த மரணத்தின் ஒலி கனடாவிலும் துரத்தியபடியே இருக்கின்றது. கொடும் கனவாய்சித்திரவதை செய்கின்றது. ‘ஓடாதே நில்லு உன்னோடு கதைக்கவேனும். சுடமாட்டேன்’ என்ற துரத்திய குரலும் மிதிபட்ட சருகுகளின் சந்தங்களும் கேட்டபடியிருக்கும் தன் நிலையை கூறுகிறான்.

‘Ignorance’ நாவல் வாசியாதோர் இரினாவை சாந்தனின் கனடியத் தோழி என்று நினைப்பது இயல்பானதே. வாசித்தவர்களுக்குத் தெரியும், இரினா அந்த நாவலில் ஒரு பாத்திரம் என்று. 1989இல் செக்கோசெலவாக்கியாவைசோவியத் ரசியாஆக்கிரமித்ததும், பிரான்ஸ்சிற்குப் புலம்பெயர்ந்தவர்களில் இரினாவும் ஒருவர். (நிஜத்தில் மிலான் குண்டராவும்ஒருவர்.) நாவலில் இரினாவும் தன் தாயகத்தின் கொடும் நினைவுகளால் அலைக்களிக்கப்பட்டவள்தான். ஜெயகரன் படைப்பின் சுதந்தரத்துடன் பிரான்சில் வசிப்பதாக சித்தரிக்கப்பட்ட பாத்திரத்தை கனடாவின் உணவகத்தில் சாந்தன் முன்னால் இருத்திவிடுகிறார்.

 

‘வந்திறங்கிய கதை’யின் முருகனும் இரவு வயலுக்குக் காவல் இருக்கையில் நாய் குரைக்கும் திசையில் ‘ரோச்லைற்ரை’ அடிக்கிறான். விரிந்த ஒளியோ துப்பாக்கியும் தொப்பியுமாய் வந்த இராணுவத்தினரை அடையாளம் காட்டியது. வழமைபோல் அடி, உதையுடன் போராளிகள் பற்றி விசாரணை.உழைப்பால் உரமேறிய அவன் உடலைப் பார்த்ததும் சந்தேகம். ‘ரெயினிற் எடுக்கிறதா, பாரூக் வாறது’? ‘தெரியாது ஐயா’ என்ற பதிலுடனே காதினுள் ஆயிரம் இரைச்சல்கள். மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது. அதே கேள்வி, அதே பதில். கன்னத்தில் அறைகள். வயிற்றிலும் நெஞ்சிலும்பூட்ஸ்காலின் உதைகள். விழுந்து கிடத்தவன் காலைப் பிடித்து கிரவல் தரையோடு இழுத்துச் சென்றனர். முதுகுத் தோல் உரிந்து, கல்லுகள் குத்திக் குற்றுயிரும் குலையுயிருமானான்.

இப்போது முருனுக்குத் திருமணமாகி இரண்டு வயது மகள் இருக்கிறாள். அவளின் பிறந்த நாளுக்கு துணி வாங்கித் திரும்புகையில் இந்திய சிப்பாய்கள் வழிமறித்தனர். அருகிருந்த காட்டிற்குள் கூட்டிச் செல்கையில், இரத்தம் தோய்ந்த உடைகளுடன் சிலர் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சிப்பாய் காட்டிய சைகையின் பின்னர் ஜட்டியுடன் நின்றான். முன்பு இலங்கை இராணுவத்தினர் கிறவல் தரையில் இழுத்துச் சென்றதால் தழும்பேறிய உடல் சிப்பாயை உலுப்பின. ஹிந்தியில் கத்தினான். தொடர்ந்தும் அடி, உதை. வாகனத்தருகே ‘தலையாட்டி’முன் நிறுத்தப்பட்டான். அங்கிருந்த மலையாள அதிகாரி, ‘நீ புலியா’ என்றான். நடந்தவைகளை எல்லாம் கூறினான். அவனது துணிப் பையைச் சோதித்துவிட்டு, ‘புலி வந்தால் சொல்லு, மனசுலாகியோ போ’ என்றான்.

இதன் பிறகு கனடாவிலுள்ள அண்ணனின் உறுதிமொழியினால் புலம்பெயரும் முயற்சியில்முருகனின்கொழும்பு பயணம், லெட்ஜ் வாழ்க்கை, அமெரிக்காவினுள் நுழையும் முயற்சி, கொழும்பில் மனைவியின் திசைமாற்றம், எல்லை கடத்தலின் திகில் அனுபவங்கள், அகதி விசாரணைஎனப் புலம்பெயர்வோர் துயரங்களின் குவியலாக விரிகிறது.

 

‘ஜெனி: போரின் சாட்சியம்’ கதையின் நாதனோ, சாந்தன், முருகன் இருவரின் கலவையும் விரிவுமாகும் சாந்தன்போல்வெளியில் இருந்து ஒரு இயக்கத்திற்கு உதவியவன். அரசியலைவிட போராளிகளின் ஆயுதங்கள்தான் இவனுள் வசீகரமாகின. இறுதியில் விடுதலைப் போராட்டம் அவனை உள்வாங்கியபோது ஒரு இராணுவமுகாம் தாக்குதலையும் அதன் எதிர் தாக்குதலையும் அனுபவமாகக் கொண்டிருந்தான். புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் யுத்தம் தொடங்கியபோது இயக்கத்திலிருந்து வெளியேறி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில்பணிபுரிந்த உறவினருடன் அடைக்கலமானான். அங்கு ஜே.வி.பி.இன் ஆதரவு மாணவர்ளை ஒடுக்கும் அரச நடவடிக்கையில் சிக்கிச் சீரழிந்த அவன் விதி, முருகனைப்போல் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அவனை நிறுத்தியுள்ளது.

இங்கு எல்லை கடக்கும் பயங்கர அனுபவங்களுடன், எல் சல்வடோரைச் சேர்ந்தஜெனியைச் சந்திக்கிறான். பிடிபட்டு, முகாம் வாழ்வு; அகதி விசாரணைக்காகக் காத்திருத்தல். இக் காலங்களில் துப்பாக்கியில் தும்பி வந்து அமர்வதுபோல்இவர்களிடையே காதல். காதல் கணங்களின்போது அவள் கேட்கிறாள், ‘நீ அரச படையைச் சேர்ந்தவனா?’ ‘இல்லை’ என்றான். ‘போராளியா?’ ‘ஆம்’ என்றான். அவன் கையை இறுகப் பற்றித் தன்னோடு அணைத்துக்கொண்டாள்.இவர்களின் உரையாடல்கள் வழி எல் சல்வடோரின் துயரக் கதை, அங்கும் இங்குமான துரிகையின் கோடுகள் உருவாக்கும் துயர ஓவியம் மனச்சுவரில் தொங்குகிறது.

 

‘அடேலின் கைக்குட்டை’யில் வயதானவர்களை வீடுகளில் சென்று பராமரிக்கும் பணி அன்று சைமனுடையது. மூதாட்டியும் செல்வியுமான அடேலுக்குச் அன்று செய்யவேண்டிய பணிகள் அதிகமில்லை. ஆயினும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது செலவிடவேண்டும். உரையாடுகிறார்கள். தேனீர் அருந்துகின்றனர்.சைமன் சோபாவிற்கு அருகில் பழைய அல்பங்கள் அடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான். பார்க்கலாமா என்ற கேள்விக்கு, ‘பார்க்கலாம் அவைதான் எனது மிகப்பெயரிய சுமை’ என்கிறாள்.

வெளிறிய கருப்பு அல்பத்தின் முதல் பக்கத்தில் அடேலின் குடும்பப் படம். அதன் கீழேமேக்லாங், யாவா, டச்சுக் கிழக்கிந்தியா,1937 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நமது நினைவுகளும்பின்நோக்கி நகர்கின்றன.

டச்சு ஆதிக்கத்திலுள்ள மத்திய யாவாவின் மேக்லாங் பகுதி. ஆக்கிரமிப்பாளரது குடியிருப்புகள், பாடசாலைகள், கோவில்கள். 1939இல் மேஜர் பாரண்ட் என்பவர் டச்சுப் படைத்தள இராணுவ டொக்டராக இணைந்தார். மனைவியும் அவரது இரு மகள்களும் அம்ஸ்ரடாமில் இருந்து வந்து சேர்ந்தனர். 12வயதுடைய அடேல் பூக்களில் விருப்புக்கொண்டவள். பூவிதழ்களின் மென்மையில் உறவாடுபவள். ஆராதனையின்போது தேவாலயத்தை மலர்களால் அலங்கரிப்பவள். அங்கு பாடல் பாடுவோரிலும் முதன்மையானவள். ஒரு கன்னியாஸ்திரியாவதே அவள் விருப்பம். காலம் யாரது ஆசைக்குக் காத்திருக்கிறது? யப்பானிய இராணுவம் மேக்லாங்கை ஆக்கிரத்தபோது எல்லாம் திசைமாறிப் போயின. டச்சு இராணுவ அதிகாரிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் தனித்தனியான முகாம்களில் அடைக்கப்பட்டனர். போர் கைதிகளுக்கு ஜெனிவா சட்டப்படி வசதிகள் வேண்டும் எனக் கேட்ட பாதிரியாருக்கு மூக்கு உடைந்ததுதான் மிச்சம். பதினாறு வயது தொடக்கம் இருபத்தி நான்கு வயது வரையிலான பெண்கள், யப்பானிய இராணுவ உயரதிகாரிகளுற்கான பாலியல் கேளிக்கை நிலையங்களுக்கு கொண்டுசெல்லபட்டனர். ஆறு இராணுவ உயரதிகாரிகளிற்காக அடேல் உட்பட ஆறு பெண்கள் அனுப்பப்பட்டனர். அந்த ஆறு அறைகளுக்கும் ஆறு பூக்களின் பெயர்கள். பூக்களை நேசித்தவந்த அடேலின் அறையின் பெயர் ஓர்கிட். அவளும் ஓர்கிட் என்றே அங்கு அழைக்கப்பட்டாள்.

பாலியல் அடிமையான அவர்கள் நோயுற்றபோதும்வல்லுறவிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. கருவுற்றபோது கலைப்பதற்கு மருந்து கொடுத்த டொக்டரருக்கும் பலியானார்கள். வலி போக்க போதை மருந்துகளும் கொடுக்கப்பட்டன. எல்லாப் பூக்களும் செழுமை இழந்து தேவைக்கு உதவாத சக்கையானபின்பு முகாமிற்குஅனுப்பப்பட்டனர். அதற்கு முன்னர் அங்குள்ள பராமரிப்புப் பெண்ணின் உதவியுடன் ஆறு கைக்குட்டையில் நூலினால் தங்கள் பெயர்களைப் பின்னிக் கொண்டனர். விடுதலையின் பின்னர் அடேல் பூக்களை வெறுத்தாள். பூக்களின் மணங்களில் யப்பானிய இராணுவ உயரதிகாரிகளின் வியர்வை நெடில் வீசின. இறுதியில் யப்பானியரை கூட்டுப்படையினர் வெற்றி கொண்டனர். கனடியப் படைகள் நெதர்லாந்தை மீட்டனர். அடேல் குடும்பம் நெதர்லாந்து சென்றனர். இறுதியில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தனர். இப்போது சைமன் அல்பத்தின் இறுதிப் பக்கத்தில்கைக்குட்டை ஒன்று மடிக்கப்பட்டு, பியாஸ்ரிக் பையினுள் இருப்பதைக் கண்டு அனுமதியுடன் அதை விரிக்கிறான்.அடேல், லீஸ், ஜேன், ஆலி, கிறேஸ், பேதா என ஆறு பெயர்கள்.ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் அதிகாரத்தால் உருக்குலைந்த அனைத்துத் தேசப் பெண்களின் குறியீட்டுப் பெயர்களாக அவை இருந்தன. ‘அவைதான் எனது மிகப் பெரிய சுமை’ என்ற அடேலின் குரலை இப்போது நினைத்துக்கொள்ளலாம்.

அடேலின் துயரத்துடன், டச்சு ஆக்கிரமித்த மேக்லாங் மக்கள் வாழ்வின் விதி எவ்வாறிருந்தது என்பதை மறந்துபோகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆசிரியர் விழிப்புடன் அதைப் பாலியல் நிலையத்தின் பராமரிப்புப் பெண்ணான கலப்பினஎலனாரின் பாட்டியின் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

 

டேலின்பழைய அல்பம் போன்று நினைவுகளை மீளெழுப்புவைதான் ‘அகதி ரங்குப்பெட்டி’ கதையும். இதன் தலைப்பு அகதிகளின் ரங்குப்பெட்டிகள்என்றுதான் வந்திருக்கவேண்டும். அன்ரன் ஒஸ்த்திரிய டொச்சுக்காரன். நாசிகளின் இனத் தூய்மைக் கோட்பாட்டால் ஒஸ்திரியாவிலிருந்து துரத்தப்பட்ட யூதர்களின் துயரக் கதையை கூறுபவன்.கூட்டுப்படைகளின் மீட்பிற்குப் பின்னர் நாசிகளால் படிந்த வரலாற்றுப் பழியினால் மனம் குறுகிகொண்டிருப்பவன். ‘யூதர்களைத்கலைத்தவர்கள், கொன்றவர்கள், முண்டு கொடுத்தவர்கள் எவ்வித குற்றவுணர்வும் இன்றி நடந்து திரிகிறார்கள். எங்காவது தூரப்போய் வாழப்போகிறேன்’ என்று கருதி தனது பாட்டியின் நினைவுகள் சுமந்த ரங்குப்பெட்டியுடன் கனடா வந்தவன்.

அடுத்த ரங்குப்பெட்டி இந்தக் கதை சொல்லியின் தாயினுடையது. தந்தை, சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டபின், சித்தம் கலங்கிய தாயின் இளமை நினைவுகளைச் சுமந்தவை. இராணுவம் செட்டிகுளத்திலிருந்து அவர்களை வெளியேற்றியயோதும் அவர்களுடன் கூடப் பயணித்தவை. இந்த இரு ரங்குப்பெட்டிக்காரர்களும் கனடாவில் அயலவர்கள். இருவரின் துயர வரலாற்றின் சின்னங்களின் பெறுமதி அடுத்த தலைமுறைகளுக்கு வெறும் பழைய சாமான்கள்தானாஎன்பது கதை சொல்லியின் ஏக்கம்.

 

‘ஆயர்பாடி மாளிகை.’பெரும் முயற்சிகளின் பின் அந்தக் கிராமத்திற்கு புதிதாக இ.போ.ச.பஸ் வருகிறது. வந்திறங்கியவருள் ஓவிசியரும் ஓருவர்.அவருக்கு உறைவிடமாக அரச அதிகாரிகள் தங்கும் பங்களாவும் உணவுக்கு மகேஸ் கடையின் பணிசும் வாழைப்பழமும் இருந்தன. எப்போதும் ‘அந்தரத்தில் தொங்கும் ஏதோ ஒன்றைப் பார்த்தபடிதான் இருப்பார்’. பின்னாளில் ஓவிசியருடன் பெண்ணும் குழந்தையும் ரங்குப்பெட்டியுடன் வந்து இறங்கினர். ஊரார் சந்தேகப் பார்வைக்கு ‘என்ட மனிசியும் பிள்ளையும்’ என்றார். பங்களாவின் உள்ளும் புறமும் குடியிருந்த மாடுகளைக் கண்டதும், மனிசி ஆயர்பாடி மாளிகை எனக்கவித்துவத்துடன் அழைத்துக்கொண்டாள். அதற்கு கண்ணன் என்ற குழந்தையின் பெயரும் காரணமாக இருக்கலாம். மனிசி விநோதமான போக்குடையவர். இதற்கு ஓவிசியரின் பதில் ‘83 கலவரம்’ என்பதுதான்.

பொதுவாக பஸ் இரவு தங்கும் இடங்களில் அதுவரை நிலவிவந்த சமூக உறவுகளின் சமநிலை சிதைவதுண்டு. சாரதி சலீமின் இரகசிய தொடுப்பும்நடத்துனர் ராசு, பவானி காதலும் மத,சாதிய முரணாக மாறுகிறது. ஒருநாள் அன்ரிக்குத் தெரியாமல் ஓவிசியர்மகனை யாழ்ப்பாணத்திலுள்ள அவனது பெரியதாயிடம் விட்டுவிடச் சென்றுவிட்டார். அன்ரியோ மகனைத் தேடி அன்னம் தண்ணி இல்லாமல் அலைகின்றாள். இரவு வரவேண்டிய பஸ்ஸை இராணுவம் காட்டுப் பகுதியில் வழிமறித்து பயணிகளை இறக்கியபின் எரித்தனர்.‘ஊரின் வயிறெல்லாம் சேர்ந்து எரிந்து எரிந்துகொண்டிருந்தது. முப்பது வருடம் போராடிப்பெற்ற அந்த பஸ் வண்டி எரிந்தது’ எனக் குறிப்பிடப்படுகிறது.

அதுவரை யதார்த்தப் பாதையில் அங்கதச் சுவையுடன் பயணித்த பஸ்சின் கதை ‘முப்பது வருடம் போராடிப் பெற்ற அந்த பஸ்’ என்ற வாக்கியத்துடன், வேறொரு தளத்திற்கு உருமாறுகிறது. மறுவாசிப்பில் முதலில் புலராத சில ஒளிகள் மினுமினுத்தன. 83இனக் கலவரத்தில் பாதிப்புற்ற ஒவிசியரின் வருகையுடன் பஸ் வருகிறது. முப்பது வருடங்கள் ஆயுத போராட்ட காலமாகவும், சலீமுடனாக பகையில் ‘பொறு இந்தச் சோனியை சாய்க்கிறன்’ என்பதும்,ராசுவுக்கும் பவானிக்குமான காதலில் ‘குயவக் கழிசறைக்கு சக்களத்தி பவானியா?’ என்பதும், தமிழ் சமூத்தின் உள் முரண்களாகவும்; அன்ரி தனது மகனுக்காக அலைவது, காணாமல்போன புதல்வர்களுக்காக அலையும் அன்னையாகவும் மாறுகிறது. இந்தப் குறியீடுகள்பிரக்ஞை பூர்வமாக கையாளப்படாததாகவும் இருக்கலாம். வாசகர் உணர்வுகள்தான் முக்கியம்.

 

ழத்தவர்களுடன் தொடர்பும் இல்லாத தையல் கலைஞன் பாப்லோவின் கதை ‘ஆலோ ஆலோ.’ பாப்லோவின் தந்தை கூலியோ, ஸ்பெயின் பிராங்கோ அரசின் நெருக்கடியினால் பிரான்சின் எல்லைக்கு அருகிருந்தபெலிசியோவிற்குத் தப்பிச் செல்கிறார். அங்கு மணம் முடித்து பின்னர் பரிசுக்குச் செல்கிறார்கள். பாப்லோ அங்குதான் ஒரு மழைநாளில் பிறந்தவன். பின்னாளில் அவர்கள் கனடாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். இப்போது பாப்லோவின் தையல் நிறுவனம், அவனது தந்தை வழிச் சொத்து. அங்கு பணிபுரியும் கெலன் அவனுடன் ஆறு வருடங்களிற்கு மேலாக ஒன்றாக வாழ்ந்தவள். பிரிந்த பின்னரும் கடந்த முப்பது வருடங்களாக அவனது நிறுவனத்தில் தொழில்சார் உதவியாளராகவும் வேலை செய்து வருகிறாள்.

பாப்லோ அழகின் உபவாசகன். மழையின் காதலன். மழையின் பிறேமை அவன் தாய்வழிச் சொத்து. தன் தொழிலில் அழகையும் நேர்த்தியையும் விரும்புபவன். ‘ஒவ்வொரு மனிதரின் விருப்புகளோடு, அவர்கள் உடலின் ஒவ்வொரு பாக அளவுகளோடு, அவர்களுக்கே உரித்தான ஆடைகளை வழங்குவதுதான் ஒரு தையல் கலைஞனுடைய வேலை’ எனக் கூறுபவன். தையல் ஓடிய இடங்களை அவன் விரல்கள் ஸ்பரிசிக்கையில் நுண்ணிய துருத்தல்களை அவன் தொடுகை அறிந்துகொள்ளும். தொழில் சார்ந்த சிறு தவறுகளுக்கும் ஆத்திரம் அடைந்து கத்துபவன். ஆத்திரத்தை வெளிப்படுத்தத் தெரிந்த அவனுக்கு அதற்கான காரணத்தைத் தெரிவிக்க முடிவதில்லை. ஒருநாள் அவன் திடீரென்று மயங்கி விழுந்துவிட்டான்.

மூன்று மாத கோமாவின் பின்னர்கண்கள் திறந்தபோதும் கால்களும் வலது கையும் உணர்வற்றுக்கிடந்தன. அவன் பேச முயன்றபோது ‘ஆலா ஆலா’ என்ற சொற்களே வெளிவந்தன. பின்னர் அவனுடைய சிறுநீரகங்கள் செயலிழந்தன. முழுநேர பராமரிப்பில் இருக்கும் நிலை. ஒரு நாள் அவனைக் காணவில்லை. எல்லோரும் தேடினார்கள். அவனோ அருகிருந்த பூங்காவில் மழையில்தாயின் நினைவுகளில் நனைந்தபடியிருந்தான். இறுதியில் அவனுடைய காலை வெட்டவேண்டிய நிலை.முழுமையைத் தேடிய கலைஞனுக்கு முழுமையற்ற நிலை!

சிறுகதையின் இறுதிப் பகுதி இவ்வாறு முடிக்கிறது. “மழையின் திக்கை நோக்கி நடக்கத் தொடங்கினான் பாப்லோ. மழை அவனை ஏய்த்தது. அவனும் மழையைத் துரத்தியபடியே சென்றான். முடிவில் அவனுக்காய் சில மழைத் துளிகளை வீசியது மேகம். பாப்லோ மழைத் துளிகளைப் பிடித்து ஏறிக் கருமுகிலிடையே வந்தான். கூதலில் அவன் மேனி சிலிர்த்துக் குளிர்ந்தது. பாப்லோ கருமுகிலாக உருமாறத் தொடங்கினான்.’

கலை நேர்த்தியுடன்எழுதப்பட்ட முக்கிய சிறுகதை இது.

 

‘செல்வி மிசால் யூலியோ அம்றோஸ்’ இவள் ‘நகர உருவாக்கம் மற்றும் பொதுக் கட்டிடத் துறையில் கல்வியும் பட்டமும் பெற்று கட்டிடக் கொன்றாத்துத் துறையில் தன்னை நிலைநாட்டியவள்.’ஒரு படத்திலும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளாள். பிரபல கட்டிடக் கொன்றாத்துக்காரால், மிசால் பொதுப்பணித் துணை அமைச்சருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். அவர்கள் உறவு தொடர்கிறது. அரசியல் அரங்கில் அவரது அங்கீகரிக்கப்பட்டகாதலியாகவும் இருக்கிறாள். அமைச்சர், வெளிவிவகார அமைச்சராக ஆகிய பின்னர் ‘ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை நடவடிக்கை குறித்த முக்கிய ஆவணம் ஒன்றை மிசாலின் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்.’

ஆறு மாதங்களின் பின் ஊடகங்கள் நேட்டோ ஆவணம் பற்றியும் இவர்கள் உறவு பற்றியும் வெளிப்படுத்துகின்றன. பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களின் சுற்றிவளைப்பிற்கு உள்ளாகிறாள். கலங்கி நின்ற மிசாலிடம் அவளது நேர்காணல்கள், அமைச்சருடனான உறவு, அது பற்றிய நூல் முயற்சி, பதிப்புரிமை என மேற்கு நாடுகளின் ஊடக வணிகப் போட்டியில் அவளது வாழ்வு மலரின் அடுக்குகள் இதழ் இதழாக பிடுங்கப்படுகின்றன.துயரம் என்னவெனில் அவளது தனிப்பட்ட வாழ்வு வெளிப்படுவது குறித்து அமைச்சர் மௌனமாக இருந்ததுதான்.

இக்கதையைப் படிக்கையில் பிரிட்டனின் கிறிஸ்ரியன் கீலர், அமெரிக்காவின் மொனிக்கா லுவின்ஸ்கி ஆகியோர் மனத் திரையில் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். அதிலும் கிறிஸ்ரியன் கீலருடன் மிசால் பெரும்பாலும் ஒத்துப்போகிறார். இக்கதையில் மொன்றியலின் மலைக்கோவிலின் உச்சியில் இருக்கும் நியோன் வெளிச்சம் கொண்ட சிலுவை அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இது முக்கியமான ஒரு குறியீடாக வருகிறது. பிரகாசம்தான், பிரகாசத்தினுள் சிலுவை இருக்கிறது.

 

ல களங்களும் பாத்திரங்களும் ஈழ இலக்கி எல்லைக்குப் புதியவை. சொல்நேர்த்தியும் எள்ளலும் ஜெயகரனிடம் கைகூடியுள்ளது. மன உணர்வுகள்காட்சிப் படிவங்களாக மாறுகையில் மனம் தரித்து விடுகிறது. ‘இடம் காட்டி’, ‘அருந்தப்போகிறாயா’, ‘தேவ பாக்கள்’, ‘கோப்பித் தயாரி’, ‘பரிரசாரகர்’ போன்ற பல தூய தமிழ் சொற்கள் படைப்பின் காலை இடறிக்கொண்டிருக்கின்றது. ‘ஆலோ ஆலோ’ கதையில் டொக்ரர் பாப்லேவின் காலை அகற்றுவது பற்றியே கெலனிடம் கூறுகிறார். ஆனால், கெலனோ பாப்லோவின் கையை அகற்றக் கூடாதென பதட்டமாய் விளக்கம் அளிப்பது பொருத்தமாக இல்லை. ‘அடேலின் கைக்குட்டை’இல் மிக நீண்ட காலப் பின்னணியை விபரிக்கையில் கதையின் முன்பாதியில் கட்டுரையின் தன்மை படர்ந்துள்ளது. அடேலின் குடும்ப படத்தின் கீழ் மேக்லாங் 1937ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அடேல் மேக்லாங் வந்ததே 1939இல்தான்.எனவே, அக்குடும்பப்படம் 1939இற்குப் பின்புதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ‘இருளின் மீள்பவர்கள்’ கதையில் ராசன் என்பவர் இராசன் என்றும் ராசு என்றும் மாறி மாறிக் குறிப்பிடப்படுகிறது. இதுதவிர சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ‘லா காசா’, ‘சவம் எழுத்த கதை’ பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை.

இறுதியாக பல்வேறு மதங்கள் யாவும் அதன் அறநெறிக் கோட்பாட்டில் ஒன்றாக இணைவது போன்று, ஆக்கிரமிப்பு அரசியலின் வலியையும் துயரங்களையும் பல்வேறு வாழ்வுப் புலங்களில் வழியாக ஒன்றாக இணைக்கின்றார் ஜயகரன்.பிறரிடமிருந்து அவர் விலகிநிற்கும் புள்ளியும் இதுதான்.

 

பா.அ. ஜயகரன் கதைகள்
பக்கம் 192, விலை ரூ. 230
வெளியீடு: பரிசல் – காலம்
235 பி-பிளாக், எம்.எம்.டி.ஏ. காலனி
அரும்பாக்கம்
சென்னை – 600106
தொலைபேசி: +91 93828 53646;
மின்னஞ்சல்: parisalbooks@gmail.com

 

“மு. புஷ்பராஜன்” <michaelpushparajan@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *