லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

 லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

1
அதோ என் சித்தப்பா
இப்போது விலகிச் சென்று விட்டார்
நீயும் விலகு
இன்னும் இடைவெளி தேவை

அதோ என் மாமா
இன்னும் விலகு
இடைவெளி தேவை

அப்பா இல்லை என்பது போலவே
போய்க்கொண்டிருக்கிறாரே
அவர் தான் அப்பா

அவள் என் மனைவி
அவன் என் கணவன்
அவர்கள் என் குழந்தைகள்
விலகு எனக்கும் உனக்குமே
இப்போது
இடைவெளி தேவை

எனக்கு யாருமே இல்லை அண்ணா
விலகு
இப்போது
உனக்கும் உனக்குமே
இடைவெளி
தேவை

2
தாலத்தை எடுத்து
வையுங்கள் அம்மா
பசிக்கிறது

தாலத்தில் சோறினை போடுங்கள் அம்மா
பசிக்கிறது

பிறக்கும் முன்பிருந்தே
பசிக்கும்
பசி

3
ஹெல்மெற்றுக்குள்
இருக்கும் நண்பனுக்கு
பல சௌகரியங்கள்
முகம் தெரியாது என நினைத்துக்
கடந்துவிடலாம்

இந்த சனியனா வருகிறான் என ஒதுங்கி
விரைந்து விடலாம்
தெரியவா போகிறது
தெரிந்தால் தெரியட்டுமே
காறியுமிழ்ந்து
கடக்கலாம்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

ஹெல்மற்றுக்குள் நண்பனின் தலை
வேறொன்றாக இருக்கிறது
நாம் பொதுவாக அறியாத
வேறொரு தலை அது

எல்லா வசதியும் இருந்தும்
நெளிந்து வளைந்து இறங்கி
நான்தான் என்று ஹெல்மற்றை இறக்கி
நின்று கொண்டிருக்கிறான் பாருங்கள்
ஒரு நண்பன்
அவன்முகத்தில் அவனிங்கே
பிழைக்க வந்ததன் ரேகையே
இல்லை

4
ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு விதமான லௌகீகம்
சிறந்த பெண் சிறந்த லௌகீகம்
கடினமான பெண் கடினமான லௌகீகம்

அவளுடைய விலங்கு
அவளுடைய புன்சிரியில் இல்லை
அழகில் இல்லை
இடைவளைவில் இல்லை
மார்பிலும் இல்லை

காட்டிலிருந்து வேட்டைக்கு புறப்பட்ட
முதல் நாளில்
இருக்கிறது
அது .

எவ்வளவு தூரம் பின்னர்
பழக்கப்பட்டிருக்கிறது
என்பதில் இருக்கிறது
காட்டிற்கு உன்னை எப்படி பழக்கப்போகிறது
என்பதில்
இருக்கிறது

சிலசமயம் காட்டிலிருந்து எவ்வாறு உன்னை
மீட்டெடுக்கிறது
என்பதிலும் இருக்கிறது

5
பூனை போல
பசு போல
நாய் போல நரி போல
குதிரை போல
அணில் போல
கரடி போல
வாயைச் சுழற்றுகையில்
சர்ப்பம் போல

மிருகமாக பார்க்கத் தொடங்கினால்
மனிதர்கள்
மிகவும்
சுவாரஸ்யமாக
தெரிகிறார்கள்

6
ராணிக்கு இரண்டு
விஷப்பற்கள் உண்டு
உன்னிடம் அவள் அதனை நீட்டாதவரையில் நண்பன்
நீட்டிவிட்டாளெனில்
காதலன்

7
இன்னும் யானையை அதே
அதிசயத்தோடு
பார்க்க முடிகிறது
ரயிலுக்கு டாட்டா காட்டும்
பழக்கம்
நிற்கவில்லை
புட்டான்களைப் பிடிக்க
கைகள் நீளுகின்றன
கருடனைத் தொட்டு
கண்களில் போட்டுக் கொள்கிறேன்

கொடிமரத்தில்
சாஷ்டாங்கமாக விழுவது கண்டு
அமர்ந்திருக்கும் பெருமாள்
எழுந்து நின்று
பார்க்கிறார்

திரையில் மழை பெய்தால்
சிகிரெட் பற்றத்
தோன்றுகிறது

என்றாலும்
தாடி இவ்வளவு
நரைத்திற்றே
ஏகச்சி ஏகம்பனே

8
நண்பனை அழைத்துக் கொண்டு
கடற்கரைக்குச் சென்றேன்
அவன்தன் நண்பனை உணர்ந்து
நடந்து வருகிறான்

மனைவியை அழைத்துச் சென்றேன்
அவள்
காதலனை நான்போல நினைத்து
உடன் வருகிறாள்

குழந்தைகளோ
அப்பாவின்
கரம்பற்றிக் கொள்கிறார்கள்

கடலின் கரம்பற்றி நடக்கிறேன்
அப்போது
எனக்கும் பெயரில்லை
கடலுக்கும்
பெயரில்லை

9
எப்போது
நானாக மட்டும்
இருக்கிறேனோ
அப்போது
மீதமெல்லாம்
கரைந்து
விலகிச் செல்கிறது

எப்போது எல்லாம்
விலகிச் செல்கிறதோ
அப்போதெல்லாம்
சிவம் உடலைத்
தழுவிக் கொள்கிறது

10
மூன்று தெப்பக்குளங்கள்
எனக்கு சொந்தம்

இரண்டு கடல்கள்
எனக்கு
உண்டு

மலைகள் நான்கைந்து
அம்மா என்னிடம் விட்டுச் சென்ற
பௌர்ணமி
ஒன்றுண்டு என்னிடம்

இதையெல்லாம் யாரிடமேனும்
விட்டுச் செல்வதற்காக
வைத்திருக்கிறேன்

உங்களுக்கு என்ன உண்டு?
தெளிவாக
எனக்குச் சொல்லுங்கள்
விட்டுச் செல்வதற்காக
என்ன வைத்திருக்கிறீர்கள்?

“லஷ்மி மணிவண்ணன்” <slatepublications@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *