வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்

 வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்

பியட்றிஸ் லம்வாகா
தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்
ஓவியம்: Poulami Banerjee

 

மெகாஎஃப்.எம்மில் அறிவிப்பாளர் லாபல்பினி உனது பெயரை வாசித்தார். நாங்கள் தினந்தோறும் செய்துவந்த பிரார்த்தனையின் பலனாகத்தான் அது நிகழ்ந்திருக்கும். நாங்கள் ஒருநாள்கூடத் தவறாது ஐந்து வருடங்களாக அந்த நிகழ்ச்சியைச் செவிமடுத்து வந்தோம். இராணுவப் படையினர், சூடான் கிளர்ச்சியாளர்களிடமிருந்து உன்னையும் மேலும் பத்துப் பிள்ளைகளையும் காப்பாற்றியிருந்தார்கள். உனது பெயர் தவறுதலாகக் கூறப்பட்டிருக்கலாமென்றே நாங்கள் முதலில் நினைத்தோம். வானொலியில் லாபல்பினி உனது பெயரைத் திரும்பவும் கூறும் வரையில் நாங்கள் காத்திருந்தோம்.அவர் எமது அம்மாவின் பெயரையும் தெரிவித்து, அலொகொலும் எனும் எமது கிராமத்தின் பெயரையும் தெரிவித்தார். லமுனு எனும் பெயரில் நீயன்றி வேறெவரும் ஊரில் இருக்கவில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

கடந்த ஐந்து வருட காலமாக மெகா எஃப்.எம். வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொகைப் பெற்றோரின் வரிசையில் நாங்களும் இணைந்துகொண்டோம். ஆமாம், தமது அன்புக்குரிய பிள்ளைகளின் பெயர்களை இப்போது அறிவிப்பார்கள், இப்போது அறிவிப்பார்கள் என்று காத்திருந்தவர்கள் வரிசையில், நாங்கள் எந்நாளும் வானொலிப் பெட்டியைச் சுற்றி வர அமர்ந்திருந்தோம். லமுனு என்றோ அலொகொலும் என்றோ கூறப்பட்ட ஒவ்வொரு தடவையும் எமது இதயங்கள் பலமாக அதிர்ந்தன. ஒரு மணித்தியாலம் முழுவதும் ஒரு வார்த்தைகூடக் கதைக்காமல் வானொலியைச் செவிமடுத்துக் கொண்டிருந்த நாங்கள் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு நாள் முழுதும் ஏங்கிக் கொண்டிருந்தோம். நாட்கள் கடந்து வருடங்களான போது மேலும் மேலும் பிரார்த்தனைகள் புரியப் பழகியிருந்தோம். உனது பெயர் கூறப்படாதவிடத்து, உன்னைக் காணும் எதிர்பார்ப்பும் எம்மிடமிருந்து தொலைவாகிக் கொண்டே வந்தது. ஆனாலும் நாங்கள் காத்திருந்தோம். தினந்தோறும் வானொலியை செவிமடுக்க எங்கிருந்தாவது பேட்டரிகளைத் தேடிக்கொண்டு வந்தோம்.

லமுனு, நாங்கள் இதை உன்னிடம் கூறாதிருப்பதே நல்லது. நீ திரும்பவும் எம்மிடம் வந்து சேர மாட்டாயென எமக்குத் தகவல் வந்த நாட்களில் உனது ஆத்மாவைப் புதைத்துவிட்டோம். ஆமாம், சுற்றி வர இருந்த ஆட்கள் உன்னைப் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கைவிடுமாறுதான் கூறிக் கொண்டிருந்தார்கள். கொண்டு செல்லப்பட்டு நான்கு வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய பொங்கொமின், உனது சடலம் வெயிலில் காய்ந்து வெடித்துப் பிளந்திருந்ததைக் கண்ணுற்றதாகக் கூறினான். எனினும், நீ மரித்துப் போயிருப்பாயென நாங்கள் ஒரு கணமும் நினைக்கவில்லை. உனது ஆன்மா வட உகாண்டாவில் மிதந்து கொண்டிருப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை. நீ திரும்பவும் வந்து ஆவியாக மாறி எம்மை அச்சுறுத்துவதைக் காணவும் நாங்கள் விரும்பவில்லை. நீ செத்துப் போயிருப்பாயென அம்மா ஒரு கணம்கூடஎண்ணிப் பார்க்க விரும்பவில்லை. நீ எப்போதாவது திரும்பி வருவாயென்ற அவளது நம்பிக்கைதான் எம்மையும் எதிர்பார்ப்போடு இருக்க வைத்தது. வண்ணத்துப் பூச்சிகள் அவளது உள்ளத்தை பலப்படுத்திக்கொள்ளுமாறு கூறி முணுமுணுப்பதைப் போல கனவொன்று கண்டதாக அவள் கூறினாள். அம்மா அந்தக் கனவைக் கண்ட இரவுக்கு அடுத்த நாள், வீடு முழுவதும் வண்ணத்துப் பூச்சிகள் நிறைந்திருந்தன. அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக நாங்கள் நினைத்தோம். நீ அவளது புத்தி யோசனையையும் எடுத்துச் சென்றிருக்கிறாயென்றே நாங்கள் நினைத்தோம்.

உனது ஆத்மா சாந்தியடைய வேண்டி அம்மா மூன்று நாட்களாக ஒபொபோ இலைகளை அணிந்து கொண்டிருந்தாள். எம்மை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அவள் அவ்வாறு செய்தாள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். உன்னை நிம்மதியாக இருக்க விடுமாறு நாங்கள் அவளிடம் கூறினோம். அவள் பாட்டுக்கு அவளுடைய வேலைகளைச் செய்து கொண்டிருக்கலாம்தானே அப்போது. ஆனாலும் அவள் அவ்வாறு செய்யவில்லை. உனது ஆத்மாவோடு, அவளுடைய ஆத்மாவையும் சேர்த்துப் புதைத்தது போலத்தான் அவள் எம்மைச் சுற்றி நடமாடிக் கொண்டிருந்தாள். உனது ஆத்மாவை, அப்பாவுடையதற்கு அருகிலேயேதான் புதைத்தோம். குளிரில் நீ வனாந்தரங்களில் பின்தங்கி விடுவதை நாங்கள் விரும்பவில்லை. உன்னை நிம்மதியாக இருக்க விடுவதுதான் முக்கியமானதென அம்மா சொன்னாள். ஆமாம், அடுத்த ஜென்மத்திலாவது நீ நிம்மதியாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் நாங்கள் உனது பெயரை வானொலியில் செவிமடுத்தோம். நாங்கள் தடுமாறிப் போய்விட்டோம். தப்பிச் செல்வதா? உனது ஆத்மாவைப் புதைத்த இடத்திலிருந்து மீண்டும் எடுப்பதா? இல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்தோம் என்பதை உன்னிடம் கூறாது உன்னை உன்னுடைய பாட்டில் இருக்க விடுவதா? எமக்கு ஒருபோதும் இதை உன்னிடம் கூற தைரியம் வராது. எப்போதாவது ஒருநாள் உனது பெயர் பொறிக்கப்பட்ட கல்லறையை நீ காணக்கூடும். அப்போது இதை எவ்வாறு உன்னிடம் கூறுவது என்பதை வண்ணத்துப் பூச்சிகள் எமக்குக் கற்றுத் தரக்கூடும்.

‘வேர்ல்ட் விஷன்’ எனப்படும் கடத்தப்பட்ட பிள்ளைகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் நீ இருந்தாய். உனக்கு உபதேசித்திருந்தார்கள். திரும்பவும் எம்முடன் இணைந்து வாழ்வது எவ்வாறென உனக்கு கற்றுக் கொடுத்திருந்தார்கள். அம்மா ஒரே தடவையில் அழுவதையும் சிரிப்பதையும் என இரண்டையுமே செய்யத் தொடங்கிவிட்டாள். ஆமாம், நீ நிஜமாகவே உயிருடன் திரும்பி விட்டிருந்தாய். அதுவரையில், எமது இதயங்களுக்கு கடைசியிலாவது நிம்மதி கிடைக்கும் என நினைத்துக்கூடப் பார்க்க முடியாமலிருந்தோம். அன்றிரவு அம்மா பிரார்த்தித்தாள். சேவல் கூவும் வரைக்கும் நாங்களும் பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்தோம். எமக்கு மிகவும் சந்தோஷமாகவிருந்தது. நீ உயிருடன் இருப்பது குறித்து நாங்கள் அந்தளவு மகிழ்ச்சியடைந்திருந்தோம். அப்பாவுக்குத் தெரியுமென்றால் அவரும்கூட கல்லறையிலிருந்து எழுந்து வந்து விடுவார். நீ உயிருடன் இருப்பதை அறிந்துகொண்ட நாங்கள் அந்தளவு மகிழ்ச்சியடைந்திருந்தோம்.

 

டைசியில் நீ வீட்டுக்குத் திரும்பிவிட்டாய். மரவள்ளித் தண்டு போல மெலிந்து போயிருந்தாய். உனது இடது கையிலும் வலது காலிலும் துப்பாக்கி ரவைகள் துளைத்த அடையாளங்கள் காணப்பட்டன. பூமி முழுவதும் நடந்து திரிந்து வந்தது போல, உனது கால்கள் வீங்கிப் போயிருந்தன. அடிப் பாதங்கள் வெடித்திருந்தன. முன்பெல்லாம் அழகாகக் காணப்பட்ட உனது முகத்தின் எல்லாப் புறத்திலும் காயங்களின் தழும்புகள் எஞ்சியிருந்தன. பழுத்த மிளகு விதையின் நிறமொத்து உனது விழிகள் காணப்பட்டன. உனக்கு நிகழ்ந்தவை அனைத்தையும் எமக்குக் காண்பிப்பது போல, நீ உனது காயத் தழும்புகளைத் தடவிக் கொண்டிருந்தாய். நாங்கள் எதுவும் உன்னிடம் கேட்கவில்லை. இதற்கு முன்பு அங்கு நடந்தவைகள் குறித்த கதைகளை நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். அனேனா, ஆயா, பொங்கொமின், யெகோ, அயாத், லாலம், அவுமா, ஒசெங், ஒடிம், ஒலேம், உமா, அடெங், அக்வேரோ, லேகார், ஒடொங், லன்யேரோ, லாடு, டிமி, கடி… இந்த அனைவரின் வாயிலிருந்தும், உனது கதையும் அவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்காது என நாங்கள் நம்புகிறோம்.

லமுனு, நீ வீட்டுக்கு வந்ததன் பிறகு நாங்கள் பயந்து போயிருந்தோம். நாங்கள் உன்னைக் கண்டு பயந்தோம். நீ என்னவாக இருந்தாய் என்பது குறித்து பயந்தோம். அம்மா அயல்வீடொன்றிலிருந்து லயிபி மர அடுக்கொன்றைக் கேட்டு வாங்கிக்கொண்டு வந்தாள். உசேன் மாமா சந்தையிலிருந்து முட்டையொன்றை வாங்கி வந்தார். அனைத்திற்கும் முன்பதாக உன்னைத் தூய்மைப்படுத்த வேண்டுமே. அடர்ந்த காடுகளினுள்ளே நீ செய்தவற்றிலிருந்தும் கிளர்ச்சியாளர்கள் உன்னைச் செய்யுமாறு வற்புறுத்திய விடயங்களிலிருந்தும் முட்டை உன்னைத் தூய்மைப்படுத்தும். அவர்கள் உன்னை பலவந்தமாகக் கடத்திக்கொண்டு போனதை நாமறிவோம். நீ அவர்களோடு சேரவில்லை. நீ ஒருபோதும் அவர்களில் ஒருவராக ஆகவில்லை. நீ விரைவாக அடுக்கின் மேலால் குதித்துத் தாண்டினாய். நீ முட்டையின் மீது பாதத்தை வைத்ததுமே அதன் மஞ்சள் கரு விசிறுண்டது. நீ தூய்மையாகி விட்டிருந்தாய். கேள்வி எதையும் நீ கேட்கவேயில்லை. எது உன்னிடம் கூறப்பட்டதோ அதை நீ செய்தாய். இதைச் செய்ய வேண்டி நேரும் என்பதை முன்பே நீ அறிந்திருந்தது போல. இந்தச் சடங்கைச் செய்யாதுவிட்டால் நீ ஒருபோதும் தூய்மையாக மாட்டாய் என்பதைப் போல. அம்மா குலவையிடத் தொடங்கினாள். உன்னை மிகுந்த அன்போடு வீட்டுக்குள் வரவேற்றாள். ஆமாம், நீ மீண்டும் வீட்டுக்குச் சொந்தமாகி விட்டாய்.

நாங்கள்ஓசையெழுப்பாமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தோம். பதிலுக்கு நீயும் எம்மையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாய். உனக்குப் பசியாக இருக்கக் கூடுமென எமக்குத் தோன்றிய வேளைகளில் நாங்கள் உனக்கு உணவளித்தோம். நீ எதுவும் பேசாமல் புளிச்சக் கீரை மசியலோடு வற்றாளைக் கிழங்கை மென்று விழுங்கிக் கொண்டிருந்தாய். உன்னை விருந்தாளி போலல்லாது எம்மில் ஒருவராக நடத்துவதே எமக்குத் தேவையாக இருந்தது. எனினும் நாங்கள் உன்னை புதியவளொருத்தியாகத்தான் எப்போதும் உணர்ந்தோம். நீ மீண்டும் பழைய லமுனு போல ஆகப் போவதில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. நீ ஒரு வார்த்தையாவது பேசும்வரைக்கும் நாங்கள் காத்திருந்தோம். உனது சொரசொரப்பான குரலைக் கேட்க நாங்கள் விரும்பினோம். உன்னை எம்மிடமிருந்து பறித்துக்கொண்டு செல்ல முன்பு உனக்கிருந்த வெடிச் சிரிப்பு ஓசையைக் கேட்கக் காத்திருந்தோம். உனக்கு கிச்சுகிச்சு மூட்டி நீ சிரிப்பதைக் காண நாங்கள் விரும்பினோம். எனினும் நீ எவ்விதச் சலனமுமின்றிக் காணப்பட்டாய். நீ எம்மை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாய். நீ இப்போது வளர்ந்து விட்டிருந்தாய். அணிந்திருந்த நீலப் பூச் சட்டைக்கு மேலால் உனது மார்புகள் சிறிதாக புடைத்து வந்திருந்தன.

நாங்கள் உனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். உன்னைக் கண்டதுமே நாங்கள் ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்தோம். பதிலாக நீ எதுவுமே கூறவில்லை. எம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை மாத்திரமே செய்தாய். உனது விழிகள் பிரகாசிப்பதை நாங்கள் அவதானித்தோம். திரும்பி வந்தது குறித்து நீ மகிழ்ச்சியடைந்திருப்பது எமக்கு விளங்கியது. எம்மைக் காணக் கிடைத்தது குறித்து நீ மகிழ்ச்சியடைந்திருந்த விதம் எமக்குத் தென்பட்டது.

அன்றிரவு அம்மா அவளது படுக்கையில் அழுது கொண்டிருந்தாள். எந்த நேரத்திலாவது நீ அவளை ‘அம்மா’ என அழைக்கக் கூடுமென எண்ணியவாறு உனது பெயரைத் தொடர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். நீ திரும்பி வந்தது குறித்து அவள் எவ்வளவோ மகிழ்ச்சியாகக் காணப்பட்ட போதிலும் அவள் அதைக் குறித்து எதுவுமே கூறவில்லை. நீ ஏதாவது கதைக்கக் கூடுமென அவள் காத்துக் கொண்டிருந்தாள். ஆமாம், உனது உடலினுள்ளே உனது ஆத்மா இருக்கிறது என்பதை நம்பச் செய்யக் கூடிய ஏதேனுமொன்று நிகழும் வரை அவள் காத்திருந்தாள். உனது ஆத்மாவுடன் சேர்த்து உனது குரலும் புதையுண்டு போய் விட்டதோ என எமக்கு அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. புதைத்த ஆத்மாவைத் திரும்ப எடுப்பது எவ்வாறென நாங்கள் எவருமே அறிந்திருக்கவில்லை. உனது ஆத்மா ஆறடி ஆழத்துக்குள் இல்லையென்பதை அறிந்துகொள்வதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

நீ உயிருடன் இருப்பதைக் காண்பதே எமக்கு அவசியமாக இருந்தது. உனக்கு பதினைந்து வயதுதான் என்ற போதிலும், இப்போதும் உனக்குள்ளே மருத்துவராகும் ஆசையிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம். நீ மீண்டும் சிரிப்பதைக் காண விரும்பினோம். சிறு வயதில் உனக்கு அம்மா தண்ணீரைக் கொடுத்து நடனமாடிக் காட்டும்போது உனது கண்களில் தோன்றும் பிரகாசத்தைக் காண நாங்கள் விரும்பினோம். நீ எங்களை அடையாளம் கண்டுகொண்டாய் என்பதைக் காட்டும் ஏதேனுமொன்று எமக்குத் தேவைப்பட்டது. உன்னை மகிழ்வுடன் வைத்திருக்கக் கூடிய மிகச் சிறந்தவற்றைச் செய்ய நாங்கள் விரும்பினோம்.

அம்மா திரும்பவும் வண்ணத்துப் பூச்சிகள் குறித்து கதைக்கவேயில்லை. வண்ணத்துப் பூச்சிக் கனவுகள் குறித்து எவையும் மீண்டும் எமது காதில் விழவேயில்லை. வண்ணத்துப் பூச்சிகள் வந்து அம்மாவிடம் ஏதேனும் கூறினால் நன்றாக இருக்குமென நாங்கள் பார்த்திருந்தோம்.

 

நீ எமது புதிய வீட்டை கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தாய். அது எம்மை விடவும் உனக்குப் புதியதுதானே. எமது அயலவர்கள் உன்னை அறுவெறுப்போடு பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். நீ திரும்பி வந்தது குறித்து அவர்கள் அந்தளவு விருப்பத்தோடு இருக்கவில்லை. அவர்களில் சிலர் இப்போதும் வானொலியை நெருங்கியமர்ந்து லாபல்பினி, வானொலியில் அவர்களது பிள்ளைகளின் பெயர்களைக் கூறும்வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். சரியாகச் சொன்னால், கிராமத்துத் தலைவர், மஞ்சள்சோளக் களியும் அவரைக்காயும் வழங்குவதற்காக எம்மைப் பெயர் கூறி அழைக்கும்வரை காத்துக் கொண்டிருந்தது போல.

இப்போது நாங்கள் தரையைக் கொத்துவதில்லை, லமுனு. மண்வெட்டியொன்றைப் பிடிப்பது எப்படியென்றுகூட எமது பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. வேர்க்கடலைச் செடி எவ்வாறிருக்கும் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் தரையைத் தோண்டுவது எமது பிள்ளைகளை அடக்கம் செய்வதற்காக மாத்திரம்தான். எமது காணியில்கூடாரங்கள் மட்டுமே மேலெழுகின்றன. நாங்கள் இப்போது முகாமில் வசித்து வருகிறோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் முகாம் என இது அழைக்கப்படுவதாக கிராமத்துத் தலைவர் கூறினார். வானத்திலிருந்து பார்க்கும்போது எமது முகாம் காளான் பண்ணையொன்றைப் போல தென்படக்கூடும்.எம்முடன் எஞ்சியிருப்பதெல்லாம் வெற்றுக் கூடாரங்களில் வசிக்கும் வெற்று மனிதர்கள் சிலர் மாத்திரம்தான். அவர்களுடைய ஆத்மாக்களும் ஒன்றோ புதைக்கப்பட்டிருக்கின்றன அல்லது எங்கோ கால்போன போக்கில் போய் விட்டிருக்கின்றன.

கூடாரங்களைப் பார் லமுனு. உன்னால் புரிந்துகொள்ள முடியுமென நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கும் விடயமல்ல இது. ஆமாம், உன்னால் அடையாளம் காண முடியுமான இடமல்ல இது. உன்னை விடுவோம். எமக்குக்கூட விளங்கிக்கொள்ள முடியாத விடயம் இது. இதுதான் எமது வீடு. உனக்கு எப்படிப் புரிய வைப்பது என எமக்குத் தெரியவில்லை. இது எமக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. ஆகவே,இதுதான் நாம் வசிக்கும் வீடு. எம்மை மனம்பிறழச் செய்யாதிருப்பது இதுதான். இது வெறும் கூடாரம் மாத்திரம்தான். புற்களாலும் செங்கற்களாலும் எமது நிர்வாணத்தை மறைக்கும் நான்கு சுவர்கள் கொண்ட வெற்றுக் கூடாரம்.லதீமும் அவனது அயலவர்களும் இங்கு கூடாரங்களை அமைத்தபோது அலொகொலும் பிரதேசம் மிகவும் பாதுகாப்பான இடம் எனக் கூறினார்கள். இனிமேல் பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட மாட்டார்கள், எமது பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றார்கள். சாப்பிடவும் ஏதேனும் கிடைக்கும் என்றார்கள். பிறகு அந்த நம்பிக்கையில்தான் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் மாத்திரம் மனதில் சுமந்தவாறு நாங்கள் பலரும் எமது காணியில் கூடாரங்களை அமைத்துக்கொண்டோம். அதனைத் தொடர்ந்து எமது காணியில் கூடாரங்களை அமைக்க அனைவருக்கும் தேவைப்பட்டது. எம்மால் அதற்கு மேலும் நிலத்தைக் கொத்த முடியவில்லை. உணவுகள் எதுவும் இருக்கவுமில்லை. உகாண்டா வரைபடத்தில் எமது வீடும் காணியும் முகாமொன்றாக அடையாளமிடப்பட்டிருப்பதைக் குறித்து பின்னர்தான் நாங்கள் அறிந்துகொண்டோம்.

எம்மை அப்படிப் பார்க்காதே, லமுனு. ஆமாம், நாங்கள் இப்போது மஞ்சள் சோளக் களியைத்தான் உணவாக உட்கொள்கிறோம். யுத்தத்துக்கு முன்பு அப்பாவின் வேட்டை நாயான பிகோவுக்கு அம்மா உணவாகக் கொடுத்த அதே களிதான். ஆமாம், இப்போதெல்லாம் கிராமத்துத் தலைவர் எமக்கு மரக்கறி எண்ணெய்யும் அவரையும் மஞ்சள் சோளக் களியும் தரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தருபவை சில வேளைகளில் எமக்கு தொட்டுக்கொள்ளக்கூட போதாமலிருக்கும். சில வேளைகளில் கிராமத்துத் தலைவர் வரவே மாட்டார். ஒரு தடவை வயிற்றில் பூச்சிகள் கத்துவதைத் தாங்க முடியாமல் சாப்பிட ஏதாவது தேடிக்கொண்டு வரவென நாங்கள் முகாமை விட்டு பதுங்கிப் பதுங்கி வெளியே சென்றோம்.ஆமாம், சொட்டுப் போல ஏதாவது கிடைத்தாலும் பரவாயில்லை. காட்டுச் செடிகளாவது, குறைந்த பட்சம் புளிச்சக் கீரையாவது, ஏதாவதொன்று. எமது மூதாதையர்கள் சாப்பிட நினைத்தும் பார்த்திராத ஏதாவது கிடைத்தாலும் பரவாயில்லை. அப்போதுதான் நாங்கள் காவல் காத்துக் கொண்டிருந்த படையினரிடம் மாட்டிக்கொண்டோம். அவர்கள் எம்மை முகாமைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் ஏனென்று கேட்டோம். கிளர்ச்சியாளர்களால் இனி மேலும் நாங்கள் கடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்றார்கள். அன்புக்குரியவளே, இந் நாட்களில் அவர்கள் எவரையும் கடத்திச் சென்று விடுகிறார்கள். போரின் போது நிமிர்ந்து நின்றுகொண்டு துப்பாக்கி வேட்டுகளை உடலில் தாங்கக் கூடிய எவரையும்.

எமது லமுனுவைக் கடத்திச் சென்ற போது நீங்கள் அனைவரும் எங்கிருந்தீர்களென நாங்கள் படையினரிடம் கேட்டோம். எமது சிறுவர், சிறுமியரை கிளர்ச்சியாளர்கள் கடத்திக்கொண்டு சென்ற போது எங்கிருந்தீர்கள் என்று கேட்டோம். அவர்கள் வந்து எமது பெண்களை எமது கண் முன்னாலே துஷ்பிரயோகம் செய்த போது நீங்கள் எல்லோரும் எங்கு தொலைந்து போயிருந்தீர்கள் என்று கேட்டோம். அவர்களுக்கு அப்போது சம்பளம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள். நீங்கள் நாசமாப் போக! என்று நாங்கள் சாபமிட்டோம். எம்மை உணவு தேடிச் செல்ல விடுங்கள் என்றோம். அதன்பிறகு அவர்கள் தடிகளை எடுத்துக்கொண்டு வந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளை அடிப்பது போல எம்மைத் தாக்கினார்கள்.

 

நீ கனவில் கதைத்தாய்.உனது களிமண் படுக்கையில் உருண்டுருண்டு, நெளிந்து நெளிந்து நீ கதைத்தாய். நாங்கள் உனது கைகளைப் பற்றிக்கொண்டோம். நீ பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் பெண்ணொருத்தியைப் போல துடித்துக் கொண்டிருந்தாய். நீ பூதங்கள் குறித்து கதைத்தாய். அடிலாங்கில் வைத்து நீ தப்பித்து வர முற்படுகையில் உன்னைத் துரத்திக்கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள் குறித்து உளறினாய். உனது தோழியான அகேல்லோ தப்பிச்செல்ல முற்பட்ட காரணத்தால் கிளர்ச்சியாளர்கள் உன்னைக் கொண்டும் உனது குழுவினரைக் கொண்டும் அவளை அடித்துக் கொல்ல நிர்ப்பந்தித்ததுகுறித்து நீ கூறினாய். அவளைக் கொல்ல உனக்கு எவ்விதத் தேவையும் இருக்கவில்லை என நீ தெரிவித்தாய். ‘ஒருவரையும் கொல்லக் கூடாது’ என்ற கட்டளையின் வரிகள் உனக்கு நினைவிருந்தன. அவளுக்கு எதிராகக் கையை உயர்த்தக்கூட நீ விரும்பவில்லை என்று நீ கூறினாய். யாரையும் நோகடிக்க உனக்குத் தேவைப்படவில்லை. தடிகளால் அகேல்லோ மூடப்பட்டிருந்த விதத்தை, அவளது வாயிலிருந்து குருதி பீறிட்டு வழிந்த விதத்தை, மூத்த கிளர்ச்சியாளர்கள் அவள் மரித்து விட்டாளா எனப் பார்த்த விதத்தை, நீ கண்ணுற்றதாகக் கூறினாய். உனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. நீ வாந்தியெடுக்க முற்பட்டாய். எனினும் வாயிலிருந்து வெளியே வர எதுவுமிருக்கவில்லை. முகாமில் திருட்டுத்தனமாக உட்கொண்ட பச்சை மரவள்ளிக் கிழங்கும் அவித்த கோழியிறைச்சியும் அவ்வேளையில் செரித்து உறிஞ்சிக்கொள்ளப்பட்டும் இருக்கும்.

நீ கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். உனது துயரத்தைப் பங்கிட்டுக்கொண்டு அனுபவிக்க நாங்கள் முற்பட்டோம். நீ என்னவெல்லாம் அறிந்திருக்கிறாய் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். நாங்கள் உனது கைக்கு ஒத்தடமளித்தோம். நீ மனதுக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கும் விடயங்களை வெளியே எடுப்பதே எமது தேவையாகவிருந்தது. நீ எமக்கு உனது கரங்களுக்கு ஒத்தடம் கொடுக்க இடமளித்தாய். குருதி பீறிட்டதைக் கண்டு நீ முகம் வாடக்கூட இல்லையென நீ கூறினாய். உனது துயரங்கள் அனைத்தையும் வெளியே இழுத்தெடுத்து அகற்ற எம்மால் முடியாமல் போனது.

 

பெருமழையில் நீ இன்று நனைந்து கொண்டிருந்ததை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். பெரும் மழைத் துளிகள் உன் மீது விழுந்த போது நீ சிலை போல அசையாதிருந்தாய். பேரோசையோடு இடி, மின்னல் வெட்டிய போதும் நீ அப்படியே இருந்தாய். நாங்கள் உனக்காகக் கூடாரத்துக்குள் இடத்தையும் ஆடையையும் வைத்துக்கொண்டு காத்திருந்தோம். நீ ஏதாவது கூறுவாயென நாங்கள் நினைத்தோம். நாங்கள் உன்னைத் தொந்தரவு செய்யவில்லை.

மழை, தூறலாக மாறத் தொடங்கியதும் நீ வீட்டுக்குள் வந்தாய். நீ வெதுவெதுப்பான ஆடைகளைக் கையில் வைத்துக்கொண்டிருந்த அம்மாவைக் கடந்து வந்து ஈர ஆடையோடே அமர்ந்துகொண்டாய். உனது உடலினுள்ளே ஏதோவொரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். மழைக்கு உனது இரத்தத்தைக் கழுவிச் செல்ல நீ இடம் கொடுத்திருந்தாய். உனது கால் வழியே சிறியதொரு கோடாக குருதி வழிந்தோடுவதை நாங்கள் கண்டோம். அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததை நீ காணவில்லை.

அன்று பின்னேரமான போது நீ வாய்க்குள் சாபமிடுவதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். அரசாங்கத்தின் போர் விமானங்கள் கடிகாடிக்கு மேலால் பறந்ததைக் கேட்ட போதெல்லாம் நீ நடுங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம். நீ கைவிட்டு வந்த உனது குழுவினரைக் குறித்து நீ கவலைப்படுவதை நாங்கள் அறிந்துகொண்டோம். விமானங்கள் கிளர்ச்சியாளர்களைத் துரத்தும்போது என்ன நடக்குமென்பதை நீ அறிந்திருந்தாய். நாங்கள் உன்னிடம் அந்தக் கதைகள் எவற்றையுமே கேட்கவில்லை. அனேனா, ஆயா, பொங்கொமின், யெகோ, ஆயாத், லாலம், ஔமா, ஒசெங், ஒடிம், ஒலேம், உமா, அடெங், அக்வேரோ, லேகர், ஒடொங், லன்சேரோ, லாடு, டிமி, காடி இவர்கள் அனைவரும் எமக்கு அந்தக் கதைகளைக் கூறியிருந்தார்கள்.

 

கிளர்ச்சியாளர்கள் எமது வீட்டுக்கு வந்த விதம் எமக்கு நேற்று நடந்ததைப் போல இப்போதும் நினைவிருக்கிறது, லமுனு. அதைப் போல பல இரவுகள் தொடர்ந்து வரப் போவதைக் குறித்து, அன்றிரவுதான் நாங்கள் அறிந்துகொண்டோம். துப்பாக்கிப் பிடிகளால் மக்களின் தலையில் தாக்கும் சப்தங்கள், ஓலமிடும் குரல்கள், எமது பிள்ளைகளை எமது சொந்த வீடுகளிலிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லும் ஓசைகள் எமக்குக் கேட்டன. நாங்கள் நாதியற்று பரிதவித்தவாறு நின்றிருந்தோம்.

நீ தூக்கக் கலக்கத்தில் இருந்தாய். உன்னை விடவும் வேண்டுமென்றால் ஓரிரு வருடங்கள் மூத்த கிளர்ச்சியாளர்கள் உனது கையைப் பிடித்து இழுத்தார்கள். நீயொரு டீசேர்ட்டை மாத்திரமே அணிந்திருந்தாய். நீ அணிந்துகொள்ளவென அம்மா உனக்கொரு பாவாடையை எடுத்து வந்தாள். அது உன் கைகளில் இருந்தபோதே, உன்னை வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்றார்கள்.

அம்மாவின் அழுகை ஒப்பாரிகளுக்கும் கெஞ்சும் புலம்பல்களுக்கும் அவர்கள் துப்பாக்கிப் பிடிகளால் தலையிலடித்து பதிலளித்தார்கள். உனக்குப் பதிலாக அவளைக் கொண்டு செல்லுமாறு அவள் அவர்களிடம் வேண்டி நின்றாள். ஆனால், அவர்கள் அம்மாவுக்குப் பதிலாக மருந்துகளைத்தான் கேட்டார்கள். அம்மா, நகரத்திலிருந்த அரச மருத்துவமனையிலிருந்து கொண்டு வரும் மருந்துகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. அம்மாவுக்கு இயலுமாக இருந்திருந்தால் ஒருபோதும் உன்னைக் கொண்டுசெல்ல விட்டிருக்க மாட்டாள், லமுனு. அப்போதுதான் உனக்கு பதினொரு வயது பிறந்திருந்தது. ஆரம்ப வகுப்புகளுக்கான இறுதிப் பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தாய். எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வர வேண்டுமென்று நீ விரும்பியிருந்தாய். அம்மாவைப் போலத் தாதியாக ஆகாமல், வைத்தியரொருவராக ஆகி அப்பாவி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நீ கூறிக் கொண்டேயிருந்தாய்.

உன் வயதையொத்த வயதிலிருந்த சிறுவர்களையும் சிறுமிகளையும் தேடித் தேடி அவர்கள் கடிகாடி கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் சென்றிருந்தார்கள் என்பதை நாங்கள் பின்னர் அறிந்துகொண்டோம். கிளர்ச்சியாளர்கள் சிறு பிள்ளைகளை போருக்குப் பயிற்றுவிக்கிறார்கள் என அவர்கள் கூறினார்கள். அவ்வாறே ஏனைய பிள்ளைகளை ஏமாற்றிக் கூட்டி வரவும் பயிற்றுவிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்கள். அகோலியை மீட்டெடுக்கும் பெரும் போருக்காகக் கொண்டு செல்லப்படுவதாகவும் அறியக் கிடைத்தது. ஆட்சியைக் கவிழ்த்தல், முஸவேனியின் ஆட்சியைத் தோற்கடித்தல், இவற்றின் அர்த்தம் என்னவென்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. எவரிடமாவது கேட்கவேண்டும் என்ற தேவையும் எமக்கிருக்கவில்லை. நாங்கள் அறிந்திருந்த ஒன்றே ஒன்று, எம்மில் எவர்க்கும் எமது பிள்ளைகளை யுத்தத்துக்கு அனுப்பத் தேவைப்படவில்லை என்பதுதான்.

அக்காலத்தில், நீ பள்ளிக்கூடத்துக்குச் செல்லத் தயாராவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தது இப்போதும் எமக்கு நினைவிருக்கிறது. ஏதோவொரு விஷேட சடங்கை நிறைவேற்றச் செல்வதைப் போல நீ தயாராகுவாய். பல் விளக்கி, குளித்துக் கொள்வாய். பீப்பாயிலிருந்து கவனமாகத் தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றிக் கொள்வாய். அம்மா சமைத்துக் கொடுக்கும் காலையுணவை, பள்ளிக்கூடத்துக்குச் செல்லத் தாமதிக்கும் என்று நீ உட்கொள்ளாது சுற்றியெடுத்து பையில் போட்டுக்கொள்வாய். போர் தொடங்கியதுமே பிள்ளைகள் எவரும் பள்ளிக்கூடத்துக்கு வராமல் நின்றபோதும் நீ தினந்தோறும் பள்ளிக்கூடம் சென்றாய். பள்ளிக்கூடத்துக்குச் சென்று அங்கு ஆசிரியரோ, மாணவர்களோ எவருமில்லாத காரணத்தால் வீட்டுக்குத் திரும்பி வர நேர்ந்த தினங்களில் நீ ஆசிரியர்களைச் சபித்தாய், அவர்களை கோழைகள் எனத் திட்டினாய். போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களிலும்கூட நீ பள்ளிக்கூடம் சென்றாய். பள்ளிக்கூடத்தில் எவரும் இருக்கவில்லை என்று நீ சிறிதும் பின்வாங்கவில்லை.

போரின் காரணமாக வடக்கு உகாண்டாவிலுள்ள பிள்ளைகளுக்கு மாத்திரமே கல்வி கற்க வழியில்லாமல் போவதாகவும், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதாகவும் நீ கூறிக் கொண்டேயிருந்தாய். அனைவருக்கும் பரீட்சைகளும் ஒன்று போலவே நடத்தப்பட்டன. அனைவரும் காடுகளுக்குள் ஒளிந்துகொண்ட போதிலும் நீ பள்ளிக்கூடம் போய் வந்தாய். பள்ளிக்கூடம் போகாதிருக்குமாறு அம்மா உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். பள்ளிக்கூடத்துக்குப் போகும் வழியில் கிளர்ச்சியாளர்கள் பிள்ளைகளைக் கடத்திச் செல்வதாக அம்மா பயந்தாள். ஆனாலும் நீ எப்போதும் எப்படியாவது பள்ளிக்கூடம் போனாய். எனினும் அங்கு ஆளற்ற வகுப்பறைகளே காணப்பட்டன. சிதைந்து போன எதிர்பார்ப்புகளோடு நீ வீடு திரும்பினாய். பிறகு, அம்மாவே உனது ஆசிரியை ஆனாள். அப்போதைய உனது வயதுக்குத் தேவைப்படாத போதிலும், அம்மா உனக்கு இனப்பெருக்கம் குறித்துக்கூட கற்றுக் கொடுத்தாள். கல்வி கற்பதில் உனக்கு விந்தையானதொரு ஆர்வம் இருந்தது. ஒரு எழுத்துக்கூட எழுதப் படிக்கத் தெரியாத அப்பாவுக்குக்கூட உனக்கு நன்றாகக் கற்பிப்பதே தேவையாகவிருந்தது.

 

முனு, அப்பா இப்போது நம்மிடையே இல்லை என்பதை உன்னிடம் எப்படிக் கூறுவதென எமக்குத் தெரியவில்லை. அவரின் இல்லாமையை நீ உணர்ந்திருக்கக் கூடும். யாருக்காக நீ யுத்தம் செய்தாயோ அவர்களே அப்பாவைத் துண்டு துண்டுகளாக வெட்டிக் கொன்றார்கள் என்பதை நாம் எவ்வாறு உன்னிடம் கூறுவது? லாலோகியில் குத்தகைக்குப் பெற்று வேலை செய்து கொண்டிருந்த பயிர் நிலத்தில் வைத்து அவரைக் கொன்று போட்டிருந்தார்கள். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கிராமத்துத் தலைவர் உணவு கொண்டு வந்து தரும் வரையில் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாதென அவர் கூறினார். அப்பாவைப் பற்றி உனக்குத் தெரியும்தானே. அவர் மிகவும் கௌரவமாக வாழ்ந்த மனிதர். ஒரு மனிதனின் பலத்தைக் காண்பிப்பது களஞ்சியத்தில் நிரப்பப்பட்டிருக்கும் தானியங்களின் அளவுதான் என அவர் நம்பினார். யுத்தத்துக்கு முன்னர் எமது களஞ்சியம் நிரம்பிக் காணப்பட்டது. அதைக் குறித்து எமது அயலவர்கள் பொறாமையால் துடித்தார்கள். அவர் ட்ரக்டரைப் போல மண்ணைக் கொத்திப் புரட்டினார். அவரது மாடுகள்தான் அலொகொலுமிலிருந்த மிகச் சிறந்த மாடுகள். அனைவருமே அவரிடமிருந்து பால் வாங்கத்தான் விரும்பினார்கள். சோம்பேறியான லுடுகாமொய்கூட காலை, பகல், இரவென தொடர்ச்சியாக நிலத்தைக் கொத்திப் புரட்டினார். எனினும் அப்பாவின் விளைச்சலின் பாதியளவையாவது பெற்றுக்கொள்ள அவரால் முடியாமல் போனது.

அப்பா நிலத்தைக் கொத்திக் கொண்டிருக்கையில் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிக்கொண்டார். அனைவரையும் முகாமுக்குள் இருக்குமாறு உத்தரவிட்டிருக்கும் போது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாயென அவர்கள் கேட்டார்கள். “ஒரு நல்ல ஆண்மகனென்பவன் தனது குடும்பத்தாருக்கு உணவளித்துப் பராமரிக்க வேண்டும்”என அவர் பதிலளித்தார்.அவர் அவ்வளவு பலசாலியாக இருப்பாராயின் தம்முடன் இணைந்து யுத்தம் செய்ய வருமாறு அவர்கள் அவரிடம், கிண்டலாகக் கூறியிருக்கிறார்கள். தான் தொடங்கி வைக்காத போருக்குள் சிக்கிக்கொள்ள தனக்கு அவசியமில்லை என அவர் பதிலளித்திருக்கிறார். பத்துப் பேர் சேர்ந்து கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு அவரைத் தாக்கியிருந்தார்கள். அதன்பிறகு அவர்கள் அவரை துண்டு துண்டுகளாக வெட்டி வேறாக்கியிருந்தார்கள். உனக்குத் தெரியுமா, லம்னு? அப்பாவை நாங்கள் அடக்கம் செய்த நாளிலிருந்து இறைச்சி உணவுகளைச் சாப்பிடவேயில்லை. ஆமாம், இன்று வரைக்கும்… ஒரு மனிதரை அவரது மரணத் தறுவாயிலும் இழிவுபடுத்த இன்னொரு மனிதரால் எவ்வாறு முடிகிறது என எம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இவையனைத்தையும் உன்னிடம் கூற எமக்குச் சக்தி கொடுக்குமாறு நாங்கள் ஒவ்வொரு நாளும் பிரார்த்தித்து வந்தோம். எப்போதாவது ஒரு நாள், யுத்தம் முடிவடைந்ததும், நீ உனது கதையை எம்மிடம் கூறுவாய். அப்போது நாங்கள் எமது கதையை உன்னிடம் கூறுவோம்.

 

நீ பாடசாலைக்குப் போனதைக் குறித்து நாங்கள் அயலவர்களிடமிருந்து அறிந்துகொண்டோம். உன்னை ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு நீ தலைமையாசிரியரிடம் வேண்டியிருந்தாய். நீ கதைக்கத் தொடங்கி விட்டாய் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. எம்முடன் அல்லாவிட்டாலும்கூட, நீ எவ்வாறாயினும் கதைக்கத் தொடங்கியிருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். தலைமையாசிரியர் எலும்பும் தோலுமான உனது மெலிந்த உடலைப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் வைத்தியராக வர வேண்டுமென நீ அவரிடம் கூறினாய். பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்த உன்னால் முடியுமா என அவர் உன்னிடம் கேட்டார். நீ அதற்குப் பதிலளிக்கவில்லை. எம்மிடம் ஒரு சதம்கூட இருக்கவில்லை என்பதை நீ அறிந்திருந்தாய். அதெல்லாம் தெரியாது என்றும் படிப்பு மாத்திரமே தேவைப்படுவதாகவும் நீ கூறினாய். படித்து முடித்த பிறகு மொத்தமாகக் கட்டணத்தைச் செலுத்துவதாகவும் நீ கூறினாய்.

அவர் உன்னை நாலாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். ஏனைய மாணவர்கள் உன்னை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். நீ அவர்களைத் தாக்கக் கூடும் எனப் பயந்த அந்தப் பிள்ளைகள் மெல்லிய குரலில் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். போரானது அவர்களுக்கு அவசியமற்ற, விளங்கிக்கொள்ள முடியாத பல விடயங்களை அளித்திருப்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். ஆகவே,சந்தேகத்துக்குரிய விடயங்களிலிருந்து விலகியிருக்க அவர்களுக்குத் தேவைப்பட்டது.

நீ பாடசாலைக்குச் சென்று தலைமையாசிரியருடன் வாதித்ததை அறிந்துகொண்ட அம்மாவும் பாடசாலைக்கு ஓடி வந்தாள். நீ ஏன் அவளுடன் இதுவரை கதைக்கவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்திருந்தது. உனக்கு உதவி செய்ய அவள் விரும்பினாள். நீ பேசுவதைக் காண அவளுக்குத் தேவைப்பட்டது. அவள் ஒருபோதும் உன்னை வற்புறுத்தவில்லை. வெளியே கூற இயலாத போதிலும்கூட, அவள் உன்னை வெகுவாக நேசித்தாள்.

 

லெகோர் பாலர் பாடசாலை தலைமையாசிரியருடன் அம்மா கதைத்தாள். உனது பாடசாலைக் கட்டணங்களைத் தவணை முறையில் கட்ட இடமளிக்க தலைமையாசிரியர் இசைந்தார். உனக்கு இப்போதும் பாடசாலைக்குப் போக அவசியமாக இருப்பது குறித்து அம்மா மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாகக் கூறினாள்.

நீ நன்றி என்று கூறினாய். நீ அம்மாவுக்கு நன்றி தெரிவித்திருந்தாய். அதுதான் உன்னிடமிருந்து நாம் கேட்ட உனது முதல் வார்த்தை. எவ்வாறாயினும், நீ பேசிவிட்டாய் என்பது குறித்து எமக்கு அளவற்ற மகிழ்ச்சி. உன்னால் இன்னும் பல விடயங்களைக் கூற இயலுமாகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனேனா, ஆயா, பொங்கொமின், யெகோ, அயாத், லாலம், ஔமா, ஒசெங், ஒடிம், ஒலேம், உமா, அடெங், அக்வேரோ, லேகார், ஒடொங், லென்யோரோ, லாடு, டிமி… இவர்கள் அனைவரையும் விடவும். அனைத்திற்கும் மேலாக உனது குரலைக் கேட்கத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.

 

புதிய சீருடை உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது. கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளுக்காக இயங்கி வரும் லெகோர் பாலர் பாடசாலையின் தலைமையாசிரியர் உனக்கு இந்தச் சீருடையை அன்பளிப்பாகத் தந்திருந்தார். அவர்கள் உன்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள் எனவும் அம்மா கூறினாள். அங்கிருந்த அநேகமான பிள்ளைகள் உன்னைப் போன்றவர்கள்தான். அவர்களும்கூட பிள்ளைகளைச் சித்திரவதைக்குட்படுத்தி, கொலை செய்திருந்தார்கள். அவர்களும்கூட ஒருபோதும் விளங்கிக்கொள்ள முடியாத யுத்தத்தில் போரிட்டிருந்தார்கள். ஆசிரியர்கள் உன்னைக் கவனமாகப் பார்த்துக் கொள்வார்களென அம்மா கூறினாள். அவர்கள் அதற்காக சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்களாம்.

நீ மகிழ்ச்சியாகக் காணப்பட்டாய். நீ விடிகாலையிலேயே எழுந்திருந்ததை நாங்கள் கண்டோம். நீ பைக்குள் புதிய புத்தகங்களை அடுக்கினாய். புத்தகங்களின் அட்டைகளில் நீ உனது பெயரை அழகாக எழுதியிருந்தாய்.

உனது கனவுகள் நனவாகும் என்பதை நாம் அறிவோம். எப்போதாவது ஒரு நாள் நீ வைத்தியர் ஆகுவாய். ஆமாம், அம்மா செய்தது போலவே மக்களுக்கு சேவைகள் செய்ய. ஆனால், வெண்ணிறக் கோட் அணிந்தவாறு.

அம்மாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. நீ மறுபக்கம் திரும்பிக்கொண்டாய். அது ஆனந்தக் கண்ணீர் என்பதை நீ அறிவாய் என்பது எமக்குத் தெரியும்.

*****

பியட்றிஸ் லம்வாகா, உகாண்டா குடியரசைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். உகாண்டா மெகரேரே பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய சிறப்புப் பட்டதாரியும், மனித உரிமைகள் கற்கையில் முதுகலைப் பட்டதாரியும் ஆவார். தற்காலத்தில் உகாண்டா மக்கள் எதிர்கொண்டு வரும் வாழ்க்கைச் சிக்கல்களை, குறிப்பாக யுத்தங்களும் கலவரங்களும் மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கங்களை தமது படைப்புகளின் கருவாகக்கொண்டு இவர் எழுதி வருகிறார். ஆங்கில மொழியில் நாவல், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதி சர்வதேச ரீதியில் பல இலக்கிய விருதுகளை வென்றிருக்கிறார். ‘வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்’ எனும் இச் சிறுகதையானது, இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகும். இது சமகால உகாண்டா சமூகத்தின் இருண்ட பகுதிகளை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Related post