எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

 எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

மலைச் சிகரங்களும் மலையடிவாரங்களும்

1.

இலையுதிர்த்துக் கிடக்கும்
நெடிதுயர்ந்த போகன்விலாச் செடியின்
வலப்புறத்தில் தலைவாசல்
அடுத்து நான்கு கட்ட ஜன்னல்கள்
மதிலோடு முடியும் வீட்டின்
தலைவாசலருகே தூணில் சங்கிலியிட்டு
சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
அக் கால லுமாலா சைக்கிள்

ஒவ்வொரு விடிகாலையிலும்
வீடெங்கும் பரவும்
சுக்கும் வெந்தயமும் வறுத்துப் பொடியாக்கிக் கலந்த
காப்பியின் நறுமணம்
தாத்தாவை நினைவுறுத்தும்

மலைச் சிகரங்களை மேகக் கூட்டம் மூடுகிறது
மலையடிவாரங்களை பனி போர்த்துகிறது

கவரிமான்களைக் குறித்து தாத்தா சொன்ன
கதைகளிலெல்லாம்
மலைச் சிகரங்களும் மலையடிவாரங்களும் கூட
சுய கௌரவத்தில் பெருமிதம் கொண்டு
எதனையும் அருகில் அண்ட விடாதவை

எதுவோ வார்த்தைப் பிசகு
எங்கோ தாத்தா போய் விட்டிருந்தார்
முதல் சம்பளத்தில் அப்பா வாங்கிக் கொடுத்த
லுமாலா சைக்கிளைச் சங்கிலியிட்டுப் பூட்டியவர்
சாவியை எடுத்துச் சென்று வெகுகாலம்

பருவ காலங்கள் மாறுகையில்
காலத்தின் கரங்களிலிருந்து
கடும் கபில நிறத் துரு
பூட்டின் வழியே சங்கிலியினூடு உதிர்கிறது

2

மலைச் சிகரங்களை மேகக் கூட்டம் மூடுகிறது
மலையடிவாரங்களை பனி போர்த்துகிறது

எப்போதும் கலவரத்தில் தோய்ந்திருந்தன
முதிய குதிரையின் கண்ணிமைகள்
பார்வை மங்கிய இவ் வயதான காலத்தில்
பயணத்துக்கு மாத்திரமல்ல
பாரம் சுமக்கக் கூடப் பயனற்றதென
தெருவோரம் விட்டுச் செல்லப்பட்ட
கடும் கபில நிறக் குதிரையது

தாத்தாவின் சாவியிலிருந்தும்
துரு உதிருமோ?
உதிர்கையில் தாத்தா சைக்கிளை
நினைத்துக் கொள்வாரோ?
தாத்தா தன்னோடு கூட்டிச் சென்ற
கடும் கபில நிறக் குதிரையின் மயிரடர்ந்த வாலில்
சாவியைத் துடைத்துக் கொள்வாரோ?
துரு பட்டால் உதிரும்
மயிர் உதிர்ந்தால் மரணமென வாழ
குதிரையென்ன கவரிமானோ?

போகன்விலாவில் பூக்களோடு இலைகளும் உதிர்ந்த
அடுத்தடுத்த இலையுதிர் காலங்களிலும்
பேரக் குழந்தையின் கேள்விகள் சங்கிலிகளாகிப் பிணைத்து
எப்போதும் உறுத்திக் கொண்டேயிருக்கின்றன
அப்பாவை.

“எம்.ரிஷான் ஷெரீப்” <mrishansh@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *