புத்துயிர்ப்பு

கன்பரா யோகன்
ஓவியம்: ரம்யா சதாசிவம்
“மூன்றரை லட்சம் கிலோமீட்டர் ஓடிவிட்டது.”
“ஓயில் லீக் இப்படி வேறு எதாவது மேஜர் பிரச்சினைகள் இருக்குதா?”
“ஒன்றுமில்லை. சின்ன சின்ன எலக்ட்ரிக்கல் பிரச்சினைகள்தான்.”
நான் புதிதாக கண்டுபிடித்த மெக்கானிக்கிடம் காரின் வியாதிகளை ஓரளவு குறைத்தே சொல்ல வேண்டியிருந்தது. பழைய கார்களில் கை வைப்பதற்கு இங்கே எவரும் அதிகம் விரும்பார்.
டிரைவர் பக்கமுள்ள சுவிட்ச்சில் இயங்கும் கார் யன்னல் கண்ணாடியைத் காற்று வருவதற்காக திறந்தால் பிறகு மூடும்போது அது விக்கி விக்கி கால்வாசியில் நின்றுவிடும். மூடுவதற்கு தானாக மூட் வந்து, அது விரும்பிய நேரத்திலே முழுவதுமாய் மூடுவதற்கிடையில் வீடு வந்து சேர்ந்துவிடும். மறந்தும் யன்னலைத் திறந்துவிடாதபடி இப்போது என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன்.
இதனால் நான் பார்க்கிங் டிக்கட் மெஷினிலிருந்து டிக்கற்றை எடுப்பதற்கும் இப்போது கார் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறது.
பின்னால் நிற்பவர்களுக்கு இதை காட்டக் கூடாதென்பதற்காக தவறுதலாக டிக்கட் மெஷினை கடந்து நிறுத்துவது போலவும், பின்னர் மிஷினை யன்னல் வழியே எட்ட முடியாமல்தான் கதவை திறப்பது போலவும் நடிக்கப் பழகிவிட்டேன்.
ஓரிரு முறை பார்க்கிங்கில் நிறுத்தி வைத்துவிட்டு குறுஞ்செய்தி பார்த்துக் கொண்டிருக்கையில் அறிந்தவர் கண்டு காருக்கருகில் வந்து யன்னலில் தட்டி தெரியப்படுத்த, நான் அதைத் திறக்காமல் கதவைத் திறந்துகொண்டு இறங்கி வந்ததை நான் அவர்களுக்கு அளித்த மரியாதை என்றே எண்ணியிருந்திருப்பர்.
இதன் பிறகு ஒரு கட்டத்தில் கார் டாஷ் போட்டிலுள்ள பெருமளவு விளக்குகள் எரியாது நின்றுவிட்டன. இதனால் இரவில் கார் ஓடுவது கள்ளத்தோணி ஓட்டுவது போலாகிவிட்டது.
இதைவிட முக்கியமான இன்னொன்று இடது கால் தொடைக்குப் பக்கத்திலிருக்கும் பார்க் பிறேக் வெளிச்சமும் மறைந்து போன சோகம்தான். இதனால் இருட்டில் காரை பார்க்கிலிருந்து டிரைவுக்கு மாற்றுவதற்கு உதவியாக பொக்கற்றில் தயாராக ஒரு பென் டார்ச் வைத்திருந்தேன். கார் ஓட்டமற்றிக் ஆகவிருந்ததால் காரை எடுக்கும் போதும், நிறுத்தும் போதும் மட்டுமே டார்ச்சுக்கு வேலை. மனுவல் காராக இருந்திருந்தால் டார்ச்சை கயிற்றில் கட்டி கார்க் கூரையில் தொங்க விடவும் தயங்கியிருக்க மாட்டேன். கார்க் கூரை விளக்கும் வேலை செய்யவில்லை என்பது சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும். இப்படி தமிழகத்தில் வந்த களப்பிரர் காலம் போல எனது காருக்கும் இந்த இருண்ட காலம் வந்துவிட்டது.
இதெல்லாம் “சின்ன சின்ன எலக்ட்ரிக்கல் பிரச்சினைகள்தான்” என்று இப்போது மெக்கானிக்குக்கு சொன்னது போலவே உஷாவுக்கும் அடிக்கடி சொல்லி வந்தாலும் அவள் இதை நம்ப தயாராகவில்லை. புதிய, பெரிய கார் வாங்கும் படியாக அவள் அடாப் பிடியாக நின்றதன் காரணமே இப்போது திருத்தி விற்கும் படலத்தை ஆரம்பிப்பதற்கு என்னை தூண்டியது.
இதையும் வைத்துக்கொண்டு இன்னொன்றையும் வாங்கினால் ரெஜிஸ்ட்றேஷன், இன்சூரன்ஸ் என்று இரட்டிப்பாக பணத்தை கொட்டிக் கொண்டிருக்க முடியுமா?
ஆனால், புதிய வருடத்திலாவது புதிய காரொன்றை வாங்கிவிட வேண்டுமென்பதில் அவள் பிடிவாதமாகவிருந்தாள். சின்னக் காருக்குள் காலை மடக்கிக் கூனிக்கொண்டு இருந்து நாரிப் பிடிப்பு வந்துவிடுகிறது என்று அவள் சொல்வதென்னவோ உண்மையாக இருக்கலாம். அதனால், இருக்கிறதை விட்டுவிட்டு பறக்கிறதை பிடிக்க அலைய வேண்டுமா என்று வழமை போல என் சோம்பேறி மனம் பின்வாங்கியது. பெரிய கார்கள் பலவற்றினை எங்கள் உறவினர் பலர் வாங்கிவிட்டதை பார்த்தே இப்படி நச்சரிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டேன்.
எனக்கும் நாரிப் பிடிப்பு இருக்கிறதுதான், ஆனால் எனக்கு காரில் உட்கார்ந்தால் முதுகு நன்றாகத்தானே இருக்கிறது என்று பொய் சொன்னேன். இரகசியமாக டிரைவர் சீட் கவரின் உள்ளே பஞ்சுத் தலையணை ஒன்றை வைத்து உயர்த்தியிருந்ததை அவளுக்கு சொல்வேனா என்ன?
ஆனாலும் அப்படி என்ன குறைந்துவிட்டது எனது டொயோட்டாக் காருக்கு?
மனக் குரங்கு சும்மா விடவில்லை.
கோடை காலத்தில் காரின் குளிரூட்டி சொன்ன மாதிரியே வேலை செய்கிறது. குளிர் காலத்தில் ஸ்டார்ட்டுக்கு எந்த தொல்லையுமில்லை. காரை விட்ட இடத்தில் உற்று பார்த்தால் தரை எவ்வித ஓயில், தண்ணீர் ஒழுக்குமில்லாது பளிச்சென்று துப்பரவாகவிருக்கிறது. எஞ்சினோ வயதேறிய எந்தக் கவலையுமில்லாது தன் பாட்டுக்கு ஒடிக் கொண்டிருக்கிறது. அதுவும் பதினைந்து வருடங்களாக விலை குறைந்த பெற்றோலைக் குடித்துக் கொண்டுதானே? டொயோட்டா ஒரு நல்ல நாய் போல ஒரு போதும் எஜமானனை கைவிட்டு விடாது என்று பெரும்பாலான இலங்கை, இந்தியர்கள் நம்பி வாங்குவதால் டொயோட்டாவுக்கு கறி கார் என்ற கெளரவ பட்டமும் இங்கே இருக்கிறதல்லவா?.
இருந்தாலும் கொஞ்ச காலமாக காரின் தோற்றம் சற்று வாடிப் போய்விட்டது என்னவோ உண்மைதான். காரணம் இப்போது எனது காரை கராஜுக்குள் பார்க் பண்ண முடியவில்லை. பிள்ளைகள் சுகந்தனதும் சிந்தியாவினதும் புதிய ஹோண்டா கார்கள் வந்து சேர, வயதேறிய குற்றத்துக்காக எனது டொயோட்டா வெளியே டிரைவ் வேயில் நிற்கிறது. பதினைந்து வருடமாய் கராஜ்ஜில் அனுபவித்த வந்த சீவிய உரித்தை என் கார் இழந்ததனால் இரவு பகலாக வெளியே நின்று வெயில், குளிர், புழுதி குளித்து சோபையிழந்த கோலத்துக்கு வந்துவிட்டது.
அதுவும் அண்மையில் இங்கே அடித்து வரும் செம்மண் புழுதியொன்றும் மற்றும் காட்டுத்தீயின் சாம்பலும் அதன் தோற்றத்தை ஒரு கிழட்டுத் தோட்டக்காரனைப் போல மாற்றிவிட்டது.
தெருக்கரையில் நின்ற, பெயர் தெரியாத, அரசாங்கம் நட்டு வைத்த நிழல் மரமொன்றின் கீழே நிறுத்தினால் கோடை காலத்தில் காருள்ளே குளிமையாகவிருக்குமென்று பார்த்தால் மரத்தில் வந்தமரும் மக்பைகளின் எச்சம் கண்ணாடிகளிலும் காரின் உடலெங்கும் வெள்ளையாக கோடிழுத்துக் காய்ந்து இறுகியிருக்கிறது. இந்த கோடை காலத்தில்தான் தண்ணீரை பீச்சியடித்துக் காரை கழுவ முடியாத சட்டமும் வந்தது. சேர்வீஸ் நிலையங்களில் இருபது டொலர்களைக் கொடுத்து ஸ்பாவில் கார் கழுவ என் மனம் ஒப்பவில்லை.
ஆனாலும், எப்படியோ ஆயிரம் டொலருக்காவது விற்றுவிடலாம் என்ற பேராசையில்தான் மெக்கானிக்கிடம் போனேன். இந்த எலக்ட்ரிக்கல் பிரச்சினைகளை திருத்தாமல் விற்றுவிட முடியாது.
ஆயிரம் டொலருக்காக நீ அதற்கும் மேலாக மெக்கானிக்கிடம் தாரை வார்க்கப் போகிறாய் என்று ஒரு நண்பன் எச்சரித்தான். அதனாலேயே வழமையானவனை விட்டுப் புதிய மெக்கானிக்குக்கு போன் அடித்தேன். புதிய வாடிக்கையாளன் என்றால் மெக்கானிக் விலை குறைத்துச் சொல்வான் என்ற நம்பிக்கைதான். அதைவிட இவன் பழைய கார்களையும் திருத்துகிறான் என்று ஒரு சிறிய துப்புக் கிடைத்ததும் இன்னொரு காரணம்.
ஆனால், இந்தப் புதிய மெக்கானிக்கும் கையை விரித்துவிட்டு சொன்ன காரணம் நண்பன் ஏற்கனவே சொன்னதுதான். எலக்ரிக்கல் பார்ட்ஸின் விலையும் வேலைக்கு கூலியும் அதிகமாம்.
“நொட் வேர்த் இட்” என்று மூன்று சொல்லில் முடிவு சொன்னான்.
இதே மாதிரியான சொற்களை அண்மையில் எங்கோ கேட்டிருக்கிறேனே என்று நினைவடுக்குகளை துழாவிப் பார்த்தேன்.
அது அம்மாவின் டாக்டர் சொன்ன வசனங்கள். அம்மாவுக்கும் ஹார்ட் பிரச்சினை, சுகர் பிரச்சினை, பிரஷர் என்று மேஜர் பிரச்சினைகள் ஒன்றும் இருக்கவில்லை. ஆனால், சுகதேகியாக இருந்தாலும் முதுமைமையில் வாழ்வு முடிவுக்கு வரத்தானே வேண்டும்? அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் எனக்கு தெரியாத அனுபவம்.
காருக்கு அவ்வப்போது வந்த சின்னப் பிரச்சினைகள் போலத்தான் அம்மாவுக்கு முதுமை சில உடற் குறைகளை கொண்டுவந்தது. காரின் உள் விளக்குகள் அணைந்ததுபோல நினைவுகள் மங்கி மறைந்தன. யன்னலை உயர்த்தி மூட முடியாதது போலவே கை, கால்களை நினைத்தபடி அசைக்க முடியாது போயிற்று.
‘நொட் வேர்த் இட்’ என்பதற்கு சமானமான ஒரு ஆங்கிலத் தொடரையே டாக்டர்களும் சொன்னார்கள். தொண்ணூற்றி மூன்று வயதில் வைத்தியம் பார்த்துப் பலனில்லை.
இரு வெவ்வேறான அனுபவங்களுக்கிடையே இப்படி ஒரு ஒற்றுமை.
டிசம்பரிலேயே கோடை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. மலைகள் சூழ்ந்த பகுதியின் நடுவே இருந்த எமது பள்ளத்தாக்கினை சூழ யூகலிப்டஸ் மரங்கள் எரியும் காட்டுத் தீயின் சுவாலைகள் எம்மை நெருங்கி வந்தன.
மலைக்குப் பின்னாலிருந்து எழுந்து வரும் புகை மென்னீல வானத்தில் நிரந்தரமாக சாம்பல் சாயம் பூசிவிட்டது. நீண்ட நாட்களாகவே தெளிந்த நீல வானத்தை காண முடியவில்லை. சாம்பல் வானத்தில் சூரியன் ஓரஞ்சுப் பழ நிறத்தில் வெக்கையை நீண்ட பகல் முழுதும் பாய்ச்சி மரங்கள், புற்களைக் காய்வித்துக் கருக்கி, மண்ணை வறுக்கிறான்.
காட்டுத் தீயின் புகைச் சுவாசம் உஷாவுக்கு ஏற்கனவே இருந்த அஸ்மாவை தீவிரப் படுத்திவிடுமோ என்று பயந்தோம். புகையை வடிகட்டி எடுக்கும் விசேட மாஸ்குகளைப் போட்டாலன்றி காற்றிலே கலந்திருக்கும் கார்பன், நைதரசன் வாயுக்களையும் சாம்பல் துகள்களையும் சுவாசிப்பது நுரையீரலுக்கு கெடுதலாகவே அமையும்.
எமது துரதிஷ்டம் அன்று நான் சென்ற கடைகளிலெல்லாம் அந்த மாஸ்குகள் தீர்ந்து போய்விட்டன. இதனால் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம். அன்று பகல் வெப்பநிலை நாற்பத்தைத்தைத் தொட்டது. அதிகாலையில் வந்த ரேடியோ அறிவிப்பில் அன்று பின்னிரவில் வீசவிருக்கும் காற்று எம் குடியிருப்புகளை நோக்கி திசை திரும்புவதாயும், காட்டுத்தீ ஒரு வேளை வீடுகளை விழுங்கக்கூடும் என அபாயத்தை முன் கூட்டியே எச்சரித்தார்கள்.
உஷா அன்று மதியமே எழுநூறு கிலோ மீட்டர்களுகப்பாலுள்ள மெல்பெணுக்குப் போக விரும்பினாள். அவளது நெருங்கிய உறவுக்காரர் அங்கேயிருந்தனர். நாங்கள் மூன்று காரிலும் முக்கியமான பொருட்களை ஏற்றினோம். உஷாவின் உடுப்புகளே என் காரைப் பெருமளவு நிறைத்துவிட்டன. இந்த அமளியில் புதிய கார் பற்றிய நினைப்பு அவளுக்கு எங்கே வரமுடியும்? அவள் பொதுவாகவே உடுப்புகளை எறியாமல் சேர்த்து வைத்திருப்பது எனக்கு எரிச்சலைத் தருவது. அதுவும் இந்த நேரத்தில் சொல்லவா வேண்டும்? சிந்தியா தனது சப்பாத்துக்களால் அவள் காரை நிரப்பினாள். எஞ்சியது சுகந்தனின் கார்தான்.
எதையோ எடுக்க மறந்ததை உள்ளே போய் எடுத்து வந்து வெளியே பார்க்கையில் தெருவோரத்தில் புறப்படுவதற்குத் தயாராக நின்ற காரின் சக்கரங்களை எட்டி உதைத்து கொண்டிருந்த சுகந்தனைக் கண்டு விதிர் விதிர்த்துப் போன நான், “சில்லுக்குக் காற்றுப் போய் விட்டதா என்ன” என்று கேட்க, “காற்றுப் போனால் சில்லை மாற்ற மாட்டேனா? எஞ்சின் ஸ்ட்ரார்ட் ஆகுதில்லை” என்றான் கோபத்துடன்.
அவன் கோபம் வந்தால் காரையும் அறைக் கதவையும் உதைப்பவன். காரின் உள்ளே பார்த்தால் எஞ்சின் சிவப்பு எச்சரிக்கை விளக்கு டாஷ் போட்டிலிருந்து வருகிறது.
இனி இதை திருத்தவோ தள்ளி உள்ளே விடவோ நேரமில்லை, சுகந்தனின் காரை விட்டுவிட்டு போவதாக முடிவெடுத்தோம். இப்போது எனது காரைத் தெருவுக்கு எடுக்க, சுகந்தனின் ஹோண்டாவைப் பார்த்து அது இளக்காரமாகச் சிரித்தது எனக்கு மட்டுமே கேட்டது. என் காரின் ஸ்டார்ட் சத்தம் அப்படி.
தெருவில் பகலிலும் கார் விளக்குகளை போட்டு வட்டு ஓட்டுமளவுக்கு முன்னூறு மீற்றருக்கப்பால் எல்லாம் மூடி மறைத்துவிட்ட புகையை கடந்து சீறிக் கொண்டு சென்றது எனது கார். தகிக்கும் அந்த கோடையில் ஏசியும் போட்டபடி எழுநூறு கிலோமீட்டரையும் அது ஒடிக் கடக்க வேண்டியிருந்தது. பின்னால் சிந்தியாவின் கார் தொடர்ந்தது.
அன்று தீ நாக்குகள் வீடுகளை ருசி பார்க்கா வண்ணம் தீயணைப்புப் படையினர் கவசமாய் நின்று காத்ததனால் எமது நகரம் தப்பியது. சில வாரங்களின் பின் வெயிலின் கோரம் தணிந்து, புகையும் அடங்கி, வானம் தெளிந்த ஒரு நாளில் மீண்டும் வீட்டுக்கு வந்தோம்.
பல நாட்களாக அப்பகுதியெங்கும் பறந்த தீயின் சாம்பலும், புழுதியும் படிந்து ஒரு கிழட்டுத் தோட்டக்காரனைப் போல சுகந்தனின் ஹோண்டா அப்போதும் வெளியே நின்றது
பதவியிழந்த எம்பி மீண்டும் தேர்தலில் வென்று பாராளுமன்றம் வருவது போல எனது டொயோட்டா மீண்டும் பெற்ற புத்துயிர்ப்புடன் கராஜ்ஜின் உள்ளே வந்தது.
“யோகன்” <solomonyoganantham@gmail.com>