நட்சத்திரப் போராளி!

 நட்சத்திரப் போராளி!

கத்யானா அமரசிங்ஹ
சிங்களத்தில் இருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்
ஓவியம்: Cornelia Li

 

தயத்தின் ஆழத்துக்கே ஊடுருவி, கழியும் ஒவ்வொரு கணமும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும் பார்வையொன்றை நான் எப்போதாவது கண்டிருப்பேனெனில், அது இரண்டு தடவைகள் மாத்திரமே.

முதற்தடவை எனது அப்பா மரிக்கும் கணத்தில் என்னைப் பார்த்த பார்வை. மிகுந்த வேதனையால் நிறைந்திருந்த அவரது முகம் அவ்வேளையில் வெளிறிப் போயிருந்ததோடு அவர் எனது கையைப் பற்றியவாறு எதையோ கூற முயற்சித்தார். அக்கண்களில், நம் எவருக்கும் பாதுகாப்பற்ற இவ்வுலகில் என்னைத் தனியே விட்டுச்செல்ல முடியாத கவலை தேங்கியிருந்தது. மரணத்தின் வெண்ணிற உலகத்தில் கால் பதிக்கும் முன்பு அவர் அச்சத்தில் ஆழ்ந்திருந்தார்.

அதற்குப் பிறகு அவ்வாறான மறக்க முடியாத பார்வையை எனது காதலனிடமிருந்து நான் கண்டேன். அது நாங்கள் என்றென்றைக்குமாகப் பிரிந்த அந்த இறுதி நாளில். அவரது அந்தப் பார்வையில் கேள்வி, அதிர்ச்சி, ஏற்றுக்கொள்ள முடியாமை, திகைப்பு ஆகியவற்றோடு வலியும் படிந்திருந்தது. நான் அவரது தலையை துப்பாக்கியால் குறிபார்த்த கணத்தில், அவர் அந்தப் பார்வையால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அக்கணமே துப்பாக்கியால் எனக்கே வேட்டு வைத்துக்கொண்டு செத்துப் போகத் தோன்றியது.

அவர் என்னைக் காதலுடன் முத்தமிட்ட நிமிடங்களை நான் மறந்திருப்பேன் என அவர் நினைத்திருக்கக் கூடும். இல்லை. நான் எதையும் மறக்கவில்லை. நான் முத்தமிட்ட போது அவரது கண்கள் காதலால் பூரித்திருந்த விதத்தையும் நான் மறக்கவில்லை. என் முன்னால் அந்த அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவை அந்தக் கண்களே என்பதை நான் அறிந்திருந்தேன்.

எனினும், அவ்வேளையில் அங்கு நின்றிருந்தது நானல்ல. உண்மையாகவே நானல்ல. உள்ளே உணர்வுகளை அழுத்தி மிதித்துப் போட்டிருந்த பிணமொன்றுக்கு ஒப்பான பெண்ணொருத்தி.

 

“அவருக்கு இப்படியான இடங்களுக்கு உன்னைத் தேடிக்கொண்டு வந்து தொந்தரவு தர வேண்டாமெண்டு சொல்லு. ஏன் அவர் சின்னப் பிள்ளை போல நடந்துகொள்கிறார்?”

அன்று அவர் என்னைத் தேடி வந்து பெரிய பிரச்சினையொன்றை உருவாக்கிக் கொண்டிருந்த போது மாலதி அக்கா கனத்த பார்வையோடு என்னிடம் உத்தரவிட்டாள். நான் அப்போது அலுவலகத்தின் உள்ளே இருந்தேன்.

அவளது உறுதியான குரலைக் கேட்டவாறு நான் ஒரு கணம் மௌனமாக இருந்தேன்.

உண்மையைக் கூறுவதானால் எனதுள்ளத்தில் அவர் மீது உதித்த சிறுபிள்ளைத்தனமான உணர்வுகளை வெளிப்படுத்தி, தனது பாட்டில் ஓர் ஓரமாகக் கிடந்த அவரை இந்தச் சிக்கலுக்குள் இழுத்துவிட்ட குற்றத்துக்கு பிரதானமாகப் பொறுப்பேற்க வேண்டியது நான்தான். காதலை வெளிப்படுத்துவதற்கு முந்திக்கொண்டது நான். அப்போது வரைக்கும் அவருக்கு என் மீது அவ்வாறான ஒரு உணர்வு தோன்றியிருக்கக்கூடுமெனக் கூற முடியாது. உண்மையில், அன்று, எனது சிறுபிள்ளைத்தனமான பழக்கவழக்கங்கள் வெளிப்பட்டு, அவர் முன்னிலையில் என்னால் எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு அதை இவ்வளவு தூரத்துக்கு இழுத்து வந்ததுவும் நான்தான். அதற்குரிய பரிகாரத்தை ஒருபோதும் அவர் செலுத்த வேண்டியதில்லை.

இயக்கத்தில் இணைந்திருந்த நாங்கள் உடனடித் தீர்மானம் எடுக்க பயிற்றுவிக்கப் பட்டிருந்தோம். வெளியுலகப் பெண்களுக்கு இருப்பது போல ஒரு வரிசையான ஒழுங்கில் பயணிக்கும் ஜீவிதம் எமக்கிருக்கவில்லை. எக்கணத்திலும் மரணம் எம்மைத் தேடி வருமென நாங்கள் நன்றாக அறிந்திருந்தோம்.

இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதர்களுமே மரணிப்பது நியதிதான் என்றாலும் எம் அளவுக்கு அதற்குத் தயாராக இருப்பவர்கள் வேறு இருக்க இயலாது. எமது ஜீவிதம் அந்தந்தக் கணத்துக்கானது. அந்தக் கணத்தில் எடுக்க முடிந்த மிகவும் உசிதமான தீர்மானத்தை உடனடியாக எடுக்க என்னால் முடிந்தது அதனால்தான்.

எனவே, திடீரென நான் அந்த நடைப்பிணமாக மாறியிருந்தேன்.

நான் காதலித்த நபருக்காக என்னால் எடுக்க முடிந்த தீர்மானம் அது மாத்திரம்தான். அவர் மனதை சரிப்படுத்திக்கொண்டு என்னிடமிருந்து பிரிந்து செல்ல உதவுவது மாத்திரமே. ஆகவே நான் அதைச் செய்தேன்.

அவரது தலையை துப்பாக்கியால் குறி பார்த்தபோது, அவர் நான் முன்பு கூறிய பார்வையால் என்னை ஒரு நிமிடம் போலப் பார்த்திருந்து விட்டு, திரும்பிச் சென்றுவிட்டார். எனது இதயத்தில் முதல் சாவு நிகழ்ந்தது அன்றுதான்.

ஒரு போராளிக்குப் பொருத்தமற்ற விதத்தில், எனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதோடு, நான் உதடுகளைக் கடித்தவாறு, தரையில் முழந்தாளிட்டு, நிலத்தைக் கையால் சுரண்டி மண்ணைக் கையிலெடுத்தேன். இருண்ட கபில நிற மண்ணைத் தோண்டித் தோண்டி எனது புதைகுழியை வெட்டி அதில் சாய்ந்துகொள்வதே எனது தேவையாகவிருந்தது. உண்மையில் அக்கணமே செத்துப் போய்விடுவதே எனக்கு அவசியமாகவிருந்தது. அவர் எனக்களித்த ஜீவிதத்தை அவரே திரும்பவும் எடுத்துச் சென்றதோடு, பிரிவின் வேதனையிலும் கவலையிலும் எனது எலும்புகள்கூட பதறத் தொடங்கியது. எனது இரு கரங்களையும் எவரோ அன்று இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்திருக்காவிட்டால் அக்கணமே நான் தற்கொலை செய்து கொண்டிருக்க இடமிருக்கிறது.

“விசர் பிடிச்சவள் போல நடந்துகொள்ளாதே” என செல்வமலர் காதில் கூறுவது கேட்டது. நான் விம்மியழுதவாறு இருந்ததோடு அவள் எனது வாயைப் பொத்தி என்னைத் திட்டினாள்.

“ஒருத்தனுக்காக செத்துப்போற அளவுக்கு நீ இவ்வளவு சின்னப் பிள்ளைத்தனமா இருப்பாயெண்டு நினைக்கேல்ல.”

நான் எழவில்லை. எனது கால்கள் உயிரற்று நடுங்கியவாறு இருந்தன. அவரது அந்தப் பார்வை எனது கண் முன்னால் தோன்றிக் கொண்டேயிருந்ததோடு நான் வேட்டுப்பட்டது போல வலியோடு நெஞ்சைப் பிடித்துக்கொண்டேன்.

கடவுளே, பிரிவால் எவரையும் இந்தளவு வலிக்கச் செய்ய முடியுமா?

செல்வமலர் என்னை உள்ளே இழுத்துச் சென்றாள். மாலதி அக்கா என்னருகே வந்தபோது, செல்வமலர் எனக்கு அழுகையை நிறுத்தும்படி மீண்டும் மீண்டும் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.

‘இப்படி அழ உனக்கு வெட்கமாயில்ல?’ என மாலதியக்கா கோபத்துடன் கேட்பாளென நான் நினைத்தாலும் அவள் அவ்வாறெதுவும் கூறவில்லை.

அதற்குப் பதிலாக அவள் எம்மருகே வந்து நின்று, என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ணீர்ப் படலத்தின் மத்தியில் நான் கண்டேன்.

“பரவாயில்ல. அவளை அழ விடு” என ஒருபோதும் கேட்டிராத மிருதுவான குரலில் அவள் செல்வமலரிடம் கூறினாள்.

“இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்ல பொம்பிளையளால இதைத்தானே செய்ய முடியும்”

 

ப்போதிலிருந்து சில தினங்கள் எவ்வாறு கடந்துசென்றன என உண்மையிலேயே எனக்கு நினைவில்லை. கனவுகளிடையே நான் அவரது கண்களிரண்டையும் மாத்திரம் கண்டேன். நெஞ்சு வெடிக்குமளவு துயரத்தோடு நான் வாடிக் கொண்டிருக்கையில் அக் கனவுகளினூடு அப்பா என்னருகே வந்து தலையைத் தடவி கண்ணீர் உகுப்பதையும் கண்டேன். கடவுளே, என் அப்பா அருகிலிருந்தால்! அவர் மரணித்த நாளில் வரண்டு போன எனது கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்திருந்தது.

சில தினங்களுக்குப் பிறகு கண்ணீர் வரண்டு போன பெண்ணொருத்தியாக எழுந்து நின்ற எனக்கு போர்க் களம் இலகுவானதாக மாறியது.

முன்னால் வேட்டுச் சத்தங்கள் கேட்கும்போது, அதற்கு ஒரு கணத்துக்குப் பிறகு என்னுடன் கதைத்தவாறு இந்த ஜீவிதத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த எனது சகாக்கள் மரித்து விழும்போது, அழுவதற்கு என்னிடம் கண்ணீர் மீதமிருக்கவில்லை. அறியாதவோர் போர்க்களத்தில் எனது சகோதரன் இறந்துவிட்ட தகவல் கேட்டும் அழுவதற்கு என்னிடம் கண்ணீர் இருக்கவில்லை. என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லவென எனது அம்மா என்னைத் தேடி முகாமுக்கு வந்தபோது எனக்கு அவளைப் பார்த்து அழ கண்ணீர் ஊற்றெடுக்கவில்லை.

மென்மையான உள்ளத்தை நான் இழந்திருந்தேன். அவர் அதையும் எடுத்துக் கொண்டுதான் சென்றிருந்தார்.

அதை நான் மிகவும் தெளிவாக உணர்ந்தது, ஒருநாள் போர்க்களத்தில் செத்துப் போயிருந்த சிங்கள இராணுவப் படைச் சிப்பாயினது உயிரற்ற உடலைக் கண்டபோதுதான். நான் உடனடியாக நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிப்பாயின் முகம் எனது உடன்பிறவா சகோதரனொருவனை நினைவுபடுத்தியது. அவனும் நானும் சிறுவயதில் ஒன்றாக விளையாடப் பழகியிருந்தோம். நான் எனது எதிரியையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதயத்தின் ஆழத்தில் கடுமையான வலியொன்று தோன்றத் தொடங்கியது. நான் போர்க்களத்தில் மரித்துப் போன எனது சகாக்களின் முகங்கள் பற்றிய ஞாபகங்களால் அவ் வலியை மூடி மறைத்தேன்.

ஆயுதங்களை ஏந்தியவாறு காடு கரைகளைத் தாண்டிச் செல்லும்போது எனக்கு எனது காதலன் நினைவுக்கு வரும் கணங்களும் இல்லாமலில்லை. மஞ்சள் நிற காட்டுப் பூக்களை மிதித்தவாறு போகும்போது ஒருநாள் அவர் எனக்கு எழுதியிருந்த கவிதை நினைவுக்கு வந்தது. என் மீது உதித்த காதல், இதயப் புல்வெளியில் பூத்திருக்கும் எழில்மிகு வனச் சோலையென அவர் எழுதியிருந்தார். எனது பூட்ஸ் சப்பாத்துக்களுக்கு அப்பூக்கள் மிதிபட்டுக் கசங்குகையில் நான் அவ்வார்த்தைகளை மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

எனினும், நடுக்காட்டில் குளிரில், மழையில் நனைந்தவாறு, தூரத்தே வெடியோசையை செவிமடுத்தவாறு, நுளம்புகளை அடித்தவாறு கழிந்த இரவு நேரங்களில் அவர் முடிவேயற்று எனது நினைவுக்கு வந்த சந்தர்ப்பங்களும் இருந்தன.

அவ்வாறான ஓர்நாளில் நான் குருதி வடியும் இதயத்தோடிருந்தேன். அவர் தொலைதூர தேசமொன்றில் காதலியொருத்தியோடு வாழ்ந்து வருவதாக அங்கிருந்து வந்த நலன்விரும்பியொருவர் மூலமாக அறியக் கிடைத்தது. அக் கணத்தில் அவரது சூடான, மிருதுவான படுக்கையில், அவளை அணைத்தவாறு அவர் படுத்திருக்கும் விதம் எனக்குத் தோன்றியது. அவர் அவளை முத்தமிடும் விதத்தை நான் ஆர்ப்பரிக்கும் மனதோடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், அவரது உதடுகள் எனது கன்னங்களில் பதிந்திருந்தது நினைவு வந்தது. இப்போது அவர் வேறொருத்தியோடு படுத்துக் கொண்டிருக்கக் கூடுமென எண்ணுவதே என்னை அடர்ந்த தீக்குள் வைத்து எரிக்கும் எண்ணமாக இருந்தது.

எனினும், அக் கணத்தில் நான் எங்கிருந்தேன்?

நான் நடுக்காட்டின் மத்தியில், அடைமழையில், குளிரில், வாழும் ஆசையைக் கை விட்டிருந்தேன். துப்பாக்கி ரவையொன்று வந்து எனது இதயத்தைத் துளைத்து நான் செத்துப் போய்விடும் ஆபத்திலிருந்தேன்.

அவர் அவரது காதலியோடு – சிலவேளை பொம்மையைப் போல அழகான, மென்மையான ஒருத்தியாக இருக்கக் கூடுமான காதலியோடு – மிருதுவான போர்வை விரிக்கப்பட்ட படுக்கையில் காதல் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் அக்கணத்தில், பாடுபடுவதாலேயே கரடுமுரடாகிப் போன கைகால்களோடு, முரட்டுத்தரையில் தவழ்ந்து கொண்டு நானிருந்தேன். எவ்வளவு அநீதமானது இது?

எனக்கு சுய பச்சாதாபமும் கவலையும் தோன்றியது. எம்மைப் போன்ற பெண்களுக்கு இறுதியில் அனுபவிக்க நேரும் துயரம் இதுதானா?

வேறு பெண்ணோடு படுக்கும் அவருக்கு ஒரு கணத்துக்கேனும் நான் நினைவில் தோன்றமாட்டேனா என எனக்குத் தோன்றியது. இல்லை. அவ்வாறு நடக்கச் சாத்தியமில்லை.

“மனசில் ஒருத்தி இருக்கும்போதே அவளை மனசின் ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டு, இன்னொருத்தியோடு படுக்க ஆம்பிளையளால முடியும். நமக்குத்தான் மனசில ஒருத்தன் இருக்கும்போது, வேறொருத்தன் கை படுவதைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாது” என செல்வமலர் ஒருநாள் என்னிடம் கூறினாள்.

 

ழகான, வசீகரமான முகத் தோற்றத்தைக் கொண்ட செல்வமலருக்கு செழிப்பான உதடுகள். அவளது கூந்தலை இறுக்கமாகப் பின்னி, உச்சியில் வைத்துக் கட்டியதும் அவளது கூர்மையான விழிகள் நீண்டு, மேலும் அழகு வெளிப்படும். முகத்தைப் பார்த்ததுமே ஏனையவற்றை விடவும் அவளது கண்களே அதிகம் வசீகரிக்கும். சீருடையைக் களைந்து விட்டு சாதாரண ஆடையில் அடர்ந்த கூந்தலை அவிழ்த்து விட்டிருக்கும்போது அவளது அழகு மேலும் அதிகரித்தது. அப்போது, இயக்கத்தில் இணைவதற்கு முன்பு அவள் எந்தவொரு இளைஞனையும் ஈர்க்கக் கூடிய அழகியொருத்தியாக இருந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை எனத் தோன்றும். வறிய பெண்ணாக இருந்த அவள் பாடசாலைக்குப் போகும் காலத்தில் நடுத்தரக் குடும்பத்து இளைஞன் ஒருவனைக் காதலித்திருந்தாள். எனினும், அக் காதலன் அவளைக் கைவிட்டு விட்டு வேறொருத்தியைத் திருமணம் செய்திருந்தான்.

“கடைசியா அவனைச் சந்திச்ச நாளில்கூட, என்னைத் தவிர வேறொருத்தியைத் திரும்பிப் பார்க்கக்கூடத் தோன்றுதில்லையென்று என்னட்ட சொன்னவன்” என செல்வமலர் ஒருநாள் தாழ்ந்த குரலில் என்னிடம் அந்தக் கதையைக் கூறத் தொடங்கினாள்.

“ஆனா ரெண்டு மாசம் போகேல்ல. அவன், அம்மா அப்பா சொன்ன பெட்டையைக் கல்யாணம் கட்டிக்கொண்டு நாட்டை விட்டே போயிட்டான். இப்ப பிள்ளையளும் இருக்கும்” எனக் கூறி பெருமூச்சு விட்டவள் தொடர்ந்தாள்.

“அவனோட கல்யாண நாள்ல நான் விடியும்வரைக்கும் முழிச்சுக் கிடந்து அழுது தீர்த்தேன். அவன் இன்னொருத்தியோடு எப்படித் தேனிலவைக் கொண்டாடுவானெண்டு என்னால நினைச்சுகூடப் பார்க்க முடியல. நம்மால முடியேல்லை எண்டாலும் அவங்களால முடியுமடி” என்று கவலை நிறைந்த தொனியில் கூறியவாறே கண்ணீர் வடித்தாள்.

அக்காலத்தில் இயக்கத்திலிருந்த கம்பீரமான இளைஞனொருவனின் பார்வையும் அவள் மீது படிந்து கொண்டிருப்பதை நான் அறிந்திருந்தேன். எனினும், எனது சிநேகிதிக்கு அதைக் குறித்து எந்த ஈடுபாடும் இருக்கவில்லை.

“வேறொருத்தனைக் காதலிக்க முடியாதப்பா… ஒருக்காலும் முடியாது. அவன் போனதுக்குப் பிறகு மனசு அப்படியே கல்லாகிப் போச்சுது. இயக்கத்தில சேரும்போது நான் ஒரு பறவையைப் போல சுதந்திரமா இருந்தவள். காதல் எண்டால் அது ஒரு பெரிய துயரம். அதிலேருந்து விடுதலையான பிறகுதான் அதுவரைக்கும் அனுபவிச்சுக் கொண்டிருந்தது மிகப் பெரிய துயரத்தை என்பது விளங்கிச்சுது. கொஞ்சம் யோசிச்சுப் பார். சிலவேளை நான் அவனுடன் போயிருந்தா இண்டைக்கு ஒரு யந்திரத்தைப் போல பிள்ளை பெத்துப் போட்டுக் கொண்டு இருந்திருப்பன். இப்ப நான் எவ்வளவு சுதந்திரமா இருக்குறன்? இப்படியே இருந்துட்டு இண்டைக்கு, நாளைக்கே செத்துப் போயிட்டாக் கூடப் பரவாயில்லை” எனக் கூறிய செல்வமலர் கலகலவெனச் சிரித்தாள்.

எனினும், என்னால் அவளளவுக்கு இயல்பாக அவரைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

மேலும் மேலும் அதைப் பற்றி யோசிக்கும்போது எனது உடலினுள்ளே தோன்றும் கடுமையான வலி மூளை வரைக்கும் விரவிச் சென்று என்னைத் துன்புறுத்தத் தொடங்கியது.

நானறிந்திராத அப் பெண்ணைக் குறித்த பொறாமையில் எரிந்து கொண்டிருந்தேன். கடவுளே, இவ்வுலகம் இருக்கும் வரைக்கும் வேறெந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு துயரம் வரக் கூடாது.

 

ன்று நான் கண்ட அவரது பார்வை எனது நினைவுக்கு வந்தது. அவரது பார்வையிலிருந்த என்னை நம்ப இயலாத தன்மையை உணர்ந்தேன். அவரை அவ்வாறு மனசாட்சியே இல்லாமல் துரத்தியடித்ததும் நானேதானே?

எனினும், அதில் நான் செய்த குற்றமென்ன? அவர் பக்குவப்பட்ட ஆண் மகனொருவனைப் போலல்லாது சிறுபிள்ளை போலத்தானே நடந்துகொண்டார். அவர் சற்று பொறுமையாகக் காத்திருந்திருக்க வேண்டும், இல்லையா?

நானும்கூட, இவையனைத்தையும் கை விட்டுவிட்டு அவருடன் ஓடிப் போய், நல்லதொரு குடும்பத் தலைவியாக பிள்ளை பெற்றெடுத்து, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு வாழ்ந்திருக்கலாம். எனினும், இறுதியில் எவ்வளவு தைரியமான பெண்ணும், குடும்பத் தலைவியாக மாறுவதால் நிகழ்வது ஒன்றேதானே? நான் எதிர்பார்த்த வாழ்க்கை அதுவா?

இல்லை. சிறு வயது முதலே எனக்கு அவ்வாறானதொரு பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நான் புத்தகங்களில் வாசித்திருந்த சுதந்திரமான பெண்களைப் போல வாழ கனவு கண்டு கொண்டிருந்தவள். காலையிலிருந்து இரவு வரைக்கும் சமையலறையில் வெந்து கொண்டு உணவு சமைப்பதுவும், இரவில் கணவனின் உடற்தேவைகளைப் பூர்த்திசெய்து கொடுப்பதுவும்தான் வாழ்க்கை என ஏற்றுக்கொண்ட பெண் ஜீவிதத்தை நான் வெறுத்தேன். தலைக்கு மேலால் நீல ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பட்சிகளைப் பார்த்தவாறு அவை போல சுதந்திரமாகப் பறக்க விரும்பினேன். சிறு வயதிலிருந்து எனது கனவாக இருந்தது விடுதலைதான். நான் அதைத் தேடியவாறு, அதை வென்றெடுக்கப் போராடியவாறு கிடந்தவள். வளர்ந்தவளாகும்போது விடுதலை என்பதற்கான தெளிவான அர்த்தம் எனக்குக் கிடைத்தது. அதற்காக எனது முதல் காதலைக் கூடத் தியாகம் செய்தேன். மனம் துயரத்தால் கனத்திருந்த போதும் என்னால் அத் தியாகத்தைச் செய்ய முடிந்தது. எவருக்கும் நான் செய்தது தவறெனக் கூறலாம். அதற்குப் பரவாயில்லை. இன்றும் கூட என்னால் அத்தீர்மானம் குறித்து வாதிட முடியும்.

எப்போதாவது ஓய்வு கிடைக்கும் நாளின் இரவில், எனது தலைக்கு மேலால் விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்த்திருப்பது எனக்குப் பிடித்தமானது. நானொரு சிற்றெறும்பாக என்னை உணரும் அக்கணத்தை நான் விரும்பினேன். கருத்த ஆகாயத்தில் நட்சத்திரக் கூட்டம் தோன்றும்போது அதில் அருந்ததி நட்சத்திரம் எங்கேயிருக்கிறதெனத் தேடுவதை விருப்பத்தோடு செய்தேன். பெருங்கரடிக் கூட்டத்தைச் சேர்ந்த மங்கலான வெளிச்சத்துடன் கூடிய அருந்ததி நட்சத்திரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமானது. எனினும், நாங்கள் சந்தித்துக் கொண்ட ஓரிரவில் அவருக்கு அதைச் சுட்டிக் காட்டியது நான்தான். அவர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது தோள் மீது தலை சாய்த்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது ஸ்பரிசத்தால் பூரித்திருந்த மேனியோடும், மனதோடும் இருளின் மத்தியில் ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள் பூத்திருப்பதாகத் தென்பட்டது. அன்று, தாலி கட்டப்படாமலேயே நான் அவரது மனைவியாகியிருந்தேன். அவ்வேளையில், அக் கணத்தில் உறைந்திருந்து எப்போதுமே அவருடையவளாக வேண்டுமென, எனது சிறுபிள்ளைத்தனமான மனதுக்கு எவ்வளவு தேவையாக இருந்தது!

நாங்கள் ஒன்றாகக் கழித்த அவ்வாறான காதல் கணங்கள் பற்றிய ஞாபகங்களைப் பூட்டி வைத்திருக்கும் சங்கிலியைச் சற்று இலேசாக்கியதும் அவை உடனடியாக வெளியே குதித்து எனது மனதை குழப்பத்தால் மூழ்கடித்தன.

ஒருவிதத்தில் காதலின் சுகத்தையே வாழ்க்கையில் ஒருபோதும் அனுபவிக்காது மரித்துவிட நியமிக்கப்பட்டிருந்த எனக்கு, அப்பாக்கியத்தை அளித்தது அவர்தான். அதைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது இப்போது மரித்துப் போகக்கூட எனக்குப் பயமில்லை. நான் செத்துப் போவது, சொற்ப காலமேனும் ஆணொருவனின் பரிபூரணமான காதலை அனுபவித்த பரிபூரணமான பெண்ணொருத்தியாகத்தான்.

துப்பாக்கியை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நான் மேலே, இருண்ட ஆகாயத்தின் நட்சத்திரங்களிடையே சஞ்சரித்தேன். இவ்வுலகத்தை விட்டுச் செல்லும் நாளில் எல்லையற்ற வானத்தில் இணைந்து மேலுமொரு அருந்ததி நட்சத்திரமாக நானிருக்கக் கூடும்.

அவர் இந்த உலகத்தில் எவ்விடத்திலோ இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.

எனது காதலின் தூய்மையை அவர் முழுமையாகப் புரிந்துகொள்வது அன்றுதான்.

*****

கத்யானா அமரசிங்ஹ, இலங்கையைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். அறிவியல் கட்டுரையாளராக பத்திரிகைத் துறையில் பிரவேசித்த கத்யானா, சிறப்புக் கட்டுரையாசிரியராகவும் பிரதி எழுத்தராகவும் பிரதி ஆசிரியராகவும் பல்வேறு ஊடகங்களில் இரண்டு தசாப்தங்கள் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர். இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டிருக்கும் இவரது முதல் நாவல் ‘நிலிவெஸ்ஸ’ 2014ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாவது நாவலான ‘வண்ணதாசி’ 2017ஆம் ஆண்டுக்கான இலங்கை நூல் பதிப்பாளர்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் சுவர்ண புஸ்தக விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வானதோடு ஒரு லட்சம் ரூபாய் பரிசினையும் வென்றது.

தற்போது சுயாதீன ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் இவரது மூன்றாவது நாவல் ‘தரணி’ ஆகும். இந்நாவலும்கூட 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுவர்ண புஸ்தக விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி ஒரு லட்சம் ரூபாய் பரிசினை வென்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சத்திரப் போராளி’ எனும் இச் சிறுகதை, ‘தரணி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் இடம்பெறும் சிறுகதையாகும்.

 

“எம். ரிஷான் ஷெரீப்” <mrishansha@gmail.com>

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *