பாக்கியம் சங்கரின் ‘நான்காம் சுவர்’

ந. பெரியசாமி
சாலையில் எலியோ நாயோ செத்துக் கிடந்தால், முக்கை பொத்தி, முகம் சுளித்து கடந்திடுவோம். மனிதர்களாக இருப்பின் அய்யோ பாவம் என கசிந்துருகி கடந்திடுவோம். மறுநாள் அச்சாலை நேற்றைய சுவடை இல்லாமலாக்கி இயல்பை இறுத்தி இருக்கும். இவ்வுலகம் தங்குதடையின்றி முகச்சுளிப்பற்று இயல்பாக இருக்கச் செய்யும் மனிதர்கள் குறித்து என்றேனும் கவனத்தில் கொண்டிருக்கிறோமா? அவர்கள் குறித்த நம் அக்கறைதான் என்ன?
கடந்துசெல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்ததும் உள்ளிருப்பவர்களுக்கு ஏதும் ஆகிடக் கூடாதென வேண்டுதல் வைப்பவர்களை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். அப்படியானவர்கள் கூட இம்மக்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு நொடியாவது பிரார்த்தனை செய்திருப்பார்களா? உறுதியாக சொல்லலாம், இருக்காது. “நீ நீயாகவே இருக்காதே; உடனிருப்பவனையும் நேசி” என சூடு வைக்காமல். துப்பாக்கியால் சுடாமல் நம்முள் பெரும் காயத்தை ஏற்படுத்தி செல்கிறார் பாக்கியம் சங்கர், இந்த தன் ‘நான்காம் சுவர்’ தொகுப்பில்.
ஊரின் முகப்பில் நிற்கும் எல்லைச்சாமி போல் தொகுப்பின் எல்லைச் சாமியாக திருப்பால் இருக்கிறார். தொகுப்பில் வாழும் மற்றைய மனிதர்களை வாசிக்க, திருப்பாலின் நிழல் படிந்த மனிதர்களாகவே எல்லோரும் இருக்கிறார்கள். ஓரமாக ஒதுங்கிக் கிடக்கும் பிணவறையின் இதயமாக திருப்பால் இருந்திருக்கிறார். அவரை உயிர்ப்போடு வைத்துக்கொண்டிருந்தது இளையராஜா இசை. பிணவறையில் அவரே மன்னன். ஆனால், உடலை வளர்க்க உணர்வை இழக்கும் அரசனல்ல.
நிரந்தரம் என்று இவர்களுக்கு ஏதும் கிடையாது. பஸ் நிலையம் அருகில் கிடைக்கும் இடமே இவர்களின் வித்தைக்கான களம். அந்தரத்தில் கயிற்றைக் கட்டி காற்றோடு நடக்கும் பாபுஜீ மூலம் தொம்பரக் கூத்தாடிகளின் வாழ்வை காட்சிபடுத்துகிறார்.
‘விபரம் தெரியாதவனும் நல்ல போதையில் இருப்பவனும்தான் விஷ வாயுவுல மாட்டிப்பான் நைனா’ எனும் மாலகொண்டையாவின் குரல், இனி சாக்கடை சுத்தம் செய்பவர்களை கானும் பொதெல்லாம் நம் காதில் ஒலிக்கும். மாலகொண்டையாவின் இறப்பு குறித்த பத்தியை வாசிக்கையில் உறவுகளின் இறப்பு செய்திக்கான மனநிலையில் கணத்துக் கிடக்கச் செய்கிறார் பாக்கியம் சங்கர்.
பேட்டையில் வாழும் பசங்களுக்கு தனக்குத் தெரிந்த விளையாட்டுகளை கத்துக் கொடுக்கும் வாத்தியார் சாண்டோ ராஜ். பிரமச்சாரி. அவர் இறந்து போய்விட இடுகாட்டில் சடங்குகள் செய்கையில் மாசாணம், “வாத்தியாரு பிரம்மச்சாரி… கொள்ளி யாருப்பா போட்றது” என கேட்கையில், “நா வாத்தியாரோட புள்ள, நா போட்றேன்” என நூற்றுக்கும் மேற்பட்ட சிஷ்யர்கள் முண்டியடித்துக் கொண்டு வருகிறார்கள். வாழ்தல் என்பது வெறுமனே வாழ்தல் அல்ல, அர்த்தமிக்கதாக இருக்க வேண்டும். அது இப்படி ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது.
இதுபோன்ற இந்த தொகுப்பில் வாழும் மனிதர்கள் குறித்து பேசவும் எழுதவும் நிறைய இருக்கிறது. அவர்களின் வாழ்வில் இருக்கும் அழகியலை நுட்பத்தோடு வெளிப்படுத்த, சமகால படைப்பாளிகளின் படைப்பிலிருந்தும் ஒப்புமைபடுத்தி எழுதிச் சென்றிருக்கும் பாக்கியம் சங்கரின் மொழி நம்மை துளைத்து நமக்குள் குடிகொண்டு விடுகிறது.
*****
நான்காம் சுவர்
பாக்கியம் சங்கர்
விலை ரூ. 375
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை
தொலைபேசி: +91 90424 61472
மின்னஞ்சல்: yaavarum1@gmail.com
“ந. பெரியசாமி” <na.periyasamy@gmail.com>