மொழியின் நிழலோடு ஒரு விசாரணை

 மொழியின் நிழலோடு ஒரு விசாரணை

சூர்யநிலா

 

மொழியின் நிழல் எப்படியானவையாக இருக்க வேண்டும்?

அது எல்லாவிடங்களிலும் பரவக்கூடிய பொருண்மைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும். கரடுமுரடான மொன்னைத்தனங்களில் கற்பிதம் செய்து கொண்டும், அதே நேரம் மெல்லிய கீற்றலைகளில் பரவிக்கொண்டும் இருக்க வேண்டும்.

மொழி; விகிதாச்சாரங்களில் அடங்காத பெரும் போக்குடையவை. பல கைகளைக் கொண்ட விரிந்த தன்மையுடையவை. எல்லாவித எழுத்துகளின் மீதும் பயணப்படும் சூத்திரதாரிதான் மொழியெனும் பேரரசள். ஆகவே, மொழி முன் நாம் மண்டியிடுகிறோம். அது அனைத்து வித சிறப்புகளையும் சில நேரம் எல்லா சவுக்கடிகளையும் நமக்குத் தருகிறது. மொழிகளின் தாத்பார்யம் அதுதான். கொஞ்சும் போது நம் மீது சிறு நீற்றை பீய்ச்சியடிக்கும்; அதேநேரம் நம்மை உச்சி முகரும் அன்பின் வடிவம். பரிசுத்த ஆவியாகவும் புனித பயணத்தை மேவுவனாகவும் அம்மொழிக் கடவுள் நமக்கு விளங்குகிறான்.

பெரியசாமியின் இந்த ‘மொழியின் நிழல்’ கட்டுரைத் தொகுப்பு நமக்கு மேற்கண்ட இயல்புகளை தோற்றுவிக்கின்றது.

எனக்கு 1990களில் பேனா நண்பராக ‘தினகரன்’ வசந்தம் மூலம் நட்பான இலக்கிய நண்பர்தான் ந. பெரியசாமி. கால் நூற்றாண்டுகளுக்கு மேல் எங்களின் நட்புகள் இன்றும் தொடர்வதே இலக்கியத்தின் பேறு.

அவர் பணியாற்றும் ஓசூர் நிறுவன முகவரிக்கு நான் கடிதம் எழுதுவதும், எனது 19 அந்தோணிசாமி தெரு, சேலம் முகவரிக்கு அவர் கடிதம் எழுதுவதுமான நட்பின் நிழல் எங்களை இறுக்கிப் பிடித்த காலமது. எங்கள் நட்பிற்கு பத்தாண்டுகளுக்கு பிறகே வே.பாபு அவருக்கு நண்பரானார். எங்கள் மூவருக்குமான நட்பு மேலும் இறுகியது. இந்த நினைவலைகளை எல்லாம் பீறிட வைத்துவிட்டது இக் கட்டுரை தொகுப்பு. நான்கு கவிதைத் தொகுப்பிற்குப் பின் நூல் விமர்சனங்களைத் தாங்கிய கட்டுரை தொகுப்பு.

சற்றொப்ப தமிழின் நவீன கவிஞர்கள், கதையாசிரியர்கள் நூல்களின் திறனாய்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன. கோணங்கி, பாக்கியம் சங்கர், ஸ்டாலின் சரவணன், கண்டராதித்தன், வெய்யில், ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழவன், கே. ஸ்டாலின், ச. துரை, பவா. செல்லதுரை, கே.வி. ஜெயஸ்ரீ, பா. வெங்கடேசன், லிபி ஆரண்யா, ஜான் சுந்தர், இசை, சாகிப்கிரான், வேல் கண்ணன், வே.பாபு உள்ளிட்ட பலரின் நூல்களையும் முன்வைத்து எழுதப்பட்டுள்ளது.

கோணங்கியின் படைப்பை அணுகும் போது அதே தீவிரத் தன்மையோடும், ஏனைய கவிதைத் தொகுப்புகளைச் சற்று மெல்லியத் தன்மையோடும் பெரியசாமி உள்வாங்கி எழுதியுள்ளார். கறார் தன்மை சில விமர்சனங்களில் மிகுந்தும், ஆலோசனைத் தன்மையுடைய போக்கு பல கட்டுரைகளில் மிளிர்ந்தும் ஆசுவாசத் தன்மையினை ஏற்படுத்துகிறது.

மொழி என்பது இப்படித்தான் இயல்பாகிறது. மொழிக் கற்றை எதில் பதிகிறதோ அத் தன்மைக்கு மொழி உருமாறுகிறது. அம்மொழியின் நிழல், படைப்பின் பொருண்மையில் பதிந்து படைப்பாளனின் மனப்போக்காக அவதரிக்கிறது.

ந. பெரியசாமி கவிதைகளில் கோலோச்சியவர்தான். இக் கட்டுரை நூலில் மேலும் தம்மின் படைப்பாதிகாரத்தை வலுவாக்கியுள்ளார். மொழிகளின் அத்தனை கூறுகளையும் சேர்த்துக் கட்டும் பெருசின் பெரும் வலுவிது.

மொழியின் நிழல் – ந. பெரியசாமி; பக். 188; விலை ரூ. 180; வெளியீடு: தேநீர் பதிப்பகம்

Amrutha

Related post