ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

 ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

1. திறவா நெடுங்கதவா அது

புதியாய் குடிவந்த ஐந்தாம் மாடி வீட்டுக்கு
லிஃப்ட் இருப்பது எவ்வளவு ஆறுதல்

பத்துநாளாய் சர சரவென போகவர
எல்லாம் சரியாய் இருந்தது
இரவு சட்டென பாதியில் நிற்கும் வரை

ஏற்கனவே வெவ்வேறு
மின்தூக்கிகளுக்குள்
இப்படி மாட்டியிருக்கிறேன்

சொந்த வீட்டு மின்னுயர்த்திக்குள்
முதல் முறை சிக்கியபோது
பதற்றம் கொண்டு
உடனே பொத்தான்களை மாற்றி மாற்றி
அவசரமாக அழுத்தவில்லை
உரத்த கத்தலோ
டப டபவென கதவடிப்போ இல்லை
அதை ஏற்றேன்

அலைபேசி எடுத்து
யாரையும் அழைக்கவில்லை

பத்து நிமிஷம் கடந்ததும் மூலையில்
சாய்ந்து அமர்ந்துவிட்டேன்
எதிர் மறை எண்ணங்களுக்குப் போகாமல்
அரை மணி வரை கொஞ்சம்
சும்மா இருப்போமென

இத்தனைக்கும் அதன் வரிசை எண்
அவசர அழைப்பு எண்கள்
அடுக்க நிர்வாகி எண்கள்
எல்லாம் இருந்தன

பொறுமைக்கான தேர்வாய் எண்ணி
அலைபேசியில் பாட்டை ஒலிக்கவிட்டேன்

இருபத்தி எட்டாம் நிமிஷம்
தானே ஒளிர்ந்து தானே இயங்கி
என் தளத்தில் நின்று கதவு திறந்து
வணக்கம் ஐந்தாம் தளம் என்றது
நன்றி என்றேன்

படபடப்பில்லை
சந்தோஷ விடுதலையுமில்லை

தாழ்பாளும் பூட்டுமில்லாது
திறந்த கதவைமறுபடி மூடிக்கொண்டு
மேல் நோக்கி சென்றது

சில வினாடி
பார்த்துக்கொண்டேயிருந்தேன்

பாருங்கள் இதற்கெல்லாம்
ஐம்பத்திஏழு வயசாக வேண்டியிருக்கிறது.

 

(நதிப் பிரவாகத்தை எதிர்த்து நீந்தாதே; வெறுமனே மித, அதுவே உன்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று கரை சேர்க்கும் – ஓஷோ)

 

2. ஜ்வாஜல்யம்

அந்தரத்தில் முன் பாய்ந்து
கெண்டைக்கால் சதை இறுக
ஓடி ஓடித் துள்ளி
வியர்வை வழிய வீசி
வாளுருவி நின்றோர்க்கு
ரத்தக்கோடிழுத்துச் சரியவைத்து
துரிதத்தில் மீட்டு வந்தேன்

துரத்தி வந்த புரவிகளும்
களைத்துப் பின்வாங்க
மார்பணைத்துக் காத்து
மலையிறக்கிக் கொணர்ந்தேன்
கால்சோராப் புரவியிலே

நிழல் விழா வனப்புல்லில் கிடத்தினேன்
ஈன்ற குட்டியின்
பனிக்குட வழுவழுப்பாய்
உடம்பெங்கும் பிசு பிசு வியர்வை வாசனை

ஓடிக்கொணர்ந்த சுனை நீரைத்
தோள் சாய்த்துப்
பருகத் தந்தேன்
குடித்த பின்னும் துவண்டு
விழி மூடிக்கிடந்தாய் களைப்பில்

எங்கிருந்தோ வந்த செம்போத்தும்
நின்று வாசித்தது உன்னை

செக்கர் வானம் கதிரை வழியனுப்ப
சொடுக்கிய சவுக்கின்
முதுகுக்கோடுகளில்
உதிர்ந்த கண்ணீர் திவலைகளால்
தோல்சுருக்கி திடுக்கிட்டு விழிதிறந்து
மெல்ல கைகோர்த்தாய் நெகிழ்ந்து

கல்லால் மூட்டிய நெருப்பில்
பாறைப்பிஞ்சடுப்பில் கொதித்த சாறெடுத்து
இலைக் குவளையில் நீட்டினேன்
ஆசுவாசித்தாய்
இனிமை பரவ இளங்களிகொண்டாய்

நீர் நிலையில் குளிப்பாட்டிக் கரையேற்றி
வகிடெடுத்து வார முடியா கூந்தல் இழைகளை
விரல்களால் சிக்கெடுத்து உதறி
அடுப்பின் மிதச்சூட்டில் உலர்த்தினேன்

தோண்டிக் கழுவிய
கிழங்கும் பழங்களும் கொணர்ந்து
புசிக்க வைக்க
உகுத்து ஊட்டினாய் எனக்கும்

குத்திட்டு நிலைகொண்டு
இமைகள் விரிய
மதியின்றி மருண்ட காலம் காண
இழுத்தணைத்து
கன்னம் தட்டி தாடை தடவ
நிகழில் காலூன்றி புன்னகைத்தாய்

எரிந்த புண்களில்
இலை கசக்கி சொட்டிட்டு
ஒன்றுமிலை ஒன்றுமிலை சரியாச்சென
உச்சரித்தேன் உன் நாமம்

மருண்ட விழி நீரில் மாலையிட்டு
மங்கல நாண் கேட்டாய்
ராட்சஸ சிலந்தியின்
தடம் பதிந்த கழுத்தில்
மனமியைந்து பூட்டினேன்

மனத்திரையில் தும்புகள் துடைத்தெடுக்க
மடிகிடத்தி
உயிர் அதிர வரி தொடுத்து
உள்ளோர்மையில் லயித்து
ஒன்றிணைந்த சுதியில்
பண் செய்தேன்
இருள் சூழ்ந்த இரவெலாம்
அமிர்தத் தாரை

மனமெங்கும் மது நிரம்பி மயங்கிப் பாய
இதழ் கவ்வினாய்
பொறி கண்டு எம்பிக் கொத்தும் குளத்துக் கயலாய்

மாறி மாறிப் பாய்கிறது
ஜீவ ரசம்
மனச்சுனைகளில்
ஜ்வாஜல்ய மின்மினிகள்
சட்டென எழுந்த
வெட்கச் சருகுகளின் சரசரப்பு ஒலி நடுவேயும்
கண்டனக் கண்கள்
கீழ் உதட்டு மச்சத்திலும் சூட்டுத்தீற்றல்

மயிரடர்ந்த நெஞ்சில்
மார்புக் கதுப்புகள் நசுங்க
முகம் புதைத்து
அரை உறக்கம் கொண்ட
என் தங்கமே
நின் பின்னழகில்
விரல் கொண்டு எழுதுகிறேன்
இனி இக்கரையெலாம்
சுடர்வது நின்னொளியே
நன்றுறங்கு
நன்றுறங்கு.

 

3. உள்டப்பி எனும் பண்டோராக்கள்

ஊசி ஊசியாய்
நகக்கண்களில்
இறங்கிய வலிகளுக்கு
வடிகாலாய்த்தான்
வந்தேன்
புனைபெயரில்
இளம்பிராய
புகைப்படங்கள் பதிந்து

ஹாய் எனத்துவங்கி
எப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்
அற்புதம்
அருமை
செம
ச்சே சான்ஸே இல்ல
சூப்பர்
வாவ்
ஆசம்
உண்மை முகம் தெரியா
முகவரி தெரியாததுகளின்
எல்லையற்ற சுதந்திரம்

டியர் அழகு செல்லம்
கன்னுக்குட்டி
வயதென்ன டார்லிங்
நினைவு கொல்கிறது
யாருமில்லை எனக்கு நீதான்
அலைபேசி எண்
புகைப்படம் முகவரி கிடைக்குமா
வாடி போடிங்கலாமா
அனுப்பிய படங்கள் எப்படி
இதய
விடலை முத்த
கண்ணீர் வழிகிற
நாக்கு தொங்கும்
மெனோபாஸில்லா
வித வித இமோஜிக்கள்
நிறைந்து வழிகின்றன

பச்சை ஒளி தெரிந்ததும்
அப்படிப் பாய்ந்தோடி
வருகிறீர்கள்

யோனியும் முலைகளும்
பிட்டங்களும் தவிர
வேறேதும் தெரியா
வயது பேதமில்லா
அதீத வறட்சி பித்துகளின்
காமமூச்சால் பற்றி எரிகின்றன
உள்பெட்டிகள்
துரோகத்தின்
திராவகவீச்சில்
சிதைந்து கரிந்த
என் முகம் மறைத்து
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
சிலரை பிளாக் செய்தபடி

நைந்த மனசுக்கு
உண்மை ஆறுதல் தரும் ஒன்றிரண்டு
தந்தைமையின் நல் சமிக்ஞைகளுக்காக
வெளியேற மனமின்றி.

ரவிசுப்பிரமணியன் <ravisubramaniyan@gmail.com>

Amrutha

Related post