செளவி கவிதைகள்

 செளவி கவிதைகள்

ஓவியம்: கிரஹாம் பாய்ட்

1. சக்கரங்கள்

அமைதியாக நின்று கொண்டிருக்கும்
சக்கரங்களின் மௌனத்தில் ஒளிந்திருக்கிறது
எத்தனையோ பாதைகளின் விலாசங்கள்

இதுவரை எத்தனை பேரை அழைத்துப்போயிருக்கும்
இன்னும் எத்தனை பேரின் பயணங்களுக்குத்
துணையாயிருக்கும்
மௌனமாகவே நின்றுகொண்டிருக்கின்றன சக்கரங்கள்
பதிலேதும் பகராமல்

இரவு பகல் மழை வெயில்
என எல்லாக் காலத்தையும்
ஒன்றென எண்ணிக்கொள்ளும்
சக்கரங்களின் மனநிலை வாய்ப்பதில்லை எல்லோருக்கும்

தார்ச்சாலைகளில் ஓடி ஓடி
வெறுத்துப்போன சக்கரங்கள்
எப்போதேனும் மண்சாலையில்
பயணிக்க நேர்ந்தால்
நீண்டநாள் பிரிவுக்குப்பின்
காதலியைச் சந்திக்கும்
காதலனென அழுந்த அழுந்த முத்தமிடுகின்றன

நாடெங்கும் சுற்றினாலும் கர்வப்படாத சக்கரங்கள்
அமைதியாகவே இருக்கின்றன
எதுவும் தெரியாதது போல

சக்கரங்களின் சமத்துவம் வியக்கவைக்கிறது
இவற்றுக்குள் நிற வேற்றுமையே கிடையாது
எல்லா ஊர்களிலும் எல்லா நாடுகளிலும்
ஒரே நிறத்தோடே வாழ்கின்றன

மூச்சிருப்பதெல்லாம் உயிரியென்றால்
மூச்சுப்போனால் இயக்கத்தை நிறுத்திக்கொள்வதெல்லாம்
உயிரியென்றால்
சக்கரங்களையும் உயிரியெனலாம்
காற்றுப்போனால் இயக்கம் நின்றுவிடுகிறது

ஓடி ஓடி உறுப்புக்கள்
தேய்ந்தாலும்
ஓய்வெடுக்க விடுவதில்லை
சக்கரங்களை

உயரத்திலிருந்து தள்ளப்படும்
சரக்குகள்
அடிபடாமலிருக்க அவற்றின்மீதே
தள்ளப்படுகின்றன

அப்படித் தள்ளப்படும்போது
அச்சக்கரங்கள் வெளிப்படுத்தும்
பெருமூச்சு
இன்னும் இறக்கவில்லை
என்பதையே உறுதிப்படுத்துகின்றன

எப்போதும் சக்கரங்கள் ஓய்வதில்லை
சக்கரங்கள் ஓய்ந்துவிட்டால
பூமிக்கு சுழற்சியில்லை

2. தூண்டில்கள்

எல்லோருடைய கைகளிலும்
தூண்டில்கள் இருக்கின்றன
சிலர் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள்
சிலர் மறைத்து வைத்திருக்கிறார்கள்
எல்லாத் தூண்டில்களுக்கும்
எப்படியேனும் மாட்டிவிடுகின்றன மீன்கள்

சிலர் தூண்டில்களை
உபயோகித்துக்கொண்டேயிருக்கிறார்கள்
சிலர் வேண்டும்போது உபயோகிக்கிறார்கள்
சிலர் அடிப்படைக்கு மட்டும் உபயோகிக்கிறார்கள்

சில தூண்டில்கள் மீன்களைத் தேடிப்போகின்றன
சில தூண்டில்களில்
மீன்கள் தானாகவே வந்து மாட்டிக்கொள்கின்றன
தூண்டில்களின் பிரயோகத்தை மட்டும்
புரிந்துகொள்ளவே முடியவில்லை

சிரித்துப் பேசிக்கொண்டிருப்பவனின் தூண்டிலுக்கு
மீனாவது நீங்களாகவுமிருக்கலாம்
சிலர் பசிக்கு சிலர் ஆசைக்கு
சிலர் வியாபாரத்திறகு சிலர் எதிர்ப்புக்கு
சிலர் பொறாமைக்கு என
தூண்டிலை வீசியபடியேயிருக்கிறார்கள்

இத்தனை பேருக்கு மத்தியிலே
நான் சந்தித்துவிடமேண்டுமெனத்
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
தூண்டில் வைத்திருக்காத ஒருவனை

சௌவி <souvi36@hotmail.com>

souvi

Amrutha

Related post