ஜீவன் பென்னி கவிதை

 ஜீவன் பென்னி கவிதை

இந்தக் காலத்தில் நாங்கள் வேறு கனவுகள் காண்பதில்லை

 

கறுப்பினங்களிலிருந்து வந்திருக்கிறோம்,
உங்களுக்கு முன்பாகவே எங்கள் எலும்புகள் இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றன
எங்கள் தேசத்தின் வலிமையான பாடல்கள் இந்நிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன
இந்தக் காலத்தில் நாங்கள் வேறு கனவுகள் காண்பதில்லை.
நாங்கள் நெடிய தூரத்து நதிகளின் கரைகளில் வளர்ந்தவர்கள்
எங்களுக்கான சுதந்திரமான வானை யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை
இந்தக் காலத்தில் நாங்கள் வேறு எவற்றையும் போதிப்பதில்லை.
நாங்கள் அடர்ந்த கானகத்தின் பசுமையைப் பார்க்கக் கிடைத்தவர்கள்
கரடுமுரடான மலைகளிலிருந்தே எங்களுக்கான மொழிகளைப் படித்தவர்கள்
இந்தக் காலத்தில் நாங்கள் வேறு கிளர்ச்சிகள் செய்வதில்லை.
தாக்கப்படும் எங்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் ஒரு சிந்தனையுண்டு
சேதமடைந்திருக்கும் கடவுள்களின் இசைக்கோர்வைகள் நன்றாக இசையெழுப்புகின்றன
இந்தக் காலத்தில் நாங்கள் வேறு சூழ்ச்சிகளை நம்புவதில்லை.
நாங்கள் பஞ்சத்தை வென்று எங்களின் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம்
நீண்ட போர்களிலும் எங்கள் அறத்தைத் தொலைக்காமலிருந்திருக்கிறோம்
இந்தக் காலத்தில் நாங்கள் வேறு அரசியல் செய்வதில்லை.
எங்கள் இருளுக்கான விளக்குகளை நாங்களே ஏந்திச்செல்கிறோம்
உலகத்தின் மக்களுக்குச் சொல்வதற்கென மகத்தானவைகளிருக்கின்றன எங்களிடம்
இந்தக் காலத்தில் நாங்கள் வேறு பாடங்களைப் படிப்பதில்லை.
இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம்
எங்களின் மெல்லிய மனதை அதிகாரத்தின் குண்டுகளுக்குப் பரிசளித்திருக்கிறோம்
இந்தக் காலத்தில் நாங்கள் வேறு எவரைப் போலவுமில்லை.
ஏனெனில்
நாங்கள் கறுப்பினங்களிலிருந்து வந்திருக்கிறோம்,
கறுப்பினங்களாகவே வாழ்வதற்கு விரும்புகிறோம்.

(நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் முன்னோடியான ‘சினுவா ஆச்சிபி’ அவர்களின் நினைவுகளுக்கு)

ஜீவன் பென்னி <jeevanbenniepoems@gmail.com>

Amrutha

Related post