விஷ் யூ ஹாப்பி நியு இயர்

மணி எம் கே மணி
ஓவியம்: டுவைன் பெல்
தேவகியைப் பற்றி என்ன சொல்லலாம்? வழக்கமான ஒருத்தி. காலையில் எழுந்து முகம் கழுவின கையோடு, குவிந்திருக்கும் பாத்திரப் பண்டங்களை விளக்குவாள். அடுப்பைப் பற்ற வைப்பாள். ஏறக்குறைய இரவு வரைக்கும் அதைச் சுற்றி வர வேண்டியிருக்கும். முன்பெல்லாம் தனியாக இருந்த மனக் கவலைகள் எல்லாமும்கூட சலிப்புடன் நகர்ந்துவிட்டன. பெண் ஜென்மம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டு விட்டாள். சொல்லப்போனால் அவள் தொடர்ந்து பார்க்கக் கூடிய தொலைக்காட்சித் தொடர்களில் வரக்கூடிய நாயகிகள் எவ்வளவோ வதைபடுகிறார்கள். ஒரு குறுகிய கால வாழ்க்கைக்குள் அவர்களுக்கு முதலிரவு நடப்பதில்லை; விபத்து நடந்து மருத்துவமனையில் படுப்பார்கள். போலீஸ் அரஸ்ட் பண்ணும், ஜெயிலில் கிடப்பார்கள், அங்குக்கூட அவர்களைக் கொல்ல முயற்சி செய்வார்கள், புருஷன் வைப்பாட்டி வைத்துக்கொள்வான், மாமியார் தூஷிப்பாள், நாத்தனார் சதி செய்வாள், கொஞ்ச நாள் பைத்தியம் பிடித்திருக்கும்; யாராவது ஒரு வாலிபனுடன் நல்ல நட்புடன் இருக்க, அதை ஊர் உலகம் சந்தேகப்படும். இதெல்லாம் சரிதான், ஆனால், தேவகிக்கு இதில் ஒன்றாவது நெஞ்சைத் தொடுவது கிடையாது. என்ன கருமம் இதெல்லாம் என்று அலுத்துக் கொள்ளுவாள். தின்று தூங்கி அப்படியே சுரணை கெட்டு கொண்டிருக்கையில் வீட்டு உரிமையாளரின் மகன் தன்னை நோக்கி தன்மையோடு முறுவலிப்பதை ஒருநாள் கவனித்தாள்.
தன்னை இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் போலத் தோன்றிற்று.
கூந்தலை சீராக வாரிக் கொள்ள ஆரம்பித்தாள்.
அவன் அவளைக் கடந்து போகும்போது ஏதாவது சொல்லுவது வழக்கம். அது புரியாது. அது ஒரு ஜோக்காக இருக்கலாம். காமம் உள்ளில் நாய் வால் அசைக்கும்போது அவனுக்கு அது உருண்டு திரண்டு வராமல் மக்கர் செய்வதாயிருக்கலாம். என்றாலும் தேவகி புரிந்தவரை சின்னதாக சிரித்து வைத்தாள். என்னவோ ஒன்று நடக்கப்போகிறது என்கிற கிளர்ச்சியால் அவள் உடம்பில் எப்போதுமிருந்த களைப்புகளும் அவஸ்தைகளும் விலகின. பகல் தூக்கம் மட்டுப்பட்டது, அடிக்கடி கனைக்க ஆரம்பித்தாள், சப்தம் அதிகரித்த ஒரு கொலுசை மாற்றிக்கொண்டாள். அப்படியாக அவன் ஒருநாள், அர்ச்சுனன் எந்த சிகரெட் பிடிப்பான் என்று கேட்டான். இவளுக்கு என்ன தெரியும்? அவன் வில்ஸ் என்றான். அதில் தான் வில் இருக்கிறது என்றான். அதை சொல்லி விட்டு அவன் வாய்விட்டு சிரிக்கும்போது அவனது தெற்றுப் பல்லை பார்த்தாள். அது அழகாக இருக்கிறது என்று பட்டது. அவன் அதிகம் தாமதிக்கவில்லை. வருடம் முடிய போகின்ற இந்த டிசம்பர் முப்பத்து ஒன்று அன்று சாயந்தரமாக, “நான் எதிர்பார்க்கிற புது வருடப் பரிசு கிடைக்குமா?” என்று கேட்டான். “பயமில்லாமல் மொட்டை மாடிக்கு வர முடியுமா?” என்றும் கேட்டான்.
“எனக்கென்ன பயம்? நீங்க என்னை ரேப்பா பண்ணி விடப் போகிறீர்கள்?”
இரவு ஒன்பது மணி அளவில், மொட்டை மாடியில் அவன் கேட்ட முத்தத்தைத் தருவதாக அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால், அந்த நேரத்தைத் தொடுவதற்கு நெருங்கும்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்கிற சுழலில் திமிறினாள். அவனைப் பாவம் என்று நினைத்துக்கொண்டாள். மாடியில் ஏறுவதற்கு முன்னால், மற்ற குடித்தனக்காரர்கள் எல்லோரும் எங்கே இருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமில்லையா?
அதற்கு முன்பு அவளது புருஷன் எங்கே இருக்கிறான் என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
செல்லில் கேட்டாள். “எங்கே இருக்கிறீர்கள்?”
“அடச்சீ, போனை வை!”
பசுபதி சொன்ன பதில் அவ்வளவுதான்.
டேவிட்டும் ஆலனும் புத்தாண்டு விசேஷ பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் பொருட்டு சர்ச்சுக்குள் போயிருந்தார்கள். இவனும் சாமிக்கண்ணுவும் லோகாவும் கல்லறை குட்டிச்சுவரின் மீது குந்தியிருந்தார்கள். எவ்வளவு புகைக்க வேண்டுமோ, அதைக் காட்டிலும் அதிகமாக புகைத்தாயிற்று. இப்போது வயிறு புகைவதில் யாருக்கும் சிகரெட் பற்ற வைக்க தோன்றவில்லை. குடிக்கப் போக வேண்டியிருப்பதால் எதையாவது சாப்பிட்டு வைக்கவும் முடியாது. இருந்தாலும் தாஸ் வந்து சேர்ந்த போது கையோடு குழியப்பம் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். குடிக்கு எண்ணை வைரியாக இருந்தாலும் பசியில் ருசித்து சாப்பிட்டு கொண்டார்கள். தாஸ் ஒரு எழுத்தாளர் என்பதாலும் அவர் சினிமா பற்றி பேசுகிறவர் என்பதாலும் டேவிட்டும் ஆலனும் வருகிற வரையில் நேரம் போயிற்று.
சட்டென்று ஆலன் பாடினான்.
“அல்லேலூயா உமக்கே,
அல்லேலூயா உமக்கே !
ரத்தத்தை சிந்தி எங்களைக் காத்த
அல்லேலூயா உமக்கே!”
மற்றவர்களும் திரும்பப் பாடினார்கள். சர்ச்சை போர்த்தியிருந்த வர்ண விளக்குகள் அவர்கள் மீதும் அவர்களை வேடிக்கை பார்த்தவர்களின் மீதும் எதிரொளித்தது. எவ்வளவு கூட்டம்? குழந்தைகள், பெண்கள், ஆண்கள்? ஏசப்பாவுக்கு ஜாலிதான். பாட்டை சட்டென நிறுத்தி கிளம்பினார்கள். கோட்டர்சுக்கு மூன்று கிலோமீட்டர் தூரமிருக்கலாம். பழுதடைந்த வீடுகள் குப்பைக் கூளங்களுடன் வெறித்துக்கொண்டு கிடந்தாலும் ஏற்கனவே ஒரு பகுதியை சீரமைத்து வைத்து செட்டப்பாக இருந்தது. சரக்கும் சாப்பாடும் வந்த பின்னர் விருந்து துவங்கியது. மச்சி, மச்சான், மாமா, மாப்பிள்ளைகள் கோப்பைகளை உயர்த்தினார்கள். சியர்ஸ், சியர்ஸ். அது சரியாக பன்னிரண்டு மணி வரை தொடர்ந்து புத்தாண்டு சந்தோஷங்கள் துவங்கின. பட்டாசுகளை அள்ளி வந்து கொளுத்தியது வேறு ஒரு ஜமா. கட்டி அணைத்து, கை கொடுத்து பாதுஷா வழங்கி கலாட்டா பண்ணிவிட்டு சென்றது மகா சிவா என்கிற வேறு ஒரு அணி. பூங்காவனம் பேங்கூஸ் அடித்தான். முடிந்த அளவில் எல்லோரும் கொஞ்சம் ஆட்டம் போட்டார்கள். ஜூனியர்ஸ் அதிகமாக கூச்சலிட்டு அத்துமீறல் பண்ணிக் கொண்டிருக்கவே இவர்கள் அங்கிருந்து நழுவி ஆப்பம் சிக்கன் சாப்பிட்டு கோட்டர்சில் போட்டு வைக்கப்பட்டிருந்த ராட்சச குழாய்களின் மீது, அதன் இடுக்குகளில் படுத்துக் கொண்டார்கள்.
நான்கு மணி வரைதான் தூங்க முடியும்.
நான்கு மணிக்கு சர்ச்சில் வேறு ஒரு பிரேயர்.
ஜொலி ஜொலிப்பில் ததும்பிக் கொண்டிருந்த அந்த பகுதியில் மக்கள் நிறங்களோடு ததும்பினார்கள். தழுவிக்கொள்ளவே பிறந்தவனா மனிதன்? அத்தனை பேரும் தங்களை சந்தோஷத்தின் மீது நிறுத்தி வைத்துக்கொண்டு, அது நழுவி விடுமோ என்கிற சந்தேகத்தில் வலுக்கட்டாயமாக தங்களை நிறுவிக் கொண்டார்கள். அங்கே யாருமே தங்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும்.
வா, வா, வா போலாம்.
வைன் ஷாப்பை திறக்க மாட்டார்கள். பக்கவாட்டு படிகளின் வழியாக ஏறி பாரின் கதவைத் தட்டினால் பஷீர் கதவைத் திறந்தான். மொட்டைமாடியில் அவன் நாற்காலி, மேஜைகளைப் போட்டான். கேட்ட சரக்கு வந்தது. இதர பொருட்கள் வந்தன. இரண்டு பெக்குகளுக்கு அப்பறம் சாந்தி, சமாதானம் வந்தது. எல்லோரும் நிதானித்தார்கள். சுவாரஸ்யமாக ஒரு பேச்சு நடந்து கொண்டிருந்து, அதற்கு ஒரு இடைவெளி விழுந்த போதுதான் எல்லோரும் குளிர்வதை உணர்ந்தார்கள். விடியல் இறங்கிக் கொண்டிருந்தது. ஒருவர், மற்றொருவர் என்று பெரிய சுரணை எதுவும் இல்லாமல்கூட தங்களை சுற்றியிருந்த உலகை அவர்கள் கவனிக்கத் துவங்கினர். சரியாக அதை சொல்லிவிட முடியாது, அது ஒரு இடைவெளியேதான். ஒருகணம் தங்களுடைய அனாதித் தருணம் வெளிப்படும் துயர் நொடிகள் துடித்தன.
ஆலன் ஆரம்பித்தான்.
அது ஒரு கானா. மாம்பழம் பற்றியது. அப்படித்தான் அந்த நிகழ்ச்சிகள் துவங்கின. பூங்காவனம் பழைய ஆள். அவனுக்கு இதுதான் வயது என்று யாராலும் சொல்ல முடியாது. அவன் யாரோடெல்லாம் இருந்திருக்கிறான் என்பதையும் சொல்ல முடியாது. ‘மகான் காந்தி மகான்’ கண்ணீரோடு பாடுவான்; ‘அழைக்காதே’ பாடுவான்; ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல்’ பாடுவான்; ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’ சந்திரபாபு பாடலுக்கு எழுந்து கொள்வான். அது ஒரு மென்னசைவு நடனம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அன்னையின் கையில் ஆடுவதின்பம், கன்னியின் கையில் சாய்வதும் இன்பம், தன்னை அறிந்தால் உண்மையில், இன்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்’ என்று விட்டு ‘பெரும் பேரின்பம்’ என்று உருகுவான் பாருங்கள், யாரும் கண்ணீர் உகுத்து விடுவார்கள். அவ்வப்போது நிகழும் இவை ஒவ்வொன்றாக வரிசையாக நடந்து முடிந்திருந்தன. குடிமக்கள் சுற்றிலும் இருந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவில் ஒரு பாராட்டு முகம் சென்று கொண்டிருந்தது. முக்கியமாக துறைமுகம் ஆள் என்று சொல்லிக்கொண்ட துரை மற்றும் அவர்களுடைய குழுவினர் அளவுக்கு மீறி இவர்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து ஒரு விபரீதம் வரும் என்கிற சந்தேகமிருந்தது.
தாஸ் ஒரு வேண்டுகோள் வைக்க, ஆலன் பாதியில் இருந்து அந்தப் பாட்டை எடுத்தான்.
‘கோட்டு சூட்டு போட்டு ஐயா அங்க போகல
எழுதி வச்ச சுருதி நோட்டு கோதாவுல தோக்கல
ஆசியா கண்டத்துல யாரும் இத செய்யல
கேள்விப்பட்ட தமிழனுக்கு நெஞ்சு இன்னும் அடங்கல’
என்பதில் ஆழ்ந்திருக்கும்போதுதான் அங்கிருந்து ஒரு நாற்காலி பறந்து வந்து பசுபதியின் மீது விழுந்தது. துரையும் ஆட்களும் குடித்து நிரம்பியிருந்தார்கள். அவர்கள் கேட்ட ஏதோ ஒரு பாட்டை பாடவில்லையாம். ஆலன் பாய்ந்து சென்று துரையை ஒரு அறை விட்டான். அவ்வளவு பெரிய உயரமும் விரிவும் ஆகிருதியும் கொண்ட சூரப்புலி துரை அப்படியே மல்லாந்து விழுந்தது வியப்பாக இருந்தது. ஆலன் எச்சரிக்கை செய்த தொனியும் கேள்விப்படாத காட்சியாகவே இருக்கும். இப்போது அவனுக்கும் இருப்பது நர போதையல்லவா? அது அந்தக் களத்தை நடுக்கியது. சட்டென ஒரு பல்டி போட்டு யாரையும் திடுக்கிட வைத்து எழுந்த துரை வாயைத் திறந்ததும் அண்ணா என்று பாந்தமாக விளித்து ஒரு சமநிலையைக் கொண்டு வந்தான். மன்னிப்பு கேட்டான். போதை அதிகமாகி என்னவோ ஒன்று தவறி விட்டதாக அவன் அதை விளக்க முயன்றான். கட்டிப்புடி, கட்டிப்புடி சம்பிரதாயம் துவங்கி அப்புறம் பிரிந்தார்கள்.
சாயந்தரமாகி விட்டிருந்தது.
ஆலனும் டேவிட்டும் சாமியும் லோகாவும் அவர்களுக்குத் தெரிந்த சிலருக்காக கேக்குகள் வாங்கினார்கள். அதைக் கொடுத்துவிட்டு வர போனார்கள். சிறுநீர் கழிக்க வேண்டி போன பசுபதி அந்த மைதானத்திலிருந்து திரும்பி, கோட்டர்சுக்கு எதிரே இருந்த கடைகளுக்கு அருகே வந்தான். பார்பர் ஷாப்பில் பேப்பர் படித்தான். பக்கத்து கடையில் டீ குடித்தான். பொழுது போக்காக உலகையும் வாக்காளப் பெருங்குடி மக்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் போது அவனுடைய கழுத்து இறுக்கப்பட்டது. பசுபதி அப்படியே மேலுக்குத் தூக்கப்பட்டான். விழிகள் பிதுங்கி நீர் கக்கியது. துரை தான் அதை செய்து கொண்டிருந்தான். மேலும் அதைத் தொடர முடியாமல் இறக்கிவிட்டு உடனடியாக எங்கிருந்தோ எடுத்த அந்தக் கத்தியை பசுபதி கழுத்தில் வைத்தான். பசுபதிக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே புரியாத அளவில் ஒரு கிறக்கம் கழட்டிக் கொண்டிருந்தது. இருப்பினும் துரை சொல்வது கேட்கிறது. “கோழியை அறுப்பது போல இப்போது உன் கழுத்தை அறுக்கட்டுமா?”
அவனுக்கு ஆலன் ஒரு கில்லாடி தானா என்பது தெரிய வேண்டும்.
அவனை நேரிடுவதில் ஒரு பயம் வந்துவிட்டது. அவன் ஆலனைக் கொல்ல விரும்புகிறான். அதே நேரம் போதையில் இதை எப்படி கேட்டுத் தெரிந்துகொள்ளுவது என்பதும் புலப்படவில்லை. சரியான ஒரு உணர்வு மிச்சம் இருக்கிறது என்றால் அது அந்தக் கத்தியில் மட்டுமே. அவன் பசுபதியை அறுக்க முயலும்போது தாசும் கடைக்காரர்கள் சில பேரும் சேர்ந்து புரட்டி விட்டார்கள். மேலும் பாய்ந்தவனைத் துரையோடு வந்தவர்களே தடுத்து அவனை அள்ளிச் சென்றார்கள். அவன் மிருகம் போல உறுமிச் செல்லுவது பசுபதிக்கு ஒரு மறக்க முடியாத காட்சி.
பேச முடிகிறதா என்று பரிசோதித்துக் கொண்டான். கொஞ்சம் கரகரத்து குரல் விடுபட்டது.
எல்லோரும் வந்ததும் வேறு ஒரு ஷாப்பில் குடித்தார்கள். அத்தனை பேரும் களைத்துப் போயிருந்தார்கள். பூங்காவனத்தை பாட விடவில்லை.
ரோட்டுக்கு வந்ததும் தான் நடந்த விஷயத்தை அறிந்தார்கள். அந்த துரை தன்னோடு இருந்தவர்களில் ஒருவனை அறுத்துப் போட்டிருக்கிறான். கோழியை அறுப்பது போலத்தான் அவன் அதைச் செய்திருக்கிறான். பசுபதிக்கு உள்ளே இருந்த நடுக்கம் வெளியேயும் வந்தது. உடனடியாக தோன்றிய உணர்வில், போனை எடுத்து பேச முற்பட்டான். தேவகி என்று அழைத்தான். போனை எடுத்தது மனைவி அல்ல, லதா; மகள். எட்டாவது வகுப்பு படிக்கிறாள். பாட்டி வீட்டுக்கு போயிருந்தாள். வீட்டுக்கு திரும்பி விட்டாள் போலும்.
“சீக்கிரம் வாப்பா. உன்னப் பாத்துட்டுதான் தூங்கனும்!”
ஆனால், பசுபதி வருவதற்குள் அவள் தூங்கிவிட்டாள். அவள் அருகில் படுத்து அவளுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு அவன் வெகு நேரம் அழுதான், அப்படியே தூங்கியும் போனான். இருட்டில் அவனைப் பார்த்துக் கிடந்த தேவகிக்கும் கண்ணீர் முட்டியது. அவனுடைய முதுகை அணைத்துக்கொண்டாள். நேற்று நடந்துவிட்ட அந்த முத்த சமாச்சாரம் இனிமேல் நடக்காது என்று தீர்மானித்துக்கொண்டாள். அந்த எண்ணம் வந்தபோதே அழுகை பெருகி வந்தது. ‘செல்லமே செல்லமே’ என்று அவனோடு ஒண்டிக்கொண்டாள்.
முறைப்படி இங்கே கதை முடிந்திருக்க வேண்டும்.
ஆனால், மறுநாள் லதாவை பள்ளிக்கூடத்தில் விட்டு வரப் போனவன் அப்படியே எங்கேயோ சென்றுவிட்டான். வழக்கப்படி இவள் போனில், “எங்கே இருக்கிறீர்கள்?” என்றதற்கு அவன், “அடச்சீ, போன வை” என்றுதான் சொன்னான். வேலை முடிந்து திரும்பியபோது படுக்கையில் தேவகி அந்த ஆளுடன் இருந்தாள். அப்புறம் என்ன? அவளை அவன் அறுத்துப் போட்டான்.
கோழியை அறுப்பது போல.
மணி எம் கே மணி <mkmani1964@gmail.com>