பாரதி மணி எனும் கரும்பு மனிதர்!

 பாரதி மணி எனும் கரும்பு மனிதர்!

 ஸிந்துஜா

 

பாரதி மணி அறிமுகமானது எனக்கு எப்போது? பழைய ‘காலச்சுவடு’ இதழ் ஒன்றில் எழுதியிருந்த, “நான் பார்க்காத முதல் குடியரசு தின விழா’ என்கிற கட்டுரைத் தலைப்பே வம்புக்கு இழுத்துப் படிக்கத் தூண்டிற்று. கட்டுரை நெடுகத் தளும்பிக் குதித்த நகைச்சுவையும் இசை பற்றிக் குறிப்பிடுகையில் காணப்பட்ட உணர்ச்சி வசப்படலும் என்னைக் கவர்ந்தன. கட்டுரை எழுதியவரின் பெயர் பாரதி மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சில வாரங்கள் கழித்து ஒரு புத்தகக் கண்காட்சியில், ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்ற புத்தகத்தின் அட்டையில் பாரதி மணி என்ற பெயரைப் பார்த்ததும் பழைய ஞாபகம் வந்தது.

தன்னை ஒரு எழுத்தாளராக ஒருபோதும் அழைத்துக்கொள்ளாத அல்லது அழைத்துக்கொள்ள விரும்பாத எழுத்தாளராகத்தான் அவர் இருந்து வந்திருக்கிறார். தனியாகவும் குழுவாகவும் சுய விளம்பரத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படும் இன்றைய எழுத்தாளர்களின் சமூகத்தில் இது ஆச்சரியமான நிகழ்வு.

அவருடைய முதல் புத்தகம் வெளிவந்த பின் அவருக்கு அமைந்த வாசகர் வட்டம், நகரங்களை மட்டுமல்ல மற்ற நாடுகளையும் சென்றடைந்தது அவருக்கு ஒரு விதக் கூச்சத்தை அளித்தது என்று அவருடன் எனக்குண்டான முதல் சந்திப்பில் (2017) நான் அறிந்தபோது, எனக்குக் கூச்சம் ஏற்பட்டது!

எழுத்து மூலமாக தனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்ததுதான் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை வழங்கிய விஷயம். நாடகம் தராத அன்பை, மரியாதையை அவருடைய புத்தகங்கள் கொண்டு வந்து தந்தன. சினிமாவில் நுழைந்ததும் இருந்ததும் பற்றிக் குறிப்பாகச் சொல்ல எதுவுமில்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அவர், சினிமாவை டவுன் பஸ்சுடன் ஒப்பிட்டார். “ஏண்டா தலையைக் கொடுத்தோம் என்று அதிருப்தியை ஏற்படுத்திய அனுபவங்கள்! ஹீரோவின் தாத்தா, ஹீரோயினின் தாத்தா என்று பாத்திரம் வரும். மூணாவது சீனில் இறக்கி விட்டுவிடுவார்கள். மறுபடியும் ஐந்தாவது சீனில் ஏறிக்கொள்ளச் சொல்லுவார்கள்” என்றார்.

மற்ற மொழிகளில் நாடகங்கள் ஏற்படுத்திய குடும்ப சமூக உறவுகளின் மீதான தாக்கத்தைத் தமிழில் காண முடியாமல் போனதற்குக் காரணம், நாடகங்கள் தம் முதுகில் சினிமாக்களைத் தாங்கிக்கொண்டு கோட்டை விட்டதுதான் என்றும் அவர் அபிப்பிராயம் கொண்டிருந்தார். பெங்காலியில் மராத்தியில் வரும் ஒரு பாத்திரம் நடுவில் தலையைக் காட்டிவிட்டு மட்டும் போவதில்லை. கதையம்சம், அந்தச் சிறு பாத்திரத்தையும் நாடகத்தின் இறுதிக் காட்சிகளில், அதன் முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டுப் போகும்படி அமைந்திருக்கும். தமிழில் நாடக இயக்குநர் சகலகலா வல்லவனாக கதை, வசனம், நடிப்பு, இயக்கம் என்று தன்னைக் காண்பித்து கொள்வதில் நாடகத்தின் இறுக்கமும் உயிர்த்தன்மையும் அவற்றின் இயல்பான வலிமையை இழந்து விடுகின்றன.

இதிகாச கதைகளை முன்வைத்து இயக்கப்பட்ட நாடகங்களின் காலத்திற்குப் பிறகு, சமூக அக்கறையுடன் எழுந்த நாடகங்கள், புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்கு இடம் கொடுக்காத காரணத்தினால் சபா நாடகங்களாகவும் சிரிப்புக் கொத்துக்களாகவும் தேய்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. இந்த ஜனரஞ்சகத்தை மறுத்து எழுந்த நாடக எழுத்து என்று இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ‘நந்தன் கதை’ ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். பாரதி மணியும் இந்திரா பார்த்தசாரதியும் ஒரே காலகட்டத்தில் தில்லியில் வசித்ததாலும்; ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’, ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமா’ ஆகிய முதல்தரமான நாடகப் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து நடிப்பு, குரல் வளம் ஆகிய துறைகளில் சிறந்த பயிற்சி பெற்று பாரதி மணி தலைநகரில் தன்னுடைய நாடக விஜயத்தை ஸ்தாபித்ததாலும் எழுந்த இரு மனங்களின் கூட்டுறவில், ‘மழை’ வெளிவந்தது. தலைநகரிலும் மற்ற இடங்களிலும் அந்நாடகம் பெற்ற வெற்றி அது மிகுந்த கவனிப்பைப் பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டியது.

‘மழை’ பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டில் அது அரங்கேறிய விதம் வருத்தம் தரும் நிகழ்வாக இருந்தது. பாரதி மணியின் சொற்களில், “தமிழ் நடிகைகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் இடம் தமிழகம். நாங்கள் தில்லியில் நாடகம் நடத்திய போது தமிழ் பெண் நடிகைகள் என்று யாரும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த அரசாங்க அதிகாரிகளின் மனைவிகள் அல்லது அவர்களது பெண்கள் ஆகியோரைச் சந்தித்து கதாநாயகியான நிர்மலாவின் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்தோம். வசன உச்சரிப்பு, முகபாவம், நடை உடை என்று எல்லாவற்றிலும் அகர முதல என்று ஆரம்பிக்க வேண்டியிருந்தது. கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் இறங்கி வெற்றியும் அடைந்தோம். ஆனால், தமிழ் நாட்டில் நடந்தது என்ன? அவர்களுக்கு உயிருள்ள தமிழ்ப் பெண் நடிகை யாரும் கிடைக்கவில்லை! பெண் குரலை ஒலிக்க வைத்து நாடகம் நடத்தினார்கள். இதற்கு யாராவது புதுமை என்று பெயரிட்டிருந்தால் அந்தக் கீழ்ப்பாக்க ஆளை நான் சந்திக்க விரும்புகிறேன்!” என்றார்.

நாடகத்தின் மேல் அவருக்குச் சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு ஏற்பட்டதற்குக் காரணம் அவர் தந்தையின் வீடு திருவனந்தபுரத்தில் ஒரு வேடந்தாங்கலாக இருந்ததுதான். எம்.கே.டி. பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. ஷண்முகம், ‘யதார்த்தம்’ பொன்னுசாமிப் பிள்ளை என்று பெரிய நடிகர் கூட்டம் தகப்பனாரைச் சுற்றி இருந்தது. அவர்கள் வந்து தங்கிவிட்டுச் செல்லும் போது மாடியில் அவர்களுக்குக் காப்பி டீ டிபன் கொண்டு போய்க் கொடுப்பதிலிருந்து தனக்கு நாடக ஆர்வம் ஏற்பட்டு வளர்ந்தது என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டே ஒரு தடவை கூறினார். ஒரு தடவை கோடை விடுமுறையின் போது, அவரது தகப்பனார் தன்னுடைய நெருங்கிய நண்பரான நவாப் ராஜமாணிக்கத்திடம், “இவன் லீவு நாளில் இங்கே வெறுமனே ‘மாடு மேய்ச்சிண்டு’ இருக்கறதுக்குப் பதிலா உங்களோட இருக்கட்டும்; இவனுக்கு நடிக்கவெல்லாம் வராது. உங்க கிட்டே கொஞ்சம் டிசிப்ளின் கத்துக்கட்டும்” என்று அனுப்பி வைத்தாராம். அதன்பிறகு நவாப் ராஜமாணிக்கம் எந்த ஊரில் இருந்தாலும் பின்வந்த மூன்று வருஷ கோடை விடுமுறைகளில் அவருடைய நாடகக் குழுவினருடன் இருந்து உடம்பை எப்படி ட்ரிம்மாக வைத்துக்கொள்வது, குரலில் எப்படி ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வருவது போன்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டிருந்திருக்கிறார்.

பாரதி மணி உடன் ஸிந்துஜா

திருவனந்தபுரம், நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு. அப்போது செம்மங்குடி சீனிவாச அய்யரின் பையன் கோபாலசாமி, தமிழ் எழுத்தாளர் நீல பத்மநாபன் ஆகியோர் இவரது வகுப்புத் தோழர்கள். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்த சர்டிபிகேட்டுடன் தில்லிக்கு ரயில் ஏறிச் சென்ற பாரதி மணி எம்.பி.ஏ. படித்து முன்னேறியது தில்லியில்தான்.

இலக்கியம், எழுத்து ஆகியவற்றுடன் தனக்கு அவ்வளவாக சம்பந்தம் இல்லை என்பது போல அவர் காட்டிக்கொள்ள முயன்றாலும் அவரைச் சுற்றி இருந்த எழுத்தாளர்களும் வாசகர்களும் தீவிர இலக்கியப் படைப்புகளுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தவர்கள். அவருடைய முதல் புத்தகமான “புள்ளிகள் கோடுகள் கோலங்களுக்கு’ முன்னுரை எழுதிய வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், வண்ணதாசன் என்னும் வரிசையைப் பார்க்கும் போது பாரதி மணியின் கூற்று உண்மை நிலைமைக்குச் சற்று அப்பால்தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. மௌனி, சி.சு. செல்லப்பா ஆகிய இருவருடன் மிக நெருங்கிய பழக்கம் கொண்டிருந்த அவரை இருவரும், “மாப்பிள்ளே!” என்றுதான் கூப்பிடுவார்கள் என்ற அவர், தன்னுடைய ஒரிஜினல் மாமனார் தன்னை அப்படி ஒருமுறை கூடக் கூப்பிட்டதில்லை என்று அழகியசிங்கருடன் நடந்த ஒரு பேட்டியில் கூறினார். தமிழின் சிறந்த விமரிசகரும் நாவலாசிரியரும் கவிஞருமான அந்த மாமனார் க.நா.சு.வின் பெயரை பாரதி மணி ஒரு சிபாரிசாகவோ அடையாள அட்டையாகவோ உபயோகப்படுத்தியதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அவரது இரு தொகுப்புகளைப் படித்து முடிக்கும் ஒரு வாசகர் மனதில் பாரதி மணி ஒரு ‘ஒன்–மேன்’ உதவும் கரங்கள் என்ற நினைப்பைத் தவிர்க்க முடிவதில்லை. பாரதி மணியின் உதவும் தன்மை ஏதோ வள்ளல் வகைப்பட்டதில்லை; யாசிக்கும் போது கொடுத்தருளுவது என்பது போல. முழுமனதுடன், அபிமானத்துடன், தேவை அறிந்து சிரத்தையுடன் சென்று உதவும் செயல்களாக நம்மை மணி செய்யும் உதவிகள் எதிர்கொள்கின்றன. ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ கட்டுரை தெரிவிக்கும் நுணுக்கமான மனித மன உணர்வுகள், சாதாரணர்கள் அவர்கள் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் படும் துயர்கள், அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் நிர்ப்பந்தங்கள் நெருடல்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு சீரிய மனிதாபிமானத்துடன் பாரதி மணி ஆற்றும் உதவிகள் நம்மை கலங்க அடிக்கின்றன. அவரது எழுத்தில் மிகைப்படுத்தப்பட்ட துக்கம், இரக்கம், புருவம் தூக்கல் இவை எதுவும் மருந்துக்குக் கூடக் காணோம் என்பதே உண்மை. அதுவும் இன்றைய தமிழின் சில உயரிய / சீரிய / இரக்க / துக்க / மனிதாபிமான தொழில் திறமை வழிந்து தள்ளும் சோக எழுத்துக்களிலிருந்து மணியின் எழுத்து வேறுபட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பாரதி மணியின் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் ஒரு வித எளிமையும் இனிமையும் காணப்பட்டன. மனிதர்களை நேசித்து நட்புப் பூணுவதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் எழுதிய கட்டுரைகளை விட அவரைப் பற்றிய கட்டுரைகள் அதிகமாக வெளிவந்தது அவர் நட்பைப் பேணிய விதத்துக்குச் சான்றாக இருக்கிறது.

எழுத்துக்களில் அவருக்கே பிரத்தியேகமான நகைச்சுவை மிளிர்வதை அவருடைய கட்டுரைகளில் காணலாம். அவருடைய திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றிய கட்டுரையில் ஒரு பகுதி:

நாம் வசிக்கும் அறையின் கொள்ளளவு கொண்ட பெரிய வெங்கல உருளிகளில்தான் சாம்பார், ரசம் வைப்பார்கள். இதற்குப் புளி கரைக்க, இரண்டு மூட்டை புளியை அப்படியே உருளியில் சாய்த்து, யானைக்கால், பித்த வெடிப்பு இல்லாத சமையல்காரர்களை, கால் கழுவிவிட்டு ஏணி வழியாக பிரும்மாண்டமான உருளிக்குள் இறங்க செய்வார்கள். சிறு வயதில் இதைக் கேள்விப்பட்ட நான், என் அப்பாவைக் கேட்ட குழந்தைத்தனமான கேள்வி: “அந்த சமயத்தில் அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்னப்பா செய்வாங்க?”

பாரதி மணியின் எழுத்துக்களைப் பற்றி என்னிடம் ஒருவர் சொன்ன கருத்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவரும் தில்லி ஆசாமிதான், எழுத்தாளரும் பத்திரிகைகாரரும் கூட. ஏன் பாரதி மணியின் நெருங்கிய நண்பர் என்றும் சொல்லிக்கொள்பவர். அவர் சொன்னார்: “மறைந்தவர்களைப் பற்றி உயிருடன் இருப்பவர்கள் ‘துதிப்பது’ இரண்டு விஷயங்களுக்காக. ஒன்று, உயிருடன் இருப்பவரின் எழுத்துக்களை பற்றி, நாடகங்களை பற்றி செத்துப்போன மனுஷன் சொல்லாத புகழ் ஆரங்களை எல்லாம் தன் மீது சூட்டிக்கொள்ள! செத்துப் போனவன் எழுந்து வந்து கேட்கப் போவதில்லை என்னும் தைரியம்தான். இரண்டாவது, மறைந்தவர் உயிருடன் இருந்த போது அவரது கஷ்ட காலத்தில் எல்லாம் நான்தான் கை தூக்கிவிட்டேன் என்று மார்தட்டிக் கொள்ள.”

உலகத்தில்தான் எவ்வளவு விதமான அபிப்பிராயங்கள்!

நான் பாரதி மணி காலமாவதற்கு மூன்று வாரம் முன்பு அவரது வீட்டிற்குச் சென்று அவரைப் பார்த்தேன். ஆள் மிகவும் தளர்ந்து விட்டிருந்தார். படுக்கையில் சாய்ந்தபடி அவரைக் கண்டது அதுதான் முதல் தடவை. அதற்கு முன் சந்திப்புகளில் கையில் பைப்புடன், வாயில் சிரிப்புடன், கண்களில் குறும்புத்தனத்துடன் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசிய தருணங்கள் நினைவுக்கு வந்து துன்புறுத்தின. முகநூலில் எங்கள் சந்திப்பைப் பற்றி எழுதும் போது, “ஸிந்துஜா வீட்டிற்கு வந்திருந்தார். வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதாவது வெகுநேரம் நான் பேசிக்கொண்டிருந்தேன்!” என்று எழுதினார்.

அன்றும் நான் அவரைப் பார்க்கச் சென்றபோது, “எதற்கு மிகுந்த தொலைவிலிருந்து அவரைப் பார்க்க வந்தேன்?” என்று கேட்டவர், “ஆனால், எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, இப்படி வந்து பார்த்தது” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். இரண்டாவது புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆனால், காலன் வாசல் படியில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தவராக, “வயசும் ஆயிடுத்தே. இருந்த வரைக்கும் சந்தோஷமாக இருக்க கடவுள் அனுமதி கொடுத்தானே, அதுதான் எனக்கு கிட்டிய பெரிய பாக்கியம்” என்றார்.

போய் வாருங்கள் பாரதி மணி! உங்கள் புத்தகங்கள் உங்கள் அருகாமையை உணர்த்துவனவாக புத்தக அலமாரியிலிருந்து என்னைப் பார்த்து கொண்டிருக்கின்றன.

ஸிந்துஜா <weenvy@gmail.com>

 

Amrutha

Related post