லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்
![லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்](https://amruthamagazine.com/wp-content/uploads/2022/03/Chaitali_Chatterjee-In_the_woods-min-1-850x560.jpg)
ஓவியம்: சைதாலி சாட்டர்ஜி
1. மீராவைப் போலொரு மயிலிறகு
வேணு கானம் கேட்ட
மயிலொன்று
கொத்திக் கொண்டிருந்த
பயிர்களை விடுத்து
ஒருகணம் நிமிர்ந்து
மீன் சிக்கிய தூண்டில் போல
கழுத்தை அசைத்தது
தன் மனங்கவர் கள்வனின் குரலுக்குப் பரிசாக
மயில்கண் ஒன்றை
விட்டுச் சென்றது
தோகையிலிருந்து பிரிந்த மயிலிறகு
கானம் எழும்போதெல்லாம்
பறந்தெழுந்து
கொண்டல் வீசும் வெளியெங்கும்
விம்மி விம்மித் திரிந்தது
குழல் கொண்டவன்
கரங்களை சேர
மண்ணில் புரண்டு தவித்தது
கண்ணன் கைகளில் தவழும் நாளையெண்ணி
தன் மேனியைக் கழுவிப் பேண
நீரில் மிதந்து அலைபாய்ந்தது
இறுதியில் வந்த மாயன்
விரல்களில் எந்திய மயிலிறகை
ஏறிட்டு ஒருகணமும் பாராமல்
தன் தலைக் கீரிடத்தில்
செருகிப் போனான்
‘இதற்குத் தானா’ என்றடங்கியது
மயில் கண்.
2. மிதக்கும் எண்ணங்கள்
விரிந்து பரந்த பிரபஞ்சம்
விளிம்பற்ற பாழ்வெளி
அதனுள் ஆழி சூழ் உலகு
பூமி மேலே சராவதி நதி
நதி மேலே நகரும் படகு
படகின் மேலொரு பேருந்து
அதன் எல்லா இருக்கைகளிலும்
மனிதர்கள்
அம் மனிதர்களிடத்தே
தளும்பி நிற்கும்
தனித்தனி மனங்கள்
ஒவ்வொரு மனதிலும்
ஓராயிரம் எண்ணங்கள்
படகு அக்கரை அடைந்ததும்
தரையிறங்கிப் போகும் மனிதர்கள்
தனித்து நடக்க
சிறகுமுளைத்த சிந்தனைகளோ
அவர்களை எடையற்று
பறக்கச் செய்தது
3. முடிவிலி காதல்
வனமொரு வண்ணமிழைக்கும் தூரிகை
பெயரறியா நடனதேவதையின்
அருவமான அசைவுகளை
உருவமாய் தீட்டுகிறது
மரங்களில் கிளைக் கைகள்
இன்னும் அரங்கேற்றாத அடவுகள் அவை
பசும் ஆழத்தில்
கண்ணெட்டாத தூரத்தில்
காற்றோ மூங்கிலோ வண்டுகளோ
புரியாத ராகங்களை இசைத்தது
எத்தனை முறை கேட்டாலும்
ஒரே ஒருபுள்ளியில்
வேறுபடும் QR code
போன்றவை அவை
எல்லாம் ஒன்று போலும்
என்றாலும் வேவ்வாறனவை
சிலசமயம்
இலைகளையும் மலர்களையும் உதிர்த்துவிட்டு
பல்வேறு நிறத்துப் பறவைகளைப்
பூத்த மரங்களை
சிலையென வடித்து வைத்திருக்கும்
எல்லாம் சரி காடென்பது
பசுமையா மரங்களா மலர்களா
கண்ணால் காண்பதும்
காதால் கேட்பதும் அல்ல
வனம்
அது காலம் காலமாய் தொடரும்
முடிவிலி காதல்
4. குட்டி பட்டாசு
நயரா பளிகிரனே என்ற
குட்டி பட்டாசுக்கு எல்லாமே ஆச்சரியம் தான்
பயணவெளியில் திரியும் எருமை
கண்ணை விரித்து சின்னதாய் வெடித்துக் குதிக்கும்
திருமண நிகழ்வில்
விதவிதமான திண்டிகளை இடக்கையால் தள்ளிவிட்டு
ஐஸ்கீரிமில் குளிக்கும்
ஐந்தாறு தின்றபின் தடுக்கும் போது
முறைத்து வெடிக்கும்
தட்டிவிட்டேன் என்று குதித்து பெரிதாய் ஓலமிடும்
அப்பாவின் காலில் அடிபட்டு விட்டது
அழுது கொண்டே விம்மி வெடிக்கும்
பிறகு அடிப்பட்ட அப்பாவை போல்
நடந்து காட்டி சிரிக்கும்
சாக்லேட் கொடுத்தால் வாங்கிக் கொண்டு குதிக்கும்
அதில் கிருஸ்மஸ் தாத்தா வடிவில் இருக்கும்
இனிப்பை எப்படிச் சாப்பிடுவது என்று தவிக்கும்
தினமும் ஒருமுறையேனும்
குரங்குக் குட்டி போலத்
தோளைத் தொற்றிக்கொள்ளும்
குட்டி பட்டாசு கூட இருக்குமந்த
இரவல் நேரம்
இரவு வீட்டுக்கு வந்த பின்னும்
என் தனிமையில்
வெடித்துக் கொண்டேயிருக்கும்
லாவண்யா சுந்தர்ராஜன் <lavanya.sundararajan@gmail.com>