அஸ்கர் ஃபர்ஹாதி நேர்காணல்

 அஸ்கர் ஃபர்ஹாதி நேர்காணல்

நாயக பிம்பத்தை நீண்ட நேரத்திற்கு சுமந்துகொண்டிருக்க முடியாது!

தமிழில்: ராம் முரளி

 

ரானிய இயக்குநரான அஸ்கர் ஃபர்ஹாதியின் புதிய படமான ‘‘A Hero’’வைப் பார்த்து நிறைவுசெய்யும்போது கனத்த மெளனமே நம்மை ஆட்கொள்வதாக இருக்கிறது. கிட்டதட்ட கைவிடப்பட்ட நிலையை பார்வையாளர்கள் உணரும்படியாக இப்படம் உருவாகியிருக்கிறது. உண்மையென்றும் பொய்யென்றும் வரையறுக்கப்படும் சொல்லாடல்களின் பல பரிமாணங்களை இதில் நாம் பார்க்க நேரிடுகிறது. அந்த உண்மையினுள்ளும் பொய்களினுள்ளும் பார்வையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதனாலேயே, ஒரு நிகழ்வின் பல கோணங்கள் காண்பிக்கப்பட்டும் தெளிவுற தீர்மானங்களுக்குள் நகர முடியாமல் படத்தின் இறுதியில் மெளனித்துவிடுகிறார்கள்.

முழு முற்றான உண்மையென்று ஒன்றிருக்க முடியுமா என்றே இத்திரைப்படம் கேள்வியெழுப்புகிறது. ஒரு எளிய மனிதனின் அன்றாட வாழ்க்கையிலிருந்து சிறு பகுதியை ‘A Hero’வில் நாம் பார்க்கிறோம். அவன் மீது ஏற்றப்பட்டிருக்கும் கடன் சுமை, அந்தக் கடனைத் தீர்க்க அவன் தேடும் வழிமுறைகள், அத்தகைய பிரயத்தனங்களில் உடன் பயணிக்கும் மனிதர்கள், நேர்மையை ஒரு தேர்வாகக் கைக்கொள்ளும்போது அவன் மீது கட்டமைக்கப்படும் நாயகப் பிம்பம், மிக விரைவிலேயே அந்தப் பிம்பம் தலைக்கீழாக்கப்படுதல், தான் உண்மையாகவே ஒரு நேர்மையான மனிதன்தானா எனும் குழப்பங்களுக்குள் அவன் வீழ்வது என ஒரு சூழலின் தொடர் நிகழ்வுகள் யதார்த்தமாகவும் நிஜ உலக தர்க்கங்களுக்கு உட்பட்டும் இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது.

எந்தெந்த செய்கைகளையெல்லாம், அறத்தையோ சாதமான விளைவுகளையோ ஒரு மதிப்பீடாக வைத்து ஒருவரைத் தராசில் மேலேற்றுகிறோமோ, அதே விழுமியங்களை வைத்தே மற்றொரு கோணத்திலிருந்து அதே செய்கைகளுக்காக அவரைக் கீழிறக்கவும் முடியும் என்பதை இத்திரைப்படத்தில் நாம் உணருகிறோம். சமூக ஊடகங்களும் இந்தச் சாதக / பாதக விளைவுகளில் பெரும் பங்களிப்பு செய்துவருகின்றன.

நவீன ஈரானிய திரைப்படைப்பாளிகளுள் உலகம் முழுக்க பெரும் கவனம் பெற்றிருப்பவர் அஸ்கர் ஃபர்ஹாதி. இவருடைய அனைத்து திரைப்படங்களிலுமே மேற்கண்ட கூறுகள் பேசுபொருளாக இருந்துள்ளன. நவீன ஈரானியச் சூழலமைப்பிற்குள் ஆண் – பெண் உறவு சிக்கல் என்னவாக இருக்கிறது, வெவ்வேறு சமூக அடுக்குகளில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கிடையிலான உறவுநிலை, அதனுடைய இணக்கத்தன்மை, முரண்பாடுகள் ஆகியவையும் அவருடைய படங்களில் மையமாக இருந்துள்ளன. அவரது முந்தைய திரைப்படங்களான ‘ ‘A Separation’’, ‘The Salesmam’ ஆகிய திரைப்படங்களுக்காக இருமுறை ஆஸ்கர் விருதைப் பெற்றவர். 2021இல் வெளிவந்திருக்கும் ‘A Hero’ திரைப்படமும் ஆஸ்கர் போட்டியிலிருந்ததோடு, ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதைப் பெற்றிருக்கிறது. அஸ்கர் ஃபர்ஹாதியிடம் ‘A Hero’ திரைப்படத்தை முன்வைத்துத் திரை விமர்சகர்கள் மார்ஷல் ஷஃபர், கெவின் லீ மேற்கொண்ட இருவேறு நேர்காணல்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட கேள்விகளின் மொழியாக்கமே இது.

‘A Hero’ திரைப்படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களை எவ்வாறு எழுதினீர்கள்? ஏனெனில், ஒவ்வொரு கதாபாத்திரமும் திரையில் பல அடுக்குகளைக் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு நெருக்கடியான சூழலை மனதில் இருத்திக்கொண்டுதான் இந்தக் கதையை எழுதத் தொடங்கினேன். அந்த நெருக்கடிக்குள் கதாபாத்திரங்களைப் புகுத்தினேன். அதன்பிறகு, அத்தகைய நெருக்கடியான சூழலை எதிர்கொள்வதன் மூலம் தாங்கள் உண்மையிலேயே யார், எத்தகையவர்கள் என்பதைக் கதாபாத்திரங்கள் காண்பித்துவிடுவார்கள். இதை செய்யாமல், என்னால் எந்தவொரு கதாபாத்திரத்தையும் பார்வையாளர்களின் முன்னால் நடமாடச் செய்ய முடியாது. நிஜ உலக மனிதர்களும் நெருக்கடியை எதிர்கொள்ளும்போது தங்களுடைய மற்றுமொரு கோணத்தை, முகத்தை வெளிப்படுத்தவே செய்கிறார்கள். தங்களுக்குள்ளாகவே முரண்களையுடைய கதாபாத்திரங்கள் உள்ள திரைப்படங்களையே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதற்கு மாறாகவே அவர்களுடைய செயல்கள் இருக்கும். அவர்களுடைய தவறுகளைப் பார்க்கக்கூடிய அதே நேரத்தில் அவர்களின் மீது நமக்கு பரிவுணர்ச்சியும் உண்டாகிவிடும்.

எழுத்தாக்கப் பணியின் தொடக்கத்திலோ எழுதும்போதே வெளிப்படையாகப் புலனாகாத, அதேசமயம் உள்ளார்ந்த அமைந்திருக்கும் நோக்கங்கள் எதையும் மனதில் இருத்திக்கொள்வீர்களா?

ஒரு கதாபாத்திரம் தன்னைப் பற்றி வெளிப்படுத்திக்கொள்வதற்குப் போதுமான நேரத்தை (காட்சிகள் நகர நகர) அவர்களுக்கு நான் வழங்குவேன். அதேபோல, அவர்களை நேசிப்பதற்கான உணர்வு ரீதியிலான வெளியைப் பார்வையாளர்களுக்கும் வழங்கியிருப்பேன். இந்தக் கால அவகாசமும் வெளியும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் எதற்காகச் செய்கிறோம் என்பதையும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகத்தான். பிரதான கதாபாத்திரத்திற்கு மட்டுமல்லாமல், எதிர்மறையான கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும். எந்தளவுக்கு மையக் கதாபாத்திரத்தின் மீது நமக்கு இரக்கமும் பரிவுணர்ச்சியும் ஏற்படுகிறதோ, அதே அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்திற்குச் சிக்கல் ஏற்படுத்தக்கூடியவர்களின் மீதும் நமக்கு அனுதாபம் ஏற்படக்கூடிய அளவுக்குத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் திரைப்படத்தில், சில குறைபாடுகளுடைய, அதே நேரத்தில் நல்ல செயலைச் செய்யக்கூடிய, ரஹீம் ஒரு நல்ல மனிதர் என்பதை ஏற்றுக்கொள்வது பார்வையாளர்களுக்கு மிகக் கடினமாக இருக்கிறது. தற்காலத்தில் இத்தகையதொரு சிக்கலைத்தான் நாம் எல்லோரும் எதிர்கொள்கிறோம் என்று நினைக்கிறேன். எது உங்களை இந்தக் கருத்தாக்கத்தை ஆராய்ந்து பார்க்கத் தூண்டியது?

இந்தக் கதையை எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் தூண்டுதலாக இருந்தன. எனினும், என் முன்னாலிருந்த முதன்மையான சவால் என்னவென்றால், துப்பாக்கி இல்லாமல், கொலை இல்லாமல் அல்லது இதுபோன்ற எதுவுமில்லாமல் ஒரு திரைப்படத்தை மிகச் சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்கிற கேள்விதான். மேலும் இது மிக மிக எளிமையான, எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு கதை. அதை எப்படி ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாகத் தொகுப்பது? கதையை வளர்த்தெடுப்பதில் என்முன்னாலிருந்த சிக்கலே இதுதான். ‘A Hero’ முழுக்க முழுக்க ரொம்பவும் தினசரித்தன்மையிலான ஒரு கதை; தினமும் நாம் பார்க்கக்கூடிய, கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய, வாசத்தறியக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக்கமே இது. இத்திரைக்கதையின் எழுத்தாக்கப் பணியின் மீது சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாகவும் இதுவே இருந்தது. எனது ஆர்வத்தைக் கிளர்த்திய மற்றொரு விஷயம்: இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கின்றபோது பார்வையாளர்களின் தீர்மானம் என்னவாக இருக்கும்? ரஹிம் கதாப்பாத்திரத்தை அவர்கள் எவ்வாறு பார்க்க போகிறார்கள்? குற்றவுணர்ச்சியுடைய மனிதனாக ரஹிமை அவர்கள் பார்க்கப் போகிறார்களா? அல்லது அப்பாவி எனக் கருதப் போகிறார்களா? படத்தில்கூட ஒரு வரி வருகிறது. யாரோ ஒருவர் ரஹிமிடம், “நீ ஒன்று புத்திசாலியாக இருக்க வேண்டும் அல்லது எளியதொரு மனிதனாக இருக்க வேண்டும்” என்பார். பார்வையாளர்களும் தமக்குள் இருதரப்பாகப் பிரிந்து, ரஹிம் புத்திசாலி என்று ஒருதரப்பும், அவர் ரொம்பவும் எளிமையானவர் என்று இன்னொரு தரப்புமாக நிற்பார்கள்.

A Hero

‘எளிமை’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உங்களை பாராட்டுகிறேன். நீங்கள் இந்தக் கதையைப் பிறரிடத்தில் எளிய கதை என்று அறிமுகப்படுத்தும்போதும் பரிந்துரைக்கும்போதும் அது எளிய கதைபோன்றே தோற்றமளிக்கிறது. ஆனால், சிறிது ஆழமாகப் பார்த்தால், அதற்குள் ஏராளமான அடுக்குகளும் விவரிப்புகளும் இருக்கின்றன. வளமான கருத்தியல் இருக்கிறது. சிக்கலான பல கருப்பொருட்கள் இருக்கின்றன. உங்கள் படைப்பாக்கச் செயல்பாடு குறித்து சிறிதளவில் பகிர்ந்துகொள்ள முடியுமா? எளிமையையும் சிட்டுக்குத்தன்மையையும் எவ்வாறு பிணைக்கிறீர்கள்?

முன்பே சொன்னதுபோல அடிப்படையில், இது எளிய மனிதனொருவனைப் பற்றிய கதை. மிகச் சிறிய தவறு ஒன்றைச் செய்வதன் மூலமாகச் சிக்கலான ஒரு சூழலுக்குள் அவன் வீழ்ந்துவிட நேரிடுகிறது. இந்தத் தருணத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கக்கூடிய ஒவ்வொரு நபரின் மூலமாகவும் அந்தத் தருணம் கூடுதல் சிடுக்குத்தன்மையை அடைகிறது. பார்வையாளர்களும் தங்கள் முன்னால் இருக்கின்ற இந்த எளிய தருணம் பல கோணங்களிலிருந்து விவரிக்கப்படுவதை எதிர்கொள்கிறார்கள். இப்போது யோசித்துப் பார்த்தால், வேறுபட்ட கதைசொல்லல் முறையின் மூலமாக எளிய தருணம் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது. அதோடு, பெரிய திருப்பங்களோ அசாத்தியமானவையோ நிகழாததாலும் இவ்வாறு ஆகியுள்ளது. இத்தருணம் முழுக்க முழுக்க யதார்த்தத்தில் நிகழக்கூடியதே. நான் வலிந்து இதனை சிக்கலான ஒன்றாக மாற்றவில்லை. கதையின் ஆன்மாவே அவ்வாறு அதை வடிவமைத்துக்கொண்டுள்ளது.

அற்புதம்! இந்த எழுத்தாக்கப் பணியில் எது மிகவும் கடினமான பகுதியாக இருந்தது?

மிகப் பெரிய சவாலே, கதாபாத்திரத்தை நல்லவர் என்றோ தீயவர் என்றோ நான் பிரிக்க விரும்பாததுதான். பார்வையாளர்கள் சுயமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் புரிந்துகொள்வதற்கு முன்னதாக, எந்தவொரு முன் முடிவுகளையும் அவர்கள் மீது திணித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எனது சொந்த நிலைப்பாட்டையும் தீர்மானங்களையும் எழுத்தாக்கப் பணியிலிருந்து விலக்கிவிட்டேன். இது ரொம்பவும் கடினமான ஒன்றுதான். ஒரு கதாபாத்திரத்தை முன் தீர்மானித்துவிட்ட எழுத்தாளர், திரைப்படத்திற்குப் பின்னாலிருந்து விவரிப்பு செய்துகொண்டிருப்பதைப்போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவிடலாம். இதைத் தவிர்க்க வேண்டுமென்பதில் கவனத்துடன் இருந்தேன்.

பொதுவாக நாம் ஒரு திரைப்படத்தை மையக் கதாபாத்திரத்தின் கண்களின் வழியாகவே பின்தொடர்ந்து செல்வோம். ஆனால், உங்கள் திரைப்படங்களில் பிற கதாபாத்திரங்கள் செய்யக்கூடிய செயல்களுக்கான நியாயங்களையும் நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இத்தகைய பாணியை முயன்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வத்திலிருந்துதான் இந்தத் திரைப்படம் உருவாகியதா? திரைப்படத்தின் பெயர்கதாநாயகன்’ என்று இருக்கிறது. ஆனால், முரண்பாடாக, திரையில் தோன்றக்கூடிய கதாபாத்திரங்களை அவரவர்களுடைய தரப்பிலிருந்து பார்க்கும்போது ஒவ்வொருவருமேகதாநாயகர்களாக’ இருக்கிறார்கள் என்பதையே நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்?

‘ஹீரோ’ எனும் வார்த்தையைக் கேட்கும்போது, தான் சார்ந்த முடிவுகளைச் சுயமாக எடுக்கின்ற கதாபாத்திரமே நமக்கு நினைவுக்கு வரும். அவர்கள் யதார்த்தவாதிகளாகவும் வலிமையானவர்களாகவும் இருப்பார்கள். பார்வையாளர்கள் தங்களை அவர்களுடைய இடத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்கும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் அவ்வாறு இருப்பதில்லை. குறிப்பாக, இக்காலத்தில் நாயகப் பிம்பத்தை நீண்ட நேரத்திற்குச் சுமந்துகொண்டிருக்க முடியாது. சில கணங்களில் கலைந்து கரைகின்ற ஒரு அரிதாரத்தைப்போலத்தான் நாயகப் பிம்பம் இக்கால யதார்த்த உலகில் இருக்கிறது. இங்கு, திரைப்படத்தில் நாமொரு கதாப்பாத்திரத்தைப் பார்க்கிறோம். ஆனால், யாருமே அவருடைய நிலையில் இருக்க விரும்புவதில்லை. ஏனெனில், அவன் தான் சார்ந்த முடிவுகளைச் சுயமாக எடுப்பதில்லை. அவனொரு வளைந்துகொடுக்கக்கூடிய மனிதன். அவன் சார்பாக பிறர்தான் முடிவுகளை எடுக்கிறார்கள். இறுதியில் மட்டுமே ஒரு விதிவிலக்கு ஏற்படுகிறது. தனது மகன் முன்னால் ஒரு தீர்மானத்தை எடுத்து அவன் நாயகனாகிவிடுகிறான். அவனொரு உறுதியற்ற மனிதன் என்றாலும் அவன் மீது நமக்கு பரிவுணர்ச்சி ஏற்படுகிறது. அவனொரு சாதாரண மனிதன் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பிறர்தான் அவனை ஒரு முக்கிய நபராகவோ கதாநாயகனாகவோ மாற்றுகிறார்கள். உதாரணத்திற்கு, உள்ளூர் மக்களின் மத்தியில் அவன் பிரபலமாக அறியப்படும்போது அவனுடைய தங்கை, புகை பிடிக்கும் பழக்கத்தை அவன் கைவிட வேண்டுமென தெரிவிக்கிறாள். அவனுடைய ‘நல்ல மனிதன்’ பிம்பத்திற்கு இது பொருத்தமற்றது என்பது அவளுடைய கருத்தாக இருக்கிறது. உறவினர் ஒருவர் நல்ல உடைகளை அவன் உடுத்தியாக வேண்டுமெனக் கருத்துரைக்கிறார். செய்தித்தாள்களின் வாயிலாக உருவாகியிருக்கிற அவனுடைய பிம்பத்திற்கு ஏற்றாற்போல, யதார்த்தத்திலும் அவனை மாற்ற வேண்டுமென அவர்கள் பிரயத்தனப்படுகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் சமூக ஊடகத்தின் பங்களிப்பை எவ்வாறு தீர்மானித்தீர்கள்?

எழுதத் தொடங்கியபோது இது சமூக ஊடகம் தொடர்புடையதாக இருக்குமென நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தக் கதையில் உள்ள மனிதர் எவ்வளவு விரைவாக நாயகனாகிறான், அதிலிருந்து எவ்வளவு வேகமாகக் கீழிறக்கப்பட்டு எதிர்மறை பாத்திரமாகக் கருதப்படுகிறான் என்று நினைக்கும்போது இதை சாத்தியப்படுத்தக்கூடிய கருவி பற்றி யோசிக்கத் தொடங்கினேன். செய்தித்தாள், தொலைக்காட்சியைக் கடந்து சமூக ஊடகமும் ஒரு மனிதரின் புனிதப் பிம்பத்தை கட்டமைக்கவும் கலைத்து நொறுக்கவும் பெரும் பலமான ஒரு கருவியாக செயல்படுவதை அறிந்துகொண்டேன். அந்தத் தருணத்தில்தான் சமூக ஊடகம் கதையில் சேர்க்கப்பட்டது. இது சமூக ஊடகம் குறித்ததொரு முழுமையான விமரிசனம் அல்ல; ஏனெனில், சமூக ஊடகத்திற்கு மற்றொரு நேர்மறையான பக்கமும் இருக்கிறது. உதாரணத்திற்கு, இதற்கு முன் நாம் அறிந்திராத பல குரல்களை நாம் கேட்கும்படி செய்கிறது. எனினும், ஏராளமான குரல்கள் அவ்விடத்தில் குவிந்திருப்பதால் மிக எளிதாகவே தப்பர்த்தங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் அது வழிவகுத்துவிடுகிறது. மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு பிரச்சனையைச் சமூக ஊடகம் அதற்குரிய முக்கியத்துவமற்று, குறைவான சொற்களின் வழியாக அணுகுகின்றது. உண்மையை அறிந்துகொள்ளும் செயலாக்கத்தில், அதுவொரு குழப்ப நிலையையே தோற்றுவிக்கிறது.

சமூக ஊடகம் செயல்படும் விதத்தைத் திரைப்படத்தில் சேர்க்க வேண்டாமென ஏன் பிடிவாதமாக இருந்தீர்கள்?

எனக்கு அதைத் திரையில் காட்டுவதில் விருப்பமில்லை. விளைவுகளை மட்டுமே நான் பார்க்க விரும்பினேன். இந்நாட்களில் சமூக ஊடகம் குறித்த ஏராளமான பிம்பங்களைத் திரைப்படங்களில் நாம் பார்க்கிறோம். ஆனால், நான் இத்திரைப்படத்தில் ஆராய விரும்பியது, அதனுடைய விளைவுகளை மட்டுமே.

உங்கள் திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டுமென்பதற்காக ஆவணப்படம், திரைப்படங்களின் கூறு முறையை ஒன்று கலப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். ‘A Hero’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப்போல, ஒரு திரையை இரண்டாகப் பிரித்து இருவேறு செயல்களைக் காட்டும் முடிவுக்கு எப்படி வந்துசேர்ந்தீர்கள்? அக்காட்சி ஓவியத்தின் அழகியலைக் கொண்டிருந்தது.

பார்வையாளர்கள் இதுவும் வாழ்க்கையும் ஓர் அங்கம்தான் என நம்புவார்கள் என்றால், அதை நான் திரைப்படத்தில் சேர்ப்பேன். ஒருவேளை, ‘இதை இயக்குநர் சேர்த்திருக்கிறார்’ என உணருவார்களேயானால் நான் அதை திரைப்படத்தில் இருந்து நீக்கிவிடுவேன். இறுதிக் காட்சியைப் பொறுத்தவரையில் பார்வையாளர்கள், தினசரித் தன்மையிலான வாழ்க்கையில் நடைபெறக்கூடிய ஒன்றுதான் அது என நம்புவார்கள் என்பதே என்னுடைய நம்பிக்கையாக இருந்தது. அது ரொம்பவும் திட்டமிடப்பட்ட ஃபிரேம். ஒரே நேரத்தில் ஒரே திரையில் அருகருகில் வெவ்வேறு செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், ஒளி, நடிப்பின் வாயிலாக, அதையொரு யதார்த்தச் சூழலென்றே கருதும்படியாக உருவாக்க முயன்றிருக்கிறேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முன்கதையைத் தயாரித்து வைத்துக்கொள்வது பற்றி முன்பொரு நேர்காணலில் சொல்லியிருந்தீர்கள். அதுவொரு மிக நீண்ட பணியாக இருப்பதையும் திரைப்படத்தில் அவையெல்லாம் சொல்லப்படாது என்றாலும் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளை வடிவமைப்பதில் அவை பயன்படும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஒரு செயலில் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்களோ அந்தளவு அந்தச் செயல் செழிப்புறுகிறது எனும் பாடத்தைப் பல்கலைகழக்கத்தில் பயின்றபோது எனது ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அது கிட்டதட்ட வைன் தயாரிப்பதைப் போன்றது. தரமான வைன் தயாரிப்பதற்கு நீண்ட காலத்தைச் செலவிட வேண்டும். அதனால், குறுகிய காலத்தில் திரைக்கதை எழுதுவது குறித்து என்னால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை.

கதையை உருவாக்கும் காலகட்டத்தில், எந்தளவுக்கு கதையிடமிருந்து விலகியிருக்க முயல்வீர்கள். ஏனெனில், கதை உங்கள் மனதிற்குள்ளாகத் தேங்கியிருக்கும். அது வடிவம் பெறுமா பெறதா என்பதும் உறுதியாகியிருக்காது.

பொதுவாக, ஒரு கதையை அமர்ந்து எழுதத் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அதை மனதில் சுமந்துகொண்டிருப்பேன். சில நேரங்களில் நான் அதை விரும்புவேன். சில நேரங்களில் அதன் மீது எனக்கு வெறுப்பு உண்டாகும். இத்தகைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில், ஒருநாள் ஒருவரை நேசிக்கிறீர்கள், மறுநாளே அவரை வெறுக்கிறீர்கள் என்பதைப்போன்ற உணர்வுநிலையில்தான் நான் இருப்பேன். நேசித்தலுக்கும் வெறுத்தலுக்கும் இடையிலான ஒரு சூழல்தான் அப்போது இருக்கும்.

(கேள்வியாளர் சிரிக்கிறார்)

அதன்பிறகு, அந்தப் பெண்ணுடன் டேட்டிங் செல்கிறீர்கள். அவளிடம், “இப்போது நாம் வெளியில் சென்று ஒரு காஃபி அருந்தலாம்” என்று சொல்கிறீர்கள். இதன் தொடர்ச்சியாக, அவளிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துகிறீர்கள். அதனால், இந்தக் காதல் ஒரே இரவில் மலர்ந்த ஒன்றல்ல. மிக நிதானமாக மனதில் அசைபோட்டு, மெது மெதுவாக இந்தக் காதல் உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது. ஒரே இரவில் மலரும் காதல் வெகு விரைவிலேயே காணாமலாகிவிடும்.

(அஸ்கர் ஃபர்ஹாதி சிரிக்கிறார்)

A Separation

உங்கள் பதில் அருமையாக இருந்தது. ‘A Separation’ திரைப்படத்தை முதல்முறையாகப் பார்த்த நாளினை நினைத்துக்கொள்கிறேன். அந்த திரைப்படம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. கதை சொல்லல், திரைப்பட உருவாக்கம் சார்ந்து எனக்கிருந்த பார்வையையே அப்படம் மாற்றியமைத்துவிட்டது. நான் மிக நேசித்த படமாகவும் அது இருக்கிறது. அதனால் எந்தெந்த இயக்குநர்கள் உங்களுக்குப் பெரும் உந்துதலாக இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். நீங்கள் திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கிய காலத்திலோ அல்லது தற்சமயத்திலோ உங்களுடைய விருப்ப இயக்குநர்களை, திரைப்படங்களை, எழுத்தாளர்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தொடர்ச்சியாக உங்களுக்கு உந்துதல் அளிக்கின்ற மனிதர்களும் திரைப்படங்களும் கதைகளும் இருக்கவேதான் செய்யும். கதை சொல்லுதலின் மீதான எனது ஆர்வத்தைக் கிளர்த்தியதில் எனது தாத்தாதான் மிக முக்கியமானவர். அவர் ஒரு கலைஞன் அல்ல. ஆனால், ஏனையோரைத் தன் முன்னால் மெளனமாக அமர்ந்து, தான் சொல்லும் கதைகளுக்கு மனம் வசப்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதன்பிறகு சில ஈரானிய திரைப்பட இயக்குநர்களின் படங்களைப் பார்க்கத் தொடங்கியதும் திரைப்படங்களின் மீது எனக்கு ஆர்வமேற்பட்டது. அப்போது நான் இளைஞனாக இருந்தேன். மெல்ல மெல்ல வயது கூடக்கூட இத்தாலிய நியோ ரியலிச திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவை என்னை பெரியளவில் கவர்ந்தன.

மூன்று திரைப் படைப்பாளிகள் என் மீது ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். விட்டோரியா டி சிகா, பில்லி வைடர், பெலினி. அதன்பிறகு…. பெர்க்மேன், குரோசாவா எனக் காலங்களில் அந்தப் பட்டியல் பெருகியபடியே இருந்தது.

உங்களுடைய ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து நிறைவு செய்ததற்குப் பிறகு எனக்குள் எழும் கேள்வியொன்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். உங்களிடம் இதற்கான பதில் இருக்குமென்று நம்புகிறேன்: ஏன் மனிதர்கள் பொய்யுரைக்கிறார்கள்?

இந்தக் கேள்வியை இவ்வாறு மாற்றியமைப்பதன் மூலம் மேலும் சிறப்பானதாக ஆக்கலாம்: மனிதர்கள் உண்மையைச் சொல்லும்போது என்ன நடக்கிறது? ஏனெனில், சமூகத்தில் பொய்யைச் சொல்வதை விடவும் உண்மையைச் சொல்லும்போதுதான் அதிகமானவற்றை நாம் இழக்க நேரிடுகிறது. அது நாம் வாழும் சூழலமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இன்னுமொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், மனிதர்கள் தாம் பொய் சொல்கிறோம் என்பதையே சிலநேரங்களில் அறிந்திருப்பதில்லை. உண்மையின் சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டிருப்பதாக நினைக்கும் அவர்கள், அதைப் பொய் என்று அழைப்பதில்லை. சில நேரங்களில், உண்மையை எந்தளவிற்கு நம்புவார்களோ அதே அளவில் பொய்யையும் நம்புகிறார்கள். மேலும் பல சமயங்களில், பொய்யுரைக்கும்போதும் தாங்கள் உண்மையைத்தான் பேசுகிறோம் என்றே மக்கள் நினைக்கிறார்கள். ‘ரஷோமான்’ திரைப்படத்தில் குரோசாவா இதுகுறித்து தான் அலசியிருக்கிறார். அவர் உங்கள் கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறார். அவர் எந்தவொரு சூழலுக்கும் பல்வேறு கோணங்கள் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அவற்றில் சில சரியானதாக இருக்கலாம் சில தவறானதாக இருக்கலாம். ஆனால், நாம் அந்த தருணத்தை நம்முடைய கண்களால் மட்டுமே பார்த்து அறிய முடியும்.

நன்றி! இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் வார்த்தைகள் என்ன என்பதோடு நமதிந்த நேர்காணலை நிறைவுசெய்யலாம் என்று நினைக்கிறேன்.

அறிவுரைகள் சொல்லும் சூழல்களிலிருந்து எப்போதும் நான் தப்பித்து ஓடவே செய்வேன். என்னால் எனது அனுபவத்தை மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும். இது அறிவுரை அல்ல. உங்களிடமுள்ள மிகப் பெரிய முதலீடு, உங்களுடைய மனமும் ஆழ்மனமும்தான். திரைப்படங்களில் செயல்பட விரும்பும் யாராக இருந்தாலும் தங்கள் மனதை அதற்குள் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அப்படி செய்தால், உங்கள் படைப்பு எல்லோராலும் புரிந்துகொள்ளப்படும் நேசிக்கப்படும். ஒரு கலைஞன் பெற்றிருக்கக்கூடிய மிக முக்கியமான விஷயமே, குழந்தை பருவத்தில் அமையப் பெற்றிருக்கும் அவர்களுடைய ஆழ்மனம்தான் என்றே கருதுகிறேன்.

உங்களுடன் நேரம் செலவிட்டதிலும் உரையாடியதிலும் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி அஸ்கர்.

நன்றி. இந்நாள் சிறந்த நாளாக அமையட்டும்.

ராம் முரளி <raammurali@gmail.com>

Amrutha

Related post