இமையத்தின் அரசியலும் இலக்கியமும் 2

 இமையத்தின் அரசியலும் இலக்கியமும் 2

இமையம் என்னும் ‘கட்சிக்கார’ எழுத்தாளர்

சுகுணா திவாகர்

வீனத் தமிழ் இலக்கியம், அரசியலுடன் இணைந்தும் விலகியும் பயணித்திருக்கிறது. திராவிட இயக்க இலக்கியங்கள், அதற்குப்பின் வானம்பாடி கவிதை இயக்கம், இடதுசாரி அமைப்புகளின் கலை இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் படைப்புகள் ஆகியவற்றில் நேரடி அரசியல் பேசப்பட்டிருக்கிறது. இத்தகைய படைப்புகளை மாற்றுக் குறைந்த எழுத்துகளாகவே அணுகிவந்த நவீன இலக்கியவாதிகள், இவற்றில் அழகியல் இல்லை, வெளிப்பாட்டு நுட்பமில்லை, உரத்த குரல், பிரச்சார இலக்கியம் என்று புறம் தள்ளினர். இந்நிலையில், 80-களின் இறுதியில் தொடங்கி 2000 தொடக்கம் வரை தமிழ் இலக்கிய வெளியில் நடைபெற்ற கோட்பாட்டு விமர்சன உரையாடல்கள், மரபான நவீன இலக்கியவெளியில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தின.

அரசியலற்ற இலக்கியம் என ஏதுமில்லை, இலக்கியத்தில் புனிதமில்லை, மொழியில் அதிகாரமிருக்கும்போது மொழிச் செயற்பாட்டுக் களங்களான இலக்கியத்திலும் அதிகாரம் இருக்கத்தான் செய்யும் என்ற விமர்சனக் குரல்கள் நவீன இலக்கியத்தின் தூய்மைவாதத்தைத் தகர்த்தன. அரசியலைப் பேசுவதே தகாத செயல் என்று நினைத்த நவீன இலக்கியவெளியில் தலித், பெண் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் இலக்கியங்கள் எழுதப்பட்டு, அவற்றில் அரசியலும் முன்வைக்கப்பட்டு அவையும் நவீன இலக்கியத்தின் ஒருபகுதியாக ஏற்கப்பட்டன.

ஆனாலும் அரசியல் என்றால் அது இடதுசாரி, தலித் மற்றும் தேசிய இன அரசியல்; அதுவே மாற்று அரசியல் என்பதான நிலைப்பாடே முன்வைக்கப்பட்டது. மய்யநீரோட்ட அரசியல் இயக்கங்களில் இருப்பது என்பதும்கூட ஏற்கத்தக்கவையாக இல்லை என்னும் நிலையே நீடித்தது. திராவிட இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பேசுவது, குறிப்பாகப் பெரியாரை மறுவாசிப்பு செய்வது என்னும் போக்கு தொடங்கிப் பின் பெரியார் மற்றும் திராவிட இயக்கம் மீதான தலித் விமர்சனப் போக்கு, அதையொட்டிய விவாதங்கள் என சிறுபத்திரிகைச் சூழலில் தொடர்ச்சியாக செயற்பாடுகள் நிகழ்ந்தாலும் திராவிட இயக்க இலக்கியங்கள் குறித்து பெரியளவில் உரையாடல் நடைபெறவில்லை என்றே சொல்லலாம்.

இத்தகைய சூழலில் இலக்கிய விழாக்கள் தொடங்கி சிறுபத்திரிகைகளின் நேர்காணல் வரை கறுப்பு – சிவப்பு கரை வேட்டியுடன் காட்சியளிக்கும் இமையத்தை எப்படி மதிப்பிடுவது?

இமையம் பிறப்பால் ஒரு தலித் என்றாலும் தன் படைப்புகள் தலித் இலக்கியம் என்றோ தன்னைத் தலித் எழுத்தாளர் என்றோ அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்பவர் இல்லை. கிட்டத்தட்ட அவரின் நேர்காணல்கள் எல்லாவற்றிலும் இதுகுறித்தும் அவருடைய தி.மு.க அடையாளம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளித்திருப்பார். இத்தனைக்கும் இமையத்தின் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ நாவலே தலித்துகளின் உள் முரண்பாடுகளைப் பற்றிய நாவல். அதனாலேயே வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப்பெற்ற நாவல்.

peththavan, Novelஅதற்கடுத்து இலக்கிய வெளியையும் தாண்டி பொதுச்சூழலில் கவனம் பெற்ற இமையத்தின் படைப்பு ‘பெத்தவன்’. திவ்யா – இளவரசன் காதல், இருவரின் திருமணம், திவ்யா தந்தையின் மரணம், தர்மபுரி நாயக்கன்கொட்டாயில் தலித் குடியிருப்புகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இமையத்தின் ‘பெத்தவன்’ கதை குறித்த உரையாடல்கள் உருவாயின.

இவை மட்டுமல்ல, இமையத்தின் கணிசமான படைப்புகள் தலித் மக்களை மையப்படுத்தியவை. பெரும்பாலான கதைகளில் பெண்கள் முதன்மைப் பாத்திரங்கள். ஆனால், ‘தலித்தியப் படைப்பு எழுத வேண்டும், பெண்ணியப் படைப்பு எழுத வேண்டும் என்றெல்லாம் நான் திட்டமிடவில்லை. நான் என் வாழ்க்கையை எழுதுகிறேன். அதில் தலித்துகளும் பெண்களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்’ என்பதுதான் இமையத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.

மாடுகளுக்கிடையிலான ஓட்டப் பந்தயத்தில், தலித் ஒருவரின் மாடு வென்றதால் நிகழும் கொலையை; அது எப்படி ஒரு தலித் சிறுவனின் கல்வியை பாதிக்கிறது என்பதைப் பேசுகிறது ‘நன்மாறன் கோட்டைக்கதை’. ஜல்லிக்கட்டு என்பதை மையமாக வைத்து ஆளும் அரசுகளுக்கு எதிரான அதிருப்தியுணர்வுகளை ஒன்றுசேர்த்த, தமிழடையாளங்களுக்குப் புத்துயிரூட்டிய, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம் தமிழகத்தில் நடந்தது. ஆனால், தமிழர்களின் மரபடையாளமாகப் புனிதப்படுத்தப்படும் இத்தகைய வீர விளையாட்டுக்குள் செயற்படும் சாதிய அதிகாரத்தைத் துணிச்சலுடன் முன்வைத்தது ‘நன்மாறன் கோட்டைக்கதை’.

அதேபோல் மயிலாடுதுறை அருகே தலித் ஒருவரின் பிணம் பொதுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாமல், காவல்துறையே எடுத்துச் சென்றதைச் செய்தியாகப் படித்திருப்போம். அந்தக் காவலர்களில் ஒருவரின் பார்வையிலிருந்து சாதிய மனநிலையை விவரிக்கிறது ‘போலீஸ்’ சிறுகதை.

‘தலைக்கடன்’, ‘ஆலடி பஸ்’, ‘ஆண்டவரின் கிருபை’ போன்ற சிறுகதைகள் தொடங்கி ‘வாழ்க வாழ்க’ நாவல் வரை இமையத்தின் கதைகள் பெண்கள் பிரச்னைகளை மையம் கொண்டவை. ஆனாலும் அவர் தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் ஆகிய வகைப்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை.

மறுபுறத்தில் இமையத்தைத் திராவிட இயக்க எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தலாமா?

திராவிட இயக்கம் எழுச்சியுடன் இருந்த காலத்தில் வெளிவந்த படைப்புகளின் எழுத்துமுறையும் இமையத்தின் எழுத்துமுறையும் ஒன்றல்ல. மேலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததற்குப் பிறகு திராவிட இலக்கியம், திராவிட சினிமா செயற்பாடுகள் கிட்டத்தட்ட நின்றுவிட்டன. மேலும் இப்போது கனிமொழி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தமிழச்சி தங்கப்பாண்டியன் என பல நவீன எழுத்தாளர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்தாலும் அவர்களைத் திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்று யாரும் அடையாளப்படுத்துவதில்லை. அவர்களும் தி.மு.கவும்கூட அப்படி கோருவதில்லை. மேலும், திராவிட இயக்கத்தின் கருத்தியல் மதிப்பீடுகளைத்தான் இவர்களின் படைப்புகள் முற்றாகப் பிரதிபலிக்கின்றன என்றும் சொல்லிவிட முடியாது.

ஆனால், இமையத்தைப் பொறுத்தவரை அவர் தி.மு.க. அடையாளத்தை வெறுமனே புற அடையாளமாக மட்டும் நிறுத்தாமல் தன் உரையாடல்களின் அடையாளமாகவும் மாற்றுகிறார். ‘திராவிட இயக்க இலக்கியத்தைப் படிக்காமலேதான் பலர் அது இலக்கியமில்லை என்று நிராகரித்தார்கள்’ என்று சொல்லும் இமையம், அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’, கலைஞரின் ‘குப்பைத்தொட்டி’, ‘சங்கிலிச்சாமி’ போன்ற படைப்புகளையும் டி.கே. சீனிவாசன், எஸ்.எஸ். தென்னரசு போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து பேசுகிறார். சாகித்ய அகாடமி விருது வாங்கியபோது ‘நீதிக்கட்சிக்கு நன்றி’ என்றவர் ‘பெரியார், அம்பேத்கர், கலைஞருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’ என்றும் சொன்னார்.

ஒருபுறம் ‘தலித்துகளின் பிரச்னைகளை, பெண்களின் பிரச்னைகளை எழுதவேண்டும் என்று திட்டமிட்டு எழுதவில்லை’ என்று சொல்லும் இமையம்தான் இன்னொருபுறம் கருத்தியல் பரப்புரைக்காகத் திட்டமிடப்பட்ட பிரச்சார இலக்கியங்களைப் புறக்கணிக்கக்கூடாது என்று அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் செய்கிறார்.

உண்மையில் இந்த திட்டமிடுதல், தன்னிச்சையான எழுத்து என்னும் வேறுபாடுகள் மிக எளிதில் அழியக்கூடிய கோடுகள்தான். ‘என் வாழ்க்கையில் நிகழ்ந்ததைத்தான் எழுதுகிறேன். நான் நடக்கும்போது, பயணிக்கும்போது, ரயில் நிலையங்களில், பேருந்துகளில் கண்ட மனிதர்களைத்தான் எழுதுகிறேன். என் வீட்டுக்கு வந்து உரையாடுபவர்களைத்தான் எழுதுகிறேன்’ என்கிறார் இமையம். வாழ்க்கையே எழுத்தாக மாறுகிறது என்பது எவ்வளவு உண்மையோ வாழ்க்கை முழுவதும் எழுத்தாக மாறிவிடுவதில்லை என்பதும் உண்மை.

எது நம்மைப் பாதிக்கிறதோ, தொந்தரவு செய்கிறதோ, விமர்சனம் செய்யத் தூண்டுகிறதோ; எதை நாம் எழுத்தின் மூலம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், பகிர்ந்துகொள்ள முடியும் என்று கருதுகிறோமோ அதுவே எழுத்தாகிறது; படைப்பாகிறது. அந்தவகையில் தேர்ந்தெடுப்பு என்பதும் திட்டமிடலே. இமையத்தின் எல்லா எழுத்துகளும் இந்தத் திட்டமிடப்பட்ட தேர்ந்தெடுப்பை அடிப்படையாகக் கொண்டவையே.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பெண்களுக்கான சுயத்தை வலியுறுத்துதல், நிறுவனங்களையும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குதல், சக மனிதர்கள் மத்தியில் அன்பை முன்வைத்தல் ஆகியவைதான் பழைய திராவிட இயக்க இலக்கியங்கள் வலியுறுத்த விரும்பிய மதிப்பீடுகள் என்றால் இமையத்தின் தற்காலப் படைப்புகளும் அவற்றையே வலியுறுத்துகின்றன. ஆனால், வேறொரு கதைசொல்லல் முறையில் வேறொரு படைப்பு மொழியில் முன்வைக்கின்றன.

‘ஆண்டவரின் கிருபை’ என்னும் கதை ஒரேநேரத்தில் கடவுளையும் பிரார்த்தனையையும் கேள்விக்குள்ளாக்குவது, நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ ஊழலை அம்பலப்படுத்துவது, பெண்கள் மீது சுமத்தப்பட்ட குழந்தைப்பேறு என்னும் கடப்பாடு குறித்து உரையாடுவது ஆகியவற்றைச் செய்கிறது. இவற்றைத்தான் திராவிட இயக்கப் படைப்புகளும் செய்தன. அந்தவகையில் திராவிட இயக்க இலக்கியத்தின் நவீனக் குரலாக இமையம் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார்.

கூடுதலாக இமையத்திடம் ஒரு சிறப்பம்சம் உண்டு. அது திராவிட இயக்கத்தின் இடைவெளிகளை, முரண்பாடுகளை, போதாமைகளை, பலவீனங்களை விமர்சனங்களாக்கி அதையும் திராவிட இயக்க இலக்கியத்தின் ஒருபகுதியாக மாற்றுவது. அதைத்தான் ‘கட்சிக்காரன்’, ‘நம்பாளு’ சிறுகதைகள் செய்கின்றன.

‘கட்சிக்காரன்’ சிறுகதை நீண்டகாலமாகக் கட்சியில் இருக்கும் விசுவாசமான தொண்டன் எப்படி புறக்கணிக்கப்படுகிறான். மாறிவரும் சூழலில் கட்சியின் பண்பே எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதை விமர்சனபூர்வமாக முன்வைக்கிறது. ‘நம்பாளு’ சிறுகதை, தான் சார்ந்த கட்சியில் உள்ள சாதிய அதிகாரத்தையும் இயல்பாகிப்போன சாதிய மனநிலையையும் வெளிச்சமாக்குகிறது. ஆனால், இதை முன்வைத்து ‘திராவிட இயக்கம் என்பதே இடைநிலைச் சாதிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட தலித் விரோத இயக்கம்’ என்று புறக்கணிப்பதில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கைத் திசை விலகலை, சமத்துவத்துக்கு எதிரான அதிகாரப் படிநிலையைச் சுட்டிக்காட்டிக்கொண்டே திராவிட இயக்கத்தின் தேவையையும் முன்னிறுத்துகிறார்.

‘கட்சிக்காரன்’, ‘நம்பாளு’ போன்ற கதைகளைத் தி.மு.க.வினர் எதிர்மறையாகப் பார்க்கவில்லை; மாறாகப் பாராட்டவே செய்தனர். தி.மு.க. என்பது விமர்சனங்களை ஏற்கும் ஜனநாயக இயக்கம்’ என்கிறார் இமையம். ஒருவகையில் ‘கோவேறு கழுதைகள்’ நாவலுக்காக வந்த எதிர்மறை விமர்சனங்கள் அளவுகூட இந்தக் கதைகளுக்காக வரவில்லை என்றே அவரது தொடர்ச்சியான கூற்றுகளின் வழியாக அறிய முடிகிறது.

கறாரான விமர்சகர்கள் அ.தி.மு.கவைத் திராவிடக் கட்சியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பொதுவெளியில் திராவிடக் கட்சியாக அறியப்பட்ட அ.தி.மு.க, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் வழியாகத் தோன்றிய கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்த ஜெயலலிதா என்னும் பார்ப்பனப் பெண்மணி, அவர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாக்கிய பண்பு மாற்றங்களை விமர்சிக்கக்கூடிய நாவல் ‘வாழ்க வாழ்க’. காசு கொடுத்து கூட்டத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள், குறிப்பாகப் பெண்கள் எவ்வளவு அவதிக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது. அ.தி.மு.க. குறித்த விமர்சன நாவல் என்றாலும் தி.மு.க.விலும் ஆங்காங்கே உருவாகியிருக்கும் இந்தப் போக்கு குறித்த நுட்பமான விமர்சனங்கள் உண்டு.

Vaazhga Vaazhga Novel, Imaiyam13 ஆண்டுகால அரசியல் வனவாசத்தில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளி நிறுத்தப்பட்ட தி.மு.க சோதனைக் காலங்களில் உயிர்ப்புடன் இருந்ததற்கு முக்கியக் காரணம் கலைஞர் என்னும் தலைவருக்கும் அவர் உடன்பிறப்புகளுக்கும் இருந்த உணர்வுரீதியிலான நெருக்கம். தேர்தல்களில் வெல்லாவிட்டாலும் கலைஞரின் கூட்டம் என்றால் திரளும் லட்சக்கணக்கான தொண்டர்களே தி.மு.க.வின் அடையாளம். ஆனால், இந்தத் தன்னெழுச்சியான பங்கேற்புகள் குறைந்து, அழைத்து வரப்பட்டவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்படுகிற கூட்டங்களாகத் திராவிடக் கட்சிகளின் கூட்டங்கள் மாறிவிடும் அவலத்தை ‘வாழ்க வாழ்க’ நாவலில் முன்வைக்கிறார் இமையம். அந்தவகையில் தொடர்ச்சியான விமர்சனங்கள் மூலம் தேக்கத்தைக் குலைத்து, நீரோட்டத்தை முன்தள்ளும் எழுத்தியக்கம் இமையத்தின் படைப்புகள்.

இமையம் படைப்புகளின் மையமே ‘விமர்சனம்’ என்பதே என் வாசிப்பு, அவர் தன் விமர்சனங்களைப் படைப்புகளாக மாற்றுகிறார். படைப்புகளுக்கு அப்பாலும் தொடர்ச்சியாக விமர்சனத்தை முன்வைப்பவர் இமையம். ‘தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்’, ‘நவீன இலக்கியத்தில் தடம் பதித்த படைப்பாளி’ போன்ற சம்பிரதாயமான மொழிதலை, படிக்காமலே திராவிட இயக்க எழுத்துகள் இலக்கியமில்லை என்று நிராகரிக்கப்படும் போக்கை, புத்தக விமர்சனங்கள் என்ற பெயரில் முன்வைக்கப்படும் மதிப்புரை, பாராட்டுரைகளை என்று அவர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். படைப்புக்கு உள்ளும் வெளியிலும் இமையம் என்பது கறுப்பு-சிவப்பு கரைவேட்டி கட்டி நடமாடும் விமர்சனம்தான். எனவே, இமையத்தை விமர்சனப் படைப்பாளி என்று வரையறுக்கலாம் என்று கருதுகிறேன்.

சுகுணா திவாகர் <sugunadiwakar@gmail.com>

suguna diwakar

 

 

 

Amrutha

Related post