உழைப்பே வாழ்வாகும் அபாயம் – பிரபு திலக்

 உழைப்பே வாழ்வாகும் அபாயம் – பிரபு திலக்

நிலக்கரிச் சுரங்கங்களிலும் இரும்பு உருக்காலைகளிலும்  பஞ்சாலைகளிலும் ஆண்கள் மட்டுமல்ல குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என பாகுபாடின்றி அனைத்து தொழிலாளர்களும் 18 முதல் 20 மணி நேரம் கடுமையாக வேலை வாங்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஓய்வின்றி, உற்பத்தியில் நிகழும் சிறு தாமதத்திற்கும் தண்டனை பெற்று, வழங்கப்பட்ட சொற்ப ஊதியமும் பிடிக்கப்பட்டு கொடுமையின் உச்சகட்ட நிலையிலிருந்தார்கள் அன்றையத் தொழிலாளர்கள். இக்கொடுமையை எதிர்த்து, வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் போராடினார்கள். அப்படி போராடியவர்கள் மீது, 4 மே 1886-ல் ஹேமார்க்கெட் எனும் இடத்தில் ஏவப்பட்ட கொடுந்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்த விசாரணையில் பலர் தூக்கிலிடப்பட்டார்கள், பலருக்கு சிறைத் தண்டனை. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. அதன் விளைவாக, அன்றையத் தொழிலாளர்களின் இந்த தியாகத்தால் கிடைத்ததுதான் இன்று பெரும்பான்மை தொழிலாளர்கள் அனுபவிக்கும் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் குடும்பத்துக்கு எனும் வரையறை.

தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் இந்த நடைமுறை உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்தியாவில் தொழிலாளர் வேலை நேரத்தை 14 மணியில் இருந்து 8 மணி நேரமாக மாற்றியவர் அப்போது வைசிராய் கவுன்சிலில் உறுப்பினராக இருந்த அம்பேத்கர். இன்றிருக்கும் பல இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு வித்திட்டவர் அவரே. தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்றியதை கொண்டாடும்விதமாக இந்தியாவில், முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் மே தினம் சிங்காரவேலரால் 1923ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக மேதினத்திற்கு அரசு விடுமுறை, தமிழ்நாட்டில்தான் 1967இல் அன்றைய முதலமைச்சர் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து 23 ஆண்டுகளுக்கு பின்னர்தான் மே தினத்திற்கு, 1990இல் வி.பி. சிங் தலைமையிலான ஒன்றிய அரசு விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வேலை, குடும்பம், ஓய்வு ஒவ்வொன்றுக்கும் 8 மணி என்ற இந்த நேரப் பங்கீடு நம் நவீன குடும்ப மற்றும் சமூக இயக்கத்தில் நெடுங்காலமாக ஒரு சமநிலையை உருவாக்கி வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 75 வருடங்களாக இந்த சமநிலை மாறாமல் நல்லபடியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த  சமநிலையை குலைத்து, தொழிலாளர்களின் உரிமைகளை 1886ஆம் ஆண்டிற்கும் பின்னால் கொண்டு செல்லும் நிலை  இந்தியாவில் இன்று உருவாகியிருக்கிறது.

 

னியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் 21-04-23 அன்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த மசோதா தொடர்பாக, “இன்றைய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகளுடன் இந்தியாவிற்கும்  தமிழ்நாட்டிற்கும் வருகின்ற நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.

அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. மின்னணுவியல் (Electronics), தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள் (Non leather shoe making), மென்பொருள் (Software) போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடியது. இவர்களுக்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன், “வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் மாற்றமில்லை. இந்த நேரத்தை 12 மணி நேரம் வீதம் 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“யார் மீதும் திணிக்கப்படாது; விரும்பியவர்கள் செய்யலாம்” என்று அமைச்சர்கள் தெரிவித்தாலும் விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளே, “இந்த சட்ட திருத்தம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்” என்று விமர்சித்துள்ளன.

தொழிலாளர்கள் விரும்பினால் 12 மணி நேரம் வேலைப் பார்க்கலாம் என்று சொல்லப்பட்டாலும், ‘விருப்பமில்லை’ என்ற நிலையை தேர்வு செய்யும் உரிமை ஒரு தொழிலாளிக்கு இருக்கிறதா, அப்படி தேர்வு செய்தால் அவரை நிறுவனம் பணியில் வைத்துக்கொள்ளுமா? என்னதான் தன்விருப்பம் என்று கூறினாலும். 12 மணி நேர வேலை இறுதியில் கட்டாயமானதாகவே மாறிவிடும். இதுபோல், சில தொழில்களுக்கு எனத் தொடங்கி அனைத்துத் தொழில்களுக்கும் என ஆகும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

இப்போது 12 மணி நேர வேலை திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் மேலே குறிப்பிட்ட வாதங்கள் எல்லாம் அரசுக்கும் முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் தெரியாதவைகள் அல்ல. சில வருடங்களுக்கு முன்னர் அவர்களே சொன்னவைதான் இவையெல்லாம்.

கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்தன. இதனையடுத்து, 2020 மே 6ஆம் தேதி தொழில் நிறுவனங்களுடன் அப்போதைய ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்று தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 12 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளில், தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது. அதற்கு முன்பாகவே ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வேலை செய்யும் நேரத்தை நீடிப்பது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன.

கொரோனா பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர், பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்கவும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டது. அதன்படி, தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் என வாரத்திற்கு அதிகப்பட்சமாக 72 மணி நேரம் (6 நாட்கள்) வேலை செய்யும் வகையில் திருத்தம் மேற்கொண்டு, புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கடந்த 2022 ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தவுள்ளதாக தகவலை கசியவிட்டது. எனினும், பலத்த எதிர்ப்புகள் காரணமாகவும் பல மாநிலங்கள் அதற்கு தேவையான விதிகளை வகுக்காததாலும் அது தற்போதுவரை அமல்படுத்தப்படாமல் உள்ளது.

கொரோனாவுக்கு முன்னர் வரை சீனாதான் ஒட்டுமொத்த உலகத்தின் தொழிற்சாலையாக விளங்கியது. குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், இலகுவான சூழியல் சட்டதிட்டங்கள் என்று குறைந்தவிலை உற்பத்திக்கு கவர்ச்சிகரமான ஒரு நாடாக திகழ்ந்தது. கொரோனாவில் சீனா முடங்கியதும் உலகமே முடங்கியது. பல நாடுகளில் கழிவறை தாளுக்குக்கூட பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கம்ப்யூட்டர் சிப், மருத்துவ உபகரணங்கள் உட்பட எல்லா பொருட்களுக்கும் இதே நிலமைதான். காரணம் இவை எல்லாவற்றையுமே சீனா தான் அனுப்பி கொண்டிருந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவை மட்டுமே நம்பி இருக்கும் நிலையை கொரோனா கேள்விக்கு உள்ளாக்கியது. இதற்கு சீனாவின் அரசியல் நிலைபாடுகளும் வலுசேர்த்தது.

எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது உற்பத்தி திறனில் ஒரு பகுதியை இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றிவிட நினைக்கிறார்கள். அதேநேரம், அவர்கள் இந்தியாவுக்குள் வர சீனா போலவே தொழிற்சாலை தொடர்பான சட்டங்களை இந்தியா இலகுவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த இந்த 12 மணி வேலை நேர மாற்றத்துக்கான அழுத்தம். ஒன்றிய அரசும் பல மாநில அரசுகளும் 12 மணி நேர வேலைத்திட்டத்துக்கு மாற இந்த அழுத்தமே காரணம். பிற மாநிலங்கள் பன்னாட்டு முதலீட்டை பெற மாற்றங்களை செய்யும் போது தமிழ்நாடு மட்டும் விலகி நின்றால் புதிய தொழில் முதலீடுகளை இழக்கும் சூழல் உருவாகும் என்றுதான் தமிழ்நாடு அரசும் வேலை நேரத்தில் சட்டதிருத்தம் கொண்டுவந்து இந்த பந்தயத்தில் ஓட எத்தனிக்கிறது.

ஆனால், இந்த 12 மணி நேர வேலை என்ற முன்மொழிவை முதலில் ஒன்றிய அரசு முன்வைத்தபோது கடுமையாக எதிர்த்த கட்சிகளில் ஒன்று திமுக. பல மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை திமுக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், “பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை – அப்படியே காப்பி அடித்துவரும் அதிமுக அரசு – தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில்கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொழிற்சாலையில் 12 மணி நேரம் இருக்க வேண்டும் என்றால், அதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வருவது, வேலை முடிந்து வீட்டுக்கு போய் சேர்வது என முன்னும் பின்னுமான ஆயத்த பணிகளுக்கு பல மணி நேரங்கள் தேவைப்படும். உதாரணமாக 9 மணிக்கு பணியை தொடங்க வேண்டிய ஒருவரது வீடு நிறுவனத்தில் இருந்து மிக தூரத்தில் இருந்தால், அதுவும் அவர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வரவேண்டும் என்றால், காலையில் 6 – 7 மணிக்கு எழுந்து தயாரானால்தான் முடியும். இதுபோல் இரவு 9 மணிக்கு பணி முடித்து, புறப்பட்டு வீடு போய், சாப்பிட்டு தூங்க செல்லும்போது 11 – 12 ஆகிவிடலாம். அடுத்தநாள் காலையில் 6-7 மணிக்கு மீண்டும் ஆயத்தமாக வேண்டும்…

இடையே இருக்கும் 7 மணி நேரங்களில்தான் அவர் தூங்க வேண்டும், மனைவி / கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நேரம் செலவழிக்க வேண்டும். பெண்கள் நிலமை இன்னும் மோசம்… சமையல், கணவருக்கான பணிவிடைகள், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் நலன் என பல சுமைகளை முடித்துவிட்டு, தூங்க நேரம் கிடைக்குமா? அது அவர்கள் உடல் ஆரோக்கியத்தை எவ்வளவு பாதிக்கும். இத்தனைக்கும் இடையே பிடித்த பணியைத் தக்கவைக்க நேரம் மட்டுமல்லாது கவனம் கொடுப்பதும் பெண்களுக்குப் பெரும் சவாலாகும். இதன் நீண்ட நாட்கள் விளைவாக… மீண்டும் பெண்கள் வீட்டில் முடங்குவது அதிகமாகும்.

இன்னொரு பக்கம் தற்போது 8 மணி நேரம் மட்டும் வேலை என்ற சட்டம் இருக்கும் போதே பல நிறுவனங்களில் 8 மணி நேரத்துக்கு மேல் 12 மணி நேரம் வரை வேலை வாங்குவது நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் 12 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதித்தால் என்ன ஆகும்?

12 மணி நேரமோ அதற்கும் அதிகமாகவோ தொடர்ச்சியாக வேலை செய்தால் தொழிலாளியின் ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கப்படும். அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவர். இதனால், அவரது நலம் மட்டுமல்லாது குடும்பத்தின் நலமும் பாதிக்கப்படும். இதனால்தான், மேற்கு உலக நாடுகள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை என்பதை 36, 35 என்று குறைத்து வருகின்றனர். பல நாடுகள் ஒரு நாளைக்கு 6 மணி நேரமாக குறைத்து, குறைந்த வேலைநேரம் அதிக உற்பத்திக்கு வழிவகுப்பதையும் நிரூபித்திருக்கின்றன. இந்தியாவில் கூட திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உட்பட பலர் வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள், அதிவேக உற்பத்தி கருவிகள் இவ்வளவு வந்துள்ள நிலையில், நியாயமாக மனிதர்களின் உழைப்பு நேரம் குறையத்தானே வேண்டும்?

மனிதன் வாழ்வதற்காகத்தான் உழைக்க வேண்டுமேயன்றி உழைப்பதற்காக வாழக்கூடாது.

Prabhu Thilak

Amrutha

Related post