கயல் கவிதைகள்

 கயல் கவிதைகள்

1
பவளக்காலி என்பாய்
மருதாணிப் பாதங்களைக் கையிலேந்தி.
பஞ்சுருட்டான் எனச் சொல்லி
மென்னுதடுகள் ஒற்றுவாய்.
மயில் உள்ளான் என்றபடி
பிடரி மயிர் கோதுவாய்.
உயிர் வரை ஊடுருவும் இனம்
நீயொரு நாகணவாய் எனத் தழுவுவாய்.
வண்ணச் சுண்டங்கோழி என்பாய்
ஆளவரவங் கேட்டு புதர் மறைகையில்.

கொஞ்சு மொழியென்றிருந்தேன்
பறவைச் சிறகுத் தொப்பிகளால் ஆன
உன் வரவேற்பறையை எட்டும்வரை.

சடசடவென எங்கோ ஒலியெழுகிற போது
ஒரு பறவை தீனமாக அழுகிறது
என்றும் கொள்க.

2
முல்லை நிலப் பெண்ணொருத்தி
ரகசியமாய்ச் சீழ்க்கை அடிக்கிறாள்.

செம்மாந்த பெரு மலரொன்று
அடிவானத்தில் மீளவும் மொட்டாகிறது.

முத்தத்துக்குக் கண் மூடும் துல்லியத்தில்
கறவைகள் முகடுகளில் இறங்குகின்றன.

சிறகிகள் யாவும் தனைத் தனியே
விட்டுக் கூடேகியதை உற்றுப் பார்த்து
முகங் கருக்கிறது வானம்.

நெல் மூட்டைகளை
எண்ணிக் கொண்டிருப்பவன் மனைவி
தலையணை தழுவி உறங்குகிறாள்.

உலகின் எங்கோவோர் இடத்தில்
ஒரு
உழவன் தூக்கிட்டுக் கொள்கிறான்.

3
ஆலயத்தருகே
மரகத சொரூபித் தாயின்
ஓவியத்துக்கு கொஞ்சம் தள்ளி
சாலைக்கு முதுகு காட்டி
குனிந்து நின்றிருந்தது
நைந்த நைட்டியிலொரு கிழட்டு தெய்வம்.

தெய்வத்தின் இளமைக் காலத்தில்…
அருட்சுரப்புடன் வீட்டருகின் டெய்லர்
எப்போதும் அளவு ரவிக்கைக்கே தைத்தான்.
நடுநாக்குக் கொடிநெல்லி இனிப்பு
அப்பாவுக்கு
மகளிர் மட்டுமே படிக்கும் கல்லூரி
அட்மிசன் கார்டின் சொற்களைப் படிக்கையில்.
கர்ப்பச் சூல் தொட்டுக்
கருணை செய்யும் மருத்துவக் கடவுள்
மூக்குத்தி அணியாததைப்
பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டான்
கற்பிதத்துக்குப் பிறந்த கொண்டவன்.
செத்துப் போன எதிர்வீட்டு
அக்காளைக் குளிப்பாட்டிக் கிடத்திய
கையெல்லாம் பெண்டுகளுடையது.

மெல்லத் திரும்பி
நெடுஞ்சாலையில் பயணிக்கும்
எவனையாவது பார்த்து
இதையெல்லாம் சொல்லலாமா என
வழக்கப்படி இன்றும் நினைத்தவள்
கால்களினிடையே வழிந்து
கொண்டிருந்தது நீர் சுதந்திரமாய்.

4
சுவரின் மீது
வழக்கமாய் வைக்கிற
கவளத்தை மறந்தாயிற்று.
நடையில் கதை பேசிக்கொண்டு
தாயம் உருட்டும் சத்தம்.
செத்துப் போன ஆற்றுமணலின்
ஒலியாய் வாசலிலொரு காகம்.

அப்பளப் பூ அப்பளப் பூ
குரலுக்கு அதிர்ந்து
கூடைக்குள் எட்டிப் பார்க்கிறது பவளமள்ளி.
சாயங்காலமே
அடுத்த பெண்ணைப் பார்க்கிற
மாப்பிள்ளையாய்க்
கிளைகிளையாய்த் தாவுகிறது காகம்.

இளமையை இறுக்கித் தழுவும்
முயற்சியில்
பொழுதுமணிகிற மார்க் கச்சையின்
நெஞ்சுவலி சகித்தல்.
தாழ்வாரம் இறங்கி
பரிதாபமாகப் பார்க்கிறது காகம்.
கட்டிக் கொடுக்க ஆளற்ற வீட்டில்
இன்னும் எத்தனை நாளுக்கு
காகத்துக்கே சோறு வைப்பது.

5. கல் வாசனை

பெரும் விகசிப்புடன்
செம்பருத்திப் பூவென
இதழ் விரித்திருக்கிறது
அருள்பாலிக்கும் முகம்.

போகிற போக்கில் தினங்
கண்ணொற்றிப் போகிறவளை
எங்கே இன்னும் காணவில்லை?
கர்ப்பக் கிரகத்திலிருந்து
எழுந்தெழுந்து
எட்டிப் பார்க்கிறாள் அரிய நாச்சி.

பேருந்திற்கான அவசரத்தில்
பாராமல் போய்விடுவாளோ எனும்
பதற்றத்தில் புடவை தடுக்க
வாசலுக்கு வருகிறாள்.

கண்ணிமைக்கும் நொடியில்
ஆசையாசையாய்ப் பார்த்துக் கொண்ட
இருவரும்
பிறகு
தத்தம் அலுவலகம் போயினர்.

6
நில உரிமை பிரகடனப் பலகைகளை
அதிர்ந்து பார்த்தபடி நடந்து
எருமைகளின் காலருகில்
இரைதேடும் குருகுகளுக்கு
உதடு குவித்து சீழ்க்கையடித்தார்.

பபூவா பூர்வகுடிகள் காடுகள்
உயிரெனப் பிள்ளைகளுக்கு
கற்பிக்கிற நொடியில்
நெடுஞ்சாலைகளில்
கழுத்தறுபட்டுக் கிடக்கும் பறவை
வீட்டிலிருந்து கிரிக்கெட்டுக்கு
வாகாய் குச்சி தேடும் இளங் கைகள்
அடுத்த காட்சி.

கரண்டி வாயனின் தொண்டை நீரில்
நீந்த முயலும் கெண்டை,
முள்ளிலும் பூக்கிற பிடவம் பூ,
டால்ஃபின் மூக்கின் மீது நின்று
கைத்தட்டல் பெறும் சாகசப் பெண்,
கொழுத்த உணவுக்குப் பிறகு
கண்ணெதிரே துள்ளும் மானைக்
கண்டுகொள்ளாத சிங்கம்…

குழப்பத்துடன் உறங்கப் போன கடவுள்
குஞ்சுகளை அடைகாக்கும்
ஓசனிச்சிட்டொன்றின்
சிறகுகளுக்குள் பொதிந்து கொண்டார்.

7
அவனைத் தன்னந்தனியே
கிடத்தியிருக்கிறார்கள்.

நெடுநாட்களுக்குப் பிறகென்
முகம் பார்க்கிற நண்பர்கள்
சூழல் மறந்து சிந்திய புன்னகைப் பூ
அவன் சடலத்தில் பட்டுதிர்கிறது.

குடி ஆசை தீர அருந்தியிருந்தது அவனை.
நேசித்தவள் அந்நல்லந்தியில்
முல்லை சூடி மாடச் சுடரேற்றுகிறாள்.

பத்தடி தொலைவில் கூடிய தோழர்கள்
வரிசையில் அடுத்து எவரெனப்
பொய்யாய்ச் சிரிக்க
முகம் போர்த்திய துணி
விலகி மூடுகிறது காற்றுக்கு.

அடிக்கிற பறையில்
அவனேக நினைத்த கவி திசைகள்
அதிர்கின்றன.
மேள முழக்கத்தில் அவன்
தொல்லியல் ஆய்வுகள் நிலம் புதைந்தன.

தலை விரித்தழுதபடி
பின்னோடிக் கொண்டு வர வேண்டியவள்
உதடெழுதுகிறாள்
வேறொரு வீட்டின் வசந்தக் கட்டிலில்.

செஞ்சாந்து பூசிய மீனாட்சியின்
உள்ளங்கை என்றவன்
அண்ணாந்து வியக்கிற சூரியன்
முகஞ்சிவந்தழுது முகிலில்
முகம் பொத்துகிறது.

அதெல்லாம் போகட்டுமடா பாவி.
நீ சவ ஊர்வலமாய்
ஏனொரு சூரியகாந்தி வயலைக்
கடந்து போனாய்?

காணும் சூரியகாந்திப் பூவிலெல்லாம்
காலத்துக்கும் துக்க வாசனை வீசச் செய்தாய்

8. பொன் ஊசித் தட்டான்

தழல் ஊற்றி
சிறகால் ஆற்றி
வனம் பூக்கும்
நீள் வடிவ வசீகரி.

யாமத் திரி நெகிழ்த்தி
யன்னல் திரை நகர்த்தி
மகிழ மர ஒளிச் சிதற
உயிர் கரைக்கும் மனோகரி.

நெக்குவிடும் முகை மலர்த்தி
தங்கப் பிறை கிளர்த்தி
ஆம்பல் உடல் மிளிர்த்தி
மழை குடிக்கும் குளத்துயிரி.

வண்ணச் சாந்துடுத்தி
இறை மறந்த கருணையாய்
கொன்றுண்ணிப் பெயர் மறைத்த
எம் பால்ய கால நினைவூர்தி

9.
பாசியும் கூழாங்கற்களுமாக
கடல் போலொன்று தொட்டிமீனுக்கு.
சுரக்கா பால் மடிக்கெதிரே வைக்கோல் கன்று.
சோளக் கொல்லை பொம்மை
பறவைகளுக்காக.
ஆத்திரமாக இருந்த பெரியாச்சி
சன்னதியில் உபயம்
எனுஞ் சொல் கர்ப்பக் கிரகக்
குழல் விளக்கின் கீழே.

அருள் பாலிக்கும் அம்மை
அற்பனே எனத் திட்டுவது
கேட்பதேயில்லை
தீபாதாரனை மணியோசையில்.

10
கோபித்துக்கொண்டு பேசாமல் இருக்கையில்
உன்னை நானும்
என்னை நீயும்
சமாதானம் செய்யத் தோன்றாத அதிர்ச்சியைவிட
இப்படியே தொடர்ந்தால்
பேசாமல் இருக்கப் பழகிவிடுவோமோ
என்ற பரஸ்பர அச்சத்தைத் தான்
காதல் என்று நம்பிய
காலமொன்று இருந்தது.

11
அந்திக்கு ஒன்று
சந்திக்கு ஒன்றெனச்
சிகப்பு இதய முகமன்கள் இணைத்த
இரு குறுஞ்செய்திகளைக்
கணக்கிலெடுத்தால் நாம் இன்னும்
பிரிந்துவிடவில்லைதான்.

12
ஒரு பூவை வலிக்காமல்
கிள்ளுவது அவ்வளவு எளிதல்ல என்று
மரகதக் கிளிகள் பேசுவதை ஒட்டுக்கேட்டு
சிரித்துக் கொண்டிருந்தது
பவழமல்லி.

சிறு மகளொருத்தி
பாவாடையை விரித்துப் பிடித்து
மரத்தை அண்ணாந்து
ஏக்கத்துடன் பார்த்த நொடி
முத்தமிட்டுக் கொண்ட கிளிகளின்
இதழ்ச் சிவப்புடன் உதிர்ந்தன
சில மலர்கள்.

13
காதருகில் வைத்தால் மட்டுமே
கடல் ஒலிக்கும் சங்கு
உனது அன்பு.

புறக்கணிப்பின் நகக் கணுக்களால்
எவ்வளவு குத்தியும் அழிந்திடாத
மச்சம் என் பரிவு.

கயல் <dr.kayalvizhi2020@gmail.com>

 

Amrutha

Related post