முயங்கொலிக் குறிப்புகள்  6 – 11 | கயல்

 முயங்கொலிக் குறிப்புகள்  6 – 11 | கயல்

ஓவியங்கள்: நடேஷ்

18. கானல் வரி

பொங்கிப் பிரவகிக்கும்
புனலழகை மெல்லப் பார்வையால் அளந்து
விரல்களால் அளைந்து
பின்
தயக்கம் துறந்து
தன்னிச்சையாகச்
சுழித்தாடிக் களிக்கத் தொடங்குகையில்
நொடிதோறும்
புதுப்புது ஊற்றுகள் காட்டி
உனைத் திசைகள் மாற்றி அலைக்கழிக்கும்
தேன்சுனை
எனதிந்தத் தேகம்.

ஆனந்த மிகுதியில்
நீ நர்த்தனமாடுகையில்
சரேலென உள்ளிழுக்கும்
என் வேகத்துக்கெதிராய்
மூச்சடக்கி மூழ்கி
மீண்டெழ முயலும் உன்
எதிர்நீச்சல் வித்தைகள் தோற்க
வேண்டுமென்றே சரணடைவாய்
நதிப் போக்கில்
மிதந்துபோய்
மெதுவாய்க் கரைசேர்வாய்

பிறகு
ஆசுவாசம் தருமதன்
கரைகளில்
தலை சாய்ந்து உறங்கியிருப்பாய்!
மனதில் இறைந்துகிடக்கும்
சொற்களைக் கூட்டி
மறுபடியும்
நானொரு வரியை எழுதத்தொடங்குகையில்.

 

19. நெடுஞ் சுரம்

ஆயுள் கைதிக் கணவனுக்காகச்
சிறைச்சாலையின் வாயில் அருகே
சாப்பாட்டுக் கூடையுடன் காத்திருக்கிறவள்
கண்களில் தளும்பிக் கொண்டிருக்கிறது
உறைந்துபோன பழைய வாழ்க்கை,
தர மறந்த முத்தங்கள்,
பிணங்கிப் புறக்கணித்த இரவுகள்,
இனி வரவே வாய்ப்பற்ற வசந்தம்.

சரிந்து அமர்ந்திருப்பவளின் கலைந்துகிடக்கிற
மாராப்புப் பூக்களை
வெட்கமின்றி வெறிக்கும்
கள்ளப் பருந்துக் கண்களை,
துயர் துடைப்பதான பாவனையில்
தூண்டிலிட்டுக் காத்திருக்கும் உறவுக்கார
ஆண்களின் கீழ்மைகளை,
கதவைக் கடக்கையில்
காவலாளிகள் காட்டும் சமிக்ஞைகளை
எனப் பலவற்றையும்
அலட்சியமாகப் புறந்தள்ள
அவளிப்போது பழகிவிட்டிருக்கிறாள்.

கவளங் கவளமாய் உணவை
உருட்டிக் கணவனின் கைகளில் வைப்பவள்
சபிக்கப்பட்ட தன் இளமை
சிறைவளாகத்தின் முள்வேலியில் சிக்கிய
பாலீத்தீன் காகிதமெனப்
படபடப்பதைப் பார்த்தபடி
எச்சில் எவர்சில்வர் தட்டைப்
பளபளவெனக் கழுவி
மீண்டும் கூடையில் சுமந்துகொண்டு
விடைபெறுகிறாள்
வாவென்றழைக்கும்
தாராளமான மரங்களின் நிழல்களைப் புறக்கணித்து
வெக்கையான நெடுஞ்சாலையில்
தனியாக.

 

20. தொலைவில் இணையும் தண்டவாளங்கள்

புணர்ச்சியின் நடுவே
உன்மத்தம் கொண்டாற்போலப் பின்புறத்தைப் பிசைவதை
நீலப் படங்களில் கற்றுக்கொண்டதாய்ச் சொன்னாய்.

இதழ்களிரண்டையும்
இறுக்கப் பொருத்தி
வேட்கை நதி வெள்ளம் நுரைக்க
முன்னேறிப் பொருதலை
இயல்பிலே வந்ததென்றாய்

திருமயத்தில்
தினமும் நீ
பார்க்கத் தேர்ந்தது
பற்றித் தழுவிக்கொண்டு
பல நிலைகளில்
பரவசத்தில் சமைந்திருந்த சிற்பங்களை.

மார்புக் குமிழைத் திருகியபடியே
மனங்கவர்ந்த பாடல் வரியை
முணுமுணுப்பவன்
இசையால்
உள்ளம் உடலோடு
ஒத்திசையும் தருணமிது என்பாய்.

உச்சத்தில் என் முகத்தை
அழுத்தி இருத்தும்போதான
அக்குள் வியர்வை நெடியைப்
பொறாமல்
நான் கண்மூடிச் சகித்திருப்பதைப்
பலகாலமாய்ச்
சுகிப்பின் உச்சமென்று
சுயமாய் நீயே
கற்பித்துக்கொண்டாய்.

 

21. தோற்ற மயக்கம்

தடதடத்துக் கடக்கிற மின்சார ரயிலின்
ஒலி அடங்குகிற
வேகத்தில்
ஓயும் சில இரவுகள்.

மாதாந்திர இலக்கை எட்டாததால்
உயரதிகாரி எகிறிய கோபத்தில் தணிந்தியங்கும்
பல தருணங்கள்.

அருந்தத் தொடங்கியதும்
தீர்கிற
காகிதக் குவளைத் தேநீராய்
முயங்கியும் முடியாத
சில யாமங்கள்.

பின் மதியமொன்றில்
வெறிகொண்டு விழுந்து
புடவைப் பூக்கள் கசங்க
களைத்துத் தவித்தது
முன்னாள் சினேகிதியைப்
பார்த்துவிட்டு வந்ததால் இருக்கலாம்.

உனக்குப் பிடித்ததையே
நான் சமைக்கிறேன்.
இருவருக்கும் ரசனைகள் ஒன்றே
என்றபடி
எனது உடைகளைத் தேர்வதும்
நீயே.
இப்படித்தான்
எப்போதும்போல்
அவையனைத்தையும்
கலவியென்றே
எண்ணிக்கொண்டாய்!.

Natesh Art

22. இரவின் மணம்

மார்பில் தயங்கி
மிகச் சரியாக இடுப்பருகே சரியும் லினன் சேலை
ஏற்கனவே செவ்வரியோடும்
உதட்டில்
இன்னும் அழுத்தமாய்ச் சாயமேற்றி
மழையில் நனைந்த
இலைமறை கொய்யா
காற்றிலசைவதாக அலுவலகம்
செல்கிறவள்,
வீடேகி
வேலைகள் முடித்து
இரவு படுக்கையறை
நுழையும்போதோ
தினம் அணிகிற
பெரிய பூக்கள்போட்ட
அதே அழுக்கு நைட்டி.

அவன் மனதைப் படித்தவள்
ஏதும் பேசாமல்
எட்டி விளக்கணைத்திடுவாள்
விழிகளில்
பாதி உறக்கம் மீதமிருக்க
நிசியில்
அறையெங்கும் மணக்கத் தொடங்கும்
நிஷாகந்திகைப் பூக்கள்

 

23. சுருதி பேதம்

மலைகளின் உச்சியினின்றும்
முகடுகளில் இறங்கி
வளைவுகளில் பயணித்து
அடி வீழ்கிற
மழை பிடிக்கும் எனக்கு.

மொக்கு விகசித்து முழுதும் பூக்க
இரண்டாம் யாமம்வரை
காத்திருக்கும் நிஷாகந்தி
மீது பிரியம் எனக்கு.

இரத்தத் துளிகள் தரையில் தத்துவதாய்
பவளப் பூச்சிகளின் மென் நகர்வு
பார்க்க
அவ்வளவு ஆசை எனக்கு.

தேநீர் அருந்தவும்
கமழ்கிற மணம்
அதற்கென ஒரு நிறம்
அத்துடன்
மிடறு மிடறாக ருசிக்க
ஒரு மெல்லிய இருட்டு
தேடுமென் கண்கள்.

அவசரமாக ஏற்பாடான
சுயம்வரத்திலோ
உன்னிடம் நின்று பேசவும்
நேரவில்லை
நேரமுமில்லை.

எதையும் நேராகச்
சொல்லியே பழக்கம்
சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது
என்றுன் புகழைத்
தரகர் பாட
அருமை அருமை என்றனர்
அம்மை உட்பட
அத்தனை பேரும்.

பலன்,
இப்போதெல்லாம்
நான் ஸ்வரம் பாடத் தொடங்கும்முன்னே
நீ முடித்துவிட்ட
பேரியாழின் இசை கேட்டு
படுக்கை விரிப்பெங்கும்
பசியோடு சாவகாசமாய் நெளிகின்றன
வச்சிரதந்திப் புழுக்கள்.

 

24. மௌன சாட்சிகள்

ஒரு கையால்
உவகையோடு
உடமையல்லாத
உடலைத் தழுவியபடி
மறுகையால்
ரகசியமாக
நழுவவிடப்படும்
மோதிரம்,
முதுகு காட்டித்
திருப்பி வைக்கப்படும்
புகைப்படங்கள்,
இறுக மூடப்பட்ட
திரைச் சீலைகள்
எல்லாமும்
முதல் முறை
இப்படி நிகழ்கிறபோது
எப்படியிதைப் புரிந்துகொள்வதென
எண்ணிக் குழம்பியவாறே
இரட்டைக் கட்டிலில் புரளும்
வெற்றுடம்புகளை
வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

வழக்கமில்லாத
அவ் வழக்கமும்
பழகிப் பழையதான பின்
அடுத்த கூடலை எதிர்நோக்கி
பசித்திருக்கும்
வேட்டை நாய்களின்
விழிகளோடு
அசைவின்றிக் காத்திருக்கத் தொடங்குகின்றன

 

25. காளையும் கரடியும்

“உச்சமெய்துகிறதா?
ஆமாவா?
மேலும் வாய்ப்புள்ளதா?
ஆகா!”

முகமெங்கும் குதூகலம் நெக்குவிட
நிதி ஆலோசகரிடம்
அலைபேசிக்கொண்டிருக்கிற உதடுகளை
மெல்ல முத்தமிட்டுப்
பின்
ஓங்கி அறைந்து
காதுகளில் கிசுகிசுக்கத் தோன்றிய
“என்னை ஒரு நாளாவது
கேட்டிருக்கிறாயா?”
எனும் கேள்வியைப் புறந் தள்ளி
அவன் மிச்சம் வைத்திருந்த
மதிய உணவையும்
அடுத்த நொடி ஒலித்த
“மா, சூடா ஒரு காபி”
எனும் குரலோடு சேர்த்தெடுத்து
மட்கும் குப்பைகளிடும் பைக்குள்
கவனமாய்க் கொட்டியபடி
மூன்று பர்னர்கள்கொண்ட
நவீன சமையலறைக்குள்
நுழைகிறாள்.

 

26. நெடுஞ்சுரம்

வருடத்துக்கொருமுறைவரும் வசந்தத்திற்காய்
வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பவளின்
தேகத்தில் தினமும்
காலையரும்பிப்
பகலெல்லாம் போதாகி
மாலை மலர்ந்து விரிந்து
யாமத்தில் வெதும்பி
வீழும் பூக்களைப்
பதினைந்து நாள் விடுப்பென்னும்
பசும்பொற் சங்கிலியால்
கோர்த்துச் சேர்த்து
மணக்கும்படி
மலர்த்திவிடமுடியுமா?
இலைக்குத் தெளிக்கிற
இரு கை நீரால்
வேரடியில் ஈரம் சேர்ந்துவிடுமா?
பாலை நிலத் தாவரத்தின்
பகற் கனவில்
முப்போதும்
மிதந்துகொண்டிருப்பது
பொழியக் காத்திருக்கும்
மழை மேகங்கள்தாம்.

Natesh Art

27. இதழியல்

முத்த ஆறுகள்
மூர்க்கமாகச்
சுழன்றிறங்கி
மூச்சிறைக்க
மோகக் கடலுள்
நுழைவதற்கான
முகத் துவாரமே
ஈரிதழ்கள் என்பதறியா
மட மாந்தர்
கடமைக்கெனக்
கன்னத்தில்
கணநேரம் ஒற்றியெடுப்பது
காதலுக்குமாத்திரமல்ல
கடை திறவாக்
காமத்திற்குமே இழுக்கு.

 

28. ஏனென்றால்

பதியனிட்ட ரோஜாச் செடியின்
இலைகளை வருடித் தந்து
சீக்கிரமே பூத்துவிடச் சொல்லி
சின்னஞ்சிறுமியொருத்தி
இறைஞ்சுவதுபோல்
உள் பெட்டிக்
குறுந்தகவல்களில்
நலமா
காலை வணக்கம்
உணவருந்தினாயா
உறங்கினாயா
உறக்கத்தில் கனவு வந்ததா
என்றென் உணர்வுகளை நெடுங்காலமாக
நீவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்!

பதிலாக
ஒரு காபி சாப்பிடலாமா என்று
நேரடியாகக் கேட்டிருக்கலாம்
நீ

சிரிக்கும்போது சுருங்கிவிரியுமந்தச் சிறிய விழிகளை,
உள்ளத்திலிருந்து பெருகி உதடுகளினூடே வழியும் சிரிப்பை,
நீண்ட கால்களை,
நீ எப்போதும் கட்டிக்கொண்டு
அமரும் கைகளை,
பேசுபவளின் மார்பை
பாராததுபோலப் பார்க்காமல்
கண்களை மட்டுமே பார்க்கும் கண்ணியத்தை,
என் விரல்களின் தடவலுக்காகக்
காத்திருக்குமுன் கரிய தாடியை,
வசீகரமான உன் குரலை,

….
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே
எதை எதையோ பேசியபடியோ
அல்லது
இவையெல்லாம் ஏதுமின்றியோ
இழுத்துவைத்து உன்னை
முதல்முறையாக
முத்தமிட்டிருப்பேன்.

நீ
இன்றுதான்
இதயக்குறி இடத் தொடங்கியிருக்கிறாய்
என் புகைப்படங்களுக்கு.

 

29. இறுதிச்சுற்று

தாளிடப்பட்ட
தனியறைக்குள்
உருவற்ற நறுமணமாய்ப்
பரவுகிற நினைவுகளால்
மூச்சு முட்டியதில்
வெளியேறிவிடத் தவிக்கிறது
ஒரு காதல்.

அறைக்குள் சுற்றி சுற்றி வந்து
கதவைத் திறந்து வெளியேவிடச் சொல்லித்
தீனமாகக் குரல் கொடுக்கிறது
அது.

கதவின் மறுபுறத்தில்
இன்னொரு குரல்
கதவைத் திறந்து தன்னை உள்ளே அனுமதிக்குமாறு
கண்கலங்க யாசித்துக்கொண்டிருக்கிறது.

காற்றுப் புகவும் வழியற்ற
அந்தக் கதவின் இருபுறமும்
இரண்டு ஆன்மாக்கள் கதறுவதை
இமைக்காது நோக்கிக் கொண்டிருக்கிறது
இழுத்துக் கட்டிய நேசச் சங்கிலியின்
இறுதிக் கண்ணி
இறுக்கம் தளர்ந்தபடி.

உதடுகள் மட்டும் மறுகின:
இறுதியாக
ஒருமுறை
ஒரேமுறை
எங்களுக்கிடையே உங்கள் சொற்களை வைக்காதிருங்கள்
போதும்.

தொடரும்
கயல் <dr.kayalvizhi2020@gmail.com>

KAYAL

Amrutha

Related post