ஏற்பியல் – அழகியசிங்கர்

சுந்தர ராமசாமி, 1991ஆம் ஆண்டு ‘காலச்சுவடு’ ஆண்டு மலர் கொண்டு வந்தார். பெரிய முயற்சி அது. 293 பக்கங்கள் கொண்ட மலர் அது. இந்த மலரின் ஒரு பிரதியை விருட்சத்திற்கு அனுப்பியிருந்தார். இதற்கு விமர்சனம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த மலரில் சுந்தர ராமசாமி கூறுகிறார்: ‘காலச்சுவடின் எட்டு இதழ்களும் இப்போது இந்தச் சிறப்பிதழும் வெளியாகியிருக்கின்றன. ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பன்முக ஆற்றல்களில் பலவும் இல்லாத நிலையில் என் நண்பர்கள் பலரும் மனபூர்வமாக உதவியது மூலமே நான் இந்தப் பணியைச் செய்ய முடிந்தது.’
இன்னொரு இடத்தில்: ‘காலச்சுவடைத் தொடர நான் அதிக அளவுக்கு என்னை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டியநிலை இப்போது. தமிழ் வாசகர்களிடமிருந்து மட்டுமே – அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பினும் கூட – நான் ஊக்கம் பெற்று வந்திருக்கிறேன். என்னுடைய நாளைய செயல்பாடுகளுக்கு அவர்கள் தரும் ஊக்கத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார்.
15 கட்டுரைகள், 10 கதைகள், 7 மதிப்புரைகள், 28 கவிதைகள், 2 நாடகங்கள் என்று இவ்விதழ் சிறப்பாகவே வெளிவந்திருக்கிறது. இம்மலரைப் படிக்கும்போது சுந்தர ராமசாமியின் முயற்சி அபார முயற்சியாகத் தோன்றுகிறது. சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் போற்றி பாதுகாக்க வேண்டிய மலர். ஆனால், இந்த மலருக்கு வந்த விமர்சனங்கள் மோசமான பார்வையைக் காட்டுகிறது.
இந்த சிறப்பு மலரை ஐராவதம் விருட்சத்தில் விமர்சித்திருந்தார். அதில், ‘சுந்தர ராமசாமி தனக்குப் பிடிக்காத இலக்கிய வாலிகளை வீழ்த்த மதிப்புரையாளர்களாகிய சுக்கிரீவர்களைப் பயன்படுத்துகிறார்’ என்று கூறியிருந்தார் ஐராவதம்.
ஏன் இதுமாதிரி நிகழ்கிறது?
காரணம், சுந்தர ராமசாமி தேர்ந்தெடுத்த படைப்பாளிகள். இதில் எழுதிய எல்லோரும் சுந்தர ராமசாமிக்கு வேண்டிய எழுத்தாளர்கள். மலர் சிறப்பானதுதான். ஆனாலும், ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதுபோல், ‘காலச்சுவடு சிறப்பு மலர்’ அன்று பல எழுத்தாளர்களுக்கு ஏற்பியலாக இல்லை.
இது தவிர்க்க முடியாதது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, சுந்தர ராமசாமியின் சிறப்பு மலரை ஏற்க முடியவில்லை. ஐராவதம், அவருடைய பங்கும் காலச்சுவடில் ஏற்கப்பட்டிருந்தால் வேறுவிதமாக காலச்சுவடு மலரை கணித்திருப்பார். ஐராவதம் இலக்கிய உலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியவர். அவரை யாரும் ஏற்கவில்லை எAmruthathilagavathiன்பதால் ஏற்பட்ட ஆதங்கம்தான் அவருடைய விமர்சனத்திற்குக் காரணம்.
“ஆம், இத்தகைய இலக்கிய அரசியல் சூழ்ச்சிகள்தாம் நீல. பத்மநாபனின் 1200 பக்க நாவலை நியாயப்படுத்துகிறது” என்கிறார் ஐராவதம். தன்னை பொருட்படுத்தப்படவில்லை என்ற ஆத்திரம்தான் அவரை அப்படி எழுத வைத்திருக்கும். சுஜாதாவும் இந்த மலரை அப்போது வெளிவந்து கொண்டிருந்த ‘சுபமங்களா’ என்ற பத்திரிகையில் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த மலரில் பலரைக் கண்டுகொள்ளவில்லை என்பதும் உண்மை. ஞானக்கூத்தன் ‘கட்டுரைக்காக’ என்ற புத்தகத்தில் ‘ஏற்பியல்’ என்ற தனி அத்தியாயத்தில் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
இன்று பல ஏற்பியல்கள் உள்ளன. ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு ஏற்பியல் உள்ளது. குமுதத்தின் ஏற்பியல் விகடன், கல்கிக்கு இல்லை. விகடனுக்கே இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த ஏற்பியல் இன்று இல்லை. பெரிய பத்திரிகைகளின் ஏற்பியல் ஒத்து வராததால்தான் சிறுபத்திரிகைகள் வந்தன.
சிறுபத்திரிகை எழுத்தாளர்களிடையேயும் பல ஏற்பியல்கள் உள்ளன. இந்த விதமாகத்தான் சுந்தர ராமசாமி தனக்குகந்த படைப்பாளிகளின் படைப்புகளை வாங்கி ‘காலச்சுவடு சிறப்பு மலர்’ கொண்டு வந்தார். இதைத் தவறாக நான் கூறவில்லை.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு தன்னுடைய படைப்புகளை அங்கீகரிக்கவில்லை என்ற கோபம் இருந்திருக்கலாம்.
சுஜாதாவால் ஏன் இந்த மலரை ஏற்க முடியவில்லை? அவருடைய ஏற்பியல் வேற மாதிரி இருக்கிறது. அவர் இப்படி ஆரம்பிக்கிறார்: ‘தமிழ்ப் பத்திரிகைகளை தற்போது தெளிவாக இருவகையில் பிரிக்க முடிகிறது. வெகுஜனப் பத்திரிகைகள், சிறு பத்திரிகைகள். இவ்வாறான ஒன்றுக்கொன்று குறுக்கிடாத பிரிவு மற்ற மொழிகளில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. மலையாளத்தில் கிடையாது என்று நண்பர் நீல. பத்மநாபன் சொன்னார். தமிழில் இரண்டு உலகங்களும் வெவ்வேறு தளத்தில் ஒன்றை ஒன்று கண்டுகொள்ளாமல் இயங்கினாலும், இரண்டையுமே உருவம், உள்ளடக்கம் போன்றவற்றில் மிகவும் எதிர்பார்க்க முடிகிறது. சிறு பத்திரிகைகளிலும் ஒரு சிலர்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள். ஓரிரண்டு ஓவியர்கள்தான் படம் போடுகிறார்கள். ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டு, கட்டுரைகள் எழுதிக்கொண்டு, சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. ஸ்டரக்சரலிஸம், ஆல்பேர் காம்யு, தாஸ்தாய்வஸ்கி, க.நா.சு., மௌனி, எக்ஸிஸ்டென்சியலிஸம், புரிசை தம்பிரானின் தெருக்கூத்து – இம்மாதிரி சில தலைப்புகளில் கட்டுரைகளை அடக்கிவிடலாம். நவீன தமிழிலக்கியம் என்பது இவை இரண்டுமே இல்லை என்கிற சித்தாந்தத்தை உங்கள் முன் வைக்கிறேன்.’
பின் காலச்சுவடு சிறப்பு மலரை கடுமையாக விமர்சிக்கிறார். சுஜாதா பிரபலமான எழுத்தாளர். அவருக்குப் பல விஷயங்களைக் கிரகித்து வாதாட முடிகிறது. ஆனால், சுந்தர ராமசாமியின் ஏற்பியல் சுஜாதாவை ஏற்கவில்லை.
காலச்சுவடு மலரில் வந்துள்ள சிறுகதைகளை விமர்சிக்கும்போது, “எல்லோரிடமும் ஒரு ஸ்லோமோஷன் தன்மையும் சிறுகதை வடிவத்தைப் பற்றிய தீர்மானமின்மையும் இருக்கிறதைக் கவனிக்கிறேன்” என்கிறார் சுஜாதா.
உடனே சுந்தர ராமசாமி, ‘சுஜாதாவின் வெளிநாட்டுக் குடை’ என்று தாக்கினார். ‘காலச்சுவடு மலரில் வெளியாகி இருக்கும் விஷயங்கள் வறண்ட, சிக்கலான, கடுமையான மொழியில் எழுதப்பட்டவை அல்ல. ஒரு 300 பக்கங்கள் உள்ள இந்த மலரின் பெரும்பகுதியை ஒரு வாசகன் எவ்விதச் சிரமுமின்றி படித்து விட முடியும். தமிழ்ச் சூழல் பற்றி அறிந்திருக்கும் சுஜாதா அவருடைய அறிவை ஒளித்து வைத்துக்கொண்டு காலச்சுவடை உற்சாகமாகக் கிழிக்கிறார்’ என்கிறார் சுந்தர ராமசாமி.
விருட்சத்தில் ஐராவதம் எழுதிய விமர்சனத்திற்கும் சுந்தர ராமசாமி தன் எதிர்ப்பை தெரிவிக்காமல் இல்லை. விருட்சம் ஆசிரியருக்கு எழுதியதில், ‘300 பக்கங்கள் கொண்டதாகக் காலச்சுவடு மலரை நான் வெளியிட்டுள்ளதன் நோக்கம் என்னை நவீன இலக்கிய உலகில் ஞானத்தந்தையாக அறிவிக்கும் முயற்சி என்று உங்கள் மதிப்புரையாளர் கூறுகிறார். காலச்சுவடு மலரில் எந்தப் பக்கத்தில் வெளியாகியிருக்கும் எந்த வரிகள் அல்லது மனோபாவம் அவருக்கு இந்த உண்மையை அல்லது சந்தேகத்தைத் தோற்றுவித்தது என்பதற்கான ஆதாரத்தைக் கோடி காட்டக்கூட வில்லை’ என்று கூறினார்.
இன்னும் பலரும் காலச்சுவடில் எழுதியவர்கள் காரசாரமாகக் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். அந்த சிறப்பு மலரில் இடம்பெற்றவர்களும் ஐராவதத்தைச் சாடினார்கள். காலச்சுவடு மலர் விமர்சனத்திற்கு இவ்வளவு எதிர்ப்புக் கடிதங்களா? ஏன் இப்படி?
எல்லாம் ஏற்பியல்தான் காரணம். இப்போதும் பலவிதமாக இந்த ஏற்பியல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அழகியசிங்கர் <navina.virutcham@gmail.com>