தொ.மு.சி. ரகுநாதன் நூறாண்டு: கருத்துப் போராளி – முருகபூபதி

 தொ.மு.சி. ரகுநாதன் நூறாண்டு: கருத்துப் போராளி – முருகபூபதி

மகாலம் எழுத்தாளரும் சமரசங்களுக்குட்படாத கருத்துப் போராளியுமான  தொ.மு.சி. ரகுநாதன் என்ற தொ.மு. சிதம்பர ரகுநாதன் பிறந்த நூற்றாண்டு காலமாகும். 1923ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருநெல்வேலியில் பிறந்த ரகுநாதன், 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, தமது 79ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார். எனக்கு உறவு முறையில் தாத்தாவானவர் ரகுநாதன்.

இறுதியாக 1990இல் திருநெல்வேலி பெருமாள்புரத்திலிருந்த அவரது இல்லத்திற்கு குடும்பத்தோடு விருந்தினராகச் சென்றேன். எனது அப்பாவின் வழியில் அவர் எனது நெருங்கிய உறவினர் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமை தரும் விஷயம். அவரது மருமகள் (மகனின் மனைவி) மாலதி ஹரீந்திரன் எனக்கு அண்ணி முறை. இந்த உறவு முறைகளுக்கெல்லாம் அப்பால் ரகுநாதனை நான் பெரிதும் மதிப்பதற்கு பல காரணங்கள் இருந்தன. அதனாலேயே அவரது மறைவின் பின்னர் எனது ‘பறவைகள்’ நாவலை அவருக்கே சமர்ப்பித்தேன்.

ரகுநாதன் குறித்து என்னால் சொல்லக்கூடியது இதுதான்:- ‘ரகுநாதனது வாழ்க்கை சமரசங்களுக்குட்படாத ஒருவரின் துணிவு, உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.’ புதுமைப்பித்தனின் நெருங்கிய சகாவான ரகுநாதன், “புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” என்று எழுதி எமக்கு பாடம் புகட்டியவர்.

சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வு, மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் பல நூல்களை வரவாக்கியிருப்பவர். இந்திய சாகித்திய அகடாமி விருது, சோவியத் லாண்ட் நேரு விருது உட்பட பல விருதுகளும் பெற்றவர். ‘சாந்தி’ என்ற இலக்கிய இதழை நடத்தியவர். இவ்விதழில்தான் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரின் ஆரம்ப கால படைப்புகள் வெளியாகின. ரகுநாதன், இலக்கிய சர்ச்சைகளையும் உருவாக்கியவர்.

 

1956ஆம் ஆண்டில் நான் ஐந்து வயதுச் சிறுவன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடாளாவிய ரீதியில் பாரதி விழாக்களை நடத்தியபோது அதற்குப் பிரதம பேச்சாளராக ரகுநாதனை இலங்கைக்கு அழைத்திருந்தது. தமது பயணங்களின் நடுவே – நீர்கொழும்பில் எம்மையும் பார்ப்பதற்காக ஒரு இரவுப் பொழுதில் – சிலருடன் திடுதிப்பென காரில் வந்து இறங்கினார். எனக்கு அந்தச் சம்பவம் கனவாகவே நினைவில் பதிந்துள்ளது. உடன் வந்தவர்கள் யார் என்பதும் தெரியாது. அப்பா அச்சமயம் வெளியூர் போயிருந்தார்.

எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நண்பர்களுடன் படகில் புறப்பட்டு புத்தளத்தில் கரையிறங்கிய எனது அப்பா, மீண்டும் அதன் பின்னர் தமிழகம் செல்லாமலேயே நீர்கொழும்பில் 1983 ஆகஸ்டில் மறைந்தார்.

சொந்த பந்தங்களை துறந்து புறப்பட்டு வந்தவரை நேரில் பார்ப்பதற்காக வந்த அப்பாவின் மாமன் முறையான ரகுநாதன், அவரைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்

மீண்டும் 1983 முற்பகுதியில் இலங்கையில் இ.மு.எ.ச. பாரதி நூற்றாண்டை நாடாளவிய ரீதியில் நடத்திய பொழுது, ரகுநாதன், பேராசிரியர் ராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோருடன் வந்திருந்தார். இச்சமயத்தில் நானும் எழுத்தாளனாக அறிமுகமாகயிருந்தேன். ரகுநாதனுடன் எனக்கு கடிதத் தொடர்புகளும் இருந்தன.

ரகுநாதனின் அண்ணன், தொ.மு. பாஸ்கரத் தொண்டமானும் எழுத்தாளர்தான். கல்கி கிருஷ்ணமூர்த்தி, இரசிகமணி டி.கே. சிதம்பரநாதன் ஆகியோரின் உற்ற நண்பர். அத்துடன் பாளையங்கோட்டையில் கலெக்டராகவும் (ஐ.ஏ.எஸ். அதிகாரி) பணியாற்றியவர். பாஸ்கரத் தொண்டமான் 1963இல் இலங்கை வந்த சமயம் எமது வீட்டுக்கு வந்த பொழுது அப்பா ஒரு பெரிய இராப்போசன விருந்தையே அவருக்காக ஏற்பாடு செய்திருந்தார்.

ரகுநாதன் மீண்டும் 1983இல் இலங்கை வந்தபோது, ஒரு எழுத்தாளன் என்ற உணர்வுக்கும் அப்பால் உறவினன் என்ற ரீதியில் உரையாடும் உறவாடும் வாய்ப்புக் கிட்டியது.

புதுமைப்பித்தன் இலக்கிய உலகில் எதிர்நோக்கிய சவால்களை வேறு உருவத்தில் வேறு வகையில் எதிர் நோக்கியவர் ரகுநாதன். வணிக நோக்கில் வெளியான இதழ்களில் ரகுநாதன் எழுதவில்லை. ஒருகட்டத்தில்  சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு, மொழிபெயர்ப்பு – பாரதி ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். தமிழ்நாடு சோவியத்நாடு -தகவல் பிரிவு – ரகுநாதனின் இலக்கிய வேட்கையை சுரண்டி எடுத்ததோ என்று எண்ணுமளவுக்கு அவரது சிருஷ்டி இலக்கியங்கள் வெளியாகவில்லை.

எனினும், மக்ஸிம் கோர்க்கியின் ‘தாய்’ உட்பட பல சோவியத் இலக்கியங்களை அவர் தமிழுக்குத் தந்ததுடன் பாரதி இயல் ஆய்வாளராகவும் பரந்தளவில் அறியப்பட்டார். ‘கங்கையும் காவிரியும் பாரதியும் ஷெல்லியும்’, ‘பாரதி: காலமும் கருத்தும்’, ‘பாரதியும் புரட்சி இயக்கமும்’, ‘பாரதி சில பார்வைகள்’, ‘பாஞ்சாலி சபதம் உறை பொருளும் மறை பொருளும்’, ‘இளங்கோவடிகள் யார்?’, ‘இலக்கிய விமர்சனம்’ முதலானவை ரகுநாதன் எமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய நூல்கள்.

அவர் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ எமக்கெல்லாம் ஒரு பாடநூல். மூன்று பதிப்புகளைக் கண்ட இந்நூலின் மூன்றாவது பதிப்பில் – அனுபந்தமாக – சுந்தர ராமசாமியின் கேள்விகளுக்கு ரகுநாதன் அளித்த பதில்கள் பல பக்கங்களில் வெளியாகியுள்ளது.

காவிய இலக்கிய மாந்தர்களை புதிய சிந்தனையுடன் புதிய பார்வையுடன் எவருமே நினைத்துப் பார்த்திராத வடிவில் ‘அகல்யை’, ‘சாபவிமோசனம்’ முதலான கதைகளில் புதுமைப்பித்தன் சித்திரித்தது போன்று ரகுநாதனும் சில காவிய – புராண மாந்தர்களை முற்றிலும் புதிய கோணத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரகுநாதனின் ‘வென்றிலன் என்ற போதும்’ என்ற கம்பராமாயணத் தொடரைத் தலைப்பாகக் கொண்ட கதையை டாக்டர் இரா.தண்டாயுதம், ‘தமது தமிழ்ச் சிறுகதை’ முன்னோடிகள் என்ற நூலில் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளார். அதனை இங்கே அப்படியே தருகின்றேன்.

Puthumaipiththan Varalaru, Tho.Mu.C. Ragunathan‘ஐவருக்கும் நான் பத்தினியானேன். எனக்கு வாய்ந்த ஐந்து கணவர்களும் என்னிடம் நடந்துகொண்ட விதம்தான் என்னைக் கர்ணனைப் பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச் சென்றது. இந்த ஐவருக்கும் மேலாக கர்ணனிடம்தான் எனக்கு மனசு ஒட்டக்கூடிய பாசம் இருந்தது. தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவி என்றால் சதி என்ற தெய்வீகப் பொருள். அவர் பள்ளியறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென்று நீதி சாஸ்திரம் போதிக்க ஆரம்பித்துவிடுவார். பீமரோ, காதலுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை. இடும்பைதான் அவருக்குச் சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜூனனுக்கு நான் பலரில் ஒருத்தி, அவருக்கு சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரௌபதியானாலும் சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல, சகாதேவர்கள் என் கண்ணுக்கு கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக் குஞ்சுகளாகத்தான் தோன்றினர். இதனால்தான் இந்த ஐவரில் எவர் மேலும் அன்பு செலுத்த முடியவில்லை. உலகமும் அவர்களும் என் பரிவையும் பச்சாதாபத்தையும் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும். எனினும் எனக்கு கர்ணன் மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக் கூடக் கட்டுக்குலைக்காமல் காத்து வந்தது.
இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் இன்றோடு உதிர்ந்தது என்றுதான் கொள்ள வேண்டுமா…?’

கர்ணனுக்கு அர்ஜூனனுக்கும் போர் நடந்து கர்ணன் தோற்று இறந்தும் விட்டான் என்று கேள்விப்படும் பாஞ்சாலி இப்படி நினைப்பதாக உங்களால் கற்பனையாவது செய்துபார்க்க முடியுமா? இல்லை, “குந்தியின் பாவம், திரௌபதியின் காதல், அர்ஜூனனின் கர்வம், தருமனின் மடமை, சூரியனின் கயமை – எல்லாம் கர்ணனின் மரணத்தோடு மாய வேண்டியவைதான்” என்று எண்ணும் கண்ணனைத்தான் கற்பனை செய்ய முடியுமா?

என்றெல்லாம் இரா. தண்டாயுதம் கேள்விகள் எழுப்பி ரகுநாதனின் இந்த ‘வென்றிலன் என்ற போதும்’ சிறுகதையை அரியதொரு படைப்பு என்று புகழாரம் சூட்டுகிறார்.

பாரதிக்கும் பாஞ்சாலியிடத்தில் பரிவு இருந்தது. அதனால் ‘பாஞ்சாலி சபதம்’ எமக்கு கிடைத்தது. ரகுநாதனுக்கும் இந்த பாஞ்சாலி மீது பச்சாதாபம் இருந்திருக்க வேண்டும். அதனால், ‘வென்றிலன் என்ற போதும்’ எழுதியதுடன் நில்லாமல், ‘பாஞ்சாலி சபதம் உறைபொருளும் மறை பொருளும்’ என்ற தலைப்பில் 1987இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவான சொற்பொழிவாற்றினார். பின்னர் இது நூலாக வெளிவந்தது.

 

குநாதனின் கதைகளை திறனாய்வு செய்துள்ள தண்டாயுதம் இரண்டு வகையில் அவரைப் பிரித்துப் பார்ப்பதற்கு நியாயங்கள் இருந்தன. ஆரம்பகாலக் கதைகளில் ரகுநாதன் கலைஞராக மிளிர்ந்ததாகவும் பின்னர் கொள்கையாளராக இருந்தே சிறுகதைகளைப் படைத்திருப்பதாகவும் தண்டாயுதம் சொல்வதில் உண்மை இருக்கிறது.

மில் தொழிலாளர்களை பாத்திரங்களாக படைத்து ரகுநாதன் எழுதிய ‘நீயும் நானும்’ என்ற சிறுகதையை படித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அது நான் எழுத ஆரம்பித்த காலப்பகுதி. ஆனால், ரகுநாதன் எனக்கு பதில் எழுதவில்லை. தமது பிள்ளைகளின் திருமண அழைப்பிதழையே அனுப்பியிருந்தார். எனக்கும் ஏனையவர்களைப் போன்று அக்கதை குறித்து விமர்சனம் இருந்தது. ஜெயகாந்தனும் இது பற்றி கடுமையாக எழுதினார். முற்போக்கு எழுத்தாளர் மத்தியிலும் இக்கதை கண்டனத்திற்குள்ளானது.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு ரகுநாதனுடன் முதல் தடவையாக மட்டக்களப்புக்கு இரவு ரயிலில் பயணமானபொழுது நான், “அந்த ‘நீயும் நானும்’ என்ற கதை தொடர்பாக உங்களுக்கு எழுதியிருந்தேனே… ஏன் அது பற்றி மூச்சே காட்டவில்லை” என்றேன்.

ரகுநாதன் சிரித்தார்.

தனக்கும் அந்தக் கதை குறித்து உடன்பாடு இல்லை. ஒரு வகையில் வரட்டுத்தனமான கொள்கையின் வெளிப்பாடு. அவ்வாறு எழுதியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டதுடன் சில போர்க்கால கதைகளை எனக்குச் சொன்னார்.

ரகுநாதனின் மகன் ஹரீந்திரனின் மனைவி மாலதியும் எழுத்தாளர்தான். மாமனார் புதுக்கவிதைக்கு எதிரியாக இருந்தார். மருமகள் மாலதியோ புதுக்கவிதை எழுதும் படைப்பாளி. மாலதி, திருநெல்வேலியில் சாராள் தக்கர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ‘எண்ணக்கோடுகள்’ என்ற இவரது புதுக்கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். 1978இல் இது வெளியான பொழுது கண்ணதாசன் தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார். ரகுநாதன், தமது மருமகளின் இக்கவிதை நூல் குறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

மாலதியின் கவிதைகள் ‘கண்ணதாசன்’, ‘தீபம்’, ‘தாமரை’ முதலான இதழ்களில் வெளிவந்தன. புதுக்கவிதை எதிர்ப்பாளரான ரகுநாதன், மருமகளின் நூல் குறித்து அபிப்பிராயம் எதுவும் தெரிவிக்காதமை வியப்பன்று. ஆனால், மாலதி தமது பட்டப்படிப்பிற்காக ரகுநாதனின் எழுத்துக்களையே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.

‘ஆனந்த விகடன்’ இதுபற்றி குறிப்பிடும் பொழுது– “வழக்கமாக மாமனார்தான் மருமகளை ஆராய்ந்து தெரிவு செய்வார். ஆனால், இங்கே ஒரு மருமகளே தமது மாமனாரை ஆராய்ச்சி செய்து எழுத முன்வந்துள்ளார்” எனக் குறிப்பிட்டது.

1951இல் புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன், கோமல் சாமிநாதனின் ‘சுபமங்களா’ இதழில் 1992இல் புதுமைப்பித்தன் குறித்து சர்ச்சை எழுந்த போது வெகுண்டெழுந்தார். புதுமைப்பித்தன் மேலைநாட்டு இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்களை என்றைக்குமே தமிழில் எழுதியதில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க ‘சுபமங்களா’ செப்டம்பர், அக்டோபர் – 1992 இதழ்களை நன்கு பயன்படுத்தினார்.

பின்னர் ‘புதுமைப்பித்தன் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்’ என்ற நூலை விரிவாக எழுதினார். இதனை சென்னை நியூசெஞ்சரி புக் ஹவுஸ் வெளியிட்டது. செல்லப்பா, சிட்டி, கண. முத்தையா உட்பட பலரை ரகுநாதன் இந்த நூலில் விமர்சித்திருந்தார்.

 

குநாதன் தமது இறுதிக் காலத்திற்கு சற்று முன்பாக சிலப்பதிகார ஆராய்ச்சியிலும் திருக்குறள் ஆராய்ச்சியிலும் தீவிரமாக ஈடுபட்டவர். ‘இளங்கோவடிகள் யார்’ – என்ற இவரது விரிவான நூல் வெளியாகுமுன்பே, அது குறித்து என்னிடம் பிரஸ்தாபித்தார். 1984இல் ஏப்ரல் மாதம் சென்னையில் அவரைச் சந்தித்த போது அவர் வீட்டிலிருந்து இந்த நூலையே எழுதிக் கொண்டிருந்தார். அது வெளியானதன் பின்பு அது குறித்து விரிவான விமர்சனம் எழுதியவர் எங்கள் இலங்கைப் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான். அந்த நூலை 1990இல் திருநெல்வேலியில் பெருமாள்புரத்தில் ரகுநாதன் இருந்த பொழுது எனக்கு காண்பித்தார்.

இறுதியாக 1990 ஏப்ரல் மாதம் ரகுநாதனின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் உணவு பரிமாற ஒன்றாக அமர்ந்து மதிய விருந்துண்டேன். இதுவே இறுதிச் சந்திப்பு.

‘இளங்கோவடிகள் யார்?’ என்ற ரகுநாதனின் நூல் எண்ணூறு பக்கங்களை கொண்டது. சிலப்பதிகாரம் தொடர்பாக காலம் காலமாகப் பேசப்பட்டுவந்த கதைகளுக்கு எதிர்வினையாகவும் இந்த நூல் பேசப்பட்டது. ‘சிலப்பதிகாரம் பற்றி மரபுவழியான கருத்துப் படிமங்களை தகர்த்தெறிந்த நூல்தான் இளங்கோவடிகள் யார்? என்ற ஆய்வு நூல்’ என்று பேராசிரியர் எஸ். தோதாத்திரி எழுதியுள்ளார்.

தமிழ்நாடு திருநெல்வேலி பிரதேசத்தில் வாழ்ந்த கைத்தறி நெசவாளர்களின் போராட்ட வாழ்வை சித்திரித்த ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவல், செக் மொழியிலும் பெயர்க்கப்பட்டு, அந்த நாட்டில் அக்காலத்திலேயே ஐம்பதினாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. ‘பஞ்சும் பசியும்’ காமிஸ்வலபில் என்ற புகழ்பெற்ற எழுத்தாளரினால் செக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

‘பஞ்சும் பசியும்’ நாவலை எமது இலங்கைப் பேராசிரியர் க. கைலாசபதி, தான் எழுதிய தமிழ் நாவல் இலக்கியம் நூலில் சோஷலிஸ யதார்த்தப் பார்வையுள்ள படைப்பு என சிலாகித்துள்ளார்.

ரகுநாதனின் பிறந்த நூற்றாண்டு இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து ஆரம்பமாகிறது.

முருகபூபதி <letchumananm@gmail.com>

murugapoobathy

Amrutha

Related post