பாரதியின் அகமும் புறமும் – இந்திரா பார்த்தசாரதி

 பாரதியின் அகமும் புறமும் – இந்திரா பார்த்தசாரதி

பாரதியின் ‘கவிதைக் காதலிக்கு’ ஒரு மறு வாசிப்புத் தேவை.

கவிதையில் காணும் கதை: பாரதி கூறுவது உபநிஷதத்தில் வரும் கதை.

ஒரு முனிவன் பன்றியாகப் போகச் சபிக்கப்படுகிறான். பன்றியாக போனதும் தன்னைக் கொன்றுவிடும்படித் தன் மகனிடம் கூறுகின்றான் அம்முனிவன். மகன் கொல்ல முற்படும்போது, மகனிடம் சொல்வான் முனிவன்: “மகனே என்னைக் கொல்லாதே. சில நாட்கள் நான் பன்றியாக இருக்க விரும்புகின்றேன். இவ்வனுபவம் எப்படி இருக்கின்றது என்று பார்க்கிறேன். பிறகு கொல்லலாம்.”

சில நாட்கள் கழித்து மகன் அவனைக் கொல்ல வரும்பொது, பன்றி உருவிலிருந்த முனிவன் கூறுவான், “மகனே! பன்றியாக இருப்பது எவ்வளவு சுகமாக இருக்கின்றது தெரியுமா? நான் மறுபடியும் முனிவனாக மாற விரும்பவில்லை. உனக்கு நான் பன்றியாக இருப்பது பிடிக்கவில்லை என்றால் நீ தற்கொலை செய்துகொள்.”

இதற்குப் பின் பாரதி முத்தாய்ப்பாகக் கூறுவதுதான் பாரதிக்கு மறு வாசிப்புத் தேவை என்று எனக்கு அறிவுறுத்தியது.

பாரதி சொல்கிறார்:

வாராய்! கவிதையாம்
மணிப் பெயர்க் காதலி!
அந்த நாள் நீ யெனை
அடிமையாகக் கொள
யாம் மானிடர்க் குழாத்தின்

மறைவுறத் தனி இருந்து
எண்ணிலா இன்பத்து
இருங்கடல் திளைத்தோம்’
(ஆனால்)
அடிநா முள்ளினை
அயல் சிறிது ஏகி
களைந்து பின் வந்து
காண்பொழுது அய்யகோ!
மறைந்ததுதெய்வ மருந்துடைப்
பொற்குடம்!’
சின்னாள் கழிந்தபின்
யாதெனச் செப்புகேன்
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே
தேய்ந்தது!’

பன்றிக் கதையாகிய இந்த உபநிடக் கதை. அதன் மூலம் தமக்கேற்பட்ட அநுபவத்தைக் கூறுகிறார் பாரதி.

’பன்றி வாழ்க்கை’ என்பது எது? அவர் எட்டையபுரத்தில் ஜமீந்தாருடன் இருந்த வாழ்க்கை அனுபவமா அல்லது அவர் மனத்தை அரித்துக் கொண்டிருந்த வேறு விஷயம் ஏதாவது இருக்குமா?

இளம் வயதில் நாமகளிடம் காதல் பூண்டு (மூன்று காதல்) கவிதைக்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்த அவர், பின்னர் வேதனை உறுவதற்கான காரணம் என்ன?

‘பாரதி தேசியக் கவிஞர், நாட்டு விடுதலைக்காக மக்களைத் தம் கவிதைகள் மூலம் தட்டி எழுப்பிய எழுத்துச் சிற்பி. சமூகச் சிறுமைகளைச் சாடியவர். சரித்திரம் இதற்கென்றே அவரைத் தேர்ந்தெடுத்தது’ என்றெல்லாம் நாம் பாரதியைப் பற்றிக் கூறுகிறோம். பாரதி வாழ்ந்த காலத்தில் சொல்லவில்ல என்றாலும், அவர் இறந்த பிறகு சொல்லி வருகிறோம்.

ஆனால், பாரதி தம் கவித்துவத்தின் எல்லை இதனுடன் முடிந்துவிட்டது என்று தமக்குள் நினத்திருக்கக் கூடுமா அல்லது அவருடைய அந்தரங்க மனத்தில் வேறு குரல் ஒலித்திருக்குமா என்று சிந்திக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

பாரதியின் அந்தரங்கக் குரல் எது, பகிரங்கக் குரல் எது?

‘பராசக்தி’ என்ற கவிதையில், பாரதி கூறுகிறார்: ‘நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் களையப்’ பாட நான் நினைத்த போது, ‘கூட்டி மானுடச் சதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுவதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்ட’ நான் முற்படும்போது, ‘அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.’

‘பராசக்தி’ யார்?

‘அல்லினுக்கும் பெருஞ்சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார்’. ‘கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால், கால வெள்ளத்திலே நிலை காணுங்கால், புல்லினுள் வயிரப்படைக் காணுங்கால், பூதலத்தில் பராசக்தி தோன்றுமே.’

இன்னோர் இடத்தில் பாரதி கூறுகிறார்: ‘பாட்டினில் வந்த களியே (Ecstasy) சக்தி! ‘அதாவது கவிதையும் தெய்வமும் வெவ்வேறில்லை, கவிதையே தெய்வம் என்று உணர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை’ என்பது பாரதியின் கருத்து. பாட்டினில் வரும் களிக்குச் சான்று வேண்டுமா? அவருடைய ‘ஊழிக் கூத்தே’ உதாரணம். கருவும் உருவும் இயைந்துக் களிநடம் போடுவதைப் பார்க்கலாம்!

பாரதியின் குரல், இத்தகைய கவிதைகளை இயற்றும்போது, உலகுக்கு உபதேசம் செய்ய வேண்டியது தம் சமூகப் பொறுப்பு என்பது போல் ஒலிக்கவில்லை. கவிதைக் காதலிக்கும் அவருக்குமிடையே நிகழும் அந்தரங்க உரையாடல் போல் ஒலிக்கின்றது.

கடமை புரிவர் இன்புறுவர்
என்னும் பண்டைக் கதை பேணோம்
கடமை அறியோம் தொழில் அறியோம்
கட்டென்பதனை வெட்டென்போம்.
மடமை, சிறுமை, துன்பம் பொய்
வருத்தம், நோவு, மற்றிவை போல்
கடமை நினைவும் தொலைத்திங்கு
களியுற்று எங்கும் வாழ்குவோமே!

மேலும், ‘அன்பு செய்தல்’ என்ற கவிதையில் கூறுகிறார்; ‘இந்தப் புவியில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூச்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஓடை, மூலிகை, பூண்டு புல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்கின்றனவோ?’

மானுடர் வாழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டா விடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையாய் நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றோ!
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே நீவிர்
என் மதத்தைக் கைக்கொள்ளுமின்
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்கு இங்கே தொழில் அன்பு செய்தல் கண்டீர்!’

ஆகவே பாரதியிடம் தொடக்கத்திலிருந்தே ஒன்றுகொன்று மாறுபடுவன போன்ற மனநிலைகள் இருந்து வந்திருக்கின்றன.

கவிஞன் என்ற நிலையில் அழகுணர்ச்சிக் கோயிலின் கர்ப்ப கிருகத்திலிருந்து அழகை உபாசிப்பதுதான் தம் வாழ்க்கை நெறி என்று அவர் நினைக்கின்றார். ஆனால், அரசியல், சமூகக் கொந்தளிப்பு மிகுந்த சூழ்நிலையில், காலத்தின் சவால்களை ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு உணர்ந்த ஒரு சமுதாய மனிதனாக வாழ வேண்டுமென்று விழைகின்றார்.

கவிஞன் என்ற நிலையில் தமக்குத் தாமே சொந்தமானவராகவும் அடிமையுற்ற நாட்டின் குடிமகன் என்ற நிலையில், வரலாற்றுக்குச் சொந்தமானவராக அவர் இருப்பதுந்தான் சுவாரஸ்யமான விஷயம். இதனால், அவருக்கு ஓர் அந்தரங்கக் குரலும் பகிரங்கக் குரலும் உருவாகி இருக்க வேண்டும்.

‘குயில் பாட்டு’, அவர் அந்தரங்கக் குரல். ‘தேசிய கீதங்கள்’ சமூகப் பிரச்சினைப் பற்றிய பாடல்கள், அவருடைய பகிரங்கக் குரல்.

பாரதியின் வரலாற்றைப் பார்க்கும்போதுதான் இவ்விரு குரல்களின் பரிணாம வளர்ச்சியை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பாரதி தம் பதினெட்டாம் வயதில் ‘கனவு’ என்ற தலைப்பில் தம்முடைய சுயசரிதையை எழுதியிருக்கிறார்! அவரே அதைப் ‘பரிசோதனைக் கவிதை’ என்கிறார். தம்மைதாமே அறிந்துகொள்ள முயலும் இவ்வற்புதக் கவிதை, அவருடைய இளமைப் பருவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவர் தம் தாயை இழக்கிறார். பிற குழந்தைகளோடு விளையாடுவதை அவர் தந்தை விரும்பவில்லை. இதனால் அவருக்குத் தனிமையே சொர்க்கமாகின்றது. கனவு காண்பது அவர் பழக்கமாகிவிடுகிறது.

தம் பத்து வயதில் ஓர் ஒன்பது வயது பெண்ணைக் காதலிக்கின்றார். அல்லது, காதல் கொண்டதாக நினைக்கின்றார். பாலுணர்வுடன் சம்பந்தப்படாத தெய்வீககக் காதல் என்கிறார். (Platonic Love). அவர் தந்தை அவரை ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கிறார். இக்கல்வி அவருடன் ஒட்டவேயில்லை. பனிரெண்டு வயதில் திருமணம். இதனால், அவருக்குத் தம் தந்தை மீது சலிப்பு ஏற்படுகின்றது. திடீரென்று தந்தை வறியவராகின்றார். வியாபாரத்தில் பெருத்த நஷ்டம். இந்த வேதனை காரணமாகத் தந்தை இறந்து விடுகிறார். குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியது பாரதியின் கடமை ஆகின்றது.

பத்து வயதில் அவர் காதல் கொண்டதாகக் கூறுவது உண்மையில் நடந்திருக்கக் கூடிய சம்பவமா? அல்லது அவ்வாறு நடந்ததாகக் கற்பனை செய்து, பிறகு ஒரு நிலையில் அவரே அதை நம்பியிருக்கூடுமா?

பாரதியின் பாடல்களிலும் சரி, உரைநடைகளிலும் சரி, இந்தக் கனவுகள் அடிக்கடி வருகின்றன. ‘ஞானரத’த்தில் ஒரு பெண் அவருக்கு வழிகாட்டியாக வருகிறாள். இந்தப் பெண் இனத் தோற்றமே பாரதிப் படைப்புக்களின் அடிநாதம்.

இத்தாலியக் கவிஞர் தாந்தே இயற்றிய ‘லாவிட்டன் நோவா’விலும் பியாட்ட்ரிஸ் என்ற ஒன்பது வயதுப் பெண், பாரதியின் கனவுக் கன்னிகை போல், அவருக்கு ஒளி விளக்காக இருக்கிறாள். பாரதி ‘இவ்விளம்பெண் தோற்றத்தை’த் தம் இந்திய மரபுக்கேற்ப தம் கவிதைகளில் ஒருங்கிணைத்துக் கொள்கிறார்.

தாகூரைப் போல் செல்வ வசதியும் உலகப் பயண அனுபவமும் இல்லாவிட்டாலும் பாரதத்தின் தென் கோடியில் இருந்தவாறே உலக நடப்புகளைப் பற்றி தீர்க்கதரிசனத்துடன் பாடிய, இந்தியாவின் முதல் தேசியக் கவிஞராகிய பாரதி, தாந்தேவின் நூல்களைப் படித்திருக்கக் கூடும்.

பாரதியின் ஜீவ சக்தி இந்தப் பெண் தோற்றப் படிமந்தான். அவருடைய மனநிலைக்கு ஏற்ப இந்தத் தோற்றம் வெவ்வேறு வடிவம் கொள்கின்றது. அவர் வழிபடும் சக்தியாக, அவர் காதலிக்கும் கண்ணம்மாவாக, அவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த பாரத மாதாவாக.

ஐந்து வயதில் அவர் இழந்த தாயைப் பற்றிய அடிமன நினைவுதான் பல படிமங்களில், பாவனைகளில் தோற்றம் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. சிறுவயதில் இழந்த தாயை வாழ்நாள் முழுவதும் தேடிப் பல வடிவங்களில் கண்டிருக்கிறார் பாரதி.

சமூகத் தளைகள் எவையுமற்ற ஒரு கற்பனை நாட்டின் பிரஜையாக, குடும்பப் பொறுப்பு ஏதுமில்லாத ஒரு கவிஞனாக வாழ வேண்டுமென்று அவர் விழையும்போது அவருடைய அந்தரங்கக் குரல் ஒலிக்கிறது. ஆனால், இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பு அவர் மீது விழுகிறது, மனச் சுதந்திரம் வேண்டி நின்ற அவரை நாட்டின் அடிமைத்தனம் வெகுண்டு எழச் செய்கிறது. இது அவர் சமூகப் பொறுப்பு. இம்மனப் போராட்டத்தை பாரதியின் முழு படைப்புக்களைப் படிக்கும்போதுதான் புலனாகும்.

‘குயில் பாட்டு’ அவருடைய அந்தரங்கக் குரல். 1912இல் வெளியான இக்கவிதையை, அவர் ‘பட்டப் பகலில் பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவு’ என்று குறிப்பிடுகின்றார்.

இக்கவிதையில் வரும் இறுதி வரிகள் மிகவும் முக்கியானவை.

‘ஆன்ற தமிழ்ப் புலவீர்!
கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதேனும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?’

பண்டித உலகத்தைக் கவிஞர் கிண்டல் செய்கிறார் என்று சற்றும் உணராமல், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் பண்டிதத் தொழிற்சாலையினின்றும் ஆன்மீகமாகவும் அறிவு ஜீவித்தனமாகவும் இப்பாடல் பற்றிய ஆராய்ச்சி விளக்கங்கள் உற்பத்தியாயின.

பாரதி இதைக் ‘கனவு’ என்கிறார். காலரிட்ஜின் ‘குப்ளாகான்’ போன்ற ஒரு கவிதைக் கருவூலம். நிகழ்வன அனைத்தும் தோற்றங்கள். தோற்றத்துக்குள் ஒரு தோற்றம், சக்கரத்துக்குள் ஒரு சக்கரம் போல் தொடர்கிறது. இறுதியில், எது தோற்றம், எது நடப்பு என்று புரியவில்ல! யதார்த்தத்தைக் குறிக்கும் சொற்கள், ‘பண்டைச் சுவடி, எழுது்கோல், பழம்பாய்’. அவ்வளவுதான்.

‘குயில் பாட்டு’ ஒரு பரிபூரணக் கவிதை’. (Pure Poetry for its own sake) இலக்கிய விமர்சனத் தளைகள் ஏதுமின்றி ஒரு பிரபஞ்ச மொழியில் இயற்றப்பட்ட அழகுணர்ச்சிக் காவியம். கவிஞன் தன்னில் தான் ஆழ்ந்து இதைப் பாடியிருக்க வேண்டும். உலகை உய்விக்க வேண்டிய நோக்கம் இதில் எதுவும் கிடையாது. படிக்கின்றவர்களின் அழகுணர்வு அனுபவத்தோடு நேரடியாக நிகழ்த்தும் உரையாடல்.

இது பாரதியின் அந்தரங்கக் குரல். அவருடைய ‘அகம்’. ‘புறம்’, ‘தேசியக் கீதங்கள்’, சமுதாயப் பாடல்கள் அனைத்தும். பண்டையத் தமிழ் இலக்கிய மரபை ஒட்டி வீளக்கிச் சொல்ல வேண்டுமென்றால் இவ்வாறுதான் கூற முடியும். ஆனால், அதுவும் தேவையில்லை.

ஷெல்லி எந்த அளவுக்கு அவரைப் பாதித்திருக்கிறான் என்பதை அவர் படைப்புக்கள் முழுவதையும் படித்தால்தான் விளங்கும். ஷெல்லிக்கு ‘Power’, பாரதிக்கு ‘சக்தி’.

இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>

indra parthasarathy

Amrutha

Related post