கி.ரா.வின் ‘கலைக் களஞ்சியம்’

ம.பெ. சீனிவாசன்
வழக்குச் சொல்லகராதி – கி. ராஜநாராயணன்; பக். 304, விலை ரூ. 350; வெளியீடு: அன்னம் / அகரம், 1 நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613007; மின்னஞ்சல்: annamakaram@gmail.com; தொலைபேசி: +91 94431 59371, +91 99430 59371
வடவேங்கடத்திற்கும் அப்பால் அயல்மொழி வழங்கிய நாடுகளை ‘மொழிபெயர்தேஎம்’ என்று குறுந்தொகை (11:8), அகநானூறு (67:12; 211:8), ஐங்குறுநூறு (321:4) ஆகிய சங்கநூல்கள் குறிக்கின்றன. இதே செய்தி மக்களின் பேச்சு மொழியில், ‘தேசந்தோறும் பாஷைகள் வேறு’ என்று ஒரு பழமொழியாக வெளிப்பட்டது.
இக்காலத்தில் தமிழில் வட்டார வழக்கில் எழுதப்படும் சிறுகதைகளும் புதினங்களும் ஒருவகையில் இப்பழமொழியையே நமக்கு நினைவூட்டுகின்றன. கொங்கு நாடு, நாஞ்சில் நாடு, நடு நாடு, கரிசல் காடு எனத் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்ட படைப்புகளில் கையாளப்படும் வழக்குச் சொற்கள் அந்தந்த வட்டாரங்களுக்கே உரியவை. வேறு பகுதியைச் சார்ந்த வாசகர்களுக்கு அவை புதியவை; பொருள் புரியாதவை.
கரிசல் காட்டு எழுத்தாளரான பா.செயப்பிரகாசம், ‘பறவைகளின் கெச்சட்டம்’ என்று எழுதும் போது பறவைகளின் ஆரவாரத்தைத்தான் ‘கெச்சட்டம்’ என்று குறிப்பிடுகிறார் என்பதை எளிதிற் புரிந்துகொள்கிறோம். ஆனால், அவரே, “நானும் என் நண்பரும் முருசல் பாத்தியில் வளர்ந்த பயிர்கள் அல்ல” என்று எழுதுகையில், ‘அது என்ன முருசல் பாத்தி?’ என்று புரியாமல் தடுமாறுகிறோம். கி. ராஜநாராயணனின் ‘வழக்குச் சொல்லகராதி’யில் (தொகுதி 9, அன்னம், தஞ்சாவூர், 2022) இதற்கு விடை கிடைக்கிறது. ‘தோட்டத்தில் பாத்தி அமைக்கும் போது எந்த வரிசையிலும் சேராத பாத்தி’ (ப. 381-382) என்று இதற்குப் பொருள் தருகிறார் அவர். ‘பாத்தி’ என்பது வள்ளுவர் காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வரும் (குறள் 465;718) ஒரு சொல். ஆனால், ‘முருசல் பாத்தி’யோ கரிசல் காட்டு மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமே வாழ்வது. எனவேதான், ‘ஒவ்வொரு வட்டாரத்தின் வழக்குச் சொற்களுக்கும் அகராதிகள் உருவாக்கப்பட வேண்டும்’ என்று கனவு கண்டார் கி. ராஜநாராயணன். ‘அவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட – வழக்குச் சொல் பேரகராதி உருவாக வேண்டும்’ என்பதும் (பதிப்புரை) அவர் விருப்பம்.
இனி, இந்த வழக்குச் சொல் இன்னவட்டாரத்திற்கு உரியது என்று வரையறுப்பதிலும் சிக்கல் உண்டு.
கி.ரா. தம்முடைய அகராதியில் (ப.186) காட்டும் ‘சங்காத்தம்’ (உறவு அல்லது பழக்கம் என்று பொருள்) கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டுச் சொல்லகராதி’யிலும் (தமிழினி, 2007, ப.164) இடம்பெற்றுள்ளது. அதற்கு அவர்கள் இருவரும் சொல்லுகிற பொருளும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான். அவ்வளவாக வேற்றுமை இல்லை.
“உன் சங்காத்தமே இனி வேண்டாம்” – இது, கி.ரா.
“அவ சங்காத்தமே வேணான்னுதான் வுட்டுக் கடாசிட்டு வந்துட்டன்” – இது, கண்மணி குணசேகரன்.
இப்படிப்பட்ட ‘ஒற்றுமை’களைக் கி.ரா.வின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது அவர் சொன்ன பதில் இதுதான்: “அதுக்கு நான் என்ன செய்ய? எங்கள் வட்டாரத்தில் வழக்குச் சொல்லாக அது இருக்கே.” (அவரது ‘அகராதி’, ப.534).
ஒரு சொல்லே அந்தந்த வட்டாரங்களில் வெவ்வேறு பொருள்களில் வழங்குவதுமுண்டு. ‘கோளாறு’ என்பதற்கு, ‘கோளாறான ஆளு’ (கோளாறு – தவறு) என்றும், ‘நல்ல கோளாறுக்காரன் (கோளாறு – யோசனை; கவனம்) என்றும் இரண்டு விதமாகப் பொருள் புரிந்துகொள்ளப்படுவதைக் கி.ரா. தம்முடைய அகராதியில் (ப.184) எடுத்துக் காட்டியிருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் திரையிசைப் பாடலொன்றில், ‘அக்கோளாறு பண்ணாம கிட்ட வந்து கொஞ்சுங்க சினிமாவில் கொஞ்சுராப்புல’ என்று தென்பாண்டி நாட்டுக் கிராமத்துக் காதலி கூறுவதாகப் பாடியிருப்பதும் தேனி வட்டாரத்தில் ‘கோளாறாக (கவனமாக)ப் போய்வா’ என்று கூறும் வழக்கம் இருப்பதும் இதற்கேற்ற உதாரணங்களாகும்.
நடுநாட்டுச் சொல்லகராதியில் ‘கோளாறு’க்கு இடமில்லை. இப்பேச்சு வழக்கு அங்கே இல்லை போலும்.
கி.ரா. தம்முடைய அகராதியில் வழக்குச் சொற்களுக்கு மட்டும் இடமளிக்கவில்லை. சொலவடைகளையும் பழமொழிகளையும் மரபுத் தொடர்களையும் கிராமிய விளையாட்டுகளையும் நெல் முதலான பயிர் மற்றும் பயறு வகைகளையும் ஆடு, மாடுகள் பற்றிய நுட்பமான தகவல் குறிப்புகளையும் காற்று வகைகளையும் ஆபரணங்களையும் கிராம மக்களின் நம்பிக்கைகளையும் கூடியமட்டிலும் பதிவு செய்திருக்கிறார். அங்கங்கே தேவையான விளக்கமும் தருகிறார். குறிப்பாகப் பழமொழி உள்ளிட்ட சொலவடைகள், மரபுத் தொடர்களின் பொருளைக் காட்சிப்படம் போல் கற்போர் மனத்தில் விரியச் செய்திருப்பது அருமையினும் அருமை.
பதச்சோறாகச் சில…
‘மைக்கருப்பு – மிகுந்த கருப்பு. மாப்பிள்ளை மொழுமொழுன்னு மைக்கருப்பு. பொண்டாட்டி பொட்டு வைக்கணும்னா உடம்பைத் தொட்டு வச்சிக்கலாம்’ (ப.393). அடர்த்தியான கறுப்பு நிறம் (Inky Darkness) வடிவழகுக்குரிய நிறமாக நம் கிராமத்து மக்களால் எப்படிக் கொண்டாடப்பெற்றது என்பதற்கு எடுத்துக்காட்டு இது. மேலும், ‘கண்டவர்கள் நெஞ்சிலே இருள்படியும் (பித்தேறச் செய்யும்) படியான திருமேனி’ என்று வைணவ உரையாசிரியர்கள் – நம்மாழ்வாரின் ‘மைப்படி மேனி’ என்னும் திருவிருத்தத்திற்குக் கூறிய (65) அழகிய உரைப்பகுதியை இது நினைவூட்டுகின்றது. அதே நேரத்தில் பாமர மக்களின் மொழியில் படிந்திருக்கும் கவிதை நெஞ்சத்தையும் அடையாளம் காட்டுகிறது.
தமிழர்க்கே உரிய கறுப்பு நிறம் இன்றைய ‘சிவப்பு அழகா’ல் சிதைக்கப்பட்டதை வரலாற்று முறையில் விளக்கிப் பேசும் பண்பாட்டு அறிஞர் தொ.ப.வின் ‘கறுப்பு’ நிறம் பற்றிய கட்டுரையும் நம் நினைவுக்கு வருகின்றது.
இப்படி உயர்வு நவிற்சியாக, உருவகமாக, எடுத்துக்காட்டுபவையாக, உருக்காட்சியாக, வரலாற்றுப் புதையலாக, நையாண்டியாக அமைந்த வழக்குச் சொற்களும் தொடர்களும் இந்நூலில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. கைக்கெட்டும் நிலையில் கிடைக்கும் பேருதவியைப் ‘புழைக்கடைப்பச்சிலை’ என்றும்; ஆதரவற்ற நிலையை, ‘மிதிகொப்புமில்ல, பிடிகொப்புமில்ல’ என்றும்; எதற்கும் கையாலாகாதவனை, ‘நனைஞ்ச கோழி பிடிக்கிறவன்’ என்றும்; ஒன்றுமில்லாதவனை ‘வெறுவாக்ல கெட்டபய’ (வெறும் வாய்க்கு வெற்றிலை கூட இல்லாத பயல்) என்றும்; சிறு தூறலாகப் பெய்தமழையை ‘வேட்டி நனையராப்ல பெய்த மழை’ என்றும்; வாழ்வில் நடப்பது நடந்தே தீரும் என்பதை, ‘வரும்விதி ராத்தங்காது’ என்றும்; பாமரர்கள் பேசியவை யாவும் பொருளாழம் உடையன என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
‘வாழ்க்கையில் வாய்ப்பெல்லாம் உயர்ந்த வசதி படைத்தவர்களுக்கே கிடைக்கும்’ என்பதை, ‘ஒசந்தகைப்பணியாரம்’ என்ற தொடர்மூலம் அவர்கள் சுருங்கச் சொல்லி விடுகிறார்கள். பணியாரம் வினியோகிக்கும் போது கூட்டத்தில் முதல் பணியாரம் உயரமான கைகளுக்குத்தானே முதலில் கிடைக்கும்!
நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு;
புல்லிதழ் பூவிற்கு முண்டு (நாலடி.221)
என்பது கற்றோரின் செய்யுள் இலக்கியத்தில் இடம்பெறும் கருத்து. இதுவே பாமரர்களின் பேச்சு மொழியில், ‘கருப்பட்டியிலும் கல்லுக் கெடக்கும்’ (ப.121) என்று வெளிப்படுவதைக் காண்கிறோம். இனிக்கும் கருப்பட்டியில் இருக்கும் பொடிக் கற்களுக்காக அதை வேண்டாமென்று விலக்குவாருண்டோ?
அப்படித்தான் மனித வாழ்க்கையிலும்; நட்புடன் பழகியவர்களிடம் காணும் சிறுகுறைகளுக்காக அவர்களை ஒதுக்கக்கூடாது என்பதை எவ்வளவு இலேசாகவும் இலாகவமாகவும் சொல்லுகிறது இச்சொலவடை!
நாம் என்றும் வாழ்வில் காணும் காட்சிதான் இதுவும்… வயதான தம்பதிகள்; நெடுங்காலம் எண்ணெயும் திரியுமாய் இணைந்து வாழ்ந்தவர்கள்; குடும்ப விளக்கினைச் சுடர்விட்டு ஒளிரச் செய்தவர்கள். கனிந்த பழம் காம்பிலிருந்து உதிர்ந்து விழுவது போல இவர்களில் யார் முந்துவார்கள்? நம்மால் முன்கூட்டிக் கணிக்க முடியுமா? ‘சமத்கார’மாக ‘ஐயஉவமை’ எனும் அணி நயம்பட இதற்கு விடைசொல்கிறது கி.ரா.வின் வழக்குச் சொல்லகராதி.
‘எண்ணெய் முந்துதோ? திரிமுந்துதோ?’ (ப. 79)
வாய்மொழிகளின் வழியாகவே எழுத்து இலக்கியம் கால்கொண்டது என்பதை நிறுவும் காலம் இது. இந்நிலையில் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இவ்வழக்குச் சொல்லகராதி தனிக்கவனம் பெறுவதற்கு உரியது.
இத்தகைய சிறப்புக்களைக் கருதியே பிறவிக் கவிஞரான மீராவும் 1982இல் இதன் முதற்பதிப்புக்கு எழுதிய அறிமுகவுரையில், “நாமும் ஏன் சுத்தப் பட்டிக்காட்டானாக இருந்திருக்கக் கூடாது” என்று ஆதங்கப்பட்டார். இவ்வகராதியைப் படிக்கும் ஒரு சில வாசகர்க்கும் இவ் – ஆதங்கம் ஏற்படக்கூடும்.
மொத்தத்தில் தமிழ் மக்களின் சமூகப் பண்பாட்டு ஆவணமாகத் திகழும் இந்நூலை ஒரு கலைக்களஞ்சியம் எனலாம். காலமெல்லாம் போற்றிக் காக்க வேண்டிய பெருநிதியம் இது.