விருது – அரவிந்தன்

 விருது – அரவிந்தன்

ஓவியம்: அபராஜிதன்

 

காலையில் எழுந்ததிலிருந்தே மனம் உற்சாகமாக இருந்தது. அலுவலகத்தில் என்னுடைய அணியைப் பாராட்டி விருதளிக்கிறார்கள். நிர்வாக இயக்குநரும் மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளரும் எங்களைப் பாராட்டிப் பேசுவார்கள். அதற்கு முன்பு எங்களுடைய முயற்சிகள், திட்டங்கள் பற்றி நாங்கள் ஐவரும் ஆளுக்கு ஐந்து நிமிடம் பேச வாய்ப்புக் கிடைக்கும். சென்னை வெயிலைப் பொருட்படுத்தாமல் நாய்போல அலைந்ததற்கும் வெறும் அலைச்சலை மட்டும் நம்பாமல் திட்டமிட்டு வேலை செய்ததற்கும் கிடைக்கும் அங்கீகாரம் இது.

இதுவரை எத்தனையோ நிறுவனங்களுக்காக இப்படிப்பட்ட உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். உருப்படாத தயாரிப்புகள், சேவைகளையெல்லாம் தொண்டை வறளும் அளவிற்குப் பேசிப் பேசி விற்றிருக்கிறேன். விற்கும் சரக்கு பயனற்றது என்று தெரிந்தும் அதன் சிறப்புக்களை எடுத்துச் சொல்லக் கற்பனை வளம் அதிகம் வேண்டும். மனசுக்குள் துளிக்கூட எட்டிப் பார்க்காத சிரிப்பை உதட்டில் கொண்டுவரப் பெரும் மெனக்கெடல் வேண்டும். இல்லாத தன்னம்பிக்கையைக் குரலில் பிரதிபலிக்க அபாரமான நடிப்புத் திறன் வேண்டும். இத்தனைக்கும் பிறகு,ப்ரோஷரைக் குடுத்துட்டுப் போங்க சார், தேவைப்படும்போது கூப்பிடுவோம்என்ற பதில்தான் பெரும்பாலும் வரும். “விசிட்டிங் கார்டுல போன் நம்பர் இருக்குல்ல, கூப்பிடுறேன் சார்என்பார்கள். “உங்க ப்ரோஷரை அட்டாச் பண்ணி மெயில் அனுப்புங்க, டீம்ல டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்என்பார்கள். சொல்லும் விதத்திலிருந்தே அதுவே அவர்களுடனான கடைசி சந்திப்பு என்பது தெரிந்துவிடும். பிறகு எத்தனை முறை போன் செய்தாலும் எடுக்கமாட்டார்கள். வேறு எண்ணிலிருந்து அழைத்தால் எடுத்துப் பேசிவிட்டு, “அதான் கூப்பிட்றோம்னு சொன்னேனே சார்என்று வைத்துவிடுவார்கள். இப்படி மடியே இல்லாத மாடுகளிடம் பால் கறக்கும் முயற்சிகளால் நொந்துபோன எனக்கு இந்த நிறுவனம் பெரிய சொர்க்கமாக இருந்தது.

இந்த சொர்க்கத்தில் நான் நுழைவதற்குக் காரணம் சிவா சார்தான். இன்றைக்குக் கூட்டத்திற்கு அவர் வருவாரா என்று தெரியவில்லை. இதுபோன்ற கூட்டங்கள், பொதுக் கேளிக்கைகள் எல்லாம் அவருக்குப் பிடிக்காது. இப்படிப்பட்ட இடங்களுக்கு வந்தாலும் ஒட்டாமல் விலகியே இருப்பார். மது அருந்தும் பழக்கம் உண்டு என்றாலும் பொது விருந்துகளில் அருந்தமாட்டார். ‘மது அருந்துதல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை அந்தரங்கமான செயலாகக் கருதுகிறேன். பெரும்பாலும் தனிமையில் அல்லது மனதுக்கு நெருக்கமான ஒருவருடன்தான் மது அருந்துவது எனக்குச் சாத்தியம்என்பார். அப்படிப்பட்டவர் ஒரே ஒருமுறை மது அருந்த என்னை அழைத்தபோது ரொம்பவும் பெருமையாக இருந்தது.

சிவா சார் உயர் நிர்வாகக் குழுவில் இல்லை. முக்கியமான முடிவுகளை எடுக்கும் இடத்தில் இல்லை. மனிதவளத் துறையில் மூத்த பொறுப்பொன்றில் இருக்கிறார். ஆனால், எம்.டி. உள்படப் பலரும் பல விஷயங்களில் அவரைக் கலந்தாலோசிப்பார்கள். இப்படிப்பட்டவர் மீது பொதுவாக எல்லோருக்கும் பொறாமை வர வேண்டும். குறிப்பாக மனிதவளத் துறை மேலாளருக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. இவர் தனக்குப் போட்டியாக வருவார் என்ற எண்ணமே யாருக்கும் வராது. இவரை எண்ணி யாரும் பதற்றமடைய வேண்டிய அவசியம் இருக்காது. அவரும் யாரைக் கண்டும் பதற்றமோ அச்சமோ கொள்ளமாட்டார். தன்னுடைய வேலையைத் தாண்டி வேறு எதிலும் தலையிடமாட்டார். தானாக வந்து யாராவது கேட்டாலொழிய எதைப் பற்றியும் தன் கருத்தைச் சொல்லமாட்டார். பெரிய படிப்பாளி என்பதால் பல விஷயங்களையும் அறிந்திருந்தாலும் யாரும் கேட்காமல் எந்த ஆலோசனையும் சொல்லமாட்டார். அந்த ஆலோசனையைக் கேட்பவர்கள் அதைப் பின்பற்றினார்களா என்று கவனிக்கவும் மாட்டார். ஓரளவு வசதியான பின்னணியைக் கொண்டவர். அவருடைய மனைவியும் நல்ல வேலையில் இருக்கிறார். ஒரே பையன் ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் பள்ளியில் படிக்கிறான். வேலை, சம்பளம், சம்பள உயர்வு, பதவி உயர்வு என்று எதிலும் ஆர்வம் காட்டமாட்டார். ஆனால், நிறுவனம் அவருடைய மதிப்பை, சரியாகச் சொன்னால் ஞானத்தை உணர்ந்து அவரை நல்ல நிலையில் வைத்திருக்கிறது. மனித வளம் என்பதன் பொருளை முழுமையாக உணர்ந்த அவர் பணியாளர்களின் திறனையும் மனநிலையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துத் தந்துகொண்டே இருப்பார். அவற்றில் பலவற்றை மேலாளர் எடுத்துக்கொள்ள மாட்டார். அதுபற்றியும் அவர் அலட்டிக்கொள்ள மாட்டார்.

அருமையான திட்டங்களை வீணடிக்கிறார்களே என்ற வருத்தம் இல்லையாஎன்று ஒருமுறை கேட்டேன்.

அப்படி வருத்தப்பட்டால் அந்தத் திட்டங்களை நான் சொந்தம் கொண்டாடுகிறேன் என்று அர்த்தம். உண்மையில் எதுவும் எனககுச் சொந்தமில்லை. நான் வியாசர், ஷேக்ஸ்பியர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஜே. கிருஷ்ணமூர்த்தி, நீட்ஷே என்று பலரிடம் கற்றதைத்தான் கொடுக்கிறேன். இதில் நான் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. நிராகரிப்பதால் வருத்தமும் இல்லை. மனித நடத்தை, செயல்பாடு பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்கும். அது என் வேலையாகவும் அமைந்துவிட்டதில் மகிழ்ச்சி. அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை.”

இதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யோசித்துப் பார்க்கும்போது நியாயமாகவும் பட்டது. ஆனால், இன்றைய வணிக உலகில் எத்தனை பேரால் இப்படி இருக்க முடியும்? இப்படிப்பட்ட ஒருவர் எங்கள் அணியின் வேலைகளைப் பற்றிப் பாராட்டிப் பேசுவார் என்பதே எனக்கு உவகையளிப்பதாக இருந்தது. நிகழ்ச்சியில் சிவா சார், மனிதவளத் துறை மேலாளர் லாரன்ஸ் தங்கராஜ், எம்.டி. கார்த்திக் வாசுதேவன் ஆகிய மூவரும் பேசுவார்கள் என்ற செய்தி காற்றுவாக்கில் வந்தபோது உற்சாகம் பற்றிக்கொண்டது. எங்கள் ஐந்து பேருக்கும் ரொக்கப் பரிசுடன் ஒரு நினைவுப் பரிசும் உண்டு. நிகழ்ச்சிக்குப் பின் மதுபான விருந்தும் உண்டு. ஆனால், இவை எல்லாவற்றையும்விட சிவா சார் எங்களைப் பற்றிப் பேசுவார், அணித் தலைவனான என்னைப் பற்றியும் சொல்வார் என்ற நினைப்பே மகிழ்ச்சியைத் தந்தது. கடினமான உழைப்பு இருந்தும் பெரிய வெற்றிகளோ அங்கீகாரங்களோ பெற்றிராத எனக்கு இது புதிய அனுபவம்.

இருப்பதிலேயே நல்ல உடையாக எடுத்து அணிந்துகொண்டேன். மதுபான விருந்தில் குடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன். அப்படியே குடித்தாலும் சம்பிரதாயத்திற்காகச் சிறிதளவே குடிக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பிரச்சினை எனக்குத் தெரியும். குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. குடிக்கக் குடிக்க வாய்க்கு வந்ததைப் பேச ஆரம்பித்துவிடுவேன். சூழலைப் பற்றிய கவனமெல்லாம் போய்விடும். கெட்ட வார்த்தைகள் சரளமாகக் கொட்டும். எதிரில் இருப்பவர்களின் மீதான மரியாதை காணாமல் போய்விடும். பழைய குப்பையை எல்லாம் கிளற ஆரம்பித்துவிடுவேன். யாராவது சமாதானப்படுத்த வந்தால், “நீ என்ன பெரிய யோக்கியனாஎன்று அவரையும் வறுக்க ஆரம்பித்துவிடுவேன். மொத்தத்தில் அடி வாங்காமல் வீடு வந்து சேருவது கஷ்டம் என்ற நிலைக்குப் போய்விடுவேன். யாராவது இரண்டு பேர் வலுக்கட்டாயமாகக் கூட்டிவந்து அறையில் விட்டுப் போவார்கள். அடுத்த நாள் காலை ஒன்பது மணி வாக்கில் எழுந்திருக்கும் போது தலைவலி மண்டையைப் பிளக்கும். காபி சாப்பிட்டுவிட்டுக் குளியல் போட்ட பிறகுதான் முந்தைய இரவின் லீலைகள் மங்கலாக நினைவுக்கு வரும். நான் ரொம்ப கலாட்டா பண்ணிவிட்டேனா என்று சுரேஷுக்கு போன் செய்து கேட்டால் அவன் அசிங்க அசிங்கமாகத் திட்ட ஆரம்பித்துவிடுவான்.

இன்று அப்படி ஆகக் கூடாது. இன்றைய நிகழ்ச்சியின் நாயகன் நான்தான். அணியில் ஐந்து பேர் இருந்தாலும் அணித் தலைவன் என்ற முறையில் எனக்குக் கூடுதல் கவனமும் பாராட்டும் கிடைக்கும். மூளையைப் பயன்படுத்தாமல் வேலை செய்யும் மற்ற நான்கு பேரையும் நான் எப்படித் தேற்றினேன் என்பது எனக்குத்தான் தெரியும். சிவா சாரைப் போல நான் பெரிய அறிவாளி கிடையாது. ஆனால், அவர் படித்த சங்கதிகளை நானும் ஓரளவு படித்திருக்கிறேன். அவரோடு அடிக்கடி விவாதிப்பேன். அதில் கிடைக்கும் வெளிச்சம் இந்த நான்கு முட்டாள்களைக் கடைத்தேற்ற எனக்கு உதவியிருக்கிறது. சிந்தனை பெரும்பாலும் அவருடையதுதான் என்றாலும் ஆட்களுக்கு ஏற்றபடி அதைச் செயல்படுத்தியது நான்தான். இது எம்.டி.க்குத் தெரியாவிட்டாலும் லாரன்ஸுக்குத் தெரியாவிட்டாலும் சிவா சாருக்குத் தெரியும். அவர் பேசும்போது என்னைப் பற்றிச் சொல்லாமல் இருக்கமாட்டார். சிவா சார் பாராட்டினால் எம்.டி.யும் பாராட்டுவார். அதன் பிறகுதான் இந்தக் கம்பெனியில் இருக்கும் சும்பன்களுக்கெல்லாம் நான் வெறும் வாசு இல்லை என்பது புரியும். 40 வயதாகியும் கல்யாணம் ஆகாமல், வாழ்க்கையில் நிலைபெறாமல், பொருளாதார வலு இல்லாமல் இருக்கும் என்னைப் பற்றி அலுவலகத்தில் பலருக்கும் இளக்காரமான நினைப்பு இருப்பது எனக்குத் தெரியும். இள வயதைக் கடந்த ஒண்டிக்கட்டை என்பதாலேயே அலுவலகத்தில் பெண்கள் என்னிடம் நெருங்கிப் பழகமாட்டார்கள். நெருங்கினால் விண்ணப்பம் போட்டுவிடுவேனோ என்ற பயமாக இருக்கலாம்.

அப்படியும் செய்திருக்கிறேன். அதில் ஒருத்தி ரொம்பச் சின்னப் பெண். பெயர் ராதா. 22 வயது இருக்கும். அவள் என்னிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதைப் பார்த்து ஏமாந்துவிட்டேன். மிக விரைவில் மிக ஆழமான காதலாக என் மனதில் அவளைப் பற்றிய எண்ணம் வளர்ந்துவிட்டது. ஒருநாள் தனியாகச் சந்தித்து என் காதலைச் சொன்னபோது அவள் முகம் போன போக்கைக் கண்டு அவமானமாக இருந்தது. “சாரி சார், நீங்க இப்படிப்பட்ட எண்ணத்தோடு பழகுவீங்கன்னு எதிர்பாக்கலஎனறு சொல்லிவிட்டுப் பதிலுக்குக்கூடக் காத்திராமல் திரும்பிச் சென்றாள். அந்த அவமானத்திற்கு நடுவிலும் அவள் கண்களின் அழகையும் கழுத்துக்குக் கீழே அமைந்த வசீகரத்தையும் என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் எல்லோரிடமும் சிரித்துப் பழகுவதை அதன் பிறகுதான் கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால், என்னிடம் மட்டும் அப்படிப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். தூரத்திலிருந்தே அவள் அழகை ரசித்துப் பொறுமுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆனது.

ராதா அதன் பிறகு அதிக நாட்கள் எங்கள் நிறுவனத்தில் நீடிக்கவில்லை. அது ஒருவிதத்தில் நிம்மதியாகவும் இருந்தது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் முக அழகும் உடலின் கட்டழகும் என்னைத் துன்புறத்திக் கொண்டிருந்தன. வேறு யாருடனோ பேசும்போது கலீரென்று அவள் சிரிப்பது என் செவிகளில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுபோல் இருந்தது. ராதா போனால் என்ன, அவள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கல்யாணம் ஆகாத கொஞ்சம் சுமாரான அழகிகள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் விண்ணப்பத்தை நீட்ட பயமாக இருக்கிறது. இன்றிரவு நிகழ்ச்சிக்குப் பிறகு அதற்கான வாய்ப்பு உருவாகலாம்.

 

லாரன்ஸ் தங்கராஜ் மேலாளராக இருந்தாலும் சிவா சாரின் மதிப்பு அவருக்குத் தெரியும். அவர் தனக்குப் போட்டியில்லை என்பதால் பொது இடங்களிலும் அவருக்கு மரியாதை தருவதில் லான்ஸுக்குச் சிக்கல் இல்லை. தான் எவ்வளவுதான் பேசினாலும் சிவா ஐந்து நிமிடப் பேச்சிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுவார் என்பது தெரிந்துதான் லாரன்ஸ் சுருக்கமாகப் பேசினார் என்று எனக்குத் தோன்றியது. என் கணிப்பு சரியாக இருந்தால் அவர் எடுத்த முடிவு சரியானதுதான். தன்னுடைய உரையைக் கன சுருக்கமான அறிமுக உரையாக மாற்றிக்கொண்டார். மிகவும் சுருக்கமாக இருந்ததால் அதில் என்னைப் பற்றிச் சொல்லவில்லையே என்ற குறை எனக்குத் தோன்றவில்லை. நிறுவனத்திற்குப் பெரும் லாபம் பெற்றுத்தரக்கூடிய ஒப்பந்தத்தை முடித்ததில் எங்கள் அணியின் திறமை, உழைப்பு, பிடிவாதம் ஆகியவற்றைப் பாராட்டினார். யாரையும் தனியாகக் குறிப்பிட்டு அவர் பேசவில்லை. அணித் தலைவர் என்ற முறையில் என் பெயரைச் சொல்லவில்லை. ‘மார்க்கெட்டிங் டீம்என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார். இந்த அணியின் மூளையாக விளங்கிய சிவபிரசாத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். ‘விஸ்டம்’, ‘விஷனரிஆகிய சொற்கள் தாராளமாகப் புழங்கின.

இப்போது நாம் பெற்றிருக்கும் வெற்றி மகத்தானது. அந்த வெற்றி நமது வழக்கமாக மாற வேண்டுமென்றால் நம்முடைய அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தைப் பற்றி நான் சொல்வதைவிட ஞானியும் சிந்தனையாளருமான திரு. சிவபிரசாத் சொல்வதே பொருத்தமானது. எனவே, இந்த இடத்தில் என் பேச்சை நிறுத்திக்கொண்டு அவருக்கு வழிவிடுகிறேன்என்று முடித்தார் லாரன்ஸ்.

அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. அவருடைய பேச்சைவிடவும் அவர் சுருக்கமாகப் பேசியதற்காகத்தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.

நானும் உற்சாகமாகக் கைதட்டியபடி சிவா சார் எழுந்து மைக்கிற்கு முன்பு வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் அவ்வப்போது திருமணமாகாத அந்தச் சுமார் அழகிகளையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். ஒப்பனையும் உடை அலங்காரமும் அவர்களுடைய அழகைப் பத்து சதவீதமாவது கூட்டியிருந்தன. ஆனால், மாலதியின் லிப்ஸ்டிக்கின் அடர்த்தியைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவளுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு ஏற்படும்போது கட்டாயம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். சைந்தவி முக ஒப்பனையைக் காட்டிலும் ஆடை விஷயத்தில்தான் அதிக கவனம் செலுத்தியிருந்தாள். தன்னுடைய வலிமை என்னவென்று அவளுக்குத் தெரிந்திருந்தது. இவளுடன் நட்பு இறுகினால் இதற்காகப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அடர் உதட்டுச் சாய மாலதியா கட்டழகில் மயக்கும் சைந்தவியா, யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்தபோது அதிலுள்ள அபத்த நகைச்சுவையை எண்ணி எனக்குள் சிரிப்பு பொங்கியது. உதட்டுச் சுழிப்பில் அந்தச் சிரிப்புக்கு அணை போட்டபடி சிவா சாரின் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினேன்.

இது வெற்றியைக் கொண்டாடும் தருணம். வெற்றிகள் கொண்டாடப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. நியாயமான பெருமிதங்களும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நம்முடைய உயர் நிலைக்கு வலு சேர்ப்பவை. ஆனால், இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணமான இந்த வெற்றி நமது இலக்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது நமது பாதையில் ஒரு மைல்கல். அதை நல்ல விதமாகக் கடந்திருக்கிறோம். அதில் மகிழ்ச்சிகொள்கிறோம். இதுபோல இன்னும் பல மைல் கற்கள் நம் பாதையில் உள்ளன. நமது நிறுவனம் மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புகொண்ட சேவையை வழங்குகிறது. அதாவது, மக்கள் அதிகச் செலவில்லாமல் தங்கள் அன்றாட வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உதவுவது நம் குறிக்கோள். மேம்படுத்துதல் என வரும்போது தரத்தில் சமரசத்திற்கு இடமில்லை.

தரமான சேவையைச் சிக்கனமான விலையில் வழங்குவது; இந்தச் செயல்பாட்டை வாழ்வின் பல்வேறு துறைகளுக்கும் விரித்துக்கொண்டே போவது; இதுதான் நமது இலக்கு. நமது நிறுவனம் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் இதுதான் முதல் கொண்டாட்டம். இத்தகைய தருணம் வருவதற்கு நாம் ஏன் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்னும் கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டும். இந்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதையும் இதற்கு முந்தைய அரை வெற்றிகளையும் முழுத் தோல்விகளையும் ஆழமாக அலசினால் நம்மால் மாதத்திற்கு ஒருமுறை கொண்டாடுவதற்கான காரணத்தை உருவாக்க முடியும்.

நிறுவனத்தில் திறமையற்றவர் என யாரும் இல்லை. போதிய உழைப்பைச் செலுத்தாதவரும் யாரும் இல்லை. திறமை, உழைப்பு ஆகியவற்றுடன் சரியான அணுகுமுறையும் சேரும்போது வேண்டிய மாற்றம் உருவாகிறது. அந்த அணுகுமுறை என்ன என்பதை விவரிக்க இது பொருத்தமான இடமல்ல. அதற்காகத் தனியே கூடிப் பேசுவோம். அனுபவங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்வோம். சரியான அணுகுமுறை என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். அது ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ப மாறுபடும் என்பதையும் புரிந்துகொள்வோம். அது தனிப்பயிற்சி. இது கொண்டாடுவதற்கான நேரம். முக்கியமான இந்த மைல் கல்லுக்கு அருகில் சற்றே அமர்ந்து இளைப்பாறிவிட்டுப் புதிய வேகத்துடன் மீண்டும் செயல்படத் தொடங்குவோம். பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி.”

கைத்தட்டல் அடங்க இரண்டு நிமிடங்கள் ஆயின. நானும் கை தட்டினேன். மற்றவர்கள் அனைவரும் சட்டென்று தங்கள் கைத்தட்டலை நிறுத்தியிருந்தால் என் கைகளின் இணைப்பில் ஓசை வரவில்லை என்பது அம்பலமாகியிருக்கும். மனதின் வெறுமையைக் கைகள் எதிரொலித்தன. சிவா சார் தத்துவவாதி. அவர் இப்படித்தான் பேசுவார் என்பது தெரியும். ஆனால், ஒருமுறைகூட, ஒரே ஒருமுறைகூட எங்கள் அணியைப் பற்றி, என் தலைமையைப் பற்றிக் குறிப்பிடக் கூடாதா? எத்தனை முறை இந்தத் திட்டம் பற்றி அவரிடம் விவாதித்திருக்கிறேன். அவர் தந்த யோசனைகளின் மீது என்னுடைய எண்ணங்களைச் சொன்னபோது எத்தனை முறை பாராட்டியிருக்கிறார்.

நீங்கள் மாறினால் உங்கள் அணி மாறும். உங்கள் அணுகுமுறையும் செயல்பாடும்தான் உங்கள் அணிக்குப் பரவும். உங்கள் உண்மையான திறனை நீங்கள் உணரும்போது நீங்கள் உங்களுடைய மேம்பட்ட வடிவமாக ஆகியிருப்பீர்கள். அந்த வடிவம் தானாகவே மற்றவர்களுக்கு உத்வேகமூட்டும்என்றார்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் என்னிடம் கணிசமான வளர்ச்சி தெரிகிறது என்றார். இதைப் பற்றியெல்லாம் சொல்ல அவருக்கு ஒரு வார்த்தைகூடக் கிடைக்கவில்லையா? தத்துவ ஞானி என்றால் சக மனிதனின் வளர்ச்சியை உணரத் தெரியாத மரக்கட்டையா? கைத்தட்டல் ஓசை அடங்கும்போது கவனமாக என் கைகளையும் தாழ்த்திக்கொண்டேன்.

அடுத்து எம்.டி.யின் பேச்சு. இவர் சிவா சாரைப் போலத் தத்துவ ஞானி அல்லர். நடைமுறைவாதி. அணுகுமுறையில் மாற்றம், உளநிலையில் சலனம் என்றெல்லாம் பேசமாட்டார். வெற்றியைக் கொண்டுவந்த எங்களைப் பாராட்டுவார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு என்னைக் கடந்து சென்றவர் நின்று திரும்பி எனக்குக் கைகொடுத்துத் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனார். அந்த ஷொட்டு அவர் பேச்சிலும் கிடைக்காதா என்ன.

கிடைத்தது. ஒன்றல்ல; பல ஷொட்டுக்கள். அத்தனையும் சிவ பிரசாத் என்னும் தீர்க்கதரிசிக்கு. சிவபிரசாத் என்றும் நவீன குருநாதருக்கு, சிவபிரசாத் என்னும் லட்சியப் பார்வை கொண்டவருக்கு, சிவபிரசாத் என்னும் மனிதர்களின் மனங்களையும் குணங்களையும் மாற்றும் ரசவாதிக்கு. இதற்கெல்லாம் பொறுக்கி எடுத்த ஆங்கிலச் சொற்களை அவர் பயன்படுத்தினார். Foresight, Visionary, Modern Guru, Catelist, Game Changer என்றெல்லாம் அடுக்கினார். மொத்த அலுவலகமும் அர்ஜுனன் என்னும் அவரைக் கிருஷ்ணன் என்றும் சொல்லித் தன் பேச்சை முடித்தார்.

எம்.டி. பேச்சு அல்லவா. மூன்று நிமிடங்கள் கைத்தட்டல்கள் அதிர்ந்தன. கை வலிக்கப் போகிறது தோழர்களே. பிறகு எப்படிச் சாப்பிடுவீர்கள்? எப்படிக் கோப்பையை ஏந்துவீர்கள்? எப்படித் தளுக்காகக் கட்டிப் பிடித்துக்கொள்வீர்கள்?

எங்கள் அணியினர் ஐவருக்கும் ரொக்கப் பரிசும் பட்டயமும் கொடுத்தார்கள். அடர் சிவப்பு நிறத்தில் புடவையும் கையில்லாத ரவிக்கையும் அதே நிறத்தில் அடர்த்தியான உதட்டுச் சாயமும் அணிந்திருந்த எம்.டி.யின் மனைவி எங்களுக்கு விருதுகளை வழங்கினார். ஒளிப்பதிவுக் கருவிகள் பளிச்சிட்டன. அந்த அம்மையாரின் விரல் நகங்களிலும் செந்நிறப் பூச்சு இருந்தது. விருதைப் பெற்றுக்கொண்டு கை குலுக்குவார் என்று எதிர்பார்த்தேன். வயதானாலும் முன்னாள் அழகி அல்லவா. அவர் கையை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர் கையெடுத்துக் கும்பிட்டு இந்தியப் பண்பாட்டைக் காப்பாற்றினார். ‘தாமரை ஒருநாள் மலர்ந்தே தீரும்.’

லாரன்ஸ் தங்கராஜுக்கும் சிவா சாருக்கும் சற்றே பெரிய பட்டயங்கள். அவர்களுக்கு விருதளிக்கும்போது எம்.டி.யும் இணைந்துகொண்டார். இருவரிடமும் ஒரு நிமிடம் குசுகுசுவென்று பேசினார். ஒளிப்பதிவுக் கருவிகளுக்குக் கொண்டாட்டம். அடுத்த ஆண்டு நிறுவன இதழின் அட்டையில் இந்தக் காட்சி வந்தாலும் வியப்பதற்கில்லை. அதில் ஒரு பக்கத்தில் என் படமும் இடம்பெறும். தலை முடியைச் சீவும்போது உதிரும் மயிர்க் கற்றைகளைப் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். அந்தப் பக்கத்தில் ஒட்டிவைத்து அழகு பார்க்கலாம்.

அதற்குள் சிலர் மதுபான மூலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். இருப்பதிலேயே அதிக காட்டமான மதுவகையை முழுக் கோப்பையிலும் ஊற்றிக்கொண்டு கூடவே காராசேவையும் அள்ளிக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தேன். டையை உருவிக் கால்சட்டைப் பைக்குள் சுருட்டிவைத்தேன். ஒரு மிடறு உள்ளே போனதும்தான் படபடப்பு அடங்கியது. தூரத்தில் எம்.டி. கோப்பையை உயர்த்தியபடி மது விருந்துக்கான வாழ்த்துச் செய்தி என்று எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். ஒளிப்பதிவாள அடிமைகள் நின்றும் மண்டியிட்டும் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எம்.டி., அவர் மனைவி, லாரன்ஸ், சிவா சார் ஆகிய நால்வரும் கோப்பையை உயர்த்திக் காட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். நான் பொறுமையாக நடந்து சென்று இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு ஒரு தட்டில் சிக்கன் உருண்டைகளை எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தேன். உதட்டுச் சாய அழகியையும் உடையலங்காரியையும் காணவில்லை.

aparajithan adimoolam art 2

வ்வளவு குடித்தேன், என்ன சாப்பிட்டேன், யாரிடம் என்ன உளறினேன் என்பதெல்லாம் நினைவில்லை. காலை பதினோரு மணிக்கு சதீஷ் போனில் அழைத்து,ஏண்டா கூமுட்ட, குடிக்கறதுக்கு உனக்கு வேற எடமோ நேரமோ கெடைக்கலயாடா மடக்கூஎன்று பேசத் தொடங்கினான். முற்றிலும் தூக்கம் கலையாத நிலையில், “என்ன விஷயம்னு சொல்றா மயிறுஎன்றே. “டேய் பன்னாட, போன்லயே எல்லா விவரம் மயிறும் சொல்ல முடியாது. குளிச்சிட்டு ரெடியாகு. ஒரு மணிக்கு வரேன்என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ஆந்திரா மெஸ்ஸுக்குப் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகு சதீஷ் விவரம் சொல்ல ஆரம்பித்தான்.

நான் கலப்படமற்ற காட்டமான சரக்கில் மூன்று கோப்பைகளை உள்ளே தள்ளிவிட்டு மேஜையிலிருந்து எழுந்தேனாம். பார்க்கிறவர்களிடமெல்லாம் குட்மார்னிங் மேடம், குட்ஈவினிங் சார், விஷனரின்னா என்ன அர்த்தம் என்று கேட்டேனாம். ஃபோர்சைட், ஆட்டிட்யூட், ஸ்ட்ராட்டஜி, மோல்டிங் த மைண்ட் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அர்த்தம் கேட்டேனாம். சிரித்தபடி தவிர்க்கப் பார்த்தவர்களை, பதில் சொல்லிட்டு போடா பாடு என்று சொன்னேனாம். எல்லோருமே விலகிப் போனதும் நடுக்கூடத்தில் நின்றபடி, “ங்கோத்தா உழைப்புக்கு மதிப்பில்லடா இங்க. விஷனாம் மோல்டிங்காம், மயிறு. த்தூ…” என்று பேச ஆரம்பித்ததும் சதீஷும் இன்னும் சிலரும் வலுக்கட்யமாக என்னை இழுத்துச் சென்று ஆட்டோவில் திணித்து ஐஸ் ஹவுஸுக்கு அருகிலிருக்கும் என்னுடைய மேன்ஷன் அறையில் கொண்டுவந்து போட்டார்களாம். கோபி என் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து, வண்டியைக் கொண்டுவந்து மேன்ஷனில் விட்டிருக்கிறான்.

மூன்றாவது முறையாகச் சோறு வாங்கிக்கொண்டு அதில் சாம்பாரை ஊற்றிப் பிசைய ஆரம்பித்தேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த சதீஷ், “உனக்குக் கொஞ்சம்கூட அறிவே இல்லையாடா?” என்றான். பதில் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் சோறு வாங்கி ரசம் ஊற்றிக்கொண்டேன். ஒரு ஆம்லெட் போடச் சொன்னேன். ரசம் சாதம் சாப்பிட்டதும் தயிருக்குச் சோறு போட வந்த பையனிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தயிரில் சர்க்கரை கலந்து பொறுமையாகச் சாப்பிட்டேன்.

சதீஷ் கொதித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால், அவன் கோபித்துக்கொண்டு போய்விட மாட்டான். என்னை நன்றாக அறிந்தவன். பல நெருக்கடிகளில் உதவியிருக்கிறான். சினிமா போவதாக இருந்தால் என்னைத்தான் கூட்டிக்கொண்டு போவான். நான் காட்சிக்குக் காட்சி படத்தைக் கழுவி ஊற்றுவதை ரசிப்பான். திரையரங்குக்குப் போனாலும் உணவகம் போனாலும் அவன்தான் செலவழிப்பான். நிறுவனத்தில் கொள்முதல் துறையில் மூத்த அதிகாரி அவன். எப்படியோ என்மீது அன்பும் அனுதாபமும் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. அவன் மனைவிக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் அவ்வப்போது வீட்டுக்குக் கூட்டிச்சென்று சாப்பிடச் சொல்லுவான். அவன் மனைவி அபாரமாகச் சமைப்பாள். அநியாயத்துக்கு அழகாக இருப்பாள். நண்பனின் மனைவி என்ற கவனத்துடன் பேசினாலும் ஒண்டிக்கட்டை ஆணின் கண்களுக்குக் கடிவாளம் போட்டுவிட முடியுமா? எதிரில் இருப்பவரின் கண்கள் எங்கே போகின்றன என்பதை அறியாத அழகிகளும் உலகத்தில் உண்டா? அதனால்தான் அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், சதீஷ் கொஞ்சம் அப்பாவி. ரொம்ப நல்லவன். நான் நன்றாகச் சாப்பிடுகிறேனா என்றுதான் கவனிப்பான்.

சாப்பிட்டு முடித்துவிட்டுப் பக்கத்தில் இருந்த பூங்காவுக்குச் சென்று உட்கார்ந்தோம். நிறைவான உணவு தரும் மனநிறைவைச் சிறிது நேரம் கண்களை மூடியபடி மௌனமாக அனுபவித்தேன். சதிஷும் உடன் இருப்பது சில நிமிடங்களுக்குப் பிறகே உறைத்தது. கண்களைத் திறக்காதே என்று சொல்லும் தூக்கத்தை விரட்டிவிட்டுக் கண்களைத் திறந்தேன்.

இன்னிக்கு லீவு போட்டுருக்கியா?”

நீயும் ஆஃபீகஸ் போகல. நானும் ஆஃபீஸ் போகல. ஆனா நீ லீவான்னு உன்னைப் பாத்து நான் கேக்கல பத்தியா?”

நல்லா பேசறடா மாப்ள.”

பாராட்டு மசுருல்லாம் இருக்கட்டும். என்னடா பண்ண போற?”

வேற வேல பாக்க வேண்டியதுதான்.”

நேத்துதான் பெஸ்ட் பர்ஃபாமன்ஸுக்காக விருது. இன்னிக்கு ரிசிக்னேஷன். பெரிய கொடுமடா உன்னோட.”

அந்த விருதப் பத்தி பேசாதடா. அசிங்க அசிங்கமா வாய்ல வருது.”

அதுல என்னடா பிரச்சன? நீ குடிச்சிட்டு ஆட்டம் போட்டதுதானடா பிரச்சனை?”

ஏங் குடிச்சேன்னு தெரியுமா?”

நீதான் பாட்டில கண்டா நாக்க தொஙக போட்டுகிட்டு நாய் மாதிரி ஓடுவியே.”

ஆமாண்டா. ஓடுவேன். ஆனா ஆஃபீஸ் பார்ட்டில எப்டி நடத்துக்கணும்னு எனக்குத் தெரியாதா? இன்ஃபாக்ட் நேத்து குடிக்கவே கூடாதுன்னு இருந்தண்டா. ரொம்ப சந்தோஷமா இருந்தண்டா. ரொம்ப உற்சாகமா…”

டேய்டேய்…” சதீஷ் என் தோள்களை அணைத்து உலுக்கினான். “என்னடா திடீர்னு அழற?” என்றான். சற்றே என் முகத்தருகே நெருங்கி முகர்ந்து பார்த்தான்.

தண்ணியெல்லாம் அடிக்கலடா…” என்றேன் கண்களைத் துடைத்தபடி.

நீ இப்படி அழுது நான் பாத்ததேயல்லயேடா…” சதீஷின் குரல் இடறியது. சிறிது நேரம் மௌனமாக இருந்து என் உணர்வுகளின் சக்தியை மீட்டுக்கொண்டேன். கழிவறைக்குப் பக்கத்தில் இருந்த குழாயில் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தேன். நேற்று இருந்த மனநிலையையும் என்னுடைய ஏமாற்றத்தையும் சொன்னேன்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சதீஷ், “இதெல்லாம் ஒரு மேட்டராடா? கார்ப்பரேட் ஸ்ட்ரக்சர்ல இதெல்லாம் சகஜம்டா. கீழ இருக்கறவனுக்கு இன்சன்ட்டிவ் குடுப்பாங்க, இன்க்ரிமென்ட் குடுப்பாங்க. சில சமயம் அவார்டுகூட குடுப்பாங்க. ஆனா கிரெடிட் யாருக்குப் போகணும்ன்றதுல தெளிவா இருப்பாங்க. இதுகூடத் தெரியாதாடா ஒனக்கு?” என்றான்.

அது இல்லடா சதீஷ். நா இந்த ப்ராஜக்டுக்காகக் கடுமையா ஒழச்சிருக்கேண்டா. நாயா அலைஞ்சேண்டா. டீம் மெம்பர்ஸ்கிட்டல்லாம் ராத்திரி பத்து பதினோரு மணிக்கெல்லாம் கான் கால் போட்டு பேசுவண்டா. அவனுங்களுக்கு ஃபீல்டுல என்ன ப்ராப்ளம்னு பாத்து பாத்து சரி பண்ணினேண்டா. பல நாள் பங்களுக்கு லஞ்ச் வாங்கி குடுத்துருக்கேன். சேல்ஸ் மேனேஜர கண்டாலே பசங்க நடுங்குவாங்க. அவருகிட்ட நான்தான் பேசுவேன். இந்த ப்ராஜக்டுக்காக அவ்ளோ ஒழச்சேண்டா…”

அதுக்குதானடா கேஷ் ப்ரைஸும் அவர்டும் கொடுத்தாங்க. வாங்கினு மூடிட்டு போக வேண்டியத்தானடா. என்ன மயித்துக்குடா பாராட்டுல்லாம் எதிர்பாக்கற?”

இந்த பத்தாயிரம் ரூபா எனக்குப் பெரிய அமவுண்டுதான். ஆனா ரெகக்னிஷன்றது அதவிட பெரிசுடா. லாரன்ஸும் எம்.டி.யும் சிவா சாரை எப்படிப் பாராட்னாங்க பாத்தல்ல. புகழெல்லாம் விரும்பாதவர்னு நெனைக்கறோமே அந்த சிவா சார் மூஞ்சிய அப்ப பாத்தியாடா? யார்ரா சொன்னது பாராட்டு முக்கியமில்லன்னு? முக்கியண்டா. ரொம்ப முக்கியண்டா. அதோட கம்பேர் பண்ணா இந்த கேஷ் ப்ரைஸ் ஜஸ்ட் நத்திங்…” என்று சொல்லிவிட்டு சதீஷ் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டையும் லைட்டரையும் எடுத்துப் பற்றவைத்தேன்.

ஒண்ணே ஒண்ணுதான் இருக்குடாஎன்று சொல்லிவிட்டு சிகரெட்டை வாங்கி இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுத் தந்தான். “போற வழில வாங்கிக்கலாண்டா மயிறுஎன்று புகையை ஆழமாக உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட்டேன். சிகரெட்டை அவன் கையில் கொடுத்தேன்.

நான் இந்த ப்ராஜக்ட்ல எந்த அளவுக்கு ஒடம்பாலயும் மனசாலயும் ஈடுபட்டேன்னு சேல்ஸ் மேனேஜருக்குக்கூட தெரியாதுடா. டார்கெட் குடுத்து ஸ்ட்ராட்டஜிய டிஸ்கஸ் பண்ணி ஃபைனலைஸ் பண்ணினதோட அவனோட வேல முடிஞ்சிடிச்சி. நடுவுல ஏதாவது சந்தேகம் கேட்டாலோ டிஸ்கஸ் பண்ணணும்னு சொன்னைலோ, ‘ஸ்கூல் பசங்க ப்ராஜக்ட் பண்றா மாதிரி பண்ணாதீங்க வாசு. பீ ரெஸ்பான்சிபிள். டேக் ரெஸ்பான்சிபிலிடி. ட்ரபுள் வந்தா டீம்ல பேசி சால்வ் பண்ணுங்க. பசங்க சரியில்ன்னா ஹெச்.ஆர். கிட்ட பேசுங்க. ஆட்டிட்யூட், அப்ரோச் இந்த மாதிரி பிரச்சனயா இருந்தா இருக்கவே இருக்காரு நம்ம கம்பெனி சாமியார் சிவா. அவர்கிட்ட போங்க. ஐ வாண்ட் டெலிவரி. எப்படிப் பண்ணுவீங்களோ தெரியாது. முடியாதுன்னா இப்பவே சொல்லிடுங்க, நான் டைரக்டா டீல் பண்ணிக்கறேன்’, அப்டீன்னு சொல்லிட்டான் அந்த நாறப்பய. நா சிவா சாரோட டிஸ்கஸ் பண்ணி டிஸ்கஸ் பண்ணிதான் ப்ரோக்ரஸ் வந்தது. அவர் செஞ்ச உதவி பெரிசு. ஆனா அதுல என் பங்கு முக்கியமானதுடா. அது அவருக்கும் தெரியும். இந்த ப்ராஜக்ட்ல நானே எந்த அளவு மாறியிருக்கேன்னு அவருக்குத் தெரியும். அவர் என்னோட வெல்விஷர். மென்ட்டார். அவருகூட என்னப் பத்தி ஒரு வார்த்த சொல்லலடா. மத்தவங்க அவர பாராட்டும்போது இதுக்கெல்லாம் வாசுதேவனும் காரணம்னு அவர் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அத நெனச்சாதான்டா தாங்க முடியல.”

சதீஷின் கையில் மிச்சமிருந்த சிகரெட் துண்டை வாங்கி அதைப் புகைத்து முடித்தேன். கொஞ்சநேரம் கழித்து சதீஷ் கேட்டான், “இப்ப என்ன பண்ண போற?”

நீ சொல்றத பாத்தா நேத்து பெரிய சீன் நடத்துருக்கு. இன்னேரம் மேட்டர் எம்.டி. வரைக்கும் போயிருக்கும். இனிமே நா இங்க இருக்கறது மரியாத இல்ல.”

பார்ட்டில சீனாகறதெல்லாம் பெரிய விஷயமாடா? ஹெச்.ஆர். கிட்ட அபாலஜி லெட்டர் குடுத்துட்டு பேசாம டூட்டிக்கு வாடா. இந்த சம்பளத்துல உனக்கு உடனே எங்கயும் வேலை கிடைக்காது. இது நல்ல கம்பெனிடா. இப்பல்லாம் ரெக்ரூட் பண்ணும்போது ப்ரீவியஸ் கம்பெனி ஹெச்.ஆர்.கிட்ட பேசிட்டுதாண்டா ரெக்குப் பண்றான்.”

தெரியுண்டா. ரிசைன் பண்ணிட்டு சைலன்டா ஒரு மாசம் ஊருக்கு போயிடுவேன். திரும்பி வந்து வேலை தேடலாம். லாரன்ஸ் கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி நல்ல ரிப்போர்ட் குடுக்க சொல்லலாம். மார்க்கெட்டிங்தானடா, வேல கிடைக்காமலா போயிடும்?”

கெடைக்குண்டா. ஆனா, நல்ல கம்பெனில அவ்வளோ ஈஸியா கெடைக்காது. அவசரப்பட்டு முடிவு பண்ணாதடா. கைல இருக்கற காசு செலவாச்சுனா குண்டி காய வேண்டியதுதான். நா வேணா லாரன்ஸ் கிட்ட பேசறேன்.”

அதெல்லாம் வேணாண்டா.”

இல்லார்டி சிவா சார் கிட்டயே பேசவா?”

வேணவே வேணாம். அவருகிட்ட என் பேச்சையே எடுக்காத.”

 

னால், சதீஷ் என் பேச்சைக் கேட்கவில்லை. எனக்குத் தெரியாமல் சிவா சாரைப் போய்ப் பார்த்திருக்கிறான். அவர் வழக்கம்போலப் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன்னுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

வாசு நல்ல ஒர்க்கர். நைஸ் பர்சன். கத்துக்கறதுல ஆர்வமுள்ள மனுஷன். நெறைய டேலன்ட்ஸ் இருக்கு. யுனீக்கான ஐடியாஸ் இருக்கு. யாராவது ப்ராப்பா கெய்ட் பண்ணினா நல்லா பர்ஃபார்ம் பண்ணுவார். அவரா எதுவும் பண்ணமாட்டார். ஏன்னா அவருக்கு மோட்டிவேஷன் கிடையாது. வாழ்க்கையில் ஆழமான பிடிப்போ லட்சியங்களோ கிடையாது. ஆசைகள் இருக்கு. ஆனால், பொறுப்புகளை ஏற்காமல் ஆசைகளை நிறைவேத்திக்க முடியாது. எதையுமே சாதிக்காமல் எதையும் எதிர்பார்க்க முடியாது. எதைச் செய்யறதுக்கும் சொல்றதுக்கும் நேரம், சூழல் எல்லாம் முக்கியம். வாசு இதுல ரொம்ப வீக். அவருக்குக் கூர்மையான மூளை இருக்கு. எல்லாரைப் பத்தியும் எல்லாத்தப் பத்தியும் விமர்சனம் இருக்கு. ஆனா விமர்சனம் பண்றதுக்கு ஒரு முறை இருக்கு. இடம், நேரம் இருககு. வாசுதேவனுக்கு இதெல்லாம் தெரியாது. சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டார். பொறுப்பு இல்லை. லட்சியம் இல்லை. பிடிப்பு இல்லை. இங்கிதம் இல்லை. மூளை இருக்கு, கூர்மையான நாக்கு இருக்கு. இப்படி இருந்தா அனர்த்தம்தான் விளையும். இந்த ப்ராஜக்ட்ல அவரோட பங்கு முக்கியமானதுதான். ஆனா அவர் கிட்ட இதை முழுசா குடுத்திருந்தா பெரிய டிசாஸ்டர் ஆகியிருக்கும். ஏன்னா அவருக்கு மத்தவங்களைக் கையாளும் பக்குவம் இல்லை. முழுக்க முழுக்க நானும் லாரன்ஸும் சேல்ஸ் மேனேஜரும் பேக்அப் பண்ணினதுனாலதான் இது நடந்தது. மேனேஜ்மென்ட்டுக்கு இது நல்லா தெரியும். வாசு ஒரு கருவி மட்டும்தான். அதைப் பயன்படுத்தினது நாங்க. இதெல்லாம் வாசுவுக்குப் புரியாது. புரியவைக்கவும் முடியாது. ஆனா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. ஏன்னா என்னால பொய் சொல்ல முடியாது. இப்ப அவரைப் பாத்து பேசறதும் வேஸ்ட். கொஞ்ச நாள் கழிச்சி பாத்தா அவரோட மனக் கொதிப்பு அடங்கியிருக்கும். காது கொஞ்சம் திறந்திருக்கும். வேலை விஷயமா வேண்ணா நான் எம்.டி. கிட்ட பேசறேன். பார்ட்டில யாராவது மிஸ்பிஹேவ் பண்றது ஒண்ணும் புதுசு கிடையாது. அபாலஜி வாங்கித் தர்றது கஷ்டமில்லை.”

நான் சதீஷை நேருக்கு நேராகப் பார்த்தேன். “பரவாயில்லயே. கிட்டத்தட்ட அவர் பேசறா மாதிரியே கோவையா சொல்லிட்டியேஎன்றேன்.

இந்த காம்ப்ளிமென்ட் மயிறுல்லாம் இருக்கட்டும். மொதல்ல வேலைக்கு சேர்ற வழியப் பாருடா வெண்ண.”

ரொம்ப தேங்ஸ்டா மாப்ள. நேத்து வரைக்கும்கூட அபாலஜி கேட்டுத் திரும்ப வந்துரலாமான்னு யோசிச்சேன். ஆனா சார் சொல்லத கேட்டப்பறம் இனி இந்தக் கம்பெனி வேணாம்னு கண்டிப்பா தோணுது. அவர் என்னப் பத்தி சொன்னது பெரும்பாலும் சரிதாண்டா. ஆனால், நான் ஒண்ணும் முட்டாள் இல்ல. என்னோட மதிப்பை நிரூபிச்சிட்டு வந்து அவர பாக்கறண்டா.”

சதீஷ் எதுவும் போசாமல் திகைத்துப்போய் நின்றான். அன்றிரவு முன்னறிவிப்பில்லாமல் அவன் வீட்டுக்குப் போனேன். சதீஷ் ஆச்சரியமடைந்தான். “என்னடா திடீர்னு?” என்றான். “ஊருக்கு போறண்டா. உஙக வீட்டு தோசைய சாப்டுட்டு போலாம்னு வந்தேன்என்றேன். வேணி எட்டிப் பார்த்துச் சிரித்தாள். கொள்ளை அழகு. “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சட்னி அரைக்கறேன்என்றாள். “உங்க மொளகாப் பொடியே போதும்என்றேன். ஐந்து தோசைகளைச் சாப்பிட்டுக் காபியும் குடித்துவிட்டுக் கிளம்பினேன். “கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு விடுடாஎன்றேன். சதீஷ் மறு பேச்சுப் பேசாமல் கிளம்பினான். வேணி சிரித்தபடி விடைகொடுத்தாள். போய்த்தொலை என்றுகூட அவள் நினைத்திருக்கலாம். அவள் சிரிப்பைப் பார்த்ததும் எனக்கு மனசு படபடவென்று அடித்துக்கொண்டது.

அடுத்து என்ன செய்யப்போகிறாய் என்று போகும் வழியெல்லாம் சதீஷ் கேட்டுக்கொண்டிருந்தான். இந்த ஒரு வேலையில்தான் இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்திருக்கிறேன். மற்ற எல்லா இடங்களிலும் மூன்று முதல் ஆறு மாதம் வரைதான் நீடிக்கும். ஏதோ ஒரு பிரச்சினை வந்து வேலையை விட வேண்டிவரும். பாதி இடங்களில் குடிப் பிரச்சினை. சில இடங்களில் போதிய அளவு செயல்படாமை என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள். வேறு சில இடங்கள் உருப்படாது என்று நானே விட்டுவிட்டு வந்துவிடுவேன். அடுத்து என்ன என்ற கேள்விக்கெல்லாம் தெளிவான பதில் எதுவும் இல்லை. பட்டப் படிப்பைக்கூட முழுமையாக முடிக்காதவனுக்குச் சந்தைப்படுத்துதல் தவிர வேறு என்ன வேலை கிடைக்கும்? அக்கவுண்ட்ஸ், சாஃப்ட்வேர் என்று வேறு திறமைகளையும் வளர்த்துக்கொள்ளவில்லை. செலவு செய்து படிக்கவைக்கவும் ஆள் இல்லை. அப்பா சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா வீட்டு வேலை செய்து படிக்கவைத்தார். நான் கல்லூரிக்குப் போவதற்குள் உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டார். இப்போது அண்ணன் வீட்டில் நடைபிணமாக இருக்கிறார். அண்ணன் நிலையும் சொல்லிக்கொள்கிறாற்போல இல்லை. தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடமும் சரியில்லை. ஒரே குடும்பத்தை இப்படிக் குறிவைத்துத் தாக்குவதென்று கடவுள் முடிவு செய்துவிட்டால் என்னதான் செய்வது.

ஊருக்குப் போயிட்டு வந்து வேலை பாத்துக்கலாண்டா. நீ கவலப்படாத. உனக்கு பாரமா மாட்டேன். அப்புறம் வேணி உன்னை வீட்டை விட்டுத் தொரத்திடுவாஎன்றேன்.

அதுக்கு இல்லடா. நீ என்ன பண்ணப்போறேன்னுதான்…”

அண்ணன் வர சொல்லியிருக்கான். ஒருவேளை அங்கேயே எதனா சான்ஸ் அமைஞ்சாலும் அமையலாம். சரி நீ கிளம்பு. கைல பணம் இருந்தா குடுத்துட்டு போ. வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போகணும்.”

சதீஷ் 800 ரூபாயை எடுத்துக் கொடுத்தான். அவனுக்கு விடைகொடுத்துவிட்டு ஈரோடு செல்லும் பேருந்து நிற்குமிடத்துக்குப் போனேன். பத்து மணிக்குத்தான் பேருந்து கிளம்பும். இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு வெளியில் வந்தேன். சிறிது தூரம் நடந்து சென்று ஒரு டாஸ்மாக் கடையைக் கண்டுபிடித்துக் குடித்தேன். மனம் சற்று அமைதியாயிற்று. அங்கேயே அமர்ந்தபடி பழசையெல்லாம் அசைபோட ஆரம்பித்தேன்.

திரும்பத் திரும்ப அந்தக் கூட்டத்தின் காட்சிகள் மனதிற்குள் உருப்பெற்றன. அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிய பெண்ணும் அட்டகாசமாக உடை உடுத்த பெண்ணும் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று யோசித்தேன். ராதா என்ன ஆனாள்? நான் ஊருக்குப் போகிறேன் என்பதால்தான் வேணி சிரித்த முகத்துடன் எனக்குச் சாப்பாடு போட்டாளா? அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்குமோ. மருந்து வாங்கும் செலவைச் சமாளிக்க முடியவில்லை என்று ரகு போன மாதம் சொல்லியிருந்தான். அவன் வீட்டுக்குப் போய் என்ன செய்வது? சிவா சார் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்? ஜேகே, ஜென், நீட்ஷே என்று எதையாவது படித்துக்கொண்டிருப்பார். அவர் சதீஷிடம் சொன்னது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. ‘வாசு நல்ல ஒர்க்கர்தான். ஆனால், அவராக எதுவும் பண்ண முடியாது. புத்திசாலிதான். ஆனால், இங்கிதம் இல்லாதவர். நாங்கள் இல்லாவிட்டால் இந்த ப்ராஜக்ட் நாசமாகியிருக்கும்.’ சம்பிரதாயத்திற்காக அவர் பெயரைச் சொல்லியிருக்கலாம். ஆனால், எனக்கு அது பழக்கமில்லை

இன்னொரு பாட்டில் வாங்கிக் குடித்தேன். மனம் கொதித்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஆட்டோவில் ஏறினேன். “ஐஸ் ஹவுஸ் போகணும்என்று சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

அரவிந்தன்” <aravindanmail@gmail.com>

d.i. aravindan

 

Amrutha

Related post