கே.ஆர். மீராவின் இரண்டு நாவல்கள் – இளங்கோ

 கே.ஆர். மீராவின் இரண்டு நாவல்கள் – இளங்கோ

யூதாஸின் நற்செய்தி & மீராசாதுஆசிரியர்: கே.ஆர். மீரா; தமிழில்: மோ. செந்தில்குமார்; யூதாஸின் நற்செய்திவிலை ரூ. 200; மீராசாது – விலை ரூ. 150; வெளியீடு: எதிர், 96 நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642002; தொலைபேசி: +919895005084; மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

 

மிழில் நாவல்கள் என்றால் கனதியான நூல்கள் மட்டுமே என்றொரு நம்பிக்கை அண்மைக்காலமாக விதைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவேதான் பலர் தேவையில்லாத விடயங்களை எல்லாம் சேர்த்து நூற்றுக்கணக்கில் எழுதிக் குவிக்கின்றார்கள். தமிழில் தன் நாவல்களை கனகச்சிதமான வடிவில் எழுதிய சிலரில் அசோகமித்திரனையும் நகுலனையும் நான் நினைவுகூர்வதுண்டு, நாவல்களில் மட்டுமில்லை, குறுநாவல்களிலும் திருத்தமாக எழுதிச் செல்வதில் கைவந்தவர்கள் அவர்கள். ஆனால், அந்த மரபு அவ்வளவாகத் தமிழில் வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழில் பின்னமைப்பியல் / பின் நவீனத்துவம் விரிவாகப் பேசப்பட்டு 20-30 வருடங்கள் ஆனதன் பின்னும், இன்னும் நவீனத்துவத்தின் சட்டையை உரித்துக்கொள்ள நாம் தயாராகவில்லை. ஆகவேதான், பல நாவல்கள் சளசளவென்ற நடையில் தொடக்கத்திலேயே நம்மை பிரதிகளிலிருந்து வெளியே தள்ளிவிடவும் செய்கின்றது.

மலையாளத்தை (மட்டுப்படுத்த அளவே வாசித்திருந்தாலும்) பார்க்கும்போது, நாவல்களில் இந்த குறுகச் சொல்லும் மரபு தொடர்ந்து வளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது போலும். பஷீர், எம்.டி. வாசுதேவன் நாயர் போன்றோரின் அநேக முக்கியமான படைப்புகள் குறைந்த பக்கங்களிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியில் பின்னமைப்பியல் வழங்கிய செழுமையை உள்வாங்கி, சிறந்த படைப்புக்களைத் தரும் ஒருவராக கே.ஆர். மீராவைச் சொல்வேன். மிகச் சிறிய நாவல்கள், ஆனால், அவ்வளவு கனதியானவை.

மாய யதார்த்தம் இலத்தீன் அமெரிக்காவினால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதை கொண்டாடிய நாம், அதன் பின் அங்கே அலெஜாந்திரோ ஸாம்பிரா போன்ற இன்றைய கால படைப்பாளிகள் எப்படி எழுதுகின்றார்கள் என்பதை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஆனால், மலையாளப் படைப்பாளிகள் அதைப் பரிட்சித்துப் பார்ப்பதனால் இது சாத்தியமாயிருக்கின்றது போலும்.

மீராவின் ‘கபர்’, ‘அந்த மரத்தையும் நான் மறந்தேன் மறந்தேன்’, ‘யூதாஸின் நற்செய்தி’ போன்ற நாவல்களை வாசிக்கும்போது, மீரா இன்றைய தலைமுறையின் படைப்பாளி என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது. குறைந்த பக்கங்கள், ஆனால், அவ்வளவு தெளிவான கதைக் களங்கள். சொல்ல வேண்டியதை நறுக்காய்த் தெரிவித்துவிட்டு நாவல்களை சட்டென்று முடித்துவிடுகின்றார். ஆனால், நமக்கோ அதன் பாரம் தாங்கமுடியாது நாவல் மனதுக்குள் கனக்கத் தொடங்கிவிடுகின்றது.

 

Yuthasin Narcheithi, K R Meera, Mo. Senthilkumarயுதாஸின் நற்செய்தி’யில் இந்திரா காந்தியின் நெருக்கடி காலத்தில் தீவிரமாக இயங்கிய இடதுசாரி இயக்கத்தைப் பற்றி மீரா சொல்கின்றார். அதற்கு இயேசுவின் காலத்தைய யூதாஸின் படிமத்தைப் பாவிக்கின்றார். தாஸ் என்கின்ற ஒரு மாவோயிஸ்ட் பொலிஸின் சித்திரவதையின் மூர்க்கத்தால் தன் காதலியும் இயக்கக்காரியுமான சுனந்தாவின் பெயரை உச்சரித்து விடுகின்றான். அதனால்தான் தன் காதலியும் இன்னொரு தோழனும் பொலிஸால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று குற்ற உணர்ச்சியில் தாஸ் காலம் முழுதும் வாழ்ந்து தொலைக்கின்றான் என்பதுதான் இந்நாவலின் அடிச்சரடு.

நமக்குக் கதை சொல்கின்ற பிரேமா ஒரு பொலிஸ்காரனின் மகள். தந்தை சிறு வயதுகளில் இருந்தே இப்படி இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் கதைகளை பிரேமாவுக்கும் தாயிற்கும் ‘வேண்டாம் வேண்டாம்’ என்கின்றபோதும் வற்புறுத்திக் கேட்க வைக்கின்றார். அதுவே எதிர்ப் பண்பாக பிரேமாவை ஒரு நக்சல்பாரியாக மாறும் கனவை விதைக்கின்றது. அந்தக் கனவின் நீட்சியில், தன் தோழர்களைக் காட்டிக்கொடுத்து குற்ற உணர்வில், இப்போது குளங்களில் உடல்கள் மூழ்கின்றபோது அதை தண்ணீருக்கடியில் சுழியோடி வெளியே எடுத்துப் போடுகின்ற தாஸ் என்கின்ற முன்னாள் இயக்கக்காரன் மீது காதல் பித்துப் பிடிக்க பிரேமாவை வைக்கின்றது.

தாஸோ, இந்தக் காதலை நிராகரித்து தானொரு யூ-தாஸ் என்கின்றான். ஆனால், பிரேமாவின் இந்த 15 வயதுப் பித்து, அவரின் 35 வயதுக்கு மேலாகவும் நீள்கின்றது. தாஸே தன் ஒரெயொரு காதலன் என்றபடி அவன் இவரைவிட்டுத் தப்பியோடுகின்ற ஒவ்வொரு பொழுதும் அவனைத் தேடி கேரளத்தில் ஒவ்வொரு மூலைக்கும் போய்க் கொண்டிருக்கின்றார்.

தாஸ் உள்ளிட்ட பல இளைஞர்களை மூர்க்கமாய் சித்திரவதை செய்து குளங்களிலும் மலைகளிலும் கொன்று தூக்கிப் போட்ட பொலிஸ்காரர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் மிகப்பெரும் தண்டனைகளைக் கொடுக்கின்றது. ஆனாலும், சில கொடும் சித்திரவதையாளர்கள் அது தமக்குத் விதிக்கப்பட்ட தொழில்; நாம் அரசுக்கு நன்றியுடையவர்களாக இருந்தோம்; ஆகவே, அப்படி இருந்ததற்காக வெட்கப்படவில்லை என்றும் பிற்காலத்தில் கூறுகின்றார்கள்.

காலம் கொடுக்கும் மிகப் பெரும் தண்டனை பிரேமாவின் பொலிஸ் தந்தைக்குத்தான் எனச் சொல்லவேண்டும். பிற்காலத்தில் நோயால் அவர் அவதிப்படும்போது, கஞ்சாவும் கள்ளச்சாராயமும் விற்கும் அவரின் மகனை கைது செய்து சிறைக்குள் சித்திரவதை செய்துவிட்டு, அவர் தப்பியோடும்போது கொன்றுவிட்டோம் என்று மகனின் சடலத்தைக் கொடுக்கின்றது, பொலிஸ். தன்னையொரு சிறந்த சித்திரவதையாளரும் பொலிஸும் என்றும் காலம் முழுக்க நம்பிக்கொண்டிருக்கும் அவரால் தன் மகனுக்குப் பொலிஸ் இப்படிச் செய்யுமா என்பதை நம்பவே முடியவில்லை. அங்கே நிகழ்வது மாபெரும் வீழ்ச்சி. வாழ்தலின் பெறுமதியே அர்த்தமற்றுபோகும் ஒரு பெரும் மரணம் அவருக்கு.

இந்த நாவலில் பொலிஸின் சித்திரவதை மிக விரிவாகப் பேசப்படுகின்றது. ஆனால், பொலிஸின் அராஜகங்கள் பற்றிய நாவல்ல இது. ஒரு இயக்கத்திலிருந்தவன் தன் தோழர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டோமே என்று குற்றவுணர்ச்சியில் வாழ்ந்து கொண்டிருப்பது பற்றியே நாவல் முழுதும் பேசப்படுகின்றது, நினைவூட்டப்படுகிறது.

இது கேரளாவின் பின்னணியில் நடக்கும் நாவல் என்றாலும், அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டங்கள் நடத்திய ஈழம் உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதே. நம் இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் இப்படி சந்தர்ப்ப சூழ்நிலையாலோ அல்லது விரும்பியோ காட்டிக் கொடுத்த பலர் இருப்பார்கள். அவர்களின் மனோநிலைகளை ஆழமாகப் பேசி எந்தப் புனைவாவது வந்திருக்கின்றதா? நாம் செய்தது, துரோகி என்றோ தியாகி என்றோ அளவுக்கதிகமாய் ரொமண்டிசைஸ் செய்து கதைகளை உருவாக்கியது மட்டுமே. ஆனால், மீராவின் இந்த நாவலில் நாம் தாஸ் என்கின்ற யூதாஸை மட்டுமில்லை, அவனில் காதல் கொண்டலைகின்ற பிரேமா என்ற பெண்ணின் உளவியலையும் புரிந்துகொள்கின்றோம்.

இங்கே பொலிஸ்காரர்கள்கூட எதிர்நிலையில் வைத்துப் பேசப்படவில்லை. எப்படி இயக்க இளைஞர்கள் நம்மிடையே இருந்து தோன்றுகின்றார்களோ, அவ்வாறே பொலிஸும், நமக்கிடையே எப்போதும் மேலெழும்பிவிடக்கூடிய அதிகாரத்தின் குறுவாட்களுடன் காத்திருப்பவர்கள் என்று, அவர்களையும் விலத்தி வைக்காது உரையாடலில் உள்வாங்கப்படுகின்றார்கள். இவ்வளவு சித்திரவதைகள் செய்தும் பிற்காலத்தில் நோய்வாய்ப்பட்ட பொலிஸ் தகப்பனையும் பராமரித்துக் கொண்டே பிரேமா தன் நக்சல்பாரி காதலைத் தேடி அலைகின்றார். இதில் இருப்பதுதானே மனிதசாரம். இங்கிருந்து உருவாவதுதானே அதிசிறந்த கருணையாக இருக்கமுடியும்?

தாஸ் என்கின்ற யூதாஸ் தன் இளமைக்கால காதலியான சுனந்தா கொல்லப்பட்டதை மறக்காது இருப்பதால்தான், தன் காதலை நிராகரிக்கின்றான் என்று நம்பும் பிரேமா இறுதியில் சந்தர்ப்பவசத்தால் ஒரு நக்சலைட்டாக மாறுவது ஒருபக்கம் நிகழும்போது, சுனந்தாவைப் போல அவளின் அடுத்த தலைமுறை பெறா மகளையும் நில அபகரிப்புப் போராட்டத்தின்போது பொலிஸ் நுட்பமாகக் கொன்று ஆற்றில் போடுகின்றது. ஆகவே, போராட்டங்களும் பலிகளும் ஒருபோதும் முடிவதில்லையென்பதை மீரா நமக்கு மறைமுகமாக உணர்த்துகின்றார். வேறுவேறு களங்கள், தலைமுறைகள். ஆனால், அதே ஒடுக்குமுறைகள், அதே சித்திரவதைகள், அதே திமிர்தெழுதல்கள்!

தாஸும் பிரேமாவும் யாரோ ஒருவர் நீரில் மூழ்கியோ / மூழ்கடிக்கப்பட்டோ சாகத்தான் போகின்றோம். ஆனால், ஒருவர் இறந்தால், அந்த உடலை நீருக்கு வெளியே கொண்டுவர மற்ற ஒருவராவது உயிரோடிருக்க வேண்டுமே என்று குமரகத்தில் ஒரு உடைந்துபோன படகு வீட்டில் தமது நிறைவேறாக் காதல்களுடன் காத்திருக்கின்றனர்.

மீராசாது

Meerasaathu, K R Meera, Mo. Senthilkumarநம்மைப் பித்துப்பிடிக்க வைக்காத ஏதேனும் ஒரு காதலைக் கடந்து வராதவர்கள் அரிதாகவே இருப்போம். காலப்போக்கில் அந்தப் பித்து உதிர்ந்துபோக வாழ்வின் அடுத்த கட்டங்களில் நகர்ந்து போயிருப்போம். ஆயினும் கோடை காலத்து மழை போல சட்டென்று எப்போதாவது ஞாபகங்கள் பொழிய, அதில் தோய்ந்து வெளியே வரும் நுட்பங்களையும் பின்னர் அறிந்திருப்போம். ’மீராசாது’வில் வரும் துளசிக்கு அப்படியொரு காதல்தான் மாதவனோடு வாய்க்கின்றது.

மாதவன், துளசியிடம் காதலை யாசிக்கும்போது, ‘நான் ஒருபோதும் உங்களைக் காதலிக்கமாட்டேன்; உங்களைப் பார்க்கும்போது அறை நிறைய 27 பெண்கள் இருக்கின்றார்கள்’ என அந்தக் காதலை துளசி நிராகரிக்கின்றார். மாதவன் அதற்கு முன்னரான தன் 27 காதலிகளைப் பற்றி துளசிக்குச் சொல்லியிருக்கின்றான், கடிதங்களில் எழுதியிருக்கின்றான்.

அப்படி மாதவனின் காதலை மறுக்கின்ற சென்னை ஐஐடியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துளசிதான், அவளுக்கு வினயன் என்கின்ற இன்னொருவனுடன் திருமணம் நடக்கவிருக்கும் முதல்நாளில் மாதவனுடன் சேர்ந்து டெல்லிக்கு ஓடிப்போகின்றாள்.

மாதவன் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளன், பின்னர் தொலைக்காட்சிப் பக்கமும் போய் இன்னும் பிரபல்யம் வாய்ந்தவனாகின்றான். துளசி, மாதவனுக்காய் அனைத்தையும் துறந்து அவன் தாள்களில் பணிந்து போகின்ற ஒரு பெண்ணாய் காதலின் நிமித்தம் மாறுகின்றாள். காதலும் காமமுமாக தொடக்க காலம் துளசிக்குப் போகின்றது. எப்போதும் சிரிக்கின்ற பெண்ணையே என்னால் நேசிக்கவும் காமமுறவும் முடியும் எனச் சொல்லும் மாதவனின் உக்கிர காதலில் துளசி கிறங்கிக் கிடக்கின்றாள்.

துளசியை ராதை என்றழைக்கும் மாதவன் ஒரு கிருஷ்ணனே. அவனது பெண்கள் மீதான பித்தும் காதல் லீலைகளும் துளசிக்கு அப்பாலும் தொடர்கின்றது. துளசி தன் காதலை நிறைய நம்புகின்றாள். அந்தக் காதல் மாதவனை மீட்டெடுத்து ராதையாகிய தன்னிடம் சேர்க்குமென நம்புகின்றாள். ஆனால், மாதவன் மீண்டும் துளசியிடம் அதே காதலோடு திரும்பவேயில்லை.

இப்போது இரண்டு குழந்தைகளோடு துளசிக்கு பிறந்த வீடுமில்லை, மாதவனுமில்லை. எங்கே அடைக்கலமாவதென்று குழம்புகின்றாள். அவள் டெல்லிக்கு ஓடிப்போவதுடன் அவளின் குடும்பத்தில் இருக்கும் மற்ற சகோதரிகள் உள்ளிட்ட எல்லோரினதும் வாழ்வு பிறகு என்றென்றைக்குமாக மாறிவிடுகின்றது. எல்லோரும் துளசியையே குற்றஞ்சாட்டுகின்றனர்.

துளசி மனம் பிறழ்கின்றாள். மாதவனை எந்தளவுக்கு வெறுக்கின்றாளோ, அதேபோல மாதவனை நேசிக்கவும் செய்கின்றாள். மாதவன் ஒரு நாடக நடிகைக்காய் துளசியை விவாகரத்துச் செய்யக் கேட்கும்போது, பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டு, மாதவனோடு துளசி கலவி செய்கின்றாள். எங்கே நம் குழந்தைகள், இன்னமும் எழும்பவில்லையா என்று மாதவன் கேட்கின்றபோது, இனி அவர்கள் என்றென்றைக்குமாய் விழிக்கப் போவதில்லை, அவர்களை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டேன் என்கின்றாள் துளசி.

மனம் பிறழ்வுற்ற துளசி மனோநிலைக்காய் சிகிச்சை பெறும் விடுதியில் இருந்து தப்புவதும் மீளச் செல்வதாகவும் இருக்கின்றாள். ஒருநாள் தகப்பனின் காசைக் களவெடுத்துக் கொண்டுபோய் மதுராவில் பிருந்தாவனத்தில், அங்கேயிருக்கும் ஆயிரக்கணக்கான விதவைச் சாதுகளோடு தானும் ஒருத்தியாய் தங்கிவிடுகின்றாள். பிருந்தாவனத்திலும் அதை நடத்துபவர் / பூசாரிகளின் பணப்பிடுங்கல்கள் / பாலியல் வேட்கைகள் என்பவற்றைப் பார்த்து ஒரு இறுகிப்போன பாறையாகத் தன்னைக் கிடத்திக் கடந்து போகின்றாள்.

காலம் கடந்து போகின்றது. மாதவனுக்கும் வயதாகிவிட்டது. அவன் தன் கடந்தகாலத் தவறை உணர்ந்து துளசியிடம் மன்னிப்புக் கேட்க பிருந்தாவனம் வருகின்றான். துளசி எவ்வளவு காதலோடு எப்படி ஒரு காலத்தில் இருந்தாளோ, இப்போது அவ்வளவு வன்மத்தோடு பழிவாங்கக் காத்திருக்கின்றாள். மாதவன் காலில் விழுந்து கேட்கும் மன்னிப்பையெல்லாம் துச்சமெனத் தள்ளி நிராகரிக்கின்றாள். ‘காதல் பூதனைப் போன்று என்னைக் கொல்ல முயன்றது. முலைகளில் விஷம் தடவி பால் குடிக்க வைத்தது. நான் விஷம் குடித்தேன். பால் குடித்தேன். அவளுடைய குருதியையும் கூட உறிஞ்சிக் குடித்தேன்’ என்கின்றாள் துளசி.

பூதன் என்கின்ற அரக்கி, கம்சனின் சொற்கேட்டு கண்ணனுக்கு முலைப்பால் வஞ்சனையால் ஊட்டி, கொல்ல முயல்கையில் அவள் முலைவழியாக கண்ணனால் உயிருண்ணப்பட்டு மாய்ந்தவள்’ என்பது ஒரு ஜதீகக் கதை. அந்தப் பூதனின் விஷத்தை மட்டுமில்லை, குருதியையும் குடித்து இன்னும் உயிரோடு தான் இருப்பது மாதவனைப் பழிவாங்கவே என்கின்றாள் துளசி. ஏனெனில், ‘மாதவன் என்னுடையவன். நான் இனியும் அவனைக் காதலிப்பேன். வன்மத்துடன் காதலிப்பேன். காதலால் தோற்கடிப்பேன். புனிதப்படுத்துவேன். இறுதியில் அவனுக்குள்ளேயே இரண்டறக் கலப்பேன்’ என்று எப்படி மாதவன் இவளின் காதலைப் பயன்படுத்தினானோ, அவ்வாறே அவனையும் காலம்பூரா பழிவாங்குவேன் என துளசி தனக்குள்தானே சொல்லிக்கொள்கின்றாள்.

இது ஒரு பெண்ணின் உக்கிரமான காதல் கதை. இந்தக் குறுநாவலை வாசித்து முடிக்கும்போது நமக்குள் மாறியிருக்கும் மனோநிலைக்கு எதை உவமிப்பது என்பதும் புரிவதில்லை. இதை எழுதிய மீராவே ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிட்டுகின்றார்: “உலகில் இரண்டு அல்லது மூன்று துளசிகள் மட்டுமே இருப்பார்கள் என்றே நான் கற்பனை செய்திருந்தேன், 16ஆம் நூற்றாண்டின் கவிஞர் மீராபாயைத் தவிர்த்து. ஆனால், பின்னர் நான் அதிர்ந்துபோகும் வகையில், இந்த உலகம் எண்ணிலடங்காத துளசிகளை உருவாக்கியும் உருக்குலைத்தும் இருப்பதை நான் உணர்ந்தேன். ஓருவேளை, நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் துளசியாக மாறுவதைத் தவிர்க்க முடியாமல் போகலாம்’ என்கின்றார்.

 

mo. senthilkumar
மோ. செந்தில்குமார்

கே.ஆர். மீராவின் படைப்புக்களை சமகால தமிழ் எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றேன். மீரா எவ்வாறு கதைகளை நுட்பமாகச் சொல்கின்றார் என்பதையும், அந்தந்த கதைக்கான பாத்திரங்களில் எப்படி ஆழநுழைந்து வாசிக்கும் நம்மையும் கூடவே ஒரு பாத்திரமாக்கிவிடுகின்றார் என்பதையும் நாம் கவனமாக அவதானித்துப் பார்க்கவேண்டும். மேலும், வீணாக வார்த்தைகளையும் பக்கங்களையும் செலவழிக்காது சொல்லவேண்டியதை சுருக்கென்று சொல்லி முடிப்பதோடு, சொல்லும் கதையை பல்வேறு கதைகளோடு எளிதாக இணைத்தும் விடுகின்றார்.

‘மீராசாது’ குறுநாவலில் மீரா பொருத்தமாக மீராவின் பாடல்களைப் பயன்படுத்துகின்றார். மிகக் குறுகிய, அதேசமயம் உக்கிரமான ஒரு காதல் கதையை அதன் தீவிரம் குறையாது மோ. செந்தில்குமார் அழகாகத் தமிழாக்கியிருக்கின்றார். செந்தில்குமார் தமிழாக்கிய ‘கபர்’, ‘யுதாஸின் நற்செய்தி’, இப்போது ‘மீராசாது’ ஆகியவற்றை வாசிக்கும்போது நமக்கு மலையாளத்திலிருந்து தமிழுக்கு ஆக்கங்களைக் கொண்டு வர, இன்னுமொரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்துவிட்டார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இளங்கோ” <elanko25@gmail.com>

dse tamilan, ilango, elango

Amrutha

Related post