முயங்கொலிக் குறிப்புகள் 4 | கயல்

ஓவியம்: நடேஷ்
14. புறக்கணித்தல்
கட்டிலில்
திரும்பிப் படுத்துக்கொள்ளுதல்
என்பது
எனக்கு எதிராக
எப்போதும்
நீ கைக்கொள்ளும் தந்திரம்.
என்
இறைஞ்சுதல்களால்
துளைக்கவே முடியாத கேடயம் அப்போதுன் இதயம்.
அதன் பக்கத்தில்
முயன்று முனை மழுங்கிச்
சரிந்து கிடக்கின்றன
காமனின் அநேகம் அம்புகள்.
எத்தனை நீவியும் சுருக்கம் கலையாத படுக்கை விரிப்பில்
பல்லாயிரம் முறை
நீ பரப்பிவைத்த அவமானப் பூக்கள்.
ஒரு கூடலுக்கான சமிக்ஞையை
எத்தனை முறைதான் எழுந்தெழுந்து பார்க்கும் என் இரவு?
நீயாகப் பின்னொருநாள் நெருங்குகையில்
அரவணைத்துக்கொள்ளத் தயங்காத
கரையைத் தவிர்த்துவிட்டு
அலட்சியப்படுத்திய
கடல் மடியையே மீண்டும் சேரும்
அலைபோல
தலையணையைப்
புறக்கணித்துவிட்டு
உன்னிடமே
தஞ்சமடைகிறேன்.
15. கள்ளச் சாவிகள்
காலை நடையில்
ஒரு செம்மார்ப்புக் குக்குறுவான்
பார்த்தேன்
என்றவாறே
அள்ளி மடியமர்த்திக்கொள்பவனின்
ஆவேச அணைப்பிற்குச் சிணுங்குகையில்
ஷமிலா என்று
காதோரம் முணுமுணுப்பான்.
நீரை முத்தமிடுகிற மீனாய்
உதடுகள் நீந்தித் திளைத்து
விழி கிறங்கி
காற்றைத் தேடிக் கைகள் பரவும்போது
அவன் அழைக்கும் பெயர்
சுஷ்மா.
சன்னி, மியா, அகிசா
மேடிசன், பிரியா ராவ் எனப்
பரவச மிகுதியில்
பலவாறு அவன் அழைக்கும்
என் பெயர்கள்
இன்னும் ஏராளமுண்டு.
இடையில் ஒருபோது
நான் திடுக்கிட
ஒலித்த பெயர்
என் தங்கையினது.
துடித்த மனதை அடக்கியபடி
உடனே
நொடிக்கும் குறைவான தருணத்தில்
நினைவில்வந்த ஏதோவொரு பெயரை
எதேச்சையாய் உச்சரிப்பது போல
என் உதடுகள் நழுவவிட
அவ்விரவில் இருந்துதான்
என் பெயர்
எனக்கு மறுபடியும் சொந்தமாயிற்று.
தொடரும்
கயல் <dr.kayalvizhi2020@gmail.com>