நிசப்த நடனம்: இருதலைக் கொள்ளி எறும்புகள் – நாகரத்தினம் கிருஷ்ணா

அனைத்து விலங்குகளினும் பார்க்க மனித விலங்குகள் மேம்பட்டவை. காரணம், இவற்றுக்கு புலன்களால் உணரப்பட்டதை பகுத்தாயும் திறனுண்டு. ஆனால், மனிதர் கூட்டத்தின் பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். நரி, ஓநாய், சிங்கம் புலி, கரடியின் உருவங்கள், நேரடியாக அவ்விலங்குகளின் வலியத் தாக்கும் தன்மையை மான், முயல், ஆடு மாடுகளுக்கு உணர்த்திவிடும். அதன் விளைவாக கொடிய விலங்குகளைக் கண்ட மாத்திரத்தில் ஓடி மறைந்தும், இயலாதபோது அவற்றின் வயிற்றுப் பசிக்கு இரையாகியும் சாதுவான விலங்குகள் தங்கள் கானகச் சமூககத்தின் நியதிக்கு உட்படுகின்றன.
மனிதர் கூட்டம் கற்காலத்தில், ஏனையை விலங்குகளைப் போலவே வயிற்றுப் பசிக்கு வேட்டையாடி வாழ்ந்தது. இவ்வேட்டையில் சகமனிதனையும் தின்று பசியாறியது. மனிதன் இருண்ட கானக வாழ்க்கையில் அலுத்து, தன் துணை தன் மக்கள், தம்முடைய சுற்றமென கூடி வாழ முற்பட்டு, வேட்டையை நம்பியல்ல விவசாயம் செய்தும் பசியாற முடியும் என்றுணர்ந்த மாத்திரத்தில் திறந்த வெளிகளைத் தேடினான். தொடர்ந்து குடும்பங்களும் சுற்றமும் ‘நான்’, ‘நாம்’ என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதன் காரணமாக ஊர், நகரம், தேசமென சேர்ந்து வாழ ஆரம்பித்து, கற்காலத்திலிருந்து மனிதன் வெகுதூரம் விலகி வந்திருந்தான். எனினும், அவனுடைய அடிப்படைப் பண்பிலிலிருந்து விலகினானா என்பது கேள்வி.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சக விலங்கை, சக மனிதனை வேட்டையாடி விளையாடினானே, பிற உயிர்கள் வலியில் துடிக்க கொன்றானே, அவற்றின் உடலைக் கிழித்துப் பசியாறினானே, அக்கொடிய குணம் மனிதனிடம் இன்றில்லையா?
வேட்டை மனம், அதற்கு அடிமைபட்ட உணர்வுகள் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றன. இன்றிவன் கற்கால மனிதனில்லை, நிர்வாணமாக திரிந்தவனில்லை, பகுத்தறியத் தெரிந்தவன். காலத்திற்கேற்ப, சூழலுக்கு ஒப்ப, உயிர் வாழ்க்கைக்கு மாற்று வழிமுறைகளை உபாயங்களை, தந்திரங்களைக் கண்டறியக் கூடிய புத்திசாலி. பச்சையாக, கைவினைக்கு உட்படாமல், சமைக்காமல் மென்று விழுங்கிய, தின்று பசியாறிய கற்கால அநாகரீக மனிதனில்லை. இவன் நன்றாக உடுத்தத் தெரிந்தவன், தலைவாரத் தெரிந்தவன், மேடையில் நாகரீகமாகப் பேசத் தெரிந்தவன். இவனுக்கு அரசியல்வாதி, அதிகாரி, பேராசிரியன், எழுத்தாளன் என்கிற சமூக அடையாளங்கள் இருக்கின்றன. இவன் வேட்டையாட வேண்டிய அவசியமில்லை. இவனுக்குப் பதிலாக வேட்டையாடவும் தோலுரிக்கவும் செத்த உடலை உப்பு காரமிட்டு விரும்பினால் தீயிலிடவும், விரும்பாதபோது கூலிகளைக் கொண்டும் தமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் முடியும். இன்றைய பங்காளிச் சண்டை, சாதிச் சண்டை, இனச் சண்டை, எல்லைச் சண்டை, உலகப்போர் என அனைத்துமே வேட்டை மனத்திலிருந்து மனிதன் விலகவில்லை என்பதன் சாட்சியங்களே, பலியாகும் உயிர்களின் வதைகளை, அழுகுரலை இன்றும் வேட்டையாடும் மனித விலங்குகளன்றி வேடிக்கைப் பார்க்கும் மனித விலங்குகளும் பொருட்படுத்துவதில்லை. அதற்கு அவரவர்க்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன.
உள்ளூர் சண்டையில் ஆரம்பித்து உலகப் போர் வரை நீயும் நானும் ஒன்றல்ல என்கிற பகை உணர்வின் வெடிப்பு. உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஓர் இனம் மற்றோர் இனத்தை அழிப்பது இருபத்து மூன்றாம் நூற்றாண்டிலும் தொடரவே செய்கிறது. ‘ஓர் இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது’ இனப்படுகொலை. இந்த சொல் அண்மையில் (1943) ஞான ஸ்னானம் பெற்றது என்கிறபோதும், மனித குலம் தோன்றியதிலிருந்தே ஊர்ச் சண்டையில் ஆரம்பித்து உலகச் சண்டை வரை இனப்பகையை மையமாகக் கொண்டவை. அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, ஐரோப்பா என எந்தக் கண்டமும் மானுடத்தை அவ்வப்போது தாக்குகிற இனப்படுகொலை என்கிற இப்பேரிடருக்கு தப்பியதில்லை.
‘நிசப்த நடனம். பிரதீபன் ரவீந்திரன் என்பவர் எழுதி இயக்கியுள்ள தமிழ்த் திரைப்படம், ஓர் ஆவணப்படம், கலைப்படம். 1983இல் தொடங்கி 2009 வரை நீடித்த, சிங்களப் பெரும்பான்மை தமிழின சிறுபானமையை சீரழித்த, கொன்று குவித்த, திக்கு திசையின்றி பின்னவர்களை தேசாந்திரிகளாக அலையவிட்ட, ஓர் அவலச் சரித்திரத்திரத்தை திரைப்படக் கலை என்கிற தூரிகைக்கொண்டு காலத்தால் அழியாதச் சித்திரமாக இந்த ஈழத்துக் கலைஞர் உருவாக்கியிருக்கிறார். இப்படைப்பில் எழுத்து, இயக்கம், நடிப்பு இது தவிர திரைப்பட ஆக்கத்தின் பிறபணிகளுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.
புலம்பெயர்ந்த வாழ்க்கைக்கு சபிக்கபட்டவர்கள் இருவகை. அகதியாக வந்த நாட்டிலும் பிறந்த மண்ணையும் உறவையும் அவர்களுடன் தொலைபேசியிலும், கடிதங்களிலும் நினைத்தது போக, ‘ தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையாகி போனபின்’, புலம்பெயர்ந்த நாட்டிலும் தோற்றம் — மறைவு என விளம்பர சுவரொட்டிகளுடன் வேடிக்கை மனிதராக முடிகிறவர்கள், முதல்வகை. இரண்டாம் வகையினர் நிசப்த நடனம் கதை நாயகன் சிவா போன்றவர்கள். அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள், உயிரை சொந்த மண்ணிலும், உடலை வந்த மண்ணிலுமாக நிறுத்தி அவதிப்படுகிறவர்கள்: உறக்கம், விழிப்பு, பணி நேரம், ஓய்வு, நடக்கும் போது, மெட்ரோ – பேருந்து என பயணிக்கும்போது, கிட்டத்தட்ட அல்லும் பகலும் ஊர், உறவு, தோட்டம் துறவு, சொந்தம் பந்தம் என்கிற நீங்காத நினவுகளின் இணைகோடுகளாக நீளும் யுத்தம், படுகளம், அதன் கொடூரம், அனாதைகளாக்கபட்ட மனிதர் வாழ்க்கை என்கிற ஆழ்கடல் நினைவுகளில் தத்தளிக்கிறவர்கள்.
இலங்கை உள்நாட்டுப் போரில், 2009 மறக்கமுடியாத வருடம். ஆயுதம் ஏந்திய தமிழர்களை மட்டுமல்ல பல ஆயிரம் அப்பாவி தமிழர்களையும் பலிவாங்கிய யுத்தத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட ஆண்டு. தனிமனித தாக்குதல்களுக்கு சட்டமுண்டு, விசாரணையுண்டு, சாட்சியங்கள் உண்மையெனில் தண்டனையுண்டு. இங்கே தாக்குதலை நடத்தியது, கொலைகாரர்களாக மாறியது, அரசியல் சாசனப்படி அதிகாரம் பெற்ற அரசாங்கம். தமிழர்கள் அனைவரையுமே அவர்கள் விடுதலைப்புலிகளாக பார்த்தார்கள். தமிழினத்தை அழிப்பதற்கு, அவர்கள் கோரிக்கைகளை நீர்த்துப் போகச்செய்ய, ஒட்டுமொத்த தமிழினத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க இப்பார்வை அவர்களுக்கு சௌகரியத்தை அளித்தது.

நிசப்த நடனத்தின் கதைக்களத்தின் காலம் இதற்கு முந்தைய பத்தியில் கூறியதுபோல 2009. புலம்பெயர்ந்த ஐரோப்பிய மண்ணில் தமிழ் ஈழப் பதாகைகளை ஏந்தி, தங்கள் படும்பாட்டை உலக மக்கள் புரிந்துகொள்ளவேண்டி தமிழர்கள் பங்கேற்கும் ஊர்வலங்களுடன் படம் தொடங்குகிறது. சிவா என்ற இளைஞனின் புலம்பெயர்ந்த வாழ்க்கை பற்றிய கதையென்பதால் பிரான்சு – இலங்கையென காட்சிகள் மாறி மாறி வருகின்றன.
சிவா, ஈழத் தமிழ் இளைஞன். ஐரோப்பாவிற்கு, உள்நாட்டுப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க, வருகிறான். தனக்காக மட்டுமல்ல போரினால் வதைபடும் தன் பெற்றோரைக் காப்பாற்றும் பொறுப்பும் அவனைத் துரத்த அங்கே இங்கே என்று அலைந்து பிரான்சு நாட்டில் அடைக்கலம். பிரான்சு விருப்பத் தேர்வு அல்ல, அவனுடைய விதியின் தேர்வு.
தொடக்க காட்சியில் சிவா ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், ஒரு பிரெஞ்சு அதிகாரியுடன் தனது அகதி விண்ணப்ப நிலைப்பாடு குறித்து பேசுவதாக காட்சி. அதிகாரி, இலங்கை அரசாங்கத்தால் சிவாவுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன, என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்தாலொழிய அகதி அந்தஸ்து கிடைக்காதென தெரிவிக்கிறார். உடன் வந்த மொழிபெயர்ப்பாளர், “நீ கவலைப்படாதே எனக்குத் தெரிந்த சடடத் தரணியிருக்கிறார் ; அவரை வைத்து பிரச்சினையை முடித்து விடலாம். இதற்கான சில கதைகள் என்னிடம் இருக்கின்றன,” எனத் தெரிவித்து அவரே சில குறிப்புகளை தருகிறார். சிவா நடந்த உண்மைகளைத்தானே தெரிவிக்க முடியும் எனக்கேட்க, “இங்கே அகதிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் அனைவரும் செய்வதுதான், அதுபற்றிய கவலைகள் உனக்கெதற்கு. எனக்கு நீ 850 யூரோ கொடு, அனைத்தையும் நான் பார்த்துகொள்கிறேன்” என்கிறார்.
தொடரும் காட்சியில் இலங்கை, சிற்பான்மையின்ரான தமிழர் பகுதி, சிறு வீடு வெள்ளந்தியாகச் மூன்று சிறுவர்கள். யுத்தநிழலில் வாழ்கிறோம் என்பதைக்கூட அறியாத விளையாட்டுப் பருவம். மீன் தொட்டி, அதிலுள்ள மீன்கள் குறித்தும் அம்மீன்கள் வாயால் குஞ்சுபொறிக்குமென வியப்புடன் வார்த்தைகளை உச்சரிக்கும் நேர்த்தியில் நமது பார்வை அவர்களுடைய அப்பாவித்தனமான முகங்களில் தேங்கி நிற்க, மறுகணம் நம் நெஞ்சத்தை உலுக்குகின்ற வகையில் குண்டடிப்பட்டு சிறுவன் சாகிறான்.
தொடர்ந்து பாரீஸில் கணினியில் சிவா யுத்தகளங்களை தேடிக்கொண்டிருக்க, திரையில் கிளிநொச்சி, முல்லைத் தீவு இராணுவத் தக்குதல்களுக்குப் பலியாகும் மக்கள், இடிபாடுகள், அழுகுரல்கள். சொந்தநாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டிய நெருக்கடி. இது தவிர சிவாவை தனிமனிதனாக மன உளைச்சலில் தவிக்கும் நோயாளி போல காட்டும் இடங்களிலெல்லாம் ஜெயிப்பது கேமராவா சிவாவா என முடிவெடுப்பது கடினம். அகதியாக வாழ்கிற மண்ணில் தன் வாழ்க்கைக் கண்டு நிறைவுறாமல், தாயுடன் கைத்தொலைபேசியில் சிவா உரையாடுவதுபோன்ற காட்சிகள் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. “கதியா காசு அனுப்புகிறேன்” என பல காத தூரத்தில் இருக்கிற தாய்க்கு மகன் தரும் உத்தரவாதமும், ஊரில் நாட்டைவிட்டு வெளியேறவிருக்கும் நண்பனுடன் வாதிடும் புலிப்படையைச் சேர்ந்த நண்பன் ‘துவக்கு’ (துப்பாக்கி) விஷயத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையை விவரிக்கும் வசனங்களும், நடத்தும் வாதமும் ; பாரீசில் சிவா வேலை செய்யும் உணவு விடுதியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாடுகொண்ட நண்பரும், அவர்களால் என்ன பலன் கண்டோம் என வாதிடும் நண்பரும் ஒரு கட்டத்தில் உரத்து விவாதிக்க, அதற்கு எதிரிவினையாக சிவா சன்னற் கதவை பைத்தியக்காரன் போல கைகளால் திரும்பத் திரும்பத் தாக்குவது, அனைத்துமே படம் முடிந்தபின்னரும் நம்மை தொடர்ந்து வருகின்றன.
திரைபடமே சிவாவுடையது, சிவாவின் கடந்தகாலம் நிகழ்காலம்; சொந்த மண் அந்நிய மண்; இந்த இரண்டும் கெட்டான் வாழ்க்கை தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், குறிப்பாக அப்பாத்திரம் தனிமைக்கு ஆட்படும் போதெல்லாம் ஒரு வித பதற்றத்திற்கு பலியாவது ஒரு தேர்ந்த கலைஞனாக பிரதீபன் இரவீந்திரனை நமக்கு அடையாளப்படுத்துகிறது. திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் காய்ந்து தீயில் கறுகி வீழ்ந்து கிடக்கும் பனைகள், பசுமாட்டின் அழுகுரல், கூடாரக் குடிமக்களாக விதிக்கபட்ட மனிதர் வாழ்க்கை, தாயின் கேவல், பசியில் ஓலமிடும் பச்சிளம் குழந்தை, குழந்தையை தோளில் சுமந்துகொண்டு நீரில் இறங்கும் சிவா போன்ற காட்சிகளைச் சகித்துக்கொள்ள கனத்த இதயம் வேண்டும். போதாதற்கு காற்றும் உரத்து ஒலித்திட ஓர் அசாதாரண நிசப்தம். படம் பார்க்கிற எந்த மனமும் சிவா படும்பாட்டிற்கு, அல்லது சிவாவின் இருப்பிற்கு தன்னைத் தாரைவார்க்கும் எனபது உண்மை.
பிரதீபன் இரவீந்திரன் ஒரு மகா கலைஞன். உலக அளவில் விரைவில் அங்கீகரிக்கப்படுவார் என்பதென் பரிபூரண நம்பிக்கை.
நாகரத்தினம் கிருஷ்ணா <nakrish2003@yahoo.fr>