தொ. பத்தினாதனின் ‘அந்தரம்’ – இளங்கோ

 தொ. பத்தினாதனின் ‘அந்தரம்’ – இளங்கோ

அந்தரம் – தொ. பத்தினாதன்; விலை ரூ. 250.00; வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோயில் – 629001; தொலைபேசி: +914652278525; மின்னஞ்சல்: kalachuvadu@sabcharnet.in

 

ழத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரால் பல இலட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். உலகிலேயே அதிக தமிழர்கள் வாழ்கின்ற நாடாக இந்தியா இருந்தாலும், இந்தியாவே இப்படி அகதியாகப் போன தமிழர்களை வேறெந்த நாடுகளை விடவும் மோசமாக நடத்தியிருக்கின்றது. ஈழத்தில் உள்நாட்டுப் போர் முடிந்து பத்தாண்டுகளுக்குப் பிறகும்கூட, இன்னமும் அப்படியேதான் அந்த அகதிகளை நடத்திக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவுக்கான இந்தப் புலம்பெயர்வு 1983இல், 1990களில், 2006இல் பெருமளவில் நிகழ்ந்ததாக ‘அந்தரம்’ நாவலில் சொல்லப்படுகின்றது; என்றாலும், இந்தப் புனைவில் 1990களில் ஈழத்தில் இருந்து நிகழ்ந்த புலம்பெயர்வே அதிகம் பேசப்பட்டிருக்கின்றது. அந்தப் பின்னணியில் சாந்தி என்கின்ற பெண்ணையும் அவரின் குடும்பத்தினரையும் அந்த குடும்பத்தைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களையும் இந்த நாவல் பேச முயல்கின்றது.

சாந்தி யாழ்ப்பாணத்தில் இளவாலையைச் சேர்ந்தவர். கணவர் இராணுவத்தால் கொல்லப்பட, அவரது மூன்று பிள்ளைகளையும் கருவில் இன்னொரு பிள்ளையையும் காவிக்கொண்டு வன்னிக்குள் இடம்பெயர்கின்றார். அங்கே மனைவி, பிள்ளைகள் கனடாவில் இருக்கும் ஒர் ஆணோடு சேர்ந்து குடித்தனம் நடத்தத் தொடங்குகின்றார். யுத்தம் மோசமடைய இவர்கள் குடும்பமாக இந்தியாவுக்குப் புலம்பெயர்கின்றனர். கொஞ்சக் காலத்தில் இந்த ஆணை கனடாவில் இருக்கும் மனைவி அங்கே கூப்பிட்டு விட, சாந்தி தனித்து தன் இரண்டு மகள்களையும் இரண்டு மகன்களையும் தமிழகத்து அகாதி முகாமிற்குள் வைத்து வளர்க்கின்றார்.

தமிழகத்தில் இருக்கும் அகதி முகாங்களில் நிலைமை பற்றி நாமெல்லோரும் ஏற்கனவே அறிந்ததே வைத்திருக்கின்றோம். விளிம்புநிலையினருக்குள் விளிம்புநிலையினராய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட அவர்களுக்கு முறையான எந்த ஆவணங்களும் இருப்பதில்லை. அதனால் அடிப்படை வசதிகளையே பெற உரிமையற்றவர்களாக இருக்கின்றனர். இந்திய அரச அதிகாரிகளின் சுரண்டல்கள், க்யூ பிராஞ்ச்காரர்களின் 24 மணிநேரக் கண்காணிப்பு, ஒழுங்கான வருமானமின்மை என எத்தனையோ இடைஞ்சல்களுக்கிடையில் சாந்தி தன் பிள்ளைகளை எப்படியோ வளர்த்துவிடுகின்றார்.

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாங்கள் இருக்கின்றன. அதில் மதுரையில் இருக்கும் அகதி முகாமில் இருந்து முதன்முதலாக வெளியே கல்லூரிக்குப் போன ஒரிருவர்களில் சாந்தியின் மகள் சசியும் இருக்கின்றார். ஆனால், எவ்வளவு படித்தாலும் உரிய ஆவணங்களின்றி அகதி என்றே பதியப்பட்டிருப்பதால் அவர்களுக்கு எந்த நிறுவனமும் வேலை கொடுப்பதில்லை. படிக்காதவர்கள் மட்டுமில்லை, படித்த ஆண்கள் கூட இறுதியில் அவர்களின் ‘தேசிய தொழில்’ என எள்ளலாகச் சொல்லப்படுகின்ற பெயின்ட் அடிப்பதற்கே செல்கின்றார்கள். அதற்கும் கூட க்யூ பிராஞ்ச், ஆர்ஐக்களால் ஆயிரத்தெட்டு கெடுபிடிகள்.

இதற்கு மத்தியில் ஒரு சிறு நிறுவனத்துக்கு வேலைக்குப் போகின்ற 20 வயது சசிக்கு, அவரை விட 15 வயதுகள் கூடிய, ஏற்கனவே திருமணமாகிவிட்ட ஒரு சுப்பர்வைஸரோடு காதல் வந்து, அவர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றார். மோகம் நூறு நாள் போல, ஒருவருடத்தோடு சசியின் உறவைத் துண்டித்துவிட்டு, அந்த சுப்பர்வைஸர் தன் மனைவி, பிள்ளைகளோடு சேர்ந்துவிட, சசி கருவுற்ற நிலையில் மீண்டும் அகதி முகாமிற்கு வேறு எந்த வழியும் தென்படாது திரும்புகின்றார்.

 

சியின் தாயான சாந்தி மட்டுமில்லை, அந்த அகதி முகாமை கண்காணிக்கும் அதிகாரவர்க்கமும் சசியை மீண்டும் அங்கேயோர் அகதியாகப் பதிவு செய்ய மறுக்கின்றது. இவ்வாறு தன்னையொரு அகதியாக அந்த முகாமில் பதிவு செய்கின்ற முயற்சியில் சசி இருக்கின்றவேளையில் எமக்கு இரண்டாம் பாகத்தில் பல பெண்களின் கதைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயமாக செல்வி, வதனா, சீலா, (கறுப்பு) ராணி, மீனா போன்றோர்களின் கண்ணீர்க் கதைகள் கூறப்படுகின்றன. வறுமையும் சோகமும் உறவுப் பிறழ்வுகளுமென இந்தப் பெண்கள் வாழ்வின் அத்தனை கசப்புகளுடனும் ஏமாற்றங்களுடனும் தொடர்ந்து வாழ முயற்சிக்கின்றனர்.

மூன்றாம் பாகத்தில் முகாம் ஆண்களாகிய அமுதன், வரதன், ரூபன், பெரியதம்பி, (கறுப்பு) காந்தன், கந்தசாமி, முருகனாந்தன் போன்றவர்களின் கதைகள் சொல்லப்படுகின்றன. சில ஆண்கள் வேலைக்குப் போகின்றார்கள், சிலர் வேலைக்குப் போகாது பிறரையும் பெண்களையும் சுரண்டி வாழ்கின்றனர். இன்னுஞ் சிலர் அதிகாரத்தோடு ஒத்தோடி, முகாமிலிருப்பவர்களிடம் இலஞ்சம் வாங்கி தம் வாழ்வைச் சொகுசாக கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்கள்.

இவ்வாறாக பெண்களினதும் ஆண்களினதும் வாழ்க்கைகளினுடாகவும் அவர்கள்படும் அவலங்களின் ஊடாகவும் அகதி முகாம் வாழ்க்கை பற்றிய சோகச் சித்திரத்தை பத்தினாதன் நமக்கு வரைந்து காட்டுகின்றார். விளிம்புநிலையில் அவர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குள் உறவுப் பிறழ்வுகளும் கிசுகிசுக்களும் கோள்மூட்டல்களும் ஒற்றுமையின்மையும் எல்லாச் சமூகங்களிலும் இருப்பது போல இருக்கின்றன. கத்தோலிக்க ஃபாதர் வந்து முகாமில் வழிபாடைச் செய்யத் தொடங்க, அங்கேயிருக்கும் மன்னார் மக்களுக்கும் முல்லைத்தீவு மக்களுக்கும் எங்கே வைத்து வழிபாடு செய்வதென்று பிரச்சினை வருகின்றது.

கத்தோலிக்கர் வழிபாடு செய்வதைப் பார்த்து, சைவர்களும் பிள்ளையார் கோயில் தொடங்குகின்றார்கள். ‘இந்த எளிய சாதிகள் பூசை செய்ய நாங்கள் இந்தக் கோயிலுக்குப் போவதா’ என்று ஆதிக்கசாதியினர் மற்றப் பக்கம் அம்மன் கோயில் கட்ட முயற்சிக்கினறனர். இவ்வாறு தமிழர்கள் எங்கிருந்தாலும் இந்த விடயங்களில் ‘கல்தோன்றா முன் தோன்றிய மூத்தகுடிகள்’ என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றனர்.

Tho. Pathi Nathan, Antharamஇவர்கள் சொந்த நாட்டுக்கு மீளவும் போகவும் முடியாமல், புகுந்த நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டும், தமிழகம் எங்கும் நூற்றுக்கணக்கான அகதி முகாங்களில் வெட்டவெளிகளில், வெறும் கூடாரங்களோடும் ஓலைக் குடிசைகளோடும் வாழ விடப்படுகின்றார்கள். அதற்குள் இருந்தும் அவர்கள் நேசிக்கின்றார்கள். மேலும் முகாமிற்குள் இருக்கும் இந்த அவல வாழ்வு வேண்டாமென ஊர்க்காரர்களை நேசிக்கும்போது, ஊர்க்காரகளால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றார்கள். இன்னும் சில கருணை மிகுந்த ஊர்க்காரர்கள் முகாமிலிருக்கும் பெண்களை மணந்துகொண்டு முகாமிற்குள் தங்கிவிடவும் செய்கின்றார்கள். முகாமிற்குள் கஞ்சா, பெண் விநியோகம் நடக்கின்றன. தற்கொலை செய்கின்றார்கள். அவ்வப்போது கொஞ்சம் கியூ பிராஞ்ச்காரர்களோடு முரண்டுபிடிக்க, எந்தக் கேள்விகளுமில்லாது வருடக்கணக்கில் மிகமோசமான பூந்தமல்லிச் சிறைகளில் அடைக்கப்பட்டு வாழ்வைத் தொலைக்கின்றார்கள். இவ்வாறு நாம் நினைத்தே பார்க்க முடியாத எண்ணற்ற கதைகளை ‘அந்தரம்’ நமக்குக் காட்டுகின்றது.

2000களின் நடுப்பகுதியில் அகதி முகாங்களில் பதிவு செய்யப்படாதவர்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும் என்கின்ன்ற அரசாணை வர, நூற்றுக்கும் மேற்பட்ட முகாங்களில் பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான இந்த அகதிகள் இராமேஸ்வரம் செல்கின்றார்கள். அங்குள்ள அதிகாரிகளோ இந்த மக்களை மனிதர்களாக மதிக்கத் தயாராக இல்லை. ஒரு வாரத்துக்கும் மேலாக வெட்டவெளியில் மிக மோசமாக நடத்தப்படும் பகுதிகள் சோகத்தை வரவைப்பவை.

இறுதியில் சாந்தியின் மூத்த மகள் சரோ ஒருவனைத் திருமணஞ் செய்து இலங்கை திரும்புகின்றாள். ஊர்காரனால் கர்ப்பமாக்கப்பட்ட சசிக்கு, அந்த குழந்தையை வளர்ப்பதோடு மிச்சமுள்ள வாழ்க்கை கழிகின்றது. சாந்தியின் மூத்தமகன் வசந்தன் (பிற்பகுதியில் ரூபன் என்று தவறாக வருகின்றது) ஊர்க்காரப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்கின்றான். அந்தப் பெண்ணை அவளின் அக்காவின் கணவருக்கு இரண்டாந்தாரமாக திருமணம் செய்து முயற்சிக்க, அந்தப் பெண் வசந்தனோடு ஊரைவிட்டு ஓடுகின்றாள்.

இந்தப் பெண்காரர், ஊரின் ஆதிக்கசாதியினராக இருப்பதால், அந்த சாதிக்கார ஆட்கள் முகாமைக் கொளுத்துவோம், உள்ளேயிருப்போரை வெட்டுவோம் என்று சண்டைக்கு வந்துவிட பொலிஸ்தான் இடைபுகுந்து சமாதானம் செய்கின்றது. அவ்வாறு ஓடிப்போய் திருமணம் செய்த சோடி பின்னர் முகாமிற்குள் திரும்பும்போது ஓர் அசம்பாவிதம் நிகழ்கின்றது. சாந்தியின் மூத்த மகன், குடிபோதையில் இருக்கையில் – வேறு இருவர் ஒரு காதல் விடயம் சார்ந்து ஒருவனுக்கு அடிக்கப்போக – இவன் அவர்களோடு சேர்ந்து குடிபோதையில் கல்லைத் தூக்கிப் போட்டு ஊர்க்காரன் ஒருவனைக் கொன்றுவிடுகின்றான். கொலைக் குற்றத்துக்காய் வசந்தன் மத்திய சிறைக்குப் போக, முகாமிற்குள் எவரின் ஆதரவுமின்றி அந்த ஊர்க்காரப் பெண் தனித்துவிடும் அவல நிலைக்குப் போகின்றாள்.

சாந்தி இந்தத் துயரங்கள் அனைத்தையும் பார்த்தபடி, அகதி முகாமின் காதுகளால் ‘இவள் பலரோடு படுத்தெழும்பவள்’ என்ற அவலக் கதைகளையும் கேட்டபடி, தனது பிள்ளைகளின் வாழ்வு தன்னைப் போலவே பல்வேறு திசைகளில் சுழனறபடி இருப்பதைப் பார்த்தபடி தன் 56 வயதில் முகாமிற்குள்ளேயே மரணித்துப் போகின்றாள்.

 

த்திநாதனின் ‘அந்தரம்’ அகதி முகாம் மக்களின் வாழ்க்கையை குறுக்குவெட்டாக பதிவு செய்கின்ற ஓர் ஆவணப்பதிவாகவும் கொள்ளலாம். இப்படி சரி / பிழை, நியாயம் / அநியாமின்றி உள்ளது உள்ளபடி பதிவு செய்ய பத்தினாதனைப் போல அகதி முகாம் அனுபவம் இல்லாத ஒருவரால் ஒருபோதும் சாத்தியமாகாகப் போவதில்லை.

இந்த நூலின் பலவீனமாக முதல் பாகத்தைச் சொல்வேன். அந்தப் பாகத்தில் பத்தினாதன் என்ற மனிதரின் கதையே நமக்குச் சொல்லப்படுகின்றது. அதாவது அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்புகின்ற கதை. கதைசொல்லியாக இல்லாது, இங்கே பத்திநாதன் அதே அடையாளத்துடன் (‘இங்கேதான் எனது நூலான ‘போரின் மறுபக்கம்’ அகதிகள் நூல் வெளிவந்து’) எனச் சொல்கிறார். எனவே, இது நாவலா இல்லை ஒருவரின் நினைவுக் குறிப்புகளா என்ற குழப்பம் வருகின்றது (நண்பன் நாவலை எப்போது முடிப்பாய் என்று கேட்கும்போது, ‘நீ சொன்ன கதைகளைத்தான் எழுதி முடித்திருக்கின்றேன். இனி இலங்கைக்குப் போகின்ற கதைகளையும் எழுதப் போகின்றேன்’ எனச் சொல்லப்படுகின்றது). ஆகவேதான் பத்தினாதனின் ‘அந்தரம்’ பனுவலை எந்த வகைக்குள் அடக்குவது என்பதில் சற்று சிக்கலுண்டு. ஆனாலும் வடிவங்களை விட சொல்லப்படும் விடயங்கள் இக்காலத்துக்கு முக்கியமானது என்பதால் இந்தச் சிக்கலைச் சற்று தள்ளி வைத்துவிடலாம்.

இதன் இரண்டாம் பாகத்தில் பெண்களைப் பற்றி வருகின்ற கதைகளை இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாம். யாரோ சொல்கின்ற கதைகள் என்பதைவிட, அந்தப் பெண்களின் ஆழங்களுக்கு உள்ளே இறங்கிப் பார்த்திருந்தால் இன்னும் வீரியமாக அந்தப் பகுதிகள் விரிந்திருக்கும்.

மேலும் பலரோடு உறவு வைத்திருக்கும் சாந்திதான் இதன் முக்கிய பாத்திரம். அவரின் அல்லல்கள், தத்தளிப்புக்களைவிட அவரின் ‘நல்லொழுக்கமற்ற’ பெண் பாத்திரமே அதிகம் முனைப்பாகத் தெரிவது மட்டுமில்லை, இந்த நாவலில் வரும் அநேக முகாம் பெண்கள் பிறழ் உறவுகளிலும் யாரோடு ஓடிவிடுபவர்களாகவும் யாரின் வாழ்வைக் குலைப்பவர்களாகவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆகக் குறைந்தது, இந்தப் புனைவு எழுதப்பட்டு பத்தினாதனாலோ பிறராலோ திருத்தப்படும்போதாவது இப்படித் தொனி வருதல் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு விளிம்புநிலை சமூகத்தின் வாழ்க்கையை முன்வைக்கும்போது, ஏற்கனவே அதிக புரிதலில்லாத பொதுப்புத்திக்கு ‘இவர்களை இப்படி வைத்திருப்பதே’ சரிதான் என்கின்ற எண்ணம் வரக்கூடிய அபாயமிருக்கின்றது. எனவேதான் அதீத கவனத்துடன் விளிம்பு நிலையினரின் கதைகளை நாம் கையாள வேண்டியிருக்கின்றது.

இத்தனைக்கும் அப்பாலும், பத்தினாதனின் ‘அந்தரம்’ மிக முக்கியமான ஒரு பிரதி என்பதில் மறுபேச்சில்லை. ஏனெனில் தமிழகத்து அகதி வாழ்க்கையை மட்டுமில்லை, அதற்குள் நின்று எழுதுவது கூட இன்றைக்கும் ஒரு அபாயகரமான விடயமாகும். இப்படி அகதியாக இருப்பவர்க்கு ஒன்று நடந்தால் கூட எவரும் வந்து காப்பாற்றிவிடப் போவதில்லை. கொஞ்சம் அதிகாரத்துக்கு எதிராக கதைத்தாலே பொய்க்கதைகள் புனைந்து, அதிபயங்கரமான சிறைச்சாலைகளில் கொண்டுபோய் அகதிகளைக் காலம் முழுக்கத் தள்ளிவிடும் அதே மனோநிலையில்தான் இந்திய அதிகார வர்க்கம் இன்னமும் இருக்கின்றது.

இந்த நூலில், மீண்டும் இலங்கை திரும்புகின்ற பத்தினாதனை 25 வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு அடக்குமுறையுள்ள இலங்கையரசு கூட, அவருக்கு குடியுரிமை கொடுத்து வாக்களிக்கக் கூட விடுகின்றது. ஆனால், அதைவிட தன் வாழ்நாளில் பெரும்பாகத்தை இந்தியாவில் கழித்த ஒருவருக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. முகாமை விட்டு வெளியே வந்தால் ஒரு ‘தலைமறைவு’ வாழ்க்கையைத்தான் எந்த ஈழத்து அகதியும் இந்தியாவுக்குள் வாழ வேண்டியிருக்கின்றது.

எத்தனையோ ஆண்டுகள் முகாம் வாழ்க்கை வாழ்ந்தபோதும், ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் நடந்தபோது அகதி முகாம் மக்கள் அத்தனை ஒடுக்குமுறைக்களுக்கு அப்பாலும், உண்ணாவிரதம் இருக்க விரும்புகின்றார்கள். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு, அங்கே அனுமதி வாங்கவேண்டும், இங்கே அனுமதி வாங்கவேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்ககூட சுதந்திரமாக அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியிருந்தும் அதை மீறி அவர்கள் ஈழத்து மக்களுக்காய், தம் தோழமை உணர்வைக் காட்டுகின்றார்கள். அப்போது தனது 16 வயதுப் பிள்ளையை போருக்கு அண்மையில் பலிகொடுத்த மேரி என்ற பெண் உரத்துக் குரலெடுத்துக் கதறுகின்றார். அந்தக் கதறலில் முழு அகதி முகாமே நிசப்தத்தில் ஆழ்கிறது.

அதுவே தமிழுணர்வு. அதுவே தமிழ் எழுத்துச் சூழலில் கவனிக்கப்படாத தம் எழுத்துக்களை ‘அகதி இலக்கிய’ வகைக்குள் வைக்க வேண்டுமென பத்தினாதன் போன்ற அக்தி முகாங்களில் இருந்தவர்கள் முன்வைக்கும்போது, நாம் அதை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ளவே வேண்டும். அதே சமயம் அவர்களைப் போன்றவர்கள் அகதிகள் என்ற அடையாளங்களில் மட்டும் அடங்குபவர்களல்ல; என்றும் எம் நேசத்துக்குரிய சகமனிதர்களே என்று தோழமை உணர்வுடன் தோளணைத்துக் கொள்ளவும் வேண்டும்.

இளங்கோ” <elanko@rogers.com>

dse tamilan, ilango, elango

 

Amrutha

Related post