உடல் | அரவிந்தன்

ஓவியம்: ரம்யா சதாசிவம்
உடல் தன்னிச்சையாக அதிர்ந்து குலுங்கியது. சரேலென்று தாவிக் கட்டிலின் மேல் போட்டிருந்த துண்டால் அவசர அவசரமாக உடலை மறைத்துக்கொண்டாள் சந்தியா. “ஸாரி… ஸாரி… ஸாரி… ” என்றபடி மதன் வேகமாக வெளியேறிக் கதவைச் சாத்தினான். “யூ… ப்ளடி…” என்று கத்தியபடி சந்தியா கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. தன்னையறியாமல் துண்டை உடலைச் சுற்றிப் போர்த்தி இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
சந்தியா மின்விசிறியின் கீழே நின்றபடி இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டாள். முடி ஈரமாக இருந்தது. தலையைத் துவட்டுவதற்கான துண்டு நாற்காலியின் முதுகின் மேல் இருந்தது. அதை எடுத்துத் துடைக்கத் தோன்றாமல் ஈரத்தலையைக் கைகளால் கெட்டியாகப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தாள். உடல் இலேசான நடுக்கத்துடன் அதிர்ந்துகொண்டிருந்தது. உடலிலும் ஈரம் காயாததால் இலேசாகக் குளிரெடுத்தது. சந்தியா அப்படியே நின்றுகொண்டிருந்தாள். எந்த எண்ணமும் தோன்றாமல் மனம் உறைந்திருந்தது. சற்றுமுன் நிகழ்ந்த விபத்தின் கணநேரக் காட்சி கண்களிலும் மனதிலும் நிரம்பியிருந்தது. அது விலகாமல் வேறொரு எண்ணமோ காட்சியோ தோன்ற முடியாது என்பதுபோல இருந்தது. கண்களுக்குள் தெரிந்த அந்தக் காட்சியை விலக்குவதற்காகக் கண்களைத் திறந்தாள். எதிரில் இருக்கும் சுவரில் அந்தக் காட்சி தெளிவாகத் தெரிந்தது. பயந்துபோய்க் கண்களை முடினாள். கண்களுக்குள் அந்தக் காட்சி அப்படியே இருந்தது. உடலின் படபடப்பு அடங்கவில்லை. மூச்சு சீராகவில்லை. தலையிலிருந்து கைகளை எடுக்கத் தோன்றவில்லை. இதுபோன்ற சமயங்களில் ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. மூச்சை ஆழமாக இழுக்க முயன்றாள். அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திரும்பத் திரும்ப முயன்றாள். அந்த முயற்சியில் மூச்சின் மீது கவனம் திரும்ப, மூச்சு சீறி அடங்கும் வேகம் குறையத் தொடங்கியது. உடலின் படபடப்பும் குறையத் தொடங்கியது. கால்களில் நடுக்கம் நின்றுவிட்டதை உணர்ந்தாள். உடல் வெகுவாகக் குளிரெடுக்கத் தொடங்கியது. தலையிலிருந்து கைகளை எடுத்து மின்விசிறியை அணைத்தாள். கட்டிலின் மீது அமர்ந்தபடி தலையைத் துவட்டத் தொடங்கினாள். வழக்கமான வேகமும் அழுத்தமும் இல்லாததை உணர்ந்த அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெல்லத் தலையைத் துவட்டினாள்.
எப்படி இதுபோல நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமையின் தவிர்க்க முடியாத வழக்கப்படி காலை ஒன்பது மணிக்கு எழுந்தாள். அம்மாவும் அப்பாவும் எங்கோ வெளியே போய்விட்டார்கள். மதன் யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை ஆறுமணிக்குக் கிளம்பி சைக்கிளில் எலியட்ஸ் கடற்கரைவரை போய்விட்டு வரும் பழக்கம் அவனுக்கு உண்டு. இன்றும் போய்விட்டு வந்திருப்பான். அவன் எப்போது பேசி முடிப்பான் என்று கவனித்தபடி படுத்திருந்தாள். அவனைக் காப்பி போடச் சொல்லிவிட்டு எழுந்து பல் தேய்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவன் முடிப்பதாகத் தெரியவில்லை. கைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். வாட்ஸப்பில் வந்திருந்த இணைப்பொன்றைத் தொட, அதிலிருந்து பாட்டு ஒலித்தது. அந்த ஓசை கேட்டு மதன் எட்டிப் பார்த்தான். காப்பி என்று அவனிடம் சைகையில் சொன்னாள். ‘பல் தேய்க்கலயா’ என்று சைகையில் கேட்டான். “நா ப்ரஷ் பண்ணப்போறேன், நீ காஃபி போடு” என்று சொல்லிவிட்டு எழுந்தாள். கைப்பேசியில் பேசியபடியே கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சமையலறைக்குள் சென்றான் மதன்.
சூடான காப்பி தந்த உற்சாகத்துடன் சந்தியா அன்றைய நாளைப் பற்றி யோசித்துக்கொண்டு மெதுவாகக் காப்பியைப் பருகினாள். மாலையில் ரீத்துவும் ஷாலுவும் வருவார்கள். அவர்களோடு ஊர் சுற்றுவதுதான் இன்று இருக்கும் ஒரே வேலை. அம்மாவும் அப்பாவும் எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. சமைக்க வேண்டியிருக்காது. அப்படி இருந்தால் அம்மா வாட்ஸப்பில் செய்தி அனுப்பியிருப்பாள். அவர்கள் வராவிட்டாலும் மதன் வீட்டில் இருந்தால் அவனே சமைத்துவிடுவான். அப்படியே இல்லாவிட்டாலும் உணவை வரவழைத்துக்கொள்ளலாம். சமைக்க வேண்டாம். தலைக்கு எண்ணெய் வைத்துக்கொண்டு நன்றாக ஊறவிடலாம். கை, கால்களில் நகங்களை வெட்டலாம். நெட்ஃப்ளிக்ஸில் எதையாவது பார்க்கலாம். போன வாரமே சவரம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துத் தள்ளிப்போட்டது நினைவுக்கு வந்தது. பொறுமையாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிதானமாகக் குளிக்கலாம். தினமும் அரக்கப் பரக்கக் குளிப்பதுபோல இன்று குளிக்க வேண்டாம்.
திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தன. பதினோரு மணிக்கு மேல் குளிக்கச் சென்றாள். அக்குள்களிலும் காலிடுக்கிலும் கால்களிலும் இருக்கும் முடிகளைத் துப்புரவாக அகற்றிவிட்டுப் பொறுமையாகக் குளித்தாள். இதமான சூட்டில் குளிப்பது சுகமாக இருந்தது. தலையை நன்றாகத் தேய்த்துக் குளித்ததில் கைகள் வலித்தன. குளியலறையை விட்டு அறைக்குள் சென்று மின்விசிறியின் கீழ் நாற்காலியில் உட்கார்ந்தபடி தலையைப் பொறுமையாகத் துவட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தாள். நெடுநேரம் குளித்துக்கொண்டிருந்த அலுப்பு சற்றே தலைகாட்ட, உடம்பையும் சரியாகத் துடைக்காமல் நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டாள். எதிரில் இருந்த அலமாரியின் கண்ணாடியில் தெரிந்த தன் உடலைப் பொறுமையாகப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு அது. உடலைத் துடைக்கும் துண்டைக் கட்டிலின் மேல் போட்டாள். தலையைத் துவட்டுவதற்காக வைத்திருந்த துண்டை நாற்காலியின் முதுகின் மேல் போட்டாள். எழுந்து நின்று பொறுமையாகக் கண்ணாடியைப் பார்த்துத் தன்னைத் தானே ரசித்துக்கொள்ளத் தொடங்கினாள். ஐந்தரை அடி உயரம். ஒல்லி என்று சொல்ல முடியாவிட்டாலும் குண்டு என்றும் சொல்ல முடியாத நடுத்தர உடல் வாகு. மாநிறத்திற்கும் சற்றுக் கூடுதலான நிறம். பெரிய கண்கள். நீளமான கழுத்து. கச்சிதமான வட்ட முலைகள். சிறிய காம்புகள். உபரிச் சதையற்ற வயிறும் இடுப்பும். சுத்தமாக மழிக்கப்பட்ட பிறப்புறுப்பு. வலுவான நீண்ட கால்கள். சந்தியா தன்னுடைய அழகைத் தானே ரசித்தபடி நின்றிருந்தாள். மனதில் பொங்கிய மகிழ்ச்சி உதடுகளில் முறுவலாக வெளிப்பட்டது.
அப்போதுதான் கதவைத் திறந்து, “சார்ஜர் இருக்கா?” என்று கேட்டபடி எட்டிப் பார்த்த மதன் திடுக்கிட்டுப் பின்வாங்கினான். “யூ… ப்ளடி…” என்று கத்தியபடி சந்தியா கதவைத் தாழ்ப்பாள் போட்டாள்.
மெதுவாகத் தலையைத் துவட்டிக்கொண்டிருக்கும்போது மனம் மெல்லத் தன் நிலைக்கு வரத் தொடங்கியிருந்தது. சொந்த அண்ணனாக இருந்தாலும் உடலில் பொட்டுத் துணி இல்லாமல் நின்றதை அவன் பார்த்துவிட்டான் என்பதை நினைத்து மனம் கலங்கியது. அதுவும் கண்ணாடியின் முன்பு நின்று அழகு பார்த்துக்கொண்டிருந்தபோது பார்த்துவிட்டான். அந்த அறை அவளுக்கான தனி அறை இல்லையென்றாலும் குளிக்கும்போது அறைக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத்தான் குளியலறைக்குள் போவாள். ஒருநாளும் அது தவறியதில்லை. வீட்டில் இன்னொரு குளியலறை இருப்பதாலும் தினசரி அவள் குளிக்கும் நேரம் பிறருடைய வேலைகளில் எந்தத் தொந்தரவையும் ஏற்படுத்தாத நேரம் என்பதாலும் அந்த அறையைச் சாத்திக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. இன்று தாழ்ப்பாள் போட எப்படி மறந்தோம் என்பது அவளுக்குப் புரியவேயில்லை. தாழ்ப்பாள் போடாததால் மதன் இயல்பாக உள்ளே வந்திருப்பான். தாழ்ப்பாள் போட எப்படி மறந்தேன்? குளியலறையிலிருந்து வெளியே வரும்போதாவது ஒருமுறை கதவைக் கவனித்திருக்கலாம். எப்படிக் கவனிக்கத் தோன்றாமல் போயிற்று. அந்த அளவுக்கா கவனமில்லாதவளாக ஆகிவிட்டேன். அப்படி என்ன ஆயிற்று இன்றைக்கு. நிதானமாக, சாவகாசமாகக் குளித்துவிட்டு அதே மனநிலையுடன் வெளியே வந்திருக்கிறேன். குளியல் தந்த உற்சாகத்தை அவ்வளவு ரசித்திருக்கிறேன். வேறு எதுவுமே உறைக்காத அளவுக்கு அதிலேயே ஊறியிருந்திருக்கிறேன். கண்ணாடியில் உடம்பைப் பார்த்ததும் வந்த உற்சாகமும் சேர்ந்துகொண்டுவிட்டது.
சந்தியாவுக்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய நிர்வாண உடலை ஒரு ஆண் – அண்ணனாக இருந்தாலும் ஆண்தானே – பார்த்துவிட்டான். அதுவும் தன்னுடைய உடலைத் தானே ரசித்துக்கொண்டிருந்தபோது. நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. தாழ்ப்பாளைப் போட எப்படி மறந்தேன் என்று திரும்பத் திரும்பத் தன்னைத் தானே கேட்டுக்கொண்டிருந்தாள். நினைக்க நினைக்க மண்டை வெடித்துவிடும்போல இருந்தது. குளிக்கும்போதும் குளித்த பிறகும் இருந்த உற்சாகம், மகிழ்ச்சி, ஆசுவாசம் எல்லாம் கரைந்துபோயிருந்தன.
அவமானம், அதிர்ச்சி ஆகியவற்றைத் தாண்டி வேறொரு எண்ணம் தன்னிச்சையாகத் தோன்றியது. தன்னை நிர்வாணமாகப் பார்த்துவிட்ட மதனின் மனதில் என்ன தோன்றியிருக்கும் என்ற எண்ணம் வந்தது. உடன் பிறந்தவளிடமே தவறாக நடந்துகொள்ளும் ஆண்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். படித்திருக்கிறாள். மதன் அப்படிபட்டவன் அல்ல. ஆனால், தன்னை நிர்வாணமாக, அதுவும் இன்று நின்றிருந்த கோலத்தில் பார்த்தது அவன் மனதைப் பாதிக்கக்கூடும் அல்லவா? அண்ணனாகத் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பவன் இனி ஆணின் கண்களோடு பார்க்க ஆரம்பித்துவிடுவானோ?
உடல் ஒருமுறை விதிர்த்து அடங்கியது. மதன் ஒரு ஆணின் கண்ணோடு பெண்ணாகத் தன்னைப் பார்க்கக்கூடும் என்ற எண்ணமே வயிற்றைக் கலக்கியது. மனதில் இனம் புரியாத அருவருப்பும் அச்சமும் எழுந்தன.
சிறு வயதிலிருந்தே இருவருக்குமிடையில் ஆண் பெண் என்ற இடைவெளி எதுவும் இருந்ததில்லை. இருவருக்குமிடையே இரண்டே ஆண்டுகள் வித்தியாசம் என்பதால் ஒரே வயதினரைப் போலத்தான் இருவரும் பழகினார்கள். விளையாட்டு, ஊர் சுற்றுதல், அடிதடி என எல்லாமே ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் நடக்கும். பெரியவர்கள் ஆன பிறகும் பெரிதாக விலகல் ஏற்படவில்லை. படிப்பு, ஆர்வங்கள், நட்பு வட்டம், ரசனை ஆகியவற்றில் இருவருக்கும் தனித்தனியான போக்குகள் உருவானாலும் நெருக்கத்தில் குறைவில்லை. ஆண்களின் கண்களை அன்றாடம் சந்தித்துப் பழகிய சந்தியாவுக்கு மதன் தன்னை ஒருநாளும் ஆணின் பார்வையில் பார்த்ததில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவனுடைய கணினித் திரையிலும் கைப்பேசித் திரையிலும் தற்செயலாக அவள் பார்க்க நேர்ந்த சில பெண்களின் படங்களும் நினைவுக்கு வந்தது. ஆனால், தன்னை அவன் ஒரு பெண்ணாகவே பார்த்ததில்லை என்பதை நினைத்துக்கொண்டாள். ஒருவரையொருவர் சீண்டுவது, திட்டிக்கொள்வது, சில சமயங்களில் அடித்துக்கொள்வது எல்லாம் இப்போதும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.
அதெல்லாம் இன்றோடு முடிவுக்கு வந்துவிடுமா? இனி வீட்டிலும் கவனமாக இருக்க வேண்டுமா? மதனிடம் இனிமேல் பார்த்துப் பழக வேண்டுமா?
சந்தியாவுக்கு அடித்தொண்டையில் கசந்தது. இந்த எண்ணத்தை மேற்கொண்டு தொடர அவள் விரும்பவில்லை. ஆனால், அதை அவளால் தவிர்க்க முடியவில்லை. இனி மதன் தன்னை எப்படிப் பார்ப்பான்? அவனும் பிற ஆண்களைப் போலத் தன்னைப் பார்ப்பானா? அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? இதை அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவதுதான் பாதுகாப்பானதா?
சந்தியா தலையை உலுக்கிக்கொண்டாள். அழுகை பொங்கி வந்தது. மதனைப் பற்றி அப்படி நினைப்பதே பாவம் என்று தோன்றியது. அச்சத்தை விலக்கி ஆசுவாசம் கொள்ள முயன்றாள். சிறிது நேரம் எதையும் யோசிக்காமல் இருக்க விரும்பினாள். வேகமாகத் தலையைத் துவட்டிக்கொண்டாள். உடல் ஏற்கெனவே காய்ந்துபோயிருந்தது. உடைகளை அணிந்துகொண்டாள். வீட்டில் பொதுவாக ஷார்ட்ஸும் டி-ஷர்ட்டும்தான் அணிந்துகொள்வாள். இன்று தன்னிச்சையாகக் கை சுடிதாரைத் தேர்வுசெய்தது. உடையை அணிந்துகொண்டு படுத்துக்கொண்டாள். எப்படித் தாழ்ப்பாள் போடாமல் இருந்தேன் என்ற கேள்வி மீண்டும் குடைய ஆரம்பித்தது. மதன் எதிரில் தான் நின்ற கோலம் நினைவுக்கு வந்தது. இதன் பிறகு மதனின் கண்கள் தன்னை எப்படிப் பார்க்கும் என்ற எண்ணமும் எழுந்தது. மதனை நினைத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா என்னும் கேள்வி மனதை விட்டு அகலவில்லை. அசிங்கம், அவமானம் ஆகியவற்றைத் தாண்டிப் பாதுகாப்பு பற்றிய அச்சமும் தலைதூக்கியது. உடல் கூச ஆரம்பித்தது.
படுக்க முடியவில்லை. இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. காலையிலிருந்து காப்பியைத் தவிர எதுவுமே சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. உடனே பசியெடுத்தது. கைப்பேசியைத் திறந்து பார்த்தபடி வெளியே வந்தாள். அம்மாவும் அப்பாவும் இன்னும் வரவில்லை. மதனையும் காணோம். வெளியே போயிருக்கிறானா அல்லது பாத்ரூமில் இருக்கிறானா என்று யோசித்தாள். எங்காவது மறைந்து நின்றிருப்பானோ என்று தோன்றியது. உடனே அந்த எண்ணத்தை உலுக்கி எறிந்தாள். அம்மாவும் அப்பாவும் எப்போது வருவார்கள் என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணம் அவளுக்கே வினோதமாகப் பட்டது. சிறிய வயதில்கூட அம்மா, அப்பா வீட்டில் இல்லாதபோது இப்படியெல்லாம் தோன்றியதில்லை.
உணவு மேஜையின் மேல் ஆப்பிள் இருந்தது. அதை எடுத்து நறுக்கிச் சாப்பிட ஆரம்பித்தபோது ‘டர்ரக்’ என்ற சிறிய ஓசை காதில் விழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். ஜன்னல் திரைச்சீலையில் பொருத்தியிருந்த க்ளிப் ஜன்னலில் உரசும் ஓசை. சற்றே ஆசுவாசத்துடன் சாப்பிட ஆரம்பித்தாள். மீண்டும் ஏதோ ஒரு ஓசை கேட்டதும் பதற்றத்துடன் அந்தப் பக்கம் பார்த்தாள். மின்விசிறியின் காற்றால் பேப்பர் சலசலக்கும் சத்தம். மனதை அமைதிப்படுத்திக்கொள்ள முயன்றபடி மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள். அழைப்பு மணி ஒலித்தது. அதுவும் சற்று அதிரவைத்தது. தயக்கத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். மதன். மதிய உணவு வாங்கி வந்திருந்தான். அவனைப் பார்க்காமலேயே மேஜைக்குத் திரும்பி அமைதியாகச் சாப்பிடத் தொடங்கினாள். வாங்கி வந்ததையெல்லாம் எடுத்து வைக்க மதன் சமையலறைக்குள் சென்றான். சந்தியா எதுவும் பேசாமல் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அவள் முதுகில் லேசாக ஒரு அடி விழுந்தது. மதன் அப்படி அடிப்பது பழக்கம்தான் என்றாலும் இன்று அதை அவள் எதிர்பார்க்கவில்லை. கோபமும் குழப்பமுமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“கதவ மூடிட்டு ட்ரெஸ் மாத்த மாட்டியாடி லூஸு” என்றான் சிரித்துக்கொண்டே.
சடாரென்று எழுந்த அவள், “கதவ தட்டிட்டு உள்ள வர மாட்டியாடா நாயே” என்றபடி அவன் தோளில் அறைந்தாள்.
“நீ மறுபடியும் தூங்கிட்டியோன்னு நெனச்சு கதவ தள்ளிப் பார்த்தேன். அது ஓப்பனாயிடுச்சு. நான் என்ன பண்றது?” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.
சந்தியாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அரவிந்தன் <aravindanmail@gmail.com>