மலையாள நடிகைகள் வென்றது எப்படி? | பார்வதி திருவோத்து

பாலியல் அத்துமீறல்களும் ஹேமா குழு அறிக்கையும்
நேர்கண்டவர்: நிலீன அத்தோளி
தமிழில்: கிருஷ்ணகோபால்
தன்னோடு பணி செய்யும் நடிகையை கூலிப்படையினரை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததென்பது, மலையாள சினிமா உலகில் மட்டுமல்ல, கேரளிய சமூக வரலாற்றில் எப்போதும் நிகழாததும் பயங்கரமானதுமாகும். ஆணாதிக்கமும் பணபல அதிகாரமும் நிரம்பி வழியும் மலையாள திரைப்படத் துறையில் நடக்கும் வேறு பல குற்றங்களைப்போலவே, இதுவும் வெளி உலகிற்குத் தெரியாமல் தேய்ந்து கடந்துபோகும் என்று நினைத்திருந்த வேளையில், குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் செய்ததற்குப் பின்னால், முன்னெடுக்கப்பட்ட தீரம் மிக்க தொடர் போராட்டமே ஒரு காரணமாக அமைந்திருந்தது. குற்றவாளிகளுக்கு எதிராக போராடியவர்களில் நடிகை பார்வதி திருவோத்து முக்கியமானவர்.
சிறந்த நடிகை என்ற நிலையில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து புகழடைந்திருந்த பார்வதி இந்த போராட்டம் மூலம் எதையுமே இழந்து விடவில்லை. அவர் ஆவேசத்தோடு பேசுகிறார். போராட்டத்தில் கலந்துகொள்கிறார். மலையாள சினிமா பெண் கலைஞர்கள் கூட்டமைப்பான WCC உடன் பயணப்படுகிறார்.
‘கசபா‘ திரைப்படத்தில் பெண்களுக்கு எதிராக மம்முட்டி கதாபாத்திரம் பேசிய சர்ச்சையான வசனத்திற்கு எதிராக புதிய தலைமுறை நடிகையான பார்வதி திருவோத்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அது இப்போது வரையுள்ள மலையாள திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளமாக மாறிப்போனது. சர்வாதிகாரம் நிரம்பிய கதாநாயக பிம்பம் ஒரு கதாநாயகியால் விமர்சிக்கப்பட்ட சந்தர்ப்பம் சினிமாவுக்கு வெளியே அரசியலாகப் பார்க்கப்பட்டது. பெண் தரப்பிலிருந்து தவறை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கப்பட்டது இந்திய திரைப்பட வரலாற்றில் அதுதான் முதல்முறை. இருப்பினும், மம்முட்டியை பார்வதி விமர்சனம் செய்ததை, சினிமாவின் வழியே வளர்ந்த ரசிகர் கூட்டம் அரசியலாகப் பார்க்கும்படியான ஒரு மோதல் போக்கை, சினிமாக் குறித்து எழுதுபவர்கள் மடைமாற்றம் செய்து, இருவருக்குமான இடைவெளியை அதிகப்படுத்தி விட்டார்கள். பார்வதியின் நிலைபாடென்பது, நாயகன் எதிர் கதாபாத்திரம் ஏற்க கூடாதென்றோ பெண்களுக்கெதிரான விமர்சனத்தை முன்வைக்கக் கூடாதென்பதோ அல்ல. கடந்துப் போன ஒன்றினை மகத்துவத்துவமான ஒன்றாக நினைத்து ஊதி பெரிதுப்படுத்துவது சமூகத்தின் வளர்ச்சியை பின்னோக்கிக் கொண்டுப்போகும் என்பதுதான். பார்வதியின் கருத்துகள் பலதளங்களில், பல விதங்களில் சர்சைக்கிடமாகியதுண்டு. நவீன இதழ் ஒன்று பார்வதிக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மிரட்டல் கூட விட்டது. தனிப்பட்ட முறையில் பல நெருக்கடிகளை பார்வதி சந்தித்திருப்பார் என்பதை இந்த மிரட்டல் வெளிப்படுத்துகிறது. அவ்வளவு வலுவோடு மலையாள சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது.
பொது மக்களின் பண்பாடாக மாறிப்போயிருக்கும் சினிமாவில் மக்கள் ஆதரவில்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுத்து செல்வது சிரமம். உண்மை இப்படியிருக்கும் போது எவ்வாறு கடினமான சவால்களை எதிர்கொண்டு பார்வதி வெற்றியடைந்தார் என யோசிக்கும் போது அதுதான் அவரது தனிச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
2017ஆம் ஆண்டு நடிகை எதிர்கொண்ட எல்லை மீறிய பாலியல் அத்துமீறலை, ஏற்கனவே அவர்கள் எதிர்கொண்ட தந்திர அணுகுமுறை மூலம் இல்லாமல் ஆக்கியதைப் போல், எளிதில் திரைக்குப் பின்னால் மறைந்துப்போகச் செய்துவிடுவார்கள் என்றுதான் பார்க்கப்பட்டது. இந்த சூழலில் குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது என கங்கணம் கட்டி பலப் பெண்கள் அணி சேர்ந்து போராடியதன் விளைவு இதை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் நடத்திய போராட்டங்களின் பின் துணையோடு சினிமாவில் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு, உடைமாற்றுவதற்கான மறைவிடங்கள் போன்ற அடிப்படைப்படையான உரிமைக்காகவும் போராடினார்கள். யாருமே முன் வந்து உதவவில்லை என்ற புகாரில்லாமல், பின் துணை மட்டுமே விடிவுத்தராது என்று உணர்வு நிலையடைந்து, பெண்களுக்கு எதிரான அமைப்பை துக்கியெறியும் இலட்சிய ஆவேசத்தோடு WCC-ஐ உருவாக்கினார்கள். ‘பெங்களூர் டேஸ்’, ‘எந்நும் நின்றெ மொய்தீன்‘, ‘டேக் ஆப் ‘போன்ற சினிமாகளில் நடித்து ஏறுமுகமாக போய்க் கொண்டிருந்த வேளையிலிருந்தே பார்வதியும் WCC-யின் உரிமைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
‘உயரே‘ சினிமா வெளிவந்து, புறக்கணிக்க முடியாத நடிகையாக உயர்வடைந்து, யாருமே தட்டிப்பறிக்க முடியாத இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மம்முட்டியின் பெயரைச் சொல்லி இணையதள மிரட்டல் விடுவிக்கப்பட்ட கூட்டத்தினர் முன்பே மம்முட்டி பிரதான கதாநாயகனாக நடித்த ‘புழு‘ சினிமாவில் ஒரு கதாபாத்திரமாக நடித்து உச்சத்தைத் தொட்டார். அப்போது மாநில, தேசிய விருதுகளும் பார்வதிக்கு கைவரப் பெற்றன. பிறகு தமிழிலும் ஹிந்தியிலும் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். ‘தனிமைப்பட்டுப்போன எங்களுக்கு யாரும் உதவ முன்வர வேண்டாம்; எங்களுக்கானதை நாங்களே தேடிக் கண்டுப்பிடித்துகொள்வோம்’ என புதிய முழக்கத்தோடு வந்தார். இது வெள்ளித்திரையில் உள்ள பல பெண்களுக்கு புதுத் தெம்பைக் கொடுத்தது.
WCC உடனான தனது பயணத்தைக் குறித்து, திரைப்படத்துறையில் தனது செயல்பாடுகளைக் குறித்து ஒப்புக்கு இல்லாமல் பரந்த அளவிளான விவாதத்தை முன்னெடுக்கும் படியாக ‘மாத்ருபூமி’ இதழுடன் பார்வதி தன் கருத்துகளை இந்த நேர்காணலில் பகிர்ந்துக்கொண்டார். தானும் ஒரு அங்கமாக இருக்கின்ற இயக்கத்தை குறித்தும் வெளிச்சத்துக்கு வர வேண்டிய அநீதிகளைக் குறித்தும் தனிப்பட்ட முறையில் பல கருத்துக்களை இதம் வழியே முன்வைக்கிறார் பார்வதி திருவோத்து…
மலையாளத் திரைத்துறையில் மட்டுமல்ல இந்திய திரைத்துறை வரலாற்றிலும் ஒரு அடையாளமாக மாறியிருக்கிறது WCC. யாருடைய ஆதரவுமில்லாமல் பெண்கள் தூக்கி நடக்கிற இயக்கம் என நகைப்பிற்கிடமாகும் அவசியமும் இனிமேல் இல்லை. இவ்வாறான மாற்றத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இந்த மாற்றத்தின் பாய்ச்சலைக் காணும் போது மகிழ்ச்சியாக இருந்தபோதிலும் இந்த மாற்றத்திற்காக ஏழு வருடம் காத்திருக்க வேண்டியதை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. முதல் முதலில் நாங்கள் சொல்வதை புரிந்துகொள்ளாமல் எதற்காக இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற குழப்பம் என் மனதில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. மாற்றம் வருவதற்கு காலம் அதிகம் ஆகுமென்றும் அதனிடையே நாம் தீர்ப்பை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்றும் WCC-இல் உள்ள சகோதரிமார்களிடமும் தோழிமார்களிடமும் அனைத்தையும் நினைவுப்படுத்தி, ஆற்றுப்படுத்த வேண்டியிருந்தது. உதவியற்ற நிலைக் கண்டும் உற்சாகமிழக்கச் செய்யும் வார்த்தைகளைக் கேட்டும் கடந்து சென்ற வேளையில், இந்த அங்கீகாரம் கிடைத்தது, சமூகத்தின் பல துறைகளைச் சார்ந்த சிலரின் துணைக்கொண்டு மட்டுமே. சமூக அமைப்புகள், சினிமா விமர்சகர்கள், அரசியல் ஒருங்கிணைப்பு இது எல்லாவற்றின் துணைகொண்டுதான் WCC வளர்ந்தது. இனிமேலும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. WCC-இன் துணை கொண்டுதான் நான் முழுமையாக, எனக்கான அடையாளங்களோடு திரும்பி வருகிறேன். ஏழு வருடங்களானாலும் பின்வாங்காமல் முன்னோக்கி மட்டுமே சென்றோம் என்பது சாதாரண விஷயமல்ல. பலரும் தனிப்பட்ட காரியங்களை தள்ளி வைத்து, தியாகம் செய்து, இயக்கத்தை அடியொற்றி உறுதியாக நின்றார்கள்.
யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விருப்பப்படுறீங்க?
நீண்ட பட்டியலே உள்ளது. ஏழு வருடங்களானாலும் முன்வைத்தக் காலை பின்வைக்காமல் முன்னோக்கிச் சென்றோம் என்பது எளிதான விஷயமல்ல. பல சொந்தக் காரியங்களை நாங்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. பல விஷயங்களை விட்டுக் கொடுத்தோம். கலைத் துறையை விட்டு வேறு அலுவலகப் பணிக்கு சென்றவர்கள் எங்கள் கூட்டத்தில் இருந்தார்கள். இருப்பினும் அவர்கள் உறுதியாக நின்றார்கள். தனித்து விடப்பட்ட நடிகையுடைய தைரியம்தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அதனால்தான் தொடக்கத்திலிருந்தே அவருடைய போராட்டத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்துகொண்டு நாங்கள் அவர் பக்கம் நின்றோம். பெரிய பதவியில் இருக்கும் ஒரு பெண் வழக்கறிஞர் எங்கள் பக்கம் இருந்தார். நீங்கள் எதற்காக இந்த அமைப்பைத் தொடங்கினீர்கள் என்ற அர்த்தம் உங்களுக்கு இப்போது புரியாது என்று அவர் எங்களுக்கு சொல்லியதுண்டு. இன்றுதான் அதற்கான விடைக் கிடைத்தது.
AMMA–வில் இருந்துகொண்டு கழிவறைக்காக போராட்டம் நடத்தியப் போதும் சரி, தனித்து விடப்பட்ட நடிகைக்காக களத்தில் நிற்கும் போதும் சரி, இத்தனை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என நினைத்துப் பார்த்ததுண்டா?
ஒன்றில் இவ்விடத்தை விட்டு அகன்று விட வேண்டும்; இல்லையென்றால் இங்கே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு எல்லோரும் கவனிக்கும் படி வாழ வேண்டும். இது இரண்டும்தான் நாம் செய்ய வேண்டிய காரியம். தொழில் செய்யுமிடத்தில் மரியாதையில்லாமல் நாம் இருப்பதற்கு அவசியமில்லை அல்லவா? களத்தில் நின்று போராடுவோம் என்று சற்று குழப்பத்தோடுதான் எங்களில் பலரும் நின்றோம். நாங்கள் சொல்வது சாதாரணமான எல்லோரும் உடன்படக்கூடிய விஷயம்தானே, அதனால் எதிர்ப்பு உருவாகாது என நம்பினோம். அதெல்லாம் திடீரென மாறியது. எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகிய போதும் முதல் மூன்று மூன்றரை வருடங்கள் சொல்லில் அடங்காத வேதனைகளை எதிர்கொண்டு கடந்து சென்றோம். இப்போது கஷ்டங்களின் பின்னால் உள்ள பலனை நாங்கள் அடைந்திருக்கிறோம். அதனால்தான் ஒரு நாள், நாங்கள் செய்யும் காரியங்கள் எத்தனை சிறியதானாலும் பெரியதானாலும் முன்வைத்தக் காலை பின்வைக்கக் கூடாது என்பதை உணர்ந்தோம். இனிமேல் என்ன நிகழ்ந்தாலும் குறிக்கோள்தான் முக்கியம் என்பது சிந்தையில் நிறைந்திருக்கிறது. எல்லோரும் பாதுகாப்பாக அவரவர் கலையில் கவனம்பெறும் வகையில் தொழில் கிடைக்க வழிவகை பெற வேண்டும். இந்த குறிக்கோள் நோக்கை இழந்துவிடாமல் பார்த்துகொள்வோம்.
பல்வேறுப்பட்ட பெரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததற்கு பின்னால் சமூக ஊடகங்களின் பின்புலம் இருந்தது. 2018-இல் செய்தியாளர் சந்திப்பில் என நினைக்கிறேன்; முகம் வாடி, கண்ணீர் தழும்பி நின்ற பார்வதியின் முகம் இன்னும் எனது மனதில் உண்டு…
2017-இல் ‘கசபா’ திரைப்படத்தின் சர்ச்சைக்கிடையில் நான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என பாடம் எடுத்தனர். இது பார்வதி எனும் தனி மனுசிக்கான விஷயமல்ல; இது எல்லாப் பெண்களுக்குமான போராட்டம் என்ற நிலைப்பாடு வெளிப்படையாக எல்லோருக்கும் சென்று சேர்ந்தபோதுதான் எதிர்ப்புகளை நான் எதிர்கொண்ட விதம் மாறியது. ஆனால், 2018-இல் நான் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களின் எதிர்வினையை என்னால் எதிர்கொள்ள இயலவில்லை. சில பத்திரிகையாளர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டவர்களின் பெயர்களைச் சொல்லவில்லை அல்லவா என்ற ரீதியில் அணுகினார்கள். புகார்களைச் சொல்ல விரும்பாத பெண்களை அவமதித்தவர்களையும் AMMA-விலிருந்து ராஜினாமா செய்தவர்களின் கடிதத்தையும் அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நான் வெளியிட்டேன். நான் AMMA-விலிருந்து வெளியேறக் காரணம் அந்த கடிதத்தில் இருந்தது. தைரியத்தோடும் ஆற்றல்கொண்டும் ஒவ்வொரு வரியையும் வாசித்துக் கொண்டிருக்கும் போதும் மனதளவில் தகர்ந்து கொண்டிருந்தேன். வார்த்தை தடுமாறியது, தைரியமாக இரு என என்னை நானே சொல்லிக்கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். சில பத்திரிகையாளர்களின் பச்சையான கேள்விகளை எதிர்கொள்ளும் தோறும் நாங்கள் ஒருவருக்கொருவர் மேசையினடியில் கைகோர்த்தபடி தைரியப்படுத்திக் கொண்டோம். அப்போதைய மனோபாவங்கள் எல்லாம் இப்போதைய பத்திரிகையாளர்களிடம் இல்லை என்பதே மகிழ்ச்சிகரமானது.

அவ்வாறான பத்திரிகையாளர்களின் எதிர்வினை உங்கள் நம்பிக்கையை சீர்க்குலைத்ததா? எவ்வாறு அவ்வாறான எதிர்வினைகளை WCC வழியே கடந்து வந்தீர்கள்?
பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் நடந்த நிகழ்வு, கற்பனையான எதிர்பார்ப்புகளை தள்ளி வைத்து, யதார்த்ததோடு விஷயங்களை பார்க்கத் தூண்டியது. நிறைய விஷயங்கள் யதார்த்த உலகின் உளவியலைப் புரிந்துகொள்ள உதவியது. இனி யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்; இனி யாரும் இல்லையென்றால் கூட நாம் என்ன செய்யவேண்டும்? நாம் தொடர்ந்து இந்தத் துறையில் நீடிக்க முடியுமா? என்பனப் போன்று சிந்தித்துக்கொண்டு, மிகவும் மோசமான காரியங்களை கண்டுகொண்டு முன்னோக்கிச் செல்ல நாங்கள் கற்றோம்.
ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடமிருந்து எப்போதோ அணைந்து போயிருந்தது. இனி அது வெளிவரவில்லையென்றால் தலைகீழாக மாற்றம் நிகழாதிருக்க என்னுடைய மனசை நான் பழக்கப்படுத்தியிருந்தேன். இருப்பினும் எதிர்பார்ப்போடுதான் இருந்தேன். இனிமேல் அணையாது என என் உள் மனது தொடர்ந்து ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது. ஒரு வழி அடைத்தால் மற்றொரு வழி திறக்கும் என்ற நம்பிக்கையின் ஊடே நாங்கள் எல்லோரும் கிடைக்க வேண்டிய சமூக நீதியும் உரிமையும் சரியான வாய்ப்புகளை பெற்றுத்தரும்படியான சினிமா உலகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கிருந்தது. நான் எதிர்பார்த்த பல வாய்ப்புகள் நழுவிச் சென்றப் போதிலும் ஒற்றைச் சிந்தனையோடிருக்கும் சகோதரிமார்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தேன்.
சரியான கருத்து சுதந்திர நிலைபாடுள்ள உறுபினர்களை WCC கொண்டுள்ளது. அறுதியிட்டுச் சொன்னால் உள்ளுக்குள் அபிப்ராய பேதம் இல்லாமல் இருக்காது. அந்த அபிப்ராய பேதங்களை ஏற்றுக்கொண்டு கருத்துச் சுதந்திர முன்னுரிமையோடு எல்லோரையும் எவ்வாறு ஒருங்கிணைத்து கொண்டு செல்கிறீர்கள்?
நாங்கள் சேர்ந்து தொடங்கும் போது வெறும் பதினாறு, பதினேழு பேர்தான் இருந்தோம். அதன்பிறகு நிறைய பேர்கள் வந்து சேர்ந்தார்கள். உரையாடல்கள், கருத்து மோதல்கள், பயிற்சிப் பட்டறைகள், இவைகளை நடத்தி எங்களை நாங்களே வலிமைப்படுத்திக் கொண்டு சமகால சூழல் குறிந்து கூடுதல் விழிபுணர்வடைந்து அறிவு பெற்று, முன்னே போகும் வழிகளை நாங்கள் கண்டடைந்தோம். ஒரு இலட்சிய பாதையை முன்வைத்து மற்ற சில்லறைத்தனமான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் ஒரு ஆரோக்கியமான பாதைக்கு திரும்பினோம். ஒரு கூட்டுச் செயல்பாடு என்ற நிலையில் எங்களுடைய முன்னெடுப்பு தொழில் செய்யும் உரிமையும் அதில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வும் காண வேண்டும் என்பதாகும். சினிமா நடைமுறைச் சட்டம் வெளியே வந்ததை நாங்கள் வரவேற்பது இந்த அடிப்படை உரிமையை பெற்றுக்கொள்வதற்காகத்தான். மற்றபடி பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை கூறிக் கொண்டிருப்பது எங்களது நோக்கமல்ல. பாதுகாப்பாகவும் கௌரவத்தோடும் சமூக நீதியோடும் தொழில் செய்யுமிடம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். எத்தனை காலம் ஆனாலும் மாற்றம் வரும் என்று உறுதியாக நம்புகிறோம். அது வரைக்கும் எங்கள் கூட்டுச்செயல்பாடின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
2018-இல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் WCC பாகத்திலிருந்து பெரிய அளவில் ‘மீ டு‘ வெளிப்படும் என ஊடகங்களிடம் எதிர்பார்ப்பிருந்தது. ‘மீ டூ‘ எனச் சொல்லும் இயக்கத்தின் போக்கை மாற்றும் காரியத்தைத்தான் இந்த ஊடகங்கள் தீவிரமாக முன்னெடுக்கின்றன என அபிப்ராயப்பட்டிருந்தீர்கள். இந்த எண்ணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
நாம் தண்டிக்கப்பட மாட்டோம்; பிடி கிடைக்க மாட்டோம் என்ற துணிச்சலில், ஒரு கும்பல் வேட்டைக்காரர்கள் நல்லவர்கள் போல் வேஷமிட்டு நடித்துக்கொண்டு, சுதந்திரமாக நடமாடித் திரியும் காலகட்டத்தில்தான், ஒரு கூட்டம் பெண்கள் தாங்கள் பாலியல் சுரண்டல், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதையும் வெளிப்படையாக பேசினார்கள். இவ்வாறு ஏமாற்றப்பட்டதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருக்க முடியாது. வேட்டைக்காரர்களின் வழி இனி மிக எளிதாக இருக்க முடியாது என்ற அறிவிப்பைச் சொல்வதுதான் ‘மீ டூ’வின் முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு. வெளிப்படையாகப் பேசுவதன் வழியே பூச் சென்டுகளல்ல கல்லெறிகள் தான் கிடைக்கும் எனத் தெரிந்தும் பெண்கள் பேசத் துணிந்தார்கள். பல பெண்களுக்கும் அது அவர்களுடைய மோசமான நடவடிக்கையின் நாடகத்திலிருந்து மனம் சமாதானமடைந்து தப்பித்தலுக்காக வேண்டி இருக்கலாம். அறம்சார்ந்த நிலையில் அவர்களின் வெளிப்படையானப் பேச்சு இருக்கும் பட்சத்தில் ‘மீ டூ’ இயக்கத்திற்கு அது வலு சேர்க்கும் விதமாக இருக்கும். தொடரும் ஒவ்வொரு ‘மீ டூ’வின் போதும் ஒளிந்திருந்தவர்கள் இன்று பொது சமூகத்தின் முன்பு வெளிப்பட்டு நிற்கிறார்கள். நீதி கிடைக்க காலதாமதமாகும் தோறும் வெளிப்படையாக பேசிய ஒவ்வொரு பெண்களும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும். இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் பலரும் இந்த துறைக்குள் வருகிறார்கள். இருப்பினும் பாதுகாப்புணர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல், குடும்பத்தினரின் துணையில்லாமல் இருக்கும் பெண்களும் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆராயாமல் வேட்டைக்காரர்களின் பெயரைச் சொல்லு, புகார் கொடு எனப் பெண்களிடம் கட்டாயப்படுத்துவது சரியான நடவடிக்கையல்ல. தனிமைப்பட்டுப் போன பெண்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்குமா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதனால்தான் புகார் கொடுக்கவோ முன்னடுத்துச் செல்லவோ எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தவும் முடியாது.
பாதிக்கப்பட்டவர்களின் வெளிப்படையான பேச்சு, தேவையான ஒன்றுதான். ஆனால், பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகள் எல்லாம் பாலியல் சுரண்டல் என்கிற இடத்தில்தான் கொண்டுபோய் விடுகிறது. ஹேமா கமிட்டி சர்ச்சைகள் ‘மீ டூ’வாகச் சுருங்கிப் போனது என கருதுகிறீர்களா?
சமூகநீதிக்கான இந்த முன்னெடுப்பு ஒற்றை முயற்சியில் தீர்வு கிடைக்கக் கூடியதல்ல. ஆரம்பத்தில் பல தடைகள் ஏற்படுத்தி இதை சுருக்கவும் இல்லாமல் ஆக்கவும் பல முன்னெடுப்புகள் நடந்தன. ஆனால், தீர்வை வேண்டி நடந்த இந்த இயக்கத்தின் செயல்பாட்டை ஒரு இடத்தில் நிறுத்தவோ முடக்கவோ முடியவில்லை. ஒவ்வொருவரின் அனுபவங்களும் இதற்கு பங்களிப்பு செய்து துணையாக நின்றன. இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் இதனுடைய முக்கியத்தும் குறித்து மற்றவர்களை உணரச் செய்தோம். எந்த வகையான விவாதங்கள் நடந்தாலும் தீர்வுக்கான வழி ஒன்றே குறிக்கோளாகயிருந்தது. பாலியல் சுரண்டல்கள் குறித்து எத்தனை விவாதங்கள் நடந்தாலும் ஒரு கட்டம் வந்து சேரும் போது அதன் தீர்வு என்னவென்ற கேள்வி பொது சமூகத்திற்கு வருமல்லவா? அந்த தீர்வை நோக்கி நகர வேண்டுமென்றால் தொடர்ந்து அதைக் குறித்து விவாதங்கள் நடக்க வேண்டும். இதனால் இது தொடர்புடைய பலதும் வெளிவரும். பாலியல் சுரண்டலுக்குட்பட்டவர்கள் எதிர்கொள்ளும் நெருக்குதல்கள், அவர்களுக்கு கிடைக்காமல் காலதாமதமாகும் நீதி, இவையெல்லாம் நமது நாட்டில் கவலைகொள்ளச் செய்யும் விஷயமாகும். அதனால் விவாதங்கள் தொடர்ந்து நடப்பது நல்லது தானே? இவ்வாறு பல விவாதங்கள் நடத்தப்பட்டுத்தானே விதிகள் உருவாகி அரசியலமைப்பு சட்டமாக வந்தது. ஒரு காலத்தில் இப்பபடிப்பட்ட விஷயங்கள் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டதில்லை. இப்போது அதில் மாற்றம் வந்திருக்கிறது. இனியும் மாறும்.
‘மீ டூ’ இயக்கத்தை இல்லாமலாக்க அதன் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தீர்கள்?
எந்த ஒரு போராட்டத்தையும் தகர்ப்பதற்கான முயற்சிகள் நடக்கும் என்பது இயல்பான விஷயம்தான். பாலியல் சுரண்டல் ஏற்பட்டு அதை வெளிப்படையாகச் சொல்ல விருப்பமுள்ள பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படும் ரீதியிலான அமைப்பு முன்காலத்தில் இருந்ததில்லை. ஹேமா கமிட்டி விவாதங்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை கிடைக்கும் அணுகுமுறையின் வழியே, பொது சமூகத்திற்கும் அமைப்பிற்கும் இடையே நல்ல மாற்றங்கள் உருவாகியுள்ளது. ‘இது தவறான குற்றச்சாட்டாக இருக்கும்? சினிமாத் துறையை இல்லாமலாக்கும் குற்றச்சாட்டாக இருக்கலாமோ? உண்மையான குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்? ’ என்று பல யூகங்களை உருவாக்கி, யாரும் தீர்ப்பு சொல்வதற்கு சட்டப்படி உரிமையில்லை; இருப்பினும் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் நிற்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்தால் இதையேன் முன்னமே சொல்லவில்லை எனக் கேட்கிறார்கள். சாட்சியில்லாமல் எப்படி நம்பமுடியும் என்பன போன்ற கேள்விகள்தான் நமது சமூகத்தின் பொதுவான நிலைபாடு. இனிமேல் வெளிப்படையாக சொல்லவில்லையென்றாலோ நீங்கள் செய்வது சரியல்ல, தைரியமாக சொல்ல முன்வர வேண்டும் என்பன போன்று சொல்வார்கள். நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா. பெண்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வெளிப்படையாக பேச வருகிறார்கள்?
காலம் தாமதித்து கிடைக்கும் நீதியும் கேலியாகப் பார்க்கப்படும்பொது சமூகத்திற்கு முன் நின்று கொண்டு, அவள் பக்கம் அல்லவா நாம் நிற்க வேண்டும்? அது தானே மனிதாபிமானம். அதற்குப் பதிலாக யார் பாதிப்படையச் செய்தார்களோ அவர்களுக்கல்லவா முன்னுரிமைக் கொடுக்கிறோம்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகையின் துணிச்சல் மிக்கப் போராட்டத்தின் பின்னணியில் WCC – யின் முக்கியத்துவம் இருந்தது. தனிப்பட்ட முறையில் பார்வதியின் பங்களிப்பும் எவ்வளவு தூரம் இந்த விஷயத்தில் அவருக்கு துணையாக இருந்தது?
பாதிக்கப்பட்டவர் அனுபவித்த வேதனை, பயம், தனிமை, ஏமாற்றம், புறக்கணிப்பு, தாமதமாகும் நீதி இது பற்றியெல்லாம் யாரும் விவாதத்திற்கு உட்படுத்தவில்லை. நான் அவரைப் பற்றி ஞாபகப்படுத்தி பார்க்கும் போதெல்லாம் அவருடைய ஒரு சாதாரண நாள் எப்படியிருக்கும் என்று சிந்திப்பது உண்டு. ஒரு பெரிய நாடகம் போல் கடந்துப் போகிற விஷயமல்ல; வெளிப்படையாகப் பேசுவதன் வழியே வருந்தத்தக்க பல கேள்விகளை எதிர்க்கொண்டு நல்ல ஒரு வாழ்க்கையை வாழ வேண்டி தன்னைப் புதிப்பித்துகொள்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதையெல்லாம் அனுபவித்துக் கொண்டு இந்த போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துப் போவதைக் காணும் போதெல்லாம் அவர்மீது மரியாதைக் கூடுகிறது. இப்போதும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டுமென்று விருப்புகிறார். பாதிக்கப்பட்டவர் என்ற காரணம் கொண்டுதான் அவர் மீண்டெழ முடிந்தது. இன்னும் அதிக சுமைகளை அவர் பேரில் ஏற்றக் கூடாதென நினைக்கிறேன்.
நடிகை மீது பாலியல் அத்துமீறல் நிகழ்ந்த வழக்கில் குற்றவாளியான பள்ஸர்சுனிக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் வழக்கு தொடுத்தவரின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விஷயமாக கருத முடியும். அந்த சமயத்தில்தான், ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு வெளிப்படையாக பேசலாமே? புகாரளிக்கக் கூடாதா? போன்ற கேள்விகள் பல திசைகளிலிருந்தும் கேட்கத் தொடங்கியது.
பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு நியாயமான நீதி கிடைத்திருக்கிறது என்பதை நாம் எண்ணியே சொல்லிவிடலாம். கிடைத்திருக்கவும் செய்யலாம். ஆனால், இதெல்லாம் எவ்வளவு காலத்திற்கு பிறகு கிடைத்தது. வெளிப்படையாக பேசியதினால், தான் பார்த்து வந்த வேலையையும் சொந்த பந்தங்களையும் சாதாரணமான வாழ்க்கையையும் இழந்த எத்தனையோ பேருண்டு. சமூகம் கைவிட்டு விடுவது, தனிமைப்படுத்தப்படுதல் போன்ற பல இழப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியது வரும். காசு, பணம் உள்ள குற்றவாளிகள் வழக்குகளை 9, 10 வருடங்கள் என நீட்டிக்கச் செய்வார்கள்.
வழக்காடு மன்றத்தில் குற்றவாளிகளிடம் வழக்குக்கு சம்பந்தமற்ற கேள்விகளை கேட்டுவிட்டு, வெளியே கடந்துபோகும் குற்றவாளியிடம் ‘உன் உடலை காண்பி ‘ என ஒரு நீதியரசர் சொன்னதாக வெளிவந்தச் செய்தியை படித்திருக்கிறேன். உண்மையில் இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பாதிக்கப்பட்ட பெண்களின் பயணமும் இருக்கிறது. இதுதான் யதார்த்த காட்சிகள். இப்படியிருக்கும் போது பெண்களிடம் நீங்கள் புகாரளிக்கவில்லையா என கேட்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா? இவ்வாறு வழக்குகள் நீண்டுச் செல்லும் போது குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைக்கிறது. காலதாமதாகும் போது நீதி மறுக்கப்படுகிறது. இதெல்லாம் நடந்து கொண்டிருப்பதை அறிந்த பின்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பராதிக் கொடுக்கவில்லை என்ற ரீதியில் அவர்களை அணுகுவது கவலையளிப்பதாக இருக்கிறது.
ஐ கேன் ஹே செக்ஸ் வித் யூ? எனபெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாக கேட்பதில் தவறொன்றுமில்லை என்றும் ஒரு ‘நோ‘வில் முடிந்து போகும் காரியம்தான் என்பன போன்ற விளக்கங்களை கொடுக்கும் சில நடிகர்கள் நமது திரைப்படத் துறையில் இருக்கிறார்கள். பணிசெய்யும் இடங்களில் பெண்களிடம் கேட்கப்படும் இது போன்ற கேள்விகள் முன்னேற்றமடைந்த சமூகத்தின் குணங்களில் ஒன்றுதானே என நினைப்பவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
ஒருவரின் உரிமை என்ன என்பதை குறித்து முதலில் புரிதல் வேண்டும். முறையற்ற பழகலுக்கும் நட்போடு பழகலுக்குமான எல்லை என்ன என்பதனை புரிந்துகொள்ளாமல் போவதுதான் இதுபோன்ற கேள்விக்கான மூலக்காரணம். தொழில் செய்யுமிடத்தில் வந்து இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதை இயல்பாக எடுத்துகொள்ள வேண்டுமெனில் ‘நோ’ சொன்னால் அந்த பெண்கள் அதன் பிறகு பல விதங்களிலும் நெருக்கடிகளை சந்திக்க மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் உண்டா? ‘நோ’ சொன்னால் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வருமோ எனப் பயந்து ‘எஸ்’ சொல்ல வேண்டிய அவல நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள். வலுக்கட்டாயமாக ஒப்புகொள்ளச் செய்வது போல்தானே இதுவும். தனிமைப் படுத்தப்படுத்துதல், புறக்கணித்தல், அழுத்தம் கொடுத்தல், எதிர் நடவடிக்கைகள் போன்றவைகள் ஒரே ஒரு ‘நோ’ சொன்னதற்காக பெண்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையாகிறது. இதுதான் சமகாலத்து சமூகச் சூழ்நிலை.
முன்னேற்றமடைந்த நாகரிகத்தின் ஒரு பகுதியாக, செக்ஸ் கேட்டால் என்னக் குற்றம் என்று கேட்கிற ஆண்களுக்கு என் கேள்வி, ‘நோ’ சொன்னால் விட்டு விலகி அதற்கு பின் நெருக்கடிக் கொடுக்காமல் நடந்துகொள்வீர்களா என்பது மட்டுமே.
காமம் என்பது இயல்பான விஷயம் என்ற விவாதத்தை முன்வைத்தால் கூட காமம் உருவான உடனே பெண்கள் அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறதா என்ன? அது பெண்களின் கடமையும் அல்ல.

கலைஞர்கள் என்ற நிலையில் தினமும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து முன்னோக்கிப் போகும் போது உங்கள் இயங்கு திறன் பாதிக்கப்படும் அல்லவா? நிம்மதியாக பணிச் செய்ய வேண்டிய ஒரு சூழல் வேண்டாமா?
நிறைய நிறைய. WCC ஆட்கள்தானே நீங்கள் என ஒதுக்கி வைத்து பலரும் கடந்து செல்வார்கள். அழகுணர்சியோடு கற்பனையும் கலந்து பணி செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில விசயங்கள் உண்டு. கூட்டுச் செயல்பாடுகளுக்கிடையே நிறுத்தற்குறி வைத்தாற்போல் நின்று கொண்டு கதையைப் பற்றி சிந்திக்கவோ நடிக்கவோ முடியவில்லை. நிரந்தரம் போராடுவதால் ஏற்படும் கோபம், கவலை இதையெல்லாம் மடைமாற்றிக் கொண்டுதான் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறோம் எங்களில் பலரும். ஒரு ‘ஆர்ட்டிஸ்ட்’ என்ற நிலையில் பெரிய வெற்றியாகக் கருதுவது இதைத்தான். ஆனால், சமூக நீதி கிடைக்க நடத்தும் போராட்டம் வெற்றியடைய வேண்டித்தான் நாம் இங்கு நிற்கிறோம் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்குண்டு. ஒரு வழியுமல்லாமல், அதாவது எந்த ஒரு மாற்றுவழியுமல்லாமல் இங்கு இருப்பதற்கு காரணம் இந்த அடக்குமுறையை மாற்ற வேண்டிதான். பணி வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதென்பது பிரச்சனைதான். ஆனால், பணி கிடைக்க நெருப்புப் பிழம்பாக மாறியிருக்கிறோம்.
தயாரிப்பாளர்களுக்கு பிடிபடாத விஷயம் ஒன்று உண்டு. எங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் இல்லாமலாக்கும் காரியத்தை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்களானால் ஒன்றுமில்லாமல் அவர்கள்தான் நடுத்தெருவில் நிற்பார்கள்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர்களான சித்திக், அலன்சியரோடு இணைந்து இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆழமாக வேரிட்டிருக்கும் சித்தாந்தத்தை கருத்திற்கொண்டு இவர்கள் போன்றோரோடு உங்களைப் போன்றவர் துணைநிற்பது நியாயமில்லை என நினைக்கிற சில பேராவது இருப்பார்கள். அவர்களோடு இந்த விஷயத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்ற உங்கள் தரப்பு நிலைபாடு என்ன?
எனக்கு கிடைத்த சில முன்னுரிமை என்பது ஒரு வரயறைக்குட்பட்டது. அதற்குள் நின்றுகொண்டு பல விஷயங்களையும் புறக்கணிக்க முடிந்திருக்கிறது. சில விஷயங்களை புறக்கணிக்க முடிந்திருக்கவில்லை. பலரோடு பணி செய்ய வேண்டாமென்று முன்பே முடிவுச் செய்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட இழப்புகளை நான் இழப்புகளாக எடுத்துகொள்ளவில்லை. இதுதான் என்னுடைய கொள்கை கோட்பாடு. நான் ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் இருக்கும் வரை, இயக்குநர் கதைக்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்படும் நடிகர்களின் விஷயத்தில் தலையிட எனக்கு உரிமையில்லை. ஒரு கட்டம் வரையில் சொல்லலாம், இவரிருந்தால் என்னால் நடிக்க முடியாதென. ஆனால், அப்போதும் கூட இழப்பு என்பது எனக்கு மட்டுமானதாகவே இருக்கும். நானில்லாமல் திட்டங்களை செயல்படுத்தி முன்னோக்கிப் போவார்கள். இதுமாதிரியான பல காட்சிகளை பார்த்து கடந்து செல்வதுண்டு. நாம் பார்க்க வேண்டியது நம் கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதென்பதல்ல. பழிகள் சுமத்தப்படுவதும் பாதிக்கப்படுவதும் அதிலிருந்து எழுந்து வர முயற்சிச் செய்வதும் நாங்களல்லவா? அதனால்தான் தவறை சரியாக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டை என்மீது வைப்பது சரியல்ல. கேள்விகள் எழுப்பப்படுவது பெண்களுக்கு எதிராக மட்டுமே. இயக்குநர் மீதோ தயாரிப்பாளர் மீதோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை? அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றல்ல. ஆனால், அவர்களிடம் கேட்கப்படவில்லை என்றால் என்னோடு எதற்கு கேட்கிறீர்கள்? காரணம் நான் தொழிலதிபர் இல்லை அல்லவா? பல காரணங்களுக்காக எத்தனையோ பெண்கள் இந்தத் துறையை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் என்பது தெரியுமா? பெண்களிடம் நட்பு பாராட்டாத சினிமாத் துறையில் நாம் இருக்க வேண்டாம் என்றுதான் பலரும் வெளியேறியது. அவர்களைப் போல் நீங்களும் வெளியேறுவதாக இருந்தால் வெளியேறுங்கள் என்பதுதான் உங்கள் கேள்வி என்றால், நான் வெளியேறப்போவதில்லை என்பதுதான் எனது பதில். எனக்கு உரிமையுள்ள இடத்தை நான் எடுத்துக்கொண்டு இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறையில் என்னை நிலைநிறுத்த உறுதியோடு இருக்கிறேன்.
‘நோ‘ சொல்ல முடியாமலிருக்கலாம்; அது அவர்களோட தவறல்ல என்ற செய்தியை WCC வெளிப்படையாக பேசியிருக்கிறது. அதே வேளையில் எனக்கு மோசமான அனுபவங்கள் ஒன்றும் ஏற்படவில்லை என்ற விதத்தில் ஜோமோள் உட்பட சில நடிகைகள் அறிவித்திருந்தார்கள். தவறை எதிர்கொள்ள நேரிட்டவர்கள் மோசமானவர்கள் என்றும், நாங்கள் நேர்மையாக இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பனப் போன்றும் சிந்தை, சினிமாவில் இருக்கும் பெண்கள் பலருக்கும் இருக்கிறது.
இவ்வாறான சிந்தையின் அபத்தம் குறித்து நான் சொல்கிறேன். நான் பொறுப்பானவளும் ஒழுக்கமுள்ள பெண்ணாகவும் இருந்ததால் இவ்வாறான சம்பவங்களை நான் எதிர்கொள்ளாமல் கடந்து சென்றேன் என்ற சிந்தனை சிலருக்கு இருக்கலாம். ஆனால், அது தவறான எண்ணமாகும். நீங்கள் பிரிவினைகளை உருவாக்கிக் கொண்டாலும் இல்லையென்றாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள், பாலியல் அத்துமீறல்களில் பாகுபாடுகள் ஏற்படுவதில்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதனால் உங்களுக்கு இது எப்போது வேண்டுமென்றாலும் நிகழலாம். அதிஷ்டத்தின் சிறிய கூறு இருப்பதால் அது உங்களுக்கு நிகழாமல் நீங்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். நமது நாட்டில் ஒவ்வொரு பதினஞ்சு நிமிடத்திலும் ஒரு பாலியல் அத்துமீறல் நடக்கிறது என தகவல் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் பாலியல் வன்புணர்வு, பாலியல் சீண்டலுக்கு, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்படுவதில்லை என்றால் அது அதிஷ்டமாகவே கருத வேண்டும். இனிமேலும் ஒரு பெண்பிள்ளை இவ்வாறான ஒரு மோசமான அனுபவத்தை எதிர்கொண்டு கடந்துப் போகவில்லையென்றால் அவர்களின் விஷயத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியுடையவளாக இருப்பேன்.
எல்லா இடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையே சினிமாவிலும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இதில் ஏன் பாகுபாடு பார்க்க வேண்டும் என மோகன்லால் உட்பட பலர் சாதாரணமாக சொல்லிக்கொண்டு கடந்து செல்கிறார்கள். மற்றத் துறைகளை விட பெண்கள் அதிகமும் வஞ்சிக்கப்படுவது சினிமாவில் அல்லவா? இரண்டையும் ஒரு போலப் பார்ப்பது சரியானதா?
ஒருவர் ஒருப் பிரச்சனையை முன் வைக்கும் போது மற்றவர்களுக்கும் பிரச்சனை உண்டல்லவா எனச் சொல்வது சரியான முறையல்ல. வேறொரு துறையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை எனக்கு சீர்ப்படுத்த இயலாது. நீங்கள் உங்கள் வீட்டை சுத்தமாக்க வைக்கப் பாருங்கள். மீதி உள்ளவர் அவர்களுடையதை பார்ப்பார்கள். சினிமாத்துறையில் அநீதி கூடுவதற்குக் காரணம் அதை கண்காணிக்க ஒரு முறைசார்ந்த அமைப்பு இல்லாததே ஆகும். ஹேமா கமிட்டி அறிக்கை முழுமைபெறாதது என்றுதான் அது சொல்கிறது. கூடுதலானவர்களா இல்லை குறைவானவர்களா? என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டுமென்றால் எப்படி அணுகுவது என்பதைக் குறித்தெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறான அறிக்கைகள் நமது பாதையை திசைத் திருப்புகிறது. இது குற்றவாளிகளாக இருக்கலாம் என நாம் சந்தேகிக்கும் நபர்கள் தப்பிப்பதற்கு வழியை உருவாக்கும். இந்தப் பயணத்தில் எங்களோடு கூட்டு சேர்ந்து வழி நடத்திய ஆண்கள் எவருமே இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், உரத்த குரலில் தைரியம் தந்து துணைநின்ற ஆண்கள் குறைவு. பெண்கள் இப்போது வெளிப்படையாகப் பேசுவது பாலியல் சீண்டல்களைக் குறித்து மட்டுமல்ல. தொழில் செய்யுமிடத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக அடிமைப் போல் வேலைச் செய்பவர்கள் மீது நிகழும் அடக்குமுறைக்கு எதிராக, அடிப்படை உரிமைகள் குறித்த புரிதலை உருவாக்குதல் என பலதைப் பற்றியும் வெளிப்படையாக பேசுகிறார்கள். இதில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மட்டுமல்ல ஆண் பெண் பாகுபாடில்லாமல் எல்லாரின் பிரச்சனைகளையும் முன்வைத்துப் பேசுகிறார்கள். அதற்கான தீர்வை தேடுதல் வழியாக கண்டடைகிறோம். அதனை முன்னிட்டுதான் நீ பெரியவன் நான் பெரியவன் என்ற ஈகோவை ஒதுக்கி வைத்து ஒன்று சேர்ந்து தீர்வை நோக்கிய பயணங்களை முடிக்கி விட வேண்டும் என்கிறேன்.
பி. உன்னிக்கிருஷ்ணன், ஹேமா கமிட்டி WCC-யிடம் மட்டுமே கேட்டிருக்கிறது என பார்வதிக்கு எதிரே சில காரியங்களை சொல்லியிருக்கிறார். WCC உருவாவதற்கு முன்பு 13 சினிமாக்கள் நடித்திருக்கும் பார்வதி, WCC வந்த பிறகு 11 சினிமாக்கள் நடித்திருக்கிறார் எனச் சொல்லியிருக்கிறார். அதாவது பார்வதிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குறையவில்லை எனச் சொல்ல வருகிறார்.
என்னுடைய பங்களிப்பைப் பற்றி பலரும் தனிப்பட்ட விமர்சனம் செய்யும் போது அதை தனிப்பட்ட முறையிலான அபிப்ராயமாகவே பார்க்கிறேன். காரணம் அவர்கள் யாரும் என்னோடு ஒரு விவாதத்திற்கு கூட வந்ததில்லை. எங்கள் சம்பந்தப்பட்ட உரையாடலுக்கோ விவாதத்திலோ பங்கேற்காத ஒருவர் என்னைக் குறித்து தனிப்பட்ட முறையில் திடீரென குதித்து வந்து அபிப்ராயம் சொல்வதை நான் எப்படி புரிந்துகொள்வது என தெரியவில்லை. என்னைப் பற்றிச் சொல்லும் போது எனது முழு பயணத்தைப் பற்றி புரிந்துகொள்ளாமல் என்னைப் பற்றிய புள்ளிவிவரங்கள் எப்படி முழுமையாகும். ஒருவரை வேலையிலிருந்து வெளியில் தள்ளும் போது, நமது பார்வையில் காண்பது போலல்ல, அதில் பல அதிகாரமட்ட தந்திரங்கள் இருக்கும். அது நான் நடித்த சினிமாவின் எண்ணிக்கையை வைத்து தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல. சரி அப்படியே எண்ணிக்கையை வைத்து நாம் விவரித்து பேச முற்படுவோமாயின் கூட ஒருவன் தொடக்க காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் போலவா அவர் வெற்றிகரமான ஒருவராக மாறியபின் வாய்ப்புகள் அமைகின்றன? அப்போதும் கணக்கு சரியாகவில்லை அல்லவா? இவ்விதமான விவாதங்கள் எனக்கு புதுமையானதாகத் தோன்றவில்லை. காலங்கள் தோறும் இவ்விதமான அவநம்பிக்கை, எதிர்ப்புகளையும் கண்டு வருகிறேன். WCC பெண்களுக்கான பணிச்சூழல் பாதுகாப்பை கண்காணிக்கும் அமைப்பு. இதிலுள்ள பாதுகாப்பற்றச் சூழல் WCC-யுடன் நிற்பதில்லை. இதையும் நான் இயல்பானதுதான் எனப் புரிந்துகொள்கிறேன்.
பல இழப்புகளை சந்திக்க நேரிடும் என்ற சுய உணர்வோடுதானே இந்தப் போராட்டத்தில் காலெடுத்து வைத்தீர்கள். தனிப்பட்ட முறையில் எதை இழந்தீர்கள்?
எண்ணிக்கையில் அடங்கா இழப்புகளை நாங்கள் சந்தித்தோம். சொந்தபந்தங்கள், நண்பர்கள், வேலை, உளவியல் நோய், உடல் நலம் என எல்லாவற்றையும் அது பாதித்தது. ஆனால், இதைத் தேர்வு செய்தது நானாக இருந்தேன். இழப்புகளை இழப்புகளாக தோன்றுவதை அதற்கு மதிப்பளிக்கும் போதுதான் உணர்ந்துகொள்ள முடியும். இழந்துப் போன வாய்ப்புகளை குறித்துச் சொல்ல வேண்டுமா? வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வேன் என்ற ஆற்றலை நான் கடந்த காலங்களிலிருந்து பெற்றிருக்கிறேன். அதை உணர்த்தியவர்களுக்கு நன்றி. இப் போராட்டம் தொடங்கி ஏழு வருடமாகிறது. இழப்புகளை கணக்கிடுவதற்கான நேரமில்லை. குலைந்துப் போன இடத்திலிருந்து பூப்பது ஒரு புதிய பொதுஉடமையின் அறிவு. அதிலிருந்து படிப்பதற்கு நிறைய உண்டு. பல காரியங்கள் செய்வதற்குள்ளது. அவ்வாறு பார்க்கப்போனால் இழப்பெல்லாம் வரவுதான்.
பார்வதியின் குடும்பம் எப்படிப்பட்டது ? ஒரு தெளிந்த சிந்தனை மரபு என்பது ஒரு தலைமுறைக்கு முன்பே பார்வதிக்கு இருந்திருக்குமென நான் யோசித்தது உண்டு. குடும்பம்தானே அதன் ஆணிவேராக இருந்திருக்க முடியும்?
அப்பாவும் அம்மாவும் தம்பியும் நானும் உள்ள குடும்பம். என்னுடைய அப்பாவும் அம்மாவும் பாலியல் உரிமைக் கோரல் எடுப்பதை நான் கண்டிருக்கவில்லை. அப்பா வீட்டிலுள்ள வேலைகள் செய்தார். அது இயல்பாகவே நடந்தது. வாழ்க்கைத் துணை என்ற நிலையில் எல்லாப் பொறுப்புகளையும் பங்கிட்டு செய்ய வேண்டுமென்ற உணர்வு ரீதியான பங்கீட்டறிவு அவர்களுக்கிடையே இருந்தது. இவற்றையெல்லாம் கண்டு வளர்ந்ததால் நானும் எனது சகோதரனும் மிகவும் அறிவுபூர்வமாக விஷயங்களை அணுகுகிறோம். பெண்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற வகைப்படுத்தல் வீட்டில் இருந்ததில்லை. அப்பாவையும் அம்மாவையும் கண்டு வளர்ந்த உலகம் மிகவும் யதார்த்தமானது. சிறுவயது தொட்டே வீட்டில் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகவே பேசுவோம். எல்லோருடைய அபிப்ராயங்களையும் கேட்போம். பல விஷயங்களைப் பற்றியும் வெளிப்படையான விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களில் என்னுடைய பார்வைக்கும் மதிப்பிருந்தது. அதெல்லாம் சேர்ந்துதான் சமத்துவம் என்ற அடிப்படையான உரிமையை நான் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். பள்ளிக்கூடத்திலிருந்து வெளிவரும் போது நான் எனது கருத்துக்களை முன் வைக்கும் போது, ‘ஓ நீ இப்படியெல்லாம் சிந்திக்கிற ஆள் அல்லவா?’ என கேலி பேசும் ஆட்கள் எதிர்வினைச் செய்வதுண்டு. இந்நிலையில் நான் ஏமாற்றமடைந்து குழப்பத்தில் ஆவேன். பெண்கள் ஒரு கருத்தைச் சொல்லும் போது சமூகத்தில் அதற்கு ஒரு மதிப்பில்லையென்று போகப்போகத்தான் உணர்ந்துகொண்டேன். பெண் குழந்தையாக இருக்கிறாய் பேசும்போது சிந்தித்துப் பேசணும் என்ற விதத்தில் தடையேற்படுத்தி இருந்தால் நான் உங்கள் முன் பார்வதியாக நின்றிருக்க மாட்டேன்.
சிறுவயதில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்ததில்லை. ஆனால், ஆரோக்கியமான விவாதங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என சில நண்பர்களிடமிருந்துக் கற்றுக்கொண்ட பல நற்குணங்களுண்டு. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து மாற்றுக் கருத்தை சொல்லலாம் என்பன உட்பட. அரசியல் வயப்பட்ட நண்பர்கள் எனக்கு உள்ளனர். அவரில் பலரும் ஆபத்தான இடங்களிலிருந்து என்னைக் காப்பற்றியவர்கள்.
பார்வதி எவ்வாறு ஆற்றல் வாய்ந்த பெண்ணானாள் எனச் சொல்ல வரும் போது என்னை நானாகக் கண்டு நடந்த குடும்பமும், என்னை அதிகமும் நேசிக்கும் குறைவான நண்பர்களும் தான் அதற்கான காரணம். அது எனக்கொரு சிறப்பு சலுகைதான் என கருதுகிறேன்.
குழந்தைப் பருவத்தில் எங்கு நின்று வளர்ந்தீர்கள். படிப்பு எவ்விதம் நடந்தது? உங்களுக்குப் பிடித்தமான விசயம் என்ன?
கோழிக்கோட்டில் பிறந்தேன். அப்பா பரப்பனங்காடிக்காரர். அம்மா கோழிக்கோட்டுக்காரி. குழந்தைப் பருவத்தில் இரண்டு இடங்களிலும் நின்று வளர்ந்தேன். முக்கியமாக விடுமுறைக் காலங்களை அங்கு செலவழித்தேன். கோழிக்கோடு கேந்திரா வித்யாலயத்தில் படிப்பைத் தொடங்கினேன். பிறகு சிறிது காலம் டில்லியில் இருந்தேன். அதன்பிறகு திருவனந்தபுரத்தை நிரந்தர இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருகிறேன். ஆல் செயின்ட் கல்லூரியில் ஆங்கிலப் பட்டயப் படிப்பை முடித்தேன்.
வாசிப்பை அவசியமான ஒன்றாகக் கருதுகிறீர்களா? ஒரு நடிகைக்கு புத்தக வாசிப்பு என்பது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நீங்கள் வாசிப்பது புனைக்கதைகளா அல்லது புனைக்கதை அல்லாதவைகளா?
பல காலமாக புனைகதை அல்லாதவைகளைத்தான் வாசித்தேன். பிஏ படித்து விட்டு எம்ஏ பகுதிநேர தொலைக்கல்வியில் படித்தேன். அப்போதே நான் நடிக்கத் தொடங்கியிருந்தேன். கல்விப்புலம் சார்ந்த விஷயங்களை பலநேரங்களிலும் தவற விட்டிருக்கிறோனோ என நினைத்துப் பார்ப்பதுண்டு. பீர் குரூப்புகளோடு கலந்து பழகுவதன் மூலம் கிடைக்கிற சமூக புரிதல்களை இழந்து விடுகிறோம் என்ற உணர்வு உண்டு. இருப்பினும் அதையெல்லாம் மீறி இணையதளத்தில் நான் விரும்பியதை வாசிக்கிறேன். தற்போது புனைகதை பக்கம் திரும்பியிருக்கிறேன். வாசிப்பு கலைஞர்களை மேன்மைப்படுத்தும் எனக் கருதுகிறேன். புத்தகங்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. இந்த பெரிய பூமிப்பந்தில் நாம் தனியாள் அல்ல என ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன புத்தகங்கள்.
நன்றி: ‘மாத்ருபூமி’ வார இதழ், அக்டோபர் 2024
கிருஷ்ணகோபால் <Krishnaa150gopal@gmail.com>
