தமிழைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே | இந்திரா பார்த்தசாரதி

புதுவை ஃப்ரென்ச் மொழியியல் நிறுவனம் வெளியிட்ட தமிழ் – சம்ஸ்கிருதம் பற்றிய ஒரு கருத்தரங்குத் தொகுதியில், தமது முன்னுரையில், எம்.கண்ணன், ‘தமிழ் – சம்ஸ்கிருத உறவு பற்றிய ஒப்பீட்டு ஆய்வு செய்வதற்கான தகுதி பெற்றவர்கள் இந்தியாவில் அநேகமாக இல்லை என்பதால், அயல்நாட்டு ஆய்வாளர்களின் கட்டுரைகள்தாம் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருந்தார். இது மறுக்கவியலாத கூற்று என்றுதான் தோன்றுகிறது. மொழிகளை உணர்ச்சிகரமாகவோ ஓர் அரசியல் கோஷ அணுகுமுறையிலோ பார்க்கத் தொடங்கினால் சிந்தனை வயமான ஆய்வுக்கு அங்கு இடமிருக்காது. இதுதான் இப்பொழுது தமிழ்நாட்டுப் பல்கலைகழகக் கூடாரங்களில் நாம் காணும் அவல நிலை. இதனால் தமிழில் உள்ள நம்முடைய செவ்வியல் இலக்கியங்களை கூட விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஆராயும் பயிற்சியும் இல்லாமல் போய்விட்டது.
தமிழைத் தவிர வெறொன்றுமறியேன் பராபரமே என்றிருந்து விட்டால், தமிழின் முழு அருமையையும் கூட நம்மால் அறிந்துகொண்டு விட்டதாகச் சொல்ல முடியாது. மொழி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலாசார வெளிப்பாடே யன்றிச் சாதி, மதம் ஆகியவற்றுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அம்பேத்கர், ஒரு மிகச் சிறந்த சிந்தனையாளராக உருவாகி, ஹிந்து மதத்தின் ஆணி வேர்களை அசைத்துப் பார்க்க முடிந்ததென்றால், அவருடைய சம்ஸ்கிருத புலமையே இதற்குக் காரணம்.
தமிழிலக்கிய வரலாற்றில் காலனி ஆட்சி முன்பு வரை நம் தமிழ்ப் புலவர்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாகதான் இருந்திருக்கிறார்கள். சம்ஸ்கிருதம் தெரியாமல் கம்பன் மூலத்தை இலக்கிய நயத்தில் விஞ்சிய ஒரு காவியத்தை இயற்றியிருக்க முடியுமா?
சேக்கிழார் இயற்றிய, ‘பெரிய புராணத்’துக்கு சம்ஸ்கிருத மொழியிலிருந்த ‘உபமன்யு பக்த விலாஸமே ’ மூல நூல் என்று பலர் சொல்லி வந்திருக்கிறார்கள். காரணம், சமயம் சம்பந்தப்பட்ட எந்த நூலாக இருந்தாலும் அது வட மொழியில்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை.
‘உபமன்யு பக்த விலாஸம்’ என்ற நூல், ஸ்ரீநிவாச கவி என்பவரால், விஜயநகர அரசர் அச்சுத ராயன் (கிருஷ்ணதேவராயர் மகன்) காலத்தில பதினாறாம் நூற்றாண்டில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. அவர் அப்படியே சேக்கிழாரின் ‘பெரிய புராணத்தை வடமொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார், அவ்வளவுதான். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலுள்ள அச்சுதராயன் காலத்திய சம்ஸ்கிருத கல்வெட்டு (பதினாறாம் நூற்றாண்டு) இதைக் குறிப்பிடுகின்றது. மேலும், சேக்கிழார், குலோத்துங்க சோழனை (பன்னிரெண்டாம் நூற்றாண்டு) குறிப்பிடும் செய்யுளும் ஸ்ரீநிவாச கவியின் நூலில் அப்படியே மொழியாக்கம் பெற்றிருக்கிறது. ‘உபமன்யு பக்த விலாஸம்’ ‘பெரிய புராணத்’ துக்கு முந்தி என்றால் குலோத்துங்கனைப் பற்றிய குறிப்பு அதில் எப்படி இருந்திருக்க முடியும்? சம்ஸ்கிருத அறிவு மூலமாகத்தான் நம்மால் இதைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடிகின்றது.
அடுத்ததாகத், தமிழில் உள்ள பெரும்பான்மையான செவ்வியல் இலக்கிய நூல்களுக்கு செம்பதிப்பு இல்லை. சான்றாகத், தொல்காப்பியப் ‘பொருளதிகாரத்’திலும் பதிற்றுப்பத்திலும் பிற்சேர்க்கைகள் (பதிற்றுப்பத்துப் பதிகங்ளில் பெரும்பகுதி, காலத்தால் பிந்தியவை) உள்ளன. ‘பக்தி இலக்கியம்’ என்றறியப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் காணும் முத்திரைப் பாடல்கள் (Signature songs) அனைத்தும் பிறகு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ‘நாலாயிரம் என்ற கணக்கிற்காக அவையும் கவிஞர்களின் பாடல்களாக வைத்து எண்ணப்படுகின்றன. பக்தி இலக்கியங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட சமயத்துக்குரிய வழிபாட்டு நூல்கள் என்று ஆகிவிட்ட படியால் ஆராய்ச்சி உலகம் செவ்வியல் வழியவையான இப்பக்தி நூல்களை (பன்னிரு திருமுறைகளையும் சேர்த்தே சொல்லுகிறேன்) சமூக-இலக்கிய விமர்சனப் பார்வையோடு அணுகுவதில்லை. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த ‘மர்ரே’ பக்தி நூல் வெளியீடுகளிலும் குரு பரம்பரை பார்வையைத்தான் நம்மால் காண முடிகிறது.
சிலப்பதிகாரத்துக்கும் ஒரு செம்பதிப்புத் தேவை. அதில் காணும் பதிகமும் சமஸ்கிருத மயமாகிவிட்ட, ‘மதுரைக் காண்டத்தி’ன் பிற்பகுதியும், ‘வஞ்சிக் காண்டமும்’ பிற்சேர்க்கைகளாகவோ அல்லது கலாசார மாற்றங்களுக்கு உட்பட்டவைகளாகவோ தோன்றுகின்றன. இது குறித்து ஆழமான ஆய்வு தேவை. ‘வஞ்சிக் காண்டத்தை’ நிறுவதற்குத்தான், சிலப்பதிகாரப் பதிகத்தில் இக்காவியத்தின் செய்திகளாக மூன்று உண்மைகள் வற்புறுத்தப் படுகின்றன. சேரன், செங்குட்டுவன் பற்றி பரணர் பாடலாக அறியப்படும் பதிகத்தையும் இதன் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். சேரன் வடவர் மீது வெற்றி கொண்டான் என்ற அரசியல் செய்தியைக் காட்டிலும் சேர நாடு, கலாசார வழியாகப், பெரும் மாற்றத்துக்கு உள்ளானது என்பதுதான் முக்கியமான செய்தி.
எப்பாலும் கோடாமல் ஆய்வுக்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட செவ்வியல் இலக்கியங்களில் தேர்ச்சி கொண்ட அறிஞர்கள் இப்பணிக்குத் தேவை.
இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>