பக்குவம் – இந்திரா பார்த்தசாரதி

வழக்கமாகக் காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் அவன் அன்று எழுந்திருக்கவில்லை. மணி ஏழாகிவிட்டது. வாசலில் ஏதோ சப்தம் கேட்பது போலிருந்தது. அவன் மனைவி கலவரத்துடன் அவனிடம் வந்தாள்.
“என்ன சத்தம் வாசல்லே?” என்றான் அவன், அவளிடம்.
“வாசல்லே வந்து பாருங்க, எனக்குப் பயமா இருக்கு?”
அவன் செருப்பைப் போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தான். முப்பது, நாற்பது பேரிருக்கும். கையில் கொடி பிடித்துக்கொண்டு நின்றார்கள். குங்குமப் பொட்டு அணிந்த ஒரு நடுவயதுக்காரர் அவனிடம் வந்தார்.
“நீங்கதானே பரந்தாமன், இந்தக் கதையை எழுதியவர்?” தம் கையிலிருந்த பத்திரிகையைப் பிரித்துக் காட்டினார்.
“ஆமாம்.”
“இந்தக் கதையை எதிர்த்துத்தான் இந்தக் கூட்டம். இந்தக் கதையை எழுதினதுக்கு ஒண்ணு நீங்க மன்னிப்பு கேக்கணும், இல்லாட்டி, ஜெயிலுக்குப் போகணும்.”
அவன் திடுக்கிட்டான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை அது. ஒரு நாட்டு நாய், கடற்கரையில், காரில் உட்கார்ந்திருந்த ஒரு அல்சேஷியன் நாயைப் பார்த்துக் காதல் கொள்கிறது. தன் காதலை உரக்கக் குரைத்து வெளிபடுத்துகிறது. அல்சேஷியன் அந்த நாயை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.
“இது நான் பத்து வருஷங்களுக்கு முன்னாலே எழுதிய கதை. ஜஸ்ட் எ ஃபாண்டஸி. அர்த்தம் எதுவுமில்லே. உங்களுக்கு என்ன ஆட்சேபனை? எனக்குப் புரியலே” என்றான் அவன்.
“அல்சேஷியன் வெளிநாட்டு நாய், கிறிஸ்டியன். நாட்டு நாய் நம்மூரைச் சேர்ந்தது, ஹிந்து; பைரவர். அது இன்னொரு மதத்து நாயைக் காதலிக்கின்றதுங்கிற மாதிரி எழுதினா, நம்ம சநாதன தர்மத்தையே அவமதிக்கிற மாதிரி இருக்குல்லே.”
“ஜெர்மன் லூதெரியன் சர்ச்” என்றான் அவன்.
“என்ன சொல்றீங்க?”
“கிறிஸ்துவ நாய்னு சொன்னா போதுமா? உட்பிரிவையும் சேர்த்துச் சொல்ல வேண்டாமா? நம்ம நாட்டு நாய் ஹிந்து மதம் சரி, என்ன ஜாதின்னு சொல்லியிருக்கணும்னு நினைக்கிறீங்களா?” என்றான் அவன் புன்னகையுடன்.
“விளையாடறீங்களா?”
“விளையாடலே, உண்மையாகத்தான் கேக்கறேன், இலக்கியத்தை இலக்கியமா பாக்காமே, அதிலே அரசியலைக் கொண்டு வர்ரீங்களே, நல்லவா இருக்கு?”
அதற்குள் நாலைந்து பேர் கூட்டத்திலிருந்து அவனை நோக்கி வந்தனர்.
“சரி, நான் கேக்கறேன், சொல்லு, நீ எளுதறது இலக்கியமா?” என்றான் ஒருவன் கோபத்துடன்.
“அப்படிக் கேளுங்க, கரெக்ட். அது சரியான விமர்சனம். எதுக்காக அரசியலைக் கொண்டு வரீங்க? அது தப்பு” என்றான் அவன்.
“அவனோட என்னய்யா அநாவசிய பேச்சு? இனிமே இந்த மாதிரி கதை எளுத மாட்டேன்னு எளுதித் தரச் சொல்லு. செய்தது தப்புன்னும் நூத்தெட்டு தடவை எளுதித் தரணும்” எண்றான் இன்னொருவன்.
அவன் மனைவி அப்பொழுது அங்கு வந்தாள்.
“அவரை கதையை வேற மாதிரி மாத்தி எழுதித் தரச் சொல்லுங்க” என்றாள் அவள்.
“என்ன சொல்றீங்க?”
“அல்சேஷியன் நாய் நம்ம நாட்டு நாய் பேரிலே காதல் கொள்ற மாதிரி, அது நமக்குப் பெருமைதானே?”
“அதெப்படிப் பெருமை? அது கிறிஸ்துவ நாய், நம்ம நாட்டு நாய் ஹிந்து. கல்யாணம் கட்டிக்க நம்ம நாய் மதம் மாறணுமா?”
“வேண்டாம். அல்சேஷியன் நாய் ஹிந்துவா மாறிடற மாதிரி எழுதுவாரு. மூணாவது தெரு வெங்கடேச அய்யங்கார் வீட்டு நாய், அதுவும் வெளிநாட்டு நாய்தான், ‘ராமா, ராமா’ன்னு சொல்லறதுன்னு, மூணாம் வருஷத்து முன்னாலே அவங்க வீட்டிலே ஒரே கூட்டம். மந்திரிக கூட வந்து பாத்தாங்க. அந்த மாதிரி அல்சேஷியன், ஹிந்துவா மாறினா, ‘ஓம்,ஓம்’ன்னு கூட சொல்லலாம்; அது நமக்குப் பெருமைதானே!” என்றாள் அவள்.
சிறிது நேரம் மௌனம்.
நடுவயதுக்காரர் சொன்னார்: “அம்மா சொல்லறதுதான் எனக்குச் சரியா படுது. கதையை மாத்தி எழுதுய்யா, எழுத்தாளரே! கதையை முடிக்கறப்போ, அல்சேஷியன் ‘ஓம்’னு சொல்ற மாதிரி எழுதுங்க. அம்மாவுக்கு இருக்கற அறிவு உங்களுக்கு இல்லியே!”
அவன் மனைவியின் புன்னகையினின்றும் அவனால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
காதில் ஒலித்தது. ஓங்கார நாதமா, நாயின் குரைப்பா என்று அவனுக்குப் புரியவில்லை. அவனுக்குப் பக்குவம் போதாது.
இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>