டைரக்டரி வருது – விட்டல்ராவ்

 டைரக்டரி வருது – விட்டல்ராவ்

சென்னை தொலைப்பேசி மாவட்டத்தில் முதலில் சென்ட்ரல் எக்ஸ்சேஞ்சும் (பூக்கடை எக்ஸ்சேஞ்சு) அடுத்து மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சும் (அண்ணா ரோடு) ஏற்பட்டன. அன்றைய (பழைய) மவுண்ட்ரோடு டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் விசாலமாயிருந்த அறையொன்றைக் காலையிலிருந்தே துப்புரவு செய்வதில் மஸ்தூர்கள் ஈடுபட்டிருந்தனர். விசாரித்தபோது, “டைரக்டரி வருது சார்”, என்றார் ஒரு மஸ்தூர்.

அப்போதெல்லாம் நிறைய எக்ஸ்சேஞ்சுகள் இல்லை. மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சின் பராமரிப்பில்தான் புனித ஜார்ஜ் கோட்டையுமிருந்தது. அதனுள்ளிருக்கும் செகரடேரியட், இராணுவப் பிரிவுகள் யாவும் அடக்கம். பிறகு கோட்டைப் பகுதி சென்ட்ரல் தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றுதல் பணி முசுவாக நடந்து கொண்டிருந்தபோதுதான் எனக்குப் பணி உத்தரவு கிடைத்து மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சில் பணியில் சேர்ந்தேன். சென்ட்ரல் எக்ஸ்சேஞ்சுக்கு அடுத்தபடியாக முக்கியமானதும் அளவில் பெரியதுமாய் மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சு இருந்தது. முக்கியமான எல்லா திரையரங்குகள், கிரிக்கெட் ஸ்டேடியம்; சிம்சன், அடிசன், டி.வி.எஸ். நிறுவனங்கள்; ஸ்பென்ஸர் வணிக வளாகம், கன்னிமாரா ஸ்டார் ஓட்டல்; இந்து, மெயில், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, சுதேசமித்திரன் இதழ்களின் அலுவலகங்கள் அனைத்தும் மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சின் கீழ் இருந்தன. எனவே, டைரக்டரி புத்தகங்கள் ஏளனமாய் வினியோகிக்கப்பட வேண்டியிருக்கும்.

“டைரக்டரி வருது” என்று சொல்லிக்கொண்டே ஒருவர் போனார். மத்தியானம் உணவு வேளையின் போது வெளியில் வந்தவுடன் அந்த பெரிய அறைக்குள் எட்டிப் பார்த்து தெரிந்துகொண்டேன். இருபது இருபதாக அடுக்கிக் கட்டப்பட்ட டெலிஃபோன் டைரக்டரிகளின் கட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. அதற்குள் மவுண்ட் ரோடு எக்ஸ்சேஞ்சின் சந்தாதாரர்களில் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு புத்தகங்கள் என்று சரிபார்த்துக் கணக்கிட்டு விட்டார்கள். மறுவாரம் முதல் டைரக்டரி புத்தகங்கள் சந்தாதாரர்களுக்கு வினியோகிக்கப்படும் என்று விவரமாக செய்தி பத்திரிகைகளில் அறிவித்ததோடு ஒவ்வொரு சந்தாதாரருக்கும் அச்சடித்த கடித அட்டையும் அனுப்பட்டிருந்தன.

டைரக்டரி வினியோக சேவைக்கு இரண்டு பேரைப் போடுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஓர் இரண்டு மாத காலத்துக்கு அப்பொறுப்பை ஏற்க முன் வரலாம். ஒரேயொரு நிபந்தன: ஆங்கிலம் சரளமாகவும் நன்றாகவும் பேசக்கூடியவராக இருக்க வேண்டும். அனேகமாய் பலரும் பின் வாங்கிய சமயத்தில் என்னையும் பிரசன்னாவையும் பலமாகச் சிபாரிசு செய்தார்கள். எக்ஸ்சேஞ்சு அதிகாரி நம்பிஸன் எங்களிருவரையும் அழைத்து சின்ன நேர்முகத் தேர்வு ஒன்றை நடத்துவது மாதிரி விசாரித்துவிட்டு கூறினார்: “ஆனா, டை கட்டிட்டு வரணும்.”

நாங்கள் மெளனமாயிருந்தோம்.

“ஏன், டை கட்ட தெரியாதா?”

“தெரியும் சார், ஆனா, டை இல்லே”, என்றேன்.

“நான் கொண்டு வந்து தர்ரேன்” எனக் கூறிவிட்டு, மறுநாள் தம்மிடமிருந்த இரண்டு டைகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நம்பிஸன் சொன்னார்: “இதிலே சின்ன ஓட்டையிருக்கு. பாச்சை கடிச்சிருக்கும். பரவாயில்லே, கட்டும்போது, அது உள்பக்கம் போயிடும், வெளியிலே தெரியாது, ஓகே.”

வேறு இருவரும் தமது கல்யாணத்தின்போது வாங்கியதென இரண்டு டைகளை இரவல் தந்தனர்.

‘இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை, தம் பழைய (சென்ற) டைரக்டரியைக் கொடுத்துவிட்டு புதியதைப் பெற்றுக்கொள்ளலாம். பழைய டைரக்டரியிலிருக்கும் கூப்பனைப் பூர்த்தி செய்து தரவேண்டும். கூப்பனில்லாதது ஏற்கப்படமாட்டாது’ என்ற அறிவிப்பு தினசரிகளிலும் சந்தாதாரருக்கு அனுப்பப்பட்ட கடித அட்டையிலும் கண்டிருந்தவை.

பல ஆண்டுகளுக்கு முன், சென்னை ஆவணக் காப்பகத்துக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்த போது ஓரியண்டல் டெலிஃபோன் கம்பெனி வெளியிட்ட 1924ஆம் வருட சென்னைத் தொலைப்பேசியின் டெலிஃபோன் டைரக்டரி ஒன்றைப் பார்க்க நேரிட்டேன். அது 1924ஆம் வருடத்து நவம்பர் 24இல் வெளிவந்து வினியோகிக்கப்பட்டது. 98 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1925 ஏப்ரல் மாதம் வெளிவந்த டைரக்டரி 124 பக்கங்களாலானது. அதில் கிட்டதட்ட 70 பக்கங்களை டெலிஃபோன் கம்பெனிக்கான விளம்பரங்களே பிடித்துக் கொண்டிருந்தன.

27-5-1925 தேதியிட்ட சுவராஜ்யா பத்திரிகையின் ஒரு செய்திக் குறிப்பு இந்த டைரக்டரியைப் பற்றியதானது.

சென்ற டைரக்டரி வெளியானதிலிருந்து 200 சந்தாதாரர்கள் தங்கள் தொலைப்பேசியை வேண்டாமென தந்துவிட்டிருக்கிறார்கள். அதில் 90இல் பாதிக்கு ஐரோப்பியர்களும், சர்க்கார், நகரசபை மற்றும் ரயில்வேயைச் சேர்ந்தவையுமானவை. 32 புதிய சந்தாதாதரர்களும் (ஐரோப்பியர்கள்) சேர்ந்திருக்கிறார்கள். இந்த டைரக்டரியைப் பொறுத்தளவு சென்னையின் அன்றைய மொத்த தொலைப்பேசிகளின் எண்ணிக்கை 1603 அதில் சுமார் 330 தொலைப்பேசிகளுக்கான இடம் காலியாகவே காணப்படுகிறது. மீதமுள்ள 900 என்பவை ஐரோப்பியர், அரசாங்கம். ரயில்வே மற்றும் நகரசபை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

நகரிலிருந்த தொலைப்பேசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது டைரக்டரியின் பக்கங்களும் தடிமனும். எனவே, அந்த 1924ஆம் வருடத்து டெலிஃபோன் டைரக்டரி நூறுபக்க பள்ளிக்கூட நோட்டுப் புத்தகம் போல மெல்லிய காகித மேல் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். எண்ணிக்கை அதிகரிக்கவும் அதற்கேற்றவாறு டைரக்டரியும் தடிமனாக வளர்ந்து வந்தது. 1934இல் வெளியிடப்பட்ட டைரக்டரி பல வண்ணங்களினாலான விளம்பரங்களையும் கவர்ச்சிகரமான எழுத்துக்களையும் கொண்டிருந்தது. 1925, மே 28ஆம் தேதியிட்ட ‘மெட்றாஸ் மெயில்’ நாளிதழில் தொலைப்பேசி வாடிக்கையாளர் ஒருவரின் ஆசிரியருக்கான கடிதத்தில் ஒரு தகவல் தெரிய வருகிறது:

தொலைப்பேசி சேவையை உபயோகப்படுத்தும் ஒருவன் அடிக்கடி டைரக்டரியைப் புரட்டி எண்களைத் தேடுவதில் அதிலுள்ள பெயர்களுக்கும் எண்களுக்கும் இடையில் ஏராளமான விளம்பரங்கள் அதிகார நந்திமாதிரி குறுக்கிடுவது அதீத அசௌகரியத்தை உண்டாக்குகிறது. நமக்கு வேண்டிய எண்ணைத் தேடுவது சிரமமாயிருக்கிறது. டைரக்டரி தயாரிப்பாளர்கள் இந்த விளம்பரங்களுக்காக டைரக்டரியில் முதல் சில பக்கங்களையோ கடைசி சில பக்கங்களையோ ஒதுக்கலாம். இதன் மூலம் விளம்பரம் பார்ப்பவர்களுக்குத் தனியாக ஒரு பகுதி கிடைக்கும். டெலிஃபோன் எண்களைத் தேடுவோருக்குத் தடையின்றி குறுக்கீடின்றி இருக்கும். இதை வரும் அடுத்த டைரக்டரி தயாரிப்பின் போது கருத்தில் கொள்ளும் வகையில் டெலிஃபோன் கம்பெனியின் கவனத்தை இக்கடிதம் பெறும் என நம்புகிறேன்.

அன்றைக்கு இவ்வாசகர் கடிதம் எவ்வளவுக்குக் கவனம் பெற்று ஆவண செய்ததோ தெரியாது. ஆனால், போகப் போக டெலிஃபோன் டைரக்டரி பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்குத் தனியாகப் பக்கங்களை ஒதுக்கியது. தபால் துறை, தொலைப்பேசி துறையின் பொதுமக்கள் தொடர்புக்கான எல்லா முக்கிய எண்கள்; ரயில், விமானம் விசாரணை தொடர்பு எண்கள்; காவல் துறை, மருத்துவமனைகள், மாநில அரசின் பல துறைகளின் எண்களையும் பிரத்தியேகமாய் தனிமைப்படுத்தி, டைரக்டரியின் ஆரம்ப பக்கங்களிலேயே பொதுமக்களின் பயன் கருதி தன் இறுதி நாள் வரை (டைரக்டரி வினியோகம் நின்று போனது வரை) வெளியிட்டே வந்தது.

 

நானும் பிரசன்னாவும் டை தரித்து டீக்காக உடையணிந்து டைரக்டரி வினியோகப் பொறுப்பை ஏற்றோம். கட்டுகளைப் பிரிக்க, பழைய டைரக்டரிகளைக் கட்டி வைக்க உதவிக்கு எக்ஸ்சேஞ்சு மஸ்தூர் ஒருவர் தரப்பட்டிருந்தார்.

காலையிலிருந்தே கூட்டம் வரிசை போட்டிருந்தது. மிக நீண்ட வரிசை. “பெண்களுக்குத் தனி வரிசை கிடையாதா” என்று ஒரு நடுத்தர வயதுப் பெண் கேட்டார். “அப்படி கிடையாது” என்ற பதிலால் ஏமாற்றமுற்ற அந்தப் பெண் திரும்பித் திரும்பிப் பார்த்த படியிருந்தார். பின்னால் நிறையப் பெண்கள் இருந்தனர். தமக்குப் பக்க பலமாக அவர்களும் குரலெழுப்பமாட்டார்களா என்ற நோக்கில் திரும்பிப் பார்த்த பெண் சலிப்போடு கழுத்தை சடக்கெடுத்துக் கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து ஒருவர் அவசர அவசரமாய் வந்து, “சார், முந்தா நாள் டைரக்டரி வாங்கிவிட்டுப் போனேன். என் பழைய டைரக்டரியில முக்கியமான பில் ஒண்ணை வச்சிருந்தேன். எடுத்துக்க மறந்திட்டேன். அது ரொம்ப முக்கியம்” என்றார்.

ஒவ்வொரு சந்தாதாரரும் தம் தொலைப்பேசி எண்ணை தம் டைரக்டரியின் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருப்பார்கள். ஆனால், இந்த இரண்டு நாட்களில் பழைய டைரக்டரிகல் ஓர் அறையில் ஏகமாய் கட்டுக் கட்டப்படாமல் இரைந்து கிடந்தன. பிரசன்னா வினியோகத்தைப் பார்த்துக்கொள்ள, நானும் மஸ்தூரும் கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கு பழைய டைரக்டரிகளை பிரித்து பீராய்ந்து உதறிப் பார்த்தோம். சந்தாதாரரும் கூட இருந்து பிரித்துப் பார்த்தார். கடைசியில் கிடைத்துவிட்டது. சந்தாதாரர் தாமளித்த சிரமத்துக்காகப் பலமுறை மன்னிப்பு கோரியதோடு, எவ்வளவு தடுத்தும் கேட்காமல் காபி வரவழைத்து விட்டார். அன்றிலிருந்து நாங்கள் ஒவ்வொரு பழைய டைரக்டரியையும் ஒரு முறை உதறிப் பிரித்துவிட்டே அறைக்குள் வீசுவோம்.

ஒருநாள் பழைய டைரக்டரி ஒன்றைப் பிரித்து உதறியதில் நடுப்பாகத்தில் நூறு ரூபாய் நோட்டு ஒன்று இருந்தது. அந்த நபர் அதற்குள் போய்விட்டிருந்தார். அவர் முதல் பக்கத்தில் குறித்திருந்த தொலைப்பேசி எண்ணை டயல் செய்தால் மனைவி பேசினாள்.

“வெளியில போயிருக்கார், வந்ததும் சொல்றேன்” என்றார்.

ஆசாமி வரவில்லை. மீண்டும் முயன்றபோது, சிரித்துக்கொண்டே, “ஒங்கள போல ஆனஸ்டு பீப்புள்ஸ் இப்போ அபூர்வம். பரவால்லே, நீங்களே வச்சுக்கோங்க.” என்று கூறி வைத்தார்.

அதிகாரி நம்பிஸனிடம் சொல்லி அப்பணத்தைக் கொடுத்தோம். நாங்களும் மறந்து போனாம். பழைய டைரக்டரிகளை உதறிப் பார்ப்பது மட்டும் நிற்கவில்லை.

டெலிஃபோன் டைரக்டரி வாங்கிச் செல்ல நேரம் கிடைக்காதவர்களும், வேறு காரணத்தால் வந்து வாங்கிச் செல்ல முடியாதவர்களுக்குமுண்டு. அத்தகையோரில் ஓரிரண்டு பேர் நமக்கு பரிச்சயமானவர்களாயுமிருந்து விடுவார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பம் வெறும் பரிச்சயம் நெருக்கமான நட்பாக மாறித் தோன்றச் செய்யும். அவர்களுக்கு நாம் நட்பு கருதி, ‘முறை வாசல்’ செய்ய வேண்டியிருக்கும். டைரக்டரி வினியோகிக்கும் சீசன் வரும்போது மட்டும், சுகமாய் பேசி தமக்காக டைரக்டரி சுமந்து வரும் முறைவாசல் வேலை வாங்கிக்கொண்டு, காரியமானதும் விலகிப்போகும் கொஞ்சம் பெர் எங்கள் தெருவிலிருந்தார்கள்.

சில நாட்களில், எக்ஸ்சேஞ்சுக்குள் இருப்பவர்களில் சிலர் வந்து எங்கள் பக்கத்தில் நின்றார்கள். எங்களுக்கு ஏதாவது சிறு சிறு ஒத்தாசையும் செய்வார்கள். காரணம் சற்று நேரத்தில் புரிந்தது, வரிசையில் நிற்பவர்களில் யாராவது நாடக – சினிமா நடிகர்களாகவோ, பத்திரிகையாசிரியர்களாகவோ, குட்டி அரசியல்வாதியாகவோ இருந்து வைப்பார்கள். அப்படி ஒரு சமயம், அந்நாளைய நாடக – சினிமா நடிகர் வளையாபதி முத்துகிருஷ்ணன் வரிசையில் நின்றிருந்தார்.

வளையாபதி ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. ‘ஈட்டி எட்டிய வரைத்தான் பாயும், பணம் பாதாளம் வரை பாயும்’, என்ற வசனத்தைப் பேசியபடி திமிரடுத்த பணக்கார வணிகன் வளையாபதியாக முத்துகிருஷ்ணன் நடித்தது முதல் அவர் பேருடன் வளையாபதியும் இணைந்துகொண்டது. ரொம்ப சுமாராகத்தான் நடிப்பார். அதுவும் கொஞ்சம் படங்கள்தான்.

‘சிவகங்கைச்சீமையில்’ ஊமைத்துரை பாத்திரத்தில்கூட அவர் எடுபடவில்லை. ‘தாயில்லாப்பிள்ளை’ படத்தில் தேவலாம். டைரக்டரி வாங்கிக்கொள்ளும் சமயம், விரைந்து வந்த சுவிட்சு ரூம் மெக்கானிக் ஒருவர், தம் கையால் டைரக்டரியை எடுத்து வளையாபதியிடம் தந்துவிட்டு, “இப்ப எந்த படம் பண்ணிட்டிருக்கீங்க”., என்று கேட்டார்.

“நாடகம்தான்”, என்றார் அவர். அவரை ஒரு முறை ஏறிட்டேன். சினிமாவில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் கொஞ்சமும் வித்தியாசமில்லாதவராய்த் தோன்றினார்.

 

1941, ஏப்ரலில் வினியோகிக்கப்பட்ட சென்னைத் தொலைப்பேசியின் டைரக்டரி, தி அசோசியேட் பிரிண்டர்ஸ் அக்கத்தில் அச்சிடப்பட்டிருந்தது. அச்சு அமைப்பு, அச்சுப் பிழையின்மை, எழுத்துக்களின் கூர்மை, சிறந்த வடிவமைப்பெல்லாம் வேண்டி, அன்று சென்னையில் மிகச் சிறந்த அச்சகங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட, தி அசோசியேட் பிரிண்டர்ஸில் டைரக்டரி பணி ஒப்படைக்கப்பட்டது. பிறகு அறுபதுகளில் சிக்கனம், சிறந்த வேலைத் திறன், சந்தாதாரரை ஈர்க்கவல்ல வெகுஜன வடிவமைப்பு, சொன்ன நேரத்துக்குத் தயார் செய்து தரும் நாணயம் எனக் கருத்தில் கொண்டி டைரக்டரி தயாரிப்புப் பணியின் பொறுப்பு ‘குமுதம்’ அச்சகத்துக்கு அளிக்கப்பட்டது. ‘குமுதம்’ கொஞ்ச காலத்துக்கு தொலைப்பேசி டைரக்டரியைத் தன் தீபாவளி – பொங்கல் மலருக்கு நிகராக தயாரித்துத் தந்தது. அந்த காலத்தில் தமிழகத்தில் “குனேகா சென்ட்” எனும் வாசனைத் திரவியம் பாமர மக்களை மயக்கத்திலாழ்த்தி வந்தது. பத்திரிகைகளிலும், வானொலி விளம்பரங்களிலும், சினிமா தியேட்டர்களில் போட்டுக் காண்பிக்கப்பட்ட விளம்பர ஸ்லைடுகளிலும், ‘குனேகா மருக்கொழுந்து சென்டை வாங்கி உபயோகித்து மகிழுங்கள்’ என்ற விளம்பர அறிவிப்பு தோன்றியபடியே இருக்கும். ‘குமுதம்’ தீபாவளி – பொங்கல் மலர்கள் அருகில் வரும்போதே சென்ட் மணம் தூக்கும். ‘சீப் சென்ட்’ என்பார் என் நண்பர். ஒரு சமயம், ஜான் பஜார் பள்ளிவாசலில் இருக்கும் சென்ட் அத்தர் விற்கும் கடையைக் கடக்கும் போது அனுபவித்த நறுமணம் போலவுமிருக்கும். ‘குமுதம்’ தீபாவளி மலரைப் பிரித்ததும் முதல் பக்கத்திலேயே, “நீங்கள் அனுபவிப்பது எங்கள் குனேகா மருக்கொழுந்து சென்டின் மணம்”, என்று காணப்படும். சென்னைத் தொலைப்பேசி டைரக்டரிகள் பல காலம் குனேகா சென்டின் நறுமணத்தை மென்மையாக சந்தாதார்களுக்கு அவர்களின் மகிழ்ச்சியை, ஆர்வத்தை, முகஞ்சுளிப்பை, சிலபோது அருவருப்பையெல்லாம் – அந்தந்த நபருக்குத் தக்கபடி அளித்து வந்தது.

அதன் பிறகு சென்னைத் தொலைப்பேசி தன் சந்தாதாரர்களுக்கு டைரக்டரி ரீதியாகச் சிறந்த சேவை அளிக்கும் எண்ணத்தோடு டைரக்டரி தயாரிப்பைச் சந்தையில் பிரபலமான ‘யெல்லோ பேஜ்’ நிறுவனத்திடம் விட்டது. ‘யெல்லோ பேஜ்’ தன் மீது வைத்த நம்பிக்கைக்குப் பங்கம் வராதபடி அதி சிறப்பாகவே டைரக்டரி தயாரிப்பை முடித்துத் தந்ததோடு, ‘யெல்லோ பேஜ்’ என்ற பிரத்தியேக விளம்பரப் பகுதியை ஒரு குட்டி டைரக்டரியின் தடிமன் அளவுக்கு மஞ்சள் நிறக் காகிதங்களில் அச்சிட்டு டைரக்டரியுடன் சேர்த்து வெளியிட்டது.

சென்னைத் தொலைப்பேசி பி.எஸ்.என்.எல். ஆனபிறகும் தொடர்ந்து டைரக்டரியை வெளியிட்டு வந்தது. நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று பெங்களூருக்கு வந்த பிறகு 2011 வரை டெலிஃபோன் டைரக்டரி பெற்று வந்தேன். அதன் பிறகு டைரக்டரி தயாரிப்பு – வினியோகம் என்பது நிறுத்தப்பட்டது.

(தொடரும்)

Amrutha

Related post