வடிவரசு கவிதைகள்

 வடிவரசு கவிதைகள்

1.
ஒரு பசி
பசியாக இருப்பதில்லை
பசியின்போதும்
பசியற்ற நிலையிலும்

ஒரு கண்ணீர்
கண்ணீராக இருப்பதில்லை
கண்ணீரின் போதும்
கண்ணீரற்ற நிலையிலும்

ஓர் உயிர்
உயிராக இருப்பதில்லை
உயிரின்போதும்
உயிரற்ற நிலையிலும்

எதிரும் புதிருமான
அந்தரத்தில்
இசைய
அசைய எத்தனித்து
தாவி நின்றது
கிழிந்துபோன காலம்

ஒன்றன்மீது ஒன்றாக
ஒன்றுக்குள் ஒன்றாக
அடர
படர வேர்பரப்பி
புன்னகைத்தது
கசங்கிப்போன ஆசை

இருந்தும்
எப்படியோ என்னை
சுமந்து வெளியேறியது
நானெனும்
திமிருடல்

 

2.
எனக்குள் பதுங்கிக்கொண்டது
என் கோரப்பசியிடமிருந்து
தப்பிக்க நினைத்து

மூச்சுக்காற்றுவழி
இருப்பின் கசிய நா நீட்டி
பல்கடித்து நுழைந்தது
தன்னை தின்றுதீர்த்த
தீப்பசி

தப்பித்துத் தப்பித்து
ஓட
வந்தது
துரத்தித் துரத்தி

வான்பசிக்கு
சிறுதுளியாக
மண் பசிக்கு
பெருபிடியாக

அட்டையின் பசிதீர
உரிஞ்சும் குருதிக்கு
சலைத்ததல்ல
கொசுப்பசி

மாட்டிக் கொண்டு
மெல்ல மெல்ல
தின்றுதீர்த்த
என்னை

சுவைத்து சுவைத்துத் தின்ற
நாவுக்கு
தீர்ந்தது
வாழ்நாள் பசி

இருந்தும்
உள்ளே பதுங்கியிருக்கும்
கோரப்பசி
மீண்டும்
துளிர்விட்டது

நரநரவென
பல் கடித்து
ஈஈயென

 

“வடிவரசு” <vadivarasu.s@gmail.com>

Related post