ஏழு குறுங்கவிதைகள் – ஸ்ரீநேசன்

 ஏழு குறுங்கவிதைகள் – ஸ்ரீநேசன்

ஓவியம்: உஷா சாந்தராம்

1. வணக்கம்

வானுயர்ந்து நின்ற மலையின் உச்சியை
தலைக்குமேல் உயர்த்திக் குவித்த
என் கரங்களால் வணங்கி நிற்கிறேன்
அவற்றின் நிழலோ எதிர் கிடந்த சிறு கல்லை வணங்கிக் கொண்டிருக்கிறது.

2. பயணம்

மலைக்குச் செல்லும் பாதையில்
அதன் உச்சியைப் பார்த்துக்கொண்டே நடப்பவனுக்கு
அதைத் தவிர இப்பிரபஞ்சத்தில் வேறொன்றும் தெரிவதில்லை
அவனுக்கு அவன் இருப்பதும்கூட

3. விளையாட்டு

இத்தனை நாளாய் விளையாடியிருந்த வெறுமையான மைதானத்தில்
பள்ளியிலிருந்து திரும்பும் சிறுவன்
தனிமையில் சற்றே நின்று
நண்பர்களுடன் கூச்சலிட்டுப் பேசுகிறான்
பாவனையிலேயே பந்து வீசி அடிக்கிறான்
கொஞ்ச நேரம் மகிழ்வாக இருந்துவிட்டு மிதிவண்டியில் கிளம்பிச் செல்கிறான்
எனக்குத்தான் துக்கம் தாள முடியவில்லை.

4. திடுக் இடல்

வாகனத்தில் சென்றபோது
தூரத்தில் எதிர் வந்த நண்பரைப் பார்த்துவிட்டேன்
நெருங்கி வந்த அவரோ
பின்னிருக்கையிலிருந்த என் மனைவியைப் பார்ப்பதில்
கவனம் கொண்டிருக்கிறார்
கையசைத்தேன்
என்னை எதிர்பாராத அந்த ஒரு கணத்தில்
அவர் இட்ட திடுக்
கவிதைக்குள் கொண்டுவர முடியாதது.

5. காண முடியாக் கோயிலின் பாடல்

எங்கோ கோயிலிலிருந்து மனதை உருக்கும் மதுரமான பாடல்
என்னை ஈர்க்கிறது
என்னை உருக்குகிறது
என்னை மலர்த்துகிறது
நான் அந்தக் கோயிலை இதுவரை காண்டதில்லை
அங்கிருந்து வரும் பாடலின் வழியே சென்றடைந்துவிட்டேன்
இறைவனை நான் சென்றடைந்தவாறே.

6. நாகு

கை வைத்தியத்துக்கு எருமைச்சாணம் தேடி
பக்கத்துத் தெருவுக்குப் போனபோதுதான்
பக்கத்து ஊரிலும்
எருமையில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்
எருமைகளின் முதுகில் ஏறி அதன் வாசம் நுகர்ந்து
நினைவின் சிறுவர் நாங்கள் இன்னும் விளையாடியவாறிருக்க
எப்போதும் சோம்பியுள்ள அவை மட்டும்
எப்போதோ எங்கோ போய் எப்படியோ மெதுமெதுவாய் மறைந்துவிட்டது மாயம்தான்.

7. பிரார்த்தனை

விளையாட்டுப் பிள்ளைகளின் குதூகலத்துடன்
ஓடிப்பிடித்து நடைபயிற்சி செய்தவண்ணம் இளம் தம்பதியர்
என்னை நோக்கிச் செல்கிறார்கள்
இன்னும் மகிழ்வோடு இருக்கட்டும்
இன்னும் பல்லாயிரம் காதம் நடக்கட்டும்
மனதுள் வாழ்த்தியவாறு நான் அவர்களை நோக்கி நடக்கிறேன் எங்களுக்கிடையே முப்பதாண்டு வெளி.

ஸ்ரீநேசன் <sreenesan1966@gmail.com>

sreeneshan

 

 

Amrutha

Related post